நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 3. லெனின்.2 ஆம் பாகத்தின் தொடர்ச்சி.
மக்களை வறுமையிலிருந்து விடுவிக்க சமூக ஜனநாயகவாதிகளான தொழிலாளர் கள் எம்முறையைக் கையாள விரும்புகிறார்கள்? இதனை அறிந்துகொள்ள வேண்டுமானால், இன்றைய சமூக அமைப்பில் பெருந்திரளான மக்கள் வறுமையில் வாடுவதன் காரணத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
செல்வம் கொழிக்கும் பட்டணங்கள் பெருகுகின்றன;கண்ணைப் பறிக்கும் கடைகளும் வீடுகளும் கட்டப்படுகின்றன; இருப்புப் பாதைகள் அமைக்கப்படுகின்றன; தொழிலிலும் விவசாயத்திலும் எல்லாவிதமான நவீன இயந்திரங்களும் பல அபிவிருத்திகளும் புகுத்தப்படுகின்றன; ஆனால் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் உழலுகிறார்கள், தங்கள் குடும்பங்கள் உயிர் பிழைத்திருக்க வேண்டிய அளவு மட்டுமாவது உணவு பெற, தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாடுபடுகின்றனர். அது மட்டுமல்ல; மேலும் மேலும் அதிகப்படியான மக்கள் வேலை இல்லாதவர்களாக ஆகின்றனர். நகரங்களிலும் நாட்டுப்புறங்களிலும் எவ்விதமான வேலையும் பெற முடியாமல் திண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. நாட்டுப்புறங்களில் அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். நகரங்களில் ‘’ஓடுகாலிகள்’’ மற்றும் ‘’வாழவகையற்றோர்’’ அணிகளைப் பெருக்க வைக்கிறார்கள்; நகரங்களிலுள்ள சந்து பொந்துகளிலோ, மாஸ்கோவின் ஹித்ரோவ்சந்தையிலுள்ளவை {குறிப்பு – ஹித்ரோவ் சந்தை மாஸ்கோவிலிருந்து ஹித்ரோவ் சந்தையில் இரவு நேரத் தங்கும் விடுதிகள் இருந்தன. அங்கே குற்றவாளிகள் உட்பட பல்வேறு சமூக விரோத வகுப்பினர் வாழ்ந்தனர்.} போன்ற கோரமான சேரிகளிலும் நிலவரைகளிலுமோ விலங்குகளைப் போல அடைந்து கிடக்கிறார்கள்.
இது ஏன்செல்வமும் ஆடம்பரப் பொருட்களும் பெருகுகின்றன.ஆயினும் இச்செல்வங்களைஎல்லாம் தம் உழைப்பால் உண்டாக்கும் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும் இல்லாமையிலும் தவிக்கிறார்கள்பட்டினியால் விவசாயிகள் சாகிறார்கள்;தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அலைந்து திரிகிறார்கள்; இருந்தாலும் அயல் நாடுகளுக்கு பல லட்சக்கணக்கான பூடுகள் (குறிப்பு – பூடுகள் – 16.38 கிலோகிராம் எடை கொண்ட ரஷ்யஅளவு) தானியத்தை வியாபாரிகள் ரஷ்யாவிலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர்; தொழிற்சாலைகளும் ஆலைகளும் மூடப்படுகின்றன,ஏனென்றால் சாமான்களை விற்க வழியில்லை, அவற்றுக்குச் சந்தை இல்லை!
இதற்கெல்லாம் முதற் காரணம், மிகப் பெரும்பான்மையான நிலம், தொழிற்சாலைகள்,ஆலைகள், தொழிற் கூடங்கள்,இயந்திரங்கள்,கட்டங்கள்,கப்பல்கள் ஆகியவை சில பணக்காரர்களுக்குச் சொந்தமாக இருப்பதாகும்.இந்த நிலங்களிலும்,இந்த ஆலைகளிலும் தொழிற்கூடங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் தொழில் புரிகிறார்கள்;ஆனால் அவை சிலஆயிரம் அல்லது பத்தாயிரம் பணக்காரர்களுக்கும் நிலப்பிரபுக்குகளுக்கும் வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும் சொந்தமாக உள்ளன.கூலிக்காக,சம்பளத்துக்காக,ஒரு ரொட்டித் துண்டுக்காக மக்கள் அந்தப் பணக்காரர்களுக்கு வேலை செய்கின்றனர்.உற்பத்தியாவதில்தொழிலாளிகள் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான குறைந்தபட்சத் தேவையைத் தவிரமற்ற யாவையும் பணக்காரர்களுக்குப் போய்ச் சேருகிறது. அது அவர்களின் லாபம் ஆகும்;அவர்களுடைய ‘’வருமானம்’’ ஆகும். இயந்திரங்களைப் பயன்படுத்துவதாலும் உற்பத்தி முறைகளில் செய்யப்படும் அபிவிருத்திகளாலும் கிடைக்கின்ற பலன்கள் யாவும் நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் போய்ச் சேருகின்றன.அவர்கள் அளவிலாத செல்வத்தைக் குவிக்கின்றனர்.அதே சமயத்தில்,உழைப்பாளர்களுக்குக் கிடைப்பது அற்ப கூலியே. உழைப்பவர்கள் வேலைக்காக ஒன்றுதிரட்டப்படுகின்றனர். பெரிய பண்ணைகளிலும் பெரிய ஆலைகளிலும் பல நூறு, ஏன் சில சமயங்களில் பல ஆயிரம் தொழிலாளிகள் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். இவ்வாறு உழைப்பு ஒன்றுசேர்க்கப்படுவதாலும் வெவ்வேறு விதமான இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவதாலும் உழைப்பின் உற்பத்தி திறன் அதிகரிக்கிறது; முன்பு இயந்திரங்களின் உதவியில்லாமல் டஜன்கணக்கான தொழிலாளர்கள் தனித்தனியே உற்பத்தி செய்த்தை விட மிக அதிகமான அளவு ஒரு தொழிலாளி இன்று உற்பத்தி செய்கிறான். ஆனால் அதிக உற்பத்தி திறன்கொண்ட உழைப்பின் பலன் எல்லா உழைப்பாளிகளுக்கும் கிடைப்பதில்லை;அந்தப் பலன் ஒரு சில பெரும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் வியாபாரிகளுக்கும் தொழிலதிபர்களுக்கும்கிடைக்கிறது.
நிலப்பிரபுகளும்வியாபாரிகளும் மக்களுக்கு ‘’வேலை தருகிறார்கள்’’ என்றும் ஏழைகளின் வருவாய்க்கு ‘’வழி செய்கிறார்கள்’’என்றும் அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம்.எடுத்துக்காட்டாக,அண்டையிலுள்ள ஆலையோ அல்லது பக்கத்திலுள்ள எஸ்டேட்டோ வட்டார விவசாயிகளைப் ‘’பராமரிக்கிது’’ எனச் சொல்லப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால்,தொழிலாளர்கள் தங்கள் உழைப்பின் மூலம் தங்களைப் பராமரித்துக் கொள்வதோடு, வேலை செய்யாதவர்களான எல்லோரையும் பராமரிக்கின்றனர்.
நிலப்பிரபுவின்நிலத்திலோ,தொழிற்சாலை யிலோ,இருப்புப் பாதையிலோ வேலை செய்வதற்குரிய அனுமதிக்கு மாற்றாக,தொழிலாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்வது எல்லாவற்றையும் சொந்தக் காரனுக்கு இனாமாகக் கொடுத்து விடுகிறார்கள்;உயிர் வாழ்வதற்கான அற்ப கூலியை மட்டுமே பெற்றுக் கொள்கிறார்கள்.ஆகவே,உண்மையில்,நிலப்பிரபுகளும் வியாபாரிகளும் தொழிலாளிக்கு வேலை தருவதில்லை;மாறாக,தங்கள் உழைப்பின் பெரும் பகுதியை இனாமாக வழங்குவதன் மூலம் தொழிலாளர்களே தங்கள் உழைப்பால் எல்லோரையும் காப்பாற்று கின்றனர்.
மேலும், எல்லா நவீன அரசுகளிலும் மக்களின் வறுமைக்குக் காரணம் என்னவென்றால், சந்தைக்காக,விற்பனைக்காக எல்லாவகைப்பட்ட பொருட்களையும் தொழிலாளிகள் உற்பத்தி செய்வதேயாகும்.ஆலைச் சொந்தக்காரரும் கம்மியரும்,நிலப்பிரபுவும் பணக்கார விவசாயியும் விற்பனைக்காக, பணம் சம்பாதிப்பதற்காகப் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள், கால்நடைகளை வளர்க்கிறார்கள், தானியத்தை விதைத்து அறுவடை செய்கிறார்கள்.
இப்போது எங்கும் பணம் மிக முக்கியமான சக்தியாக மாறிவிட்டது. மனித உழைப்பால் உற்பத்தி செய்யப்படும் எல்லாப் பொருட்களும் பணத்திற்காகப் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. பணத்தைக் கொண்டு எதை வேண்டுமானாலும் வாங்கலாம். பணத்தைக் கொண்டு ஒரு மனிதனைக் கூட விலைக்கு வாங்கலாம், அதாவது பணம் படைத்த ஒருவன் பணம் இல்லாத ஒருவனைத் தனக்கு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தலாம்.
முன்பெல்லாம் நிலமே மிகவும் முக்கியமான சக்தியாக இருந்தது – அது பண்ணையடிமை முறையின் போது இருந்த நிலைமை; எவனுக்கு நிலம் உரிமையாக இருந்ததோ அவனுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருந்தன. ஆனால் இன்றைக்கு பணம், மூலதனம் மிக முக்கியமான சக்தியாக மாறிவிட்டது. பணத்தினால் எவ்வளவு நிலம் வேண்டுமோ அவ்வளவும் வாங்கலாம்.
நிலம் இருந்தாலும், பணம் இல்லாவிட்டால் அதிகமாக ஒன்றும் செய்துவிட முடியாது; கலப்பை அல்லது பிற கருவிகளை வாங்கவோ, கால்நடைகளை வாங்கவோ, ஆடைகளையும் வேறு பலவகை நகரப் பொருட்களையும் வாங்கவோ பணம் இல்லாமல் முடியாது; வரிகள் செலுத்துவதைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை. பணத்திற்காக அநேகமாக எல்லா நிலச் சொந்தக்காரர்களுமே தங்கள் நிலங்களை வங்கிகளில் அடகு வைத்துவிட்டார்கள்.பணம் பெறுவதற்காக அரசாங்கம் நாடு முழுவதிலும் உள்ள பணக்காரர்களிடமும் வங்கியதிபர்களிடமும் கடன் வாங்குகிறது,அந்தக் கடன்களுக்கு வட்டியாக பல கோடி ரூபிள்கள் (குறிப்பு – ரஷ்ய நாணயம்) ஒவ்வொரு வருடமும் கட்டுகிறது.
பணத்திற்காகவே எல்லோரும் இன்று ஒருவருடன் ஒருவர் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஒவ்வொருவரும் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்க முயல்கிறார்; ஒவ்வொருவரும் மற்றவரைப் போட்டியில் வெல்லவும் அதிகமாகப் பொருட்களை விற்கவும் போட்டியாக விலை குறைக்கவும் மற்றவரிடம் லாபம் தருகிற சந்தையையும் லாபம் கொடுக்கிற பேரத்தையும் சொல்லாமல் மறைக்கவும் முயல்கிறார்.பணத்துக்கான இந்தப் பொதுவான முட்டிமோதலில் கைவினைஞர் அல்லது சிறு விவசாயி போன்ற சின்ன ஆட்கள் எல்லோரையும் விடத் தொல்லையுறுகிறார்கள்;பெரிய பணம் படைத்த வியாபாரியாலோ,பணம் படைத்த விவசாயியாலோ போட்டியில் எப்பொழுதும் தோற்கடிக்கப்படுகிறார்கள்.அவர்களுக்கு எப்போதுமே சேமிப்பு இருப்பதில்லை; ஏதோ கைக்கும் வாய்க்கும் கிட்டியதை வைத்து அவர்கள் வாழ்கிறார்கள்; ஒவ்வொரு இடர்பாடு அல்லது விபத்து ஏற்படும் போது தங்கள் கடைசி உடமை வரை அடகு வைக்கவும் உழவுக் கால்நடைகளை அடி விலைக்கு விற்கவும் வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குலாக்கள் (குறிப்பு –குலாக்கள்ரஷ்யாவில்உழைப்பாளிகளை சம்பளத்துக்கு அமர்த்திக்கொண்டோ, வட்டிக்கு பணம் கடன் கொடுத்தோ,இவை போன்ற பிற வழிகளிலோ மற்றவர்களது உழைப்பைச் சுரண்டும் பணக்கார விவசாயிகள்)அல்லது கடுவட்டியாளரின் இறுக்கமான பிடிக்குள் அவர்கள் ஒருமுறை சிக்கிக்கொண்டால், அவ்வலையில் இருந்து தப்பி வருவது அபூர்வமே; பெரும்பாலான சமயங்களில் அவர்கள் நாசமடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பத்து, நூறு ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகளும் கைவினைஞர்களும் குடிசைகளைப் பூட்டிக் கொண்டு,தங்கள் கிராமச்சமூகத்திடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துண்டு நிலத்தை இலவசமாக ஒப்படைத்துவிட்டு, (குறிப்பு – ஒதுக்கப்பட்ட துண்டு நிலம் – 1861 இல் ரஷ்யாவில் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்ட பின் விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை இது குறிக்கிறது.தங்களது துண்டு நிலங்களை விற்பதற்கு விவசாயிகளுக்கு உரிமை இல்லை;ரஷ்யாவின் கணிசமான பகுதியில் இவை கிராமச் சமூகத்தின் ஆதீனத்தில் இருந்தன அதாவது சொந்தமாக இருந்தன.
அவ்வப்போது மறுபங்கீடு செய்வதன் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக இவை விநியோகிக்கப்பட்டு வந்தன.)கூலி ஆட்களாகவும் பண்ணை ஆட்களாகவும் தேர்ச்சி பெறாத தொழிலாளிகளாகவும் பாட்டாளிகளாகவும் மாறுகின்றனர்.ஆனால் பணத்திற்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தில் பணக்காரர்கள் மேலும் மேலும் அதிகம் பணம்படைத்தவர்களாக ஆகின்றனர். பணக்காரர்கள் வங்கிகளில் பல லட்சங்கள், பல கோடிகளாக ரூபிள்களைக் குவிக்கின்றனர்; வங்கியிலுள்ள தங்கள் பணத்தைக் கொண்டு மட்டுமல்லாமல் வங்கிகளில் போடப்படும் பிறர் பணத்தையும் பயன்படுத்தி லாபம் பெறுகின்றனர்.வங்கியிலோ அல்லது சேமிப்பு வங்கியிலோ ஒருசில பத்து அல்லது நூறு ரூபிள்களைப் போடும் சின்ன ஆட்கள் ஒரு ரூபிளுக்கு 3 அல்லது 4 கொபெக்குகள் வீதம் வட்டியாகப் பெறுகிறார்கள்.பணக்காரர்கள் இந்தச் சிறு தொகைகளைப் பல கோடிரூபிள்களாக ஒன்றிணைத்து தங்கள் கொள்வினை –கொடுப்பினையை விரிவாக்குகின்றனர்.
ஒரு ரூபிளுக்குப் பத்திலிருந்து இருபது கொபெக்குகள் வீதம் லாபம் பெறுகின்றனர்.
ஆகவேதான், மக்கள் வறுமையைத் தீர்த்துக் கட்டுவதற்கான ஒரே வழி, அரசு முழுவதும் இப்போது இருக்கும் நிலைமைகளைத் தலை முதல் கால் வரை மாற்றி, சோசலிச அமைப்பைநிலைநாட்டுவதே என்று சமூக –ஜனநாயகவாதிகளான தொழிலாளர்கள் கூறுகிறார்கள்; வேறு விதமாகச் சொல்ல வேண்டுமானால்பெரும் நிலச்சுவான்தார் களிடமிருந்து நிலத்தையும், தொழிற்சாலை முதலாளிகளிடமிருந்து தொழிற்சாலை களையும்ஆலைகளையும்,வங்கியதிபர்களிட மிருந்து பண மூலதனத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவர்களுடையதனியுடமையை ஒழித்து அதை அரசு மூழுவதிலுமுள்ள எல்லா உழைக்கும் மக்களுக்கும் மாற்றி வழங்க வேண்டும். இந்த வேலையைச் செய்து முடித்தால், மற்றவர்களின் உழைப்பில் வாழ்ந்து வரும் பணக்கார்ர்களால் தொழிலாளர்களின் உழைப்பு பயன்படுத்தப்பட மாட்டாது,ஆனால் தொழிலாளிகளும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளும் அதைப் பயன்படுத்துவார்கள்.அப்போது பொது உழைப்பின் பலனும் அனைத்து முன்னேற்றங்களாலும் இயந்திரங்களாலும் ஏற்படும் நன்மைகளும் எல்லா உழைப்பாளி களுக்கும் தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். அப்போது செல்வம் இன்னும் அதிகவேகத்தில் பெருகும். காரணம், முதலாளிகளுக்கு வேலை செய்த்தை விட மேலாகத் தமக்குத்தாமே தொழிலாளர்கள் வேலை செய்வர்; வேலை நாளின் நேரம் குறையும், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் உயரும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் அனைத்தும் பரிபூரணமாகமாறும்.
ஆனால் அரசு முழுவதிலும் இப்போது நிலவும் அமைப்பை மாற்றுவது என்பது எளிதானகாரியம் இல்லை. அதற்கு நிறைய முயற்சியும் நீண்ட விடாப்பிடியான போராட்டமும் தேவை.
எல்லாப் பணக்கார்ர்களும் எல்லா உடமையாளர்களும்எல்லா பூர்ஷ்வாக்களும் (குறிப்பு –பூர்ஷ்வாக்கள் – பூர்ஷ்வாக்கள் என்றால் சொத்துடையவன் என்று அர்த்தம்.
சொத்துடையவர்கள் அனைவரும் பூர்ஷ்வாக்கள் என்று அழைக்கப்படுவர். பெரியசொத்துகளுக்கு உடமையாளர் பெரிய பூர்ஷ்வா. சிறிய சொத்துகளுக்கு உடமையாளர்கள்குட்டிபூர்ஷ்வா. பூர்ஷ்வாக்கள், பாட்டாளிகள் என்ற சொற்களுக்கு முறையேசொத்துள்ளவர்கள், தொழிலாளர்கள் என்றும் பணக்கார்ர்கள்,ஏழைகள் என்றும் மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர்கள், கூலிக்காக மற்றவர்களுக்காக வேலை செய்பவர்கள் என்றும் அர்த்தம்) தங்கள் சக்தியெல்லாம் திரட்டி தங்கள் செல்வங்களைக் காக்க முயல்வர்.
அனைத்து பணக்கார வர்க்கத்தையும் பாதுகாக்கஅதிகாரிகளும் இராணுவத் தினரும் கிளர்ந்து எழுவர்; ஏனென்றால் அரசாங்கமே பணக்கார வர்க்கத்தின் கைக்குள் இருக்கிறது. பிறருடைய உழைப்பினால் வாழும் அனைவரையும் எதிர்த்துப் போராடத் தொழிலாளிகள் ஒன்றாய்த் திரளவேண்டும்;தொழிலாளிகள் தங்களுக்குள் ஒன்றுசேர்ந்து ஏழைகள் யாவரையும் ஒரேதொழிலாளி வர்க்கமாக, ஒரே பாட்டாளி வர்க்கமாக ஐக்கியப்படுத்த உதவ வேண்டும்.
தொழிலாளி வர்க்கத்துக்குப் போராட்டம் எளிதாக இருக்காது; ஆனால் அது நிச்சயமாகத் தொழிலாளிகளின் வெற்றியில்தான் முடிவு பெறும், ஏனென்றால் பூர்ஷ்வாக்கள்,அதாவது பிறருடைய உழைப்பால் வாழ்வோர் மக்கள் தொகையில் மிகக் குறைவான சிறுபான்மையினர் ஆவர். அதே பொழுதில் தொழிலாளி வர்க்கத்தினரோ, மிக மிகப் பெரும்பான்மையினர் ஆவர்.சொத்து உடையவர்களுக்குஎதிராகத்தொழிலாளர்கள் என்பதன் பொருள், ஆயிரக்கணக்கானவர் களுக்கு எதிராக கோடிக்கணக்கானவர்கள் என்பதாகும்.
இந்த மாபெரும் போராட்டத்திற்காக ரஷ்யாவிலுள்ள தொழிலாளிகள் ஏற்கனவே ஒரே சமூக –ஜனநாயகத் தொழிலாளர் கட்சியாக இணையத் தொடங்கியுள்ளனர். போலீசாரிடமிருந்து மறைந்து நின்று, இரகசியமாக ஒன்றுசேருவது என்பது கடினமானதாகும்; இருந்தபோதிலும் ஸ்தாபனம் வளர்ந்து மென்மேலும் பலமடைந்து வருகிறது. ரஷ்ய மக்கள் அரசியல் சுதந்திரத்தை வென்று அடைந்துவிடும் பொழுது, தொழிலாளி வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் பணியும் சோசலிச இலட்சியமும் அதிவிரைவாக ஜெர்மன் தொழிலாளிகள் மத்தியில் அவை முன்னேறி வருவதை விட விரைவாக – முன்னேற்றமடையும்.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
1.உலகில் வறுமையில் வாடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பல தத்துவவாதிகளும், அரசியல் தலைவர்களும்,பல அரசியல் கட்சிகளும் தோன்றி மக்களின் வறுமையை ஒழிப்போம் என்று சொல்லி செயல்பட்டார்கள், இப்போதும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் வறுமையை ஒழிப்பதாகச் சொல்லி மக்களை ஏமாற்றி சுயநலமாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.அவர்களில் பலர் மக்களின் வறுமையை ஒழிப்பதற்குப் பதில் மக்களின்வறுமையை மேலும் மேலும் அதிகரிக்கச்செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மாறாக சமூகஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படும் கம்யூனிஸ்டுகள் வறுமைக்கு காரணம்என்ன? என்பதையும் அதனை ஒழிப்பதற்கான வழி என்ன? என்பதையும் விளக்குவதோடு மட்டும் இல்லாமல் அதற்காக தன்னுடைய உயிரையும் கொடுத்துப் போராடுகிறார்கள்.அத்தகைய உண்மையான கம்யூனிஸ்டுகளின் வறுமையை ஒழிப்பதற்கான கொள்கை களை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
2.இன்றைய சமுதாயத்தில் ஒரு பக்கம் செல்வம் பெருகுகிறது. ஒரு சிலர் பெரிய மாடமாளிகையில் வாழ்கிறார்கள்.ஆரோக்கியமான சுவையான உணவுகளை உண்கிறார்கள்.இவ்வாறு சுகபோகமாக வாழ்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது.ஆனால் குடியிருக்க ஒரு கூறை விடு கூட இல்லாமல் ஒற்றை அரையில் கணவன் மணைவி குழந்தைகள் என்று நெருக்கடிக்குள் வாழ்ந்து வரும் ஏழைகளின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் உள்ளது.வேலை இல்லாமல் தகுந்தவருமானம் இல்லாமல் பல நேரங்கள் உணவு கிடைக்காமல் நோய்வாய்ப்பட்டு வாழும்ஏழைகள் பல கோடிப்பேர் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம்.இதனைநாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் அல்லவா.இதற்கான காரணத்தை மிகத்தெளிவாக முன்வைத்தவர்தான் காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆவார்கள்.அவர்கள் காரணத்தைச் சொன்னதோடு கூடவே இந்த வறுமையை ஒழிப்பதற்கான வழியையும் எடுத்துச் சொன்னார்கள்.அவர்களால் முன்வைக்கப்பட்ட போதனைகளை மார்க்சை பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இங்கே அரசியல்செய்பவர்களும் மார்க்சின் இந்த போதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களை அணிதிரட்டவில்லை. மாறாக அவர்களுக்கு ஓட்டுப்போட்டு சட்டமன்ற உறுப்பினராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராகவோ ஆக்க வேண்டும்என்றே மக்களிடம் பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களும் அவர்களை நம்பி மூன்று மாநிலங்களில் அவர்களுக்கு ஓட்டுப்போட்டு மாநில அரசாங்கங்களில் மந்திரிகளாகவும் ஆக்கினார்கள்.இந்த போலி கம்யூனிஸ்டுகளும் அந்த மாநிலங்களில்மந்திரிகளாக ஆகி பல ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள்.ஆனாலும் அந்த மாநிலங்களில் வறுமை ஒழியவில்லை. அங்கெல்லாம் இப்போதும் வறுமை நீடிக்கிறது.
3. உழைக்கும் மக்களின் வறுமைக்கு காரணம் என்ன? நிலம், தொழிற்சாலை, ஆலைகள்,இயந்திரங்கள்,கட்டிடங்கள்,போன்ற உற்பத்திச் சாதனங்கள் அனைத்தும் எவ்விதமான உழைப்பிலும் ஈடுபடாத முதலாளிகளுக்கும் சொத்துடமையாளர்களுக்கும் சொந்தமாக இருக்கிறது. இதுவே ஏழை உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுவதற்கான காரணம் ஆகும்.
4.உற்பத்தி சாதனங்களை உடமையாகக் கொண்ட முதலாளிகள் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்திக்கொண்டு அவர்கள் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்து கிடைக்கும் லாபத்தைக்கொண்டு முதலாளிகளின் சொத்துக்களை வளர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தொழிலாளிகளுக்கு அவர்கள் உயிர் வாழ்வதற்கு தேவையான அளவுக்குக் கூட முதலாளிகள் கூலி கொடுப்பதில்லை. அதன்காரணமாகவே உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.
5. நவீன இயந்திரங்கள் மூலம் உற்பத்தியை செய்வதன் மூலம் முதலாளிகள் தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்கிறார்கள்.இதனால் சமூகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகுகிறது. வேயில்லாத உழைக்கும் மக்கள் பிச்சையெடுத்து வாழும் நிலை உருவாகுகிறது. இதன் காரணமாகவே வறுமை மேலும் மேலும் அதிகமாகிறது. ஆகவே இந்த முதலாளித்துவ தனிவுடமை முறையை ஒழிக்காமல் சமூகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது என்று உண்மையான மார்க்சியலெனினியவாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
6.முதலாளிகள்தான் தொழிலாளர்களுக்கு வேலை தருகிறார்கள் என்றும் அதனால்தான் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைத்து தொழிலாளர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.இந்த தனிவுடமை முதலாளித்துவ சமூகத்தில்மேலோட்டமாகப் பார்க்கையில் இதுதான் உண்மை என்று நமக்குத் தோன்றுகிறது.ஆனால் உண்மையில் தொழிலாளர்கள்தான் தங்களது உழைப்பின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.அவர்களின் உழைப்பால் உருவாக்கப்படும் செல்வத்தில் பெரும்பகுதியை முதலாளிகளுக்கு தொழிலாளர்கள்தான்வழங்குகிறார்கள். தொழிலாளர்கள் உழைத்து இந்த பொருட்களை உருவாக்கவில்லை என்றால் எவ்விதமான உழைப்பிலும் ஈடுபடாத முதலாளிகளால் உயிர்வாழவும் முடியாது.அதாவது முதலாளிகள் உயிர் வாழ்வதற்கும் அவர்கள் சொத்துக்களை சேர்ப்பதற்கும் உழைப்பாளிகள்தான் உதவுகிறார்கள். முதலாளிகளுக்கு தொழிற்சாலை போன்ற எவ்வளவு சொத்துக்கள் இருந்தாலும் தொழிலாளர்களின் உழைப்பு இல்லாவிடில் அந்த சொத்துக்களால் எவ்விதமான பயனும் இல்லை.
7.முதலாளிகள் தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைத்த பலன்களில் பெரும்பகுதியை எடுத்துக்கொள்வதற்கு இந்த சமூக அரசியல் அமைப்புதான் காரணமாகும். இந்த சமூக அரசியல் அமைப்புக்கு மாறாக சோசலிச சமூக அமைப்பில் முதலாளிகளால் தொழிலாளர் களின் உழைப்பின் பலனை சுரண்ட முடியாது.
ஏனெனில் சோசலிச சமூக அமைப்பில் உற்பத்திச் சாதனங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர்களாக இந்த முதலாளிகள் இருக்க மாட்டார்கள் மாறாக உழைக்கும் மக்கள்தான் இதன் சொந்தக்காரர்களாக இருப்பார்கள்.சமூகத்திலுள்ள அனைவரும் தொழிலாளிகளாக மட்டுமே இருப்பார்கள். அங்கு உழைப்பின் பலனை உழைப்பில் ஈடுபட்ட அனைவரும் தமக்குள் பங்கிட்டுக் கொள்வார்கள். வறுமை ஒழிக்கப்படும் அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
8.இன்றைய நவீன சமூகத்தில் சந்தைக்காகவும் விற்பனைக்காகவும் பணம்சம்பாதிப்பதற்காகவும் பொருள்உற்பத்தி நடக்கிறது. இதன்காரணமாகவே சமூகத்தில்வறுமை உண்டாகுகிறது.
9.இன்றைய சமூகத்தில் பணம்தான் மிகப்பெரிய சக்தியாக மாறியுள்ளது. இந்தப் பணம்தான் சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கிறது. இந்தப் பணத்தின் துணை கொண்டே இந்தப் பணத்துக்குச்சொந்தக்காரர்கள் பணமில்லாதஏழைகளை ஒடுக்குகிறார்கள், ஏழைகளை அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள். மேலும் ஏழைகளை மேலும் மேலும் ஏழைகளாகவே வைத்துக் கொண்டு முதலாளிகள் சுகபோகிகளாக வாழ்கிறார்கள்.
10.பணம் படைத்த செல்வந்தர்களின் நலன்களுக்காகவே மக்களின் ஓட்டுகளைப் பெற்று சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாக ஆனவர்களும், மந்திரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத போலீஸ் உட்பட அரசு அதிகாரிகளும் இருக்கிறார்கள். சமூகத்தில் அரசியல் அதிகாரம் படைத்த இந்த அரசு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற முறையிலான அரசாங்க உறுப்பினர்களின் உதவிகளைப் பெற்று உழைக்கும் மக்களை சுரண்டுவதற்கான உரிமைகளை இந்த முதலாளிகள் பெறுகிறார்கள்.இந்த முதலாளிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடினால் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்தில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை பாராளுமன்றவாதிகள் போடுகிறார்கள்,அரசு அதிகாரிகளோ களத்தில் இறங்கி தொழிலாளர்களை நேரடியாக தாக்குகிறார்கள்.போராடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.நடைமுறையில் இந்த முதலாளிகளை பாதுகாக்கும் பாராளுமன்ற அரசியல் அமைப்பை கலைத்து மக்களுக்கு உண்மையிலேயே நலன் பயக்கும் அரசியல் அமைப்பை உருவாக்காமல் உழைக்கும் மக்களின் பிரச்சனையான வறுமையை ஒழிக்க முடியாது. ஆகவே வறுமையை ஒழிப்பதற்காக நிலவுகின்ற அரசமைக் குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற போராட்டங்களை நடத்திக் கொண்டே உழைக்கும் மக்களுக்கான அரசமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தை உருவாக்கி செயல்பட வேண்டும்.இவ்வாறு இரண்டுவகையான போராட்டங்களை நடத்தாமல் இந்த சமூகப் பொருளாதார அரசமைப்புக்குள்ளேயே நடத்த வேண்டிய போராட்டங்களை மட்டும் அதாவது பாராளுமன்ற வகையான போராட்டங்களை மட்டுமே நாம் நடத்திக்கொண்டு இருந்தால் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சமூகத்தில் வறுமையை ஒழிக்க முடியாது.
11.பணம் சம்பாதிப்பதற்காகவே நாம் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டுபோராடுகிறோம்.இதன் பயனாக நண்பர்கள் மத்தியிலும் கூட போட்டி பொறாமை ஏற்பட்டு நட்பு கூட பகையாக மாறுகிறது.எனினும் இந்தப் போட்டில் பணம் படைத்த செல்வந்தர்களே பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள். இந்த உண்மையை பணம் இல்லாத ஏழைகளும்,நடுத்தர மக்களும் உணர வேண்டும். ஆகவே பசமில்லா ஏழைகளும் சிறிதளவு பணம் உள்ள நடுத்தர மக்களும் ஒன்று சேர்ந்து இந்த முதலாளித்துவ சமூக அரசியல் அமைப்பை ஒழிக்க வேண்டும். இதற்குமாறாக சோசலிச சமூக அரசியல் அமைப்பை உருவாக்க நாம் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்.
12.தற்போது இயந்திரங்களை நவீனப் படுத்துவதன் மூலம் ஒரு பக்கம் உற்பத்தி எளிமையாக்கப்பட்டு உற்பத்தி பெருகுகிறது,மறு பக்கம் தொழிலாளர்கள் பலர் வேலையிலிருந்து விரட்டியடிக்கப் படுகின்றனர். இதற்கு மாறாக சோசலிச சமூக அரசமைப்பில் இயந்திரங்கள் நவீனப்படுத்தப்படும் போது தொழிலாளர் களின் வேலை நேரம் குறைக்கப்படும் அதே வேளையில் அனைத்து தொழிலாளர் களுக்கும் வேலை உத்தரவாதம் செய்யப்படும்.தொழிலாளர்கள் அனைவருக் கும் வருமானம் கிடைக்கும். தொழிலாளர்களின் ஓய்வு நேரம் கூடும்.தொழிலாளர்கள் சமூகத்தை மேலும் முன்னேற்றுவதற்கான பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்காக இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்துவதற்கு ஊக்கப்படுத்தப் படுவார்கள்.இன்றைய சமூக அரசியல் அமைப்பிற்கும் சோசலிச சமூக அரசியல் அமைப்பிற்கும் இடையிலான வேறுபாடுகளை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்13.உண்மையில் உழைக்கும் மக்களின் வறுமையை ஒழிப்பதற்கு தடையாக உள்ள இந்தபாராளுமன்ற சட்டமன்ற அரசமைப்பை தூக்கியெறிந்துவிட்டு உழைக்கும் மக்களின்நலன்காக்கும் அரசமைப்பை உருவாக்குவது எப்படி என்ற கேள்வி நம்முன் உள்ளது.இந்தக் கேள்விக்கு சரியான விடை காண்பது நமது கடமையாகும்.
14.இன்றைய பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி முறையில் சட்டமன்ற,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மந்திரிகளுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் அதிகாரம் இருக்கிறது. சட்டத்தை இவர்களைத் தவிர வேறுயாரும் கையில் எடுக்கக்கூடாது.
இதன் மூலம் உழைக்கும் மக்களுக்கு இந்த அரசமைப்பில் எவ்விதமான அதிகாரமும் கிடையாது. ஆகவே மக்கள் குரலே மகேசன் குரல் என்பது போல மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடிய அரசமைப்பு நமக்குத் தேவை.உழைக்கும் மக்களின் பிரதிநிதிகளுக்கே அனைத்து அரசியல் அதிகாரமும் வேண்டும். சட்டத்தை இயற்றுபவர்களே அதனை நிறைவேற்றவும் வேண்டும்.
15.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்துகொண்டு மக்களுக்கு எதிரான சட்டங்களைப் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த மக்கள் விரோத செயலை கண்டிக்கவோ, தண்டிக்கவோ மக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இத்தகைய அரசியல் அமைப்பிற்கும் இதற்குமுன்பு இருந்த மன்னராட்சி முறைக்கும் அடிப்படையில் வேறுபாடு இல்லை.
மன்னராட்சியில் மக்கள் அரசனிடம் கோரிக்கை வைப்பார்கள். அரசன் விரும்பினால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவான் அவனுக்கு விருப்பம் இல்லை என்றால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அதுபோலவே இப்போதும் நவீன மன்னர்களான சட்டமன்ற, பாராளுமன்ற, மந்திரிகள், அரசு அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள். இந்த நவீன மன்னர்கள் விரும்பினால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள், அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றால் கோரிக்கையை நிறைவேற்ற மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் பதவிக்கு வந்துவிட்டால் இவர்களை ஐந்து ஆண்டுகள் மக்களால் எதுவும் செய்துவிட முடியாது.
ஆகவே நாம் அமைக்க விரும்பும் உழைக்கும் மக்களுக்கான அரசமைப்பில் அரசியல் அதிகாரம் அனைத்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு மட்டுமேஇருக்க வேண்டும். மக்கள் பணியாற்ற பொரியாளர்கள் மருத்துவர்கள் போன்றவர்கள் இந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு கட்டுப்பட்டு மக்கள் பிரதிநிதிகளால் வேலைக்குசம்பளத்துக்காக அமர்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டும்.மக்களால்தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அவர்களை ஒரு வினாடிகூட பதவியில் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. அவர்களின் பதவிகளை பறிக்கும் முழு அதிகாரமும் உழைக்கும் மக்களுக்கே இருக்க வேண்டும்.
ஆகவே மக்களால் தேர்ந்தெடுக்கப்படவும் தவறு நடந்தால் மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும் என்ற வகையிலான அரசமைப்பைஉருவாக்க உழைக்கும் மக்கள் பாடுபட வேண்டும்.மேலும் உழைக்கும் மக்களின்அரசமைப்பு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது பற்றி உழைக்கும் மக்கள்சிந்தித்து அதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.அதன் அடிப்படையில் உழைக்கும் மக்களுக்கான அரசமைப்பை உருவாக்குவதற்கான தெளிவான திட்டத்தையும் செயல்தந்திரத் தையும் உருவாக்கி மக்களிடம் கொண்டு சென்று மக்களின் ஆதரவைப் பெற்று மக்களை அணிதிரட்டிப் பாடுபட வேண்டும்.
தேன்மொழி
No comments:
Post a Comment