இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம்–அ.கா.ஈஸ்வரன்

                                               
 1) மதங்களும் தத்துவங்களும்

       இந்தியத் தத்துவங்கள் பெரும்பாலும் மதத்துடன் இணைந்தே காணப்படுகிறது. ஏன் என்றால் மதத்தின் தலைவர்களே தத்துவத்தின் தலைவர்களாக இருக்கின்றனர். மத்துவர் விவரித்த மதம் வைணவம், தத்துவம் துவைதம். ராமானுஜர் விவரித்த மதம் வைணவம், தத்துவம் விசிட்டாத்வைதம், ஆதி சங்கரின் மதம் வைதீகம் (சனாதனம்), தத்துவம் அத்வைதம். அதே போல புத்த மதத்தை உருவாக்கியவர் புத்தர் அவரது தத்துவம் தம்மம். மகாவீரரும் சமண (ஜைனம்) மதம், தத்துவம் ஆகியவற்றை உருவாக்கியவர். சைவத்திலும் மதமும் தத்துவமும் இணைந்தே காணப்படுகிறது. சைவத்தில் மத இலக்கியங்களை சைவ தோத்திரங்கள் என்றும் தத்துவ இலக்கியங்களை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுகிறது. சைவத்தில் மட்டும் மதத்தை எழுதியவர்களும் தத்துவத்தை எழுதியவர்களும் வேறுபடுகின்றனர்.

       இப்படி இந்தியாவில் மதமும் தத்துவமும் இணைந்து காணப்படுவதால் மதத்துக்கும் தத்துவத்துக்கும் இடையே உள்ள வேறுபாடு அறிய முடியாமல் இருக்கிறது.

       மதத்தையும் தத்துவத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வை மேலைநாடுகளுடையது. நம் நாட்டில் அவ்வாறு பிரிந்து இருக்கவில்லை, இணைந்தே காணப்படுகிறது, ஆனால் தமிழகத்தில் உள்ள சைவ மதத்தில் உள்ளவர்களுக்கு மதக் கருத்துக்களும் சடங்குகளும் தெரிந்த அளவுக்கு சைவ சித்தாந்தம் (தத்துவம்) தெரிந்திருக்கிறதா என்று கேட்டால், பெரும்பான்மையினருக்கு தெரியாது என்பதே பதிலாகும். ஆனால் வைணவத்தில் உள்ள பொது மக்கள் சைவத்தைவிட சற்று அதிகமாக தங்களது தத்துவத்தை தெரிந்து வைத்துள்ளனர். இவைகள் எதை உணர்த்துகிறது என்றால் மதமும் தத்துவமும் ஒன்றல்ல. அதே போல ஸ்மார்தர்களில் (அத்வைதிகள்) பலருக்கு வைதீக மதம் தெரிந்த அளவுக்கு அத்வைதத் தத்துவம் தெரியவில்லை. ஆக நம் நாட்டிலும் மதமும் தத்துவமும் வேறுபட்டே காணப்படுகிறது.

 பொதுவாக மதம் நம்பிக்கையைச் சார்ந்தது. தத்துவம் வாதத்தின் அடிப்படையில் அமைந்தது. மதத்தின் நடைமுறை சடங்குகளைச் சார்ந்தது தத்துவத்தின் நடைமுறை அவ்வாறு இல்லை. மத சடங்குகளில் ஈடுபடுபவர்கள் அதனை ஒட்டிய தத்துவத்தை சேர்ந்தே பின்பற்ற முடியும். சிலர் மத சடங்குகளைத் தவிர்த்து தத்துவத்தை மட்டுமே நடைமுறையில் செயல்படுத்துவதைப் பார்க்கலாம்.

       மதமும் சரி அதனை ஒட்டிய தத்துவங்களும் சரி இரண்டும் கருத்துமுதல்வாத அடிப்படையில் தான் செயல்படுகிறது. இரண்டும் இயல் உலக்கு அப்பால் உள்ளதையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த உலகுக்கு அப்பால் உள்ள சக்தியினால் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டதாக இரண்டும் கருதுகிறது. மதம் அந்த சக்தியை உருவத்தில் விளக்குகிறது தத்துவம் அந்த சக்தியை உருவமற்றதாக கூறுகிறது. வைணவ மதம் அந்த சக்தியை நாராயணன் என்கிற உருவமுடைய சக்தியாகப் பார்க்கிறது வைணவ தத்துவம் அந்த சக்தியை உருவமற்ற பிரம்மமாக கூறுகிறது. அதே போல சைவ மதத்தில் அந்த சக்தியை சிவபெருமானாகப் பார்க்கிறது, சைவ தத்துவம் பதியாகப் பார்க்கிறது. அதனால் இந்தியத் தத்துவங்களை விவரிக்கும் போது மதக் கருத்துக்களும் ஊடே காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். இந்தியாவைப் பொருத்தளவில் தத்துவங்களைப் பற்றி பேசும் போது மதங்களையும் இணைந்து பேச வேண்டிவருகிறது.

 இதுவரை உலகத்தின் படைப்பு இருப்பு பற்றிய கருத்துமுதல்வாதத் தத்துவக் கருத்துக்களைப் பார்த்தோம். இதற்கு மாறான, எதிரான ஒரு தத்துவம் இருக்கிறது அது தான் பொருள்முதல்வாதம்.

   கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்கிற பிரிவு எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். தத்துவம் பலவற்றைப் பற்றி பேசினாலும் அவை அனைத்தும் அடிப்படைக் கேள்வியை ஒட்டியே விளக்கப்படுகிறது.

   தத்துவத்தின் அடிப்படையான கேள்வியையும் அதற்கான பதிலையும் பார்ப்போம். இதனை எங்கெல்ஸ் நமக்கு தெளிவாகப் புரியவைக்கிறார்.

      “கடவுள் உலகத்தைப் படைத்தாரா அல்லது உலகம் எப்போதுமே நிரந்தரமாக இருந்து        வருகிறதா?

 

இந்தக் கேள்விக்குத் தத்துவவாதிகள் அளித்த பதில்கள் அவர்களை இரண்டு மாபெரும் முகாம்களாகப் பிரித்தன. இவர்களுள் இயற்கையைவிட ஆன்மாவின் முதன்மையை வலியுறுத்தி, அதன்காரணமாக, இறுதி நிலையில், ஏதோ ஒரு விதத்தில் உலகம் படைக்கப்பட்டது என்று அனுமானித்துக் கொண்டவர்கள் கருத்துமுதல்வாத முகாமைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமைச் சேர்ந்த தத்துவவாதிகளிடயே, எடுத்துக்காட்டாக ஹெகல் போன்றவர்களிடையே, உலகத்தின் உருவாக்கம் பற்றிய கருத்து கிறிஸ்துவ மதத்தில் இருப்பதைக் காட்டிலும் மேலும் சிக்கலானதாகவும் அபத்தமானதாகவும் இருக்கிறது. இயற்கையை முதன்மையாகக் கருதிய மற்றவர்கள் பொருள்முதல்வாத முகாமின் பல்வேறு கருத்துப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.”

(லுத்விக் ஃபாயர்பாக்கும் செம்மை ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்)

     எத்தனைத் தத்துவங்கள் உலகில் காணப்பட்டாலும் அவைகள் அனைத்தும் கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவுக்குள் அடங்கும். பல்வேறு பொருள்முதல்வாதப் போக்குகள் இருக்கின்றன. இந்தியாவில் தொடக்கத்தில் காணப்பட்ட பொருள்முதல்வாதத்துக்கு உலகாயதம் என்று பெயர். அன்றைய சாங்கியமும் பொருள்முதல்வாதத் தத்துவமே. வைசேசிகம், பூர்வ மீமாம்சை, பவுத்தம், சமணம் ஆகியவற்றிலும் பொருள்முதல்வாத தத்துவக் கூறுகள் காணப்படுகின்றன. இன்றைய மார்க்சியத் தத்துவம் நவீன பொருள்முதல்வாதத் தத்துவமாகும். 

    இந்தியத் தத்துவங்கள் என்றால் அது ஆன்மீகத் தத்துவங்கள் என்பதாகவே பெரும்பான்மையான கருத்தாக இருக்கிறது. உண்மையில் ஆன்மீகத்தை மறுக்கும் தத்துவங்களே  இந்தியத் தத்துவ மரபுகளில் அதிகம் காணப்படுகிறது. பலருக்கு இதை ஏற்பது கடினமாக, கசப்பாக இருந்தாலும், ஆன்மீகத்தை மறுத்திடும் தத்துவங்கள் நிறைய இருப்பதையே ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

   ஆன்மீகத் தத்துவங்களை கருத்துமுதல்வாதம் என்றும் ஆன்மீகத்தை மறுக்கின்ற தத்துவங்களை பொருள்முதல்வாதம் என்றும் அழைக்கப்படுகிறது. தத்துவத்தில் இந்த இரண்டுப் போக்குகளைத் தவிர்த்து மூன்றாவது நான்காவது போக்கோ, நடுப்போக்கோ எங்கும் கிடையாது. அனைத்தும் இரண்டு போக்குகளுக்குள் அடங்கும்.

    கருத்துமுதல்வாதமும் பல்வேறு போக்குகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமானது அகநிலைக் கருத்துமுதல்வாதம் மற்றது புறநிலைக் கருத்துமுதல்வாதம். பிரபஞ்சம் இயற்கைக்கு மீறிய சக்தியால் படைக்கப்பட்டது என்பதே கருத்துமுதல்வாதத்தின் அடிப்படை என்று பார்த்தோம். இந்த இயற்கை மீறிய சக்தி உலகுக்கு அப்பால் இருப்பதாகக் கருதுவது புறநிலைக் கருத்துமுதல்வாதம். அகத்தின் படைப்பே புறம் என்று கருத்துவது அகநிலைக் கருத்துமுதல்வாதம். அந்த சக்தி மனிதனின் அகத்தில் இருக்கிறது என்று இந்தத் தத்துவம் கருதுவதால் இதற்கு அகநிலைக் கருத்துமுதல்வாதம் என்று பெயர் பெறுகிறது.

  அகநிலைக் கருத்துமுதல்வாதத்தில் குறிப்பிடத்தக்கவர் இங்கிலாந்தில் பெர்க்லி, ஆஸ்திரியாவில் மாஹி, இந்தியாவில் ஆதிசங்கரர், ரமணர், விவேகானந்தர் போன்றோர். அகநிலைக் கருத்துமுதல்வாதத்தின் நவீன வடிவமாக நேர்காட்சிவாதம், இருத்தலியல், பின்நவீனத்துவம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

   புறநிலை கருத்துமுதல்வாதத்தில் குறிப்பிடத்தக்கவர் கிரேக்கத்தில் பிளாட்டோ, ஜெர்மனியில் ஹெகல், இந்தியாவில் ராமானுசர், மத்துவர், சைவசித்தாந்தியான மெய்கண்டர் போன்றோர்கள்.

       சடங்குகளுடன் கூடிய மதம் முதலிலும் தத்துவம் அடுத்தும் தோன்றியது. மனித சமூகம் வர்க்கமாக பிளவுறும் போது மதமும் தத்துவமும் உருவானது. வர்க்கங்கள் தோன்றுவதற்கு முன்பு மதமும் தத்துவமும் இல்லை என்றால் அப்போது என்ன இருந்தது. மாயவித்தை என்கிற போக்கு இருந்தது. இது மதம் இல்லை என்றாலும் இதுவே மதமும் அறிவியலும் தோன்றுவதற்கு அடிப்படையாக இருந்தது.

 மாயவித்தை (Magic)

       கடவுள், மதம், தத்துவம் போன்றவைகள் தோன்றுவதற்கு முன்பு இரண்டு போக்குகள் காணப்பட்டது. ஒன்று மாயவித்தை மற்றொன்று மாந்தரீகம்.

   டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட, பழங்குடிகளாக இருந்த அநாகரீக மனித சமூகமே, இன்றைய நவீன நாகரீக மனித சமூகமாக வளர்ச்சி பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வர்கள். அந்த பழங்குடி சமூகத்தில் கடவுள் நம்பிக்கையோ, மதமோ, தத்துவமோ தோன்றவில்லை. அன்று அவர்களிடம் முதலில் காணப்பட்டது மாயவித்தை, அதற்கு அடுத்து தாந்தரீகம்.

 முதலில் மாயவித்தையைப் பார்ப்போம்.

   கிடைக்காத ஒன்றை கிடைத்தது போல் பாவனை செய்தலே மாயவித்தை. பழங்குடிகளிடம் தொழில்நுட்பம் இல்லாத குறையை நீக்குவதற்கு மாயவித்தை பயன்பட்டது. இதில் காணப்படும் பாவனை, பொய்த்தோற்றம் ஆகியவற்றை மனதில் கொண்டு இதனை மதத்தின் போக்காக கருதிடக்கூடாது. மாயவித்தை செய்யும் மக்கள் எந்தவித தெய்வீக உதவியையும் நாடவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

   எதார்த்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கினால், உண்மையிலேயே அதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திட முடியும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது மாயவித்தை. மழை பொய்கின்ற காலத்தில் மழை பெய்வதாக பாவனையாக பாடி நடனமாடுவார்கள். இந்த பாவனையால் என்ன விளைவுகள் ஏற்பட்டது என்பதை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா கூறியுள்ளார்.

    “உண்மையில் மழை பெய்கிறதா? இல்லவே இல்லை. இருப்பினும் இந்தப் பாடல்கள் பயனற்றவை அல்ல. ஏனென்றால் முதுவேனிற் வறட்சி நீண்டது, கொடியது. இது விவசாயிகளின் வாழ்வில் மிகப்பெரிய சோதனையாகும். வறண்ட பூமி மழையில் மூழ்குவது, குழந்தைகள் நீந்துவது ஆகிய பாடல் காட்சி "பொருளியல் எதார்த்தம்" அல்லவென்றாலும், அது ஒரு "உளவியல் எதார்த்தம்” ஆகும். அதாவது இந்தப் பாடல் விவசாயிகளுக்கு உற்சாகமளிக்கிறது. கொடூரமான இயற்கைக்கு முன்னர் எதிர்நிற்க மாட்டாத ஆதரவற்ற நிலையை வெற்றி கொள்ள இது உதவுகிறது. இந்த முறையில் ஒரு பிரமையான உத்திமுறையாக இருந்தாலும் மாயவித்தை உண்மையான உத்தி முறைக்கு உதவுகிறது.”

(உலகாயதம், பக்-141-142)

     உற்பத்திக் கருவிகளின் குறைபாடு அன்றைய பழங்குடி மக்களை மாயவித்தையில் ஈடுபட வைத்தது. வேட்டையில் விலங்கு கிடைத்திடாதபோது, விலங்குகளை பிடிப்பது போல நடனமாடுவார்கள். கிடைப்பது அரிதான நிலையில் இதனையே செய்வார்கள். கிடைக்காததை கிடைத்தது போல் பாவனை செய்வதால் அவர்களுக்கு என்ன பயன்கிட்டும்?

     வேட்டையாடுவதாக அவர்கள் ஆடும் நடனத்தின் மூலம் வேட்டை ஆடுவதற்கான நுட்பத்தை ஒத்திகை செய்து பழகிக் கொள்வார்கள், உணவு கிடைக்காத நிலையில் இவ்வகையான நடனத்தை ஆடுவதின் மூலம் தங்களது சோர்வைப் போக்கிக் கொள்வார்கள், தங்களது உற்சாகத்தை இழக்காமல் வேட்டைக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள்.

       மாயவித்தையைப் பற்றி ஜார்ஜ் தாம்சன் சிறப்பாக விளக்கியிருக்கிறார்:-

“கடவுள் நம்பிக்கையும் வழிபாடு அல்லது பலிதானமும் மதத்தின் சிறப்பம்சங்கள். இன்றும் மிகப் பழங்குடிக் காட்டு மிராண்டிகளுக்குக் கடவுளுமில்லை, வழிபாடுமில்லை, பலிதானமுமில்லை. இன்று நாகரிகம் அடைந்தவர்களாக உள்ள மக்களின் ஆதிகாலத்தை ஆராயப் புகுந்தால் அவர்களுக்கும் அக்காலத்தில் கடவுள்கள் இருக்கவில்லை, வழிபாடும் பலிதானமும் இருக்கவில்லை என்பது தெரியவரும். அக்காலத்தில் இருந்ததெல்லாம் மாயவித்தை மட்டுமே.

 

எதார்த்தத்தை, புற உலகை, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுபோல் ஒரு பொய்த்தோற்றத்தை, போலியை உருவாக்குவதன்மூலம் எதார்த்தத்தை, புற உலகை உண்மையாகவே தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதே மாயவித்தைக்கு ஆதாரமாக இருக்கும் மூலக்கருத்து. அதன் ஆரம்பக் கட்டங்களில் அது வெறும் போலச்செய்தலாகவே இருந்தது. மழை வேண்டும் என்று விரும்பினால், மேகக் கூட்டத்தையும் இடியையும் மின்னலையும் பொழியும் மழையையும்போல் நடித்து நடனமாடுவார்கள். தாம் விரும்பும் எதார்த்தத்தை, புற உலகப் பொருள்களை, நிகழ்ச்சிகளைக் கைகூடச் செய்ய அது கைகூடியது போல் கற்பனை செய்து நடிப்பார்கள். பிந்திய கட்டத்தில் போலச்செய்தலோடு கட்டளை பிறப்பித்தலும் இருக்கும். மழையே பெய்" என்று கூவுவது கட்டளையிடுவதாக இருக்குமேயன்றி வேண்டுதலாக இருக்காது. இவ்வாறு கூட்டாகக் கட்டளையிடுதல் சமுதாய வளாச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பொருத்தமானது. இந்தக் கட்டத்தில் சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபடாமல் ஒன்றாக முழுமையாக இருந்தது. சமூகம் எல்லா உறுப்பினர்களுக்கும் ஒவ்வொரு தனி உறுப்பினருக்கும் மேலான ஒன்றாக இருந்தது. அவர்களுக்குப் பகைபோல் தோன்றிய இயற்கைச் சக்திகளுக்கு எதிரான பலவீனமான ஆனால் ஒன்றுபட்ட அணியாக விளங்கியது.”           

(மதத்தைப் பற்றி)

     தனிமனிதனின் வழிபாட்டை, அடிப்படையாகக் கொண்டது மதம். கூட்டாக மனிதர்கள் செய்யக்கூடியது மாயவித்தை. கூட்டு வாழ்க்கையோடு மாயவித்தை இணைந்து காணப்படுகிறது. கூட்டாக செய்வது அவர்களிடம் ஒர் உளவியல் வலிமையை ஏற்படுத்துகிறது. கூட்டு சக்தியே அந்த பழங்குடி மக்ககளை இயற்கையிடம் இருந்தும் பிற பழங்குடிகளிடம் இருந்தும் காத்தது.

    கூட்டு வாழ்க்கை சிதைந்த போது மாயவித்தையும் சிதைந்தது. உழைப்புக் கருவிகளின் மேம்பாடு ஏற்பட்ட போதும், உற்பத்தித் திறன் அதிகரிப்பின் போதும் கூட்டு உழைப்பாலன்றி தனிப்பட்ட உழைப்பால் மனிதன் வாழ்வதை சாத்தியமாக்கியது. உழைப்புப் பிரிவினையின் காரணமாக அந்த சமூகத்தில் தேவைப்பட்ட விளைபொருட்களைவிட சற்று கூடுதலாக கிடைத்தது. இந்த உருவாக்கம் உபரி உற்பத்தியைப் படைத்தது. அன்றைய சமூகத்திற்கு தேவைப்பட்டதைவிட சற்று கூடுதலாக உற்பத்தியானது. இந்த உபரி உற்பத்தி ஒரு சிலர் உழைக்காமல் வாழ வழிசெய்தது.

        தனிவுடைமையின் தோற்றம் வர்க்க வேறுபாட்டைப் படைத்து. வர்க்க வேறுபாடு  கூட்டுழைப்பை முழுமையாக சிதைத்துவிட்டது.

 

கூட்டுழைப்பு சிதைந்ததின் விளைவாக கூட்டு மாயவித்தையும் சிதைந்து தனிமனித வழிபாட்டு முறையாக மதம் உருவானது.

      தேவிபிரசாத் சட்டோபாத்யாயா:-

“உற்பத்தித் திறன் முன்னேறும்போது இந்தப் பழங்கால கூட்டுத்தன்மை சிதைகிறது. அது உபரி உற்பத்தியைத் தோற்றுவிக்கிறது. அதே சமயத்தில் பலருடைய உழைப்பில் ஒரு சிலர் வாழும் வாய்ப்பையும் தோற்றுவிக்கிறது. ஆனால் பழங்கால மந்திரத்தின் பயன்பாட்டின் நினைவு மறையவில்லை. அது ஒரு சிலருக்கு மட்டுமே ரகசியமாகத் தெரிந்த மர்மமான ஆன்மீக சக்தி என்னும் அறிவாகி விடுகிறது. இதுவே மூடநம்பிக்கை. இது உண்மையான உற்பத்தி முறைக்கு தடையாகிறது. மாயவித்தை அதன் எதிர்நிலையைச் சென்றடைகிறது. அது மதமாக மாறுகிறது”

(உலகாயதம், பக்-119-120)

       தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஜார்ஜ் தாம்சன் போன்றோர்கள் மாயவித்தையை விளக்கமாக விவரித்துள்ளனர். இவர்கள் மாயவித்தைக்கும் மதத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் சிறப்பாக கூறியுள்ளனர்.

    மாயவித்தையைப் போன்று தாந்திரீகத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். தத்துவத்தையும் மதத்தையும் புரிந்து கொள்வதற்கு இவை இரண்டையும் புரிந்து கொள்ள வேண்டியது தேவையாகிறது.

தொடரும்….

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்