இலக்கு 79 இணைய இதழ் தலையங்கம்

 தோழர்களே,

செவ்வணக்கம். இதுவரை இலக்கு இணைய இதழ்களில் நாங்கள் பேசியதையும் (எழுதியதின் அடிப்படையில்) இடதுசாரிகள், புரட்சிபேசும் பல்வேறு பிரிவினருடன் முற்போக்கு பேசும் பலரின் நிலைபாடுகளையும் முழுமையாக கவனித்தில் கொண்டே இந்த இதழ் தயாரிக்கப்படுகிறது. இவர்களின் கண்ணோட்டம் என்பது மார்க்சிய வகைப்பட்டதுதானா என்பதனை நீங்களே சரி பார்க்க மார்க்சிய கண்ணோட்டம் கொண்டு தாங்கள் வளர்ந்து தெளிவடைய கேட்டுக் கொள்கிறோம்.

“இன்றைய சமுதாயம் மாறாத கல் உருவம் அன்று மாற்றத்திற்கு உரிய உயிர் அமைப்பே. அது இடைவிடாமல் மாறிக்கொண்டிருக்கிறது”. (மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்னு பக்கம் 29) மற்றும், “முதலாளித்துவ பொருள் உற்பத்தியின் வளர்ச்சியால் மட்டுமன்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலைமையினாலும் அவதிப்படுகிறோம் நவீன கால தீமைகளோடு கூடவே காலத்துக்கு ஒவ்வாத சமூக அரசியல் முறைகளை தவிர்க்க முடியாதபடி உடன்கொணரும் பழமைப்பட்ட உற்பத்தி முறைகளின் முனைப்பொழிந்த மீத மிச்சங்களிலிருந்து மரபுரிமையாய் வந்த கேடுகளின் முழு வரிசையும் நம்மை வருத்துகிறது வாழ்பவர் வாழ்பவற்றால் மட்டும் இன்றி மாண்டவற்றாலும் அவதிப்படுகிறோம். மாண்டவன் வாழ்பவனை ஆட்டி வைக்கிறான்”. (மூலதனம் மேல் காணும் நூல் பக்கம் 26).

இந்த வாக்கியத்தில் மார்க்ஸ் என்ற சமூக விஞ்ஞானி மனித சமூகம் தோன்றியதிலிருந்து ஒவ்வொரு அசைவிலும் அவைமாறியும் வளர்ந்தும் முன்னேறிக் கொண்டுள்ளதை விளக்கியுள்ளார். இதனை புரிந்துக் கொள்ள மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞான அறிவும் மார்க்சியம் லெனினியமாக வளர்ந்த காலகட்டத்தின் அதன் தத்துவ அரசியல் பொருளாதார நிலைமைகளை அறிந்துக் கொள்ளும் அறிவு வளர்ச்சியும் மார்க்சியவாதிகளுக்கு அவசியம் அன்றோ?

நம் வர்க்க சமூகத்தில் சிலர் சில பிரச்சினகளை மட்டுமே முதன்மைபடுத்தி வர்க்க சமூகத்தின் முதன்மையான நோக்கம் சுரண்டலில்தான் ஒளிந்துள்ளது என்பதனை மூடிமறைக்க செய்கின்றனர். அதன் தன்மைகள் சில மாறுபட்ட சமூக வளர்ச்சியே!

சிலவகையான எதிர்நிலைகளை முதன்மைபடுத்தி சமூக மாற்றத்தை புரிந்துக் கொள்ளாமல் மாறாநிலையில் பேசிக் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக கடவுள் மறுப்பு பேசுவோரும் கடவுளை ஏற்கும் ஆன்மீகவாதிகளும் மாறாநிலைவாதி களாகவே உள்ளனர்.

இயற்கையை எதிர்த்த போராட்டத்தில் மனிதனின் இயலாநிலையில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தோன்றிய பல்வேறு கற்பனை கற்பிதங்கள் அந்த சமூக சூழலிற்கானவையே. இன்றைய சமூகத்தில் அவை பொறுத்தமற்றவை அவைகளின் நேரடி பயன்பாடு என்பது அறியாமையின் வெளிப்பாடே அதற்கு சமுக விஞ்ஞான அறிவு வேண்டும். அவை இன்றி அறியாமையில் அன்றைய சமூகத்தை அப்படியே பிரதிபலிக்க நினைக்கின்றனர். இன்றைய வளர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் புதியவகையில் பழைய கடவுள்களை புதுபிக்கனர். அவை சிலருக்கு நல்ல பணம் கொழிக்கும் தொழில். நீங்கள் கணக்கிட்டால் இந்த கணேஷ் பூஜையின் பின் ஒளிந்துள்ள பல கோடி வணிபம் மற்றும் அரசியல் விளையாட்டுகள். அதேபோல் கடவுளை எதிர்பதன் பெயரில் காலதிற்கும் களத்திற்கும் அப்பாற்பட்ட கடவுளை எதிர்பதன் பெயரில் அதேபணியை செய்கின்றனர். கடவுளின் தோற்றம் அதன் தேவை அதன் இன்றைய இருப்பு என்ன என்பதனை அறியாத பகுத்தறிவாதிகள். கடவுள் இல்லை என்றுக் கூறிக் கொண்டு அதனை உயிர்பிப்பதில் பங்காற்றுகின்றனர் என்பேன். இந்த இருபிரிவினரும் சுரண்டும் வர்க்கத்தின் சுரண்டலை தவறியும் பேசுவதில்லை. ஒருபிரிவினர் கடவுள் காப்பாற்றுபவராகவும் மற்றொருபிரிவினர் கடவுளை எதிர்ப்பின் பெயரில் பகுத்தறிவாதம் பேசினாலும் சமுக பிரச்சினையை மூடிமறைத்து வருகின்றனர்.

மக்களின் ஏற்றதாழ்வும் ஏழ்மையும், பசி, பட்டினியும் இன்னும் பல்வேறு கொடுமைகளுக்கு அந்த கடவுளோ அறியாமையோ காரணம் அல்ல! வாழும் கடவுள்களான அரசும் அதன் பரிவாரங்கள்தான் என்பதனை மூடிமறைத்து கடவுளுக்கு பின் அணி திரட்டுவோரும் கடவுள் எதிர்போரும் தாங்கள் கைகோர்த்து கொள்ளுமிடம், இந்த அரசில் அங்கம் வைப்பதும் சுகபோகமாக வாழவும் இந்த அமைப்பை கட்டிக்காக்க விளைவதும் அவர்களுக்கு இந்த அரசமைப்புதான் வாழவழிவகை செய்வதால் இந்த அமைப்பு மாறாமல் இருக்க முயலுகின்றனர். தாங்கள் வாழவழியமைத்துக் கொடுத்துள்ள அமைப்புமுறைக்கு நன்றி சொல்லிக் கொள்கின்றனர் . ஆக இவர்களின் பணியை கவனித்தில் கொள்ளுங்கள். வர்க்க சமூகத்தில் வர்க்கம் சார எழுத்தும் பேச்சும் செயலும் எவையுமே இல்லை! நம் சமூகத்தில் இடதுசாரி என்பவர்கள் எந்தவகையான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்பதிலிருந்தே அவர்களின் வர்க்க நலன் புரிந்துக் கொள்ள முடியும்!

இங்குள்ள பலரிடம் காணப்படும் மார்க்சியம் அல்லாத போக்குகளையும், அவர்கள் மார்க்சியத்திலிருந்து விலகிச் செல்வதையும் புரிந்துக் கொள்ள, அவர்களின் செயல்பாடுகள் நமக்கு பிரதிபலிக்கின்றன.

எந்த ஒரு பொருளிலும் இரு எதிர்மறைகளுக்கிடையான முரண்பாடு நிலவும். முரண்பாடு இல்லாத பொருள் ஏதும் இல்லை கட்சிக்குள்ளும் இரு பாதைகள் கருத்துகள் சித்தாந்தம் இடையே முரண்பாடு நிலவுகிறது குறிப்பிட்டமுரண்பாட்டின் போராட்டத்திலும் அது தீர்வு காணப்படும் விதத்திலும் தான் கட்சியின் வாழ்வும் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட முரண்பாடு முடிவு பெற்றதும் வேறொரு முரண்பாடு எழுகிறது எனவே முரண்பாடும் அவற்றுக்கிடையே ஒற்றுமையும் போராட்டமும் எப்போதும் நிலவும் இது இல்லாவிட்டால் கட்சியின் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும். இதன் பொருள் நாமே செயற்கையாக முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.

விமர்சிக்கும் முறையானது விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய நோயாளியை கொல்வதாக இருக்கக்கூடாது. விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைந்தெறிய போராட வேண்டும் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தவறு செய்யும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவி செய்வதே முதன்மையானது..

மார்க்சிய லெனின்யத்திற்கும், வலது சந்தர்ப்பவாததிற்க்கும் இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல பாராளுமன்ற பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும், ஆனால் அனைத்துவகையான அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணிவேராக உள்ள தற்போதைய பொருளாதார அரசியல் அமைப்பை மாற்ற முடியாது. வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடை அரசும் தூக்கியெறியப்படும் ஒரு புதிய பொருளாதார, அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் என்கின்றது மா-லெ-யம், “வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.

ரசிய புரட்சியை நாம் மீண்டும் பேசுவது அங்கே நடந்தேறிய சமூக மாற்றமானது அங்கிருந்த ஒடுக்குமுறை ஏற்றதாழ்வு இன்றுள்ள பல பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. ஆம் உழைக்கும் மக்கள் தங்களின் உண்மையான வாழ்க்கை வாழ்ந்தனர்.

இன்று தமிழகத்தில் புரட்சிக்கான ஒரு கட்சி இல்லாத நிலையில் பல குழுக்கள் தாங்கள் மட்டும் புரட்சிக்கானவர்கள் என்று வலம் வருகின்றனர். ஆனால் அவர்களை பீடித்துள்ள குறுங்குழுவாத நோய் விடுபடாத வரை அவர்கள் வளர்வது சாத்தியமே இல்லை.

புரட்சிகர தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை -லெனின்

  • இன்றைய உலகமயமாதல் சூழலிலே மார்க்சியம் தனது ஒட்டுமொத்த வளர்ச்சியின் ஊடே ஏகாதிபத்தியம் தோற்றுவித்து நிற்கும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்து முன்னேறிச் செல்லும் வரலாற்றுக் கடமையை எதிர்நோக்கி நிற்கின்றது. நமது நாட்டில் அக்கடமைக்குரிய பங்கையும் பங்களிப்பையும் வழங்க வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும் உண்டு.

தோழமையுடன் இலக்கு இணைய ஆசிரியர்களின் சார்பாக ...   

இலக்கு 79 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பிடி எப் வடிவில் பெற்றுக் கொள்ளுங்கள்


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்