கம்யூனிஸ்டுகளின் தத்துவ முடிவுகள், யாரோ ஒரு வருங்கால உலகளாவிய சீர்திருத்தவாதி தோற்றுவித்த அல்லது கண்டுபிடித்த கருத்துகளையோ கோட்பாடுகளையோ எந்த வகையிலும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.
நடந்துவரும் வர்க்கப் போராட்டத்திலிருந்தும், நம் கண்ணெதிரிலேயே நிகழ்ந்து கொண்டிருக்கும் வரலாற்று இயக்கத்திலிருந்தும், கிளர்ந்தெழும் மெய்யான உறவுகளையே இந்தத் தத்துவ முடிவுகள் பொதுப்படையான வாசகங்களில் எடுத்துரைக்கின்றன. நிலவிவரும் சொத்துடைமை உறவுகளை ஒழிப்பதென்பது கம்யூனிசத்தின் தனித்துநிற்கும் ஒரு கூறே அல்ல.
வரலாற்று நிலைமைகளில் ஏற்படும் மாற்றத்தின் விளைவாக, கடந்த காலத்தில் சொத்துடைமை உறவுகள் யாவும், தொடர்ந்தாற்போல் வரலாற்று ரீதியான மாற்றத்துக்கு உட்பட்டே வந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஃபிரெஞ்சுப் புரட்சி நிலப்பிரபுத்துவச் சொத்துடைமையை ஒழித்துக் கட்டி, முதலாளித்துவச் சொத்துடைமைக்கு வழிவகுத்தது.
கம்யூனிசத்தின் தனித்து விளங்கும் சிறப்புக்கூறு, பொதுப்படையாகச் சொத்துடைமையை ஒழிப்பதன்று, முதலாளித்துவச் சொத்துடைமையை ஒழிப்பதே ஆகும். ஆனால், நவீன முதலாளித்துவத் தனியார் சொத்துடைமை என்பது, வர்க்கப் பகைமைகளையும், சிலர் பலரைச் சுரண்டுவதையும் அடிப்படையாகக் கொண்டு, பொருள்களை உற்பத்தி செய்து, கையகப்படுத்திக் கொள்ளும் அமைப்புமுறையின் முடிவான, மிகவும் முழுமையான வெளிப்பாடாகும்.
இந்தப் பொருளில், கம்யூனிஸ்டுகளின் கொள்கையைத் ’தனியார் சொத்துடைமை ஒழிப்பு’ என்னும் ஒரே வாக்கியத்தில் சுருக்கிக் கூறிவிடலாம்.
ஒரு மனிதன் தன் சொந்த உழைப்பின் பலனை அவனுடைய தனிப்பட்ட சொத்தாக்கிக் கொள்ளும் உரிமையைக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் ஒழிக்க விரும்புவதாகப் பழித்துரைக்கப்படுகிறோம். இந்தத் தனிப்பட்ட சொத்துதான் தனிநபர் சுதந்திரம், செயல்பாடு, தற்சார்பு ஆகியவை அனைத்துக்கும் அடிப்படை என்றும் சொல்லப்படுகிறது.
பாடுபட்டுப் பெற்ற, சுயமாகச் சேர்த்த, சுயமாகச் சம்பாதித்த சொத்து! முதலாளித்துவச் சொத்து வடிவத்துக்கு முன்பிருந்த சொத்து வடிவமான சிறு கைவினைஞர், சிறு விவசாயி ஆகியோரின் சொத்தினையா குறிப்பிடுகிறீர்கள்? அதை ஒழிக்க வேண்டிய தேவை இல்லை. தொழில்துறை வளர்ச்சியானது அதைப் பெருமளவுக்கு ஏற்கெனவே அழித்து விட்டது, இன்றுவரை நாள்தோறும் தொடர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது.
அல்லது, நவீன கால முதலாளித்துவத் தனியார் சொத்தினைக் குறிப்பிடுகிறீர்களா?
ஆனால், கூலியுழைப்பு தொழிலாளிக்கு ஏதேனும் சொத்தினை உருவாக்கியுள்ளதா? துளியும் கிடையாது. கூலியுழைப்பு மூலதனத்தைப் படைக்கிறது. மூலதனம் என்பது ஒருவகையான சொத்துடைமை ஆகும். அதாவது, இந்தவகைச் சொத்துடைமை கூலியுழைப்பைச் சுரண்டுகிறது. மேலும், அதற்கு, மறுபடியும் சுரண்டப் புதிதாகக் கூலியுழைப்பு கிடைக்கின்ற நிலைமை நிலவ வேண்டும், இல்லையேல் அது தன்னைப் பெருக்கிக் கொள்ள முடியாது. சொத்துடைமை அதன் இன்றைய வடிவில், மூலதனத்துக்கும் கூலியுழைப்புக்கும் இடையேயான பகைமையை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தப் பகைமையின் இரண்டு பக்கங்களையும் பரிசீலிப்போம்.
முதலாளியாக இருப்பதற்கு உற்பத்தியில் தனக்கே உரிய சொந்த அந்தஸ்தை மட்டுமின்றி, ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றிருக்க வேண்டும். மூலதனம் என்பது கூட்டுச் செயல்பாட்டின் விளைவுப் பொருள். சமுதாயத்தின் பல உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே, இன்னும் சொல்லப் போனால், சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களது ஒன்றுபட்ட செயலால் மட்டுமே மூலதனத்தை இயங்க வைக்க முடியும்.
ஆக, மூலதனம் என்பது ஒருவரின் தனிப்பட்ட சக்தியல்ல; அது ஒரு சமூக சக்தியாகும்.
எனவே, மூலதனம் பொதுச் சொத்தாக, சமுதாயத்தின் அனைத்து உறுப்பினர்களின் சொத்தாக மாற்றப்படும்போது, அதன்மூலம் தனிநபர் சொத்து சமூகச் சொத்தாக மாற்றப்படவில்லை. சொத்துடைமையின் சமூகத் தன்மை மட்டுமே மாற்றப்படுகிறது. அது தன் வர்க்கத் தன்மையை இழந்து விடுகிறது.
No comments:
Post a Comment