ஐ.நா மன்றம் உருவாக்கத்தில் ஸ்டாலினுடைய செயல்தந்திரம், வரலாற்றுப்பொருள்முதல்வாத கண்ணோட்ட வகைப்பட்டதே.-தேன்மொழி

 இயற்கை மற்றும் சமூகமானது நமது சிந்தனைக்கும் உணர்வுகளுக்கும் அப்பால் நின்று ஒருகுறிப்பிட்ட விதிகளுக்குட்பட்டு சுதந்திரமாக இயங்கிக்கொண்டு இருக்கிறது என்று மார்க்சியதத்துவம் சொல்கிறது. மேலும் இந்த புறநிலை விதிகளை யாரும் மாற்ற முடியாது என்றும், அந்தவிதிகளைப் புரிந்துகொண்டு அதனை நமக்கு சாதகமாக அந்த விதிகளின்அடிப்படையிலேயே புறச் சூழலை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்என்றும் மார்க்சியம் போதிக்கிறது.

சமூகத்தில் உருவான சாதிகள், பாராளுமன்றம், நீதிமன்றம் போன்ற நிறுவனங்கள்உருவானதெல்லாம் புறநிலை எதார்த்தத்திலிருந்து உருவாகிறது. சமூகம் அடிமைச் சமூகமாகஇருந்தபோது இந்த பாராளுமன்றம் உருவாகவில்லை, உருவாகியிருக்கவும் முடியாது. ஒருபாராளுமன்றம் தேவை என்று மனிதர்கள் உணர்வதற்கான புறநிலை சூழல் உருவாகியிருந்தால்மட்டுமே மனிதர்கள் அதனை உணர்ந்து பாராளுமன்றம் போன்றநிறுவனங்களை உருவாக்கமுடியும். இந்த அடிப்படையிலேயே சர்வதேச ஐ.நா மன்றமும் புறச் சூழலிலிருந்தே உருவானது.

இந்த உண்மையை ஒரு இயக்கவியல் பொருள்முதல்வாத, மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதகண்ணோட்டம் கொண்டவர்களால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

எப்படி ஒரு பாராளுமன்றம் உருவாவதற்கு தேவையான புறச் சூழல் இல்லாமல் பாராளுமன்றம்உருவாக முடியாதோ, அதே போலவே பாராளுமன்றம் உருவாவதற்கான புறச் சூழல்நிலவினாலும் அதனை சரியாக உணர்ந்துகொண்ட மனிதர்களோ அல்லது அரசியல்தலைவர்களோ அதற்கான நடவடிக்கையில் ஈடுபடாமல் அத்தகைய பாராளுமன்றம் உருவாகமுடியாது. ஆகவேதான் மக்களின் நலனில் அக்கரை கொண்ட மார்க்சியவாதிகளும் புறநிலையில்மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமலும், மக்களின் தயார்நிலையை அறிந்து கொள்ளாமலும் மக்களுக்கு எது நல்லது என்பதை மார்க்சியவாதிகளின் உணர்விலிருந்து தீர்மானித்து செயல்படுவதில்லை, மாறாக புறநிலை மக்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டேசெயல்படுகிறார்கள்.

இதேபோலவே மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளும்வர்க்க ஆட்சியாளர்களும் மக்களின் உணர்வுநிலைகளை, புறநிலையிலுள்ள சூழல்களை புரிந்து கொள்ளாமல் தன் விருப்பம் போல்முடிவெடுத்து செயல்படுவதில்லை. உதாரணமாக மோடி அரசானது மக்களுக்கு எதிராக பலநடவடிக்கையில் ஈடுபடுவதை நாம் காணலாம். இந்த நடவடிக்கைக்கு மக்களிடமிருந்து எதிர்ப்புவரும் என்று தெரிந்தே மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதற்கு என்னகாரணம்? ஆங்காங்கே எதிர்ப்பு வரலாம் அந்த எதிர்ப்பு என்பது சில காலம்தான் நடக்கும். அதற்குப் பின்பு மக்கள் அதற்கு அடங்கிப் போய்விடுவார்கள் என்ற எதார்த்த உண்மையைபுரிந்து கொண்டே இந்த மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதற்கு மாறாகமக்கள் ஒரு புரட்சிகர கட்சியின் தலைமையில் திரட்டப்பட்டிருந்தால், ஆட்சியாளர்களின்அடக்குமுறையை எதிர்த்து ஒன்றுபட்டு மக்கள் போராடுவதற்கு தயாராக இருந்தால், இத்தகையசூழலில் மோடி அரசால் இத்தகைய மக்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்திருக்கமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறுதான் ஒரு பிரச்சனையைப் பற்றி ஆய்வுசெய்யவும் அதற்கான தீர்வுகளை காணவும் இயக்கவியல் பொருள் முதல்வாத கண்ணோட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்பு, அந்தப் போரினால் பாதிக்கப்பட்ட ஐரோப்பியமக்களிடம் ஏற்பட்ட உணர்வு, போரின் மீது கடுமையான வெறுப்பு. அந்த மக்கள் இரண்டு உலகப்போரை சந்தித்து அதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் போரின் மீது அந்த மக்களுக்குகடுமையான வெறுப்பு ஏற்பட்டிருந்தது. இதுபோன்ற போர் இனிமேல் எங்கும் நடக்கக்கூடாதுஎன்று அவர்கள் விரும்பினார்கள். அதற்காக நாம் என்ன செய்யவேண்டும் என்று பலவாறுசிந்தித்தார்கள். ஐரோப்பா முழுவதும் இதே பேச்சாகவே இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு ஒருவர்தீர்வு கண்டால் அவரை போற்றிப் புகழ்வதற்கு தயாராக இருந்தார்கள்.

இத்தகைய உணர்வுள்ள ஐரோப்பிய மக்கள் பிற ஆசிய, ஆப்பிர்க்கா கண்டத்தவர்களைக் காட்டிலும் சமூகப் பொருளாதாரத்திலும் அறிவுத்துறையிலும் வளர்ச்சி பெற்ற மக்களாகஇருந்ததால், போரின் மீது வெறுப்பும், போரே கூடாது, உலகில் சமாதானம் நிலவ வேண்டும்

என்ற கொள்கை கொண்ட சோவியத்து அரசு மற்றும் சோவியத்து கம்யூனிஸ்டு கட்சியின்கொள்கையின்பால் ஈர்ப்பு கொண்டு கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து புரட்சி செய்வதற்குவாய்ப்புகள் ஏற்பட்டுக்கொண்டு இருந்தது.

இந்த சூழல்களை மதிப்பிட்ட ஏகாதிபத்தியவாதிகள் ஐரோப்பிய மக்கள் கம்யூனிஸ்டுகளாகமாறிவிடக்கூடாது, அதனை உடனடியாகத் தடுத்திட வேண்டும் என்ற அவசியத்தைஉணர்ந்திருந்தார்கள். ஆகவே ஐரோப்பிய மக்கள் கம்யூனிஸ்டுகளாக மாறுவதைதடுப்பதற்குதாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்தார்கள். அந்த சிந்தனையிலிருந்து இனிமேல்

அவர்கள் போர் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில்ஈடுபட்டார்கள். அந்த முயற்சியின் விளைவுதான் சர்வதேச ஐ.நா. மன்றம் ஆகும்.

ஐ.நா. மன்றத்தின் மூலம் நாடுகளுக்கு இடையிலான பிரச்சனைகளை நாங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம், அதன் மூலம் போர் தவிர்க்கப்படும் என்று மக்களுக்கு உத்தரவாதம்தந்தார்கள். ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும், ஒரு நாட்டின்உள்விவகாரங்களில் பிறர் தலையிடக்கூடாது போன்ற கொள்கைகளை முன்வைத்துத்தான் ஐ.நா.

மன்றத்தை ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினார்கள்.இந்தக் கொள்கைகளின் மீதும் ஐ.நா.மன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை வைத்தார்கள். இவ்வாறு மக்களின் நம்பிக்கையை பெறமுடியவில்லை என்றால் இவர்களால் ஐ.நா.வை அன்றைய காலத்தில் உருவாக்கி யிருக்கவேமுடியாது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு சமாதானம் நோக்கமில்லை என்றாலும் அவர்கள் வெளிப்படையாக உலகில் போர்கள் அற்ற சமாதானத்திற்காகவே ஐ.நா. மன்றத்தை உருவாக்குகிறோம் என்றுதான் அறிவித்தார்கள், அதனையே மக்கள் நம்பினார்கள்.இதுதான் ஐ.நா. உருவாக்கத்தின் போது இருந்த சூழல். இந்த சூழலையையும், மக்களின் உணர்வுகளையும் பயன்படுத்தித்தான் ஏகாதிபத்தியவாதிகளால் ஐ.நா. உருவாக்கப்பட்டது என்பதுதான் வரலாறு ஆகும். இங்கே ஐ.நா.வை உருவாக்கிய தனிநபர்கள் மற்றும் நாடுகளின் பங்கு இரண்டாம் பட்சமானதாகும். ஐ.நா. உருவானதற்கு முதன்மையான காரணம் அந்த வரலாற்றுச்சூழல்தான் என்பதே வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம்கொண்டவர்களின்புரிதல்ஆகும் இந்த சூழலில் சோசலிச சோவியத்து குடியரசின் தலைவரான ஸ்டாலின், இந்த ஐ.நா. மன்றத்தைஅமைத்திடும் ஏகாதிபத்தியவாதிகளின் நோக்கம் போர்களற்ற சமாதானம் இல்லை. இந்தக்கொள்ளைக்காரர்களுக்கு எப்போதும் போரின் மீதுதான் நம்பிக்கை. இவர்கள் செல்வாக்கு மண்டலங்களுக்காக போர் நடத்துவார்கள். ஐரோப்பிய மக்கள் கம்யூனிஸ்டுகளாகமாறிவிடக்கூடாது, அதனை உடனடியாக தடுக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள்போர்களை நடத்த மாட்டோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று ஸ்டாலினால்

சொல்ல முடியுமா? சொல்ல வேண்டுமா? அப்படிச் சொன்னால் என்ன விளைவு ஏற்பட்டிருக்கும்?

இந்த கேள்விகளுக்கு நாம் விடை தேட வேண்டும்.இந்தியாவில் பாராளுமன்றம் இருக்கிறது. இந்த பாராளுமன்றத்தின் மூலம் மக்களுக்கு எந்தநன்மையும் கிடைக்காது, மக்கள் மேலும் மேலும் ஒடுக்கப்படுவார்கள் என்ற உண்மைமார்க்சியவாதிகளுக்குத் தெரியும், ஆனால் மக்களுக்குத் தெரியுமா? மக்களுக்குத் தெரியாது.

கம்யூனிஸ்டுகள் அதனை பிரச்சாரத்தின் மூலம் மக்களுக்கு புரியவைக்க முடிந்ததா? இன்றுவரைபுரியவைக்க முடியவில்லை என்பது எதார்த்தம். இந்த சூழலை புரிந்துகொண்ட லெனின்இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு என்ற நூலில், பாராளுமன்றத்தின் மீதுநம்பிக்கையுள்ள மக்களிடத்தில் அதன் போலித் தனத்தை புரியவைக்க கம்யூனிஸ்டுகள் அந்தப்பாராளு மன்றத்திற்குள்ளே சென்று அதனை அம்பலப்படுத்தி நடைமுறையில் இந்தப்பாராளுமன்றத்தின் போலித்தனத்தை மக்கள் புரிந்துகொள்ளும்படி செய்ய வேண்டும் என்றுலெனின் வழிகாட்டினார். இவ்வாறு லெனினது வழிகாட்டுதலையே ஸ்டாலின் ஐ.நா. மன்றப்பிரச்சனையில் பின்பற்றினார். புறநிலை விதிகளை நாம்நாம் மாற்ற முடியாது, மாறாக புறநிலைவிதிகளை புரிந்துகொண்டு அதனை நமது தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் என்னசெய்ய வேண்டும் என்பதின் அடிப்படையில் செயல்பட்டு அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள

வேண்டும் என்ற பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே தோழர் ஸ்டாலின்செயல்பட்டார்.

ஏகாதிபத்தியவாதிகள் மக்களை ஏமாற்றும் தீய நோக்கத்திலிருந்தே ஐ.நா. மன்றத்தைஉருவாக்குகிறார்கள் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தால் ஐரோப்பிய மக்கள், ஸ்டாலினைநம்பியிருப்பார்களா? நிச்சயமாக ஸ்டாலினை நம்பியிருக்க மாட்டார்கள். மக்கள் நம்பவில்லை

என்றாலும் பரவாயில்லை என்று ஸ்டாலின் சொல்லியிருந்தால், ஏகாதிபத்தியவாதிகள் அதனைபயன்படுத்தி ஸ்டாலினையும், சோவியத்து அரசையும், கம்யூனிஸ்டு கட்சியையும் உலகமக்களிடமிருந்தே எளிதில் தனிமைப்படுத்தி இருப்பார்கள். வாய்ப்பு கிடைத்தால் சோவியத்தை தனிமைப்படுத்தி தாக்கி வீழ்த்தியிருப்பார்கள். மக்களின் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் புரியாமல் தன்மனப் போக்கில் முடிவெடுக்கும் அகநிலைவாதியல்ல ஸ்டாலின். அவர் ஒருஇயக்கவியல் பொருள்முதல்வாதி. ஆகவேதான் அவர் இயக்கவியல் பொருள்முதல்வாத, லெனினிய கண்ணோட்டத்திலிருந்து அந்தப் பிரச்சனையை அனுகினார்.

ஐ.நா.மன்றத்தில் சேரக்கூடாது என்ற செயல்தந்திர முடிவெடுத்து செயல்படுவதால் எவ்விதமானபயனும் இல்லை, மாறாக மக்களின் நம்பிக்கையை இழப்பது, ஏகாதிபத்தியவாதிகளின்தனிமைப்படுத்தும் சூழ்ச்சிக்கு இறையாவது, போன்ற பாதிப்புகளைத்தான் இந்த செயல்தந்திரம்

கொண்டுவரும் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருந்தார். ஆகவே ஐ.நா.வை புறக்கணிப்பது என்றசெயல்தந்திரத்தை ஸ்டாலின் எடுக்கவில்லை.இதற்கு மாறாகக் ஐ.நாவில் கலந்துகொள்வது என்ற செயல்தந்திரத்தால், ஏகாதிபத்தியவாதிகளின்தனிமைப்படுத்தப்படும் சதியை முறியடிக்க முடியும், மக்களின் நம்பிக்கையை இழக்க வேண்டியதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். ஐ.நா.வில் வீட்டோ அதிகாரம் கிடைப்பதன்மூலம் ஏகாதிபத்தியவாதிகளை கட்டுப்படுத்த முடியும், சர்வதேச பிரச்சனைகளில் சோசலிசகருத்துக்களை பிரச்சாரம் செய்ய முடியும். இதுபோன்ற நன்மைகள் கிடைக்கும் என்று அந்தசூழலை மதிப்பிட்டுத்தான் ஸ்டாலின் ஐ.நா. மன்றத்தில் பங்கெடுப்பது என்ற செயல்தந்திரமுடிவெடுத்து செயல்பட்டார். இது சூழ்நிலையை மதிப்பிட்டு எடுக்கப்பட்ட சமரசம்தான். இதுஅகநிலைவாத கண்ணோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட முடிவல்ல.சில வறட்டுவாதிகள் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் ஸ்டாலினது இந்த செயல்தந்திரத்தை துரோகம் என்கிறார்கள். இந்த ஸ்டாலினது முடிவின் மூலம் ஸ்டாலின் ஏகாதிபத்தியவாதிகளோடுகைகோர்த்துக் கொண்டார் என்கிறார்கள். அப்படியானால் ஸ்டாலின் ஏகாதிபத்தியவாதிகளோடுசேர்ந்து எந்த நாட்டு மக்களை சுரண்டினார், எந்த மக்களை ஒடுக்கினார், அதற்கு என்ன ஆதாரம்என்பதை முன்வைத்து இவர்கள் பேசுவதில்லை. ஏனென்றால் அதுபோன்ற மக்களுக்கு எதிரான

செயல்களிலும் ஸ்டாலின் ஈடுபடவில்லை. அப்படிப்பட்ட செயல்களில் ஸ்டாலின் ஈடுபட்டார்என்பதற்கு இவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.


சூழ்நிலைகளை மதிப்பிட்டு செயல்தந்திரம் வகுக்க வேண்டும் என்ற மார்க்சிய லெனினியசித்தாந்தத்தின் அடிப்படையிலேயே ஐ.நா மன்ற விவகாரத்திலும் சரி, மூன்றாம் அகிலத்தைகலைப்பதிலும் சரி ஸ்டாலின் செயல்பட்டார்.சோசலிசத்திற்கான போராட்ட சூழலுக்கு மாறாக உலகை ஆதிக்கம் செய்ய முன்வரும்பாசிசத்திற்கு எதிரான போரட்ட சூழலில் பாசிசத்தை எதிர்ப்பதும் சோசலிச சோவியத்து அரசைகாப்பதுதான் முதன்மையான பணி என்ற சூழலிலேயே அகிலத்தை கலைப்பதற்கு ஸ்டாலின்

உடன்பட்டார். பாசிசத்தை ஒழித்துவிட்டு சோவியத்து அரசையும் சோவியத்து கம்யூனிஸ்டுகட்சியையும் காப்பாற்றிவிட்டால் நாம் எப்போது வேண்டுமானாலும் சர்வதேச கம்யூனிசஅமைப்பை தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்ள முடியும் என்ற பார்வையிலிருந்தே அகிலத்தை கலைக்க ஸ்டாலின் முடிவு செய்தார். இவை அனைத்தும் புறச் சூழலின் அடிப்படையைபுரிந்துகொண்டுதான்,அதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும்என்று முடிவெடுப்பதே இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டம் ஆகும். இந்தஅடிப்படை கண்ணோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட விஞ்ஞான முடிவுகள்தான் ஸ்டாலினால்எடுக்கப்பட்ட செயல்தந்திர முடிவுகளாகும். ஆகவேதான் ஐ.நா. உருவாக்கத்தில் ஸ்டாலினது செயல்தந்திமானது வரலாற்றுப் பொருள்முதல்வாத கண்ணோட்ட வகைப்பட்டது என்கிறோம்.

இதுதான் வரலாற்று உண்மையாகும். இத்தகைய பொருள்முதல்வாத கண்ணோட்டத்தை உள்வாங்கி செயல்படுவதன் மூலமே நாம்வெற்றிபெற முடியும். மேலும் நடைமுறையில் தோல்வி கண்டாலும் அதனை உடனடியாக புரிந்துகொண்டு தவறுகளை களைந்து சரியான வழியில் முன்னேற முடியும். ஆகவேஇயக்கவியல், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை கற்றுத் தேர்வோம் எதிரிகளின் ஏமாற்றுக் கருத்துக்களை புரிந்துகொண்டு அதனை எதிர்த்துப் போராடி வெற்றியை நோக்கி முன்னேறுவோம். அதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோபோன்றவர்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்