தோழர் லெனின் மறைந்து 99 ஆண்டுகள் கடந்தோடிவிட்டது இருந்தும் அவரின் பணி இந்த மனித சமூகம் இருக்கும் வரை மக்களின் நினைவில் நீங்காமல் இருக்கும். அவரை பற்றிய ஒரு கட்டுரையே இவை.
உலக மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் லெனினுடைய சவ அடக்கம் இப்படித்தான் நடைபெற்றது. உலகமே எழுந்து நின்று அவருக்கு இறுதி விடைகொடுத்து அனுப்பியது. லெனினுக்கு முன்னரும் சரி, அவருக்குப் பின்னரும் சரி, எந்தத் தலைவருக்கும் இந்த மரியாதை கிடைக்கவில்லை. எந்த நாட்டுத் தலைவராக இருந்தாலும் அவருடைய மரணம் அந்த நாட்டு மக்களை மட்டுமே பாதிக்கும். ஆனால் லெனினுடைய மரணம் உலகையே குலுக்கியது. சோவியத் ரசியாவின் தலைவருக்காக உலகமே ஏன் அழ வேண்டும்? அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?லெனினை கொண்டாடுவதேன்?
இவை அனைத்தும் லெனினுடைய தலைமையில் நடந்தது. இதன் மூலம் தன்னுடைய நாட்டில் வறுமையை ஒழித்துக் கட்டினார். மற்ற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களின் கவனம் சோவியத் ரசியாவை நோக்கித் திரும்பியது. லெனினுடைய வழியைப் பின்பற்றினால் மட்டுமே தங்களின் வறுமை ஒழியும் என்று அவர்கள் நம்பினர். தங்களின் நல்வாழ்விற்காக போராடத் தயாராக இருந்த உலகத் தொழிலாளர்களுக்கு லெனின் சரியான வழி காட்டினார். ஆனால் ரசிய மக்களுக்குக் கிடைத்த வெற்றி உலகத்திலுள்ள அனைவருக்கும் கிடைப்பதற்கு முன்னரே அவர் மரணமடைந்து விட்டார்.மார்க்சியத்தின் சாரமான மனிதர்கள் வாழ்வதற்கு உணவு, உடை, இருப்பிடம் முதலிய ஏராளமான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு தேவையும் ஒவ்வொரு பொருளின் மூலமே நிறைவேறுகின்றது. இயற்கையயோடு போராடித்தான் மனிதன் அந்தப் பொருட்களை உருவாக்க வேண்டியுள்ளது. இதையே உழைப்பு என்கிறோம். மனிதர்கள் உழைப்பதனால்தான் செல்வம் உண்டாகின்றது. ஆனால் அந்த செல்வத்தை ஒரு சிலர் மட்டுமே சுருட்டிக்கொள்கின்றனர். உழைப்பாளிகளுக்கோ கூலியாக சொற்ப பணமே கொடுக்கப்படுகிறது. இதுவே வறுமைக்குக் காரணம். உழைக்கும் மக்கள் இதை புரிந்து கொண்டு எதிர்த்துப் போராடினால், அவர்களை ஒடுக்குவதற்காக போலீசு, இராணுவம், சிறைச்சாலை, சட்டம் போன்றவை பணக்காரர்கள் உருவாக்கி வைத்துள்ளர். இதுவே அரசு எனப்படுகிறது. தற்போதுள்ள அரசு பணக்காரர்களுக் கானது. வறுமையில் வாடும் மக்களைச் சுரண்டுவதே அதன் நோக்கம்.
போராட்டமே வாழ்க்கையாக
லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல வாழ்க்கைக்கான காரணத்தை விளக்கினார். அதை ஒரு புரட்சியின் மூலம் மாற்றும் சக்தி தொழிலாளர்களுக்கு மட்டுமே உண்டு என்றார். இக்கூட்டங்கள் அனைத்தும் இரகசியமாகவே நடந்தன. ஏனெனில் வெளிப்படையாக கூட்டம் நடத்தினால் ஜாரின் போலீசு அனைவரையும் சிறையில் தள்ளிவிடும்.1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது. சைபீரியாவிற்கு அனுப்புவதும் மரண தண்டனை நிறைவேற்றுவதும் ஒன்றுதான். ஏனென்றால் சைபீரியா என்பது ஒரு பனிபிரதேசம். நிலம் எப்போதும் பனியால் மூடியிருக்கும். எந்நேரமும் பனி பெய்யும். புயல் வீசும். கடும் குளிர் ஆளை சாகடிக்கும். ரசிய அரசு புரட்சியாளர்களை சைபீரியாவிற்கு அனுப்பி விடும். அங்கே அவர்கள் குளிரில் விறைத்து இறந்து போவார்கள். ஆனால் சைபீரியக் குளிரை லெனின் தோற்கடித்தார்.
சைபீரியாவில் கிடைத்த ஓய்வைப் பயன்படுத்தி அவர் ஏராளமான புத்தகங்கள் எழுதினார். அவை ரசியாவில் புரட்சியை எப்படி நடத்துவது என விளக்கும் புத்தகங்கள். மக்களைத் திரட்டாமல் புரட்சி சாத்தியமில்லை. தனது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல ஒரு பத்திரிக்கை அவசியம் என்ற முடிவுக்கு வந்தார். அதனை ரசியாவிற்குள் இருந்து கொண்டு நடத்த முடியாது. அரசு அதை அனுமதிக்காது. ஆகவே வெளிநாட்டில் இருந்து ஒரு பத்திரிக்கை யை வெளியிட முடிவு செய்தார். பத்திரிக்கையின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியையும் உருவாக்கத் தீர்மானித்தார். ஏனெனில் கட்டுக்கோப்பான கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் புரட்சியை வழி நடத்தமுடியாது.
1899-இல் லெனின் விடுதலை செய்யப்பட்டார். விரைவில் தான் முன்னரே தீட்டியிருந்த திட்டத்தின்படி ஜெர்மனிக்குத் தப்பிச் சென்றார். இஸ்கரா என்ற முதல் கம்யூனிச பத்திரிகை வெளிவந்தது.
லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்தனர் தொழிலாளர்கள். லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.
அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது. தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..
முதல் புரட்சியும் தோல்வியும்
1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர் கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோ கிராடுக்கு விரைந்து வந்தார். இருந்தும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப் படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.
1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையா டப்பட்டனர். சுட்டுக் கொல்லப் பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினு டைய குடும்பமும் சித்திரவதைக்கு உள்ளா னது. இந்தத் தாக்குதல்கள் கம்யூனிஸ்ட்க் கட்சியைக் கலைக்கும்படி சிலர் கூறினர். இந்தக் கோழைக்களுக்கு லெனின் சரியான பதிலடி கொடுத்தார். புரட்சியில் தொழிலாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்றும், கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமேஅதற்கு வழிகாட்ட முடியும் என்றும் சான்றுகளுடன் நிரூபித்தார். தொழிலாளர்களின் மனக்கலக்கத்தைப் போக்கினார். மீண்டும் அவர்களை அணிதிரட்டினார்.
இதே நேரத்தில் ஏகாதிபத்திய நாடுகள் உலகப்போருக்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தன. உலகை ஏற்கெனவே கொள்ளையடித்துக் கொண்டிருந்த பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு ஒருபுறமும், புதிதாக கொள்ளையடிக்கப் புறப்பட்ட ஜெர்மனி முதலான நாடுகள் மறுபுறமாக 1914-ஆம் வருடம் போரில் ஈடுபட்டன. இதுவே முதல் உலகப் போரானது. இதில் ரசியா, பிரிட்டனை ஆதரித்து ஜெர்மனிக்கு எதிராகப் போரில் குதித்தது.
லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக் குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள். தொழிலாளர் களுக்கு இதில் நன்மை ஏதுமில்லை. மேலும் அதற்கான போரில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் வீணாக உயிரை இழக்க நேரிடும். இதற்கு பதிலாகத் தங்களை இதுவரை சுரண்டிக் கொழுத்துள்ள சொந்த நாட்டு முதலாளி களுடன் போரிட்டால், தொழிலாளர் வாழ்வில் விடியல் பிறக்கும் எல்லா நாட்டுத் தொழிலாளர்களும் ஒரே மாதிரிதான் சுரண்டப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் கைகோர்த்து ஒன்றுபட வேண்டும். புரட்சி செய்ய வேண்டும் என்று லெனின் கூறினர்.
ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித் தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டை யிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளி களோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.
ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. ஜாரின் அதிகாரத்தை முதலாளிகளும், பண்ணையார்களும் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். பணக்காரர்கள் ஏழைக்களைச் சுரண்டுவதையே இவர்கள் ஆதரிப்பார்கள். பிற நாடுகளைக் கொள்ளையடிக்க போரைத் தொடர்ந்து நடத்துவார்கள். இவர்களை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும். சோசலிசம் ஒன்றுதான் தீர்வு. தொடர்ந்து முன்னேறுங்கள் என்று அறைகூவினார்.
லெனினுடைய வார்த்தைகளை நம்பிய தொழிலாளர்கள் சிறுபான்மையினராகவே இருந்தனர். பெரும்பாலானவர்கள் முதலாளிகளுடைய நாடாளுமன்றத்தின் மீது நம்பிக்கையுடன் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை பொய்த்துப் போனது. புதிய அரசு போரில் உழைக்கும் மக்கள் வீணாக சாவதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. ஏழைகள் பட்டினியால் மாண்டனர். பணக்காரர்கள் தேசத்தின் செல்வத்தை உறிஞ்சிக் கொழுத்தனர். நாடாளுமன்றத்தில் அடிதடியும் ரகளையும் தான் நடந்தது. மக்கள் அதன் மீது நம்பிக்கை இழந்தனர். லெனினுடைய கருத்துக்களே சரியானவை என ஏற்கத் தொடங்கினர்.
மக்களை ஒடுக்குவதற்காக புதியஅடக்குமுறைச் சட்டங்கள் இயற்றப்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. லெனினைக் கொலை செய்யும்படி படைகளுக்கு கட்டளையிடப்பட்டது. மீண்டும் ஒரு முறை லெனின் தலைமறைவாக செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இந்தமுறை அவர் பெத்ரோகிராடை விட்டு வெகுதூரம் செல்லவில்லை. எப்படியும் புரட்சி வெடிக்கும் என்று நம்பினார். அதனால் பெத்ரோகிடின் அருகிலேயே தங்கினார்.
மக்களின் கோரிக்கைகளான போர் நிறுத்தம், உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம் போன்ற வற்றை கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே செயல்படுத்த முடியும் என மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கினர். ரசியாவெங்கும் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டது. புரட்சிக்கான காலகட்டம் நெருங்கிவிட்டது. என லெனின் உணர்ந்து கொண்டார். உடனடியாக தொழிலாளர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும் கட்சி அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் அவர் கூறியதைக் கட்சியின் மையக் குழு ஏற்றுக் கொண்டது.
1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது. அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.
அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங் களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமை யகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.
ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமேநாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழ உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சரியாக ஒருமாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப் படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.
மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சி முறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி முறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர்கள்.
தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் லாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருக்கும் திறமைக் கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக் கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலை யில்லா திண்டாட்டம் மறைந்தது.நாட்டின் எதிர்காலம் உழைக்கும் மக்கள் கையில்.நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப் பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமை களின் வளரச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழுவிடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்து போக விரும்பவில்லை. லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார்.
தொழிற்சாலை உற்பத்தி, விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது. அப்போதுதான் அந்தக் கொடுமை நடந்தது. ஒரு இளம் குழந்தையைக் குத்திக் குதற 22 கழுகுகள் பாய்ந்தன. சோவியத் யூனியன் மீது 21 பணக்காரநாடுகள் படையெடுத்தன.
விரைவில் தலைநகரை கைப்பற்றி லெனினைக் கொன்றுவிட திட்டம் தீட்டினர், எதிரிகள். அமெரிக்காவும், மற்ற ஏகாதிபத்தியங்களும் ரசியாவை பங்கு போட்டுத் கொள்வதைப் பற்றி பகிரங்கமாக பேரங்கள் நடத்திக் கொண்டு இருந்தன. உலகின் முதல் சோசலிச நாடு அழிந்து விடுமோ என்ற அச்சம் உலக மக்களைக் கவ்விக்கொண்டது.
இந்த அபாயகரமான சூழலில் லெனினுடைய முழக்கம் கணீரென எழுந்தது. சோசலிச தாய்நாடு ஆபத்தில் இருக்கிறது. தொழிலாளர்களே, விவசாயிகளே நாட்டைப் பாதுகாக்க படையில் சேருங்கள்.
எதிரிகள் வெற்றி பெற்றால் சோசலிசப் புரட்சி அளித்திருந்த உரிமைகள்அனைத்தும் பறிபோகும் என்று ரசிய உழைக்கும் மக்கள் புரிந்துக் கொண்டனர். அவர்கள் மீண்டும் பழையபடி வறுமையில் வாட விரும்பவில்லை. தங்களின் விடுதலையைப் பாதுகாக்க உழைக்கும் மக்களின் படையில் சேர்ந்தனர். அது செம்படை என்று அழைக்கப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் படையில் சேர்ந்தனர்.
உக்கிரமான போர் தொடங்கியது. செம்படையை விட எதிரிகளிடம் பெரிய படை இருந்தது. நவீனமான ஆயுதங்கள் இருந்தன. ஏகாதிபத்தியங்கள் போரில் வெற்றி பெற பணத்தை வாரி இறைத்தன. எதிரிகள் டாங்குகள், பெரிய பீரங்கிகள், ஏவுகணைகள், இயந்திரத் தூப்பாக்கிகள், போர்விமானங்கள் போர்க்கப்பல்கள் முதலியவற்றைக் கொண்டு தாக்கினர். செம்படையிடமோ பழங்காலத்து துப்பாக்கிகளும் கத்திகளும் தான் இருந்தன. ஆனால் அவர்கள் மன உறுதியுடனும், வீரத்துடனும் போரிட்டனர். அந்த மன உறுதியை மக்களுக்கு ஊட்டியவர் தோழர் லெனின்.
லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப் படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப் பட்டனர்.
ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்தப் பின் அரகங்த்தை விட்டு வெளியேறி வந்தார். திடீரென துப்பாக்கி சத்தம் பேரிடி போல் ஒலித்தது. கணநேரம் தான், மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்ட துரோகியை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைத்தான் மிகமோசகமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதறவில்லை. உண்மையான வீரனுக்குரிய துணிவோடு தானே நடந்து சென்று காரில் உட்கார்ந்தார். கார் மருத்துவமனைக்கு பறந்தது.
அவருடைய உடல்நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.ஆனால் அறுவையின் போது உயிர் போய்விட்டால்? மருத்துவர்கள் பயந்தார்கள். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர் களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டது.
போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும் தொழிற்சாலைகள் தோன்றின. புதிய நகரங்கள் எழுந்தன. உற்பத்தி பல மடங்கு பெருகியது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. பட்டினி, வறுமை என்பவை பழைய விசியங்களாகி விட்டன. ஏழைகளே இல்லாத ஒரே நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.
இந்த நேரத்தில்தான் அந்த பேரிடி இறங்கியது. லெனின் கடுமையாக நோய்வாய்ப்பட்டார் படுத்த படுக்கை ஆனார். ஓய்வறியாத உழைப்பே இதற்கு காரணம். அவர் எதைப் பற்றியும் சிந்திக்கக் கூடாது, வேலை செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர். ஆனால் அவரால் அப்படி இருக்க முடியவில்லை. தான் இதுவரை செய்த வேலையை இனி யார் செய்வார் எனக் கவலைப்படத் தொடங்கினார்.
ஆனால் அவர் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. லெனினுடைய நெருங்கிய தோழரான ஸ்டாலின் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். லெனினுடைய திட்டங்களை முறையாக அமல்படுத்தினார். லெனினைப் போலவே உழைக்கும் மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்தார். விரைவிலேயே உலகின் முதல் வளர்ச்சி அடைந்த நாடாக சோவியத் யூனியனை மாற்றினார்.
1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் லெனின் மரணம் அடைந்தார். அவருடைய உடல் முதல்முறையாக ஓய்வு கொண்டது. இறுதியாக அவரது உடலைக் காண பல இலட்சம் மக்கள் திரண்டனர். உலக நாடுகளின் தொழிலாளர்களும் ஏராளமாக வந்தனர்.
லெனின் மறையவில்லை அவரின் கொள்கையால் செயலால் நம்முடன் உள்ளார்.
No comments:
Post a Comment