"மார்க்சியம் சமுதாயத்தையும் சமுதாயம் செயல்படும் உலகையும் ஆராய்கிறது. எல்லா உண்மைகளையும் அறிந்து விட்டதாக மார்க்சியம் பீற்றிக கொள்ளவுமில்லை. இன்னும் அறிந்து கொள்வதற்கு ஏராளமான உண்மைகள் உள்ளன. இவற்றை அறிய முடியாதவை அல்ல; அதியப்படாதவை" என்று மார்க்சியம் கூறுகிறது. "மாறுவதுஒன்றேமாறாதது" என்று மாற்றத்தைத் தனது விதியாக ஏற்றுக் கொள்கிறது. இது இதற்கு முந்திய வரலாற்றைக் கண்ணை மூடிக்கொண்டு மறுத்ததுமில்லை; ஏற்றதுமில்லை, எதிர் முகாமிலிருந்து வரும் சிந்தனைகளையும் மார்க்சியம் விஞ்ஞான பூர்வமாக ஆராய்கிறது.
ஏன் இயக்கவியல் பொருள் முதல்வாதமே ஹெகலின் தலை கீழாக நின்ற கருத்து முதல்வாதத்தை நிமிர்த்திச் செழுமைப்படுத்தியதுதானே?!
மார்க்சியத்தை ஏற்று நடைமுறைப் படுத்திய புரட்சிகரச் சமுதாயத்தை படைத்த இயக்கங்களுக்குத் தலைமை தாங்கிய லெனினும் மாவோவும் அதை மூடுண்டதாகவும் முற்ற முழுக்க முடிவானதாகவும் கருதவில்லை. அதைப் பொது வழி காட்டும கோட்பாடாகவே பார்த்தார்கள்.
"பொதுவுடைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிக்கும். அப்பொதுவுடைமையில் இயல்பு மாற்றங்கள் இருக்காதென நான் நம்பவில்லை” என்று தான் மாவோ கூறினார். பாட்டாளி வர்க்கு சர்வாதிகாரம் உட்பட அனைத்து சர்வாதி காரங்களையும் ஒழிப்பது; புரட்சிகள் பலாத்காரம் உட்பட அனைத்துப் பலாத்காரங்களையும் ஒழித்துக் கட்டுவது கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதுதான் எங்கள் நோக்கம், என்ற ' மாவோவின் கூற்று வர்க்கம் அற்ற சமூகம் பற்றிய சமூக விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை அறிந்த போக்கல்லவா?
ஆக கம்யூனிஸ்டுகள் யார் என்று பார்ப்போம் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறியுள்ளதே)
முதலாளித்துவ வர்க்கத்துடன் பாட்டாளி வர்க்கம் நடத்தும் போராட்டம், உள்ளடக்கத்தில் இல்லாவிட்டாலும், வடிவத்திலேனும், முதலில் அதுவொரு தேசியப் போராட்டமாகவே இருக்கிறது. சொல்லப் போனால், ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும் முதலில் தன் நாட்டின் முதலாளித்துவ வர்க்கத்துடன் கணக்குத் தீர்த்தாக வேண்டும்.
பாட்டாளி வர்க்க வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களைச் சித்தரிக்கும்போது, தற்போதைய சமுதாயத்தின் உள்ளேயே ஏறக்குறையத் திரைமறைவாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை, அது வெளிப்படையான புரட்சியாக வெடிக்கும் கட்டம்வரையில் - முதலாளித்துவ வர்க்கம் பலவந்தமாக வீழ்த்தப்பட்டு, பாட்டாளி வர்க்க ஆட்சியதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் கட்டம்வரையில் - நாங்கள் வரைந்து காட்டியுள்ளோம்.
இதுநாள்வரையில் ஒவ்வொரு சமூக அமைப்புமுறையும், நாம் ஏற்கெனவே பார்த்தவாறு, ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான பகைமையையே அடித்தளமாகக் கொண்டிருந்தது. ஆனால் ஒரு வர்க்கத்தை ஒடுக்க வேண்டுமானால், அந்த வர்க்கம் குறைந்தபட்சம் அதன் அடிமை நிலையிலாவது தொடர்ந்து நீடித்திருப்பதற்குரிய சில நிபந்தனைகளை அதற்கு உத்தரவாதம் செய்திட வேண்டும். நிலப்பிரபுத்துவ எதேச்சாதிகார ஒடுக்குமுறையின்கீழ், குட்டி முதலாளித்துவப் பிரிவினர் ஒருவாறு முதலாளியாக வளர முடிந்தது. அதுபோலவே, பண்ணையடிமை முறை நிலவிய காலத்தில் பண்ணையடிமை, நகரத்தார் சமூக உறுப்பினனாகத் தன்னை உயர்த்திக் கொண்டான். இதற்கு மாறாக, [இன்றைய] நவீன காலத்துத் தொழிலாளி, தொழில்துறையின் முன்னேற்றத்தோடு கூடவே தானும் முன்னேறுவதற்குப் பதிலாக, தன் சொந்த வர்க்கம் நிலவுதற்குரிய [வாழ்வாதார] நிலைமைகளுக்கும் கீழே மேலும் மேலும் தாழ்ந்து போகிறான். அவன் பரம ஏழை ஆகிறான். பரம ஏழ்மை மக்கள் தொகையையும் செல்வத்தையும்விட அதிவேகமாக வளர்கிறது. இங்குதான் ஒன்று தெளிவாகிறது – முதலாளித்துவ வர்க்கம் இனிமேலும் சமுதாயத்தில் ஆளும் வர்க்கமாக நீடிக்கவும், தான் நிலவுதற்குரிய நிலைமைகளை அனைத்துக்கும் மேலான சட்டவிதியாகச் சமுதாயத்தின் மீது திணிக்கவும் தகுதியற்றது. முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியதிகாரம் செலுத்தவும் தகுதியற்றது. ஏனெனில், அதன் அடிமை, அவனுடைய அடிமை நிலையிலேயே தொடர்ந்து வாழ்வதற்குக்கூட வகைசெய்ய அதற்கு வக்கில்லை. மேலும், அதன் அடிமையிடமிருந்து தான் வாழ்வாதாரங்களைப் பெறுவதற்குப் பதிலாக, அந்த அடிமைக்கு வாழ்வாதாரங்களை வழங்கியாக வேண்டிய நிலைக்கு, அவன் தாழ்ந்து போவதை அதனால் தடுக்க முடியவில்லை என்பதும் காரணமாகும். சமுதாயம் இனிமேலும் இந்த முதலாளித்துவ வர்க்கத்தின்கீழ் வாழ முடியாது. வேறு சொற்களில் கூறுவதெனில், முதலாளித்துவ வர்க்கம் நிலவுவது இனிமேலும் சமுதாயத்துக்கு ஒவ்வாததாகிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம் நிலவுவதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் இன்றியமையாத நிபந்தனை, மூலதனம் உருவாதலும் வளர்ந்து பெருகுதலும் ஆகும். மூலதனத்துக்கு இன்றியமையாத நிபந்தனை கூலி உழைப்பாகும். கூலி உழைப்போ முற்றிலும் தொழிலாளர்களுக்கு இடையிலான போட்டியை மட்டுமே சார்ந்துள்ளது. முதலாளித்துவ வர்க்கம் அனிச்சையாக வளர்த்தெடுக்கும் தொழில்துறையின் முன்னேற்றமானது, அத்தகைய போட்டியின் காரணமாக தொழிலாளர்களிடையே ஏற்படும் தனிமைப்பாட்டை, அவர்கள் [சங்க அமைப்பில்] ஒன்றுசேர்தலின் காரணமாக ஏற்படும் புரட்சிகரப் பிணைப்பின் மூலம் நீக்குகிறது. எனவே, நவீனத் தொழில்துறையின் வளர்ச்சியானது, எந்த அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கம், பொருள்களை உற்பத்தி செய்தும் கையகப்படுத்தியும் வருகிறதோ, அந்த அடிப்படைக்கே உலை வைக்கிறது. ஆக, முதலாளித்துவ வர்க்கம் அனைத்துக்கும் மேலாகத் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் வீழ்ச்சியும், பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியும் சம அளவில் தவிர்க்கவியலாதவை ஆகும்.(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முதல் அத்தியாயம் இறுதியாக கூறப்பட்டவைதான்).
மேலும்....
No comments:
Post a Comment