உலக வரலாற்றில், மாபெரும் புரட்சிகரத் தலைவர்களில் ஒருவர் மா சே துங். தமது மக்களை நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாகப் புரட்சிப் போராட்டத்தின் வழியாகத் தலைமை தாங்கி நடத்திச் சென்ற அவர், ஒரு மார்க்சியக் கோட்பாடு ஆசான். அவரது மாபெரும் புகழின் திறவுகோல் மக்களுடன் அவருக்கிருந்த நெருக்கமான உறவில் பொதிந்துள்ளது.
“உலகில் உள்ள எல்லாவற்றிலும் மக்களே மிகவும் மதிப்பு மிகுந்தவர்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபோடுகிற மக்கள் இருக்கிற வரையில் எல்லா வகையான அதிசயங்களையும் நிகழ்த்த முடியும்.”
1927ஆம் ஆண்டு செம்படை உருவாக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறியதாகவும் பலமற்றும் இருந்த அப்படையை, கோமிண்டாங் சுற்றி வளைத்தது. செம்படையை ஒழித்துக்கட்ட, கோமிண்டாங் ‘இரும்புக் கோட்டைகள்’ என்று அழைக்கப்பட்ட, தடுப்புப் பாசறைகள் கொண்ட ஒரு சுற்றிவளைப்பை உருவாக்கியது.
“தோழர்களே! அவை உண்மையிலேயே இரும்புக் கோட்டைகளா? இல்லவே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த பிரபுத்துவப் பேரரசர்களின் அரண்மனைகளை நினைத்துப் பாருங்கள்,கொத்தங்களுக்குள்ளும்அகழிகளுக்குள்ளும் அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினார்கள் அல்லவா? ஆயினும் மக்கள் எழுச்சியுற்றவுடனேயே அவர்கள் ஒருவர் பின் ஒருவராக நொறுங்கி வீழ்ந்தனர். பாட்டாளிகளும் உழவர்களும் பொங்கி எழுந்தபோது, உலகின் கொடூரமான ஆட்சியாளர்களில் ஒருவனாக விளங்கிய ஜார் மன்னனிடம் ஏதாவது மிஞ்சினவா?. இல்லை, இல்லவே இல்லை. அவனது இரும்புக் கோட்டைகள்? அவை அனைத்தும் நொறுங்கி வீழ்ந்தன. தோழர்களே! இரும்புக் கோட்டைகள் எவை? மெய்யாகவும் உளப்பூர்வமாகவும் புரட்சிக்கு ஆதரவளித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளினரே இரும்புக் கோட்டைகள். வெல்லமுடியாத, அழிக்க முடியாத மக்களே மெய்யான இரும்புக் கோட்டைகள். எதிர்ப்புப் புரட்சியாளர்கள் நம்மை அழிக்க முடியாது; மாறாக அவர்களை நாம் அழித்தொழிப்போம். பல கோடிக்கணக்கான மக்களை அணி திரட்டி, அனைத்து எதிர்ப் புரட்சியாளர்களையும் துடைத்தெறிந்து, முழு சீனாவையும் வெற்றி கொள்ளுவோம்.”
பிறகு நெடும் பயணம் மேற்கொள்ளப்பட்டது,
“ஓர் ஆண்டாக, அன்றாடம் எண்ணற்ற போர் விமானங்களால் வானிலிருந்து கண்காணிக்கப்பட்டு, குண்டு வீச்சுக்கு ஆளானோம்; அதேவேளையில் மண்ணிலும் பல்லாயிரக் கணக்கான வீரர்களைக் கொண்ட பெரும் படை வழிமறித்து, சுற்றிவளைத்து, அலைக்கழித்து, வழி நெடுகவும் விவரிக்க முடியாத துன்பங்களையும், இடர்பாடுகளையும் எதிர்கொண்டோம். ஆயினும் பதினோரு மாகாணங்களின் குறுக்கும் நெடுக்குமாக இருபதாயிரம் ‘லி’க்கும் அதிகமான தூரத்தை நமது வெறுங் கால்களால் நடந்து கடந்தோம். இத்தைய நெடும் பயணத்துக்கு இணையானது ஒன்று வரலாற்றில் உள்ளதா? எனக் கேட்கிறோம்.”
“சீனப்புரட்சி மாபெரும் நிகழ்வு; ஆனால் புரட்சிக்குப் பிந்தைய பாதை மிக நீண்டது, புரட்சிக்குப் பிந்தைய பணி மிக நீண்டது, மிகக் கடினமானது. இதைக் கட்சிக்குள் இப்போது தெளிவு படுத்திவிட வேண்டும். தோழர்கள், தமது வேலை முறையில் அகந்தையிலிருந்தும் கண்மூடித்தனத் திலிருந்தும் விடுபட்டு அடக்கத்துடனும் விவேகத்துடனும் இருப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்… நாம் பழைய உலகத்தை அழிப்பதில் மட்டும் கைதேர்ந்தவர்களல்ல, புதிய உலகை உருவாகுவதிலும் கைதேர்ந்தவர்கள்.”
“நாம் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளோம். ஆனால் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறது. அந்த வர்க்கம் தொடர்ந்து நிலவிக் கொண்டிருப்பதால் அந்த நபர்கள் இன்னும் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். எனவே இன்னும் பலபல பத்தாண்டுகள் வரை இறுதி வெற்றியைப் பற்றி நாம் ஒன்று சொல்லமுடியாது.”
“ஒரு சிறிய நாட்டின் மக்கள், தமது நாட்டின் ஊழைத் தமது சொந்த கைகளில் எடுத்துக் கொண்டு, ஆயுதந் தாங்கி, போராட்டத்தில் குதித்துவிட்டால்; அவர்களால் ஒரு பெரிய நாட்டின் ஒடுக்குமுறையை உறுதியாகத் தோற்கடிக்க முடியும். இது ஒரு வரலாற்று ஒழுங்கு நியதி ஆகும்.”
“இப்போதைய சமுதாய வளர்ச்சி வழியில் உலகைச் சரியான முறையில் புரிந்துகொள்ளவும், மாற்றியமைக்கவும் ஆன பொறுப்பை வரலாறு பாட்டாளிகளதும், அவர்களுடைய கட்சியினதும் தோள்களில் சுமத்தியுள்ளது. முறைசார்ந்த அறிவு முதன்மைபெறுகிற உலகை மாற்றியமைக்கும் நடைமுறை ஆகிய இந்தச் சமுதாய வளர்ச்சிப் போக்கு, உலகிலும் சீனாவிலும் ஏற்கனவே ஒரு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. இது மானுட வரலாற்றில் முன்னுவமை இல்லாத ஒரு மகத்தான தருணம். முன்னெப்போதும் இல்லாத வகையில், உலகிலிருந்து இருளை முற்றிலும் அகற்றி, ஒளி நிறைந்த உலகமாக மாற்றியமைப்பதற்கான தருணம் ஆகும்.”
செஞ்சேனை நெடும் பயணத்தில் எந்தத் துன்பங்களுக்கும் அஞ்சியதில்லை.
ஓராயிரம் மலைகளும் பத்தாயிரம் ஆறுகளும் ஒரு பொருட்டல்ல.
ஐந்து மலைத் தொடர்கள் நெளிநெளியான சிறு நீரலைகளே.
வூமெங் மலைச்சிகரங்கள் பள்ளத்தாக்கில் உருண்டு விழும் களிமண் உருண்டைகளே.
பொன்மணல் ஆற்றினால் கழுவி எடுக்கப்பட்ட, முகில் சூழ்ந்த சிகரங்கள் வெதுவெதுப்பானவை.
டாடு நதியின் குறுக்கே உள்ளே இரும்புச் சங்கிலிகள் குளிர்ந்துள்ளன.
மின்ஷான் மலைகளின் தூரத்துப் பனிக் குவியல் நமக்கு மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வருகின்றது.
சேனை முன்னேறிச் செல்கிறது, நாம் அனைவரும் சிரித்து மகிழ்கிறோம்.
நன்றி ஊட்டாடம் இணையம்.
No comments:
Post a Comment