ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதம்.
1. தார்மீக லட்சியவாதமும், தத்துவரீதியான ஆன்மீகவாதமும். பொருள்முதல்வாதத்தைப் பற்றி வழக்கமாக உள்ள பேச்சில் நாம் காணும் குழப்பத்தை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளோம். (இலக்கு இணையதள இதழ் !5 மற்றும் 17ஐப் பார்க்கவும்) அதேபோல் ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதம் என்ற தொடர்மொழியைப் பற்றியும் குழப்பம் இருந்துகொண்டு இருக்கிறது. உண்மையிலேயே தார்மீக லட்சியவாதத்தையும் (moral idealism) தத்துவரீதியான ஆன்மீகவாதத்தையும் (Philosophical idealism) ஒன்றோடு ஒன்றைப்போட்டுக் குழப்பக்கூடாது.
தார்மீக லட்சியவாதம் என்பது ஒரு லட்சியத்தின்பால் செலுத்தும் பற்றை, பக்தியைக் குறிப்பதாகும்.தர்மம் நிறைந்த ஒரு லட்சியத்திற்காக எண்ணற்ற புரட்சிக்காரர்கள், மார்க்சியவாதிகள், தமது வாழ்வை அர்ப்பணித்து இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை உலகத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாறு காட்டுகிறது. என்றபோதிலும், அப்படிப்பட்டவர்கள்தான் தத்துவரீதியான ஆன்மீகவாதத்துக்கு எதிரிகளாக இருந்தனர்.
உலகம் முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களை எதிர்த்தும், ஆட்சியாளர்களின் கொலைகாரப் படையை எதிர்த்தும் உணர்வுப் பூர்வமாகப் போராடி தங்களது இன்னுயிரை விட்டு தியாகம் செய்தனர். அத்தகைய ஆன்மீக, லட்சிய உணர்வுள்ளவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். அத்தகைய உணர்வுப் பூர்வமான போராட்டங்களின் மூலமே மக்களின் எதிரிகளை வீழ்த்தி மக்களுக்கு நல்லனவற்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்கள்தான் கம்யூனிஸ்டுகள். இதற்கு மாறாக கம்யூனிஸ்டுகள் வெறுமனே பொருளாதாரத்திற்காக மட்டுமே சுயநலத்துக்காக மட்டுமே போராடுவார்கள் என்றும் அவர்களுக்கு லட்சியம் ஒன்றும் கிடையாது என்றும் கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பற்றி பரப்பும் பிரச்சாரங்கள் அனைத்தும் உண்மை அல்ல.
கம்யூனிஸ்டுகள் ஒரு லட்சியத்தின்பால் நம்பிக்கைகொண்டு செயல்படுகிறார்கள். மக்களின்விடுதலை மற்றும் மக்களின் நல்வாழ்வு என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் லட்சியமாகும்.
இத்தகைய கம்யூனிஸ்டுகள்தான் தத்துவார்த்த ஆன்மீகவாதம் அல்லது கருத்துமுதல்வாதத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
1.1. தத்துவரீதியான ஆன்மீக வாதம்.
தத்துவரீதியான ஆன்மீகவாதம் என்பது ஒரு தத்துவமானது ஆன்மாவைக் கொண்டு பொருளை விளக்குவதுதான் அதன் அடிப்படையாகும். அதாவது ஒரு பொருளைப் பற்றிவிளக்கும் போது அதற்கு ஆன்மாதான் அடிப்படைக் காரணம், அதாவது கருத்துதான் பொருளுக்கு அடிப்படை என்று விளக்கும் ஒரு தத்துவமே ஆன்மீகவாதம் என்ற தத்துவம்ஆகும்.
"சிந்தனைதான் மூல அம்சம், அதுதான் மற்ற எல்லாவற்றையும்விட முக்கியமான அம்சம். அதுதான் முதன்மையான அம்சம்"என்று தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு விடையளிக்கும் தத்துவ விசாரணையே ஆன்மீகவாதமாகும், சிந்தனைதான் மூல அம்சம் என்று இப்படி அடித்துப் பேசும் ஆன்மீகவாதத்தைத்தான் வாழ்நிலையை சிருஷ்டிப்பது அதாவது உருவாக்குவது சிந்தனையே என்று அதாவது வேறுவிதமாகச் சொல்வதானால் "ஆன்மாதான் பொருளை சிருஷ்டிக்கிறது அதாவது உருவாக்குகிறது"என்று உறுதிப்படுத்துகின்றது அந்தஆன்மீகவாத தத்துவம்..
இதுதான் ஆன்மீகவாதம் பெற்ற முதல் வடிவம். அந்த முதல் வடிவம் மதங்களிலே பூரண வளர்ச்சி பெற்றது. அதன் அடிப்படையிலேயே கடவுள்தான் அதாவது "சுத்த சுயம்பிரகாசமான ஆன்மா" தான், பிரபஞ்சத்தை (பொருளை) சிருஷ்டிதது அல்லது உருவாக்கியது என்று மதங்கள் அடித்துச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.
தத்துவஞான மெய்ஞான விசாரணைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது மதம் என்று முன்பும் இந்த மதவாதிகள் சொன்னார்கள் இப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். என்றாலும், உண்மை என்னவோ நேர் எதிரானதுதான். ஆன்மீகவாதத்தை அல்லது கருத்துமுதல்வாதத்தை நேரடியாக, தர்க்கரீதியாக பிரதிநிதித்துவப் படுத்துகிறது மதம்,என்பதே பிரத்யட்சமான உண்மையாகும். அதாவது மதவாதங்கெல்லாம் அடிப்படை ஆன்மீகவாதம் என்னும் கருத்துமுதல்வாதத் தத்துமே அடிப்படையாகும். பிறகு பல நூற்றாண்டுகளினூடே விஞ்ஞானம் இந்தத் தத்துவத் துறைகளில் தலையிடலாயிற்று. விஞ்ஞானம் குறுக்கிட்டவுடன் பொருளையும், பிரபஞ்சத்தையும், விஷயங்களையும், பிரச்சனைகளையும் கடவுள் செயல் என்று ஒரேயடியாக அடித்துச் சொல்லி விள்குவதற்குப் பதிலாக மாறான முறையில் விளக்க வேண்டிய நிர்பந்தம் ஆன்மீகவாதிகள் அல்லது கருத்துமுதல்வாதிகளுக்கு ஏற்பட்டது. ஏனெனில் 16ஆவது நூற்றாண்டு முதல் இயற்கையின் தோற்றங்களைப் பற்றி விஞ்ஞானம் விளக்கம் தரத் தொடங்கியது. அப்படி விளக்கும்போது அது கடவுளைப் பொருட்படுத்தவில்லை, கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. சிருஷ்டி என்ற (அதாவது முன்னால் இல்லத ஒன்றை பின்னால் உண்டாக்கப்பட்டது. எனவே யாரோ ஒருவர், ஏதோ ஒரு சக்தி, அதை உண்டாக்கித்தானே இருக்க வேண்டும் என்ற) கற்பனையை விஞ்ஞானம் உபயோகிக்காமல் அதாவது பயன்படுத்தாமல் விட்டுவிட்டது.
சரி நிலைமை இவ்வளவுக்கு வந்துவிட்டதா? இந்த விஞ்ஞானரீதியான, பொருள்முதல்வாதப் பூர்வமான, நாத்தீக விளக்கங்களை எதிர்த்து இன்னும் திறமையாகப் போராடியாக வேண்டும் - என்ற நிலைமை ஆன்மீகவாத கருத்துமுதல் வாதிகளுக்கு ஏற்பட்டது. எனவே ஆன்மீக கருத்துமுதல் வாதத்தின் கதி என்னவாயிற்று தெரியுமா? அல்லது இன்னும் கொஞ்ச தூரம் தள்ள வேண்டியதாயிற்று. பொருளாவது இருப்பதாவது! பொருள் (பிரபஞ்சம்) என்பதே கிடையாதே, அது வெறும் மாயைதானே! என்று ஒரேயடியாக மறுக்க வேண்டிய நிர்பந்தம் ஆன்மீகவாத கருத்துமுதல்வாதிகளுக்கு ஏற்பட்டது.
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு பொருட்களைப் பற்றியும், சூரியன், சந்திரன் உட்பட்ட கோளங்களைப் பற்றியும் விஞ்ஞானிகள் விஞ்ஞானத்தைக் கொண்டு ஆய்வு செய்து அரியவிஞ்ஞான உண்மைகளை இன்றும் வெளியிட்டுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களில் யார் ஒருவரும் அவர்களது ஆய்வு முடிவுகளுக்கு கடவுளை காரணம் காட்டவில்லை. அந்த விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளையே மனித சமூகம் இன்றும் பயன்படுத்தி பல பலன்களை அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில்தான் கருத்துமுதல்வாத ஆன்மீகவாதிகள் பொருளே உலகத்திலோ பிரபஞ்சத்திலோ இல்லை என்றும், நாம் காணும் பொருள்கள் யாவும் நமது கற்பனையே என்றும் அது மாயை என்றும் "உலகே மாயம், வாழ்வே மாயம்"என்றுபுலம்ப (பாட) ஆரம்பித்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் அப்பாவி பொது மக்களையும் இந்த மாயாவாதத் தத்துவத்தில் நம்பிக்கை வைக்கச் செய்துவிட்டார்கள். இந்த கருத்துமுதல்வாத ஆன்மீகவாத தத்துவவாத மெய்ஞானிகள் எல்லாவிதமான ஆடம்பரமான வாழ்க்கையும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அனுபவிக்கும் ஆடம்பர வாழ்க்கை கிடைக்காத மிகமிக ஏழ்மையில் வாழும் மனிதர்கள், அவர்களும் இந்த ஆன்மீகவாதிகளைப் போல் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் போராடக் கூடாது என்று வறியவர்களைத் தடுக்கவே இந்த உலகமும் வாழ்வும் மாயை என்று நம்ப வைத்து ஏமாற்றுவதற்காகவே பொருள்களே உலகத்தில் இல்லை என்றும் எல்லாம் மாயையே என்ற கருத்தியலான தத்துவத்தைஇப்போதும் போதித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
19ஆவது நூற்றாண்டின் தொடக்கத்தில் பிஷப் பெர்க்லி என்றொரு ஆங்கிலேயப் பாதிரியார் இருந்தார். அவர்தான் கருத்துமுதல்வாத ஆன்மீகவாதத்தை இப்படி முன்தள்ளிச் செல்லும் வேலையை மேற்கொண்டார். ஆகவேதான் அவர் ஆன்மீகவாதத்தின் தந்தை என்றுஅழைக்கப்படுகிறார்.
2. பெர்க்கிலியின் கருத்துமுதல்வாத ஆன்மீகவாதத்தை நாம் ஏன் கற்ற வேண்டும்.
பொருள்முதல்வாதத்தை நிர்மூலமாக்குவதே பெர்க்லியின் கருத்துமுதல்வாத ஆன்மீகவாத தத்துவ மெய்ஞானத்தின் குறிக்கோளாகும்; புலன்களுக்கு எட்டுகிற பௌதீகப் பொருள் என்று ஒன்றும் கிடையாது என்று விளக்கிக் காட்டுவதே அவருடைய குறிக்கோள் என்பது தெளிவான விஷயமாகும். "ஹைலாஸ் பிலோனஸ் உரையாடல்" என்ற தம்முடைய நூலில் அவர் முன்னுரையாக பின்வருமாறு எழுதுகிறார்"இந்த கோட்பாடுகளைச் சரி என்று ஏற்றுக்கொள்வீர்களானால் நாத்தீகவாதமும் சந்தேகவாதமும் ஒரேயடியில் அடிபட்டுப் போய்விட்டன என்றும் விளங்காமலேயே இருந்த பிரச்சனைகள் தெளிவாகிவிட்டன என்றும் விடைகாணாத கேள்விகளுக்கு விடை கிடைத்துவிட்டது என்றும் புதிர் போடுவதில் ஆர்வங்கொள்ளும் ஆசாமிகளுக்கும் புத்தி புகட்டியாகிவிட்டது என்றும் கொள்ளலாம்" என்றுஎழுதினார்.
மனிதர்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் கடவுளிடம் சென்று முறையிட்டால் தீர்ந்துவிடும் என்று ஒரே கருத்தை வெவ்வேறு வடிவங்களில் மக்களிடம் பிரச்சாரம் செய்பவர்கள்தான் இந்த கருத்துமுதல்வாத ஆன்மீகவாதிகள். ஆகவே இவர்கள் முன்வைக்கும் எந்தவிதமான கருத்திற்கும் நடைமுறை ஆதாரத்தை முன்வைக்க மாட்டார்கள். கடவுள் ஆன்மா போன்றவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அதன் மீது மக்களை நம்பிக்கை வைக்கச் சொல்வார்கள். அந்த வகையிலேயே இந்த பெர்க்லிப் பாதிரியார் அனைத்துப் பிரச்சனைகளையும் ஒரேயடியாகத் தீர்த்துவிட்டதாக ஜம்பமடிக்கிறார்.
ஆகவே பொருள் என்று ஒன்றும் கிடையாது என்பதையே பெர்க்லி உண்மையாகக்கருதுகிறார். பொருள் உண்டு என்று சாதிப்பதைக் கண்டால் அவருக்கு அது ஒரு விநோதமானபுதிராகத்தான் படுகிறது. தமது கருத்தை நிருபித்துக்காட்ட அவர் என்ன செய்கிறார் என்பதைநாம் பார்க்கப் போகிறோம். அதே சமயத்தில் தத்துவ மெய்ஞானத்தைக் கற்க விரும்புபவர்கள்பெர்க்லியின் தத்துவ முறையை ஆழ்ந்து கவனிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்றுவலியுறுத்துவதில் நமக்கு நன்மைகள் உண்டு நாம் என்றே நாம் கருதுகிறோம்.
மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒரு பொருள்வகைப்பட்டவர்களாகவே இருக்கிறோம். பெர்க்லி பாதிரியார் கருதுவது போல உலகில் பொருள் என்பதே இல்லை என்று கருதினால் நாமெல்லாம் உண்மையில் இல்லை என்றே பொருள்படுகிறது. ஏன் பெர்க்லி பாதிரியார் கூட உண்மையில் இல்லை என்றே பொருள்படும். இது எவ்வளவு அபத்தமான கருத்து என்பது சாதாரணமான மனிதனும் உணர்வான். எனினும் பெர்க்லி பாதிரியார் இந்த அபத்தமானஉண்மைக்கு மாறான கருத்தை எவ்வாறெல்லாம் விளக்குகிறார் என்பதை நாம் புரிந்துகொள்வதன் மூலம் தத்துவ மெய்ஞானத் துறையில் இந்த கருத்து முதல்வாத ஆன்மீகமெய்ஞானிகள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். மேலும் இந்த வகையான கண்ணோட்டத்திலிருந்து சமூகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் பிரச்சனைகளில் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
பெர்க்லியின் தத்துவ விரிவுரைகளை கேட்டாலே சிலருக்கு நகைப்புத்தான் வரும் என்பதை நாம் அறிவோம். ஆனால் ஒன்று அவர் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நாம் 20ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். (தற்போது 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம்) நமக்கு முந்திய காலத்திய ஆய்வு ஆராய்ச்சிகளினால் நாம் பயனடைந்திருக்கிறோம் என்ற விசயத்தை நம்மில் யாரும் மறக்கக் கூடாது புரிகிறதா?
அதுமட்டுமல்ல, பொருள்முதல்வாதத்தையும் அதன் வரலாற்றையும் நாம் கற்க முற்படும்போது,
பழைய காலத்திய பொருள்முதல்வாத தத்துவ மெய்ஞானிகள் கூட நகைப்புக்கிடமான பலவிஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம்.
இவ்வாறு பழங்காலத்தில் பொருள்முதல்வாதிகளும், கருத்துமுதல்வாதிகளும் நகைப்பிற்கு இடமான வகையில் பேசி இருக்கிறார்கள் என்பதை தத்துவ மெய்ஞான வரலாற்றில் நாம் பார்க்கலாம். எனினும் பொருள்முதல்வாதமானது ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடைய குறைகளை களைந்து செழுமைப் படுத்தி இயக்கவியல் தத்துவ மெய்ஞானமாக வளர்ந்துள்ளதை நாம் பார்க்க முடியும். இவ்வாறு இந்த தத்துவக் கண்ணோட்டமானது வளர்ந்துகொண்டே செல்வதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தீதரோவை நீங்கள் அறிவீர்கள், மார்க்சும், எங்கெல்சும் வருவதற்குமுன் அவர்தான் மிகப்பெரிய பொருள்முதல்வாத சிந்தனையாளராகத் திகழ்ந்தார். அப்பேர்ப்பட்ட தீதரோ, பெர்க்லியின் தத்துவ முறைக்குக் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கிறார். "பெர்க்லியின் தத்துவ முறைதான் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் ஆபத்தானது. என்றாலும் மற்றெல்லாவற்றையும் காட்டிலும் அதை வெல்வதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மனிதன் அறிவுக்கும் தத்துவ மெய்ஞானத்துக்கும் இது ஒரு மானக்கேடான விஷயம்தான்" என்று பெர்க்லியின் தத்துவ முறையைத் தீதரோ வர்ணித்துள்ளார்.
பொருள்முதல்வாதமும் அனுபவ ஞான விமர்சனமும் என்ற நூலை எழுதிய லெனின்,பெர்க்லியின் தத்துவத்தைப் பற்றி பல பக்கங்கள் எழுதினார். "ஆன்மீகவாதத்தின் கடைசிக்கொழுந்துகள் என்று சொல்லப்படுகிற தத்துவ மெய்ஞானிகள் பொருள்முதல்வாதத்தைஎதிர்த்து எவ்வளவோ சொல்லியிருக் கிறார்கள் என்றாலும் பெர்க்லிப் பாதிரியார் கிளப்பியவாதங்களுக்கு மேல் அவர்கள் புதிதாக ஒன்றும் சொல்லிவிடவில்லை"என்று லெனின் எழுதினார்.
கடைசியாக ஒன்று நமது கல்லூரிகளில் இன்று பிரபலமாகி வரும் தத்துவ மெய்ஞானவரலாற்றின் தொகுப்பு என்ற நூல் பெர்க்லியின் தத்துவ முறையைப் பற்றித் தரும் ஒருபாராட்டுரையைப் பாருங்கள் "பெர்க்லியின் தத்துவத்தில் குற்றங்குறைகள் சில இருக்கின்றனஎன்றாலும் அதை மெச்சித்தான் ஆகவேண்டும். புலனுக்கு எட்டக்கூடிய பொருள் ஒன்றுஇருக்கிறது என்ற நம்பிக்கை மீண்டும் தலைகாட்டாதபடி தத்துவ மெய்ஞானிகள்மனத்திலிருந்து நிரந்தரமாக நிர்மூலமாக்கும் தத்துவம் அது" என்று அந்த நூல் வர்ணிக்கிறது.
பெர்க்லியின் தத்துவ விசாரணை இப்போது தெரிகிறது அல்லவா?
தற்போதும் தத்துவம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக மாற்றம் பற்றிய பிரச்சனைகளில் மார்க்சியம் போதாது என்பவர்களும், மார்க்சியத்தை வெறுப்பவர்களுக்கும்இந்த பெர்க்லிப் பாதிரியார் போன்ற கருத்துமுதல்வாத ஆன்மீகவாதிகளின் சிந்தனைமுறைதான் அடிப்படையாக உள்ளது. ஆகவேதான் பெர்க்லிப் பாதிரியாரின் ஆன்மீகவாதகண்ணோட்டங்களை நாம் புரிந்துகொண்டு, இத்தகைய கண்ணோட்டம் கொண்டவர்களைநாம் எதிர்த்துப் போராடி மார்க்சியத்தைப் பாதுகாத்து வளர்க்க வேண்டிய நிலையில்உள்ளோம்.
3. பெர்க்லியின் ஆன்மீகவாதம்.
ஆகவே புலனுக்கெட்டும் பொருள் (பிரபஞ்சம்) என்று ஒன்றும் கிடையாது என்று நிருபித்துக்காட்டுவதுதான் பெர்க்லி தத்துவ முறையின் நோக்கமாகும்.
"நமது மனத்துக்கு அப்பால், மனத்துக்கு வெளியே ஒன்று இருப்பதாக நினைத்துக்கொண்டு எதை நம்புகிறோமோ அது பொருள் அல்ல. பொருட்கள் உண்டு என்று நாம் நினைப்பதற்கு காரணம் நாம் அவற்றைக் கண்ணால் பார்க்கிறோம், கையால் தொடுகிறோம், என்பதுதான். இப்படிப்பட்ட உணர்ச்சிகளை நமது புலன்களுக்கு அவை கொடுப்பதால்தான் பொருட்கள்உண்டு என்று நாம் நம்புகிறோம்."
"ஆனால் புலன் உணர்ச்சிகள் என்பவை மட்டும் என்ன? அவையும் நம் மனதில் எழும்எண்ணங்கள்தானே! ஆகவே, நாம் புலன்களின் வாயிலாகக் கண்டறியும் பொருட்களெல்லாம்நம்முடைய எண்ணங்கள்தானே தவிர வேறொன்றுமில்லை. மேலும் இந்த எண்ணங்கள் நமதுமனத்துக்கு வெளியே நிலைபெற்று இருக்க முடியாது" என்று பெர்க்லி சொல்கிறார்.
பொருட்கள் உண்டு என்கிறார் பெர்க்லி; அவற்றின் தன்மையையும், அவை இருப்பதையும்அவர் மறுக்கவில்லை. ஆனால் அவையெல்லாம் நமது புலனுணர்ச்சிகளின் வடிவத்தில்மட்டுமே உள்ளன. இந்தப் புலனுணர்ச்சி கள்தான் அவற்றை நாம் அறியும்படி செய்கின்றனஎன்று அடித்துப் பேசுகிறார். பிறகு அதிலிருந்து ஒரு முடிவிற்கு வருகிறார் அது என்ன? அந்தப்பொருட்களும் அவற்றைப் பற்றிய நமது புலனுணர்ச்சிகளும் ஒன்றேதான். வேறுவேறானவையல்ல என்று தீர்மானிக்கிறார்.
ஆரம்பத்தில் ஆன்மீக கருத்துமுதல்வாதிகள் பொருளே இல்லை என்று வாதிட்டார்கள். ஆத்மா மட்டுமே உள்ளது என்று வாதிட்டார்கள். இந்த பெர்க்லிப் பாதிரியார் பொருளும் ஆன்மாவும் ஒன்றே என்று சொல்லி பொருள் என்பது இல்லை என்ற கருத்துமுதல்வாதிகளின் முந்தைய கொள்கைக்கு வலு சேர்க்கிறார். இவரும் பொருள்கள் என்பது இல்லவே இல்லை என்றே வாதிடுகிறார்.
பொருட்கள் உண்டு என்பது நிச்சயம் தான் ஆனால் அவை நம் உள்ளே, நமது மனத்தின் உள்ளே தான் இருக்கின்றன என்கிறார் பெருக்கிலி. நமது மனத்துக்கு வெளியே அந்த பொருட்களுக்கு ஒரு பூத உடல் கிடையாது என்கிறார் அவர் கண் வாயிலாக நாம் பொருட்களின் தோற்றத்தை உணர்கிறோம், ஸ்பரிசத்தத்தின் வாயிலாக அல்லது தொடு உணர்ச்சியின் வாயிலாக அவற்றின் திடநிலையை அறிகிறோம், மூக்கின் வாயிலாக அவற்றின் வாசனையை அறிகிறோம், நாக்கின் வாயிலாக அவற்றின் சுவையை அறிகிறோம், காது வாயிலாக அவற்றின் சத்தங்களை அறிகிறோம், இந்த வெவ்வேறான புலன்உணர்ச்சிகள் நமக்கு பல எண்ணங்களை உண்டாக்கி தருகின்றன, இந்த எண்ணங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவற்றிற்கு ஒரு பொதுப் பெயர் கொடுத்து அவற்றைப் பொருட்களாக கருதம்படி நம்மைச் செய்கின்றன. "உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நிறமும் சுவையும் மணமும் வடிவமும் திரட்ச்சியும் ஒன்றாய் கூடியிருப்பதை கண்ட பிறகு அவற்றை எல்லாம் கொண்டு நான் ஒரு குறிப்பிட்ட பொருளை குறிப்பதாக கொள்கிறோம். அதை ஆப்பிள் பழம் என்ற பெயரால் குறிக்கிறோம் இப்படியே ஒவ்வொரு எண்ணம் குவியல்கள் சேர்ந்து ஒரு கல்லாகவும் ஒரு மரமாகவும் ஒரு புத்தகமாகவும் பிற நல்ல பொருட்களாகும் ஆகின்றன" என்கிறார் பெர்க்லி.
ஆகவே பிரபஞ்சமும் பொதுவாகவே எல்லா பொருட்களும், புறத்தே நிலைபெற்று இருக்கின்றன என்று நாம் அறிந்து கொண்டுள்ளதாக நினைப்போமாயானால் நாம் பல மயக்கங்களுக்கு, மாயத்தோற்றங்களுக்கு இரையாகிறோம் என்று தான் அர்த்தம். ஏனென்றால் இவை எல்லாம் நம் மனதின் உள்ளேதான் இருக்கின்றன என்கிறார் பெர்க்லிப் பாதிரியார்.
ஹைலாஸ் பி லோனஸ் உரையாடல் என்ற தமது நூலில் பெர்க்லி இந்த விரிவுரையைப் பின்வருமாறு நிருபித்துக் காட்டுகிறார்.
"ஒரே நேரத்தில் ஒரே பொருள் வேறு விதமாக இருக்க முடியும் என நம்புவது சுத்த அபத்தமல்லவா, உதாரணமாக ஒரே பொருள் ஒரே நேரத்தில் சூடாகவும் குளிர்ச்சியாகவும் இருக்க முடியும் என நம்புவது சுத்த அபத்தம் அல்லவா. உங்களுடைய வலது கை சூடாகவும் இடது கை குளிர்ச்சியாகவும் இருக்கிறதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பிறகு இளஞ் சூடான நீரில் இரண்டு கைகளையும் விடுங்கள் அப்போது அந்த நீர் வலது கைக்கு குளிர்ச்சியாகவும் இடது கைக்கு சூடாகவும் இருக்கிறதாகத் தோன்றுகிறதா" என்கிறார் பெர்க்லி.
இங்கே பெர்க்லிப் பாதிரியார் கற்பனை செய்துகொள்வது பற்றிப் பேசுகிறார். அத்தகைய கற்பனை என்பது நமது மனதிற்குள் நாமாக உருவாக்கிக் கொள்வதுதானே. அத்தகைய கற்பனை என்பது உண்மையில் இருக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? ஆகவே நமது மனமானது கருதுவதைத்தான் பொருள் என்று வாதாடும் பெர்குகிலிப் பாதிரியார் இல்லாத பொருளைப் பற்றியும் நமது மனம் கருதுவது எப்படி என்பதற்குப் பதில் கொடுக்க வேண்டும் அல்லவா?
ஆகவே ஒரே நேரத்தில் ஒரு பொருள் தானே வேறு வேறாக இருக்க முடியும் என்று நம்புவது முட்டாள் தனமாகும். ஆதலால் அது நம் மனதில் இருக்கிறது என்று நாம் முடிவு செய்ய வேண்டும்.
தனது ஆய்வு முறையையும் தர்க்க முறையையும் கொண்டு பெர்கலி என்ன செய்கிறார்?
பொருட்களிடமிருந்து அவற்றின் குணாம்சங்களை வேறு வேறாக களைந்து எரிகிறார். அவரது வாதங்களை கேளுங்கள்.ஒவ்வொன்றுக்கும் இன்ன நிறம், இன்ன சுவை, இன்ன மனம், இன்ன பருமன், இன்ன எடை, என்று இருப்பதால் தானே பொருட்கள் இருக்கின்றன என்று சொல்கிறீர்கள். அந்த குணம்சங்கள் அந்தப் பொருட்கள் இடத்தில் கிடையாது. அது நம் மனதில் தான் உள்ளன என்று நான் நிரூபிக்கிறேன்.
இதோ, ஒரு துணி, இது சிவப்பு என்று நீ சொல்கிறாய். உண்மையில் அது சிவப்புத்தானா?
அந்தச் சிவப்பு அந்தத் துணியில் அடங்கியிருப்பதாக நினைக்கிறாய். நிச்சயமாய், அப்படித்தானா? மனிதனின் கண்கள் போலில்லாமல் வேறு மாதிரிக் கண்கள் படைத்த மிருகங்கள் இருப்பதை நீ அறிவாய் அவை அந்தத் துணியைச் சிவப்பு நிறத்தில் பார்க்காது.
அதுபோல், மஞ்சள்காமாலை பிடித்தவனுக்கு அந்தத் துணி மஞ்சளாகத் தெரியுமே? அதற்கென்ன சொல்கிறாய்? நிஜமான நிறந்தான் எது? நிலைமைகளைப் பொருத்திருக்கிறது.என்று சொல்கிறாயா? அப்படியானால், சிவப்பு என்பது அந்தத் துணியில் இல்லை; நம் கண்ணில், நம் மனத்தில்தான் இருக்கிறது என்கிறார் பெர்க்லிப் பாதிரியார்.
இதோ, இந்தத் துணி, இது லேசாக இருக்கிறது என்கிறாயா? சரி இந்தத் துணி ஒரு எறும்பின்மேல் விழுந்தால், நிச்சயமாக எறும்புக்கு அது கனமாகப்படுமே! இதில் யார் சொல்வது சரி? அந்தத் துணி சுடுகிறதாக நீ நினைக்கிறாயா? நீ காய்ச்சலில் படுத்திருந்தால் அப்போது அது உனக்கு சில்லென்று இருப்பதாகத் தோன்றுமே! இதில் எது சரி என்று வினா எழுப்புகிறார் பெர்க்லி சுருங்கச் சொன்னால், அதே பொருட்கள் சிலருக்கு சிவப்பாகவும், பளுவாகவும், சூடாகவும் வேறு சிலருக்கு அவற்றிற்கு நேர்மாறாகவும் இருப்பதாக ஒரே சமயத்தில் தெரிகிறது என்றால் நாம் பல மாயைகளுக்கு ஆளாகிறோம் என்பதுதான் விஷயம். பொருட்கள் என்பவை நம் மனத்தில்தான் உள்ளன என்பதுதான் விஷயம் என்கிறார் பெர்க்லி.
பொருட்களிடமிருந்து அவற்றின் எல்லாக் குணாம்சங்களையும் களைந்தெறிவதன் மூலமாகப் பொருட்களெல்லாம் நம் மனதில்தான் உள்ளன. அதாவது பொருள் என்பதே ஒரு கருத்துத்தான்என்று சொல்லும் நிலைமைக்கு வந்து சேருகிறோம்.
சுவை, சப்தம், போன்ற சில குணாம்சங்கள் பொருட்களிடத்தில் இல்லை. நம்மிடம்தான் இருக்கின்றன. என்று பெர்க்லிக்கு முன்பே பண்டைக்கால கிரேக்க தத்துவ மெய்ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதும் சரிதான். என்றாலும்கூட பெர்க்லி தத்துவம் புதிதாகச் சொல்வது என்ன என்று கேட்டால், இந்தக் கூற்று பொருட்களின் எல்லாக் குணாம்சங்களுக்குமே பொருந்தும் என்கிறார் பெர்க்லி.
கிரேக்க தத்துவ மெய்ஞானிகள் பொருட்களின் குணாம்சங்களை இரண்டு வகையாக இனம் கண்டுகொண்டார்கள். ஒரு பக்கத்தில் முதல்தர குணாம்சங்கள்; அதாவது பொருட்களுக்கு உள்ளேயே தங்கியுள்ள எடை, பருமன், எதிர்சக்தி முதலியன. இன்னொரு பக்கத்தில் இரண்டாம்தர குணாம்சங்கள்; அதாவது நம் உள்ளே இருக்கும்படியான மணம், சுவை, வெப்பதட்பம் முதலியன.
முதல்தர குணாம்சங்களுக்குக் கிரேக்கர்கள் சொன்ன வாதங்களைப் பெர்க்லி இரண்டாந்தர குணாம்சங்களுக்கும் பிரயோகிக்கிறார். அதாவது எல்லாக் குணாம்சங்களும் நம் உள்ளேதான் இருக்கின்றனவே தவிர பொருட்களிடத்தில் இல்லை என்கிறார்.
சூரியனைப் பார்க்கும்போது அது வட்டமாகவும், சமனாகவும் சிவப்பாகவும் இருக்கக் காண்கிறோம். ஆனால் அது தவறு என்று விஞ்ஞானம் சொல்கிறது. சூரியன் சமனமாகவும் இல்லை, சிவப்பாகவும் இல்லை. ஆகவே நாம் விஞ்ஞானத்தைத் துணைகொண்டு சூரியனைப் பற்றிய நாம் கற்பித்த சில பொய்யான குணாம்சங்களைக் கணக்கிலிருந்து கழித்துவிடுகிறோம்; அதற்காகச் சூரியன் என்பதே கிடையாது என்று முடிவு செய்வதில்லை! ஆனால் இப்படிப்பட்ட முடிவுக்கு வருவதுதான் பெர்க்லிப் பாதிரியார் சாதித்த முடிவான சாதனை ஆகும்.
பண்டைக்காலத்திய கிரேக்க தத்துவ மெய்ஞானிகள் முதல்தர குணாம்சங்க ளென்றும் இரண்டாந்த குணாம்சகளென்றும் இனம்பிரித்தார்களே. அது விஞ்ஞான ஆய்வுக்கு முன்னே நிற்க முடியவில்லை என்று பெர்க்லி சுட்டிக் காட்டினார். ஆவர் சுட்டிக் காட்டியதில் தவறொன்றும் இல்லை. ஆனால் இந்த ஆய்வுக் கூற்றுகளிலிருந்து நியாயமற்ற முடிவுகளுக்கு அவர் வருகிறார். தர்க்கம் செய்யும் முறையில் ஒரு தவறு செய்கிறார். அதாவது எடுத்துக்கொண்ட பிரமாணங்களுக்கும், வந்தடைந்த முடிவுக்கும் சம்பந்தமோ நியாயமோ இல்லை என்ற குற்றத்தைச் செய்கிறார். அதன் விளைவாக, பொருட்களின் குணாம்சங்கள் என்பவை நமது புலனுணர்ச்சிகள் தெரிவிக்கின்ற மாதிரி இல்லை என்று காட்டுகிறார்.
அதாவது நமது புலன்கள் நம்மை ஏமாற்றுஇன்றன. புற உலகை பொருளின் யதார்த்த நிலையை, நமது புலன்கள் திரித்துக் கூறுகின்றன என்கிறார். ஆகவே புறத்தேயுள்ள பொருட்களின் யதார்த்த நிலை என்பது, பிரபஞ்சம் என்பது, கிடையாது என்று உடனே முடிவு கட்டுகிறார்.!
குறிப்பு:- பெர்க்லிப் பாதிரியாரின் இந்த ஆய்வுரையின் மூலம் வெளியிடப்பட்ட கருத்தையும் இதற்கு அடிப்படையாக உள்ள வாதங்களையும் பெர்க்லி வெளியிடுவதற்கு முன்பே, ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் ஆதி சங்கரர் வெளியிட்டிருக்கிறார் என்பது கவனிக்க தக்கது. பெர்க்லி 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஆதி சங்கரர் 8-ஆவது நூற்றாண்டில்வாழ்ந்தவர்.
மனிதர்கள் வாழும் இடம் அதாவது வீடு, அவர்கள் உண்ணும் உணவு போன்றவை பொருட்களாகும். இந்தப் பொருட்கள் எல்லாம் மனிதர்களுக்கு அப்பாற்பட்டு புறத்தில் இல்லை என்றும் அவை எல்லாம் மனிதர்களின் மனத்தில்தான் உள்ளது என்பதுவே பெர்க்லிப் பாதிரியார் மற்றும் ஆதி சங்கரின் வாதமாகும். இவர்களையும் இவர்களது கருத்துக்களையும் பரப்புபவர்களையும் புறநிலையிலுள்ள உணவை இவர்களுக்கு வழங்காமலும் மழையிலும் வெயிலிலும் வாடும்படி குடியிறுப்புகளிலிருந்து பொட்ட வெளியில் இருத்திவிட்டால் இவர்களது நிலைமை என்னவாகும்? இவர்களைப் பொறுத்த மட்டில் உணவு, வீடு போன்ற பொருட்கள் இவர்களது மனத்தில்தானே உள்ளது. இவர்களது மனதில் உள்ள பொருட்களான வீட்டில் குடியிருந்துகொண்டே இவர்களது மனதிலுள்ள உணவை உண்டு உயிர் வாழ்ந்துவிடுவார்களா? புறநிலையிலுள்ள உணவு இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றால் இவர்கள் செத்து மடிந்துவிடுவார்கள் என்ற உண்மையை மூடிமறைத்துவிட்டு மக்களை ஏமாற்றுவதற்கான தத்துவத்தையே இவர்கள் சொல்கிறார்கள். மேலும் பொருட்களும் எண்ணமும் ஒன்று என்றால் அவை எல்லாம் மனிதனது மனத்துக்குள்ளேயே உள்ளது என்றால் மனிதன் என்ற பொருளும் இல்லை என்றாகிறது. மனிதன் என்ற பொருளே இல்லை என்றால் மனம் மற்றும் சிந்தனையானது எங்கிருக்கும். ஆகவே இந்த தத்துவமானது எங்கும் எதுவும் இல்லை என்ற மாயாவாதத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.
4. ஆன்மீகவாத தர்க்கத்தின் விளைவுகள்
"எல்லாம் நம் மனத்தின் உள்ளேதான் இருக்கின்றன" என்பதுவே கருத்துரையானால், புற உலகு என்பது கிடையாது என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும்.
இந்தத் தர்க்கத்தை அதன் முடிவு வரைக்கும் கொண்டுபோய்ப் பார்த்தால் என்ன ஆகும்? " நான் ஒருவன்தான் இருக்கிறேன் மற்றவர்கள் எல்லோரும் இல்லை, ஏனென்றால் என்னுடைய எண்ணங்களைக் கொண்டுதானே நான் மற்ற மனிதர்களை அறிகிறேன். பிற பொருட்களைப் போலவே, மற்ற மனிதர்களும் எனக்கு எண்ணக் குவியல்களே" என்று கூற வேண்டிய நிலைமைக்கு வந்துவிடுகிறோம். இதைத்தான் தத்துவ மெய்ஞானத்தில் "நான் ஒருவனே இருக்கிறேன்" என்று கூறுகிற தத்துவமாகக் குறிப்பிடுகிறார்கள். இதை ஆங்கிலத்தில் சோலிப்பிசம் ( Solipsism) என்பார்கள்.
இப்படிப்பட்ட தத்துவத்தை ஆதரிக்கிறீர்களே என்று யாராவது குற்றம் சாட்டுவார்களோ என்று பயந்து உள்ளுணர்வோடு பெர்க்லி தன்னை தற்காத்துக்கொள்கிறார் என்று லெனின் தம் நூலில் சொல்கிறார். இந்தத் தத்துவம் ஆன்மீக வாதத்தின் அதிதீவிரமான வடிவம் ஆகும். இந்தத் தத்துவத்தை தத்துவ மெய்ஞானிகள் யாரும் ஆதரித்தது கிடையாது. அதனால்தான் பொருள் ஒன்றில்லை என்று மறுக்கிற வாதம் தர்க்க ரீதியாகவும் முரண்பாடில்லாமலும் இருக்க வேண்டுமானால் இந்த அதிதீவிரமான முட்டாள்தனமான முடிவுக்கு, அதாவது "நான் ஒருவனே இருக்கிறேன்" என்ற தத்துவ ஞானத்துக்கு வந்து தீரவேண்டும். நாம் ஆன்மீகவாதிகளுடன் விவாதத்தில் இறங்கும் காலத்தில் இந்த விஷயத்தை மீண்டும் எடுத்துக்காட்ட முயற்சி செய்வோம்.
5. ஆன்மீகவாதத்தின் வாதங்கள்.
தத்துவ மெய்ஞான ரீதியான ஆன்மீகவாதம் என்றால் என்ன என்கிற விஷயத்தை பெர்க்லிதான் ஒளிவு மறைவில்லாமல் பட்டவர்த்தனமாக விளக்கி வைத்தார். அதனால்தான் அவருடைய தத்துவத்தை முடிந்தளவுக்கு எளிய முறையில் சுருக்கிச் சொன்னோம். இந்த வாதங்கள் எல்லாம் நமக்குப் புதியவை. ஆகவே அவற்றைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அவற்றை நாம் மிகவும் அக்கறையுடன் படித்துத் தீரவேண்டும். மூளைக்கு வேலை கொடுத்தாக வேண்டும்.
ஆன்மீகவாதத்தை இன்னும் மறைபொருளாகச் சொல்லும் பாணியிலேயே சிலர் இறங்கக்கூடும். புதிய புதிய சொற்களையும் சொற்றொடர்களையும் அடுக்கித் திரையிட்டுப் பேசக்கூடும். அப்படி எல்லாம் செய்து பார்த்த போதிலும்"அந்தப் பழைய மனிதர் பெர்க்லி்ப் பாதிரியார்"தொகுத்த வாதங்களைத்தான் எல்லா ஆன்மீகவாத தத்துவ மெய்ஞானிகளும் திரும்பிச் சொல்கிறார்களே தவிர அவற்றிற்கு மேல் போகிறது இல்லை என்கிறார் லெனின்.
இதனை பின்னால் பார்ப்போம்.
இந்தியாவிலும் ஆதி சங்கரரின் ஆன்மீகவாதத்தையே மெச்சிப் புகழ்ந்து இந்தியாவின் தலைசிறந்த தத்துவ மெய்ஞானிகள் வாழ்ந்த நாடாக பழம் பெருமை பேசி மக்களை ஏய்த்துவரும் கூட்டமாக RSS பாஜக கும்பலும் தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் பிரச்சாரத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் வாழ்ந்த ஆன்மீகவாதிகளோடு ஒப்பிடும் போது இங்கே வாழ்ந்த பொருள்முதல்வாத தத்துவ மெய்ஞானிகளைப் பற்றி இவர்கள் பேசமாட்டார்கள். இந்த ஆன்மீகவாதத்தின் அடிப்படையில் சனாதன தருமங்களைப் புகழ்ந்து பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை தாழ்ந்தவன் என்றும் உயர்ந்தவன் என்ற வருண,சாதிய கொள்கைகளை உயர்த்திப் பிடிப்பதை நாம் காணலாம். இத்தகைய பிற்போக்கு கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான கண்ணோட்டமே ஆன்மீகவாத தத்துவ மெய்ஞான கண்ணோட்டமாகும். ஆகவே இத்தகைய பிற்போக்கு சாதி, வருணக் கொள்கைகளை நாம் முறியடித்து புரட்சிகரமான கொள்கைகளை மக்கள் முன்வைக்க வேண்டுமானால் இந்தக் கண்ணோட்டத்திற்கு நேர்எதிரான இயக்கவியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை பெற வேண்டும். இந்த ஆன்மீகவாதத்தின் பித்தலாட்டத்தையும் சனாதனக் கொள்கையின்கொடூரத் தன்மையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆளும்வர்க்கங்கள் தயாரிக்கிற தத்துவ மெய்ஞான வரலாற்றில் ஆன்மீகவாதம்தான் ஆதிக்கம் வகித்து வந்தது. இன்றைக்கும் ஆதிக்கம் வகித்து வருகிறது. அதற்கு ஒரு சிந்தனை முறை, ஒரு கண்ணோட்டம் உண்டு. ஆன்மீகவாதம் ஆதிக்கம் வகிப்பதனால் நாம் மதச்சார்பற்ற கல்வியை முழுக்க முழுக்கப் பெற்றிருந்த போதிலும், அந்த ஆன்மீகவாதச் சிந்தனை முறை, அந்த ஆன்மீகவாதக் கண்ணோட்டம், நம் உள்ளே ஊடுருவி ஆழமாக வேரூண்றி இருக்கிறது..
இதையும் நாம் பின்னால் பார்ப்போம். (இந்தியாவில் மதச்சார்பற்ற அரசு என்றும் கல்வியில் மதச்சார்பற்ற முறையே கடைபிடிப்பதாகச் சொன்னாலும் இது பெயரளவுக்கே கடைபிடிக்கப்படுகிறது. தற்போது பாஜக கும்பல் பெயரளவிலான கொள்கையையும் தூக்கி எறிந்துவிட்டு வெளிப்படையாக இந்துத்துவ கொள்கைகளை கடைபிடிக்கிறது. அது கல்வித் துறையிலும் எதிரொலிக்கிறது. முட்டாள்தனமான ஆன்மீகக் கருத்துக்களைப் போதித்து மாணவர்களின் அறிவியல் வளர்ச்சியைத் தடுத்து முட்டாள் களாகவே வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது.)
எல்லா ஆன்மீகவாதிகளின் வாதங்களுக்கும் அடிப்படையாக விளங்குவது பெருக்லியின் ஆய்வுரைகளே ஆகும். எனவே அவற்றில் பிரதானமான வாதங்களையும் அவை நிருபித்துக்காட்ட முயற்சிக்கும் விஷயங்களையும் சாறு பிழிந்தெடுத்து தர முயற்சிப்போம்.
RSS, பாஜக கும்பல் கிருஸ்துவ மதத்தின் மீது வெறுப்பை கக்கினாலும் அவர்களது ஆன்மீகக் கொள்கைகளை வலியுறுத்தும்போது இந்த பெர்க்லிப் பாதிரியாரின் ஆன்மீகக் கொள்கைகளையும் ஆதரிப்பதை நாம் பார்க்கலாம். இந்த ஆன்மீகக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து மக்களை ஏய்ப்பதில் இந்த இந்துத்துவ கும்பல் கிருஸ்துவப்பாதிரியார்களோடு ஒன்றுபடுவதை நாம் காணலாம்.
5.1. ஆன்மாதான் பொருளை சிருஷ்டிக்கிறது (உருவாக்குகிறது)
தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு ஆன்மீகவாதம் தரும் விடை இது. ஆன்மீகவாத கருத்துமுதல்வாதத்தின் ஆரம்ப வடிவம் இது. இது எல்லா மதங்களிலும் பிரதிபலிக்கக் காண்கிறோம்.ஆன்மாதான் உலகை சிருஷ்டிதது என்று எல்லா மதங்களும் அடித்துப் பேசுகின்றன.
இப்படி அடித்துப் பேசும் பேச்சுக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்க முடியும்.
ஒன்று:- கடவுள்தான் உலகைப் படைத்தார். அது, அதாவது கடவுள் நமக்கு வெளியே அப்பால் உண்மையிலேயே இருக்கிறது. இதுதான் எல்லாத் தெய்வத் தத்துவங்களிலும் காண்கிற சாதாரண ஆன்மீகவாதம். (தெய்வத் தத்துவம் என்றால் கடவுளைப் பற்றியும், தெய்வீக விஷயங்களைப் பற்றியும் கூறுகிற அஞ்ஞானம் இது Theology) அல்லது:- ஒன்றுக்கொன்று பொருத்தமற்ற எண்ணங்களைக் கடவுள் நமக்கு அளித்த உலகம் என்ற மாயையைச் சிருஷ்டித்தார். இதுதான் பெர்க்லிப் பாதிரியாரின் "பொருள் கலப்பற்ற ஆன்மீகவாதம்" எனப்படும். ஆன்மா ஒன்றுதான் யதார்த்தத்தில் இருப்பது. ஆன்மா சிருஷ்டித்ததின் விளைபொருள்தான் பிரபஞ்சம் (பொருள்) என்று அவர் நிருபிக்க விரும்புகிறார். அதனால்தான் நமது மனத்துக்கு வெளியே புறநிலையில், உலகம் என்ற ஒன்று இல்லை என்று ஆன்மீகவாதிகள் அடித்துப் பேசுகிறார்கள்.
5.2. நமது மனத்துக்கு வெளியே உலகம் என்று ஒன்றில்லை. இதைத்தான் பெர்க்லி நமக்கு நிருபித்துக்காட்ட விரும்பினார். அதற்காகத்தான் அந்தந்த குணாம்சங்கள் அந்தந்தப் பொருட்களுக்குச் சொந்தமானவை என்று நாம் சொல்வது தவறு என்றும், அந்த குணாம்சங்கள் எல்லாம் நமது மனத்துக்குள்ளேதான் இருக்கின்றன என்றும் அவர் உறுதி நிலையாகப் பேசினார். மேஜை நாற்காலி என்பவை எல்லாம் நம் மனத்திற்குள்ளேதான் இருக்கின்றன, புறநிலையில் அவை இருக்கவில்லை. ஏனெனில் பொருட்களைச் சிருஷ்டிப்பது நமது எண்ணங்களே, என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.
5.3. நமது எண்ணங்கள்தான் பொருட்களைச் சிருஷ்டிக்கின்றன.அதாவது சிந்தனையின் பிரதிபலிப்புத்தான் பொருட்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்?
பொருள் என்ற மாயையை மனதுதான் சிருஷ்டிக்கிறது. பொருள் என்ற எண்ணம் நமது சிந்தனையில் உதிக்கும்படி மனதுதான் செய்கிறது. பொருட்களிலிருந்து புலன்களின் மூலமாக நாம் பெறும் புலனுணர்ச்சிகள் நமது மனத்திலிருந்து பிறக்கின்றனவே தவிர அந்தப் பொருட்களிலிருந்து பிறப்பதில்லை. ஆகவே இந்தக் காரணங்களை உத்தேசித்து இந்த உலகம் என்ற யதார்த்தமும், பொருட்களும் இருக்க காரணம் மனதுதான். எனவே நம்மைச்சூழ்ந்திருக்கும் புறப்பொருட்கள் எல்லாம் நமது மனதுக்குள்ளேதான் நிலை கொண்டிருக்கின்றனவே யொழிய மனதுக்கு வெளியே அவை இருக்கவில்லை; அவை நமது சிந்தனையின் பிரதிபலிப்பாகத்தான் இருக்க முடியும். வேறுவிதமாக இருக்க முடியாது.
ஆனால் ஒரு விஷயம், நமது மனது இந்த எண்ணங்களைச் சுயமாக சிருஷ்டிக்கச் சக்திபெற்றிருக்க முடியாது. சுயமாகவே மனது அவற்றை சிருஷ்டிக்க முடிந்திருந்தால் தான் விரும்பியதை எல்லாம் மனது சிருஷ்டித்திருக்கும் அல்லவா? அப்படி விரும்பியதை எல்லாம் மனது சிருஷ்டிக்கவில்லை. ஆதலால், மனது முதலியவற்றையெல்லாம்விட அதிக வல்லமை படைத்த ஆன்மாதான் அவற்றை சிருஷ்டித்திருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு தீரவேண்டும் என்கிறார் பெர்க்லி. எனவே கடவுள்தான் நமது மனதைச் சிருஷ்டிக்கிறார். அந்த மனதுக்குள்ளே நாம் சந்திக்கும் உலகத்தைப் பற்றிய எண்ணெங்களை எல்லாம் நம்மீது சுமத்தி வைக்கிறார்.
இந்தப் பிரதானக் கருத்துரைகள்தான் ஆன்மீகவாதத் தத்துவங்களுக்கு அடிப்படைகளாகும்.தத்துவ மெய்ஞானத்தின் மூலப்பிரச்சனைக்கு அவை கொடுக்கும் விடைகளும் இவையே.
இந்தப் பிரச்சனைக்கு பொருள்முதல்வாதம் தரும் விடை என்ன? மேற்சொன்ன ஆன்மீகவாதக்கருத்துரைகள் கிளப்புகின்ற பிரச்சனைகளுக்கு பொருள்முதல்வாதம் கொடுக்கும் பதில் என்ன?என்பதை அடுத்துவரும் இதழில் பார்க்கலாம்.
ஆன்மீகவாதம் முன்வைக்கும் கருத்துக்கள் வருமாறு.
1. கடவுள்தான் அனைத்தையும் சிருஷ்டித்தார்.
2. நமது எண்ணங்கள்தான் பொருட்களை உருவாக்குகின்றது.
3. பொருட்கள் எதுவும் புறநிலையில் இல்லை.
4. பொருட்கள் அனைத்தும் நமது எண்ணங்களுக்கு உள்ளேயே இருக்கின்றன.
5. சிந்தனையின் பிரதிபலிப்புத்தான் பொருட்கள்
6. உலகே மாயம், நாம் காணும் சுகமே மாயம்.
7. பொருள் என்ற எண்ணம் நமது சிந்தனையில் உதிக்கும்படி மனதுதான் செய்கிறது.
8. நமது புலனுணர்ச்சிகள் எல்லாம் நமது மனதிலிருந்துதான் பிறக்கின்றது. அந்தப்பொருட்களிலிருந்து தோன்றுவதில்லை.
9. இந்த உலகம் மற்றும் பொருட்க்கள் இருப்பதற்கு நமது மனம்தான் காரணம்.
10. நமது மனது எதையும் சுயமாக உருவாக்குவதில்லை. அதற்குரிய சக்தி அதற்கு இல்லை.
11. மனதைக்காட்டிலும் வலிமை படைத்த ஆன்மாவால் மட்டுமே எதையும் உருவாக்க முடியும்.
12. கடவுள்தான் நமது மனதை உருவாக்குகிறார்.
13. பொருள் கருத்து எல்லாம் ஒன்றே வெவ்வேறு அல்ல.
இவ்வாறு பொருளையும் கருத்தையும் அதாவது எண்ணங்களையும் குறித்து குழப்பமான
மற்றும் அபத்தமான கருத்துக்களைக் கொண்டதுதான் ஆன்மீகவாத கருத்துமுதல்வாத
மெய்ஞானம் ஆகும்.இது அபத்தமானது என்பதை நம்மில் பலர் அறிவார்கள். எனினும் இந்தக்
கண்ணோட்டமானது பல காலமாக நாம் ஏற்றுச் செயல்படுத்திப் பழக்கப்பட்டுவிட்டதால்
நம்மில் பலர் இந்தக் கண்ணோட்டத்திலிருந்து மீண்டுவர இயலாமல் இருக்கிறோம். நமது
அரசியல் சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை புரிந்துகொண்டு தீர்ப்பதற்கு நம்மிடமுள்ள
இத்தகைய கருத்துமுதல்வாதக் கண்ணோட்டம் தடையாக இருக்கிறது. ஆகவே நம்மிடம்
மிச்சசொச்சமாக உள்ள இந்தக் கண்ணோட்டத்தை களைந்து இயக்கவியல்
பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியது மிகமிக
அவசியமாகும்........தேன்மொழி.
No comments:
Post a Comment