மார்க்சியவாதிகளிடையேயான பணி-3
இத்தொடர் எழுதுவதன் நோக்கம் நம்மை நாம் மார்க்சிய லெனினிய வழியில் சீர்படுத்திக் கொள்ளதான்.
மேற்கத்திய நாடுகளின் சமூக வளர்ச்சி படிநிலைகளும்,இந்தியாவின் சமூக வளர்ச்சி படிநிலைகளும் ஒன்றல்ல.மேற்கத்திய நாடுகளின் சமூக கட்டமைப்பும்,இந்தியாவின் சமூக கட்டமைப்பும் ஒரே மாதிரிகிடையாது.இயக்கவியல் வரலாற்று பொருளியல் சமூக அறிவியலை உட்செறித்து இந்தியாவின் வரலாறு,இந்தியாவின் சமூக வளர்ச்சியின் படிநிலைகள்,இந்தியாவின் சமூக கட்டமைப்பு பற்றிய ஆய்வுகளை தொடக்க கால கம்யுனிஸ்டுகள் செய்யவில்லை.முழுமையான ஆய்வுகள் இன்றியும், ஐரோப்பிய நாடுகளின் மாதிரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் திட்டங்களை அப்படியே நேரடியாகப் பெயர்த்து இந்திய நாட்டின் புரட்சிக்கான திட்டங்களை, உத்திகளை வகுக்க முயன்றனர். அதே சமயத்தில் உருவான சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவுக்கான குறிப்பான திட்டத்தை பகுப்பாய்வு செய்து சரியான திசையில் முன்னேறி வெற்றியும் பெற்றது. பணக்கார வர்க்கங்களிலும், உயர் சாதிகளில் இருந்து உருவான படிப்பாளிகள் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் உயர் படிப்பிற்காக சென்றபொழுது மார்க்சிய தத்துவத்தால்,சோவியத் புரட்சியால் ஈர்க்கப்பட்டனர். காலனியாதிக்கத்தில் இருந்து இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும் என்பதில் ஈர்க்கப்பட்டு பின்பு அதற்காக மார்க்சிய தத்துவம் சரியான வழிகாட்டும் என்று மாறினர். ஆய்வு – நடைமுறை - பரிசீலனை - ஆய்வு - நடைமுறை என்ற சுழல் வட்டத்திற்கு மாறாக நடைமுறைக்கான கொள்கைகள், அதற்கான செயல்பாடுகளை மட்டும் மேற்கொண்டனர்.
தோழர் லெனின் தனது “என்ன செய்ய வேண்டும்” என்ற தனது நூலில் பக்கம் 47 -யில் “தொழிலாளிகளிடையே சமூக - ஜனநாயக வாத (கம்யூனிச) உணர்வு இருந்திருக்க முடியாது என்று சொன்னோம். அது வெளியிலிருந்துதான் அவர்களுக்கு கொண்டு வரப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கம் தனது சொந்த முயற்சிகள் மூலமாகத் தொழிற்சங்க உணர்வு மட்டுமே அதாவது, தொழிற்சங்கங்களில் ஒன்றுபடுவது, முதலாளிகளை எதிர்த்துப் போராடுவது, இன்றியமையாத தொழிலாளர் சட்டங்களை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்த முயல்வது, முதலியவற்றின் இன்றியமையாமை பற்றிய துணிபு மட்டும் வளர்த்துக் கொள்ள முடிகிறது என்று எல்லா நாடுகளின் வரலாறு புலப்படுத்துகிறது. ஆனால் சோசலிசத்தின் கொள்கை, மெய்யறிவு வகைப்பட்ட,வரலாறுவழிப்பட்ட,பொருளாதார வகைப்பட்ட கொள்கைகளிலிருந்து வளர்ந்ததாகும். சொத்துள்ள வர்க்கங்களின் பிரதிநிதிகள், அறிவுத்துறையினர் அவற்றை வகுத்து விளக்கினர். நவீன அறிவியல்பூர்வ சோசலிசத்தின் மூலவர்கள் மார்க்சும், எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளி பகுதியினரை சேர்ந்தவர்கள்" என்கிறார். மார்க்சும்,எங்கெல்சும் முதலாளி வர்க்கப் போக்கான படிப்பாளிப் பகுதினரைச் சேர்ந்தவர்களானாலும் அவர்கள் ஐரோப்பிய சமூகத்தின் சோசலிசத்தின் கொள்கை, மெய்யறிவு வகைப்பட்ட, வரலாறு வழிப்பட்ட,பொருண்மை வகைப்பட்ட கொள்கைகளி லிருந்து தொடங்கி திட்டத்தை வகுத்து தந்தனர்.ஆனால் இங்கு இந்தியாவில்,தமிழ்நாட்டில் இந்த முயற்சி குறைவாக இருந்தது என்பதுதான் உண்மை.
இதைத்தான் தோழர் மாவோ,“புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள் யார் நமது நண்பர்கள்என்பதாகும்.முந்தைய அனைத்து புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படை காரணம். உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்து கொள்ளத் தவறியது ஆகும். புரட்சிகர கட்சி ஒன்றே மக்கள் திரளுக்கு வழிகாட்டி.அந்த புரட்சிகர கட்சி அவர்களுக்குத் தவறானதாகவழிகாட்டும் போது எந்தப் புரட்சியும் எப்போதும் வெற்றி பெறுவதில்லை வெற்றி அடைய, மக்கள் திரளைத் தவறாக வழி நடத்தாமல், நமது உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கு,நமது உண்மையான நண்பர்களுடன் ஒன்றிணைவதற்கு நாம் அவசியம் கவனம் செலுத்துவது என்பதன் மூலம் நமது புரட்சியில் வெற்றியைத் திட்டவட்டமாகச் சாதிப்போம்.உண்மையான எதிரிகளிடமிருந்து நண்பர்களை பிரித்தறிய சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார நிலையும், புரட்சி குறித்து அவைகளின் மனப்பான்மைகளும் நாம் பொதுப் பகுப்பாய்வு செய்வது அவசியம்” 1926 மார்ச் மாதத்தில் இப்படியாக வழிவகுத்து சீனப்புரட்சியை முன்கொண்டு செல்ல வழிகாட்டுகின்றார். இப்படியானதொரு பகுப்பாய்வை 1925 யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் செய்தார்களா என்றால் இல்லை என்பதுதான் யதார்த்தம். அதனால்தான் இந்தியாவில் சுதந்திரப் போராட்ட காலத்திலும், அதன் பின்னரும் வீறுகொண்டு எழுந்த பெரும் மக்கள் திரள் எழுச்சிகள் முட்டு சந்தில் முட்டி நின்று திணறியது. புரட்சியை நோக்கி முன் நகரவில்லை.இந்திய சமூகம் பன்முகத்தன்மை வாய்ந்தது. வரலாறு, சமூக கட்டமைப்பு இந்தியா முழுவதும் அந்தந்த தேசிய இனங்கள், மொழிக் குடும்பங்கள், பிரதேச சூழ்நிலைக்கு தகுந்தவாறு வெவ்வேறாக இருந்ததை அங்கீகரித்து மார்க்சியர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களின் வரலாற்றை அதன் இயங்கியல் வளர்ச்சியை, அதன் குறிப்பான சமூக - அரசியல் - பொருளாதாரத்தை ஆய்வுகள் செய்யவில்லை. இந்த போதாமை இன்றுக்கும் வரையில் நீடிக்கிறது என்பதுதான் வருத்ததிற்கு உரியதாகும்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் தியாகங்களை கம்யூனிஸ்டுகள் செய்த பொழுதும், சுதந்திர போராட்டத்தில் முதன்மையான சக்தியாக,தலைமை தாங்கும் ஆற்றலாக தன்னை கம்யூனிஸ்ட் கட்சி வளர்த்துக் கொள்ள முடியவில்லை. ஆரம்பித்திலேயே லெனினுக்கும், எம்.என்.ராய்க்கும் இந்திய சுதந்திர போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் திட்டம், காங்கிரஸ் கட்சியை எப்படி அணுகுவது என்ற பார்வையில் முரண்பாடு இருந்தது. இந்த குழப்பம் தொடர்ந்து தலைமைக்கு வந்த அனைத்து கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் களுக்கும் இருந்தன. ஒன்று காங்கிரஸ் கட்சியை முற்றிலும் எதிரியாக பார்க்கும் கண்ணோட்டம் அல்லது அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு வாலாக, அதன் தொங்கு சதையாக மாறிப்போகும் கண்ணோட்டம் இருந்தது. அதனால்தான் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த உள்முரண்பாடுகளை கம்யூனிஸ்ட் கட்சியால் சரியாக கையாள முடியவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவனர்களின் ஒருவராக தோழர் முஜாபர் அகம்மது தனது நினைவாக சீன கம்யுனிஸ்ட் கட்சி தலைவர்கள் போல் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிதலைவர்களுக்கு போதிய கோட்பாட்டு புரிதல் இல்லை என்பதுடன், ஜனநாயகப் புரட்சியில் தொழிலாளர் வர்க்க தலைமை, சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவு, தேசிய இனங்கள் பற்றிய புரிதல், சர்வதேசியத்திற்கும் தேசியத்திற்கும் உறவு,முதலாளித்துவத்தின் பங்கு போன்றவைகளில் மிக குறைவான மார்க்சியப் புரிதல் மட்டுமல்ல, மார்க்சியம் அல்லாத புரிதலும், இயங்கவியலுக்கு எதிரான புரிதலும் இருந்தன என்று குறிப்பிடுகிறார். இன்றைய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அனைத்து பிளவுகளுக்கும் மேற்சொன்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை இந்த ஒரு நூற்றாண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றை பகுத்தாய்பவர்கள் யாராக இருப்பினும் சதாரணமாக புரிந்து கொள்ள முடியும்.
விரிவாக அடுத்த இதழிலும் தொடரும் தோழர்களே… சிபி.
No comments:
Post a Comment