தோழர் அப்பு பாலன் எனும் அணையா நெருப்பு

 

செப்டம்பர் 12 வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்து கொண்டிருக்கிறோம். அவர்களின் போராட்டத்தை அவர்களின் வரலாற்றை எழுத மட்டும் நமக்கு நேரமில்லை. அவர்களின் பெயரை மட்டும் முதலாளித்துவ வாதிகள் பயன்படுத்தும் பிராண்ட் போல பயன்படுத்திக் கொண்டிருக்கிறவர்கள் சிந்திப்பார்களா?. ஏகாதிபத்தியமென்றும், புதிய ஜனநாயகப் புரட்சி என்றும் இத்துனை ஆண்டுகளாய் போஸ்டர் மட்டுமே ஒட்டிக்கொண்டிருப்போர் இவர்களின் ஆக்கப்பூர்வமான வரலாற்றுப் பதிவையும் மக்கள் திரள் போராட்டத்தின் உண்மையான வலுவையும் விமர்சன ரீதியாக வெளியிடலாமே.அவை ஏன் இன்றுவரை கொண்டுவரவில்லை?

உலகம் தளுவிய நிலைமைகள்:-

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ரஷ்யாவில் மூன்று புரட்சிகள் நடந்தது. அதன் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்தியாவிலுள்ள புரட்சிகர அறிவுஜீவிகளும் ரஷ்யப் புரட்சியால் கவரப்பட்டு இந்தியாவிலும் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவில் நடந்தது போன்ற ஒரு புரட்சியை நடத்திட வேண்டும் என்று விரும்பினர். இந்த அறிவுஜீவிகளின் தலைமையில்பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்சரியான தன்மையையும் தவறான தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டியது புரட்சிகர ஜனநாயக சக்திகளின் கடமையாகும்.

ரஷ்யாவில் 1905, டிசம்பரிலும் 1917 மர்ச்சிலும்,1917 நவம்பரிலும் புரட்சிகள் நடத்தப்பட்டது..இவற்றில் முதல் புரட்சி தோல்வியடைந்தது. அன்றைய பிரிட்டனின் ஆட்சியின் கீழிருந்த இந்தியப் பகுதிகளில், இந்த ரசிய புரட்சியை புரட்சிகர சக்திகள் பலராலும் வரவேற்கப்பட்டது, பிரிட்டனை சட்டபூர்வ வழிகளில் மட்டுமே எதிர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதன்மீது வெறுப்புக் கொண்டிருந்த பல்வேறு தலைவர்கள் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து மக்களை புரட்சிப்பாதையில் அணிதிரட்டிட வேண்டும் என்று விரும்பினர். அத்தகைய சூழலில், பிரிட்டீஷ் அரசை சட்ட வழியில்மட்டுமே நின்று எதிர்ப்பதை தொழிலாககொண்ட இந்திய தேசிய காங்கிரசின் கொள்கை மக்களின் போராட்டத்தை வரம்பிட்டு வளர்தெடுத்தது; எப்பொழுதெல்லாம் போராடும் மக்கள் வரம்பு மீறி பிரிட்டீஷ் அரசுக்கெதிரான போராட்டதில் தீவிரமாக குதிக்கின்றனரோ அப்பொழு தெல்லாம் கங்கிரஸ் தலைவர்கள் பின்வாங்கியதும் மக்களை நட்டாற்றில் விட்டதும் அன்றைய நடைமுறையாக இருந்தது. இத்தகைய போராட்ட முறையே அதாவது சட்டப்பூர்வமான, சாத்வீகமானபோராட்ட முறையே இங்கே போராட்டவழியாக மக்கள் மூளைகளில் திணிக்கப்பட்டது. எனினும் அவற்றை யெல்லாவற்றையும் தூக்கியெறிந்து பல புரட்சிகரமான போராட்டங்களை இங்கே மக்கள் தன்னியல்பாக நடத்தியுள்ளார்கள். மக்கள் தாங்கள் கொண்ட இலட்சியத்திற்க்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த வரலாறு அதில் சில தேடுதல்கள்தான் நமது இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை தூக்கி எறிய வேண்டும் என்ற இந்திய மக்களின் மனநிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர், ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்டமும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற் படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படை வீரர்களும் ஆதரவு தெரிவித்தனர். இராணுவப்படை வீரர்கள், போராடும் கப்பல்படை வீரர்களை சுடமறுத்துவிட்டனர்.

இந்திய பொதுவுடைமை இயக்கமும் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்தது இதேகாலக்கட்டத்தில். இந்தியாவில், அன்றைய பிரிட்டிஷ் காலனி யாதிக்கத்துக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்த பல்வேறு சக்திகளுக்கு 1917-ல் நடந்த ரஷ்யப் பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சியின் வெற்றியானது, புதிய பார்வையையும் புதிய நம்பிக்கையையும் அளித்தது.அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமை யிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமை யிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியது.

1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு கட்சியாக இணைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.

உலக அளவில் திருத்தல்வாதமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் சோவியத் ரஷ்யாவில் குருஷ்சேவின் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலகஅளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல் வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில்சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட்இயக்கம் பிளவுகளை சந்தித்தது. இந்திய கம்யுனிஸ்ட்கட்சித் தலைவர்கள் குருச்சேவின் திரிபுவாதத்தை ஆர்வமாக வரவேற்றனர். ஏப்ரல் 1956- ல்கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்று போற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் “இங்குசில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்து வருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப் போதையும் விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் சோவியத்துக் கம்யூனிஸ்டு கட்சியின் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றிபுதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது "என்று கூறி குருச்சேவின் திருத்தல் வாதத்தை ஆதரித்தார்..

1952க்கு முன்பான வரலாற்றில் இ.க.க யின் தியாகத்தையும், போராட்டத்தையும் யாரும்மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

நக்சல்பாரி இயக்கத்தின் வரலாற்று போக்கு

தமிழகத்தின் நக்சல்பாரி இயக்கத்தின் முன்னோடியும் மக்கள் மத்தியில் போராட்ட குணத்தை விதைத்த இரு தோழர்களின் நினைவை போற்றுவதற்க்கே இந்தப் பதிவு.

நக்சல்பாரி இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் தோழர் எல். அப்புவின் மரணத்தைப்போலவே அவரின் புரட்சிகர தியாகவரலாறும், மகத்துவம் மிகுந்த அவரின்தியாக வாழ்வும் மறைக்கப் பட்டுவிட்டது. ஏனெனில் இன்றைய தலைவர்களுக்குஅவரின்தியாகம் மட்டுமே வேண்டும் அவரின்வரலாறு வேண்டாம் ஆக சிறுமுயற்ச்சியாகவே இந்த கட்டுரையை இலக்கு இங்கு கொண்டுவருகிறது. கோவையை பூர்வீகமாகக் கொண்டவரான தோழர் அப்புவுக்கு அற்புதசாமிஎன்பதே இயற்பெயர்.

அற்புதசாமி பிறகு அப்புவாக மாறினார். தந்தையார் பெயர் லியோ என்பதாகும். கோவைகோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த அவர் இளமைப் பருவந் தொட்டே பெதுவுடைமை இயக்க சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர். 1958 வாக்கில் கோட்டை மேட்டில் கிருத்துவர் வாழும் பகுதியில் இக்பால் மன்றம், இஸ்லாமியர் வாழும் பகுதியில், மக்கள் மன்றம், என இரண்டு மன்றங்கள் இருந்தன. அங்கு பல இளைஞர்களுடன் உலக நடப்புகளையும் சமகால அரசியலையும் பற்றி அப்பு போதித்தும், விவாதித்தும் வந்தார்.

தொழிற்சங்களில்....

தோழர் அப்பு முனிசிபல் தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம், மில் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களில் பங்கெடுத்து அவற்றுக்கு முன்னணி பொறுப் பாளரானார். தோழரின் மனதிடம் காரணமாகவும், விசாலமான அரசியல் பார்வை காரணமாகவும் இரண்டு மூன்று ஆண்டுகளிலேயே தொழிற்சங்கம்தொடர்பான இயக்கப் பணிகளில் தேர்ச்சிபெற்றார். நிலமீட்சிப் போராட்டம், பஞ்சாலைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களுக்கு தலைமைதாங்கி சிறை சென்றார். அவர்மாநில அளவில் முன்னோடியான தொழிற் சங்க செயல்பாட்டாளராகவளர்ச்சியடைந்தார். அவரின் நினைவு கூறத்தக்க முக்கியப் போராட்டம் என்பது 1961ம் ஆண்டில் தோழர் சீனிவாசராவ் தலைமையில் நிலச் சீர்திருத்தம் கோரி கோவையில் இருந்து சென்னைவரை நடைபெற்ற நடை பயணத்தில் அப்புதனது 20 தோழர்களுடன் முக்கிய பொறுப்பாளராக கலந்து கொண்டார் என்பதே. இது குறித்து அவருடன் இருந்த பல தோழர்கள் இதுற்றி சிலாகித்து பேசி இருக்கிறா்கள்.

கட்சி மீது அதிருப்தி,இந்நிலையில் சி.பி.ஐ. கட்சியின் மையக் குழுவால் முன்வைக்கப்பட்ட திருத்தல்வாதக் கோட்பாட்டுகளினால் கட்சியில் உள்ள புரட்சிகரமான சக்திகள் தொடர்ந்து அதிருப்தி அடையத் தொடங்கினர். அணிகளின் எந்த வித கருத்துக்களுக்கும் காது கொடுக்காமல் மதுரை மாநாடு, அமிதசரஸ் பேராயம், விஜயவாடா பேராயம் என; கட்சியின் தியாகத்தையும்லட்சிய உணர்வையும் மெல்ல மெல்ல டாங்கே, அஜய்கோஷ் உள்ளிட்ட திரிபுவாத குப்பல்கள் பலிகொடுக்கத் தொடங்கினர். அப்பு உள்ளிட்ட கட்சியில் உள்ள பெரும் பகுதியான தோழர்கள் கட்சியின் கீழ்கண்ட நிலைபாட்டில் அதிருப்தி அடைந்திருந்தனர்.

1. இந்தியாவின் சுதந்திரம் போலியானது என்ற தோழர். இராஜேஸ்வரராவ் கால 1950 ம் ஆண்டைய பழைய வரையரைகளை காற்றில் பறக்க விடப்பட்டு 1955-ம் ஆண்டுக்குள்ளாக சி.பி.ஐ. இந்தியாவை முழுசுதந்திரம் படைத்த இறையாண்மையுடன் கூடியநாடு என ஏற்றுக் கொண்டது.

2. எந்த வரையரையும் இல்லாமல்ஒட்டுமொத்த இந்திய உள்நாட்டு முதலாளிகளையும்ஏகாதிபத்தியஎதிர்ப்பாளர்கள் என வகைபடுத்தியது.

3. மக்கள் ஜனநாயகத்தை அடையவும், பிறகு சோசலிசத்தை எட்டவும்பராளுமன்ற தேர்தல்பாதையை தேர்ந்தெடுத்தது.

கட்சியின் இப்போக்கினால் மெல்ல மெல்ல புகையத் தொடங்கிய உட்கட்சிப் பூசல்1962ம் ஆண்டுவாக்கில் வெடிக்கத் தொடங்கியது. 101 உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பேரவை உறுப்பினர்களில் ஒருவராக அப்பு அப்போது இருந்தார். அப்பு, கட்சியின் திரிபுவாதத்திற்கு எதிரான போக்கை கட்சி அணிகள் மத்தியில் கொண்டு போவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

1962 ம் ஆண்டு பாலக்காடுசென்று ஏ.கே. கோபாலனைச் சந்தித்து அதிருப்தி யாளர்கள் சார்பாக ஓர் பத்திரிக்கையை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். அப்புவுடன் (பின்னாளில் என்.சி.பி.எச்.ன் மேலாளராக பொறுப்புவகித்த) தோழர். கீதானந்தனும் உடனிருந்தார்). ஏ.கே.கோபாலன் சாத்தியமிருந்தால் பத்திரிக்கை நடத்துங்கள் என ஆலோசனை வழங்கினார். கோவை திரும்பிய தோழர். அப்பு; ராமுண்ணி, கண்ணாக்குட்டி , பூபதி, உள்ளிட்ட தோழர்களின் உதவியோடு பத்திரிக்கைக்காக நிதிதிரட்டலில் ஈடுபட்டார். பத்திரிக்கை தொடங்கு வதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்தான் நேரு தலைமையிலான இந்திய அரசு இந்திய- சீனப்போரில் தேசதுரோகம் இழைத்து விட்தாகக் கூறி கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது.

நாடு முழுவதும் சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டு கடலூர்சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தோழர் அப்புவும் ஒருவர். சுமார் ஓர் ஆண்டுகாலம்வரை சிறையில் இருந்த தோழர் அப்பு,வெளிவந்த பிறகு கோவை தொழிலாளர்களிடம் நிதிதிரட்டினார். அவரின்முன்முயற்சியால் கோவைத் தொழிலாளர் வர்க்கம்கொடுத்த நிதியைக் கொண்டு, செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம் எனும் வாசகத்தோடு தீக்கதிர் வார இதழ் 1963-ம் ஆண்டு ஜுன் 29-ம்தேதியன்று அப்புவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. கட்சியானது அமைப்பு ரீதியாக பலமுறை பத்திரிக்கையை நிறுத்தக் கோரியும் அதை ஏற்காது அப்பு தொடர்ந்து நடத்தி வந்தார்.

சி.பி.எம். கட்சிதோன்றுதல்...

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும் சூழலுக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப, கலகத்தாவில் 1964-ம் ஆண்டு ஆக்டோபர் 31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவு பட்டதை உணர்த்தியது. ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக நாடகமாடிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு தொடங்கியது பேராயம் சி.பி.ஐ யின் வெளிப்படையான துரோகத்தை எதிர்த்து, புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் தலைவர்களின் உணர்ச்சி மயமான உரைகளும் ஆக்கபூர்வமாக செயல்பட்ட தோழர்கள் பலரையும் அதில் இணைத்தது. ஏறத்தாழ சுமார் ஒரு வருடகாலமாக புதியதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கென தோழர்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் புதிய கட்சியின் (தொடக்கத்தில் இரு கட்சிகளுக்குமே சி.பி.ஐ எனத்தான் பெயர் இருந்தது. சின்னங்கள் ஒதுக்கீடுதொட்பாக எழுந்த சிக்கலில் தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படியே புதிய கட்சி சி.பி.ஐ.(எம்) என ஆனது.) சி.பி.ஐ(எம்) கட்சியின் தலைமைக் குழுவானது 1967-ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும், காங்கிரஸ் அமைச்சரவையை தூக்கியெறியுமாறும் அணிகளுக்கும், மக்களுக்கும் அரைகூவல் விடுத்தது.மேலும் எதிர் கூட்டணி உருவாக்க பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன்மூலம் தெலுங்கானா பாணியிலான ஆயுதம்தாங்கிய வர்க்கப் போராட்டம் என்பதை நடைமுயைில் அது கைவிட்டது. சி.பி.ஐ.யோடு ஆழமாக கருத்து வேறுபாடுகளோடு வெளிவந்த அப்பு போன்ற தோழர்களுக்கு புதிய கட்சியின் இந்த அழைப்புபெரும் அதிர்ச்சியைத் தந்தது. தேர்தலை சந்தித்த கட்சி எட்டு மாநிலங்களில் காங்கிரஸை தோற்கடித்தது. கம்யூனிஸ்டுகளின் கூட்டணி மூலம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்குவந்தது.

கட்சியின் அப்போதைய செயலாளர் சுந்தரையா மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவுக்கு சரணாகதி கடிதம் எழுதியது, இ.எம்.எஸ் பாக்கிஸ்தானுக்கு எதிராக போர் செய்த ஜவான்களுக்கு மக்களை இரத்த தானம்செய்யக் கோரியது என படிப்படியாக சி.பி.எம். மின்செயல்பாடுகளின் மீது தோழர் அப்புவுக்கும் இதர புரட்சிகரத் தோழர்களுக்கும் அதிருப்தி தோன்றியது. சாரம்சத்தில் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய இரண்டு திரிபுவாதிகளுக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை சி.பி.எம்மின் நடைமுறை உணர்த்தியது. தங்களின் புரட்சிகர நோக்கமானது நவீன திரிபுவாதிகளால் பாழாவது கண்டு மெய்யான புரட்சியாளர்கள் பதைபதைத்தனர். தோழர் அப்புவின் தலைமையில் உட்கட்சியில் நவீன திரிபுவாதம் குறித்தும் அதை அம்பலப் படுத்தியும், புரட்சிகரத் தோழர்கள் போராடினர்.

வசந்தத்தின் இடிமுழக்கமான நக்சல்பாரி....

தோழர்களின் உட்கட்சிப் போராட்டம் இப்படியிருக்க இந்தச் சூழலில்தான் மேற்கு வங்கத்திலிருந்து செவி குளிரும் சேதியொன்று ஒட்டுமொத்த இந்திய புரட்சியாளர் உள்ளங்களிலும் வசந்தத்துக்கான இடி முழக்காமாய் இறங்கியது. அதுதான் நக்சல்பாரி.

1. நிலப்பிரபுத்துவம், தரகு முதலாளித்துவம், அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூகஏகாதிபத்தியம் ஆகியநான்குமே இந்திய மக்களின் அடிப்படையானஎதிரிகள்.

2. உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசுயந்திரத்தை தூக்கியெறிய ஆயுதப்போராட்டம்ஒன்றே தீர்வு.

3. பாராளுமன்றம் என்பது பன்றிகளின் தொழுவம்.

4.திரிபுவாதிகள் மற்றும் நவ திரிபுவாதிகளின் மக்கள் விரோதப் போக்கை சித்தாந்த ரீதியில் உறுதியாக அம்பலப் படுத்துவோம்.

என அது அழைத்த போதுபெரும் புரட்சி வேட்கையோடு தோழர்அப்பு அதன்பால் ஈர்க்கப்பட்டார். இது தொடர்பாக சி.பி.எம். முடன்நடைபெற்ற விவாதத்தின் போது எவ்விதஜனநாயக மத்தியத்துவமும் அற்று அப்பு உள்ளிட்ட பலதோழர்கள் கட்சியில் இருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப் பட்டனர். கோவை மாவட்டத்தில் மட்டும் கட்சியில் இருந்தமாவட்டக் குழு உறுப்பினர்களில் 21 பேரில் 14 பேர் நீக்கப்பட்டனர். பல கட்சி அமைப்புகள் கலைக்கப்பட்டன. இந்நிலையில்தான் தோழர் அப்பு கல்கத்தா சென்று நக்சல்பாரியின் முக்கியக் தலைவரான தோழர் சாருமஜூம்தாரைச் சந்தித்தார். நவம்பர் 11,1967ல் கல்கத்தாவில் உள்ள ஷாஹித் மினார்மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் அப்பு நக்சல்பாரிப் பாதையின் உன்னதம் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்த நாட்களில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவிலும் பங்கெடுத்தார். மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட சி.பி.ஐ.(மா.லெ)மையக் குழுவிலும் தமிழகத்திலிருந்து ஒரே ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு

கல்கத்தாவிலிருந்து அவர் வந்தவுடன் பழைய கட்சியின் மீது அதிருப்தி அடைந்திருந்த, கட்சியின் அராஜகப் போக்கினால் நீக்கப்பட்ட தோழர்களை ஒருங்கிணைக்கும் செயலில் ஈடுபட்டார்.

அவரின் முயற்சியால் 1968 மார்ச் மாத வாக்கில் 16 தோழர்களைக் கொண்ட தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கினார்.

ஏறத்தாழ ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட மற்றும் கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன தோழர் சாருமஜும்தார் தமிழகத்துக்கு வந்து ஒருங்கிணைப்பு தொடர்பான பணிகளைச் செய்ததை இன்றைக்கும் மூத்தநக்சல்பாரி தோழர்கள் நினைவு கூர்கிறார்கள்.

தமிழ் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வெளியிட்ட அறிக்கையில் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படும் அரசு எந்திரத்தை உடைத்தெறியாமல் முதலாளித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று எண்ணுவதைக் காட்டிலும் வேறெந்த மாயையும் இருக்க முடியாது. வர்க்க ஆட்சியின் கருவிகளை உடைத்தெறிவதற்கான குறுக்குவழி வேறெதுவும் இல்லை. மாசேதுங் சிந்தனையால் வழிநடத்தப் படுகின்ற நக்சல்பாரிப் பாதைதான் இந்தியப் புரட்சியின் பொதுப் பாதையாக விளங்குகிறது. இந்தியப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்று வதற்கான பாதையும் அதுவே என அறிவித்தது. தமிழ்நாடு ஒருங்கிணைப்புக் குழுவானது புரட்சிக்கனல் எனும் பத்திரிக்கையை நடத்தியதாக தகவல்கள் இருக்கின்றன.

நக்சல்பாரிப் பாதையை ஏற்று தமிழக ஒருங்கிணைப்புக் குழுவும் பல்வேறு மக்கள் விரோத சக்திகளை களையெடுக்கும் வேலையைக் கையாண்டததோடு பல இடர்களுக்கு மத்தியிலும் ஒருவலிமையான புரட்சிகர கட்சியினை கட்டியமைக்கும் மாபெரும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது. தோழர் அப்பு 1970 ஆண்டு அக்டோபர் மாதம் பீகாரில் நடக்கவிருந்த மையக் குழுவின் அரசியல் தலைமைக் குழுகூட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார். இது தொடர்பாக அவர் செயல்பட்டுக் கொண்டிருந்த போது வேலூரில் ஓர் தனியார் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பிறகு எவ்வித தடயமும் இல்லாமல் கொலைசெய்யப்பட்டு விட்டார்.தோழர் அப்புவின் படுகொலையை வெளிப்படையாக அறிவித்தால் மக்களிடம் எதிர்ப்பு நேரிடும் என்று கருதிய காவல்துறை அதை மூடி மறைத்துவிட்டது. இன்றளவும் காவல் துறை ஆவணங்களில் காணாமல் போனதாகவே பதிவு உள்ளது.

நச்சல்பாரியின் விதைநெல்லாய் விளங்கும் தோழர் அப்புவின் படிப்பினை பெறத்தக்க வாழ்வானது இன்றைக்கும் புரட்சிகர இளம் தலைமுறைக்கு படிப்பினை தரத்தக்கதாகும் .கம்யூனிஸ்டுகளுக்கு சுயசரித்திரம் ஒன்றும் பெரிதில்லைதான் என்றாலும் ஓர் இயக்கத்தின் முதுகெலும்பாய் வீற்றிருக்கும் அப்புவின் வாழ்வினை விரிவாக பதிவு செய்யவேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நக்சல்பாரியின் நியாயம் குறித்தும் அதன் சாத்தியப்பாடு குறித்தும் அவரின் வாழ்கை பேசும். புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுக்கும் பல தோழர்களும் இதுநாள்வரையிலும் அப்பணியை செய்யாது இருப்பது வேதனை மிக்க ஒன்றாகும்.

செப்டம்பர் 12 தோழர் பாலன் ஆளும் வர்க்கப் போலீசாரால் கொல்லப்பட்ட தினம்.

யார் இந்த பாலன்? சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி படித்தப் பட்டதாரி. தருமபுரி குமாரசாமிப் பேட்டையைச் சேர்ந்த ஒரு நெசவாளரின் மகன். வசந்தத்தின் இடி முழக்கமென எழுந்த நக்சல்பாரிஇயக்கத்தின் முதல் வெகுசன களநாயகன். 1980 களில் தருமபுரியில் ஆர்த்தெழுந்து, ஆதிக்கப் பண்ணைகளை அழித்தொழித்த முன்னோடி. அவர் செய்த போராட்டங்கள் பல. உதாரணமாய் சொல்ல வேண்டுமானால், செவத்தாக்கவுண்டன் என்கிற கந்து வட்டிக்காரன் மிக கொடியவன். இவனது மகன் அரங்கநாதன் அன்றைய ஆளும் கட்சி எம்.எல்.ஏ. இந்த அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி செவத்தான் எளிய மக்களை கந்துவட்டிக் கொடுமைகள் செய்து வாட்டி வதைத்தான். ஒருமுறை எளிய கூலி தொழிலாளியை செவத்தான் அடித்து விட்டான் அந்ததொழிலாளி சமீபத்தில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டவர். அடிபட்ட வேகத்தில் மயக்கமாகி விட்டார். விசயத்தை கேள்விப்பட்ட தோழர் பாலன் தனது வாலிபர் சங்கத்தோழர்களோடு களத்துக்கு வந்தார், கந்து வட்டிக்காரன் செவத்தானைமரத்தில் கட்டி வைத்து உதைத்தார் களத்துக்கு எம்.எல்.ஏ அரங்கநாதன் தூண்டுதலால் போலீஸ் வந்தது இன்ஸ்பெக்டர்சிவகுரு செவத்தானை விடுவிக்கச் சொன்னான். தோழர் பாலன் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய நட்ட ஈடு கேட்டார். அன்றைய மதிப்பில் நானூறு தர முடிவாகியது. செவத்தானிடம் அப்போது முன்னூறு மதிப்புள்ள சைக்கிள் இருந்தது. மீதி நூறு ரூபாய்க்கு இன்ஸ்பெக்டர் சிவகுருதன் கையால் புரோநோட்டு எழுதிக்கொடுத்தான். இதைத்தான் தோழர் பாலன் தன்கையில் வைத்துக் கொண்டு மேடைதோறும் ஒரு பணக்காரனுக்கு புரோநோட்டு எழுதித் தரும் போலீஸ் ஏழைக்காக எழுதி தருமா? என வினா எழுப்பினார்.1980ஆம் ஆண்டுகளில் அன்றைக்கிருந்த மக்கள் திரள் அமைப்பு(RYL) என்று அழைக்கப்பட்ட நக்சல்பாரி கட்சியின் தலைமறைவு அமைப்பால் வழிநடத்தப்பட்ட வீரமிகு போராட்டங்கள் மோதல்கள் என்ற பெயரால் பல்வேறு முன்னணி தோழர்கள் கொன்றொழிக்க பட்டார்கள். அன்றைய தமிழக ஆட்சியாளர்களால் இருண்ட பகுதி என வர்ணிக்கப்படும் தர்மபுரி பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள் நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் கந்துவட்டி கட்டப் பஞ்சாயத்து போன்ற கொடுமைகளால் கஷ்டப்படுகிறார்கள். நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிராக தோழர் பாலன் தலைமையிலான வாலிபர் சங்கம் மக்களை திரட்டி எவ்வாறு போராடியது. மக்கள் திரள் போராட்டங்களால் விழிபிதுங்கி நிற்கும் ஆட்சியாளர்கள் பாலன் மற்றும் முன்னணி தோழர்களை கொன்றுவிட்டால் புரட்சியை நசுக்கி விடலாம் என்று எண்ணி பல்வேறு சூழ்ச்சிகளில் முன்னணி தோழர்களை கொல்கின்றன. இவை இன்றும் நாம் முழுமையாக மறந்தே விட்டோம். ஆக சற்று திரும்பிப் பார்ப்போம் அன் நாட்களை...

அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வரும் சாதியம் தகர்க்கப்படுகிறது. ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதையை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் ஜாதி ஆதிக்க சக்திகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் அன்று சாட்சி பகிர்ந்தன. தர்மபுரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராகவும் தனிக்குவளை வைப்பதற்கு எதிராகவும் புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. தமிழகத்தில் ஒரு முன்னுதாரனமான மக்களின் தலைவனாக பாலன் திகழ்ந்தார். சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் அவர். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதி கடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். அந்த மாபெரும் போராட்ட வரலாறு கொஞ்சமும் பதிவு செய்யப்படாமலேயே இன்றைக்கும் கிடக்கிறது.

தனித் தேனீர் குவளைக்கு எதிரானப் போரட்டம் பாலனின் சாதித் தீண்டாமைக்கு எதிரான பிரதான போரட்டமாகும். பிறப்பால்தானே உயர்ந்தவன் எனும் மமதையில், சேரிக்காரன் வாய்வைத்த கிளாசில் நான் டீ குடிக்கமாட்டேன் என்ற உயர்சாதி ஆதிக்க அடையாளங்களை, தீவைத்து எரித்தவன் அவன். அந்த டீ டம்ளர் உடைப்புப் போராட்டம் எந்த குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்ததோ அதே சாதியினரின் தலைமையில் நடந்ததே அதன் வெற்றிக்குக் காரணம்.

நத்தம், மாரவாடி என இரண்டு கிராமங்களுக்கு இடையே தகராறு, வெட்டுக் குத்து என பெரும் பிரச்சனை. உள்ளூரில் உள்ள அனுதாபிகளின் வேண்டுதலுக்கு ஒப்ப பாலனும் பகுதியில் இருக்கும் தோழர் ஒருவரும் சமாதானம் செய்து வைக்கப் புறப்படுகின்றனர். ஒரு கல் பாலனின் தலையினை பலமாய்த் தாக்ககாயத்திலிருந்துகுருதி பீறிடுகிறது. காயத்துக்குப் பின்னால் அவர் ஆற்றிய அந்த மகத்தான உரை ஆயிரமாண்டு கால ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சி வலையை உடைத்து எழுச்சி கொள்ள வைத்ததாகவும், ஒரு நாடக நிகழ்வுபோல் இரண்டு ஊர்மக்களும் முரண்பாடு களைந்து கைகோர்த்ததாகவும் உடனிருந்த தோழர்கள் இன்றைக்கும் கண்களில் நீர்பொங்க நினைவு கூறுகின்றனர். மேலும் கூறுகின்றனர் வழக்கமாகப் பொதுக் கூட்டமெனில் ஓரிரு நாட்களுக்கு முன்னரே அந்தப் பகுதிக்குச் சென்றுவிடுவார். அங்கிருக்கும்மக்களிடம் இரண்டறக் கலந்து பகுதிப் பிரச்சனைகளை உள்வாங்கிக் கொள்வார்.அடுத்த நாள் பேசும்போது உள்ளூர் பிரச்சனையை விளக்கி அதன்வேர் எவ்வாறு அரசின் மக்கள் விரோதப் போக்கிலிருந்துஎழுகிறது என விளக்குவார். இப்படி பட்டவரை வர்க்க அரசு விடுமா? ஏழைப்பங்காளன் எனபீலாவிட்ட எம்.ஜி.ஆர்ஆணையின் படி வால்டர் தேவாரம் என்ற இரத்த வெறி பிடித்த போலீஸ்உயரதிகாரி தோழர் பாலனை சீரியம்பட்டி என்ற கிராமத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கைது செய்தான். பாலக்கோடு போலீஸ் ஸ்டேசனில் பாலனின் காலை முறித்தான். பிறகு, பாலன் இறந்து விடுவார் என்று நினைத்து தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் தூக்கி கடாசினான். ஆனால், அன்புள்ளம் கொண்ட மருத்துவர்கள் அவரை காப்பாற்றி விட தேவாரம் வெறி கொண்டு பாலனை சென்னை மருத்துவமனைக்கு மாற்றினான். வழியெங்கும் சித்ரவதைகள் தொடர்ந்தன. இதன் காரணமாய் சென்னை மருத்துவமனையில் தோழர் பாலன் வீரமரணமடைந்தார். இறக்கும் தருணத்தில் தோழர் சொன்ன வார்த்தைகள்இதுதான் ‘என்னைக் கொன்று விடலாம். என் கொள்கையை கொல்லமுடியாது. என்னைப் போல எண்ணற்ற இளைஞர்கள் போராட்டக் களத்துக்கு வருவார்கள். இந்த நாடு விடுதலை பெறும். மார்க்சியலெனினியம் நீடூழி வாழ்க!’ .

பகத்சிங்கைகூட எதிரிகள் இந்த அளவுக்கு சித்ரவதை செய்யவில்லை. இதே செப்டம்பரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆளும் வர்க்கத்தால் கொல்லப்பட்ட நக்சல்பாரி தியாகிகள் தோழர் அப்பு, தமிழரசன், சந்திரகுமார் சந்திரசேகர், மாடக்கோட்டை சுப்பு என நீளும் பட்டியல்... தோழர் பாலன் அரசின் அராஜக செயல்பாடுகளால் அடித்துக் கொல்லப்பட்டு இன்றோடு 42 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 15 நக்சல்பாரி புரட்சியாளர்கள் தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஏழைகளின் பங்காளன் என நீட்டி முழங்கிக் கொண்டிருந்த எம்ஜிஆரின் பாசிச மறுப்பக்கம் அது. தமிழகமெங்கும் நக்சல்பாரிகளின் உதிரம் உறையாத காவல் நிலையங்களே இல்லை என்ற கொடூரமான காலகட்டம் அது.

அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் தமிழக வரலாற்றில் நக்சல்பாரிகளுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு. படுகொலை செய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், சித்திரவதை செய்யப் பட்டவர்கள், ஆயுள்தண்டனைகளுக்கு ஆளாகி சிறைகளிலிலேயே தனது இளமைக் காலங்களைத் தொலைத்தவர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாக வரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம். பல இளைஞர்கள் வழக்குகளை முடித்து பிணையில் வெளிவருவதற்கு முன்பாகவே சிறை வாசலில் மற்றொரு வழக்குக்காக கைது செய்யப்படுவதும்,புரட்சிப் பணிகளில் ஈடுபட்ட ஆண்கள் ஜெயிலில் இருக்கும் சமயங்களில் “பொதுவுடமைன்னா தன்னோடு படுக்கிறது கூடவா”என பெண்களிடம் சீண்டுவதுமாக ஈன செயலில் ஈடுபட்டது கேடுகெட்ட தமிழக காவல்துறை. தனது சிறைஅனுபவம் பற்றிய குறிப்புகளில் தியாகுசொல்வார். ‘சிறைக்குள் யாரும் நீண்ட நாளைக்கு தைரியசாலிகளாக நடிக்க முடியாது என்று.’ அது போலத் தான் நடைமுறையில் இயங்குகின்ற புரட்சிகரஇயக்கங்களிலும். அங்கு மக்கள்மீது பற்று கொண்டவர்களுக்கும் எஃகு போன்ற மன திடம் கொண்டவர்களுக்கும், தான் கொண்ட லட்சியத்தில் உறுதியானபிடிப்பு உள்ளவர்களுக்கு மட்டும்தான் வேலை. தலைமையில் இருந்தவர்களின் அகவயவாதப் போக்கினாலும், புரட்சிக்கு எதிரான மனோபாவங்களாலும், துரோகத்தனத்தினாலும் எண்ணற்ற தோழர்களின் தியாகங்கள் விழலுக்கு இறைத்த நீராய் வீணாகிப் போயின.அடக்குமுறை காலங்களில் பேசுகின்ற மேடைகளில் இருந்து ஓடி ஒளிந்துவீட்டில் பதுங்கி இருந்துவிட்டு ஓய்வுபெற்று ‘பாதுகாப்பாக’வீதிக்கு வந்திட்ட பின்னால் வீராவேசம் பேசுபவர்களும், நான்கு வரிகளை எழுதிவிட்டுநானும் புரட்சியாளன் என்று காலரை தூக்கிக்கொண்டு, திரிபவர்களும், அடுத்தவர்களின் மீது முத்திரை குத்துவதற்கு என்று ரப்பர் ஸ்டாம்புகளைதயாரித்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பவர்களும், கைது நடவடிக்கைகள் இல்லை என்றால் மட்டுமே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்பவர்களும், போஸ்டர் போட்டு அதைமட்டுமே புரட்சிகர பணி என்று சிலாகிப்பவர்களும் இன்றைக்கு நக்சல்பாரிகள்என்று அறிவித்துக் கொண்டு இருக்கின்ற வினோதங்கள் அரங்கேறிக் கொண்டிருக் கின்றன. எது எப்படி ஆனாலும் ஒன்றுமட்டும் நிச்சயம். என்ன நோக்கத்திற்காக அன்றைக்கு இந்திய வானில் நக்சல்பாரி இயக்கம் வசந்தத்தின் இடிமுழக்கமாக எழுந்ததோ அந்த நோக்கம் இன்றைக்கும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது. முன்பைவிட கூர்மையாகவும், ஆழமாகவும். தேவைகள்தான் வரலாற்று இயக்கங்களை எப்போதும் தீர்மானிக்கின்றன. தனது எல்லா தடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச் சென்றதா என்றால் அவர்களின் உயரிய அர்பணிப்பும் தியாகமும் சரியான மார்க்சிய லெனினிய புரிதல் இன்மையால் இடதுசாரி சாகசவாதத்தால் எதிரிக்கு ஏற்படத்த வேண்டிய பேரிழப்பிற்க்கு பதில் தன்னையே அழித்துக்கொண்டது.

மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை நக்சல்பாரி இயக்கமானது நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடித்து,புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத்தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றி யமைத்தல், புதியஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கு வதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப்பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையானது பாட்டாளிவர்க்கப் போராட்டம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும்.

இந்த சூழ்நிலைகளை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப்படும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள், மற்றும் ரசிய புரட்சியிக்கு முன்னும் பின்னும் எழுந்த திர்த்தல்வாதத்தையும் சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடிய அனுபவத்தை கிரகிக்காத நிலை, அதாவது கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு லெனின் முறியடித்தார் என்பதை பார்க்காத தன்மை ஆகியவற்றை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தைநிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனின்யமும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அனுபவமும் நமக்கு சுட்டிகாட்டுகிறது. ஆகவே நமது தோழர்களின் உயரிய தியாகத்தை போற்றும் நாம், அதற்க்கு ஒருஒன்று பட்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேண்டும் என்பதனை உணரவேண்டும். அதற்காக நாம் மார்க்சிய தத்துவத்தை பயில வேண்டும். அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான குறிப்பான பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தோழர் பாலன் இறந்துவிட்டார். வர்க்கமெனும் வலிய தத்துவம் கொண்டு சாதிய அரக்கனுக்கு சாவுமணி அடிக்க முடியுமென்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்த தோழர் பாலன் இறந்துவிட்டார். அவர் எந்த அரக்கனை எதிர்த்து தன்னுயிர் ஈந்தாரோ அவர் எந்த ஒற்றுமைக்காக உயிருள்ளவரை பாடுபட்டாரோ அந்த ஒற்றுமை இன்று கானல் நீராக நிற்கிறது. அவரின் பாதம் பட்டுப் பெருமைபெற்ற மண் இன்று சாதியச் சகதியில் மூழ்கித் திளைக்கிறது.வழக்கம் போலவே ஆண்டுக்கு ஒருமுறை அப்பு, பாலன் சிலைக்கு வண்ணம்பூசி, சடங்கு செய்து கொண்டிருக்கிறோம் நாம்.

உள்ளபடி பாலனின் மகத்துவமான போராட்டத்தை பொருளாதாரப் போராட்டமென சிறுமைப்படுத்திவிட்டு, பாலனின் பெயரை மட்டும் "வாணிக நற்பெயராக" பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் சிலர். கம்யூனிஸ்டுகள் பல்வேறு கவர்ச்சியான பெயர்களில் சிதறி சின்னாபின்ன மாகியிருக்கின்ற சூழலில் சாதியவாத சக்திகள் அந்த இடத்தை கச்சிதமாக ஆக்கிரமித்திருக் கின்றன.சாதியத்தின் இருப்பு சாதிய சங்கங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை என்பதற்கு ஏற்ப சுயநலக் கூட்டமான பாமகவின் விஷப் பிரச்சாரங்களுக்கு பின்னால் இன்று பாலன் வீழ்த்தப்பட்டுநிற்கின்றார். இதில் தலித்தியம் பேசுகின்ற விசி கட்சியனரும் ஒன்றும் விதி விலக்கில்லை. வர்க்க ஒற்றுமைகளை கூறுபோட்டு விட்டதான ஆத்ம திருப்தி அவர்களின் எழுத்துக்களில் மிளிர்கின்றன. இன்றைக்கு ஒவ்வொரு ஆதிக்க சாதி இளைஞனுக்கும் தலித் எதிரியாக்கப்பட்டிருக்கலாம். இருதரப்பினரின் வாழ்வியல் நெருக்கடி யாவற்றுக்கும் இன்னொரு தரப்பே காரணம் என்ற கற்பிதம் பெரும் தலைவர்களால் போதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் மானுடம் நிலைக்க வேண்டுமானால், மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாக வேண்டுமானால், அவர்களின் வறிய வாழ்நிலையிலிருந்து மீண்டு எழ வேண்டுமானால் நிச்சயம் நாம் பாலனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். அவரின் அணையாத தீபத்திலிருந்துதான் எழுகின்ற சிவப்புச் சூரியனுக்கு ஒளிவார்க்க வேண்டும்.

வாழ்க செப்டம்பர் தியாகிகளின் வீர நினைவுகள்.

இந்தப் பகுதி எழுத சிலர் தோழர்களுடன் உறையாடல் மற்றும் 88 சிறப்பு கூட்ட அறிக்கை, சுந்தரய்யா சிந்தனைகள், தோழர் பாலன் புரட்சிகர மக்கள் எழுச்சியின் நாயகன் ஆகிய நூல்கள் இன்னும் பல தோழர்களின் பங்களிப்பு

தோழர் தியாகு, தோழர் பாரதிநாதன் மற்றும் தோழர் பாவேல் இன்பன் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுத்தவை மற்றும் எமது தேடுதல்களும் அடங்கும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்