மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி -சிபி

 


இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றி ஒரு தேடுதல்

கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி அவர்களை அரசியல் படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எல்லா பொதுவுடமை இயக்கங்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் ஒருபுறம் திருத்தல்வாதிகளாகிப்போன பொதுவுடமை இயக்கம் மக்களிடையே பணியாற்றுவது என்ற பெயரால் உழைக்கும் மக்களை அணிதிரட்டி உடனடி பொருளாதார கோரிக்கைகளுடன் வரம்பிற்குட்பட்ட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களை புறக்கணித்து அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்பு வாதத்தையே தமது நடைமுறையை மாற்றிக் கொண்டனர்.

திருத்தல் வாதத்தை புறக்கணித்த புரட்சியின் இலக்கான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை தூக்கிப பிடிக்கும் புரட்சியாளர்கள் இன்று இடது வலது சந்தர்ப்பவாத போக்கில்.

இன்று மாலெ அமைப்புகளின் தோல்விகளும் தேக்கமும் பின்னடைவும் பல்வேறு கேள்விகளை உள்ளடக்குகின்றன.

அவர்களை தேடியே இந்த எழுத்து இருக்கும் மேலும் இன்றைய நிலையில்,

மக்கள் என்னும் கடலில் மீன்களாக நீந்தி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கும் புரட்சிகர அணிகளுக்கும் மக்களிடையே ஆற்றவேண்டிய புரட்சிப் பணிகளைப் பற்றி ஒருங்கிணைந்த கண்ணோட்டம் புரிதலையும் உருவாக்குவதே நமது கடமையாக இருக்கின்றது, முயல்வோம்.

மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை தங்கள் அணிகளுக்கு மட்டுமன்றி பரந்துபட்ட திரளான மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். உழைக்கின்ற பெரும் திரள் மக்கள் இந்தக் கண்ணோட்டத்தை பற்றிக்கொண்டு முதலாளித்துவ கண்ணோட்டத்தை (திரிப்புவாதிகளையும்) நிராகரிக்காத வரையில், எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.

அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தை உந்தி முன்தள்ளி செல்வதற்கு தலையாய காரணமாகும். இம்முரண்பாட்டுத் தீர்வே ஒரு புதிய சமுதாயம் எழ வழிவகுக்கிறது.இம் முரண்பாட்டின் பிரதானஅம்சம் உற்பத்தி சக்திகள் ஆகும்.

இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி இருப்பதுதான் இந்திய சமுதாயத்தை பின் தங்கிய நிலையிலே வைத்திருக்கிறது. பிற்போக்கு சக்திகளின் தளைகளில் இருந்து உற்பத்தி சக்திகள் விடுபடும் பொழுது ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது. அப்படி என்றால் இந்த உற்பத்தி சக்திகளில் தலையாய மற்றும் பிரதான பிரச்சினையாகிறது.

அது பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் உள்ள உழைப்பே அன்றி வேறல்ல எனவே மக்கள் திரள் அதாவது உழைக்கும் மக்கள் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் தளைகளில் இருந்து விடுபட்ட உடன் புதிய உற்பத்தி உறவுகளை கொண்ட ஒரு முற்போக்கான புதிய சமுதாயம் பிறக்கிறது.

"பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது" என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் - அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் - அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுள்ளது.

ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற

அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும் . ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது, பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.

"ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது" என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும். பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொண்டு அதன்படி நடக்க துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.

ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம்.

மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலை நாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:

(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.

(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.

மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

பொதுவாக மக்கள் என்று நாம் குறிப்பிடும் போது உற்பத்தியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் அடிப்படை வர்கங்களையே அதாவது தொழிலாளர்கள் விவசாயிகளை யே குறிப்பிடுகின்றோம்.

தொடரும்......

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்