நாம் எதை எதிர்த்துப் போரிடவேண்டும்- நாம் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தின் மேம்பாட்டுக்காக- மார்க்சிய லெனினிய மேலாதிக்கத்துக்காக போராடவேண்டும்.
எல்லாக் கஷ்டங்களும் நமக்கெதிராகவே
உள்ளன. உண்மை மாத்திரம் நம் பக்கத்தில் உள்ளன. இங்கு தான் புரட்சிகர தத்துவத்தில் தேர்ச்சி பெறுவதன் முக்கியத்துவம்
புதைந்து கிடக்கின்றது. நாம் மார்க்சிய லெனினியமாகிய
தத்துவத்தை கற்று தேற சரியான முறையான அடிப்படை மார்க்சியத்திலிருந்து தொடங்குவோமே தோழர்களே.
பொருள், சிந்தனை இரண்டில் பொருள் முதன்மை வகிப்பதுபோல, நடைமுறை, தத்துவம் இரண்டில், நடைமுறை முதன்மையானது
என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், (சிந்தனை அல்லது) மனம் பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்கு வதுபோல, தத்துவம் கூட நடைமுறையிலிருந்தே எழுகின்றது. இருந்தும், தத்துவத்தின்
சரி தவறை, மீண்டும் செழுமைப்படுத்துகின்ற நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட
முடியும்.
ஆகவே, தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து
ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம்.
மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது”.
ஆகவே, தத்துவத்தையும்
நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது. சொந்த நாட்டின் ஸ்தூலமான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில்,
தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ, அவர் வறட்டுவாதியாவர். யார் (அனுபவத்தில்) நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின்
முக்கி யத்துவத்தை மறக்கிறாரோ, அவர் அனுபவவாதியாவர்.
வறட்டுவாதம், அனுபவவாதம் இரண்டும் தவறானவை. நடைமுறை இல்லாத தத்துவம், தத்துவம் இல்லாத நடைமுறை இரண்டும் பயனற்றவை. இரண்டினதும் ஐக்கியம்தான்
நமக்கு வேண்டும்.
மார்க்சியம் ஒரு விஞ்ஞானபூர்வமான தத்துவத்தை முன்வைக்கின்றது. எவ்வாறு முதலாளித்துவம் தோற்றம் பெற்று, வளர்ச்சி அடைந்தது என்பவற்றை நடைமுறை ஆய்வுக்கு உட்படுத்தி தனது முடிவுகளை திடப்படுத்தி
நிரூபித்துக் கொண்டதோடு அவற்றை முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமாகப் பிரயோகித்தும்
மார்க்சியம் வெற்றி கண்டது.
மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்துவ உற்பத்தி முறைமையில் உற்பத்திச் சக்திகள், உற்பத்தி உறவுகள் பற்றிய துல்லியமான ஆய்வையும் தெளிவான வரையறைகொண்ட முடிவுகளையும் தமக்கேயுரிய மேதாவிலாசத்துடன் அணுகி ஆராய்ந்து அதன் மூலம் முதலாளித்துவம்
நடைமுறைப்படுத்தி வரும் கூலி அடிமை முறையின் உள்ளார்ந்த அம்சங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் அம்பலத்திற்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.
அன்றைய முதலாளித்துவம்
தன்னை வளர்த்து நிலை நிறுத்திக் கொள்வதற்கு உலக நாடுகளை அடிமைப்படுத்தி அந்நாடுகளின்
விலை மதிப்பற்ற வளங்கள் அனைத்தையும் சூறையாடிச்சென்றது. காலனித்துவ அமைப்பை இறுக்கிக்கொண்டது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியையும்
அதன் ஈவிரக்கமற்ற சுரண்டலையும்
மார்க்சியம் நன்கு வெளிச்சமிட்டுக் காட்டியதுடன் நில்லாது அதற்கு எதிராகத் தொழிலாளி வர்க்கமும் அடக்கப்படும்
காலனி நாடுகளும் போராட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியது.
மார்க்ஸ் சிந்தனை ஒரு லெனினைச் செயல்வீரனுக்கியது. ஒரு மாவோவை புரட்சியாளனாக்கியது. உலகின் பாதி மக்கள் அவரது கோட்பாடுகளை ஏற்று அவர் வழியிலே புதிய உலகைப் படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்ஸ் சமூக விஞ்ஞானி; வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்ற புதிய கோட்பாட்டை வகுத்த விஞ்ஞானி. அவர் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறோம். 175 ஆண்டுகளின் முன் 1848-ல் கம்யூனிஸ்ட் அறிக்கையில் கூறியவற்றை இன்று நடைமுறையில் காண்கிறேம், 30 வயதிலேயே அவரால் எழு தப்பட்ட இச்சிறு அறிக்கை மனித இனத்தின் சமூக வாழ்வு, அதன் இயங்கியல், வர்க்கப் போராட்டம், உலகப் புரட்சி, சோசலிச சமுதாயத்தின்
அமைப்பு, அதைத் தொடர்ந்த கம்யூனிச சமூக அமைப்பு யாவையும் கூறி நிற்கிறது.
கார்ல் மார்க்ஸ், பிரெட்றிக் ஏங்கெல்ஸ் இருவரும் விஞ்ஞான சோசலிசத்தின் பிதாமகன்கள் ஆவர். அவர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடையும் காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதிகளை ஆராய்ந்து, அவற்றை தொழிலாளி வர்க்கம் புரிந்து, முதலாளித்துவத்தை தூக்கியெறிவதற்காக, அவ்விதிகளை தொழிலாளி வர்க்கத்துக்கு
போதித்தனர். மார்க்சும், ஏங்கெல்சும் வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கப் புரட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
ஆகியவற்றின் விதிகள் பற்றியும், அரசு பற்றிய தத்துவத்தையும் நமக்குப் போதித்தனர். ஆனால், அவர்கள் தமது கனவு நனவாவதைக் காண, தமது தத்துவங்கள் நடைமுறையாதைக்
காணக்கொடுத்து வைக்கவில்லை. அவர்களுடைய வழிகாட்டுதல் தத்துவம் பின்னர் மார்க்சியம் என அழைக்கப்படுகின்றது.
லெனின் அவர்கள், முதலாளித்துவம் அதன் இறுதிக் கட்டமான ஏகாதிபத்திய கால கட்டத்தில் புரட்சி இயக்கத்தின் ஊக்கமாக உழைத்த ஒரு மார்க்சியவாதியாவார். வேறுவார்த்தைகளில் சொன்னால், அவர் ஏகாதிபத்திய யுத்த சகாப்தத்தை அறிந்து சோசலிச புரட்சிக்கு வழிகோலினார்.
தமது காலத்தின் மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப அவர் மார்க்சியத்தைப் உபயோகித்தார். இவ்வாறு, அவர் மார்க்சியத்தை லெனினியம் என்ற உயர்ந்த கட்டத்திற்கு வளர்த்தார்.
லெனின் அவர்கள் தமது முதல் கடமையாக, மார்க்சும், ஏங்கெல்சும் மறைந்த பின்னர், அவர்களுடைய வாரிசுகள் தாம் என்று தம்மைத்தாமே கூறிக்கொண்ட காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் போன்ற இரண்டாவது சர்வதேசியத்தின் தலைவர்களுடன் ஒரு மிகப்பெரும் சித்தாந்தப் போரை நடத்தினர். ஆனால், யதார்த்தத்தில் அவர்களுக்கும்
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும்
சம்பந்தா சம்பந்தமே கிடையாது. அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சிப் போதனைகளைத் திரித்துப் புரட்டி எழுதினார்கள். விஞ்ஞான சோசலிசத்தின் இம்மாபெரும் பிதாமகன்களின் புரட்சிகர உள்ளடக்கத்துக்கு முழுக்குப் போட்டு, அவற்றுக்குப்
பதில் காட்ஸ்கி, பர்ன்ஸ்டீன் என்ற இந்த அற்பர்கள் மார்க்சியத்தை
திரித்து சோசலிசத்துக்குச் செல்லும் சமாதான மாற்றத் தத்துவங்களை விளம்பரம் செய்தார்கள். அவர்கள் புரட்சிகரக் கட்சிகளாக இருந்த இரண்டாவது சர்வதேசியத்தின் கட்சிகளை பாராளுமன்றக் கட்சிகளாக மாற்றி விட்டார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறினால், அவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவரின் புரட்சித் தத்துவங்களைத்
திரித்து விட்டனர். எனவேதான் லெனின் அவர்களை திரிபுவாதிகள் என்று அழைத்தார். ஆக, மார்க்சியத்தின் அடிப்படை புரட்சிகர உண்மைகளைக் கண்டுபிடித்து, அவற்றை உறுதியாகவும், ஒளியுடனும் புதிபித்ததும் லெனினின் முதல் கடமையாக இருந்தது. இந்தக் கடமையை, இன்றும் பிரசித்தி பெற்று புகழுடன் விளங்கும் மார்க்சியத் தொன்னுால்களான
'அரசும் புரட்சியும்', 'பாட்டாளி வர்க்கப் புரட்சியும், துரோகி காட்ஸ்கியும்' போன்ற பிரகாசமான பல வாதப்பிரதிவாதப் படைப்புகள் மூலம் நிறைவேற்றினர்.
ஆனால், லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல.
அவர் ஒரு செயல் வீரனும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும்.
இதன் பிரகாரம் அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி, அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இது உருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய,
புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத்திலிருந்து விடுதலை பெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால்
வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தை ஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன்
நெருங்கிய தொடர்புகளை உடைய ஒரு புரட்சிகரக் கட்சியாகும்.
இத்தகைய ஒரு கட்சியின் உதவியுடன், லெனின் அவர்கள் உலகின் முதலாவது தொழிலாளர் வர்க்கப் புரட்சியை வெற்றி கரமாக வழிநடத்தி, உலகின் முதலாவது சோசலிச அரசை நிறுவினார்.
அது அடக்கி ஒடுக்கப்பட்ட உலக மக்கள் அனைவருக்கும்
ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தது. இப்படிச் செய்வதன் மூலம் லெனின் தத்துவத்தை நடைமுறையாக்கினர்; கனவை நனவாக்கினர். இத்துடன், முதலாளித்துவ சமுத்திரத்தால்
சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தமான பல பிரச்சினை களுக்கும் தீர்வு கண்டார்.
ஆனால், படித்தறிய முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு
உயர்த்தி விட்டார். அதுமுதல், மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினியம் என அழைக்கப்பட்டது.
ஸ்டாலின் அவர்கள் லெனினின் கடமைகளைத் தொடர்ந்து செய்தார். ஹிட்லரின் பாசிச ஆக்கிரமிப்பின் குரூரத்தை, எதிர்த்து, ஒரு நாட்டில் சோசலிசத்தைக்
கட்டிவளர்த்து, அதைப் பாதுகாப்பதில்
பெரும்பணி புரிந்தார். ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் சோசலிசத்தைக்
கட்டியமைப்பதில் ஈட்டிய வெற்றியும், உலக பாசிசத்தை நிர்மூலமாக்குவதில் அது வகித்த முக்கிய பாத்திரமும் சோசலிசமும் ஒரு தனிநாட்டின் எல்லைக்கு அப்பால் பரவுவதற்கு துணை செய்தது மாத்திரமல்ல,
உலகத்தில் முற்றிலும் புதிய ஒரு நிலைமையையும்,
அதாவது, சோசலிசம் புரட்சி இவற்றிற்காக நிற்கும் சக்திகளுக்குச் சாதகமான ஒரு பலாபல நிலைமையையும் தோற்றுவித்தது.
தொடரும் தோழர்களே.....
No comments:
Post a Comment