“முடியாட்சி ஜெர்மனி திணித்த பிரேஸ்த்- லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கையும், (குறிப்பு 1) பிறகு “ஜனநாயக” குடியரசுகள் ஆகிய அமெரிக்காவும் பிரான்சும் சுதந்திர இங்கிலாந்தும் திணித்த இதனிலும் அதிக மிருகத்தனமான வெறுக்கத்தக்கதான வெர்சேய் உடன்படிக்கையும்( குறிப்பு 2.) இந்த உடன்படிக்கைகள் மனித குலத்துக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேவையை செய்திருக் கின்றன அதாவது அமைதிவாதிகள் என்றும் சோசிலிஸ்ட்கள் என்றும் சொல்லிக்கொண்டு வில்சனியத்தை மெச்சிப்புகழ்ந்து (குறிப்பு – 3)
சமாதானமும் சீர்திருத்தங்களும் ஏகாதிபத்தி யத்தின் கீழ் சாத்தியமே என்று வலியுறுத்திய ஏகாதிபத்திய கூலி எழுத்தாளர்களையும் மற்றும் குட்டி முதலாளித்துவ பிற்போக்காளர் களையும் இவை அம்பலப்படுத்தின.”– லெனின்.
குறிப்பு 1. - (பிரேஸ்த் -லிட்டோவ்ஸ்க் உடன்படிக்கை. - சோவியத் ரஷ்யாவுக்கும் ஜெர்மனி கூட்டணி நாடுகளுக்கும் [ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, பல்கேரியா, துருக்கி] இடையே 1918 மார்ச் மூன்றாம் தேதி கையொப்பம் இடப்பட்டது மார்ச் 15ஆம் தேதி சோவியத்துகள் அது நான்காவது அனைத்து ரஷ்ய சிறப்பு காங்கிரசால் உறுதி செய்யப்பட்டது. இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகள் ரஷ்யாவுக்கு மிகவும் பாதகமானவையாக இருந்தன. 1918 நவம்பர் புரட்சி ஜெர்மனியில் முடியாட்சியை வீழ்த்திய பிறகு, இந்த கொள்ளைக்கார அநியாய பிரேஸ்த் - லிட்டோவ்ஸ்க் உடன்படிக்கை அகில ரஷ்ய மத்திய செயற்குழுவால் நவம்பர் 15ல் ரத்து செய்யப்பட்டது).
குறிப்பு 2. (வெர்சேய் சமாதான உடன்படிக்கை - [1914 - 1918] முதல் உலகப்போரை முடிவுறச் செய்த இந்த உடன்படிக்கை 1919 ஜூன் 28 இல் ஒருபுறம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் இதர நேச நாடுகளாலும் மறுபுறம் ஜெர்மனியாலும் கையெழுத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கை முதலாளித்துவ உலகின் மறு பங்கீடு வெற்றியாளர்களுக்கு சாதகமாக உறுதிப்படுத்தியது. சோவியத்து ரஷ்யாவை நெரித்து ஒழிப்பதையும் உலக புரட்சி இயக்கத்தை ஒடுக்குவதையும் நோக்கமாகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் ஓர் அமைப்பை நிறுவியது) குறிப்பு 3.)(வில்சனிசம் - 1913 - 1921 ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் அதிபராக உட்றோ வில்சனின் பெயரில் இருந்து வந்தது.வில்சனும் அவரது ஆதரவாளர்களும் ஜனநாயகம் மற்றும்தேசங்களின் கூட்டு என்று போலித்தனமான முழக்கங்களையும் தொடர்களையும் கொண்டு அமெரிக்காவின் ஏகாதிபத்திய கொள்கைகளை மூடி மறைத்தார்கள். தனது வாய் வீச்சு 14 அம்ச “சமாதான வேலை திட்டத்தை” அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு கொள்கையை மூடி மறைக்கும் உத்தேசத்துடன் முன் வைத்தார். அமெரிக்க பிரச்சார சாதனங்களும் ஐரோப்பிய முதலாளித்துவ பத்திரிகைகளும் வில்சனை ஒரு சமாதான வீரர் என்று என்று வர்ணித்து ஒரு பொய்யான சித்திரத்தை தந்தன. வில்சனும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்திய குட்டி முதலாளித்துவ தொடர்களின் போலித்தனம்,பிற்போக்கு தொழிலாளர் விரோத உள்நாட்டு கொள்கைகளாலும், வில்சன் ஆட்சி நிர்வாகம்பின்பற்றி வந்த ஆக்கிரமிப்பு வெளிநாட்டு கொள்கைளாலும் விரைவில் அம்பலப்படுத் தப்பட்டது), சோவியத் ரஷ்யாவுக்கும் ஜெர்மன் ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் போடப்பட்ட சமாதான உடன்படிக்கை, சோவியத் ரஷ்யாவுக்கு மிகவும் பாதகமாக இருந்தது. அதேபோல் முதல் உலகப்போர் முடிந்த பின்பு அமெரிக்கா மற்றும் நேச நாடுகள் ஜெர்மன் மீது திணித்த சமாதான உடன்படிக்கையும் வெற்றி பெற்று நாடுகள் உலகை மறு பங்கீடு செய்து பயன்களை அனுபவித்துக் கொண்டன. அமெரிக்க அதிபரான வில்சன் தன்னை ஒரு சமாதான வாதி போல காட்டிக் கொண்டு பிற நாடுகளில் மீது ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மூடி மறைத்தது. இதுபோன்று ஏகாதிபத்தியவாதிகள் பொய் பேசி பிற நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு செய்தார்கள். இந்த உண்மைகளை ஏகாதிபத்தியங்களிடமிருந்து காசு வாங்கிய கூலி எழுத்தாளர்கள் மூடி மறைத்தார்கள். மற்றும் பிற்போக்கு குட்டி முதலாளித்து வாதிகளும் ஏகாதிபத்தியங்களுக்கு துணை போனார்கள் என்பதை ஆதாரத்துடன் லெனின் நிறுவனார்.
“மிகப்பெரும் பகுதி கொள்ளையை பெறப்போவது பிரிட்டிஷ் நிதிக் கொள்ளையர் குழுவா அல்லது ஜெர்மனிய நிதி கொள்ளையர் குழுவா என்பதை முடிவு செய்வதற்காக நடைபெற்ற இந்த யுத்தத்தில் கோடிக்கணக்கானோர் மடியவும், முடமாகவும் நேர்ந்ததும், மேற்கூறிய இரண்டு சமாதான உடன்படிக்கைகளும் முதலாளித்துவ வர்க்கத்தால் மிதிக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும், ஏமாற்றப்படும், மடையர்களாக ஆக்கப்பட்டும் வரும் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் கண்களை என்றும் காணாதவேகத்தில் திறந்து விடுகின்றன.
இவ்விதம் யுத்தத்தால் எங்கும் ஏற்பட்ட நாசத்தில் இருந்து உலகு தழுவிய அளவில் புரட்சிகர நெருக்கடி எழுந்து வருகிறது. இதன் கட்டங்கள் எவ்வளவுதான் நீண்டவையாகவும்,கடினமானவையாகவும் இருப்பினும் இந்த நெருக்கடி ஒரு பாட்டாளியப் புரட்சியாலும் அதன் வெற்றியிலும் தவிர வேறு வகையில் முடிவுற முடியாது.”- லெனின்.
எந்த எந்த ஏகாதிபத்தியவாதிகள் அதிகமான கொள்ளை நடத்துவது என்பதற்காகவே ஏகாதிபத்தியவாதிகள் அப்போது யுத்தத்தை நடத்தினார்கள். ஆனால் இப்போது அதே நோக்கங்களுக்காக அவர்களுக்கு இடையில் யுத்தத்தை நடத்துவது இல்லை. மாறாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள புதிய காலனிய நாடுகளில் உள்ள ஆட்சியாளர்களுக்கு இடையில் அதாவது காலணி நாடுகளுக்கு இடையில் யுத்தத்தை தூண்டிவிட்டு யுத்தத்தை நடத்துகிறார்கள். ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையில் யுத்தத்தை நடத்துவதை தவிர்க்கிறார்கள். இதன் மூலம் அன்றைய காலம் போலவே பல நாடுகளில் உள்ள மக்கள் யுத்தத்தால் செத்து மடிகின்றனர்.(உதாரணமாக ஈராக், ஆப்கானிஸ்தான்) ஆகவே தற்போதும் ஏகாதிபத்தியவாதிகளின் யுத்தம் பற்றிய பண்புகளில் மாற்றங்கள் இல்லை இந்த ஏகாதிபத்தியவாதிகளால் எங்கெங்கு யுத்தம் தொடுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் உள்ள மக்கள் இந்த ஏகாதிபத்தியவாதிகளை குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளை தெளிவாக புரிந்து வருகின்றனர்.
1912இல் இரண்டாவது அகிலம் பாஸெல் அறிக்கையை வெளியிட்டது, பொதுப்பட யுத்தத்தை பற்றிய மதிப்பீட்டை அல்ல. (யுத்தங்கள் பல வகைப்பட்டவை புரட்சி யுத்தங்களும் உள்ளன).
1914 இல் தொடங்கியதே அதே யுத்தத்தை பற்றிய மதிப்பீட்டை அது அளித்தது. இப்பொழுது அந்த அறிக்கை இரண்டாவது அகிலத்தின் வீரர்களது அவமானகரமான திவால் தன்மையையும், அவர்கள் புரிந்த துரோகத்தையும் முழு அளவுக்கு அம்பலப்படுத்தும் வரலாற்றுச் சின்னமாக திகழ்கிறது…. . லெனின்.
ஆகவே தான் அந்த அறிக்கையை நாம் படித்து அறிய வேண்டும். நெருங்கி நிகழ விருந்த அந்த யுத்தத்திற்கும் பாட்டாளிப் புரட்சிக்கும் இடையிலான தொடர்பை துல்லியமாகவும்தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறுகிற இந்த அறிக்கையின் வாசகங்களை இரண்டாவது அகிலத்தின் வீரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக தவிர்த்துக் கொண்டு,திருடன் தான் திருட்டு நடத்திய இடத்திலிருந்து ஓடுவதைப் போல விலகி ஓடுகிறார்கள் என்பதை கவனிக்குமாறு வாசகர்களிடம் திரும்பத் திரும்ப வற்புறுத்து கிறேன்..... லெனின்.
இங்கே லெனின் யுத்தங்களை பற்றி கூறுகிறார். யுதங்கள் பல வகைப்பட்டவை, அதில் அநீதியான யுத்தங்களும், நீதியான யுத்தங்களும் உண்டு. அதாவது எதிர்ப் புரட்சிகர யுத்தங்களும் புரட்சிகர யுத்தங்களும் உண்டு. உதாரணமாக ரஷ்யா உக்கிரேன் மீது நடத்தும் யுத்தமானது அநீதியான யுத்தம். நேட்டோ நாடுகள் ஆப்கான் மீதும், ஈராக் மீதும் நடத்திய யுத்தங்கள் அநீதியான யுத்தம் ஆகும். இதற்கு மாறாக இரண்டாம் உலகப்போரில் ஜெர்மன் ஆக்கிரமப்பாளர்களை எதிர்த்து சோசலிச சோவியத் அரசு நடத்திய யுத்தம் நீதி யுத்தம், அதாவது புரட்சிகரமான யுத்தம் ஆகும். இந்தக் கோட்பாட்டை இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ஆகவே தான் யுத்தம் தோன்றியவுடன் தாய் நாட்டை பாதுகாக்கிறோம் என்ற முழக்கத்தின் அடிப்படையில் அவர்களது சொந்த நாட்டைச் சேர்ந்த முதலாளிகள் நடத்திய அநீதி யுத்தத்திற்கு துணை போனார்கள். ஆகவே இந்த ஏகாதிபத்திய காலகட்டத்தில் நாம் யுத்தங்களை லெனினது கண்ணோட்டத்தில் அது நீதி யுத்தமா அல்லது அநீதி யுத்தமா என்பதை அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டும் இதுதான் நமக்கு லெனின் காட்டிய வழியாகும்.
"காவுத்ஸ்கிவாதம்" உலகின் எல்லா நாடுகளிலும் "மிகவும் பிரபலமான தத்துவவாதிகளாலும்" இரண்டாவது அகிலத்தின் தலைவர்களாலும் (ஆஸ்திரியா வில் ஓட்டோ பௌவர் கோஷ்டியினர், இங்கிலாந்தில் ராம்சே மாக்டோனால்டும் மற்றவர்களும், பிரான்சில் ஆல்பேர் தாமா, இன்ன பலர்) மற்றும் மிகப் பல சோசிலிஸ்ட்கள், சீர்திருத்தவாதிகள், அமைதிவாதிகள், முதலாளித்துவ ஜனநாயக வாதிகள், மதகுருமார்கள் ஆகியோராலும் பிரதிநிதித்துவம் செய்யப்படும் சர்வதேச சித்தாந்த போக்காகும்.
இந்த சித்தாந்த போக்கானது, ஒருபுறம் இரண்டாவது அகிலத்தின் சிதைவின், சீரழிவின் விளைவும், மறுபுறம் குட்டி முதலாளித்துவ பகுதியோரது சித்தாந்தத் தின் தவிர்க்க முடியாத பலனும் ஆகும். குட்டிமுதலாளித்துவ பகுதியோரது வாழ்க்கை முறை அனைத்துமே அவர்களை முதலாளித் துவ ஜனநாயக தப்பெண்ணங் களால் கட்டுண்டு கிடக்கச் செய்கிறது...லெனின்காவுத்ஸ்கி இறந்து பல ஆண்டுகள் ஆனபொழுதும் இப்பொழுதும், காவுத்ஸ்கி வாதமானது சர்வதேச அளவில் செல்வாக்கு படைத்த வாதமாகவே இருக்கிறது. அன்றைய காலத்தில் காவுத்ஸ்கிவாதம் செல்வாக்காக இருந்ததற்கான காரணம், இரண்டாவது அகிலத்தின் சிதைவு, மற்றும் சீரழிவு காரணமாக இருந்தது. ஆனால் தற்போது உலகில் காவுத்ஸ்கி வாதத்திற்கு செல்வாக்கு இருப்பதற்கு காரணம் குருஷேவின் திருத்தல் வாதம் செல்வாக்கு பெற்று சோசலிச ஆட்சி வீழ்த்தப்பட்டது. உலகில் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் குருஷேவின் திருத்தல் வாதத்தை ஏற்றுக்கொண்டு செயல்பட்டதன் விளைவாக கவுத்ஸ்கி வாதம் சர்வதேச அளவில் தற்போது செல்வாக்குப் பெற முயற்சி செய்கிறது. ஆகவே தற்போதும் மார்க்சியத்துக்கு எதிரான காவுத்ஸ்கி வாதம் போன்ற பிற்போக்கு வாதங்களை நாம் எதிர்த்து போராட வேண்டும் ஏகாதிபத்தியங் களை ஒழிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும்.
காவுத்ஸ்கியும் அவரைப் போன்றோரும் கொண்டிருக்கும் கருத்துக்கள், அந்த எழுத்தாளர் பல பத்து ஆண்டுகளாகப் போற்றி பாதுகாத்து வந்த, முக்கியமாக (பெர்ன்ஷ்டைன், மில்லிரான், ஹைண்ட்மன், கோம்பர்ஸ் முதலானவர்களது) சோசிலிஸ்ட் சந்தர்ப்பவாத்தை எதிர்த்து அவர் நடத்திய போராட்டத்தில் பாதுகாத்து வந்த, மார்க்சியத்தின் அதே புரட்சிகர கோட்பாடுகளை அறவே துறந்து ஓடுவதைக் குறிப்பனவாகும். ஆகவே, உலகம் முழுவதிலும், காவுத்ஸ்கியவாதிகள் நடைமுறை அரசியலில் (இரண்டாவது அல்லது மஞ்சள் அகிலத்தின்) மூலம் தீவிர சந்தர்ப்பவாதிகளுடனும், (சோசலிஸ்டுகள் பங்குகொள்ளும் முதலாளித்துவ கூட்டு அரசாங்கங்களின் மூலம்) முதலாளித்த அரசாங்கங்களுடனும் இணைந்து கொண்டு விட்டது தற்செயலான சம்பவம் அல்ல.
பொதுவாக உலகம் முழுவதிலும் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கமும், குறிப்பாக கம்யூனிஸ்ட் இயக்கமும், "காவுத்ஸ்கிவாதத்தின்" தத்துவார்த்த தவறுகளைப் பகுத்தாய்ந்து அம்பலப்படுத்தும் பணியினை கைவிட முடியாது. எவ்வகையிலும் மார்க்சியத்துடன் உறவு கொண்டாடவில்லை என்றாலும், காவுத்ஸகி கோஷ்டியினரை போலவே, ஏகாதிபத்தியத் தினுடைய முரண்பாடுகளின் ஆழத்தையும், தவிர்க்க முடியாதவாறு அதனால் எழும் புரட்சிகர நெருக்கடியையும் மறைத்துமழுப்புகின்ற அமைதி வாதமும், பொதுவாக "ஜனநாயகமும்" இன்னும் உலகெங்கும் மிகவும் விரிந்து பரந்து இருக்கின்ற காரணத்தினால் இப்பணியைக் கைவிடுவது மேலும் அசாத்தியமாகிறது. இப்போக்குகளை
எதிர்த்துப் போராடுவது பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடப்பாடான கடமையாகும்.
முதலாளித்து வர்க்கத்தால் ஏய்க்கப்படும் சிறு உடமையாளர்களையும், அதிகமாகவோ குறைவாகவோ குட்டிமுதலாளித்துவ வாழ்க்கை நிலமைகளைப் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான உழைப்பாளி மக்களையும் பாட்டாளி வர்க்கக் கட்சி முதலாளித்து வர்க்கத்தாரிடமிருந்து விலகி வரும்படி கவர்ந்து இழுத்தாக வேண்டும்……… லெனின்.
காவுத்ஸ்கி போன்றோர்கள் ஆரம்ப காலங்களில் மார்க்சியத்தை உணர்வுப் பூர்வமாகப் பின்பற்றினார்கள். அவர்கள் பெர்ன்ஷ்டைன், மில்லிரான், போன்ற சோசலிச சந்தர்ப்பவாதிகளை எதிர்த்து தீவிரமாகப் போராடி மார்க்சியத்தைப் பாதுகாத்தார்கள்.
அவ்வாறு மார்க்சியத்தைப் பாதுகாத்தவர்கள் அந்த மார்க்சியத்தைக் கைவிட்டுவிட்டார்கள்.
ஆகவே இவர்கள் நடைமுறை அரசியலில் தீவிர சந்தர்ப்பவாதிகளுடனும் முதலாளித் துவ அரசாங்கங்களுடனும் இணைந்து செயல்பட்டார்கள். அதுபோலவே தற்பொழு தும் இதற்கு முன்பு மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டு புரட்சிகரமாக செயல்பட்டவர்களும் நமது நாட்டில் மார்க்சிய லெனினியத்தை கைவிட்டுவிட்டு முதலாளித் துவ சந்தர்ப்பவாத அரசியல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து முதலாளித்துவ அரசாங்கங்களில் இணைந்து செயல்படுவதைநாம் பார்க்க லாம். ஆகவே காவுத்ஸ்கிவாதம் போன்ற சந்தர்ப்பவாத தவறுகள் கம்யூனிச இயக்கத் திற்குள் வரும், ஆகவே இதுபோன்ற தவறுகளை எதிர்த்துப் போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இந்தக் கடமையிலிருந்து கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் விலகக் கூடாது என்பதே லெனினியமாகும். ஏகாதிபத்தியவாதிகளின் கொடூரமான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகளையும் அதனால் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் சந்தித்துவரும் துண்பங்களையும், இந்த துண்பங்களிலிருந்து மீள்வதற்காக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டங் களையும் மூடிமறைத்து மழுப்புகின்ற கொள்கை கொண்டவர்கள்தான் காவுத்ஸ்கி வாதிகள் என்கிறார் லெனின். இவர்கள்அமைதிவாதிகளாகவும் பொதுவாக ஜனநாயகம் பற்றி பேசி பரப்புரை செய்பவர் களாகவும் இருக்கிறார்கள் என்கிறார் லெனின்.
இத்தகையோர் நமது நாட்டிலுள்ள நடுத்தரவர்க்கப் பிரிவினரை ஏய்த்து அவர்கள் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் வரவிடாமல் தடுக்கிறார்கள். ஆகவே பாட்டாளி வர்க்க கட்சியான உண்மையான கம்யூனிஸ்டுகள் குட்டிமுதலாளித்துவ வாழ்க்கை நிலைமைகளைப் பெற்றிருக்கும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை கம்யூனிஸ்டுக் கட்சியின் பின்னால் ஈர்த்து அணிதிரட்ட வேண்டும் என்று லெனின் வலியுறுத்துகிறார். இதன் மூலம் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தை ஒழித்திட குட்டிமுதலாளித்துவ வர்க்க உழைக்கும் மக்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பதை லெனின் தெளிவுபடுத்தியுள்ளார்.
"முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் சீரழிவும்" என்பது பற்றி சில வார்த்தைகள் கூறியாகவேண்டும். வாசகத்தில் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருப்பது போல், முன்னால் "மார்க்சியவாதியும்"தற்போது காவுத்ஸ்கியின் கூட்டாளியும், "ஜெர்மன் சுயேச்சை சமூக ஜனநாயகக் கட்சியில்" முதலாளித்துவ, சீர்திருத்தவாதக் கொள்கையின் பிரதான விரிவுரையாளர்களில் ஒருவருமான ஹில்பர்டிங், வெளிப்படையான அமைதிவாதியும் சீர்திருத்தவாதியுமான ஆங்கிலேயர் ஹாப்ஸனுடன் ஒப்பிடுகையில் இப்பிரச்சனையில் ஓரடி பின்னால் சென்றிருக்கிறார். தொழிலாளர் இயக்கம் அனைத்துமே சர்வதேச அளவில் பிளவுண்டு இருப்பது (இரண்டாவது, மூன்றாவது அகிலங்கள்) இன்று கண்கூடாகவே தெரிகிறது. இவ்விரு போக்குகளுக்கு இடையிலும் தற்போது ஆயுதம் ஏந்திய போராட்டமும் உள்நாட்டுப் போரும் நடைபெறுவது கண்கூடாகவே தெரிகிறது. ரஷ்யாவில் போல்ஷ்விக்குகளுக்கு எதிராகக் கல்சாக்குகளுக்கும் தெனிகீனுக்கும், மென்ஷ்விக்குகளும் சோசலிஸ்டு-புரட்சியாளர்களும் தருகின்ற உதவி; ஜெர்மனியில் ஸ்பார்ட்டக்கிஸ்டுகளுக்கு எதிராக ஷெய்டெமன்களும், நோஸ்கேகளும் முதலாளித்துவ வர்க்கத்தாருடன் இணைந்து
நடத்திய போர்; பின்லாந்திலும் ஹங்கேரியிலும் பிற இடங்களிலும் இதே நிகழ்ச்சிகள். இந்தஉலக வரலாற்றுப் புலப்பாடின் பொருளாதார அடிப்படை என்ன?..........லெனின்.
============
இங்கே குறிப்பிடப்படும் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி பற்றிய குறிப்பு:-
1917 ஏப்ரலில் கோத்தாவில் நடைபெற்ற ஒரு துவக்க காங்கிரசில் அமையப்பட்டதான ஒரு
மையவாதக்கட்சி. "சுயேச்சையாளர்கள்" "சமூக தேசிய வெறியர்களுடன்"ஒற்றுமை சேருவதை ஆதரித்து வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும் அளவுக்குச் சென்றவர்கள்.
1920 அக்டோபரில் ஹாலேயில் இந்தக் கட்சித் காங்கிரசில் பிளவு ஏற்பட்டது. 1920 டிசம்பரில் சுயேச்சையாளர்களின் கணிசமான பகுதியினர் ஜெர்மன் கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்துவிட்டார்கள். வலதுசாரி நபர்கள் தனிக்கட்சி அமைத்தார்கள். ஜெர்மன் சுயேச்சை சமூக ஜனநாயகக் கட்சி என்ற பழைய பேரை எடுத்துக்கொண்டார்கள். இக்கட்சி 1922 வரைநிலவியது.
மென்ஷ்விக்குகள் ரஷ்யாவில் செயல்பட்ட திருத்தல்வாதிகள். ஸ்பார்ட்டகஸ்கள், ஜெர்மனில் செயல்பட்ட புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகள்.
_________________________________________________
ஜெர்மன் சுயேச்சை சமூக ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் காவுத்ஸ்கியின் கூட்டாளியுமான ஹில்பர்டிங் என்பவர் ஏகாதிபத்தியம் பற்றிய கருத்தில் வெளிப்படையானமுதலாளித்துவவாதியான ஹாப்ஸனைக் காட்டிலும் மோசமான கருத்தைக் கொண்டிருந்தார்என்று லெனின் இங்கு குறிப்பிடுகிறார். அதே போலவே நமது நாட்டிலும் இடதுசாரிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களில் சிலர் இந்த ஹில்பர்டிங்கைப் போலவே இங்கேயுள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகளைக் காட்டிலும் மோசமான கருத்தியல் நிலைபாடுகளைக் கொண்டவர்களாக இருப்பதை நாம் காணலாம். முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த பாராளுமன்றத்தை முதலாளித்துவ கட்சிகள் கூட மதிப்பதில்லை. ஆனால் இங்குள்ள சில இடதுசாரிகள் இந்தப் பாராளுமன்றத்தை மிகவும் புனிதமானதாகப் பார்த்து அதனை பாதுகாப்பதில் முன்னணியில் இருக்கிறதை நாம் காணலாம். இந்த பாராளுமன்றம் மக்களுக்கானது இல்லை என்ற மார்க்சிய லெனினியக் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு நேர் எதிராக முதலாளிகளுக்கு ஏற்புடைய கருத்துக்களை இந்த முதலாளித்துவ கட்சிகளைக் காட்டிலும் மிகத் தீவிரமாக இந்த இடதுசாரிகள் மக்களிடம் பிரச்சாரம் செய்வதை நாம் பார்க்கலாம்.
லெனினது காலத்திலிருந்து இன்றுவரை கம்யூனிச இயக்கத்திற்குள் ஒருபக்கம்புரட்சிகரகருத்துக்களை பரப்புபவர்களையும், மறுபக்கத்தில் புரட்சிக்கு எதிரான முதலாளித்துவசீர்திருத்தவாதக் கருத்துக் களைப் பரப்புபவர்களையும் நாம் காணலாம். ஆகவேதான் லெனினது காலத்திலிருந்து இன்றுவரை கம்யூனிச இயக்கத்தின் கருத்துக்களுக்கும் இத்தகைய நேர் எதிரான கருத்துக்களுக்கும் இடையே சித்தாந்தப் போராட்டம் லெனினது காலத்திலிருந்து இன்றுவரை தொடர்கிறது. லெனினைப் போன்ற சிறந்த மார்க்சிய சித்தாந்தவாதியோ அல்லது அத்தகைய அமைப்போ இங்கு உருவாகாததால் மார்க்சிய லெனினியத்திற்கு எதிரான கருத்துக்களை முறியடிக்க முடியவில்லை. ஆகவே கம்யூனிச இயக்கத்திற்குள் மார்க்சிய லெனினியத் திற்கு எதிரான கருத்துக்களே செல்வாக்கில் இருந்துகொண்டு இருக்கிறது.
லெனினது காலத்திலும் ரஷ்யாவில் மட்டுமே லெனினது முயற்சியாலும், போல்ஷ்விக் கட்சியினரது முயற்சியாலும் அங்கிருந்த தொழிலாளி வர்க்கத்திற்கு பாட்டாளி வர்க்க உணர்வு ஊட்டப்பட்டதாலும் அங்கு மார்க்சிய இயக்கமானது மக்கள் மயமானது, வெற்றியும் பெற்றது.
அதே வேளையில் ரஷ்யாவைத் தவிர பிற ஐரோப்பிய நாடுகளில் செயல்பட்ட தலைவர் களில் லீப்னெக்ட் போன்ற தலைவர்களைத் தவிர்த்து பிற தலைவர்கள் மார்க்சியத்தை திருத்தி செயல்பட்டதால் அங்கெல்லாம் சமூகப் புரட்சி நடக்கவில்லை. கம்யூனிசமும் வெற்றிபெறவில்லை. ஆகவே இந்தியாவிலும் கம்யூனிச இயக்கம் மக்கள் இயக்கமாக மாறாததற்கு காரணம் இங்குள்ள இடதுசாரி கள் மார்க்சிய லெனினியத்தை முறையாகப் பின்பற்றி அதற்கு எதிரான கருத்துக்களை முறியடித்து லெனின் போன்ற தலைவர்கள் காட்டிய வழியில் மக்களிடம் ஒன்று கலக்காமல், மக்களிடமிருந்து தனிமைப்பட்டு மற்ற முதலாளித்துவ கட்சிகளைப் போன்ற செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது மூலம் சில இடதுசாரிகட்சிகள் செயல்படுவதா லும் சில கட்சிகள் தேர்தல்களை முழுவதுமாகப் புறக்கணித்து மக்களிடத் திலான தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் செயல்படுவதாலும் கம்யூனிச இயக்கம் மக்கள் இயக்கமாக மாறவில்லை. இந்த நிலையைக் கண்டு கம்யூனிஸ்டுகள் கலக்கம் அடையவேண்டாம். நமது அறிவை வளர்த்துக்கொண்டு உழைக்கும் மக்களைச் சார்ந்து செயல்பட்டால் இந்தப் பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியும். இதுபோன்ற பிரச்சனைகள் லெனின் காலத்திலும் இருந்தது அது தீர்க்கப்பட்டது. ஆகவே நமதுகாலத்திலும் இந்தப் பிரச்சனைகளை நம்மால் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுவோம். காவுத்ஸ்கியவாதிகளின் முதன்மையான தவறு, ஏகாதிபத்தியம் பற்றிய அவர்களது கருத்திலேயே அடங்கியிருக்கிறது என்றார் லெனின். ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள இந்த உலகத்தில் சமூக முரண்பாடுகள் அனைத்தும் ஆழப்படுகிறது. அதன் காரணமாக உழைக்கும் வர்க்கம் தனது வாழ்வை இழந்துகொண்டு வருகின்றதால் புரட்சிகரமான எழுச்சிகள் உருவாகின்றது. உதாரணமாக இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம். அதானி போன்ற மக்களை ஏய்த்து மோசடி செய்வதன் மூலம் சொத்துக்களை குவிக்கும் ஏகபோக பெருமுதலாளிகளுக்காகவே சேவை செய்து கொண்டு இருக்கும் இந்திய ஆட்சியாளர் களின் கொள்கை திட்டங்களால்தான் இந்திய மக்கள் கடுமையான துண்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்த துண்பங் களிலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பு கிறார்கள் என்பது விவசாயிகளின் போராட்டத்தின் மூலம் வெளிப்பட்டுள்ளது. ஆனால் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களைத் திரட்டிப் போராடுவதற்கு இடதுசாரிகள் தயாரில்லை என்பது நடைமுறை உண்மையாகும். விவசாய சங்கத் தலைவர்கள் கூட இந்த இடதுசாரித் தலைவர்களைக் காட்டிலும் உயர்வானவர்களாக இருக்கிறார்கள்.
மக்கள் போராடுவதற்குத் தயார். ஆனால் இடதுசாரித் தலைவர்கள் தயாரில்லை. முதலாளித்துவ கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதால் இடதுசாரிகள் முதலாளித்துவ கட்சிகளையே பின்பற்று கிறார்கள். அந்த வகையில் அவர்களிடம் சுதந்திரத் தன்மை இல்லை என்றே பார்க்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக இடதுசாரிகள் தொடர்ந்து மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறார்கள். எனினும் இவர்களால் ஏற்படுத்தப்பட்ட வெற்றிடத்தை உண்மையான புரட்சிகரமான மார்க்சிய லெனினியவாதிகள் நிரப்புவார் கள். அது காலத்தின் கட்டாயமாகும். அல்லது இந்த இடதுசாரிகளே தங்களது தவறுகளை உணர்ந்து சுயவிமர்சனமாக வந்து மாறலாம். எது நடக்கும் என்று நாம் சொல்ல முடியாது.
முதலாளித்துவத்தின் புல்லுருவித்தனமும் சீரழிவுமேதான் கம்யூனிச இயக்கத்திற்குள் பிளவு ஏற்பட காரணம். கம்யூனிஸ்டுகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வதற்கு இந்த ஏகாதிபத்தியவாதிகள்தான் காரணம் என்று லெனின் விளக்குகிறார்.முதலாளித்துவ வளர்ச்சியின் மிக உயர்ந்த வரலாற்றுக் கட்டமாகிய ஏகாதிபத்தியத்தின் தனி இயல்பேதான் இந்தப் பிளவுக்கு அடிப்படை. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உயர்ந்த கட்டம் என்ற நூல் தெளிவுபடுத்துவது போல், "சீட்டுக் கத்தரித்தே" உலகமனைத்தையும் சூறை யாடும் அளவுகடந்த செல்வமும் வலிமையும் வாய்ந்த விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய (புவிப் பரப்பில் வாழ்வோரில் பத்தில் ஒன்றுக் குறைவானவர்கள்; மிகவும் "தயாள" மனப்பாங்குள்ள, மிதமான கணக்கீட்டின்படி ஐந்தில் ஒன்றுக்கும் குறைந்தவர்கள்) ஒரு சில அரசுகளை முதலாளித்துவம் இப்போது தனியாகப் பிரித்துக் காட்டுகிறது. யுத்தமுற்கால விலைகளின்படி, யுத்தகால முதலாளித்துவப் புள்ளி விவரங்களின்படி மூலதன ஏற்றுமதியானது ஆண்டுதோறும் 800 - 1000 கோடி பிராங்கு வருவாய் அளித்தது. (தற்போது பல லட்சம் கோடி டாலர்களாகும்)
இப்பொழுது, நிச்சயமாக, அது மேலும் அதிக வருவாய் அளிக்கிறது……… . லெனின்.
லெனினது காலத்தில் இந்த ஏகாதிபத்திய முதலாளிகள் அவர்களது அரசுகளைக் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எவ்விதமான வேலைகளிலும் ஈடுபடாமல் சுகவாசிகளாக இருந்துகொண்டு அவர்களது மூலதனத்தை பின்தங்கிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏராளமாக சம்பாதித்தார்கள் என்று லெனின் இங்கே விளக்குகிறார்.
தற்போதும் இந்தியாவில் அதானி குழுமம் பெரிய அளவில் எவ்விதமான உற்பத்தியிலும்
ஈடுபடாமல் இந்திய அரசாங்கத்தைப் பயன்படுத்தி பல லட்சம் கோடிகளை சம்பாதித்துள்ளதை நாம் அறிவோம். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்களின் சேமிப்பை இந்த நிறுவனம் சூறையாடி யுள்ளது. மக்களின் வரிப்பணத்திலிருந்தும் மக்களின் சேமிப்புகளிலிருந்தும் இயங்கும் LIC, SBI போன்ற நிறுவனங்களையும் சூறையாடி யுள்ளது. இப்போது இந்த நிறுவனங்களுக்கு அன்னிய நிதி வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இவர்களே இவ்வளவு பெரிய அளவில் மக்களை சூறையாடி இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கெல்லாம் அப்பன்களான அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள கார்ப்பரேட்டுகள் எவ்வளவு சூறையாடி யிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்னாலேயே லெனின் இதுபோன்ற முதலாளிகளின் மோசடிகளை அம்பலப் படுத்தியுள்ளார்.லெனினது ஏகாதிபத்தியம் பற்றிய கருத்துக்களை கம்யூனிஸ்டுகள் மக்களிடம் கொண்டுசேர்க்கத் தவறியுள்ளார்கள். அதன் காரணமாக ஏகாதிபத்திய முதலாளிகள் மேலும் மேலும் வளர்ந்து உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கே இன்று தடையாக மாறியுள்ளார்கள்.
ஆகவே லெனினது ஏகாதிபத்தியம் பற்றிய கண்ணோட்டத்திலிருந்து இன்றைய சர்வதேச கார்ப்பரேட் முதலாளிகளின் பொருளாதாரத்தை ஆய்வு செய்து, இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, இதற்கு மாற்றான பொருளாதாரம் பற்றி முடிவு செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அது குறித்த விவாதத்தை இலக்கு நடத்துவதை தனது லட்சியமாக இதன் மூலம் அறிவிக்கிறது.
ஆகவே தோழர்களே இந்த கார்ப்பரேட் பொருளாதாரம் பற்றியும் அதற்கு மாற்றான
பொருளாதாரம் பற்றியும் விவாதம் நடத்த முன்வாருங்கள் என்று இலக்கு அனைவரையும் அழைக்கிறது.
இதற்கு மாறாக இந்த பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதற்காக இவர்களால்
கொண்டுவரப்பட்ட கீன்சியப் பொருளாதாரம் தான் இன்றைய கார்ப்பரேட் பொருளாதாரத் துக்கு மாற்று என்று பேசுபவர்கள் காவுத்ஸ்கியவாதிகளைப் போன்றவர்களே..
ஆகவே இந்த கார்ப்பரேட்டு பொருளாதாரத் துக்கு மாற்று லெனினால் முன்வைக்கப் பட்டசோசலிசப்பொருளாதாரமே மாற்று என்பதற்கான ஆதாரங்களை அன்று லெனின் முன்வைத்ததைப் போல இன்று நாம் ஆய்வு செய்து முன்வைக்க வேண்டும்.
கோட்பாட்டளவில் சோசலிசப் பொருளாதாரம் தான் மாற்று என்பதில் எவ்விதமான சந்தேக மும் இல்லை. ஆனால் நடைமுறையில் எத்தகைய மாற்று வேண்டும் என்பது பற்றியே நாம் விவாதிக்க வேண்டியுள்ளது என்று இலக்கு கருதுகிறது.
தெளிவாக, இத்தகைய பிரமாண்டமான மிகை லாபங்களை (முதலாளி தனது "சொந்த" நாட்டுத் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து பெறும் இலாபங்களைவிடக் கூடுதலானவை)உபயோகித்து, தொழிலாளர் தலைவர்களுக்கும், தொழிலாளர் பிரபுக் குலத்தோரின் மேல்மட்டத்தினருக்கும் லஞ்சம் கொடுக்க முடிகிறது. "முன்னேறிய" நாடுகளின் முதலாளிகள் இதையேதான் செய்கிறார்கள். இந்த மேல்மட்டத்தினருக்கு வெவ்வேறான ஆயிரம் வழிகளில்,நேர்முகமாகவும் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் திருட்டுத்தனமாகவும், லஞ்சம் கொடுக்கிறார்கள்……….. லெனின்.
லெனினது காலத்திலேயே பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு அவர்களது மூலதனத்தை ஏற்றுமதி செய்து இங்குள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியை கொடுத்தும், இங்குள்ள மூலப்பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கியும், இங்குள்ள நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கியும் அவர்களது நாட்டில் தொழில் நடத்தி லாபம் ஈட்டுவதைவிட ஏராளமான லாபத்தை ஈட்டிச் சென்றார்கள்.
அந்த லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதியை அங்குள்ள தொழிலாளர்களுக்கும், அந்த தொழிலாளர்களின் தலைவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து அந்தத் தொழிலாளர்கள் முதலாளிகளை எதிர்த்து தீர்மானகரமான போராடம் நடத்தாமல் பார்த்துக்கொண்டனர்.
இந்தக் கொள்கையைப் பின்பற்றி இந்தியா போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் நேரடியானஅல்லது மறைமுகமான ஆதிக்கத்திலுள்ள நாடுகளிலும் உள்ள தொழிற்சங்கத் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுத்து தொழிலாளர்கள் முதலாளிகளை எதிர்த்து தீர்மானகரமான போராட்டத்தில் ஈடுபடாமல் பார்த்துக்கொண்டனர். இதன் மூலம் இங்குள்ள இடதுசாரிகளை தொழிற்சங்க வாதிகளாக மாற்றிவிட்டனர்.
மேலும் போர்டு நிறுவனம் போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் அவர்களுக்கு கிடைக்கும் மிகையான லாபத்தில் ஒரு பகுதியைக் கொண்டு இங்கு பல தொண்டு நிறுவனங்களை உருவாக்கி மக்களின் போராட்டங்களை திசைதிருப்புவது, போராட்டங்களை முனைமழுங்கச் செய்வது,. மக்களிடம் விரக்தி மனப்பாண்மையை ஏற்படுத்துவது போன்ற காரியங்களைச் செய்து வருகிறார்கள். இந்த ஏகாதிபத்தியவாதிகளின் சதித் திட்டங்கள் இங்கே அம்பலம் ஆனவுடன், தற்போது வெளிப்படையாக இல்லாமல் ரகசியமான முறைகளைக் கையாளுகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள் இரகசியமாக பணம் கொடுத்து ஆட்க்களை விலைக்கு வாங்கி அவர்களின் மூலம் சதி வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களின் லட்சியம் இங்குள்ள உழைக்கும் மக்கள் கம்யூனிசக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டும் கயூனிசத்திற்காகப் பாடுபட முன்வந்துவிடக் கூடாது என்பதுதான்.ஏகாதிபத்திய வாதிகளின் இந்தத் திட்டத்தை அவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு இரகசியமாகச் செயல்படுபவர்கள் சில வேளைகளில் கம்யூனிசத்தைப் பற்றி பேசிக்கொண்டே பல சமயங்களில் தந்திரமாக கம்யூனிசத்திற்கு எதிரான கருத்துக்களை நயவஞ்சகமாக மக்களிடம் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இத்தகைய ஏகாதிபத்தியவாதிகளின் நடவடிக்கை எதைக்காட்டுகிறது என்றால் ஏகாதிபத்தியவாதிகளுக்கு கம்யூனிசம் என்றாலே ஒரே அச்சம்தான். அதனை நேரடியாக எதிர்த்து மோதி வெல்லமுடியாது என்பதை உணர்ந்து சதித்தனமான முறையில் மோதி வெல்ல விரும்புகிறார்கள். இந்த சதித்தனத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் தற்போது தொண்டு நிறுவனத்தினர் வெளிப்படையாக அவர்களைக் காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் சதித்தனமாகவே அவர்களது நடவடிக்கைகள் இருக்கும்.
அத்தகையவர்கள் பல வகைப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு வகையினரையும் நாம் இனம்கண்டு முறியடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது உண்மைதான். ஆனால் நாம் மார்க்சிய லெனினிய அறிவை எந்தளவு பெறுகிறோமோ அந்த அளவுக்கும், நாம் எந்தளவுக்கு மக்களிடம் ஐக்கியம் ஆகிறோமோ அந்தளவுக்கு இந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சதிகாரர்களை அடையாளம் கண்டு அவர்களை மக்களிடம்அம்பலப்படுத்தி மக்களை அந்த சதிகாரர்களிடமிருந்து பாதுகாக்க முடியும்.
இவ்வாறு முதலாளிகளாக மாறிய இந்தத் தொழிலாளர்கள் அல்லது "தொழிலாளிப் பிரபுக்குலத்தோர்" தங்களது வாழ்க்கை முறையிலும், ஊதியத்தின் அளவிலும், தங்களது கண்ணோட்டம் முழுவதிலும் அற்பவாதி மனப்பான்மையை கொண்ட இவர்கள், இரண்டாவது அகிலத்தின் பிரதானத் தூண்கள் ஆவார்கள்; தற்காலத்தில் முதலாளித்துவவர்க்கத்தின் பிரதான சமூகத் தூண்கள் (இராணுவத் தூண்கள் அல்ல) ஆவார்கள். ஏனெனில், அவர்கள்தாம் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் முதலாளி வர்க்கத்தின் மெய்யான கையாட்களாக, முதலாளித்துவ வர்க்கத்தின் தொழிலாளர் சேவகர்களாக, சீர்திருத்தவாதத்துக்கும் தேசிய வெறிக்கு மான மெய்யான சாதனங்களாக இருக்கின் றனர். பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளிவர்க்கத்திற்கும் இடையில் நடைபெறும் உள்நாட்டுப் போரில், அவர்கள் தவிர்க்க இயலாதபடி, பெரிய எண்ணிக்கையில் முதலாளித்துவ வர்க்கத்தின் தரப்பை ஏற்கின்றனர்.
"கம்யூனார்களுக்கு" அதாவது கம்யூனிஸ்டு களுக்கு எதிராக "வெர்சேய்லர்கள்" அதாவது எதிர்ப்புரட்சியாளர்கள் பக்கம் நிற்கிறார்கள். - லெனின்.
தொழிலாளி வர்க்கப் பிரபுக்குலத்தோர் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து லஞ்சம் வாங்கிய பின்பு அவர்கள் முதலாளிகளாகவே மாறிவிட்டார்கள் என்கிறார் லெனின். அவ்வாறு மாறியவர்கள் அவர்களது வாழ்க்கை முறையிலும் சுகபோகிகளாக மாறி அவர்களது கண்ணோட்டம் முழுவதிலும் ஒரு அற்பவாத மனப்பாங்குள்ளவர்களாக மாறி ஆதிக்கத்திலுள்ள முதலாளி வர்க்கங்களுக்கு சமூகத் தூண்களாக செயல்பட்டார்கள் என்கிறார் லெனின். இன்றும் லெனின் சொன்னது போலவே இந்த தொழிலாளி வர்க்க பிரபுக்குலத்தோர் தொழிலார்களுக்கு தொழிற்சங்கவாத வழியிலேயே வழிகாட்டினார்கள். தொழிலாளர்களும் தங்களுக்கான கூலி உயர்வு, மற்றும் போனசுக்கான போராட்டங்களிலேயே ஈடுபட்டு அவ்வப்போது சில சலுகைகளைப் பெற்று மகிழ்ந்தனர். ஆனால் தற்போது இதுவரை தொழிலாளர்களுக்கு கிடைத்த சலுகைகள் எல்லாம் பறிக்கப்பட்டு எதுவும் செய்ய முடியாத ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மீண்டும் தொழிலாளர்கள் ஆரம்பத்திலிருந்தே அவர்களது போராட்டத்தை துவங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்கெல்லாம் காரணம் இந்த தொழிலாளர் பிரபுக்குலத்தோரின் வழிகாட்டலை ஏற்று நடந்துகொண்டதுதான்என்பதைதொழிலாளர் கள் உணர வேண்டும்.
இதுபோலவே இரகசியமாகச் செயல்படும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தந்திரமாக முன்வைக்கும் கம்யூனிசத்தை மறுக்கும் கருத்துக்களை ஏற்று செயல்பட்டால் இன்றைய தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதிதான் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் நடுத்தர மக்களுக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து கம்யூனிச கொள்கை எவ்வளவு உயர்ந்தது என்பதையும் அந்தக் கொள்கைதான் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தை ஒழித்து ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வைத் தரும் என்பதை உணர்ந்து ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களும் கம்யூனிசத்தின் பக்கம் வரவேண்டும். மேலும் கம்யூனிசம் போன்று தோற்றம்கொடுக்கும்கம்யூனிசத்திற்கு எதிரான கருத்துக்களையும் செயல்திட்டங்களையும் புரிந்துகொண்டு அதனை எதிர்த்துப் போராட வேண்டும்.
இந்தப் போராட்டங்களை நடத்தும்போது நண்பர்களிடம் பகையற்ற முறையிலும் எதிரிகளிடம் கடுமையாகவும் போராடுவதற் கான பயிற்சியை நடைமுறையிலிருந்து பெற வேண்டும்.
இத்தகைய போராட்டத்தை தத்துவத் துறையிலும் நடைமுறையிலும் நாம் தொடர்ந்து நடத்தினால், உழைக்கும் மக்களை சதித்தனமாக ஏமாற்றுவதற்கு முயற்சி செய்யும் இரகசிய தொண்டுநிறுவனப் பேர்வழிகள் எளிதில் அம்பலமாவார்கள். அவர்களை அம்பலப்படுத்தி முறியடிக் காதவரை இங்கு கம்யூனிசம் மக்கள் இயக்கமாக மாறாது. மேலும் இத்தகையப்போராட்டத்தின் மூலமே கம்யூனிஸ்டுகளும் சித்தாந்தரீதியாகவும் நடைமுறைரீதியாகவும் பலம் பெறுவார்கள்.
மேலே கண்ட புலப்பாட்டின் பொருளாதார வேர்களைப் புரிந்துகொண்டாலொழிய, இதன் அரசியல், சமுதாய முக்கியத்துவத்தை உணர்ந்தாலொழிய, கம்யூனிஸ்டு இயக்கத்தின், நெருங்கிவரும் சமூகப் புரட்சியின் நடைமுறைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதை நோக்கி ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது. பாட்டாளி வர்க்கத்தினுடைய சமூகப் புரட்சியின் தறுவாயே ஏகாதிபத்தியம். 1917க்குப் பிற்பாடு உலகு தழுவிய அளவில் இது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. -லெனின்.
லெனின் காலத்தில் வெளித் தோன்றிய புலப்பாடுகளை அலசி ஆராய்ந்த லெனின், உலகு தழுவிய பொருளாதாரத்தின் அடிப்படையை புரிந்துகொள்வதன் மூலமே அன்றைய சமுதாயத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்றார். அதாவது ஏகாதிபத்தியப் பொருளாதாரம்தான் உலகம் முழுவதிலு முள்ள மக்களின் சமூக பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் துறையிலான வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்றும் ஆகவே ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தின் இயக்கத்தை நாம் ஆழமாகப் பார்த்து அதன் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான அரசியல், பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறையில் நமது கொள்கைகளை வகுத்துச் செயல்பட வேண்டும் என்று வழிகாட்டினார். இந்த வகையில் நமது செயல்பாட்டை வகுத்துக் கொள்ளவில்லை என்றால் நம்மால் மக்களைத் திரட்டவும், போராட்டங்களைநடத்திடவும் முடியாது என்றார் லெனின். ஆகவே பாட்டாளி வர்க்கத்தின் சமூகப் புரட்சிக்கானதறுவாயே ஏகாதிபத்தியம் என்றார் லெனின். இதன் பொருள் என்ன? ஏகாதிபத்தியகாலகட்டத்தில்பாட்டாளிவர்க்கத்திற்கு இந்த முதலாளித்துவ சமூகத்தை ஒழித்து விடுவதற்கான புறநிலையான வாய்ப்பு உருவாகிறது என்பதுதான் அதன் பொருளாகும். இந்தப் பொருளை சிலர் திருத்தி ஏகாதிபத்தியமானது சோசலிசப் பொருளாதாரத்தை உருவாக்கும் என்று பேசுகிறார்கள். அது மிகத் தவறான கருத்தாகும்.
ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் சூழலில் ஏகாதிபத்தியப் பொருளாதாரமானது மக்களுக்கு எந்தவகையிலும் பயன்படாது என்பதையும் மேலும் அது மக்களின் வாழ்வுக்கும் நலன்களுக்கும்எதிரானது என்பதையும் தற்போது உதாரணமாக அதானி குழுமத்தின் நிதி மோசடிகளைஎடுத்துச் சொல்லி இந்தப் பொருளாதாரத்திற்கு மாற்று சோசலிசப் பொருளாதாரமே என்பதை மக்களிடம் நாம் கொண்டுசெல்ல வேண்டும்.
ஆனால் இடதுசாரிகள் இந்தக் கடமையை செய்யத் தவறினார்கள். அவர்கள் பாராளுமன்றவாதிகளாகவே மாறிவிட்டனர். அவர்களது நடவடிக்கைகள் முழுவதும் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்து ஆட்சியில் பங்குபெறுவதாகவே குறுகிவிட்டது.
இந்த குறைபாடுகளை எதிர்த்துப் போராடி இயக்கம் எடுத்த மார்க்சிய-லெனினியவாதிகளும் இந்த ஏகாதிபத்திய பொருளாதார அரசியலுக்கு மாற்றை முன்வைத்து அரசியல் பணிகளை முன்னெடுக்காமல் நிலப்பிரபுத்துவ முரண்பாடே முதன்மையான முரண்பாடு என்ற கொள்கையை வகுத்து அதனையும் நடைமுறையில் செயல்படுத்தாமல், அழித்தொழிப்பு என்ற இடது தீவிரப் பாதையைப் பின்பற்றி மக்களிடமிருந்து தனிமைப்பட்டுப் போனார்கள். அதன் பின்பு அழித்தொழிப்புப் பாதை தவறு என்று உணர்ந்து செயல்பட்ட போதும், பொருளாதாரப்போராட்டங்களையும் அரசியல் மற்றும் தத்துவப் போராட்டங்களை இணைக்கத் தவறினார்கள். மேலும் இப்போதும் ஏகாதிபத்தியப் பொருளாதாரத் திற்கு மாற்றான ஒரு பொருளாதார அரசியல் கொள்கையை முன்வைத்து மக்களைத் திரட்டத் தவறினார்கள். இந்தக் குழுக்களில்சில குழுக்கள் வர்க்கப் போராட்டத்தையே கைவிட்டுவிட்டு பெரியார் அம்பேத்கார் வழியைப் பின்பற்றினார்கள். பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை ஆண்ட பொழுது அவர்களின் பொருளாதார மற்றும் அரசியலை காப்பாற்றுவதற்கான கொள்கையை உருவாக்கிய கோட்பாளர்கள் தான் அம்பேத்காரும் பெரியாரும். அவ்வாறு ஏகாதிபத்திய பொருளாதார மற்றும் அரசியலை எதிர்க்காமல் அதற்குத் துணைபோன கொள்கைகளையே பின் பற்றிய சில அமைப்புகள் அடையாள அரசியல் அமைப்புகளாகவே மாறிவிட்டன.
இந்த வரலாற்று அனுபவங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன?.
லெனினது காலத்திலேயே ஏகாதிபத்தி யத்தை எதிர்க்க வேண்டியது சர்வதேச கம்யூனிஸ்டுகளின் கடமை என்ற வழிகாட்டுதலை இந்திய கம்யூனிஸ்டுகள் பின்பற்றிட தவறியதால்தான் கம்யூனிஸ் டுகள் மக்களின் செல்வாக்கை இழந்து நிற்கின்றனர். அதே வேளையில் கம்யூனிசத்தை மறுப்பவர்களும் வேடம் போட்டு நடிப்பவர்களும் மக்களின் செல்வாக்கைப் பெற்று வளர்ந்திருக் கிறார்கள். இந்த நடைமுறை உண்மையை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இந்தச் சூழலை கம்யூனிசம் தோல்வியடைந்து விட்டதுஎன்று கம்யூனிசம் பற்றி அறியாத அப்பாவிகள் கருதுகிறார்கள். அதனைப் பயன்படுத்தி கம்யூனிச விரோதிகளும், ஏகாதிபத்திய கைக்கூலி களும், பிற்போக்குவாதிகளும் கம்யூனிசம் தோல்வியடைந்துவிட்டதாக பிரச்சாரம் செய்கிறார்கள்.
ஆனால் லெனின் காட்டிய வழியில் இன்றைய சர்வதேச ஏகாதிபத்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்து, அதன் தீமைகளையும், அந்தப் பொருளாதாரமானது உலகம் முழுவதிலு முள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு எப்படி தடையாக மாறியுள்ளது என்பதை விளக்கியும், அதாவது உற்பத்தி சக்திகளில் முதன்மையான அம்சமான மனித உழைப்பானது எப்படி வளராமல் உள்ளது மட்டுமல்லாமல் அழிந்துகொண்டு இருக்கிறது என்பதை விளக்கியும், (மனிதர்கள் பலர் வேலைவாய்ப்பின்றி பசியிலும் பட்டினியாலும் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதனையே மனித உழைப்பு சக்தி அழிகிறது என்கிறோம்). இந்த ஏகாதிபத்திய பொருளாதாரம் மற்றும் அரசியலானது உழைக்கும் மக்களின் நடுத்தரவர்க்கங்கள் உள்ளிட்ட மக்களின் வாங்கும் சக்தியை கடுமையாகப் பாதித்துக் கொண்டுஇருக்கிறது என்ற புள்ளி விவரங்களை எடுத்துச் சொல்லியும், இன்றைய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் உழைப்பாளர்களுக்கும் இடையிலான உற்பத்தி உறவுதான் சர்வதேச சமூகத்தின் பிரதானமான உற்பத்தி உறவு என்பதை விளக்கியும், இந்த உற்பத்தி உறவுதான் இன்றைய உற்பத்தி சக்திகளை பிரதானமாக மனித உழைப்பு சக்திகளின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது என்பதை விளக்கி இந்த உற்பத்தி உறவை மாற்றியமைப்பதன் மூலமேஉலகில் சிறைப்பட்டிருக்கும் உற்பத்தி சக்திகளை வளர்க்க முடியும். அதற்கு சோசலிசஉற்பத்திதான் தீர்வு என்ற போதிலும் ஒவ்வொரு நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்பவும் அந்தந்த நாடுகளில் இந்த ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தை எதிர்க்கும் சக்திகளின் பொருளாதார கலாச்சார வாழ்க்கை எப்படி உள்ளது என்பதை புரிந்துகொண்டு ஏகாதிபத்திய பொருளாதாரம் மற்றும் அரசியலை எதிர்த்துப் போராடும் வர்க்கங்களின் தேவைக்கு ஏற்ப என்னவகையான பொருளாதாரம் மற்றும் அரசியலுக்காக நாம் போராட வேண்டும் என்பதை திட்டமிட்டு நாம் செயல்படுவதன் மூலமே நாம் ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி உற்பத்தி சக்திகளை விடுவிக்க முடியும். இந்தப் போராட்டத்தில் ஏகாதிபத்தியவாதி களுடன் தற்போது சமரசம் செய்துகொள்ளக் கூடாது. ஏகாதிபத்திய வாதிகளின் ஒரு பிரிவினரோடு சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல் ஒருவேளை ஏற்படுமாயின் அப்போது புறச் சூழலை நன்கு அலசி ஆராய்ந்து அப்போது முடிவெடுக்கலாம். இதன் மூலம் கட்டாயம் சமரசம் செய்துகொள்ள வேண்டும் என்று நாம் கருதக் கூடாது. எனினும் உழைக்கும் வர்க்கத்தின் விடுதலை என்ற நோக்கத்தி லிருந்தே சமரசம் போன்றவற்றை தீர்மானிக்க வேண்டும்.
ஆனாலும் பாட்டாளிவர்க்க இயக்கம் தற்போது பலவீனமாக இருக்கும் இன்றைய சூழலில் எதிரிகளோடு சமரசம் என்பது கூடவே கூடாது.
தற்போது மக்களின் விருப்பம் என்ன? இன்றைய ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். நிலவுகின்ற ஏழ்மை அதாவது வறுமை ஒழிய வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகும். இத்தகைய மக்களின் விருப்பதை பூர்த்தி செய்யக்கூடிய பொருளாதாரம் மற்றும் அரசியல் எது? அதைத்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்துமக்களை அணிதிரட்ட வேண்டும்.
இத்தகைய பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையை முன்னிறுத்தி ஆளும் பாஜகவினர் மக்களைத் திரட்ட மாட்டார்கள். மக்களின் மத நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்தியே அவர்கள் மக்களைத் திரட்டிடுவார்கள். பொருளாதா ரத்தை முன்வைத்து மக்களை ஒருபோதும் அவர்கள் திரட்ட மாட்டார்கள். அதுதான் அவர்களின் பலவீனமாகும்.
அந்த பலவீனத்தை பயன்படுத்தியே மக்களின் பொருளாதார வாழ்வு மேம்பட நிலவுகின்ற ஏகாதிபத்தியப் பொருளாதா ரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் அதற்கு மாற்று மக்களின் நலன்களுக்கான பொருளாதாரம் குறிப்பாக அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து மக்களைத் திரட்டிட வேண்டும். இப்பொருள் குறித்து மிகவும் ஆழமாக நாம் விவாதித்து முடிவிற்கு வருவோம்.
தோழமையுடன்..........தேன்மொழி..... தொடரும்
No comments:
Post a Comment