தத்துவமும் நடைமுறையும்-5

 தத்துவம் என்றால் என்ன? எவற்றையெல்லாம் நடைமுறையில் மெய்ப்பித்து சாதிக்க விரும்புகிறோமா அவற்றைப் பற்றி நாம் பெற்றிருக்கும் அறிவுதான் தத்துவம் ஆகும்.

அவ்விதமான அறிவு எதுவும் இல்லாமலே ஒருவன் காரியம் பார்க்கலாம், ஆனால் அவன்செய்யும் காரியம், ஏற்கனவே செய்து பழகிப்போன போக்கிலே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருக்கிற காரியம்தான் (உதாரணமாக அரசியல் கட்சிகள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கின்ற காரியமான, பிரசுரம் விநியோகிப்பது, போஸ்டர் ஒட்டுவது,ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற காரியங்களை சொல்லலாம்) அதற்குமேல் போகாமல், போகமுடியாமல் அவன் நின்றுவிட வேண்டியதுதான். அதே மாதிரி, இன்னொருவன் சும்மா தத்துவம் பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படி பேசிக்கொண்டே இருப்பவனின் சிந்தனைகளும் திட்டங்களும் யதார்த்தத்தில் சித்திபெற சக்தியில்லாமல் பெரும்பாலும் ஏட்டுச் சுரைக்காயாகவே நின்றுவிடுகின்றன. ஆகவே தத்துவமும் நடைமுறையும் இணைந்திருக்க வேண்டும். நமக்கு வேண்டியது என்ன தத்துவம், அது நடைமுறையுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதுதான் நம்முன்னுள்ள பிரச்சனையாகும். ஒரு செயல்துணிவுள்ள ஊழியனோ, தொழிலாளியோ தவறு செய்யாமல் புரட்சிக்குரிய காரியங்களை செய்துகொண்டு போகவேண்டுமானால், அவருக்கு ஒன்று தேவைப்படுகிறது.

விஷயங்களைச் சரியாக ஆய்வு செய்து, புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் விவாதங்கள்நடத்தி முடிவிற்கு வருவதற்கு ஒரு சரியான ஆய்வுமுறை அவருக்கு இருக்க வேண்டும். சர்வரோக நிவாரணி மாதிரி எல்லாவிதமான பிரச்சனை களுக்கும் தயாராக தீர்வை வழங்கக்கூடிய ஒரு வறட்டுத் தத்துவமும், குருட்டுச் சூத்திரமும் அவருக்குத் தேவையில்லை.

பின் எப்படிப்பட்ட தத்துவம் தேவை?

என்றைக்கும் ஒரேமாதிரியாக இல்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்ற விஷயங் களையும்பார்த்து, அலசி, ஆராயும் ஒரு ஆய்வு முறைதான் தேவை. தத்துவத்தை நடைமுறையிலிருந்து என்றுமே பிரிக்காதஒரு ஆய்வுமுறை தர்க்கம்(விவாதம்) செய்யும் முறையை வாழ்விலிருந்து பிரிக்காத ஒரு ஆய்வுமுறை அதுதான் அவருக்கு வேண்டியதாகும். அப்படிப்பட்ட ஆய்வுமுறை இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்ற தத்துவத்தில் காணக்கிடக்கிறது.

ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து விலகாமல், அதன்

அடிப்படையில் உறுதியாக நின்றுகொண்டு மாறிக்கொண்டிருக்கின்ற பிரச்சனைகளை

உள்ளது உள்ளபடி பார்த்து ஆய்வு செய்து பின்பு தோழர்களுடன் விவாதித்து முடிவெடுத்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

இதற்கு மாறாக இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை கைவிட்டுவிட்டு மாறிக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிக்கொண்டு பார்த்து பிறரிடம் விவாதம் செய்யாமல் தனது அகநிலை விருப்பங்களிலிருந்து முடிவெடுத்து செயல்பட்டால் தோல்வியில் தான் முடியும்.

தத்துவத்தை கற்றுக்கொள்வது கடினமானதா?

உழைக்கும் தொழிலாளர்கள் தத்துவத்தை கற்றுக்கொள்வது மிகவும் கடினமானது என்றும், அதனை கற்றுக்கொள்ள தெளிவான மற்றும் சிறப்பான அறிவு தேவை என்றும் பலரும் கருதுகிறார்கள். அத்தோடு தத்துவம் பற்றி முதலாளித்துவ நூல்களில் எழுதப்படும் முறையைப் பார்த்தால் இப்படி தொழிலாளர்கள் நினைப்பது சரிதான் என்று நாம் எண்ணக்கூடியதாகஇருக்கிறது. இதனை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய தாகத்தான் இருக்கிறது.

முதலாளித்துவவாதிகளின் தத்துவ நூல்களைக் கண்டால் தொழிலாளர்கள் தத்துவத்தைபயிலுவதற்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு விலகிப் போய்விடுகின்றனர்.

ஆனால் பொதுவாகவே எந்த ஒரு விஷயத்தைப் பயில்வதாக இருந்தாலும் நாம் பல சிரமங்களைசந்தித்துத்தான் ஆகவேண்டும். உதாரணமாக கொத்தனார்மற்றும் எலக்டீரிஷன் வேலையை கற்றுக்கொள்ள வேண்டுமானாலும் நாம் சில சிரமங்களை சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்.

ஆகவே தத்துவத்தை ஊன்றி பயில வேண்டுமானால் கட்டாயமாக நாம் சிரமப்பட்டே ஆக வேண்டும். அதனை நாம் கனவிலும் மறுக்கத் துணிய மாட்டோம் என்றபோதிலும் இந்தக் கஷ்டங்களை வெற்றிகரமாக தொழிலாளர்களால் சமாளிக்க முடியும். அது சிரமமாக இருப்பதற்கு காரணம் பல வாசகர்களுக்கு புதியதாக இருக்கின்ற விஷயங்களைப் பற்றி பேசுவதுதான். எனினும் இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவமானது உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி பேசுவதால் அது தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக

இருப்பதால், தொழிலாளர்களால் அதனை எளிதாக புரிந்துகொள்ள முடியும். எனினும் இந்த தத்துவத்தை தொழிலாளர்கள் புரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு ஒரு ஆசிரியர் தேவை. அத்தகைய ஆசிரியர்கள் கம்யூனிச அமைப்புகளின் உறுப்பினர் களாகவே இருக்க முடியும்.

சொல்வதை கணக்காகவும், நறுக்க தெறிக்கவும் சொல்ல வேண்டும் அல்லவா? எனவே இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தில் பயன்படுத்தப்படும் கலைச் சொற்களின்பதவுரைகளை நாம் முதலில் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கலைச்சொற்களின்பதவுரையை பலரும் திரித்துக் கூறுவது வழக்கமாக உள்ளது.

தத்துவம் என்றால் என்ன?

தத்துவவாதி என்பவர் ஏதோ இந்த உலகத்தை மறந்துவிட்டு ஆகாயத்தில் பறக்கிறவன்என்றுதான் பலரும் எண்ணுகிறார்கள். அல்லது வல்லடி வழக்கு எதற்கும் போகாமல் எல்லாம் நன்மைக்கே என்றும் எதிலும் நல்ல அம்சத்தை மட்டும் பார்க்கிறவன் என்றுதான்எண்ணுகிறார்கள். அது தவறான சிந்தனை மற்றும் கருத்தாகும், உண்மைக்குநேர்எதிரானதாகும். சில கேள்விகளுக்குச் சரியாக கணக்காக விடையளிக்க விரும்புபவர்தான் தத்துவவாதி ஆவார்.இந்த உலகம் எங்கிருந்து வந்தது? நாம் எங்கே போகிறோம்? என்பது போன்ற பிரபஞ்சத்தின்பிரச்சனைகளுக்கு விளக்கம் தரவே தத்துவம் விரும்புகிறது என்பதை கொஞ்சம்நினைவுபடுத்திப் பாருங்கள், அப்படி பார்த்தால், அந்தக் கேள்விகளுக்கு விடையளிக்கப்புறப்பட்ட தத்துவவாதி பல விஷயங்களுடன் கட்டிப் புரள்வதை நீங்கள் பார்ப்பீர்கள். சிலர்சொல்வது போலல்லாமல், தத்துவவாதி என்பவர் ஏகப்பட்ட சந்தடி மற்றும் விவாதங்கள் செய்வதைப் பார்ப்பீர்கள்.

தத்துவத்தை எப்படி வரையறுத்து விளக்குவது? இயற்கையை, பிரபஞ்ஞத்தை அது விளக்கவிரும்புகிறது என்று நாம் கூறுகிறோம். சகல விஷயங்களிலும் ரெம்ப ரெம்ப பொதிந்திருக்கின்றபொதுவாயுள்ள பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவு கூறுவதை தத்துவம் என்கிறோம். அதைவிட

குறைந்த அளவிலுள்ள பொதுத்தன்மை பெற்ற விஷயங்களையும் பிரச்சனை களையும் பல விஞ்ஞானங்கள் ஆராய்கின்றன. ஆகவே அப்படிப்பட்ட பல விஞ்ஞானங்களின் விரிவான அம்சமே தத்துவம் ஆகும். அதாவது விஞ்ஞானங் களுக்கெல்லாம் விஞ்ஞானமே தத்துவம் ஆகும்.

இரசாயனம், பௌதீகம், உயிரியல் போன்ற விஞ்ஞானங்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட

பிரச்சனையிலுள்ள பொதுத்தன்மைகளை ஆராய்வதற்கான விஞ்ஞானமாகும். ஆனால் தத்துவமானது அனைத்துப் பிரச்சனைகளையும் ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு வழிகாட்டும் பொதுவான விஞ்ஞானம் ஆகும்.

பொருள்முதல்வாத தத்துவம் என்றால் என்ன?

பொருள்முதல்வாதம் அல்லது லோகாயதவாதம் என்ற சொல்லின் அர்த்தத்தைப் பற்றியும் ஒரு குழப்பம் இருக்கிறது. லோகாயதவாதி அல்லது பொருள்முதல்வாதி என்றாலே லௌகீக விஷயங்களில் மூழ்கித் திளைப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பவர் வேறுஎதைப்பற்றியும் சிந்திக்காதவர் என்றும் சுகவாசி, சிற்றின்பப் பிரியர் என்றும் சிலர் பலவாறு கருதுகிறார்கள். உலகிலுள்ள பொருள்களைப் பற்றியும் இந்தஉலகத்தைப் பற்றியும் இந்த தத்துவம் பேசுவதாலும் லோகாயதம் என்ற சொல் உலகம் சம்பந்தப்பட்டது என்ற பொருள் கொடுப்பதாலும், பொருள்முதல்வாத தத்துவத்திற்கு தவறான விளக்கத்தை முதலாளித்துவவாதிகளும், ஆன்மீக மற்றும் கருத்துமுதல்வாத தத்துவ வாதிகளும் கொடுக்கிறார்கள். பொருள்முதல்வாத தத்துவத்தை விரிவாக பார்க்கும் போது இதற்கான விளக்கத்தை நாம் விரிவாகப் பார்ப்போம். அதன் உண்மையான அர்த்தத்தை நாம் நிலை நாட்டுவோம். பொருள்முதல்வாதிக்கு லட்சியம் எதுவும் இருக்க முடியாது, லட்சியத்தின்வெற்றிக்காகப் போராடுவது என்பதும் இருக்க முடியாது என்று கருதுவதெல்லாம் தவறான கருத்து என்பதை நிலைநாட்டுவோம்.மிகவும் பொதுவான உலகப் பிரச்சனைகளுக்கு தத்துவமானது விளக்கம் தர விரும்புகிறது.

ஆனாலும் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இந்த விளக்கங்கள் எல்லாம் ஒரே விதமாக

இருந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதே பதிலாகும். காலம் செல்லச் செல்ல உலகத்தில்மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கிறது. ஆகவே அது பற்றிய விளக்கங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது.

ஆதி மனிதன் இயற்கைக்கும் பிரபஞ்சத்துக்கும் விளக்கம் தர முயற்சித்தான். ஆனால் அதில் அவன் தோல்வியடைந்தான். இதற்கு காரணம் என்ன? அப்போது விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. தற்போது விஞ்ஞானங்கள் இருப்பதால்தான் இந்த உலகையும் நம்மைச்சூழ்ந்திருக்கும் புறத்தோற்றங்களையும் இன்று நம்மால் விளக்க முடிந்திருக்கிறது. இப்போதும்இந்த விஞ்ஞான அறிவு இருப்பவர்களால் மட்டுமே இதனை சரியாக விளக்க முடியும். இப்போதும் இந்த விஞ்ஞான அறிவு இல்லாதவர்களால் இதனை விளக்க முடியாது, அல்லது அவர் கொடுக்கும் விளக்கமானது கற்பனையாகவே இருக்கும், உண்மை இருக்காது.இந்த விஞ்ஞானங்கள்ஆதிகாலத்தில் அதிகமாக வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. அந்த விஞ்ஞானங்கள் வளர்ந்துமுன்னேறுவதற்கு உதவிய கண்டுபிடிப்புகள் எல்லாம்பிற்காலத்தில்தான் கண்டுபிடிக்கப் பட்டன. ஆகவே ஆதி மனிதனின் அறியாமையே அவனதுமுயற்சிகளுக்குத் தடையாக இருந்தது. இதே அறியாமையின் காரணமாக வரலாற்று வளர்ச்சிப் போக்கிலேயே மதங்கள் தோன்றுவதையும் நாம் பார்க்கிறோம். அந்த மதங்களும் உலகைவிளக்க விரும்புகின்றன. ஆனால் அவை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்டு உலகை விளக்க விரும்புகின்றன. அவை விஞ்ஞானத்துக்கு விரோதமான விளக்கங்களைத்தருகின்றன. இப்படி அறியாமை நிலவிய போதிலும், பல நூற்றாண்டுகள் செல்லச் செல்ல சமூகத்திலுள்ள சிலர் விஞ்ஞான ஆர்வம் கொண்டு விஞ்ஞானத்தை வளர்த்தனர். விஞ்ஞானமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது. அது வளர வளர விஞ்ஞானப் பரிசோதனைகளிலிருந்து பௌதீக அல்லது பொருள் பற்றிய விபரங்கள் மேலும் மேலும் கிடைத்தன. அவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரபஞ்சத்தை விளக்க முயற்சி செய்தார்கள். எனவே விஞ்ஞான உண்மை களைக் கொண்டு உலக விஷயங்களை விளக்க வேண்டும் என்ற விருப்பத்தி லிருந்துதான் இயக்கவியல் பொருள்முதல் வாதத் தத்துவம் பிறக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியான விளக்கத்தைத் தருவதே பொருள் முதல்வாதம் ஆகும், வேறொன்றுமில்லை. இதனை நாம் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பொருள்முதல்வாதம் தோன்றி வளர்ந்த வரலாற்றைப் படித்துப் பாருங்கள், அறியாமையைஎதிர்த்து அது எவ்வளவு கடுமையாக எவ்வளவு சிரமப்பட்டு போராட வேண்டியிருந்தது என்பதை அந்த வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அது மட்டுமா? அந்தப் போராட்டம்இன்றும் கூட முடிந்தபாடில்லை. பொருள்முதல் வாதத்தோடு அறியாமையும் ஒருபக்கம் நீடித்துவருவதுதான் இதற்கு காரணமாகும்.

இப்படி நீடித்து நடந்துகொண்டிருந்த போரில்தான் மார்க்சும், எங்கெல்சும் தலையிட்டார்கள்.

அவ்விருவரும் 19ஆம் நூற்றாண்டின்மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந் தார்கள். எனவே இந்தப் பிரபஞ்சத்தை விஞ்ஞான ரீதியாக விளக்குவதில் பொருள்முதல்வாதம் பிரமாதமாக முன்னேறும்படி அவர்கள் அதை வளர்த்தார்கள். அந்த வழியேதான் இயக்கவியல் பொருள்முதல்வாதம் பிறந்தது. அடுத்தபடியாக இவ்வுலகை இயக்கிவரும் விதிகளேதான் மனித சமுதாயத்தில் முன்னேற்றத்தையும் விளக்கி வைக்கின்றன என்பதை அவர்கள்தான் முதன் முதலில் உணர்ந்தார்கள். அந்த வழியேதான் வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம் என்ற பிரசித்திபெற்ற தத்துவத்தை வரையறுத்து தந்தார்கள்.

தொடரும்.....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்