அரசும் புரட்சியும் 1848 – 51ஆம் ஆண்டுகளின் அனுபவம். அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற வேண்டிய அவசியமும். பாகம்– 2ன் தொடர்ச்சி. பாகம் –3.

 அரசும் புரட்சியும் 1848 – 51ஆம் ஆண்டுகளின் அனுபவம். அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற வேண்டிய அவசியமும். பாகம்– 2ன் தொடர்ச்சி. பாகம் –3.

1852 ல் இப்பிரச்சனையை மார்க்ஸ் எடுத்துரைத்தது. மார்க்ஸ் 1852 மார்ச் 5 தேதியிட்டு வெய்டமையருக்கு எழுதிய கடிதத்திலிருந்து சில பகுதிகளை 1907 ல் மேரிங் சஞ்சிகையில் (மலர் 25, இதழ் 2, பக்கம் 164) வெளியிட்டார். இந்தக் கடித்த்தில்

பிறவற்றுடன் கூட சிறப்புக்குரிய பின்வரும் வாசகம் அடங்கியுள்ளதுஎன்னைப் பொறுத்தவரை, தற்போதைய சமுதாயத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ,அவற்றுக்கு இடையே போராட்டம் நடைபெறுவதையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேராது.எனக்கு நெடுங்காலம்முன்னதாகவே முதலாளித்துவ வரலாற்றியலாளர்கள் இந்தவர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியையும்,முதலாளித்துவப் பொருளியலாளர்கள் வர்க்கங்களுடைய பொருளாதார அமைப்பியலையும் விவரித்து இருந்தனர்.நான் செய்ததில் புதியது என்னவெனில் பின்வருவனவற்றை நிருபித்ததுதான்:

1) வர்க்கங்கள் இருப்பது,பொருளுற்பத்தி யின் வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக்கட்டங்களுடன் மட்டுமே இணைந்ததாகும்.

2) வர்க்கப் போராட்டம் கட்டாயமாய்ப் பாட்டாளி வர்க்கச்சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்கிறது.

3).இந்த சர்வாதிகாரம் எல்லா வர்க்கங்களும்ஒழிக்கப்படுவதற்கும்,வர்க்கமில்லாத சமுதாயத்திற்குமான இடைக்கால கட்டமே ஆகும்.

முதலாவதாக, தமது போதனைக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முன்னேறிய ஆழ்ந்த சிந்தனையாளர்களுடைய போதனை களுக்குமுள்ளபிரதான,அடிப்படை வேறுபாட்டையும்,இரண்டாவதாக அரசு பற்றிய தமதுபோதனையின் சாரப் பொருளையும் மார்க்ஸ் இச்சொற்களிலே தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து விடுகிறார்.

வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனையிலுள்ள பிரதான கூறாகுமென அடிக்கடி கூறப்பட்டும்எழுதப்பட்டும் வருகிறது.இது தவறு.இந்தத் தவறான கருத்தின் விளைவாய் மார்க்சியம் அடிக்கடி சந்தர்ப்பவாத வழியில் திரித்துப் புரட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்புடைய பாங்கிலே பொய்யாக்கப்படுகிறது. எப்படியென்றால், வர்க்கப்போராட்டத் தத்துவம் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல, மார்க்சுக்கு முன்னரே முதலாளித்துவ வர்க்கத்தாரால் தோற்றுவிக்கப்பட்டது. பொதுவாய்க் கூறுகையில் இது முதலாளித்துவ வர்க்கத்துக்கு ஏற்புடைய தத்துவமே. வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்போர் மார்க்சியவாதிகள் ஆகிவிடுவதில்லை; இன்னமும் அவர்கள் முதலாளித்துவச் சிந்தனை, முதலாளித்துவ அரசியல் இவற்றின் வரம்புகளுக்குள் நிற்போராகவே இருக்கக் கூடும். மார்க்சியத்தை வர்க்கப் போராட்டத் தத்துவத்திற்கு அப்பால் செல்லாது இருத்துவதானது, மார்க்சியத்தைக் குறுகலாக்கித்திரித்துப் புரட்டுவதும் முதலாளித்துவ வர்க்கத்தாருக்கு ஏற்றதாய்க்குறுக்குவதுமேஆகும். வர்க்கப் போராட்டத்தை அங்கீகரிப்பதோடு நிற்காமல் இதனைப் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகரத்துக்கான அங்கீகரிப்பாகவும் விரித்துச் செல்கிறவர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார். மார்க்சியவாதிக்கும்சாதாரண குட்டி (மற்றும் பெருமுதலாளித்துவ்வாதிக்கும் இடையிலுள்ள மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இதில்தான் அடங்கியிருக்கிறது. மார்க்சியத்தை மெய்யாகவே புரிந்து கொள்கிறாரா,அதை அங்கீகரிக்கிறாரா என்பதைச் சோதித்துப் பார்க்க உரைகல்லாய் அமைவது இதுவேஇந்தப் பிரச்சனையை ஐரோப்பிய வரலாறு ஒரு நடைமுறைப் பிரச்சனையாகத் தொழிலாளி வர்க்கத்தின் முன் நேருக்கு நேர் கொண்டுவந்தபோது, எல்லாச் சந்தர்ப்பவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் மட்டுமின்றி,எல்லா ‘’காவுத்ஸ்கிவாதிகளும் கூட’’(சீர்திருத்தவாத்த்துக்கும் மார்க்சியத் துக்கும் இடையே ஊசலாடுவோர்கள் இவர்கள்) பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிராகரிக்கும் கேடுகெட்ட அற்பவாதிகளாகவும் குட்டிமுதலாளித்துவ்வ ஜனநாயகவாதிகளாகவும் தம்மை நிருபித்துக் கொண்டதில் வியப்பில்லை. 1918 ஆகஸ்டில்,அதாவது இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியாகி நெடுங் காலத்துக்குப் பிற்பாடு வெளிவந்த காவுத்ஸ்கியின் பிரசுரமான பாட்டாளி வர்க்கச்சர்வாதிகாரம், மார்க்சியத்தைக் குட்டிமுதலாளித்துவ வழியில் திரித்துப் புரட்டுவதற்கும்,வஞ்சகமாய் அதைச் சொல்லளவில் அங்கீகரித்துவிட்டு செயலில் கைவிட்டுஓடும்கயமைக்கும் அப்பட்டமான தோர் எடுத்துக்காட்டு (பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலி காவுத்ஸ்கியும், பெத்ரொகிராது, மாஸ்கோ, 1918, என்ற லெனினது பிரசுரத்தைப் பார்க்கவும்).

இன்றையசந்தர்ப்பவாதம்அதன் பிரதான பிரதிநிதியான,முன்னாள் மார்க்சியவாதி காவுத்ஸ்கியின்வடிவில் மேலே தரப்பட்ட மேற்கோளில் முதலாளித்துவ நிலை குறித்து மார்க்ஸ் அளித்திடும் வரையறுப்புக்கு முழுக்க முழுக்கப் பொருந்துவதாகும்.ஏனெனில் இந்தச் சந்தர்ப்பவாதம் வர்க்கப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை முதலாளித்துவ உறவுகளின்எல்லைக்குள் கட்டுப்படுத்திக் கொள்கிறது. (இந்த எல்லைக்குள், இந்தக் கட்டுக் கோப்புக்குள், வர்க்கப் போராட்டத்தைக் ‘’கோட்பாட்டளவில்’’அங்கீகரிக்க,கல்வியறிவுடைய எந்தமிதவாதியும் மறுக்க மாட்டார்!) சந்தர்ப்பவாதமானது வர்க்கப் போராட்டத்துக்கான அங்கீகாரத்தை, தலையாய விவகாரத்துக்கு,அதாவது முதலாளித்துவத்திலிருந்துகம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய காலகட்டத்துக்கு,முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திஅதை அறவே அழித்திடும் காலகட்டத்துக்கு,விரித்துச் செல்வதில்லை.உண்மையில் இந்தக்காலகட்டம் தவிர்க்க முடியாதபடி வர்க்கப் போராட்டம் என்றுமில்லாத மூர்க்கத்துடன்,என்றுமில்லாத உக்கிர வடிவங்களில் நடைபெறும் காலகட்டமாகும். ஆகவே இந்தக் காலகட்டத்தில் தவிர்க்க முடியாதபடி அரசு ஒரு புதிய வழியில் ஜனநாயகமான (பாட்டாளி வர்க்கத்துக்கும் பொதுவில் சொத்தில்லாதோருக்கும்), ஒரு புதிய வழியில் சர்வாதிகாரமாய் அமைவதான (முதலாளி வர்க்கத்துக்கு எதிராய்) அரசாக இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல,தனியொரு வர்க்கத்தின் சர்வாதிகாரம் தேவைப்படுவது பொதுவில் ஒவ்வொரு வர்க்கச் சமுதாயத்துக்கும் மட்டுமல்ல,முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்திவிட்ட பாட்டாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல, முதலாளித்துவத்தை ‘’வர்க்கங்களில்லாத சமுதாயத்திலிருந்து’’ கம்யூனிசத்திலிருந்து பிரித்திடும் வரலாற்றுக் கட்டம் முழுமைக்கும் தேவைப்படுகிறது என்பதை உணர்வோர் மட்டுமே அரசு பற்றிய மார்க்சின் போதனையினதுசாரப் பொருளைக் கற்றுத் தேர்ந்தோர் ஆவர். முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை, ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றேதான்; வடிவம் எப்படி இருப்பினும் இந்த அரசுகள் எல்லாம், முடிவாய்ப் பார்க்குமிடத்து,தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரமே ஆகும்.முதலாளித்து வத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச் செல்வதற்குரிய இடைக்காலம் பலதரப்பட்ட அரசியல் வடிவங்களையும் மிகவும் ஏராளமாய்த்தோன்றவே செய்யும். ஆனால் சாராம்சம் தவிர்க்க முடியாதபடி ஒன்றாகவே இருக்கும்; பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரமாகவே இருக்கும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது

1.சமூகத்தில் வர்க்கங்கள் இருப்பதையோ வர்க்கங்களுக்கு இடையே போராட்டங்கள் நடக்கிறது என்பதையோ காரல் மார்க்ஸ் கண்டுபிடிக்கவில்லை.காரல் மார்க்சுக்கு முன்பே நீண்ட காலத்துக்கு முன்பே முதலாளித்துவ அறிவாளிகளால்கண்டுபிடிக் கப்பட்டதாகும்.

2.வர்க்கப் போராட்டங்களின் வரலாற்றை முதலாளித்துவ வரலாற்று ஆசிரியர்கள் விரிவாகவே மார்க்சுக்கு முன்பே விளக்கி இருந்தார்கள்.  

3. சமூகத்தில் பொருளுற்பத்தியில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆரம்ப காலங்களில் விவசாயமும் கைத்தொழில் கள் மட்டும் நிலவிய காலத்தில் விவசாய உழைப்பில் ஈடுபடுவோரும் அந்த நிலங்களுக்குச் சொந்தக்காரர்களான பண்ணையார்களும் கைத்தொழிலில் ஈடுபடும் நெசவாளர்கள்,தச்சர்கள்,கொல்லர்கள் போன்றவர்களும் சமூகத்தை ஆட்சி செய்யும் அரசர்கள் போர்வீர்ர்கள் போர்த்தளபதிகள் போன்றோர்கள் மட்டுமே இருந்தனர். அதற்குப் பின்பு சமுதாயத்தில் உற்பத்தியில் வளர்ச்சி கண்டு இயந்திரங்களைக் கொண்டு பொருள்களை உற்பத்தி செய்யும் நிலை உருவானபோது சமுதாயத்தில் புதியவகையான மனிதர்கள் அதாவது வர்க்கங்கள் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் போன்ற புதிய வர்க்கங்கள் தோன்றின.இவ்வாறு பொருள் உற்பத்தியின் வளர்ச்சியின் ஒருகுறிப்பிட்ட கட்டங்களில் புதிய புதிய வர்க்கங்கள் உருவாகின்றன என்றார் காரல்மார்க்ஸ்.

4.இவ்வாறு உருவாகின் வர்க்கங்களுக்கு இடையிலான பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாகவும்,இந்த ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் ஏழைகளை பணக்காரர்கள் சுரண்டுவதன் காரணமாகவும் இந்த வர்க்கங்களுக்கு இடையே போராட்டங்கள் தவிர்க்க முடியாதபடி ஏற்படுகிறது என்றும் இந்த ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தில் ஒழிக்கப்படும்வரை இந்தப் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும் என்றும்,ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்டு மனிதர் களுக்கு இடையே சமத்துவம் நிலைநாட்டப்படுவதை நோக்கி இந்த வர்க்கப் போராட்டங்கள் இட்டுச் செல்லும்என்றும் மார்க்ஸ் போதித்தார்.

5.இத்தகைய ஏற்றத்தாழ்வு இல்லாத அதாவது வர்க்கங்கள் இல்லாத சமத்துவ சமுதாயமாக மாறுவதற்கு இடைக்கட்டமாக பணக்கார்ர்களின் அதாவது முதலாளிகளின் ஆட்சி ஒழிக்கப்பட்டு ஏழைகளின் அதாவது உழைக்கும் மக்களின் நலன்களை பாதுகாக்கும்உழைப்பவர்களின்அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஆட்சிஉருவாகும் என்றார் காரல் மார்க்ஸ்.

6.அரசு பற்றி முதலாளித்துவ அரசியல் தலைவர்கள் மற்றும் முதலாளித்துவ அறிவாளிகளின் கருத்துக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சித் தலைவர்களின் கருத்துக்கும்மிகப் பெரிய வேறுபாடு உண்டு. முதன்மையாக முதலாளித்துவ கட்சித் தலைவர்களும்கம்யூனிஸ்டுகள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு மார்க்சின்போதனைகளை திருத்தி செயல்படும் திருத்தல்வாதிகளும் அரசு என்றால் அனைத்து மக்களுக்கும் பொதுவானது என்ற கருத்தை மக்களிடம் பரப்புகிறார்கள். ஆனால் காரல் மார்க்சைப் பின்பற்றும் மார்க்சியவாதிகள் ஏற்றத்தாழ்வான சமூகத்தில் அரசானது அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கவே முடியாது என்றும் அரசானது ஒன்று பணக்கார்ர்களின் நலன் காக்கும் அரசாக இருக்கும் அல்லது ஏழைகளின் நலன் காக்கும் அரசாக மட்டுமே இருக்கும் என்றும் அதாவது அரசுக்கு ஒரு வர்க்கத் தன்மை உண்டு என்று மார்க்ஸ் போதித்தார்.ஆகவே அரசு பற்றிய கருத்தில் முதலாளித்துவவாதிகளுக்கும் மார்க்சிய வாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைநாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

7. வர்க்கப் போராட்டமே மார்க்சின் போதனை என்று சிலர் கருதுகிறார்கள். இந்த கருத்து முதலாளித்துவ்வாதிகளின் கருத்தாகும். வர்க்கப் போராட்டத்தோடு உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்றும் அதற்காகப் போராட வேண்டும் என்பதுதான் காரல் மார்க்சின் கருத்தாகும். இந்தக் கருத்தை அரசு பற்றியகாரல் மார்க்சின் கொள்கையை கைவிட்டவர்கள் புறக்கணிப்பதும் இந்தக் கருத்தைதிரித்துப் புரட்டும் வேலையை கம்யூனிச வேடம் போடும் திருத்தல்வாதிகள்செய்கிறார்கள் என்றார் லெனின்.

8.முதலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை ஒழித்துக்கட்டி உழைக்கும் மக்களின் அதிகாரத்தை படைப்பதுதான் கம்யூனிஸ்டு களின் கடமையாகும்.இதற்கு மாறாக முதலாளிவர்க்கத்தை பாதுகாக்கும் அரசை (இன்றைய போலீஸ்,இராணுவம்,நீதிமன்றம்,சிறைச்சாலை மற்றும் அதிகார வர்க்க நிறுவனங்களை)தங்களின்கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்சி செய்வதை அதாவது நிலவுகின்ற அரசமைப்பை தகர்க்காமல் அதனை பாதுகாத்துக் கொண்டே சட்டமன்றம் போன்ற நிறுவனங்களில் பெரும்பான்மை பெற்று மந்திரிகளாக ஆகிவிட்டாலே உழைக்கும் மக்களின் அதிகாரத்தை உருவாக்கிவிட்டோம் என்றும் அந்த ஆட்சி கம்யூனிஸ்டுகளின் ஆட்சி என்பது மார்க்சின் போதனைகளை இளிவுபடுத்துவதாகும்.

9. வர்க்கப் போராட்ட தத்துவம் மார்க்சால் உருவாக்கப்பட்ட தத்துவம் அல்ல. அது முதலாளித்துவ்வாதிகளால் உருவாக்கப் பட்டதாகும்.வர்க்கப் போராட்டத் தத்துவம் முதலாளி வர்க்கங்களுக்கு ஏற்புடைய தத்துவம் ஆகும்.

10. வர்க்கப் போராட்டத்தை மட்டுமே அங்கீகரிப்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆகமாட்டார்கள். அதாவது தொழிலாளிகள் தங்களது கூலி உயர்வுக்காகவும், போனஸ் போன்ற பிரச்சனைகளுக்காகவும் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடி முதலாளி களிடமிருந்து சலுகைகளைப் பெறுவதற் காக நடத்தப்படும் வர்க்கப்போராட்டத்தை மட்டும் அங்கீகரிப்பவர்கள் மார்க்சியவாதி கள் ஆகமாட்டார்கள்.இவர்கள் உண்மையில் லெனினால் வரையறுக்கப்பட்ட பொருளாதாரவாதிகள் ஆவார்கள்.இத்தகையவர்கள் தொழிலாளர் வர்க்க அமைப்பிற்குள் இருக்கும் முதலாளித்துவ சிந்தனையாளர்களை ஆவார்கள்.

11.வர்க்கப் போராட்டத்தோடு குறுக்கிக் கொள்ளாமல் அதனை உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்தை நிறுவதற்காகத் தொடர்ந்து போராடி உழைக்கும் வர்க்கத்தின்அதிகாரத்தை நிறுவுபவர்தான் உண்மையான மார்க்சிய வாதியாக இருக்க முடியும் என்கிறார் மார்க்ஸ்

12.வர்க்கப் போராட்டத்தை மட்டும் அங்கீகரித்து உழைக்கும் மக்களின் அதிகாரத்திற்காகபோராட மறுப்பவர்கள் குட்டிமுதலாளித்துவ அரசியல்வாதி ஆவார்.வர்க்கப்போராட்டத்தை அங்கீகரிப்பதோடு கூடவே உழைக்கும் மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும் போராடுபவர்கள்தான் உண்மையான பாட்டாளி வர்க்க சிந்தனையாளரான மார்க்சியவாதி ஆவார்.

13. பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் வரலாற்றில் காரல் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்ஸ்டாலின்,மாவோ போன்ற தலைவர்கள் காரல் மார்க்சின் போதனைகளை தொடர்ந்து உறுதியாகப் பின்பற்றி செயல்பட்டார்கள்.அதே வேளையில் பாட்டாளி வர்க்க இயக்கத் திற்குள்ளேயே காவுத்ஸ்கி,டிராட்ஸ்கி,குருசேவ்,டெங்சியோ பிங் போன்றவர்கள் மார்க்சியக் கொள்கைகளைத் திரித்துப் புரட்டியும் மார்க்சியத்திற்கு எதிரான கொள்கைகளைப் பின்பற்றியும் உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்தனர் என்பது வரலாறு.ஆகவே ஒருவர் கம்யூனிச அமைப்குள்ளே இருக்கிறார்என்பதாலேயே அவரை மார்க்சியவாதி என்று கருதிவிடக் கூடாது. அவர்உண்மையிலேயே மார்க்சின் லெனினது போதனைகளை பின்பற்றி செயங்படுகிறாராஎன்பதை வைத்தே அவரை மார்க்சியவாதியா அல்லது மார்க்சியத்துக்கு எதிரானவராஎன்பதை மதிப்பீடு செய்ய வேண்டும்.அதற்கு கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் மார்க்ஸ் லெனின் போன்ற மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றுத் தேரவேண்டும்.

14. தற்காலத்தில் தன்னை மார்க்சியவாதி என்று சொல்லிக்கொண்டே காவுத்ஸ்கி, டிராட்ஸ்கி போன்றவர்களின் கொள்கை களையே மார்க்சியக் கொள்கை என்று பிரச்சாரம் செய்து கம்யூனிச அமைப்பு களிலுள்ள அணிகளையும் மக்களையும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.ஆகவே காவுத்ஸ்கி டிராட்ஸ்கி போன்றவர்களின் உழைக்கும் மக்களுக்கு எதிரான மார்க்சியத்துக்கு எதிரான கொள்கை களையும் அந்ததவறான கொள்கைகளை எதிர்த்துப் போராடி மார்க்ஸ் மற்றும் லெனினால் அம்பலப்படுத்தப்பட்ட கருத்துக்களையும் நாம் ஆழ்ந்து கற்க வேண்டும். அதன் அடிப்படையில் தற்கால காவுத்ஸ்கி மற்றும் டிராட்ஸ்கிய வாதிகளையும் எதிர்த்துப் போராடி முறியடித்து மக்களிடம் அவர்களின் மக்கள் விரோத கொள்கைகளைஅம்பலப்படுத்த வேண்டும்.

15.சந்தர்ப்பவாதமானது முதலாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை வீழ்த்திஉழைக்கும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்திற்காகப் போராட வேண்டும் என்ற கொள்கையை மறுக்கிறது. அந்தப் புரட்சிகரமான கொள்கைக்கு எதிராக சிந்தித்துசெயல்படுகிறது. அரசு பற்றிய கொள்கையில் இந்த சந்தர்ப்பவாத்த்தை நாம் புரிந்துகொண்டு இந்த சந்தர்ப்பவாத்த்தை எதிர்த்துப் போராடுவது நமது கடமையாகும்.

16.முதலாத்துவ சமூக அமைப்பிலிருந்து கம்யூனிச சமூகமாக மனித சமூகம் மாறுதல் அடையும் காலகட்டம் முழுவதும் உழைக்கும் மக்களுக்கு அரசியல் அதிகாரம்தேவைப்படுகிறது என்றார் காரல் மார்க்ஸ்

17.இத்தகைய அரசியல் அதிகாரத்தை உழைக்கும் பெற்று அத்தகைய ஆட்சி தொடர்ந்து நடத்துவதன் மூலமே இறுதியாக முதலாளித்துவ சமூகம் ஒழிக்கப்பட்டு கம்யூனிச சமூகம் உருவாகும். இத்தகைய உழைக்கும் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைஉருவாக்காமல் தொடர்ந்து முதலாளி வர்க்கங்களிடம் அரசியல் அதிகாரத்தை விட்டு வைப்பதன் மூலம் நாம் கம்யூனிச சமூகமாக இந்த சமூகத்தை மாற்ற முடியாது என்றே மார்க்ஸ் நமக்கு போதித்தார். இந்த போதனை மறுப்பவர்களும் அதனை திருத்திப் புரட்டுபவர்களும் ஒருபோதும் மார்க்சிய வாதிகள் ஆகமாட்டார்கள்.

ஆகவே அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை நாம் கற்று அதன் அடிப்படையில் நமது செயல்பாடுகளை வகுத்துக்கொண்டு சிறந்த மார்க்சிய வாதிகளாக நம்மை வளர்த்துக்கொள்வோம்.

தேன்மொழி

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்