இந்திய கம்யூனிச இயக்க படிப்பினைகள்- விவாதத்திற்கு

செப்டம்பர் 2025 இலக்கு இணைய இதழுக்கு தேடலே இவை. உங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன தொழர்களே.  

"இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியது, ஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாது, சமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும்" என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லி சமூகத்தை மாற்றுவதற்காக நமக்கு வழிகாட்டினார்கள். ஆகவே இங்கு நிலவுகின்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி என்ன? என்பதைத்தான் நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறை யையோ, மாவட்ட ஆட்சித்தலைவரையோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்- நீதிமன்றம்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க நாம் முயற்சி செய்கிறோம். அரசு என்ன செய்கிறது? முதலாளிகளுக்கு சாதகமாகவும் (பணம்படைத்த கூட்டதிற்கு) உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு விரோதமாகவும் செயல்படுகிறது ஏன்? ஏனென்றால் இந்த அரசு பணம் படைத்த சொத்துடைய முதலாளிகள் நலனுக்கானதே ஆக உழைக்கும் மக்களின் நலனுக்கான அரசு வேண்டும் அல்லவா? அவை எப்படி இருக்கும் என்பதனை புரிந்துக் கொள்ள மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர் அவர்கள் காட்டியுள்ள வழிமுறையில் நடைபோடுவதுதான் இந்த கொடூரங்களுக்கு விடிவு கிடைக்கும் அதனை செய்ய வேண்டியவர்கள் என்ன செய்துக் கொண்டுள்ளனர் சற்று விளக்குவீர்களா தோழர்களே. எனது சில தேடல் இதனுடன் உங்களின் பங்களிப்பை கோருகிறேன் வாருங்கள் கருத்தை தாருங்கள் தோழமைகளே.

"இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் உலகைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் விளக்கியது, ஆனால் சமூகத்தை விளக்கினால் மட்டும் போதாது, சமூகத்தை மாற்றவேண்டும் என்பதே முதன்மையானதாகும்" என்று மார்க்சிய ஆசான்கள் எடுத்துச் சொல்லி சமூகத்தை மாற்றுவதற்காக நமக்கு வழிகாட்டினார்கள். ஆகவே இங்கு நிலவுகின்ற பல பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி என்ன? என்பதைத்தான் நாம் முதன்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் சந்திக்கும் சாதிப் பிரச்சனையை தீர்ப்பதற்கு மக்கள் என்ன செய்கிறார்கள்? நீதிமன்றத்தையோ, காவல்துறையையோ, மாவட்ட ஆட்சித்தலைவரையோ, அமைச்சர்களையோ அணுகுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். எந்தப் பிரச்சனை என்றாலும் அரசாங்கம் (அமைச்சர்கள்) அல்லது அரசு (அரசு அதிகாரிகள்- நீதிமன்றம்) இவற்றின் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க நாம் முயற்சி செய்கிறோம். "அவனன்றி அணுவும் அசையாது" என்று ஆன்மீகவாதிகள் சொல்வது உண்மையல்ல, ஆனால் அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. இந்திய பெருமுதலாளிகளிடம் மூலதனம் இருக்கலாம் ஆனால் அவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவது இந்த அரசின் துணையோடுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசும், அரசாங்கமும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வது போல பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்வதில்லை, மாறாக மக்களுக்குஎதிராகவே நடந்துகொள்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தேசியப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும், சாதிப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும் பிற பிரச்சனைகளை முதன்மை படுத்துபவர்களும் அவர்களது பிரச்சனையை தீர்ப்பதற்கு எவ்வகையான அரசு வேண்டும் என்பது குறித்து பேசுகிறவர்கள் யாரெல்லாம உள்ளனர் கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்திய வரலாற்றில் விடுதலைக்கான போராட்டத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்டுகளின் தன்னலம் கருதாத போராட்டம் தியாகம் மற்றவர்களின் எல்லாப் போராட்டங்களை விட மேலானது, உயர்வானதாகும்.

புரட்சி என்பது என்ன என்று தெளிவு பெற்றுக் கொண்டு, பொதுவுடமையை நோக்கிய சோசலிச புரட்சியின் அனுபவங்களும் மற்ற புரட்சியின் அனுபவங்களும் நமக்கு தரும் பாடங்களிலிருந்து தற்போதைய கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் செயல்பாட்டை நாம் பரிசீலிக்க வேண்டும். அன்றைய செயலில் புரட்சிக்காக அர்பணிப்புடன் செயல்பட்ட கட்சியின் பின் உழைக்கும் மக்களும் பல்வேறு பிரிவினரும் அணி திரண்டனர். பலர் தியாகியாகவும் தயங்கவில்லை, தன்னுடைய உயிரை துச்சமாக மதித்து நேர்மையாக செயல்பட்டார்கள். அவர்களின் செயல்பாட்டால் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் மதிக்கப்பட்டனர். அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் சொத்துகளை கைவிட்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்காக களத்தில் இறங்கி போராடி உழைக்கும் ஏழை எளிய மக்களின் உற்ற துணைவர்களாக வாழ்ந்து காட்டினர். இன்றோ கட்சியில் பொறுப்பு பெறுவது, தன் குடும்பம், தனது சொத்து சேர்க்க என்றாகிவிட்டது பொதுநலம் போய் சுயநலம் மேலோங்கியுள்ளது. சிலர் ஆட்சி அதிகாரதிற்கு வந்து முதலாளிகளாக துடிக்கும் பொழுது அன்றைய கம்யூனிஸ்டுகளும் இன்றைய கம்யூனிஸ்டுகளும் ஒன்றல்ல என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதேபோல் அன்று புரட்சிக்காக உயிர் நீத்த தியாகிகளின் பெயரில் வாழும் குழுக்களும் இன்று தங்களின் மூதாதையரின் பெயரை உச்சரித்து உயிர்வாழ துடிக்கின்றனர். ஆனால் தியாகத் தலைவர்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு உண்மையாக இல்லை என்பதே நம் முன் உள்ள உண்மையாகும். இன்றைய நிலையை நாம் புரிந்துக் கொள்ள, மார்க்சிய ஆசான் லெனினிடம் செல்வோம், “முதலாளி வர்க்கத்தின் ஒன்று படுத்தப்பட்ட மற்றும் மையப்படுத்தப்பட்ட சக்திக்கு எதிராக பாட்டாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட மற்றும் மையப்படுத்தப்பட்டதொரு சக்தியாக மாற்றாக மக்கள் நிறுத்தப்பட வேண்டும்”- என்று மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் வழிகாட்டியது. ஆனால் அதுபோன்ற ஒரு நிலை இங்கில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் குருசேவின் வழிகாட்டுதலை ஏற்றுள்ள எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் முதலாளித்துவ கட்சிகளிடம் சமாதானமுறையில் இணக்கமாக செயல்பட்டு தொழிலாளி உழைக்கும் வர்க்கதிற்கு துரோகம் செய்கிறது. அதேபணியைதான் புரட்சி பேசுபவர்களும் ஏமாற்றுகின்றனர். இங்குள்ள எல்லா குழுக்களும் மார்க்சியம் கூறியுள்ள சமூக மாற்றத்தில், வெகுசனங்களின் பங்களிப்பை புறக்கணித்துவிட்டு ஒருசிலர் மட்டும் ஒன்று கூடி என்ன சாதித்தனர்? ஆக ரசியா மற்றும் சீனப் படிப்பினைகளின் அடிப்படையில் புரட்சிக்கான பணியினை செய்யாத இவர்களை எதிர்புரட்சியாளர்கள் என்பதில் தவறில்லைதானே?

இந்தியாவை கொள்ளை அடிக்க துடிக்கும் ஏகாதிபத்திய கொள்ளையர்கள்முதல், இன்நாட்டு சுரண்டல் பேர்வழிகள் வரை - இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக ஏராளமான இயற்கை வளங்களை கொண்ட நாடாக பெரிய சந்தையாக இருப்பதால் இங்குள்ள மக்களையும் மற்றும் இயற்க்கை செல்வங்களையும் இவர்களது மூலதனம் மூலம் சுரண்டுவதும், அதேவேளையில் நாட்டின் இயற்கை வளங்களை தங்களின் தேவைகேற்ப கொள்ளையடிப்பதும், தொடர்கதையாக உள்ளது. இந்த கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிக்க. இங்கு ஒன்றுபட்ட ஒரு புரட்சிகர பொதுவுடைமை கட்சி இல்லை. அதேபோல் நாட்டின் பெரும்பாலன உழைப்பு சக்திகள் (உழைப்பாளர்கள்) அவர்களின் மீதான சுரண்டல் ஒடுக்குமுறைக்கான காரணம் பற்றியும் சுரண்டலாளர்களை பற்றியும் அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பையும் அறியாத நிலையிலேயே உள்ளனர். அது பற்றிய உண்மைகளை அவர்களுக்கு போதித்து எதிரிக்கு எதிரான போருக்கு மக்களை கம்யூனிஸ்டுகள் இங்கு வளர்த்தெடுக்கவில்லை. ஆனால், எதிரிகள் மக்களை பிரித்து வைத்துள்ளான். அதன் அடிப்படையிலேயே மக்களின் எதிரிகள் மக்களை அடிமைப்படுத்தி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்.

மக்களை இந்து மத ரீதியாக ஒன்றிணைக்க நினைக்கும் மதவாத கட்சி ஆட்சியில் இருக்கிறது, சாதி ரீதியாகவும், இனரீதியாகவும் இன்னும் சில வழிகளில் மக்களை பிரிவினை செய்து அவர்களுக்கான முக்கிய பிரச்சினையின் அடிப்படையில் திரள்வதை தடுக்க, மதமாக, சாதியாக, மொழியாக, இனமாக இன்னும் சில பிரச்சினைகளின் அடிப்படையில் பிரிந்து ஒருவருக்கெதிராக இன்னொருவரை நிறுத்தி அவர்களுக்குள் மோதிக்கொள்ள தேவையற்ற முரண்பாட்டை தொடர்ந்து வளர்க்க ஆளும் வர்க்கமும் அதன் எடுபிடிகளும் முயல்கிறார்கள்.

அதே சமயம் நாட்டில் பொதுவுடமையை நேசிக்கும் மற்றும் அதனை படைக்க விரும்பும் சக்திகள் பிரிந்து நிற்கின்றன. ஒரே குடையின் கீழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு நின்றால் யொழிய நாட்டில் சோசலிசம் சாத்தியம்! இல்லையேல் புரட்சிக்கு புறநிலை இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத கையறுநிலை ஏற்படும், நாட்டில் புரட்சியை நேசிக்கும் சக்திகள் ஒன்றுபடாமல் இருந்தால் எதிருக்கு சாதகமே அன்றி உழைக்கும் மக்களுக்கு அல்ல!!

இன்று கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அமைப்புகள் என்ன நிலையில் உள்ளது? மார்க்சிய தத்துவத்தை கைவிட்டு தலைமை கூறுவதை கேட்டு நடக்கும் நடைமுறை, இதில் விமர்சனதிற்கு இடமே இல்லை. எங்கள் கட்சியின் தலைமையை கேள்வி கேட்பதா என்ற நிலை உள்ளதென்றால் புரட்சி பேசும் குழுக்களும் விதிவிலக்கல்ல! தங்களைக் கேள்வி கேட்பவர்களை தேவையற்றவர்களாக தூர எறிவது தானே தொடர்கதையாக உள்ளது. இந்த இரண்டு போக்கிலும் இங்கு சித்தாந்த போராட்டம் நடைபெறுவதற்கு எந்த சாத்தியப்பாடும் இல்லை. விமர்சனம், சுயவிமர்சனம் என்பதே இவர்களுக்கு வேப்பங்காயாக உள்ளது. ஆக இவர்கள் கம்யூனிசத்தின் அடிப்படைகளை மறுத்து விட்டு தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் புரட்சிக்கான அடிப்படைகளை புறக்கணித்துவிட்ட இவர்கள் புரட்சியாளர்கள் என்றும் நடை போடுகிறார்கள். வெட்ககேடு இவர்களின் ஒவ்வொரு செயலும். இவர்களுக்கு இடையில் உள்ள புரட்சியை நேசிக்கும் சக்திகள் உழைக்கும் மக்களை நேசிக்கும் சக்திகள் விழிப்படைந்து ஒரு சரியான மார்க்சிய லெனினிய வழிமுறையை கற்று தேர்ந்து இந்த உழைக்கும் மக்கள் விரோத கட்சிகளையும் போலி புரட்சியாளர்களையும் புறக்கணித்து உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கட்சி அவசியம் என்று உணர்ந்து செயல்பட தொடங்கினால் இந்த போலிகள் இல்லாது ஒழிவார்கள்.

“தங்களது இயகத்தில் உள்ள குறைபாடுகளை பூசி மறைக்காமல் இருக்க வேண்டுவது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆனால் அவைகளை விரைவில் மற்றும் அடிப்படையில் சரி செய்வதற்காக பகிரங்கமாக அவைகளை விமர்சனம செய்ய வேண்டும்”. (லெனின்- அகிலத்தின் இரண்டாம் காங்கிரசின் அடிப்படைப் பணிகள்). இங்குள்ள ஒவ்வொரு குழுவும் தம்மை தாமே ஒரே சரியான புரட்சிகரமான கம்யூனிஸ்ட கட்சியாக கருதிக் கொள்ளும் மனப்பான்மை கொண்டவை. சுவர்களில் காணும், “நானே உயிரும் ஆன்மாவும், வழியுமாக இருக்கிறேன்”, என்கிற வாசகத்துக்கும், மேலே கண்ட மனபான்மைக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா? புறநிலை உண்மை என்று கூறுகிறோமே, அதற்க்கு ஒத்துப் போகிறதா?

விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மை களிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. 

 அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.ஆனால் இங்கோ ஒரு அமைப்பே பல குழுக்கலாக சிதறுண்டு போய் கொண்டுள்ளது கேட்டால் கருத்து போராட்டமாம், இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் ஒடுக்கும் வர்க்க சேவையை தவிற சொல்ல முடியுமா நியாயவான்களே?

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்! (கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இருந்து)....

எல்லாப் புரட்சிகர வர்க்கங்களையும் -பிரிவினரையும்- மக்கள் திரளினரையும் அணிதிரட்டி இந்தப் பெரும் சிறப்பு வாய்ந்த போராட்டத்தில் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கு தலைமை கொடுக்க வேண்டியது கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றுக் கடமையாகும். அதற்கான அடிப்படைகளை தத்துவ அரசியல் வழிமுறைகளை கண்டு விவாதித்து மக்களை அந்த உயர்வான சமூகம் படைக்க அணி திரட்ட மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிதளங்களை கற்று தேர்வதன் அவசியம் உணர்வோம் செயல்படுவோம் தோழர்களே.



தோழமையுடன் இலக்கு ஆசிரியர் குழு.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்