அடையாள அரசியல் என்பது மார்க்சியத்திற்கும் மக்களுக்கும் எதிரான அரசியல் சித்தாந்தமே.!தேன்மொழி

 


சமூகத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறை பற்றி மார்க்சியம் காட்டும் வழி மனிதசமூகம் உயிர்வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்குஉணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். ஆகவேமனித சமூகத்தின் வரலாற்றை புரிந்துகொண்டு சமூகத்தைமாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு சமூக விஞ்ஞானமாகிய மார்க்சியம்போதிக்கிறது.

சமூக அடித்தளம் மற்றும் மேல்தளம் பற்றிய மார்க்சிய வரையறை ”தமது வாழ்க்கையில் சமூக உற்பத்தி நடத்துவதில் மனிதர்கள் திட்டவட்டமான உறவுகளில் சம்பந்தப் பட்டுள்ளனர். இந்த உறவுகள் அத்தியாவசியமானவை.

மனிதனுடைய சித்தத்திற்கு, விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டவை, இந்தஉற்பத்தி உறவுகள் அவர்களுடைய பொருளாயாத உற்பத்தி சக்திகள்வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்திற்கும் பொருத்தமாய் உள்ளன. இந்தஉற்பத்தி உறவுகள் அனைத்தும் ஒன்றாக சேர்ந்த ஒரு முழுமைதான்சமுதாயத்தின் பொருளாதார அமைப்பாக அமைகிறது. அதுதான் உண்மையானஅடிப்படை. அதன் மீதுதான் சட்டம், அரசியல் என்கிற கட்டுக்கோப்புநிர்மாணிக்கப்பட்டு நிற்கிறது. அந்த அஸ்திவாரத்திற்கு பொருத்த மாகத்தான் சமுதாய உணர்வின் திட்டவட்டமான வடிவங்கள் அமைகின்றன.

பொருளாயாத வாழ்வின் உற்பத்தி முறைதான் சமூக வாழ்க்கையின் அரசியல்வாழ்க்கையின், சிந்தனைப்போக்கின் ஓட்டத்தை பொதுவாக நிர்வகிக்கிறது.

மக்களின் நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. அதற்கு மாறாகஅவர்களின் சமூக நிலைமைதான் மக்களின் உணர்வை நிர்ணயிக்கிறது.........

பொருளாதார அஸ்திவாரம் மாறுதலடைகிற போழுது அதன்மீதுஎழுப்பப்பட்டிருந்தபிரமாண்டமான கட்டிடம் முழுவதும் அதிதுரிதமாக மாற்றப்படுகிறது. இந்த மாறுதல்களை கவனிக்கும் காலத்தில் இரண்டையும் அதாவது உற்பத்தியின் பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் பௌதீக மாறுதல்களையும் மற்றொரு புறத்தில் சட்டம், அரசியல், மதம், கலாச்சார ஞானம், தத்துவம் முதலான சுருக்கமாகச் சொன்னால் சித்தாந்த ரீதியான வடிவங்களையும் எப்பொழுதும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும். இந்த சித்தாந்த வடிவங்களுக்கு உள்ளேதான் இந்த மோதல் பற்றிய உணர்வு மனிதர்களுக்கு ஏற்பட்டு ஒரு முடிவு காணும்வரை போராடுகிறார்கள்’’ (காரல்மார்க்ஸ்) சமூக அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானம் குறித்த சிறுவிளக்கம் உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்தி மற்றும் உற்பத்தி உறவைஉள்ளடக்கியது. உற்பத்தி சக்தி என்பது உற்பத்தியில் ஈடுபடும் மனிதர்கள்,உற்பத்திக் கருவிகள், திறமை மற்றும் அவர்களது அனுபவம் ஆகியவையாகும்.

இந்த உற்பத்தி சக்தியானது தொடர்ச்சியாக வளர்ந்து செல்லக்கூடியது. இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு ஏற்பவே உற்பத்தி உறவுகள் அமைகின்றன. இந்த உற்பத்தி உறவு என்பது உற்பத்தி சாதனங்களுக்கும் உற்பத்தியில் ஈடுபடும் மக்களுக்கும் இடையிலான உறவாகும். இந்த உற்பத்தி உறவேசமுதாயத்தின் அடிக்கட்டுமானமாக உள்ளது. மனிதனது ஆரம்ப காலத்தில்உற்பத்தி சாதனமானது மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருந்தது.

ஆதலால் அங்கு சுரண்டலோ வர்க்கங்களோ நிலவவில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிப் போக்கில் உற்பத்தி பெருகி, உபரி உருவாகி தனியுடமை தோன்றியதன் காரணமாக சுரண்டலும் வர்க்கங்களும் உருவாகின. இந்த வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமைவர்க்கப் பிரிவுகள் இருந்தாலும் எந்த உடமை வர்க்கப் பிரிவின் கைகளில் சமூகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியை நடத்தவும், உற்பத்தியில் ஈடுபடுபவர்களை அடக்கி சுரண்டுவதற்கான அதிகாரம் உள்ளதோ அவ்வர்க்கமே அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கம் ஆகும். இந்த ஆளும்வர்க்கத்தின் சுரண்டலையும் ஒடுக்கு முறையையும் பாதுகாக்கவும், நியாயப்படுத்தவும் நிலவும் உற்பத்தி உறவுகளை திடப்படுத்தவும் தனக்குரியஅரசியல் சித்தாந்த கொள்கைகளையும், நிறுவனங்களையும் நிறுவுகிறது. இந்தகொள்கை மற்றும் நிறுவனங்களே சமூகத்தின் மேற்கட்டுமானம் ஆகும். ஆளும்வர்க்கமானது தனது நலனுக்கான கருத்துக்களை மக்களின் கருத்தாகமாற்றாவிடில் அது ஆளும் வர்க்கமாக நீடிக்க முடியாது என்று மார்க்ஸ் கூறினார். இந்த அடிப்படையில் இருந்தே அடிக்கட்டு மானத்தை (உற்பத்திஉறவை, அல்லது வர்க்க உறவை) பாதுகாக்க மேற்கட்டுமானத்தை (கருத்தியல்தளத்தை அரசை,) நிறுவுகிறார்கள். 

காலனிய உற்பத்தி உறவு குறித்து முதலாளித்துவ காலகட்டத்தில் முதலாளிகள் அவர்களது சொந்த நாட்டிலுள்ள தொழிலாளர்களை சுரண்டுவதன் மூலமாகவே அவர்களது வாழ்வும் வளர்ச்சியும் இருந்தது. முதலாளித்துவம் வளர்ந்து ஏகபோக நிதிமூலதன முதலாளிகளாக அதாவது ஏகாதிபத்தியமாக மாறிய பின்பு தனது சொந்த நாட்டு தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவதோடு கூட காலனி நாடுகளைசுரண்டி கொள்ளையடித்து மூலதனத்தை திரட்டுவதன் மூலமாகவே அவர்களதுவாழ்வும் வளர்ச்சியும் உள்ளது. உழைக்கும் மக்களின் மீதான சுரண்டல் எந்தளவு ஒழிக்கப்பட்டதோ அந்தளவிற்கு ரஷ்யாவிலும் சீனாவிலும் முதலாளிகள் ஒழிக்கப்பட்டார்கள். அதுபோலவே இன்றைய காலகட்டத்தில் காலனி நாடுகளில் காலனி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு காலனி நாடுகள் எந்தளவிற்கு விடுதலை அடைகிறதோ அந்த அளவிற்கு ஏகாதிபத்திய காலனியவாதிகள் காணாமல் போவார்கள். ரஷ்யா மற்றும் சீனாவில்அடித்தளத்திலுள்ள நிலபிரபுத்துவ , முதலாளித்துவ மற்றும் அரைக்காலனிய உற்பத்தி உறவுகளை ஒழித்ததன் மூலமாகவே அந்த மக்கள் விடுதலைஅடைந்தார்கள். அதுபோலவே இன்றைய காலகட்டத்தில் இந்தியதுணைக்கண்டத்தில் நிலவும் காலனிய உற்பத்தி உறவை ஒழிப்பதன் மூலமேஇந்திய சமூகத்தில் மக்கள் விடுதலை அடைய முடியும். 

காலனிய உற்பத்திஉறவு என்றால் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக்கண்டத்தைகாலனியாக்கிய போது இங்கு நிலவி வந்த நிலபிரபுத்துவ உறவுகளைபாதுகாத்து வந்த நிலபிரபுத்துவ சமஸ்தானங்களோடு சமரசம் செய்துகொண்டார்கள். தனது சொந்த நாட்டில் நிலபிரபுத்துவ உற்பத்திஉறவுகளை அழித்து முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை வளர்த்தது போல்இங்கு நிலபிரபுத்துவ உற்பத்தி உறவை அழிக்கவில்லை மாறாக அதனை பாதுகாத்து மேலும் தீவிரப்படுத்தினான். ரயத்துவாரி, ஜமீன்தாரி முறையிலானகொடுமையான வரிகளைப் போட்டு விவசாயிகளை கசக்கிப் பிழிந்தான்.

பிரிட்டீஷ் முதலாளிகள் நிதிமூலதன ஏகாதிபத்திய முதலாளிகளாக மாறிய பின்பு இங்கு பிரிட்டீஷ் முதலாளிகளோடு போட்டியிட்டு சுதந்திரமாக வளரமுடியாத முதலாளிகளை பிரிட்டீஷ் நிதிமூலதன முதலாளிகளை சார்ந்த தரகு முதலாளிகளாக மாற்றினான். இந்த தரகு முதலாளிகளின் மூலதனம் மற்றும் தொழில்நுட்பமானது அவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல மாறாக ஏகாதிபத்திய முதலாளிகளோடு கூட்டு சேர்ந்தே இருந்தது. இந்த நிதிமூலதன ஏகாதிபத்திய காலகட்டத்தில் நிதிமூலதனத்தின் நலனுக்காக சேவை செய்யும் அரைநிலபிரபுத்துவ மற்றும் தரகுமுதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இணைந்தே காலனிய உற்பத்தி உறவாக அமைகிறது. 

பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட மேற்கட்டுமானம் குறித்து நிலப்பிரபுத்துவ சமூகமாக இருந்த மத்தியகால ஐரோப்பாவைப் போல இந்தியதுணைக்கண்டத்து காலனிய பொருளாதார உறவுகள் மீது மதங்களைக் கொண்ட மேல் கட்டுமானத்தை கட்டி அவர்கள் உருவாக்கிய காலனிய பொருளாதார அமைப்பை திடப்படுத்துவதற்கான வேலைகளை 18-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே பிரிட்டீஷார் செய்ய ஆரம்பித்தனர். மக்களை ஆட்சி செய்ய மத அடிப்படையிலான சட்டங்களை உருவாக்க முயற்சித்து இங்கு யதார்த்தத்தில் இல்லாத இந்து மதத்திற்கு ஒரு சட்டத்தை காலனிய இனவியலாளர் களையும், பிராமணர்களைக் கொண்டும் மனுதர்மத்தின் அடிப்படையில் ஒரு சட்டத்தொகுதியையும், இஸ்லாமிய சட்டத் தொகுதியையும் கொண்டு மேல் கட்டுமானத்தை நிறுவினர். நாடு முழுவதும் இந்த மதவாத சட்டங்களை அமல் படுத்தினர். இதன் மூலம் மறைமுகமாக ”இந்து, இந்துமதம்” என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்திய துணைக் கண்டத்து பெரும்பான்மையான மக்களுக்கு இந்து மதத்தை சார்ந்தவர்கள் என்ற எண்ணத்தை தொடர்ந்து ஏற்படுத்த முயற்சித்தனர். இதன் அடிப்படையில் காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ். மற்றும் முஸ்லீம்லீக் போன்ற அரசியல் அமைப்புகளையும் சாதி மத, மற்றும் இனவாத அமைப்புகளையும் உருவாக்கியும் ஆதரவுகொடுத்தும் காலனிய மேற்கட்டு மானத்தை கட்டியமைத்தான். இன்றைய புதியகாலனிய ஆதிக்க காலகட்டத்திலும் இந்த மேற்கட்டுமானமானது முன்னிலும் விரிவுபடுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டு புதிய முறையிலான மேற்கட்டுமானமாக வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக சாதிவாத, மதவாத, இனவாத,தொண்டுநிறுவனங்கள் மற்றும் அடையாள அரசியல் நிறுவனங்களைக் கொண்டு மேற்கட்டுமானமானது தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இந்திய ஆளும் வர்க்கங்களும், அடிமை வர்க்கங்களும் 

இந்திய ஆளும் வர்க்கங்களான ஏகாதிபத்தியங்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் தரகு முதலாளிகள் அதாவது உள்நாட்டு வெளிநாட்டுகளிடம்தான் அரசியல் அதிகாரம் உள்ளது ஆகவேதான் இவர்களை ஆளும் வர்க்கங்கள் என்கிறோம். இவர்கள் அல்லாத பிற உடமை வர்க்கங்களான சிறு குறு முதலாளிகளும் சிறு குறு விவசாயிகளும் உடமை வர்க்கங்களாக இருந்தபோதும் இவர்களிடம் அரசியல் அதிகாரம் இல்லை மேலும் நிலவுகின்ற காலனிய உற்பத்தி உறவால் இந்த வர்க்கங்களும் உடமையற்ற வர்க்கங் களோடு சேர்ந்து பாதிக்கப் படுகிறார்கள். ஆகவே இந்த வர்க்கங்களும் ஒடுக்கப்படும் வர்க்கங்களாகவே உள்ளனர். காலனிய உற்பத்திஉறவை ஒழிப்பதன் மூலமே இந்த உடமை வர்க்கங்களுக்கும் வாழ்வுகிடைக்கும்.

மேல்கட்டுமானத்தில் செயல்படும் எதிர் எதிரான அரசியல் கட்சிகள்

அடித்தளத்தில் நிலவுகின்ற இந்த காலனிய உற்பத்தி உறவுகளை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் இந்திய ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க, போன்ற கட்சிகள், இக் கட்சிகளுக்கு துணைபோகும் அனைத்து பாராளுமன்றவாத கட்சிகள், மற்றும் அடையாள அரசியல் அடிப்படையில் செயல்படும் சீர்திருத்தவாத அமைப்புகளையும் மேல்தளத்தில் திட்டமிட்டு உருவாக்கியுள்ளார்கள். இந்த அரசியல் கட்சிகள் எதுவும் அடிப்படையில் நிலவுகின்ற காலனிய உற்பத்திய உறவைப் பற்றியோ அதனை ஒழிப்பதுபற்றியோ எப்போதும் பேசுவதில்லை. இந்த உற்பத்தி உறவை பாதுகாக்கவும்இதனை எதிர்த்து போராடும் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி திசைதிருப்ப செய்வதன் மூலம் ஆளும் வர்க்கத்தை தொடர்ந்து பாதுகாக்கிறார்கள்.அதேவேளையில் இந்த காலனிய உற்பத்தி உறவுகளை ஒழிக்க வேண்டும்என்ற லட்சியத்தோடு செயல்படுகின்ற மார்க்சிய லெனினிய அமைப்புகளும்இந்த மேல்தளத்தில் புதிய காலனியத்தை ஆதரிக்கும் கார்ப்பரேட்டு முதலாளி அரசியல் கட்சியை எதிர்த்து அரசியல் சித்தாந்தப்போர்நடத்திக்கொண்டிருக்கிறது.

வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் அடையாள அரசியல்வாதிகள்

இந்த காலனிய உற்பத்தி உறவை ஒழிப்பதற்கு இதனால் பாதிக்கப்படும் அனைத்து வர்க்கங்களையும் ஒருங்கிணைத்து இதனை பாதுகாக்கும் ஆளும்வர்க்கங்களை எதிர்த்துப் போராடி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி அதன் மூலம் இந்த உற்பத்தி உறவை ஒழிக்க வேண்டும். இதற்கு மாறாக அடையாள அரசியல்வாதிகள் வர்க்கங்களை ஒன்றுபடுத்துவதற்கு எதிராக சாதி, மதம், இனம், மொழி, பெண் போன்று பல்வேறு அடையாளங்களின் மூலம் ஒவ்வொரு அடையாளத்திற்கும் ஒவ்வொரு அமைப்புகளை உருவாக்கி போராடுவதன் மூலம் வர்க்க ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறார்கள். மேலும் அடித்தளத்தில் நிலவுகின்ற உற்பத்தி உறவை தகர்ப்பதற்கான போராட்டங்களிலிருந்து மக்களை திசைதிருப்புகிறார்கள். உற்பத்தி உறவை தகர்ப்பதற்கான அரசியல் சித்தாந்த அடிப்படையிலான திட்டத்தை உருவாக்கிபோராடுவதற்கு மாறாக அவ்வப்போது நடக்கும் சமூக பிரச்சனைகளை எதிர்த்து தன்னியல்பான போராட்டங்களை முன்னெடுத்து உற்பத்தி உறவை தகர்த்து சமூகத்தை முன்னேற்றுவது என்ற லட்சியப் பாதையிலிருந்து விலகி மக்களை சுயதிருப்தி அடையவைத்து மக்களுடைய போராட்ட உணர்வை காயடிப்பது போன்றவையே அடையாள அரசியல் வாதிகளின் கொள்கையாகவும் நடவடிக்கைகளாகவும் உள்ளன. ஒரு விஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை உருவாக்கவும் மாட்டார்கள். அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டிப் போராடவும்மாட்டார்கள். மேலும் அப்படிப்பட்ட திட்டத்தை உருவாக்கி போராடுபவர்களுக்கு எதிராக செயல்படுவார்கள், மேலும் மக்களை குழப்பி புரட்சி வழியிலிருந்து திசைதிருப்புவார்கள்.

ஏகாதிபத்தியங்களின் சுரண்டல் மற்றும் ஆதிக்க நோக்கத்தை நிறைவேற்றும் அடையாள அரசியல்

இன்று ஏகாதிபத்தியவாதிகள் மார்க்ஸிய தத்துவத்தை எதிர்ப்பதற்கும், நிதிமூலதனத்தை பாதுகாப்பதற்கும் அடையாள அரசியல் இயக்கங்களை நிறுவுவதை ஒரு போக்காக கொண்டுள்ளனர். இவர்கள் புரட்சிகர இயக்கங்களை உடைப்பது, சிதைப்பது, கலைப்பது என்ற நோக்கத்தில் எதிர்ப்புரட்சி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். உழைக்கும் வர்க்கங்களை அதாவது தொழிலாளர்களை, விவசாயிகளை பல்வேறு அடையாளங்களாக இவர்கள் ஜாதி, மதம், இனம் மற்றும் பாலினம் போன்ற ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான இயக்கங்களைக் நிறுவி போராடுவது என்ற நோக்கில் செயல்பட்டு வர்க்க ஒற்றுமையை தடுக்கிறார்கள். மக்களை வர்க்கரீதியாக அடையாளப்படுத்தி மக்களை வர்க்கரீதியாகஒன்றிணைத்து உற்பத்தி உறவை மாற்றுவது என்ற திசையிலிருந்து விலகிச்செல்ல வைக்கிறார்கள். ஜாதிகளை, ஜாதிக்கெதிராக நிறுத்தும், மதத்தை, மதத்திற்கு எதிராக நிறுத்தும், இனத்தை, இனத்திற்கெதிராக நிறுத்தும், பெண்களை, ஆண்களுக்கு எதிராக நிறுத்தும், அமைப்பாக்கப்படாததொழிலாளர்களை, அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக நிறுத்துவதும், போன்ற செயல்களில் ஈடுபடுவதன் மூலம் வர்க்க ஒற்றுமையை தடுக்கும் மற்றும் சிதைக்கும் வேலையை செய்கிறார்கள். இவ்வாறு மேற்கட்டுமானத்திற்குள் மட்டும் மோதல்களை நடத்துவது, அடிக்கட்டுமானத்தை தவிர்ப்பது எந்த வகையிலும் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலையோ அதிகாரத்தையோ பாதிக்காது. மேலே கூறப்பட்ட ஜாதி, மதம், இனம் ஆகிய அனைத்து வகைப்பாடுகளும் வர்க்கங்களை உள்ளடக்கியதே. இன்றையஏகாதிபத்திய புதியகாலனிய சகாப்தத்தில் நம்மை ஆள்வது ஜாதி அல்ல, மதம் அல்ல. இனம் அல்ல, நிறம் அல்ல, மொழி அல்ல மற்றும் பாலினம் அல்ல. மாறாக ஏகாதிபத்திய நிதிமூலதன அமைப்புகளான உலக வங்கி, உலக வர்த்தக கழகம் மற்றும் ஐ.எம்.எப் மேலும் அவர்களது எடுபிடிகளான இந்திய தரகு முதலாளிகளான டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற உள்நாட்டு கார்ப்பரேட்டுகளே இந்திய விவசாயிகளை தொழிலாளர்களை நடுத்தர வர்க்கத்தினரையும் அனைத்து ஜனநாயகசக்திகளையும் ஆள்கிறார்கள். மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் அரசியல் என்பது வர்க்கப்பிரிவுகளை மூடிமறைப்பதற் காகவும், வர்க்கப் போரட்டத்தை மூடிமறைக்கவும் பயன்படுகிறது. வர்க்கப் போரட்டத்தை திசை திருப்புவது, வர்க்கப் போரட்டத்தை மறுப்பது அதன் மூலம் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதே அடையாள அரசியலை முன்வைப்பவர்களின் நோக்கம் ஆகும். 

அடையாள அரசியலின் சித்தாந்தம் கருத்துமுதல்வாதமே

மார்க்சியமானது அடிக்கட்டுமானத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு மேல்கட்டுமானத்தின் மீதான செயல்பாடுகளை மறுக்கவில்லை. சமூக வாழ்நிலைதான் சமூக உணா்வுக்கு காரணம் என்ற பொருள்முதல்வாத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் சமூகவளா்ச்சி பற்றிய அனைத்து கொள்கை கோட்பாட்டையும் முன்வைக்கிறது. உணா்வை வெறுமனே சமூகவாழ்க்கைப் பற்றிய வெறும் பிரதிபலிப்பாக மட்டும் கருதாமல் அதை சமூக வாழ்வின் மீது செயலூக்கமான பாத்திரம் வகிப்பதாகவும் கருதுகிறது. புறப்பொருளைின் வளா்ச்சி விதிகளை தனது உணா்வு அதாவது தனது உணா்வபூா்வமான செயல்பாட்டடின் மூலம் கண்டுபிடித்து அவற்றைக் கொண்டு புறப்பொருளை (இயற்கை மற்றும் சமூகம்) மாற்றி அமைக்கும் செயலூக்கமான அல்லது படைப்பூக்கமான பாத்திரத்தையும் உணா்வு ஆற்றுகிறது என்றும் மார்க்ஸியம் கூறுகிறது.அடிக்கட்டுமான செயலபாடுகளும் மேற்கட்டுமான செயல்பாடுகளும் ஒன்றின் மீது ஒன்று பரஸ்பர தொடா்பு கொண்டது. ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாது.

அடிக்கட்டுமானத்தின் இயக்கப் போக்கில் புதிய உற்பத்தி சக்கிகள் வளா்ச்சி பெற்று புதிய உற்பத்தி உறவுகள் தோன்றத் துவங்குகின்றன. புதியவைகளை பிரதிநித்துவப் படுத்தக் கூடிய, பழைய உற்பத்தி உறவுகளை அடியோடு தகா்த்து எறியக் கூடிய, புரட்சிகரமான அரசியல் சித்தாந்த கருத்துக்களும், கொள்கைகளும் ,நிறுவனங்களும் ஏற்கனவே நிலவக் கூடிய மேல்கட்டுமானத்தில் புதிய மேல்கட்டுமானமாக தோன்றகின்றன. பழைய மேல்கட்டுமானத்திற்கும் புதிய மேல்கட்டுமானத்திற்கும் இடையிலான சித்தாந்த போராட்டமும் அதே சமயத்தில் புதிய மேல்கட்டுமானத்தில் உள்ள புரட்சிகர நிறுவனங்கள் நிலவுகின்ற பொருளாதார உறவுகள் மீது செல்வாக்கு செலுத்தி தனது திட்டம்கொள்கை இவற்றைக் கொண்டு புரட்சிகர வா்க்கங்களை புரட்சிகர சித்தாந்தங்கள்மூலம் பழைய உற்பத்தி உறவுகளை தூக்கியெறிய தயார் படுத்துகிறது.

புரட்சிகரவா்க்கங்கள் அச்சித்தாந்தத்தை கிரகித்துக் கொண்டவுடன் புரட்சி ஏற்பட்டு பழைய உற்பத்தி உறவை பாதுகாக்கும் நிலவுகின்ற அரசு தகர்க்கப்பட்டு, புதிய உற்பத்தி உறவை ஏற்படுத்தும் புதிய அரசு நிறுவப்படுகிறது. அதன் மூலம் புதிய உற்பத்தி உறவு நிறுவப்படுகிறது. பழைய மேல்கட்டுமானமும் முற்றிலும் அகற்றப் படுகிறது புதிய உற்பத்தி உறவால் புதிய மேல்கட்டுமானம் திடப்படுத்தப் படுகிறது. இது மேல்கட்டுமானத்திற்கும் அடிகட்டு மானத்திற்கும் இடையிலான இயங்கியல் உறவு ஆகும். இதை காண மறுப்பது கருத்துமுதல்வாதம் ஆகும். ஆனால் அடிக்கட்டுமானத்திலுள்ள உற்பத்தி உறவுகளை மாற்றியமைக்காமலே மேற்கட்டுமானத்தில்மாற்றங்களை கொண்டுவந்து சமூகத்தை மாற்றிவிட முடியும் என்று அடையாள அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள் . இவ்வாறு பார்ப்பது அடிக்கட்டுமானத்திற்கும் மேல்கட்டு கட்டுமானத்திற்கும் இடையிலான உறவைஇயங்கியல் அடிப்படையில் பார்க்காமல் இயக்கமறுப்பியல் அடிப்படையில் பார்ப்பதாகும். பொருளை மட்டும் அங்கீகரித்து பொருள்களின் மீது கருத்துக்கள் அல்லது தத்துவங்கள் செல்வாக்கு செலுத்துவதை பார்க்க மறுப்பது இயக்க மறுப்பியல் பார்வையாகும் அது.அகவயமானது. சாரத்தில் அது கருத்து முதல்வாத பார்வையாகும். வளா்ச்சிக்கான கோட்பாடுகள் புறப்பொருளிலிருந்து மனித மூளையின் வழியாக கண்டுபிடிக்கப் படுகின்றன.. புறப்பொருளைின் இயக்கத்தை மறுத்துவிட்டு வெறும் மூளைக்குள்ளிருந்து மட்டும் செயலூக்கமுள்ள கோட்பாடுகளை உருவாக்க முடியாது. புறப்பொருளை பார்க்க மறுப்பதும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட சரியான கோட்பாட்டையும் பார்க்க மறுப்பதும் கருத்துமுதல்வாத பார்வையே ஆகும். எனவே உற்பத்தி உறவை தகர்க்காமல் மேற்கட்டுமானத்தில் எந்தவிதமான அடிப்படையான மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. அப்படியே மேற்கட்டுமானத்தில் தன்மனப் போக்கில் ஒருகொள்கையை உருவாக்கி அடிக்கட்டுமானத்தில் மாற்றங்களை கொண்டுவரலாம் என்று எண்ணினாலும்அது தோல்வியையே தரும். . இதற்கு உதாரணம் சிலியில் ஆலெண்டே பாராளுமன்தின் மூலம் உற்பத்தி உறவை மாற்றலாம் என்று தோ்தலில் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் அவரால் உற்பத்தி உறவை ஒழிக்க முடியவில்லை மாறாக அவர் ஒழிக்கப்பட்டார். நிலவும் ஆளும் வர்க்கத்தின் சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் பாதுகாப்பதற்கான கருவியே பாராளுமன்றம் என்ற உண்மையை மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காகவேபாராளுமன்றத்தை பிரச்சார மேடையாகபயன்படுத்த வேண்டும் என்றும், மேலும் பாராளுமன்றத்தை கைப்பற்றுவதன் மூலமாக உழைக்கும் வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற முடியாதுஎன்று ஆணித்தரமாக லெனின் நமக்கு வழிகாட்டினார். ஆனாலும் லெனினதுஇந்த வழிகாட்டுதலை புறக்கணித்துவிட்டு பாராளுமன்றத்தை கைப்பற்றுவதன்மூலமாகவே அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்றுசெயல்பட்டு தோல்வியடைந்ததே வரலாறாகும். ஆகவே உற்பத்தி உறவைமாற்றியமைக்க வேண்டும் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி மக்களை வளர்ப்பதற்குமாறாக உற்பத்தி உறவை மாற்றுவதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தாமல் மேற்கட்டுமானபிரச்சனைகளான சாதி, மதம், இனம் போன்ற பிரச்சனைகளைப் பற்றி மட்டும் மக்களுக்குமுன்னால் வைத்து மக்களை அடையாள அரசியல்வாதிகள் திரட்டுகிறார்கள். இதன் மூலம்மக்களுக்கு படைப்பாற்றல் மிக்க உணர்வை வளர்க்கத் தவறுகிறார்கள்.

இந்த உண்மைகளை மறைத்துவிட்டு உற்பத்தி உறவை தகர்ப்பதற்கான உணர்வை மக்களிடம் ஏற்படுத்தி அவர்களை அணிதிரட்டுவதற்கு மாறாகஆண்டாள் பிரச்சனை, விநாயகர் விழா பிரச்சனை, மனுதர்ம பிரச்சனை, வேல்பிரச்சனை, மற்றும் சாதிப் பிரச்சனை போன்ற மேற்கட்டுமான பிரச்சனைகளை முன்னெடுத்து அடிப்படையில் தீர்க்க வேண்டிய உற்பத்தி உறவை தகர்க்க வேண்டும் என்ற பிரச்சனையின் ஆழத்தை மக்கள் உணரவிடாமல் செய்து அந்த உற்பத்தி உறவை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரித்து ஆளும்வர்க்கங்களை பாதுகாக்கிறார்கள். 

இத்தகைய அடிப்படைகளை கொண்டஇவர்கள்தான் பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்து இன்றையதரகு முதலாளிகளின் ஆட்சிகாலம் வரைஆளும் வர்க்கங்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அடையாள அரசியல்வாதிகளை புரிந்துகொண்டு இவர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மக்கள் அவா்களை புறக்கணிக்கும் படி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்