கலை இலக்கியம்.-சிபி



கலை என்பதன் முதல் இலக்கணம் அது மனிதனால் படைக்கப்படுவதாகும். உற்பத்திக் கருவிகள் போலவே கலை வடிவங்களும் நுண்கலைக் கருவிகளும் வானத்திலிருந்து வந்தவையல்ல, மனிதனாலாயே படைக் கப்பட்டவைதான்.

மனிதனின் அடிப்படைத் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய முடிந்ததும் அதாவது அன்றாடும் உணவுப் போராட்டம் முடிந்து ஓய்வு கிடைத்த வேளையில் மனிதன் உற்பத்திக் கருவி களோடு கலைகளையும் வளர்க்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டது. உற்பத்தி கருவிகளின் வளர்ச்சியானது மனித சமுதாய வளர்ச்சியும் வேகம் பெற்றது. ஆயினும் உபரி உழைப்பு பறிக்கப்படுவது போலவே கலையிலும் ஒடுக்கும் வர்க்க ஆதிக்கம் பெற்றது அவை விளக்குவதே இந்த தொடர் கட்டுரையின் தேவை என்று நினைக்கிறேன்.

உழைப்பும் கலையும் இணைந்தவை; மனிதன் சுதந்திரமாக வாழ்ந்தபோது உழைப்பும் கலையும் வாழ்வோடு ஒன்றிணைந்திருப்பதை காணலாம். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத போதும் உற்பத்தி உறவு சுமுகமாக அன்று இருந்தது. உழைப்போடு கலை உணர்வு இணைந்து உந்து சக்தியாக விளங்கியது.

கலை வடிவங்கள் அவனது அக உணர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன. மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப் பாற்றல் உள்ளது. அதன் மூலமே உற்பத்திக் கருவிகளைக் கூர்மையாக்கி தன் புறநிலைத் தேவைகளுக்காக உற்பத்தியைப் பெருக்குகிறான், அக நிலையை, அக உணர்வுகளை, அனுபவ உணர்வுகளை கலை வடிவமாக வெளிக் கொணர்கிறான். இது அவனது உற்பத்தித் திறனோடு ஒட்டியது; அவற்றிற்கு உந்துசக்தி ஆவது.

ஆதி மனிதனது வேட்டையாடி வெற்றிக் களிப்பின் ஆட்டத்தில் இதனையே கண்டோம். வேலைப் பிரிவினை ஏற்பட்ட பின்னர் உற்பத்திக் கருவிகளை செய்வதும், கலை வடிவங்களைப் படைப்பதும் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் வந்தது என்பதனை முன்னர் பகுதியில் கண்டோம். இருந்தும் சில புரிதலுக்கு மேலோட்டமாக இப்பொழுது பார்ப்போம்.

உற்பத்திக் கருவிகள் போலவே கலை வடிவங்களும் நுண்கலைக் கருவிகளும் வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்க தேவைகேற்ப்ப மனிதனாலேயே படைக்கப்பட்டவை. பல இசை கருவிகள் ஆகட்டும் ஆடல் பாடல் நடனமாகட்டும் அவை ஆதி மனித தேடுதலின் தொடர்ச்சியே எனலாம்.

விலங்கு பூட்டிய அடிமைச் சமுதாயத்திலே கலை உணர்வுகளே வெளிப்படுத்தவோ, வளர்க்கவோ அடிமைகளுக்கு வாய்ப்புக்கிட்ட வில்லை. எஜமானர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அனைத்தும் இருந்தது. எஜமானர்கள் தம் பொழுது போக்கிற்கு பல்வேறு விளையாட்டுகளை வளர்ந்தனர். அடிமைகளை சிங்கம், புலி, எருதுகளுடன் போரிடச் செய்து பொழுது போக்குவது;அடிமைகளை போரிட்டு மடியும் வரை மோதச் செய்து வேடிக்கை பார்ப்பது; அடிமைகளின் இரத்தம் பீறிடுவதைக் கண்டுகளித்து ஆர்ப்பரிப்பது ஆகியன அடிமைச் சமுதாயத்தில் வழமையாயிருந்தன. எஜமானர்களின் தேவையை ஒட்டி மட்டுமே உற்பத்தி இருந்தது உற்பத்திக்கு மேலாக நுகர முற்பட்டனர். மது, கேளிக்கை ஆடம்பரங்களில் எஜமானர்கள் பொழுதை களித்தனர்.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அடிமைச் சமுதாயத்தை காட்டிலும் உற்பத்தி வளர்ச்சியடைந்தது. நிலப்பிரபுக்கள் (தம் வர்க்க நலனை முன் வைத்து) கலைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றனர்.

கலைகள் யாவும் தெய்வாம்சம் பொருந்தியவை; தெய்வத்திற்கே கலைகள் என்றனர்.

நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே கலைஞர்கள் இருந்தனர். இதனால் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலைகள் படைக்கப்பட்டன. கலைஞர் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ, பரவலான மக்களின் உணர்வுகளையோ, தன் கற்பனைகளையோ, தான் விரும்பியபடி கலைவடிவங்கள் மூலம் வெளிக் கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான்.

கலைஞன் சமுதாயத்தை விட்டு அதீதக் கற்பனையில் தன் படைப்புகளை ஆக்க நேரிட்டது. இதனாலேயே நிலப்பிரபுத்துவ கலைகள், இலக்கியங்கள் யாவும் கற்பனைவாத (Romantism) நிலையில் படைக்கப்பட்டன. அவை உண்மையானவை அல்ல. அதன் வெளிப்பாடே இதிகாசங்கள், பாரத, இராமாயணங்கள் காவியங்கள் யாவும் வெறும் கற்பனவாதக்கதைகளாக இருப்பதைக் காணலாம்.

நிலவுடைமை சமூகத்தில் வாழ்ந்த கலைஞன் நிலவுடைமை சமுதாயத்தை நீதிப்படுத்துவற்காகவே எழுதினான். அன்றைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் வாழ்ந்த எல்லாக் கலைஞர்களும் புலவர்களும் அச்சமுதாயத்தை நீதிபடுத்தும் பணியை விட்டுவிடவில்லை.வள்ளுவர் கூட இந்நிலப்பிரபுத்துவ நெறியிலிருந்து வழுவவில்லை. இதென்ன பிரமாதம்! இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் இன்றும் கூட தமிழ் நாட்டிலும் இங்கும் நிலப்பிரபுத்துவ அமைப்பை, ஒழுக்கங்களை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்களையே பெரும்பாலான கலைஞர்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் சமுதாய அமைப்பு இன்றும் அரை நிலப்பிரபுத்துவமாக இருப்பதாகும். கலைகள் இலக்கியங்கள் யாவும்மேல்மட்ட அமைப்பை (Superstructure) சார்ந்தவையாகும். இவை அடிப்படை அமைப்பிற்கு சேவை செய்வதாக படைப்பதன் மூலமே அச்சமுதாயத்தின் மதிப்பையும் தம் குடும்பத்துப் பசியையும் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதல்லவா உண்மை நிலவரம்.

முதலாளித்துவ சமூகத்தில் பொருள் உற்பத்தியின் உயர்வு; அவ்வர்க்கத்தின் தன்மைகள் எல்லாம் அதன் சட்டங்கள், ஆதிக்கத்தில் வந்தன. கலை கூட அவற்றின் நியதிகளுக்கு தப்பிவிடவில்லை. கலைப் படைப்பும் ஒரு விற்பனைப் பொருளானது. அதனால் கலை அதன் உறுதியான, அத்தியாவசியமான படைப்பாற்றல் தன்மையை இழந்தது, கலை வெறும் பொய்மையான வடிவமெடுத்தது.

ஏகாதிபத்தியத்தின் தரகர்கள் இன்று இந்தியாவில் ஏகாதிபத்திய ஊடுருவலை, கூட்டு தொழில் நிறுவன அமைப்புகளின் ஆதிக்கத்தை, புதியகாலணி நிலையை எதிர்த்து எழுதுவதை எங்கும் நாம் காணமுடியாது. அதே வேளை உள்நாட்டிலும் இவர்கள் பிற்போக்கு நிலப்பிரபுத்துவ கலை இலக்கியங்களை தூக்கி பிடிப்பதோடு ஏகாதிபத்திய சுரண்டலை மூடி மறைக்க அவர்களின் சேவைக்காக வக்கிரம் பிடித்த அவர்களின் செயலையும் ஆராதிக்கின்றனர் . உள்நாட்டில் தாங்கள் நிலைத்து நிற்பதற்க்காக இதனை செய்கின்றனர், தெரிந்தே செயல்படுகின்றனர்.

இதன் பின்னரும் புதிய சமூக அமைப்பை படைக்க நினைக்கும் முற்போக்காளர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்கள் புரட்சிகர அரசியலையும் மார்க்சிய கோட்பாடுகளை, விஞ்ஞான பூர்வமான சமூகவியலை, வர்க்கப் போராட்டத்தின் வெற்றியை முன்வைப்பவராக இருபதை காண்பீர். தொடரும்......

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்