1917ஆம் ஆண்டு லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சி, ஒரு புரட்சி நடத்திபாட்டாளி வர்க்கத்தை ஆட்சியிலமர்த்தி ஆட்சிக்கு வந்தது.
பாட்டாளிவர்க்கம் தான் வென்றெடுத்த அதிகாரத்தைக் கொண்டு முதலாளிவர்க்கஎதிரிகளை அடக்கி வைக்கவில்லை யெனில் மொத்த வெற்றியும் தோல்வியில் முடியும் என்றுஎங்கெல்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ரஷ்யாவில் புரட்சி நடந்த பின்பு அந்தப் புரட்சியின் பலனைதக்கவைப்பதற்கும், வளர்ப்பதற்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் அவசியம் என்பதைலெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்டுகள் உணர்ந்திருந்தனர்.
இருந்த போதிலும் ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சி உருவாவதற்கும் வாய்ப்புள்ளதுஎன்பதை ரஷ்யப் புரட்சிக்கு முன்னே லெனின் வலியுறுத்தி வந்தார். சிறு முதலாளியமுறை,குலாக்குகளின் எழுச்சி, அதிகாரிகளாக உருவெடுத்த கம்யூனிஸ்டுகள், உலக முதலாளியஇராணுவ ஆகியவற்றால் சோசலிச ஆட்சியில் பின்னடைவு ஏற்படும் வாய்ப்புகள் உண்டுஎன்று லெனின் தொடர்ந்து எச்சரித்து வந்தார்.
ஆகவே ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சியை தடுப்பதற்கு கம்யூனிஸ்டுகள் என்ன செய்ய வேண்டும் என்று கீழ்கண்ட கொள்கைகளை லெனின் வலியுறுத்தினார்.
1. வர்க்க உணர்வுபெற்ற தொழிலாளர்-விவசாயிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.
2. குலாக்களுக்கு எதிராக ஏழை விவசாயிகளைஒருங்கிணைக்க வேண்டும்.
3. சோவியத்து அரசில் செயல்படும் அதிகாரவர்க்கத்தின் தவறுகளை தொடர்ந்துகண்காணித்து சரிசெய்ய வேண்டும்.
4. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பண்பாட்டு மட்டத்தை உயர்த்த வேண்டும்.அதாவது ஏழை உழைக்கும் மக்களின் பண்பாட்டிற்கு அன்னியமான முதலாளித்துவ பண்பாடுகளை இனங்கண்டு களைய வேண்டும், அதற்குப் பதிலாக உழைக்கும் மக்களின்பண்பாட்டை உள்வாங்கி வளர்க்க வேண்டும்.
5. நேர்மையான பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசாக ரஷ்ய சோவியத்து அரசை வளர்க்கவேண்டும்.புரட்சி நடத்தி முடித்து உழைக்கும் வர்க்கங்களின் ஆட்சியை உருவாக்கிய பின்பும், அந்தநாடுகளில் முதலாளி வர்க்கங்களை ஆட்சியிலிருந்துதான் இறக்கி இருப்போம், ஆனால் அந்தவர்க்கங்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டிருக்காது.
ஆகவே ஒழிக்கப்படாமல் எஞ்சியிருக்கும் பிற்போக்கு வர்க்கங்கள் மீண்டும் ஆட்சியைகைப்பற்றுவதற்கு திட்டமிட்டு முயற்சி செய்வார்கள் என்பதை லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள் எச்சரித்தார்கள்.
இத்தகைய பிற்போக்காளர்கள் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் தந்திரமாக ஊடுருவார்கள்.
அவர்கள் கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டிய கொள்கைக்கு எதிரான கொள்கைகளை கட்சிக்குள் கொண்டுவந்து கட்சியை முதலாளித்துவ கட்சியாக மாற்றுவார்கள். அல்லது கட்சிக்குள் இருக்கும் கம்யூனிஸ்டுகளை முதலாளித்துவக் கொள்கை யாளர்களாக மாற்றுவார்கள்.
புரட்சிக்குப் பிறகு கட்சிக்குள் இருந்த தோழர்களில் சிலர் புரட்சியை தொடர்ந்துநடத்தி கம்யூனிசத்திற்கு முன்னேற விரும்பினர். ஆனால் இதற்கு எதிராக பின்னோக்கித் திரும்பி புரட்சியை சிலர் எதிர்த்தனர். அவர்கள் உயர் அதிகாரிகளாக மாறி உயர் அதிகாரிகளின்நலன்களை பாதுகாக்க விரும்பினர்.கட்சி, அரசாங்கம், இராணுவம், மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் ஊடுருவியுள்ளஇவர்களை த்தான் முதலாளித்துவப் பாதையாளர்கள் என்றும் எதிர்ப்புரட்சியாளர்கள் என்றும் மாவோ அழைத்தார். இத்தகைய பிற்போக்கு பண்பாளர்களால்தான் ரஷ்யா, சீனா போன்றநாடுகளில் முதலாளித்துவ மீட்சி கொண்டுவரப்பட்டது. ஒரு மாபெரும் புரட்சி நடத்தப்பட்ட நாடுகளிலேயே இத்தகைய நபர்கள் எதிர்ப்புரட்சி வேலைகளில் ஈடுபட முடிந்ததென்றால் இந்தியா போன்ற நாடுகளில் ஒரு ஒன்றுபட்ட உறுதியான கம்யூனிஸ்டு கட்சியில்லாத நிலையில் பல குழுக்கள் நீடிக்கின்ற நிலையில் இந்த கம்யூனிச அமைப்புகளில் செயல்படும் நபர்கள் எந்தளவு புடம் போட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி புடம்போட்டவர்கள் இல்லை என்றால், அதாவது பிற்போக்குபண்பாளர்கள் உள்ள அமைப்பால் மக்களுக்கு நன்மை ஏதும் கிடைக்காது. மாறாக மக்கள் துண்பத்திலேயே வாழ வேண்டியதுதான்.
ஒரு நாட்டில் சோசலிசத்தை உருவாக்க வேண்டும் என்றாலும் அதனை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்றாலும் அங்கு நவீன தொழில்துறையை வளர்க்க வேண்டும். அதாவது உற்பத்தியானது மேலும் மேலும் சமூகமயமாக்கப்பட வேண்டும். தொழிலாளர்களின் எண்ணிக்கையை மேலும் மேலும் வளர்க்க வேண்டும். இதுதான் சோசலிசத்திற்கான பொருளாதார அடிப்படையாகும். இந்த அடிப்படையை உணர்ந்த ஸ்டாலின் ரஷ்யாவில் தொழில்துறையை வளர்ப்பதில் முதன்மையாக கவனம் செலுத்தி அந்த நாட்டை தொழில்துறையில் வளர்ச்சிபெற்ற நாடாக மாற்றினார்.
ஆனால் சோசலிச சமூகத்தை திடப்படுத்துவதற்கு இத்தகைய பொருளாதார வளர்ச்சி மட்டும் போதாது. சோசலிச சமூக உருவாக்க காலத்தில்பொருளாதார, அரசியல் நிர்வாக காரியங்களை நிறைவேற்ற ஒரு பெரிய அதிகார வர்க்கம் அவசியமாகிறது. இவர்களின் கைகளில் குவிந்துள்ள அதிகாரம் அதிகமாகும். இவர்களில் பலர் அதிகார வர்க்கத்தினராக, தம்மை மக்களைவிட மேலாகக் கருதும் பிரிவினராக மாறும் சாத்தியம் சோவியத்து ரஷ்யாவில்இருந்தது என்பதை லெனினும் ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார்கள். ஆகவேதான் நிர்வாகத்தை அரசியலிருந்து என்றும் பிரிக்கக் கூடாது என்று லெனின் எச்சரித்தார்.
ஆனாலும் ரஷ்யாவில் ஆலை நிர்வாகத்திலும் கம்யூன் நிர்வாகத்திலும் அரசியல் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றில் உள்ள அதிகாரிகள் மீது தொழிலாளர்கள்-விவசாயிகளின் கட்டுப்பாடு மிகவும் குறைவு. இவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அக்கட்டுப்படுத்துதலை கீழே இருந்து உருவாக்க வேண்டும் என்றும் அதற்கேற்ப தொழிலாளர் விவசாயிகளின் பண்பாட்டு மட்டத்தை உயர்த்த வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஆனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் பொருளாதார சாதனைகளில் ஸ்டாலின் மூழ்கியிருந்ததால் அவரால் இத்தகைய அபாயத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதால் சோவியத்து ரஷ்யாவை வீழ்த்தி முதலாளித்துவ ரஷ்யாவை இந்த அதிகார வர்க்க பண்புடைவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.
இதன்மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? சோவியத்து கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனை கொண்ட தீய பண்புடைவர்கள் நுழைந்து விட்டிருந்தனர். ஸ்டாலின் ஆட்சிகாலத்தில் இவர்களால் சோவியத்து ஆட்சிக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. ஆகவே தோழர் ஸ்டாலின் மறையும்வரை காத்திருந்து அவர் மறைந்தவுடன் அவர்களின் தீய சதிச் செயலுக்கு ஆதரவு தரும் குருஷேவ் ஆட்சிக்கு வந்தவுடன் குருஷேவின் திருத்தல்வாத கொள்கை மற்றும் திட்டங்களைப் பயன்படுத்தி சோவியத்து ரஷ்யாவை முதலாளித்துவ ரஷ்யாவாக மாற்றிவிட்டனர்.
ஆகவே கம்யூனிஸ்டுகளாகிய நாம் வெறுமனேபொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக்கொண்டு நமது அணிகளுக்கும் மக்களுக்கும் போதனை அளித்து அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதற்கு மேலும் மார்க்சிய தத்துவம் மற்றும் கம்யூனிச பண்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்களுக்கு மார்க்சிய, கம்யூனிசத்தை போதித்து மக்களை சித்தாந்தரீதியாக வளர்க்க வேண்டும். மேலும் நம்மிடையே கம்யூனிச பண்புகளை திட்டமிட்டு வளர்க்க வேண்டும், கம்யூனிச பண்புகளுக்கு எதிரான தீய பண்புகள் நம்மிடம் இருக்குமானால் அதனை களைவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் மேலும் மக்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பல தியாகங்கள் செய்து புரட்சி நடத்திய, சோவியத்து ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனையின் அடிப்படையிலான தீய பண்பாளர்கள் உள்ளேநுழைந்து இருந்ததால்தான் பல லட்சக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட சோவியத்து அரசை மிகவும் எளிதாக வீழ்த்த முடிந்தது என்ற வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டுகள் இந்தப் பாடத்தை கற்றுக்கொள்ளவில்லை. அதன் காரணமாகவே இந்திய கம்யூனிச அமைப்பிற்குள் இத்தகைய முதலாளித்துவ தனிவுடமை சிந்தனையின் அடிப்படையிலா தீய பண்புள்ளவர்கள் சிலர் உள்ளே புகுந்து கம்யூனிச அமைப்புகளை கம்யூனிச அமைப்புகளாக வளரவிடாமல் அந்த அமைப்புகள் பல குழுக்களாக சிதைவடைவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.
ஆகவே அரசியல் பொருளாதார அறிவுள்ளதோடு மார்க்சிய சித்தாந்த அறிவுடன் கூடவே சிறந்த கம்யூனிச பண்புள்ளவர்கள் ஒரு சிலரே ஆயினும் அத்தகைய சிறந்த பண்புள்ளவர்கள் முதலில் ஒன்றுகூடி ஒரு சில குழுவாக உருவாக வேண்டும். அவர்கள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டி ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்க கூட்டாக முயற்சி செய்யவேண்டும். அதாவது ஆரம்பத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட தீய பண்புள்ளவர்களை சேர்த்துக்கொண்டு இயக்கத்தை துவங்கக் கூடாது. தோழர் ஸ்டாலின் சொல்வது போல உன்னதமான தலைவர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவைத்தான் முதலில் உருவாக்க வேண்டும். அத்தகைய உன்னத மானவர்கள்தான் ஒற்றுமைக்காகப் பாடுபடுவார்கள். அத்தகைய தலைவர்கள்தான் மக்களிடத்திலும் அணிகளிடத்திலுமுள்ள தீய பண்புகளைகளைவதற்கு பொறுமையாக வழிகாட்டுவார்கள். எனினும் இன்றைய கம்யூனிச இயக்கமானது பல குழுக்களாக பிளவுபட்டுள்ளது என்ற எதார்த்தத்தையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. ஆகவே இருக்கின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள இத்தகைய அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவதற்கான கொள்கை வகுத்து அந்த குழுக்கள் செயல்பட வேண்டும். அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே பிற குழுக்களுடன் ஒன்றுபட்டு இந்தியப் புரட்சிக்கான கொள்கை கோட்பாடு களிலுள்ள கருத்து வேற்றுமைகளை சிந்தாந்தப் போராட்டத்தின் மூலம் முடிவிற்கு கொண்டுவந்து ஒரு தெளிவான கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில் ஒரு கட்டுப்பாடான உறுதிமிக்க கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்க வேண்டும்.
ஆகவே நிலவுகின்ற குழுக்களுக்குள் சித்தாந்தப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும், மேலும் இந்த குழுக்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்பட்டு குழுக்களுக்கு இடையிலும் சித்தாந்தப் போராட்டங்கள் நடக்க வேண்டும். பண்பாட்டுத்துறையில் பெருமளவு இத்தகைய பிற்போக்கு பண்புகள் இல்லாத சிறந்த பண்பாளர்களைக் கொண்ட குழுக்களும் உருவாகி பிற குழுக்களுடன் இணைந்து ஒரு புரட்சிகர கட்சியை கட்ட முயற்சி செய்யலாம். ஆகவே சர்வதேச கம்யூனிச இயக்க அனுபவங்களிலிருந்து கம்யூனிஸ்டுகள்அரசியல் பொருளாதாரத் துறையில் மட்டும்கவனம் குவிக்காமல், தத்துவம் மற்றும் பண்பாட்டுத் துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்என்பதை உணர்ந்து செயல்படுவதன் மூலமே கம்யூனிஸ்டுகள் தங்களது லட்சியத்தில் வெற்றியடைய முடியும்.
தனிவுடமை சிந்தனை முறையிலிருந்து நம்மிடம் உருவாகும் தீய பண்புகள்.
1. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பது போல தன்னுடைய கருத்துத்தான் சரியானது என்று பிடிவாதம் பிடிப்பது.
2. ஒரு அமைப்பிற்குள் தன்னுடைய தனிப்பட்ட தலைமையை நிறுவ முயற்சிப்பது
3. பிறரிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளமாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தல்.
4. தன்னுடைய அகவயமான சிந்தனையை அடிப்படையாகக்கொண்டு செயல்படுவதின்மூலம் சுயதிருப்தி அடைவது.
5. தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்ளும் தற்பெருமை கொள்வது.
6. மார்க்சிய இயக்கவியல் பகுப்பாய்வை புறக்கணித்தல். அதாவது எந்தப் பிரச்சனைகளிலும் இரண்டு எதிர் எதிரான அம்சங்கள் இருப்பதை காண மறுப்பது. அதாவது தமது சாதனைகளை மட்டும் பார்ப்பது, தமது குறைகளை காண மறுப்பது. இவற்றை தமது செயல்பாடுகளில் பொருத்திப் பார்த்து முடிவுகளை அடைவதற்கு மறுப்பது.
7. தமது சாதனைகளை மட்டுமே பேசுவது, குறைகளை பேசுவதில்லை.
8. தான் எப்போதும் சரியானவராகவே இருப்பதாக கருதுவது, தானும் தவறு செய்துள்ளோம், இனிமேலும் தவறு செய்வோம் என்று உணருவதில்லை.
9. மற்றவர்கள் தம்மை புகழ்வதை மட்டுமே விரும்புவது, மற்றவர்கள் தம்மீது வைக்கும்விமர்சனத்தை கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது, தம்மீது விமர்சனம் வைத்தவர்களின் மீது வெறுப்பு கொள்வது.
10. தம்மீது விமர்சனங்கள் வைக்கப்படும் போது அதனை பரிசீலித்து தன்மீது வைக்கப்பட்ட விமர்சனம் உண்மை என்றால் அதற்கு சுயவிமர்சனம் செய்துகொண்டுதன்னுடைய தவறுகளை களைந்து சரியானவராக மாற மறுப்பது
11. பிறரது சிறப்பான அனுபவங்களை உள்வாங்கி தானும் அந்த அனுபவத்தின்அடிப்படையில் செயல்பட மறுப்பது.
12. தான் செய்த பணிகளையே தானே பீற்றிக்கொண்டு அகங்காரம் கொள்வது.
13. ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றிவருவது, அந்த வட்டத்தைத் தாண்டி உலகம் பரந்து இருக்கிறதை புரிந்துகொள்ள மறுப்பது
14. ஒருசில விஷயங்களை தெரிந்து கொண்டவுடன் தான் அனைத்தையும் தெரிந்துகொண்ட மிகச் சிறந்த அறிவாளி என்று கருதி தனது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது. அதாவது கற்றது கையளவு, கல்லாதது உலகளவு என்று உண்மையை புரிந்துகொள்ள மறுப்பது.
15. பிறரிடம் தம்மைப் பற்றி பெருமையாகப் பேசுவது, தமது குறைகளை மறைப்பது, குறைகளை பிறர் சுட்டிக்காட்டினாலும் அதனை ஏற்க மறுப்பது.
16. எந்தவொரு பிரச்சனையும் மார்க்சிய இயக்கவியல் பார்வையோடு அனுக வேண்டும் என்ற விஞ்ஞான முறையை பின்பற்ற தவறுவது.
17. மற்ற தோழர்களிடம் அதிகார வர்க்கத் தோரணையிலேயே அணுகுவது.
18. மற்ற தோழர்களிடம் அன்பாக அரவணைத்து செல்ல வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்ற தவறுவது.
19. சாதனைகள் இருக்கும் போது குறைபாடுகளும் இருக்கும், அதேபோல் உண்மை இருக்குமிடத்தில் பொய்யும் இருக்கும் என்ற வகையில் முரண்பாடுகள் அனைத்தும் தழுவியது என்ற இயங்கியல் அடிப்படையை புரிந்துகொள்ள மறுப்பது.
20. சமூக மாற்றத்திற்கான இயக்கத்தில் ஈடுபட தமக்கு மார்க்சியத்தின் அடிப்படை அறிவு தேவை என்பதையும் அதனை நாம் பாடுபட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொள்ள மறுத்து அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது.
20. தம்மிடம் மரத்துப்போன பழங்கோட்பாடு மிகவும் ஆழமாக வேர்விட்டு பதிந்துள்ளது என்பதை புரிந்துகொண்டு அந்த பழமைவாத கண்ணோட்டத்தை தூக்கியெறிந்துவிட்டு மார்க்சிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள மறுப்பது.21. தமது குறைகளை களைந்துகொண்டு தம்மை மாற்றியமைத்துக்கொள்வதன் மூலமே தாம் வெற்றியை நோக்கி முன்னேற முடியும் என்ற உண்மையை புரிந்து கொண்டு தம்மை மாற்றியமைத்துக்கொள்ள மறுப்பது.
22. தாம் இதுவரை அடைந்துள்ள தோல்விகளுக்கு காரணம் தம்மிடமுள்ள குறைகள்தான் என்பதை உணரத் தவறுவது. தமது தோல்விகளுக்கு பிறரை காரணமாக காட்டிக்கொண்டு தமது தவறான வழியிலேயே செல்வது.
23. தம்முடைய தவறுகளை சுட்டிக்காட்டி, தம்மை எதிர்த்துப் போராடுபவர்களின் மீதுமுத்திரை குத்தி அவர்களை எதிரிகளாக பாவித்து செயல்படுவது.
இது போன்று பல குறைகள் கம்யூனிஸ்டுகளாகிய நம்மிடம் காணப்படுகிறது. இந்த தீய குணங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியது மிகமிக அவசியமாகும்.
மார்க்சிய ஆய்வாளர் தோழர் கோ.கேசவன் அவர்கள் எழுதிய சோசலிசமும், முதலாளிய மீட்சியும் என்ற கட்டுரையையும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்தியக் குழுவின் அறிக்கையும் அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை இயற்றப்பட்டது. ….
------- தேன்மொழி
No comments:
Post a Comment