சாதியும் சாதி ஒழிப்பும்

 சாதியும் வர்க்கமும்:

சமூக உற்பத்தி சக்தியும் உற்பத்தி உறவுகளும் சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது எனில் அதன்மேல் கட்டப்படும் அரசியல், கலை, பண்பாடு முதலியன அதன் மேற்கட்டுமானமாக இருக்கிறது. சமூகப் பொருளாதாரமும் அதன் உற்பத்தி உறவும் ஒரே நிலையில் இருக்கும் ஒரு தொழில்குழுவை ஒரு வர்க்கம் என வகைப்படுத்தலாம். வர்க்கம் என்பது சமூகத்தின் அடிக்கட்டுமானமாக இருக்கிறது

அப்படியானால் சாதி என்பது அடிக்கட்டுமானமா மேற்கட்டுமானமா? அகமண முறையைப் பின்பற்றுவதும், பிறப்பின் அடிப்படையில் இருப்பதும், சாதிகளுக்கிடையே படிநிலை இருப்பதும், உயர்வு-தாழ்வு தீண்டாமை முதலியன இருப்பதும் சாதியின் தனித்துவமான பண்புகள். சாதியின் இப்பண்புகள் சாதி என்பது சமூகத்தின் மேற்கட்டுமானமாக இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது

நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் சாதி என்பது முழுமையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக, ஒரு குறிப்பிட்ட வகுப்பாக இருந்து வந்தது. அத்தொழில்குழு என்பது ஒரு வகுப்பாகவும், ஒரு வர்க்கமாகவும் இருந்தாக வேண்டும். ஆகவே சாதி என்பது ஒரு அடிக்கட்டுமானமாகவும் இருந்து வந்தது அன்று

ஆனால் தொழில்துறை வளர்ச்சிக்குப் பிறகு ஒவ்வொரு சாதியும் ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவாக இருந்து வந்ததில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.  ஒவ்வொரு சாதியும் பெரும்பான்மையாக ஒரு குறிப்பிட்ட தொழில் குழுவிலிருந்து வந்த போதிலும் ஒவ்வொரு சாதிக்குள்ளும் வேறுபல தொழில் செய்வோரும் உருவாகி வருகின்றன. ஆகவே இன்று ஒவ்வொரு சாதியும் தன் சாதி குறிய தொழில் மட்டுமே புரிய வேண்டிய கட்டாயத்தில் இல்லை அதேபோல் தனக்குந்த பணியினை செய்துக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இன்று சாதியானது தனி வர்க்கமாக இருக்கவில்லை. ஒரே சாதிகுள்ளே வேறு சில வர்க்கங்களும் உண்டாகிவிட்டது.  அவை நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன. சாதியம் குறித்தச் சிந்தனைப் போக்கிலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் சாதிகள் என்பன இன்றும் தமிழ்ச் சமூகத்தில் ஓரளவு வலிமையுடன்தான் இருந்து வருகின்றன. அதற்குப் பல்வேறு காரணிகள் காரணமாக உள்ளன.

தொழிற்துறை வளர்ச்சியும் சாதியின் அழிவும்:

இந்தியாவிலும், தமிழகத்திலும் தொழிற்துறை வளர்ச்சி போதிய அளவு இல்லாததுதான் சாதியம் இருப்பதற்கான முதற்காரணி. இந்தியாவில் பணி செய்பவர்களில் (Work force) 2020ல் இருந்த சுமார் 50 கோடிப்பேரில் 47 கோடிப்பேர் அமைப்புச்சாரா பணிகளிலும், 3 கோடிப்பேர் மட்டுமே அமைப்பு சார்ந்த பணிகளிலும் இருந்துள்ளனர். இவைபோக மத்திய மாநில அரசுகள், பொதுத்துறைகள் போன்றவற்றில் 4.5 கோடி மக்கள் பணிபுரிகின்றனர். மொத்தப் பணிகளில் சுமார் 15% க்கும் குறைவானவர்களே இந்தியாவில் அமைப்பு சார்ந்த பணிகளில் (Organised or Formal) உள்ளனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சாரா பணிகளில் (unorganized or informal)தான் இருக்கின்றனர். ஆனால் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளில் 10-20% க்கும் குறைவானவர்களே அமைப்புச் சாரா பணிகளில் இருக்கின்றனர். 80% க்கும் அதிகமானவர்கள் அமைப்பு சார்ந்த பணிகளில்தான் இருக்கின்றனர். தமிழகத்திலும் அமைப்பு சார்ந்த பணிகளில் 80%க்கும் அதிகமானவர்கள் பணிபுரியும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

இந்தியாவில் 2018ஆம் ஆண்டில் கிராமப்புற மக்களில் 70% மக்களும், மொத்த மக்கள் தொகையில் 50% மக்களும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 2001ல் 49.2% மக்களும், 2011ல் 42.1% மக்களும் வேளாண்மையை நம்பி இருந்தனர். இன்றும் (2021) 40% க்கும் சற்று குறைவான மக்கள் வேளாண்மையை நம்பி இருப்பர். வளர்ந்த நாடுகளில் 10% க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பி உள்ளனர். சான்றாக அமெரிக்க மக்களில் 1.5%க்கும் குறைவான மக்களே வேளாண்மையை நம்பியுள்ளனர். தமிழகம் அந்த நிலையை அடையும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

அதுபோன்றே 2011ல் தமிழ்நாட்டில் நகரமயம் என்பது 48.5%, மகாராடிரத்தில் 45%, கேரளாவில் 47%, பஞ்சாபில் 37.5% இராசசுதானில் 25% ஆக இருந்துள்ளது. நகரமயம் என்பது 80% க்கும் அதிகமாக இருக்கும்பொழுதுதான் சாதியின் தாக்கம் குறையும். நகரமயத்தைவிட முதலில் கூறிய இரண்டிலும் முழு முன்னேற்றம் ஏற்படும் பொழுதுதான் சாதியின் தாக்கம் இல்லாமல் போகும்.

சாதியப்பெருமை:

சாதியப்பெருமைகளைப் பரப்புவதும் அதனை வளர்த்தெடுப்பதும், சாதியச் சங்கங்கள் உருவாக ஊக்குவிப்பதும் அவற்றிற்கு ஆதரவு வழங்குவதும் அவற்றை வளர்த்தெடுப்பதும் தமிழகத்தில் மிகநீண்டகாலமாக நடந்து வருகிறது. நாளடைவில் இந்த சாதிய சங்கங்கள் கட்சிகளாக மாறுவதும் அந்த கட்சிகளைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டு சீட்டுகள் வழங்குவதும் நடந்து வருகிறது. இவைபோக விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும், தேசியத் தலைவர்களுக்கும் தமிழறிஞர்களுக்கும் சாதிய வர்ணங்கள் பூசப்பட்டு அவர்கள் அனைவரையும் சாதியத்தலைவர்களாகக் கொண்டாடும் மனநிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான அரசு விழாக்களில் இந்தச் சாதியத் தலைவர்கள் கலந்துகொண்டு இந்த தேசியத் தலைவர்கள் அனைவரையும் சாதியத் தலைவர்களாகக் கொண்டாடும் சூழ்நிலை இருந்து வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் இவற்றை ஆதரிக்கின்றன.

இதுபோன்ற நிகழ்வுகள் சாதியப் பெருமிதங்களை வளர்த்தெடுப்பதற்கும் சாதியச் சங்கங்கள் வலிமைபெறுவதற்கும் காரணமாகி விடுகின்றன. இந்நடவடிக்கைகள் சாதியப் பெருமைகளை சாதியவெறிகளாக உருமாற்றி சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு போன்றவற்றை கொண்டு வருவதோடு அவற்றிற்கு இடையே சாதியத் தகராறுகளையும் சாதியச் சண்டைகளையும் கொண்டு வருகின்றன. ஆணவப் படுகொலைகளுக்கும் காரணமாகின்றன. இவற்றின் விளைவாக சாதிகளுக்கு இடையே இருக்க வேண்டிய நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன இல்லாது போகின்றன. அவற்றின் காரணமாக கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியனவும் இல்லாது போகின்றன. தேசியக் குடும்பநல ஆய்வின் (National Family Health Survey - NFHS-III, 2005-2006) படி, இந்திய அளவில் சாதிகளுக்கிடையே நடக்கும் கலப்புமணம் என்பது 11 விழுக்காடாக இருக்கிறது. கேரளாவில் சுமார் 20 விழுக்காடும் பஞ்சாபில் சுமார் 20 விழுக்காடும் மராட்டியத்தில் 17 விழுக்காடும் சாதிகளுக்கிடையே கலப்புமணம் இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் சாதிகளுக்கு இடையேயான கலப்பு மணம் என்பது 3 விழுக்காடு மட்டுமே நடந்து வருகிறது. இது வருத்தத்தையும் வியப்பையும் தருகிறது.

மேலே சொல்லப்பட்ட மூன்று மாநிலங்களைப்போலவே பலவகையிலும் வளர்ச்சியடைந்த மாநிலமாகவே தமிழ்நாடு இருக்கிறது. இருந்தபோதிலும் அந்த மூன்று மாநிலங்களைவிட மிகவும் குறைந்த அளவில் கலப்பு மணம் இருப்பதும் இந்திய சராசரியை விட மிகமிகக்குறைவாக இருப்பதும் பெருவியப்பைத் தருகிறது. இதற்கான காரணம் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டும். இராசசுதானில் நடக்கும் கலப்பு மணம் 3 விழுக்காடு. அதன் நகர்மயம் என்பது 2011ல் சுமார் 25% தான். தமிழகத்தைவிட 2.6 மடங்கு பரப்பும் அதிக மக்கள் தொகையும் கொண்டது இராசசுதான். ஆனாலும் அதன் மொத்த உற்பத்தி(GDP) என்பது தமிழக உற்பத்தியில் பாதிதான் இருக்கிறது. இருந்த போதிலும் இராசசுதான் அளவுதான் கலப்புமணம் தமிழகத்தில் இருக்கிறது. மேலும் கலப்பு மணம் பீகாரில் 6.14%, மத்தியபிரதேசத்தில் 4.39%, உத்திரபிரதேசத்தில் 11.33% இருப்பதும் இவை அனைத்தைவிடவும், இந்திய சராசரி அளவை விடவும் தமிழ்நாட்டில் குறைவாக இருப்பதும் ஆய்வுக்குரியது. தமிழகத்தில்தான் மிக அதிக அளவு சாதி ஒழிப்பு நடந்துள்ளது போன்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. ஆனால் அது மாயை என்பதை இந்தக் கலப்புமணம் குறித்தத் தரவுகள் உறுதி செய்கின்றன. சாதி ஒழிப்பு என்பது இங்கு சாதி வளர்ப்பு என்பதாகவே இருந்துள்ளதுபோல் தோன்றுகிறது.

சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கு இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஒற்றுமை சமத்துவம் பரசுபர நம்பிக்கை போன்றனவற்றை வளர்த்தெடுக்கவும் சாதிகளுக்கு இடையே ஏற்படும் பகைமை வெறுப்பு போன்றனவற்றை நீக்கவும் பாடுபடவேண்டும். அவற்றின் மூலம் மட்டுமே சாதிகளுக்கிடையே நல்லிணக்கம் சமத்துவம் பரசுபர நம்பிக்கை முதலியன ஏற்பட்டு, கலந்து உண்ணுதல் கலப்புமணம் முதலியன அதிகரிக்க வாய்ப்பு உருவாகும். சாதி ஒழிப்புப் போராளிகள் சாதிகளுக்கிடையே பகைமை வெறுப்பு முதலியன உருவாகாமல் தடுக்கப் பாடுபடவேண்டும். உழைக்கும் மக்களுகிடையிலேன ஒத்துழைப்பும் அவர்களின் பங்களிப்பும் சாதி பகைமைகளை குறைக்கவும் அவர்களின் நல்லினக்கணம் சாதிகடந்து உழைக்கும் மக்களாக ஒன்றினைந்து இந்த சாதி கட்சிகளை ஒதுக்கி தள்ளி தற்காலிக ஒற்றுமையை மேற்கொள்ள முடியும் நீண்ட போராட்ட பாதையில் இந்த சமுக மாற்றம் மூலமாக சாதியை கட்டிக் காக்கும் எல்லா காரணிகளுக்கும் முடிவு கட்டமுடியும்.

1500 வருடங்களுக்கும் மேலாக சாதியம் பார்ப்பனர்களுக்கு பேரளவான நன்மைகளை வழங்கி வந்துள்ளது. இதே பார்ப்பனியம் இன்று ஆளும் வர்க்க சித்தாந்தமாக சாதிகளைப் பாதுகாக்கிறது. ஆனால் மிகப்பெரும் சமூகத்தீமையாக இருந்து வரும் சாதிகள் அழித்தொழிக்கப் படவேண்டும். சாதிகளை அழித்தொழிக்க வேண்டுமானால் முழுமையான தொழிற்துறை வளர்ச்சியும், சாதியை கட்டிக் காக்கும் இந்த அமைப்பு முறையையும் வேரோடு சாய்க்க வேண்டும். (நன்றி மூலம் கணியன் ஈரோடு)

இந்திய சமுதாயத்தில் சாதியும்,தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்குமுதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் தரகுப் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில் தரகுப் பெருமுதலாளிகள் மற்றும் பெரும் நிலப்பிரபுக்களின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். நிலப்பிரபுத்துவத்திற்கு ஏகாதிபத்தியமும், தரகு முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும்.நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி முறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்தி உறவுகளை ஒழிப்பதால்,சாதிமுறைக்கும்தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும்.மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும்,தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை,பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல்,படிநிலை முறை,பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும்.இவ்வாறு நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை முற்றாக ஒழித்து,புதிய ஜனநாயக அரசியல்,பொருளாதாரம் மற்றும் பண்பாட்டை உருவாக்கி,சோசலிச சமுதாயத்தை நிறுவும் நிகழ்வுப் போக்கில் சாதி மற்றும் தீண்டாமைக்கு முடிவு கட்டுவது சாத்தியமான ஒன்றாகும்.
மக்களுக்கு,ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு இன்றி,அவர்களால் பரம்பரை வேலைப் பிரிவினையை ஒழித்து ஒரு புதிய வேலைப் பிரிவினையை உருவாக்க முடியாது.சாதிமுறை நிலைத்து  நிற்பதற்கு உத்திரவாதம் செய்யும் அகமணமுறை மற்றும் பிற அம்சங்களை ஒழித்து ஒரு புதிய  பண்பாட்டையும் உருவாக்க முடியாது.ஆகையால் சாதிமுறைத் துறையில் ஜனநாயகத் தீர்வு ஒரு மக்கள் ஜனநாயகத் குடியரசு என்பதேயாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்