சாதி அன்றும் இன்றும் நூல் அறிமுகம்

 வரவிருக்கும் இலக்கு இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையே "சாதி அன்றும் இன்றும்" மார்க்சிய பார்வையில். இன்நுலிருந்து சில பகுதியை உங்கள் முன் வைத்துள்ளேன்.

தோழர்கள் வாசித்து உங்களின் கருத்து பதிவிடலாம் நூல் பிப்ரவரியில் வெளிவர உள்ளதால் உங்களின் கருத்துகள் இருப்பின் ஏற்கபடும் அதனாலே இங்கே பகிரப்படுகிறது.

இனி நூலிலிருந்து சில பகுதி கீழே.

நாம் வாழும் சமூகம்‌ வெறும்‌ மொழியும்‌ இனமும்‌ ஒன்றிணைந்து இயங்குகின்ற ஒரு பெரிய நிலப்பரப்பு மட்டும்‌ அன்று... சமயங்களும்‌ தத்துவங்களும்‌ சடங்குகளும்‌ பெரும்‌ நம்பிக்கையாகச்‌ செயல்பட்டுவரும்‌ உயிர்‌ நிலம்‌!

அந்த மொழியின்‌ இலக்கணமும்‌ இலக்கியமும்‌ ஓர்‌ இயக்கமாக வளர்ந்து வருவதுபோல்‌, மனித சமூகம் பெற்றெடுத்த பல்வேறு கருத்துகளும் செயல்களும் அதன் தொடர்ச்சியாக வளர்ந்துவரும்‌ சமயங்களும்‌, பல்வேறு காலமாற்றத்தைக்‌ கடந்து, மக்கள்‌ மனதிலும்‌ பல மாற்றங்களை உண்டாக்கி, சர்ச்சைக்கும்‌ ஆராய்ச்சிக்கும்‌ உரிய பாதையாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மனித சமூகம் ஒற்றை கல்லில் செதுக்கி வைத்தவை அல்ல. அவை பல்வேறு கால சூழலுகேற்ப தன்னை தகவமைத்து வளர்ந்து முன்னேறிக் கொண்டே உள்ளன. ஆக தேவையற்ற சாதிய பிற்போக்கான வடிவத்தை களைந்தெறிய அச்சமூகத்தால் முடியும் அதற்கான பணி ஒட்டு மொத்த சமூக வளர்ச்சியையும் விரும்புவோர் கையில்தான் உள்ளது. அதனை விரிவாக சாதி ஒழிபிற்கான பல்வேறு வகைகளின் மத்தியில் மார்க்சிய வழியில் எப்படி சாத்தியம் என்பதே இந்த நூலின் முழு முயற்சி.

மக்களைப்‌ பிரிக்கும்‌ பிரிவினைகள்‌ பல அவற்றுள் இரண்டு இப்போது பெரும்‌ பிரச்சினைகளாக உள்ளன. ஒன்று சாதி மற்றொன்று மதம்‌. ஒரு காலத்தில் மக்களின் வாழ்வியல் ஒழுங்கிற்கு‌ அவசியமாக இருந்தவை இன்று தீமையாக உள்ளன.“தொடக்கத்தில்‌ தொழிலால்‌* ஏற்பட்ட பிரிவு வரவரப்‌ பிறப்போடு பின்னிக்கொண்டு தொழிலால்‌ சாதி என்றது போய்‌, பிறப்பால்‌” என்றாகிவிட்டது. இன்று எல்லாத்‌ தொழில்களையும்‌ எல்லாச்‌ சாதியாரும்‌ செய்கின்றனர்‌. தொடக்கப்பள்ளி முதல்‌ பல்கலைக்‌ கழகம்வரை கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ அனைவரும்‌ பழங்காலத்தில்‌ எகிப்து முதலிய நாடுகளிலும்‌ பிரிவினைகள்‌ இருந்திருக்கின்றன (*கலைக்களைஞ்சியம்‌ 4-562)).

நம் சமூகத்தில் உள்ள எல்லா கசடுகளையும் இல்லாதொழிக்க மார்க்சிய தத்துவம் மட்டுமே வழிகாட்டி மற்றெல்லாம் உள்ள சமூக அமைப்பை கட்டிக்காக்கும் முறைமைகளே. ஏற்றதாழ்வற்ற சமூகம் படைக்க விழைவோரின் தத்துவ ஆயுதம் மார்க்சியம் மட்டுமே அதன் அடிப்படையில் சாதி தோன்றியதிலிருந்து இன்றுவரை அதன் வளர்ச்சி போக்கை ஆராய்வதோடு இந்த சாதிய சமூகம் இல்லாதொழிக்க வழியையும் மர்க்சியம்தான் போதிக்கிறது,

சாதியயை பற்றி பலரும் பல்வேறுவிதமாக பேசினாலும் அவை நமது சமுகத்தில் முன்னேற்றதிற்கு தடைகல்லே. ஆக இதனை பற்றி புரிந்து இந்த சுரண்டல்முறையால் பீடித்து கிடக்கும் மக்களுக்கு விடுதலைக்கான வழி தேடலே இந்நூலின் இலக்கு.

சாதி என்ற சொல்லாடல் போர்ச்சுகிசியர்கள் கடல் வணிகத்தில் இந்தியாவிற்கு வந்தபோது அவர்களின் சொல்லாடலில் தோன்றியது தான் “caste” அதனையே ஆங்கிலேயக நிர்வாகிகளும் தங்களுடைய நிர்வாகத் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டனர். இந்திய சமூகம் பற்றியும் இந்திய மரபு பற்றிய தேசியவாதக் கற்பனை களை உருவாக்க இக்கோட்பாடுகள் அவர்களுக்கு பயன்பட்டது.

இந்திய சாதிய பற்றி பல்வேறு அறிஞர்கள் களப்பணியாளர்கள் எழுத்தாளர்கள் விவாதங்கள் இடைவிடாத போராட்டங்கள் மூலம் தினம் நமது செவிகளுக்கு கேட்ட வண்ணமே உள்ளது. ஆக இந்திய சமூகத்தில் சாதியின் பல்வேறு விளைவுகளையும் அதன் தோற்றத்திலிருந்து இன்று வரை அதன் பன்முக போக்குகளையும் அறிவதற்கும் என்னால் இயன்ற பல்வேறு நூலாசிரியர்களின் ஆதாரங்களுடன் எழுதியுள்ளேன். என்னுடைய முயற்சி ஆங்காங்கே தொட்டுகாட்டி சென்றுள்ளேன். எனக்கு முன்னர் பலர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதால் அவர்களின் எழுத்துகளையும் எனது தேடுதலையும் சரியான முறையில் உங்கள் முன் கொணர ஒரு முயற்சிதான் இன்நூல். சாதியானது இன்றும் இந்திய சமூகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் நவீனமயமாதல், வளர்ச்சி, ஜனநாயக, நிர்வாகம் என்று என்னதான் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றும் நம் சமூகத்தில் சமத்துவமின்மையும் சமூக விலக்களும் பெருமளவு தொடரத்தான் செய்கிறது.

சிலர் குறிபிடுவதுபோல் சாதியானது மனித சமூகம் தொன்றிய போதே தோன்றிய ஒன்றல்ல. அதேபோல் சாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும் அதன் தன்மைகள் இன்றும் அன்றுபோல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் சாதி ஏன் உயிர் வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார் பெரியார் போன்ற பல தலைவர்கள் சமூக வளர்ச்சி முன்னணியில் இருந்தவர்கள் சாதி ஒழிப்பிற்கு போராடினார்கள் என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு அதில் வெற்றி கண்டனர் என்பதனையும், உண்மையில் சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு முடிவுகட்ட சாதியை கட்டி காக்கும் அமைப்புமுறையை தகர்த்து ஒடுக்குமுறை அடக்குமுறை சுரண்டல்முறை அற்ற சமத்துவ சமூகத்தில் இந்த சாதிய தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படும் என்பதனையும் அதற்கான தீர்வு இந்த பிற்போக்கு அம்சங்களை கட்டிக்காக்கும் சமூக அமைப்புமுறையை தூக்கியெறிந்து சமூக ஏற்றதாழ்வற்ற சமத்துவ சமூகத்தில் சாத்தியம் என்பதனையும் விளக்கியுள்ளேன். சாதியின் வேர் நிலவுடமை சமூக உற்பத்திமுறையின் ஓர் அம்சமே ஆக அதன் அழிவும் இதனை அழிப்பதில் உள்ளன.

சாதியம் தனிநபர்களை சார்ந்த பிரச்சினை அல்ல அவை சமூகம் சார்ந்த பிரச்சினை. அது சமூக அரசியல், பொருளாதார,கடவுள்கள், மதம் சார்ந்த நம்பிக்கைகள், பாரம்பரியம் பண்பாடு சார்ந்த பிரச்சினை ஆகும். இந்தப் பண்பாடு எல்லா சாதி குடும்பங்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது.

இது தெற்காசிய பிராந்தியத்தின் முறுக்கேறி போனமனநோய். இந்த மனநோயால் சுயம் இழந்துகிடப்பவர்களை சாதிவேற்றுமை பாராட்டுபவர்களை விமர்சனம் செய்வதாலோ திட்டி தீர்ப்பதாலோ எந்த மாற்றமும் நன்மையும் ஏற்படப் போவதில்லை. பதிலாக சாதியத்தின் இருப்புக்கு காரணமான அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோடு மார்க்சிய புரிதலும் சமூக அறிவிலும் புரிந்துகொண்டு இதற்கான அடிப்படையோடு களமாடி சமூகத்தை புரட்டிப் போடவேண்டிய அவசியம் உள்ளது. சிந்தனை விடுதலையோடு சமூக விடுதலையும், ஒடுக்குபவனை தூக்கி எறிந்து ஒடுக்கப்படுபவர்களுக்கு விடுதலைதேடி ஏற்றத் தாழ்வுகளை களைந்திடுவதோடு அதற்கான பணியினையும் செய்ய வேண்டும்.

வரலற்று அடிபடையில் தேட முயலும் அதேவேளையில் வரலாற்றுக்கு முந்தையகால ஆதரங்களையும் கணக்கில் கொண்டே எழுதியுள்ளேன்.

வரலாற்று முற்காலம்:- மனிதன் தன் கருத்துகளை வெளிப்படுத்த பயன்படுத்திய மொழியின் பண்பட்ட நிலையை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை, வரலாற்றுக் காலம், வரலாற்றுக்கு முந்தைய காலம் என பாகுபடுத்துவர். கருத்துப் பரிமாற்றதிற்குரிய மொழியின் எழுத்து வடிவம் வரலாற்றுக் காலத்தில் தொடக்கத்திற்கு சான்றாக கருதப்படுகிறது.வரலாற்றுக்கு முந்திய காலத்தை பழங்கற்காலம், புதிய கற்காலம், இரும்புக்காலம், என மனிதன் பயன்படுத்திய கருவிகளின் அடிப்படையில் உட்பிரிவுகளாக பார்க்கலாம். ஆனால் அனைத்துப் பகுதிகளிலும் இக்கால பகுப்பாடுகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையறைக்குள் காணப்படும் என்பது கடினமே. ஏனெனில் சமசீரற்ற வளர்ச்சி நிலை என்பது மனித வரலாற்றில் அனைத்து நாடுகளுக்கும் அனைத்து காலங்களுக்கும் பொதுவான ஒரு சிறப்பான கூறாகும்.

  • ‘ஒருபகுதி வாழ்மக்கள் தம் தேவையையும் சூழ்நிலையும் பொறுத்து உற்பத்தி கருவிகளையும் சமூக அமைப்பையும் உருவாக்கி கொள்வதாக’ சட்டோபாத்தியாய கருதுகிறார்.

மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையேவர்க்கப்பிரிவுகளோஏற்றத்தாழ்வுகளோஇல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறுவேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ள வர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் தனியுடமையாக கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்திஉறவை பாதுகாக்கவும் பலப்படுத்துவுமான இந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம்.

மனித சமுதாயம் எப்பொழுதும், இப்பொழுது இருப்பது போலவே இருந்தது இல்லை. அது பல காலங்களில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு வளர்ந்து வந்துள்ளது. அது தன் பயணத்தைப் பொதுவுடைமைச் சமூகமாக தொடங்கியது. இதனை நாம் ஆதி பொதுவுடைமை சமூகம் அல்லது புராதன பொதுவுடைமை சமூகம் என்றழைக்கிறோம். மனிதன் வேட்டையாடி வாழ்ந்து கொண்டு இருந்த பொழுது அவர்களில் யாருக்கும் எந்த விதமான சொத்துரிமையும் இருந்ததில்லை. வேட்டைக் கருவிகள் உட்பட அவர்களிடம் இருந்த அனைத்தும் அனைவருக்கும் உரிமையாக இருந்தன. தனியுரிமையைப் பற்றி அவர்களால் கற்பனையும் செய்ய முடியாதிருந்தது.

உழைக்கும் வயதில் உள்ள யாரும் உழைக்காமல் இருக்க முடியவில்லை. உழைக்காமல் இருப்பதைப் பற்றிக் கற்பனை செய்யவும் முடியாது. அச்சமூகத்தில் திருட்டு இல்லை; ஏமாற்று வித்தை இல்லை. மக்களுக்குள் இடையே ஏதாவது பிணக்குகள் தோன்றினால், அவை மூத்தவர்களின் தலையீட்டில், அவர்களுடைய கண்டிப்பில் தீர்த்து வைக்கப்பட்டன. அங்கு அரசன் இல்லை. காவல் துறை இல்லை. அரசு என்ற அமைப்பின் எந்த ஒரு அங்கமும் அங்கு இல்லை.

அச்சமூகத்தினால், தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவையான அளவிற்கு மட்டுமே பொருட்களை ஈட்ட முடிந்தது. அவர்கள் தங்கள் அறிவுத் திறத்தினாலும் முயற்சியினாலும், வேட்டைக் கருவிகளைச் செம்மைப்படுத்தினர். விதைகள் மண்ணில் விழுந்து மீண்டும் வளர்வதைக் கண்டு விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டனர். இவ்வாறு அவர்களின் உற்பத்தித் திறன் வளர்ந்த போது அவர்களால் தாங்கள் வாழ்வதற்கும், தங்கள் சந்ததிகளைப் பெற்று வளர்ப்பதற்கும் தேவைப்படும் பொருட்களை விட அதிமான பொருட்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு வளர்ந்தனர். உற்பத்திக் கருவிகள் மேலும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு வளர்ச்சியடைந்த நிலையில், மனிதனால், முதன் முறையாக, உபரியாக, அதாவது தனக்கு அத்தியாவசியமானதற்கும் மேலாக, உற்பத்தி செய்ய முடியுமாயிற்று. இவ்வாறு சுரண்டலுக்கான அடிப்படை வந்து சேர்ந்தது. ஆதி பொதுவுடமை சமூகம் உடைப்பு ஏற்பட்டு உடமை உள்ளவர்கள் உடமை அற்றவர்கள் என்ற வர்க்க சமூகதிற்கு வழிவகுத்தது. சமூகம் உடைபட்டு உருவெடுத்த வர்க்க சமூகம் அடுத்தவரை அபகரிக்க போரிட்டது. அப்போரில் சிறைப்பிடிக்கப்பட்டோர் கொல்லப் படவில்லை, மாறாக வென்றவர்கட்காக வேலை செய்வதற்காக அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். இவ்வாறு அடுத்த சமுதாய வடிவம், அதாவது அடிமைச்சமுதாயம் எழுந்தது. அடிமைகளுக்குச் சொந்தமானவர்களுக்கும் அடிமைகட்கும் மோதல் நிகழ்ந்தது.

எனினும், உற்பத்தி கருவிகள் தொடர்ந்தும் வளர்ச்சிபெற்று வந்தன. இவ்வாறான வளர்ச்சிநிலையில் அடிமைகள் தொடர்ந்தும் பொருத்தமானவர்களாக இருக்கவில்லை. ஏனெனில் எசமான் தனது இஷ்டப்படி விற்கவோ சுடவோ முடியுமானபடி எசமானின் தனிச் சொத்தாக இருந்த அடிமைக்கு மேலதிகமாக உற்பத்தி செய்வதற்கான தூண்டுதல் எதுவும் இருக்கவில்லை. அவனது உற்பத்திக்கும் அவனுடைய ஊதியத்திற்கும் எதுவிதமான உறவும் இருக்கவில்லை.

இவ்வாறு உற்பத்தியில் மனிதரிடையிலான புதியதொரு உறவுக்கான தேவை-மேலும் அதிக உற்பத்தி செய்யுமாறு தூண்டுதலுடைய மனிதருக்கான தேவை - எழுந்தது.

அடிமைகளின் கிளர்ச்சிகள் இந்தப் போக்கைத் துரிதப்படுத்தின. அடிமையின் இடத்திற்கு வந்த பண்ணையாள் நிலத்துடன் பிணைக்கப்பட்டு நிலவுடைமைக்காரனின் நிலஉடமையாளரின் நிலத்தில் உழைக்கும் படி கட்டாயத்துக்குப்பட்டிருந்தார். அடிமைமுறை, வளர்ந்து வரும் விவசாய முறைக்குக் குறுக்கே நின்றது. உற்சாகமின்றி அடிமைகள் உழைத்ததால் விவசாயம் தடைப்பட்டது. எஜமானர்களின் வருவாய் குறைந்தது. அடிமைகளைக் கொண்டு விவசாயம் செய்வது இலாபத்தைத்தராது என்று அவர்கள் உணர்ந்தனர். அடிமை உழைப்பால் சமூகத்தின் உழைப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் உற்பத்தியும் தேவையும் முட்டி மோதின. பழைய முறைக்கு விடை கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிலத்தை வைத்திருந்த எஜமானர்கள் தமது நிலங்களைத் துண்டுபடுத்தி, அந்தத் துண்டுநிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைத்தனர். இதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு அவர்கள் திருப்தியடைந்தனர்.

வர்த்தகம் ஆரம்பமானதைத் தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் நகரங்கள் தோன்றின. நகரத்தில் வாழ்ந்த வர்த்தகர்கள் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினர். வர்த்தகம் தலை தூக்கியதும் சாமான்களின் தேவை அதிகரித்தது. தலை தெறிக்கும் வேகத்தில் வர்த்தகம் விருத்தியடைந்தது.

ஐந்தாம் நூற்றாண்டில் அடிமை சகாப்தம் மரணநிலையை அடைந்தது. அடிமைமுறையை அடித்தளமாகக் கொண்டிருந்த சாம்ராஜ்யங்கள் தளர்ந்தது. இதனைத்தொடர்ந்து அதன் அரசியல் அமைப்பும் நிலைகுலைந்தது. இராணுவ ஆட்சி எங்கும் தலைதூக்கியது. அந்தக்காலத்தில் அடிமை முறையை எதிர்த்து அடிமைகளும் வளர்ந்துவரும் வர்த்தகர்களோடு போர்புரிந்தனர்.

நிலவுடமை சமூகத்தில் நிலத்தோடு பிணைக்கப்பட்ட விவசாயிகளும் நிலவுடமையாளர்களும் பிரதான பங்கு வகிக்கின்றனர். பிரதான வர்க்கங்களாகவும் விளங்குகின்றனர். அந்த சட்டங்களும் மதிப்புகளும் அந்த நிலைமைக்கு ஏற்ப அமைந்தன.

“கி.மு.1500லிருந்து கி.மு.1000 வரையிலான காலத்தில் ஆளும் பழங்குடி அரசின் கீழே தனியுடைமை தோன்றியது. பிறகு தனிச் சொத்துடைமை திடப்பட்டது. கி.மு.1000லிருந்து கி.மு.500 க்குப் பிறகு நிலத்தில் தனியுடைமை தெளிவாக எல்லை வரையறுக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டது. நிலத்தை பயன் பாட்டிற்கு கொண்டுவந்தவரே நிலத்தின் உரிமையாளராவார். அதன் பிறகு கி.மு.322லிருந்து கி.மு.200 வரை காலகட்டத்தில் மையப்படுத்தப் பட்ட அரசு உருவாகி அடிமைச் சமூகத்தை திடப்படுத்தியது. சுரண்டலை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக வர்ணாசிரம தர்மம் வடிவமைக்கப்பட்டது. இந்த தர்மங்களும் கௌடில்யர் போன்றோரால் வகுக்கப்பட்ட சட்டங்களும் நிலைபெற்றிருந்த சமூகப் படிநிலை அமைப்பை உயர்த்திப் பிடித்தன”-பண்டைய இந்தியாவில் சமூக உருவாக்கம் ஆர். எஸ் சர்மா புதுமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது அதன் முன்னுரையிலிருந்து.

இதன் பிறகு நகரங்கள் வீழ்ந்தன. இது உற்பத்திமுறையில் நெருக்கடியை தோற்றுவித்தது. வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய மறுத்தனர். கி.பி.3ஆம் நூற்றாண்டு, கி.பி.4ம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் (இதுவே கலிகாலம்) உற்பத்தி உறவுகள் பெரும் மாற்றங்களுக்குள்ளாயின. குப்தர் காலத்தில் உருவாக்கப்பட்ட நிலமானிய முறை ஒரு புதிய சமூக உருவாக்கத்தை, புதிய தொழில் பிரிவினைகளை, வர்க்கத்தை தோற்றுவித்தது. இது முந்தைய உற்பத்தி முறைக்கு உரியதான வர்ண முறையை செயலற்றதாக்கியது. புதிய நிலப்பிரபுத்துவ (நிலமானிய) முறையை தோற்றுவித்தது.

ஆர்.எஸ்.சர்மாவின் இந்திய நிலமானியம் குறித்த குறிப்பான ஆய்வுகள் இந்திய வரலாறு பற்றிய ஆய்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. குறிப்பாக “இந்திய நிலமானிய முறை” மற்றும் “மத்திய காலங்களின் தொடக்கத்தில் இந்திய சமூகம் - நிலப்பிரபுத்துவ உருவாக்கம் பற்றிய ஒர் ஆய்வு” (Early Medieval Indian Society - A Study in Feudalisation) என்ற நூல்கள் இது குறித்த மிக விரிவான, ஆழமான ஆய்வுகளாகும்.

இது போன்றே தமிழக வரலாற்றிலும் 7ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் பரவலாக புகுத்தப்பட்ட நிலமானிய முறை இங்கு முதன்முதலாக சாதி அமைப்பை உருவாக்கி திடப்படுத்தியது. மேற்கண்ட பொருளியல் அடித்தளத்தின் மாற்றமும், வளர்ச்சியும் அதற்கான மேற்கட்டுமானத்தை உருவாக்கியது என்பதை பார்க்க முடியும்.இந்த வரலாற்று ஆய்வுகள் சமூக வடிவத்தை, சாதியைப் பற்றிய சரியான ஆய்வுகளை வைக்க உதவியது. அதாவது “பரம்பரைத் தொழில் பிரிவினை அடிப்படையில் சாதி முறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. சாதி மற்றும் தீண்டாமையின் சமூக வேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிறஅம்சங்களான அகமணமுறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம்.

நிலப்பிரபுத்துவ அமைப்பில் ஆன்மீக வகைப்படாத நிலப்பிரபுக்களுக்கு இணையாக ஆன்மீக நிலப்பிரபுக்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும். ஆன்மீக நிலப்பிரபுக்களின் (கோயில்கள், மடங்கள்) ஆதிக்கம் தென்னிந்தியாவில் மிக வலுவானதாகும். அதிலும் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை நிலை நிறுத்தியதில் முக்கிய பங்காற்றியது பார்ப்பன மடங்கள், கோயில்கள் மட்டுமல்ல அதைவிட வலுவான பார்ப்பனர் அல்லாத கோயில்களும் மடங்களும்தான். சோழர் காலத்தில் வழங்கப்பட்ட பிரம்மதேயம், பள்ளிச்சந்தம், தேவதானம் ஆகியவை நிலப்பிரபுத்துவ உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதை அறியமுடியும். தமிழகத்தில் மட்டும் 36,355 கோயில்கள் மற்றும் மடங்கள் 4,79,021 ஏக்கர் நிலத்தினை வைத்துள்ளதாக 2002-03ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை கூறுகிறது.

நிலவுடமைக்கும் மதநிறுவனங்களுக்கும் உள்ள உறவைப் புரிந்து கொள்ள எங்கல்ஸ் கூற்றினை புரிந்துகொள்ளவேண்டும். “மத்திய காலத்தின் உலகக் கண்ணோட்டம் பெரும்பான்மையாக இறையியல் கண்ணோட்டம்தான். ஒரு பொது எதிரியான சராசன்களுக்கு (முஸ்லீம்) மாற்றாக ஐரோப்பிய நாடுகளை கிருத்துவம் ஒருமைப்படுத்தியது. கத்தோலிக்கம் இதைச் செய்தது. கருத்தளவில் மட்டும் இந்த இணைப்பு நின்றுவிடவில்லை. உண்மையிலேயே இந்த இணைப்பு இருந்தது. போப்பாண்டவரை மையமாகக் கொண்டு நிலப்பிரபுத்துவ ரீதியில் அமைக்கப்பட்டிருந்த தேவாலய அமைப்பில் அது காணப்பட்டது. நில உடமையாளர் என்ற முறையில் உள்ள தேவாலயம் பல்வேறு நாடுகளுக்கிடையிலான இணைப்பாக விளங்கியது.

தேவாலயத்தின் நிலப்பிரபுத்துவ அமைப்பு, பிரபுத்துவ அரசாங்க முறைக்கு ஒரு மத அங்கீகாரத்தை அளித்தது. மேலும் குருமார்கள் மட்டுமே படித்த வர்க்கத்தினர். எல்லா சிந்தனைகளுக்கும் தேவாலயம் ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் விளங்கியது” என்று எங்கல்ஸ் கூறுவது இந்தியாவுக்கும் பொருந்துவதைக் காணமுடியும்.

பண்டைய இந்திய சமூக அமைப்பு முறை உருவாக்கத்தில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கையும், மத்திய கால இந்தியாவில் இந்துமதமும், சாதியும் ஆற்றிய பங்கையும் அதாவது மேற்கட்டுமானம் ஆற்றிய பங்கை தெளிவாக பார்க்க முடியும்.

உற்பத்தி முறையிலும், உற்பத்தி உறவுகளிலும் ஏற்படும் மாற்றம்தான் அதன் மேற்கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டுவருகிறது. அதாவது “நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும், பண்பாடும் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டால் சாதியும் தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கான சமூக வேர்கள் தகர்ந்துவிடும்” என்கிறோம். இதை வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.சர்மாவும் நிரூபித்துள்ளார்.

இந்து மதம் நிலப்பிரபுத்துவ முறை ஒழிக்கப்பட்ட பிறகும் தன்னை புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொண்டு தொடர்ந்து உயிர் வாழ்வது சாத்தியமானதேயாகும். இவ்வாறு மதம் ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்திருப்பதற்கான வேர்களும், சாதிமுறை ஒரு சமூக நிகழ்வு என்ற முறையில் நிலைத்து நிற்பதற்கான வேர்களும் வெவ்வேறானவை” என்பதைக் காணலாம். வடிவங்கள்தான், அதன் மேற்கட்டுமானங்கள்தான் ஒவ்வொரு நாட்டிலும் தனக்கே உரிய சிறப்பம்சத்தோடு வளர்கின்றது அது போலவே இந்தியாவிலும் வளர்ந்துள்ளன. பொருளாதார கூறுகள் அதற்கேற்ற மாதிரியாகவே வளர்ந்துள்ளன. ஆக இச்சமூக அழிவை முதலாளித்துவ பொருளுற்பத்திமுறை மாற்றிடு செய்தாலும், பொருளாதார அடிதள அரசியல் மாற்றமில்லாமல் புதிய காலனிய வடிவிலான ஏகாதிபத்திய காலகட்ட சமூக ஒழுங்கமைப்பை தகவமைத்து வாழ முயலுகிறது. சாதி ஏன் என்று உயிர் வாழ்கிறது சாதி இருப்பிற்கான பயன் யாருக்கு சாதியை கட்டி காப்பது யாரின் நலன்லிருந்து என்று பார்த்தால் சாதியின் பல போக்குகளை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

பிராமணர்களை பற்றி முதலில் புரிந்துக் கொள்வோம்

பண்பாட்டு அளவில் தென்னிந்திய பிராமணர்களும் வட இந்திய பிராமணர்களும் வேறுபடுத்துவதும். பிராமணர்களின் வாழ்வு நெறி என்றும் மாறாதது என்றோ அவர்கள் வேத புராணங்களில் கூறப்பட்டுள்ள முறைப்படி மாறாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கூறும் அளவிற்கு அனைத்து பிராமணர்களும் ஒரு வழிபட்ட வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் பிராமணர்களின் மற்றமே மற்றொரை காட்டிலும் விரைந்து நிகழ்ந்து இருக்கிறது.

வேதகால பிராமணர்கள் சோமம் என்னும் போதை தரும் மதுவை பருகினார்கள் மாட்டுக்கறி உண்டார்கள் தெய்வங்களுக்கு உயிர் பலியை செய்தார்கள். இந்த நிலை வேதகாலத்திற்கு பிந்தைய நாளில் ஜெயன புத்த சமயங்களின் தாக்கத்தினால் மாறியது என்றாலும். இன்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் வங்காள மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் மாமிச உணவு உண்கிறார்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சமணத்தின் செல்வாக்கால் பிராமணர்கள் புலால் உண்ணுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பு . இன்னும் கூட புலால் உண்ணும் பழம் மரபின் எச்சம் பிராமணர்களிடம் காணப்படுகிறது. ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் கம்பம்மாவட்டத்திலும் மாதங்கி வழிபாட்டின் போது தாழ்த்தப்பட்ட மக்களான மாதிகர் வீட்டில் எருமை கறி சமைத்து அதனை பரிமாறுவதும் பிராமணர்கள் உண்பதும் ஆண்டுக்கு ஒரு முறை சடங்காக நிகழ்கிறது. (தமிழர் மானுடவியல் பத்வத்சல பாரதி பக்கம் 170- 171 அடையாளம் வெளியீடு ).

இவ்வாறான வாழ்க்கை முறையை கொண்ட பிராமணர்கள் காலம்தோறும் மாறி வந்துள்ளது மனுதர்மம் யக்ஞவல்கியம் போன்றவை சுட்டிக் காட்டுகின்றன. வேதகால சமூக சட்டதிட்டங்களை விவரிக்கும் இந் நூல்கள் சமுதாயத்திற்கு ஒவ்வாத தீமைகளை ஏற்படுத்துகின்ற ஆசாரங்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு மாறாக புதியவற்றை புகுத்தி உள்ளதையும் நாம் காண வேண்டும். காலத்துக்கேற்ப வாழ்க்கை முறை மாறி வந்துள்ளதை சுட்டிக்காட்டுவது அல்ல மேற்கூறிய தரவுகளின் நோக்கம் பிராமணர்களின் வாழ்வியல் முறை எந்த ஒரு காலகட்டத்திலும் மாறாமல் வரவில்லை என்பதையும் மாற்றத்துக்கு எந்த வகையான வேதபுராணங்களும் துணை நிற்கவில்லை என்பதின் சுட்டிக்காட்டுவது தரவுகளின் நோக்கமாகும். (அதே நூல் பக்கம் 171 ).

நவீன கல்வி தொழில் மயமாக்கும் நகரமயமாக்கும் போன்றவற்றை உள்ளடக்கிய மேற்கத்திய பண்பாட்டுகளோடு அனைத்து பண்பாடுகளும் ஆட்டம் கண்டு இருக்கிறது. நவீனத்துவமும் பிராமணர்களின் நகர்வும் மற்ற சாதியினரின் சமூகம் மாற்றத்திற்கான மையமாக மட்டும் பிராமணர்களின் வாழ்க்கைமுறை என்று எல்லை இடுவது சமஸ்கிருத மயமாதல் கோட்பாட்டின் முரண்பாடாகும் (மேல் அதேநூல் பக்கம்171). சனாதனிகளின் தனித்தன்மை சமணபுத்த சமயங்களின் தாக்கம் எவ்வாரெல்லாம் மாறிவந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள சில விளக்கம் ... பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்தமும் பன்னிரண்டாம் நூற்றாண்டு தோன்றிய லிங்காயத் இயக்கமும் பிராமணியத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முன் வைத்தன ...

அப்படி என்னும் பொழுது சைவ உணவு முறை தமிழ் பண்பாடு என்று கூறப்படும் பல்வேறு பழக்கவழக்கங்கள் இன்று பிராமணியமாக ஊகிக்க இயலாத அளவிற்கு பண்பாட்டு உருவாக்கத்தின் கலவையாக அமைந்துள்ளது.

இதனைப் புரிந்து கொள்ள சங்ககாலத்திற்கு பிந்திய காலத்தோடு தொடர்பு படுத்துவது பொருத்தம். கிபி ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சியின் ஆதிக்கம் எழுச்சி மேலோங்கி இருந்த தென்னிந்தியாவில் சகாப்தம் முடிந்தது கல்வெட்டுகளை காணும் பொழுது கிபி 6-9 நூற்றாண்டு காலகட்டங்களில் பல்லவர்களும் பாண்டியர்களும் தம்மிடையேயும் தக்காண அரசுகளோடும் போரிட்டுக் கொண்டும் இணக்கம் கண்டும் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மறுமலர்ச்சி அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பரஸ்பர போக்கில் பிராமணர்கள் தமிழ்வாயமாக்களும் தமிழர்கள் சமஸ்கிருத மயமாக்களும் ஏற்பட்டன. (மேல் நூல் ப174).

உயர் சாதி பிரிவினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி மற்ற சாதி பிரிவினர் தங்கள் தகுதிகளை உயர்த்திக் கொள்ளும்போது சாதி சமூகத்தின் உயர் குடியாக்கம் எனும் கருத்தமைவு சாதியால் கீழ் படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு உயர்குடியாக மாற செய்யும் போக்கும் செயலும் அவர்களின் எண்ணமும் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைவரும் மேல்சாதியினராக மாறிவிட முடியும் என்பதனை இளையராஜாவின் மீதான தீண்டாமை கொடுமை என்ன சொல்கிறது நமக்கு? ஆனால் ஒரு காலத்தில் இந்த உயர் குடியாக்கம் நடந்தது அவை எப்படி என்ன என்பதனை நூலில் விரிவாக காணலாம் இங்கே சுருக்கமாக...

பிராமணர்கள் அல்லது உய்ரசாதி அடிப்படையில் மேல் உள்ளவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக சில மற்றசாதியில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தங்களோடு இணைத்து வளர்த்து விடுவதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது?

மன்னர்கள் அதிகாரத்தளம் சர்வவல்லமை பெற்ற தாயினும் வல்லமையின் தளம் தொடர்ந்து தாக்கப்பட/உயர்த்தப்பட பிராமணர்களின் சடங்கியல் தளத்தை அது கோரி நிற்பதால் இங்கு அதிகாரம்(Power) தகுதி(status) ஆக இரண்டும் தன்னியல்புகளுடன் நிலைபெறாமல் பிராமணர்களின் சடங்கு தகுதி மன்னர்களின் சர்வாதிகாரத்தை தன்வசம் உச்செரித்துக் கொள்கின்றது. இவ்வாறு அதிகாரம் தகுதியாகிய இரண்டும் தனித்தியங்கும் கூறுகள் ஒன்றோடுஒன்று ஒத்திசைவு பெறாமல் எதிர்நிலையில் ஒன்றைஒன்று மறுதலித்துக் கொண்டு ஒன்று மற்றொன்று தன்வயப்படுத்திக் கொண்டது என்பதே சாதி சமூகத்தின் படிநிலை தர்க்கமாக வாய்ப்பாடாக அமைந்தது (மேல்அதே நூல் பக்கம்179).

ஆக பிராமணர் என்னும் பூசாரிகளின் மேலாதிக்கம் அன்றைய சமூகத்திலிருந்த அரசர்களின் தேவையை பூர்த்திய செய்யும் கருத்தியல் மதசடங்கு என்று மக்களை அடிமைபடுத்தபயன்பட்டனர் ஆகையால் அக்காலத்தில் மேனிலைபட்டனர். இன்று தேவையற்று போனாலும் பழைமை போற்றும் மரபுவழி கலாச்சரம் பிற்போக்கான மத அடையாளங்களை காத்து பேணுகிறது அதனால் பிராமணர் இன்று உச்சாணி கொம்பில் உள்ளனர் சாதியின் அடையாளத்தால். இன்னும் சில விரிவாக நூலில்.

சுரண்டலின் வடிவாக தோன்றிய மதநிறுவனம் சுரண்டலை பாதுகாக்கவே பயன்படும். சாதியின் கோடூரத்தை கட்டிக்காக்கும் நிறுவனமான இந்த அமைப்புமுறையை இல்லாதொழிப்பதே நமக்கான பணி. அந்த கருத்தியலையும் நடைமுறையில் மக்கள் படும் பாட்டிற்கு அவை என்ன செய்கிறது என்பதனை விளங்கிக் கொண்டால் விட்டொழிப்பது கடினமல்ல அவை நடத்த திட சித்தம் வேண்டும்.

நாம் வாழும் சமூகம் இவ்வளவு வளர்ந்தும் இன்று குலத்தொழில் பிரிவுகள் செயல்படுகின்றனவா? அப்படி இல்லாத பொழுதும் சாதிய ரீதியான தொழில்முறை தேவையற்றதாக ஆகியும் சாதி ஏற்றதாழ்வை தொடர்ந்து பேணிகாக்கும் நடைமுறைக்கான காரணங்கள் என்ன தேடினால் நமக்கான பதில் எளிதாக கிடைக்கும்.

நில உடமை சமூகத்தின் உற்பத்தி முறை வழக்கொழிந்து போய்விட்டது நிலை உடமையின் உற்பத்தியாளர்களான தொழிலாளி அதன் உற்பத்திக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிலாளி அதற்குத் தொண்டூழியம் செய்யும் தொழிலாளி ஆகிய இந்த பிரிவினர் நிலவுடமை சமுக உற்பத்தியின் தொழில் பிரிவினர் இன்றியும் இன்றைய நவீன தொழில் கருவிகளால் விவசாய கருவிகள் மேம்பாடு மற்ற தொழிலாளிகள் இடத்தில் உழவு கருவிகள் மற்றும் தொண்டூழியம் செய்த அமைப்புமுறை இந்த புதிய காலனிய ஏகாதிபத்திய வளர்சியில் தேவையற்றதாகிவிட்டது.

இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் ஆம் அவர்கள் வாழும் புதிய காலணி முறையில் பணம் இருந்தால் எதையும் வாங்கி உண்ண முடியும் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் நிலத்தின் மீதான உரிமை கொண்டவர்களை அண்டிப் பிழைக்க வேண்டிய தேவை கற்று போய்விட்டது ஆகவே நிலவுடமை சமூகத்தின் அடித்தளமான பொருளாதார அடித்தளம் நிலம் சார்ந்து வாழும் நிலையில் ஒட்டுமொத்த சமூகமும் இல்லை.

மனிதனின் வரலாறு எங்கிருந்து தொடங்கியது எவ்வாறுதோற்றுவிக்கப்பட்டது என்று ஆய்வு செய்யும் பொழுது. பூமியின் உருவாக்கத்திலிருந்து மனிதகுலம் நகரநாகரீக சமூகமாக 6000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நைல் நதிக்கரை சமவெளிகளில் வாழ்க்கை வாழ்கின்றனர். அதாவது 4500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்பு (கிமு 2500 முதல் 2000 வரை )சிந்து சமவெளி நகர அரசுகள் வளர்தல்…

இவ்வாறாக சுழல் ஏணி முறையில் வளர்ந்த சமூகமானது ஒவ்வொரு காலகட்டமும் முந்தைய சமுதாயத்தை மேலானதாகவும் பழைய சமூகத்தை புறந்தள்ளியும் வளர்ந்துள்ளது. அதற்கான உந்து சக்தி இதே மனித உழைப்பே என்றால் இந்த உழைப்பாலே மனித சமூகம் இத்தனை முன்னேற்றத்தையும் கண்டுள்ளது. ஆக இந்த சமூக அமைப்பு மாறாநிலையில் தொன்று தொட்டு இருந்தவை அல்ல அதே போல் இன்றுள்ளது போல் என்றும் நிலைத்து நிற்கவும் போவதில்லை.

ஆக மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்யசொல்கிறது. ஆம் அன்று நிலவிய உற்பத்திமுறை என்னவோ அதன் அடிப்படையில் அம்மக்களின் வளர்ச்சியை புரிந்துக் கொள்ள முடியும் என்கிறது, ஆனால் இந்திய வரலாற்றெழுதிகளோ இதனை கண்டுக் கொள்ளவே இல்லை. இங்கு எழுதப்பட்டுள்ள எல்லா வரலாற்று நூல்களும் வேதகாலத்தை மையமாக வைத்தே ஆய்வு செய்துள்ளனர். உண்மையில் வேதகாலம் என்பதை வேத இலக்கியங்களை நடுநிலையுடன் ஆய்வு செய்தால் பலவீனம் நிறைகுறைகள் அறிவுக்கு ஒவ்வாத மனம்போன போக்கில் ஆன புனைவுகள் என்று தெரிந்து கொள்ள முடியும். மௌரியர்காலத்திலும் முகலாயர் காலத்திலும் அரசியல் அடிப்படையில் இந்திய துணைக்கண்டம் ஓரளவு ஒன்றிணைந்த நாடாக உருவாகும் நிலையில் இருந்தது. இருந்தாலும் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்தான் ஒன்றுபட்ட வலிமையான மத்தியபடுத்தபட்ட ஒன்றிணைந்த ஆட்சி முழுமையாகநிறைவேறியது. அப்படி இருக்கும் பொழுது இந்தியாவைப் பற்றிய காலனியாட்சியாளர்களின் பொய்யான புரட்டுகளையே இந்திய வரலாறாக திணிக்கப்பட்டதே. இல்லாத ஒன்றை இங்கே பேசிக் கொண்டிருப்பது தவறானதாகும்.

ஆங்கிலேயர்கள் சாதிகளின் இருப்பை தீவிரமாக பரிசீலித்தனர். இந்திய மக்கள் அனைவரையும் சாதியாகவே பாகுபடுத்த முயன்றனர். எல்லோரும் ஏதோ ஒரு சாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் சாதி அடையாளமே உண்மையான அடையாளம் என்றும் கருதினர். இத்தகைய முன்னெடுப்பால் சாதி உண்மையானதாகவும் மேலும் வலுப்பெற்றதாகவும் மாறியது. (சாதி தோற்றம் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் சுரிந்தர் எஸ் ஜோத்கா தமிழில் பக்தவத்சல பாரதி நூல் பக்கம் 22 - 23 காலச்சுவடு பதிப்பகம்).

இவ்வகையாக மிஷனரிகளும் காலனி அதிகாரிகளும் வெவ்வேறு வகையில் சாதி உருவாக்கத்தில் கருத்துகளில் பங்களித்துள்ளனர். இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்து மத நூல்களையும்அந்நூலை விளங்கிக் கொள்ள அன்றைய பண்டிட்டுகளையும் சாஸ்திரிகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஐரோப்பிய குடியேற்றத்துக்குமுன்னால் அடையாளம்என்பது சாதி, தொழில், மொழிசமயபிரிவு, நிலப்பகுதிமற்றும் இடம்போன்ற பல்வேறுஅம்சங்களை சார்ந்துஇருந்தது. சாதியும்சமயப்பிரிவும் ஒன்றின்மேல் ஒன்று ஏறி இருந்தாலும்பதினெட்டாம் நூற்றாண்டின்இறுதிப் பகுதியில்சமயத்திற்கு மேலாகசாதிக்கு முதன்மைகொடுக்கப்பட்டது. ஆனால் இந்தியசமூகத்தை காலனியகாலகட்டத்தில் மறுகட்டுமானம் செய்தபோது மதத்திற்குமுதன்மை இடம்கொடுக்கப்பட்டது. (ரோமிலா தாப்பர் முற்கால இந்தியா).

இன்றைய சாதி இருபிற்கான காரணங்களை தொகுத்து காணும் பொழுது அவை குறிப்பாக சமூக சம்பிரதாயா சடங்குகள், மத நிறுவன ஒழுங்கமையில் தன்னை காக்கும் கலாச்சார மேலாதிக்கும் இதனை கட்டிக்காக்கும் இந்த ஆட்சியாளர்கள்,இதன் பின்னர் திரட்டப்பட்டுள்ள மக்கள் திரள். இவர்களின் மத சாதிய அடையாளங்களால் தனக்கான வாழ்வியலை தேடும் தற்காத்துக் கொள்ள விளையும் சாதரண மக்கள்.

அவர்களுக்கு சாதி இட ஒதுக்கீட்டால் கிடைத்த பயன் என்ற என்று தேடும் இடது இந்த சாதிய அடையாளங்களை சுமப்பதை தவிர வேறொன்றும் இல்லை எனலாம்.

இன்று எல்லாம் தனியார் மயமாகி விட்டது; கல்வியில், மருத்துவத்தில், வேலைவாய்ப்பில் இன்று மக்களின் வாழ்க்கை தேவைக்கான அனைத்தயும் தனியாரிடம் கொடுத்து விட்டு இடஒதுக்கீட்டால் தன் சாதி மக்களுக்கு போராடுவதாக கூறும் சாதி கட்சி தலைவர்களின் பேச்சு என்பதே பொய்யானது எனும் பொழுது இந்த உழைக்கும் ஏழை எளிய மக்களின் ஓட்டை மட்டுமே குறியாக உள்ள ஓட்டரசியல் கட்சிகள் உள்ள பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை என்பது தெளிவு. அதேபோல் சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டுள்ள சீர்திருத்தவாதம் மக்களின் இழிநிலைக்கு முடிவுகட்டாது அப்படியெனும் பொழுது தீர்வென்பது நமது மார்க்சிய ஆசான்கள் சொன்னவைதான், “இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.”(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து). ஆக சாதியின் தோற்றம் எப்படி அதன் சமூக தேவைக்காக உருவாக்கப் பட்டதோ அந்த உற்பத்தி முறையை மாற்றி அமைக்கவும் புதிய சமூக உறவுகளிலிருந்து இந்த கேடான தீண்டாமையையும் சாதி ஒடுக்கு முறைக்கான எல்லா காரணிகளையும் ஒழிப்பதே தீர்வாகும். அதிகார வர்க்கமாக பல்வேறு சாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து சாதிகளிலும் உள்ளனர். அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் சாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட்படுகிற அனைத்து சாதிகளையும் சேர்ந்தஉழைக்கும் ஏழை எளிய மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது.

சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து உழைக்கும் ஏழை எளிய சாதியில் உள்ளவர்கள்ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதே.இவை நம்முன் இந்திய இலங்கை பகுதியில் சாதி ஒழிபிற்கான போராட்டத்தில் காண கிடக்கும் கம்யூனிஸ்ட்டுகள் செய்து காட்டியுள்ளனர். ஆனால் இன்று அந்த பணியை புரிந்துக் கொள்ளாமையின் குறைபாட்டை ஊதி பெருக்கும் சீர்திருத்தவாதிகளும் அடையாள அரசியல் வாதிகளும் ஆளும் வர்க்க காப்பாளர்களாக வலம் வருகின்றனர். ஆக மார்க்சிய அடிப்படைகளை முழுமையாக புரிந்துக் செயலாற்ற கடமை பட்டவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர். 

உண்மையில் சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வர்க்க சமுதாயத்துடன் வேர்கொண்டுகிடப்பதால் மதம் மாறுவதால் மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடாது. உதாரணமாக சாதிய ஒடுக்குமுறையிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை என்ன? அதுமட்டுமின்றி ஒரு லட்சம் மக்களுடன் பௌத்த மதத்தில் இணைந்த போதும் அம்பேத்கரால் இந்தியாவின் சாதியமைப்பை ஒரு அங்குலம் கூடஅசைக்க முடியவில்லை.

தொடரும்....



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்