ஓட்டு திருட்டும் உழைக்கும் மக்களை வஞ்சிக்கும் பாராளுமன்ற செயல்களும்...
இங்குள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் கையில் எடுக்கும் அரசியல் கட்சிகள் அதனை தன் தேர்தல் நலனுக்காக கவனத்தில் கொண்டே செயல்படுவது இறுதியில் வாக்கு வாங்கி ஆட்சி அமைத்தாலும் ஓட்டுபோட்ட மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் அடுத்த தேர்தலுக்கு பொய்யான வாக்குறுதிகள் தந்து ஏமாற்றுவது! இவையெல்லாம மிஞ்சும்வகையில் அண்மையில் பாராளுமன்றதில் இந்த தேர்தல் நாடகம் அம்பலப்பட்டு கிடக்கிறது அவைதான் வோட் சோர்(திருட்டு).
இதனை உழைக்கும் மக்களுக்கு புரியவைத்து அம்பலப்படுத்த வேண்டியவர்கள் பாராளுமன்ற புனிதத்தை காக்கும் பணியில் மும்மரமாக உள்ளனர். ஆக நாம் புரிந்துக் கொள்ள இந்த தேர்தலும் திருட்டும், பாராளுமன்ற நடைமுறையும் உழைக்கும் மக்களின் நலன் சார்ந்தவை அல்ல! பாராளுமன்றம் என்பதே யார் தலைமையில் கொள்ளை அடிப்பது என்பதுதானே? யார் ஆட்சிக்கு வந்தாலும் உழைக்கும் மக்களை சுரண்டுவதுதானே அடிப்படையாக கொண்ட இந்த ஆட்சிமுறை உள்ளது. ஆக நமக்கான அமைப்பை பற்றி பேசாத இவர்கள் ஆளும் வர்க்க நலனில் அக்கரை கொண்டுள்ளனர்.
அதனை புரிந்துக் கொள்ள வாட்சாப் செய்தியை பகிர்கிறேன் தோழர்களே
திருடப்படும் தேர்தல்கள்
---------------------------------
மூத்த பத்திரிகையாளர் விஜய் சங்கர் முக நூல் பக்கத்தில் இருந்து
பெங்களூர் மத்திய பாராளுமன்றத் தொகுதியில் 7 சட்ட மன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், 6 சட்ட மன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், பாஜகவை விட அதிக வாக்குகள் பெற்றிருந்தது. ஆனால், 7 ஆவது சட்ட மன்றத் தொகுதியான மகாதேவ்புராவில், பாஜக காங்கிரஸை விட 1.14 லட்சம் ஓட்டுகள் (98%) அதிகமாக வாங்கியிருந்தது. இதன் விளைவாக, மொத்த பாராளுமன்றத் தொகுதியில், 32707 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது
இது காங்கிரஸ் கட்சிக்குப் பல சந்தேகங்களை எழுப்பியது. முடிவுகளைச் சரிபார்க்க முடிவெடுத்தது. வாக்காளர் பட்டியலின் மின் நகலைத் தருமாறு தேர்தல் ஆணையத்திடம் வேண்டு கோள் விடுத்தது காங்கிரஸ்.
ஆனால், சொல்ல முடியாத காரணத்தால், தேர்தல் கமிஷன், வாக்காளர் பட்டியலின் மின் நகலைத் தர முடியாது என மறுத்து விட்டது. மகாதேவபுரா தொகுதியின் மொத்த வாக்காளர் பட்டியலை காகிதமாகக் கொடுத்தது. அந்தப் பட்டியலை மூன்று வரிசையாக அடுக்கி வைத்தால், ஏழு அடி உயரம் வந்தது.
காகிதப்பட்டியலும், ஸ்கேன் செய்ய இயலாத வண்ணம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் 30-40 பேர் கொண்ட குழுவுக்கு இந்தப் பட்டியலை மீண்டும் கணிணியில் ஏற்றுவதற்கு ஏழு மாதங்கள் பிடித்தன.
மின் நகலைக் கொடுக்க மறுத்தது, ஸ்கேன் செய்ய இயலாத காகிதத் தரவுகளைக் கொடுத்தது போன்ற செயல்கள் தற்செயலானவையல்ல. எவரும் எளிதில், இந்தத் தரவுகளைச் சரி பார்த்து விடக் கூடாது என்னும் நோக்கத்தோடு தேர்தல் ஆணையம் செயல்பட்டிருப்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
கணிணியில் ஏற்றப்பட்ட தகவல்கள் அலசப்பட்ட போது, மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில், 1.0025 லட்சம் வாக்காளர்கள் போலி என்பது கண்டறியப்பட்டது.
இதில் உள்ள தகவல்களை காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் களத்தில் சென்று சரிபார்த்தனர். குறிப்பாக ஒரே விலாசத்தில் பல வாக்காளர்கள் என்னும் பிரிவில், ஒரு அறை கொண்ட வீட்டில் 80 பேர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியல் சொன்னது. ஆனால், நிஜத்தில் அப்படி யாருமே அந்த வீட்டில் வசிக்க வில்லை. தவறான விலாசம் என்னும் பிரிவில், விலாசங்களே இல்லாத வாக்காளர்கள் இருந்தனர். அதே போல ஒரே வாக்காளர் பல பூத்துகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களில் சிலர், மஹராஷ்ட்ராவிலும், உத்திரப் பிரதேசத்திலும் இருப்பதாக தேர்தல் கமிஷனின் தகவல் பலகை சொன்னது.
முதன் முறை வாக்காளர்கள், தங்கள் பெயர் விடுபட்டிருந்தால், தேர்தல் நாளன்று சென்று Form-6 என்னும் படிவத்தை உபயோகித்து வாக்களிக்க முடியும் என்றொரு வழி இருந்தது. முதன் முறை வாக்காளர் என்பவர்கள் பெரும்பாலும் 18-23 வயதுக்குள் இருப்பர். ஆனால், இந்த படிவத்தை உபயோகித்து வாக்களித்தவர்கள் பெரும்பாலும் 65, 75 வயது முதியவர்கள். மிக முக்கியமாக ஒருவர் கூட, 18-23 வயதுக்குள் இல்லை. எனவே, இந்த வழியிலும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
ஏறத்தாழ 6 லட்சம் வாக்காளர்கள் இருக்கும் மகாதேவபுரா தொகுதியில், 1 லட்சம் போலி வாக்காளர்கள் என்பது கிட்டத்தட்ட 15% ஆகிறது. இந்த 1 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி விட்டுப் பார்த்தால், காங்கிரஸ் இந்தப் பாராளுமன்றத் தொகுதியில் வென்றிருக்குமோ என்னும் சந்தேகம் பலமாக எழுகிறது.
இந்தத் தரவுகளை முன்வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் திரு.இராகுல் காந்தி, 30 நிமிடங்கள் பேசினார். அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு மடைதிறந்தார் போல பதிலளித்தார். ஒரு சிறு தடுமாற்றம் கூட இல்லை. இந்த சந்திப்பையும், பேச்சையும் கேட்கும் எவருமே, இவரைத்தான் ஆளுங்கட்சியான பாஜக பப்பு என கேலி செய்கிறதா என வியந்து போவர். இதே போன்ற ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் மோதி கலந்து கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
எம்.ஜி.தேவசகாயம் ஒரு இராணுவ மற்றும் ஐஏஎஸ் அதிகாரி. 1965 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கெடுத்தவர். பின்னர் ஐஏஎஸ் அதிகாரியாக ஹரியானா மாநிலத்தில் பணிபுரிந்தார். நெருக்கடி நிலை காலத்தில், ஜெய்ப்ரகாஷ் நாராயண் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது, அவரைக் கவனித்துக் கொண்டவர். ஜெயப்ரகாஷ் நாராயணும், இந்தியாவின் இரண்டாவது விடுதலையும் உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர்.
2024 தேர்தல்கள் நடந்து முடிந்த போது, ‘தேர்தல்களுக்கான மக்கள் ஆணையம்’, என்றொரு தன்னார்வல நிறுவனம், தேர்தல் முடிவுகளை அலசி, அதில் முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்றொரு அறிக்கையைக் கொடுத்தது. அதில் தேவசகாயம், கான்பூர் ஐஐடியின் முன்னாள் இயக்குநர் ஹரிஷ் கார்ணிக் உள்ளிட்ட பல முக்கியமான முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
7 தவணைகளில் நடத்தப்பட்ட 2024 தேர்தல்களில், இறுதியாக அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை, வாக்களிப்பு முடிந்தவுடன் அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையை விட, 4.65 கோடி அதிகமாக உள்ளது. இந்த அதிகரிப்பு, பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என்றது அந்த அறிக்கை.
முக்கியமாக, ஆந்திரம் மற்றும் ஒரிஸ்ஸா மாநிலங்களில், முறையே 12.54%, 12.48% அதிகரித்திருந்தது பெரும் ஆச்சர்யமாக இருந்தது. இந்த முறைகேடு நடக்காமல் இருந்திருந்தால், 79 தொகுதிகளில் ஆளுங்கட்சி தோற்றிருக்கும் வாய்ப்புகள் இருந்தன என்பது இந்த நிறுவனம் கொடுத்த அறிக்கையின் முக்கிய அம்சம். அப்படி ஒன்று நிகழ்ந்திருந்தால், இந்த முறை பாஜக ஆட்சிக்கு வந்திருக்க முடியாது.
இந்த நிறுவனம் தொடர்ந்து தேர்தல்களில் நடந்து வரும் முறைகேடுகளைத் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை.
கொஞ்சமும் மனம் தளராமல், இந்நிறுவனம் எதிர்க்கட்சிகளையும் சந்தித்து முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. 2024 தேர்தலில், 63% வாக்குகள் பாஜக அல்லாத கட்சிகளுக்குச் சென்றிருக்கின்றன.
எனவே, இந்த முறைகேடுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய பொறுப்பு, ஆளுங்கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்குத்தான் அதிகம் என முழங்கினார் தேவசகாயம்
இராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’, என்னும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கியமான உந்துசக்தி, தேர்தலுக்கான மக்கள் ஆணையத்தின் அறிக்கையும், தொடர் போராட்டங்களும்தான் என்றால் அது மிகையில்லை.
அண்மையில், பீஹாரில் வாக்காளர் பட்டியலை சீர் செய்கிறோம் என தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கையில், மொத்தம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறார்கள். பிஹாரின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.24 கோடியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், பிஹாரின் வாக்காளர் எண்ணிக்கை 8% குறைந்திருக்கிறது. இந்த வாக்காளர்கள் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்னும் காரணங்கள் வழக்கமான அறிக்கையில் இருக்கும். ஆனால், தேர்தல் கமிஷனின் அறிக்கையில் இது முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது இந்தக் குறைப்பு பெரும்பாலும் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் நிகழ்ந்திருக்கிறது என்கிறது, இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கும் கட்டுரை (Analysis of Bihar SIR electoral rolls hints at higher voter deletions in Muslim-majority districts - The Hindu )
இந்தியத் தேர்தல்களில், 4-5% வாக்குகள் மாறுவதே பெரும் மாற்றங்களை உருவாக்கும் சூழலில், 8% வாக்காளர்கள் அகற்றப்பட்டிருப்பது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. இதற்கான தரவுகளைக் கேட்ட போது தேர்தல் ஆணையம் அவற்றைத் தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது.
‘பீஹாரில் வாக்காளர் எண்ணிக்கையைக் குறைக்கும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஒரு பெரும் கொள்ளை (Dacoity)’, என்கிறார், 40 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல்களை அவதானித்து வரும் தேர்தல் ஆய்வாளரும், சமூக செயல்பாட்டாளருமான யோகேந்திர யாதவ்.
இந்தியத் தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற நிறுவனம் என்றாலும், அதன் முக்கியக் கடமை, தனது பணிகளை வெளிப்படையாக வைத்திருப்பதாகும். இந்தியா என்பது ஒரு குடியரசு நாடு. இங்கே மக்கள்தாம் உண்மையான ஆட்சியாளர்கள். எனவே மக்களும், வாக்களித்த மக்களில் 63% பெற்ற எதிர்க்கட்சிகளும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது.
2024 தேர்தலில், மகாதேவ்புரா சட்ட மன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலை அலசவே 7 மாதங்கள் பிடித்திருக்கிறது என்றால், நாடெங்கும் உள்ள தொகுதிகளில் உள்ள தரவுகளை அலச எத்தனை வருடங்களாகும்? அதற்குள் 4-5 தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கும்.
வாக்காளர் பட்டியலை மின் நகலாகத் தருவதில் என்ன பிரச்சினை தேர்தல் ஆணையத்துக்கு? மின் நகலாகத் தந்தால், அதில் இருக்கும் முறைகேடுகள் வெளியே வந்து விடும் எனத் தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது. இராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்று, இராகுல் காந்தியை மிரட்டுகிறது.
உண்மையில், அது இராகுல் காந்தியை மிரட்டவில்லை. அவர்களுக்கு வாக்களித்த 63% மக்களை மறைமுகமாக மிரட்டுகிறது. எங்களைக் கேள்வி கேட்க உங்களுக்கு அதிகாரமில்லை என தேர்தல் கமிஷன் சொல்வதாகத்தான் இதை நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை எதிர்த்து நீதிமன்றங்கள் சென்றால், அங்கேயும் நீதி விரைவாகக் கிடைக்காது என்பதே இன்றைய சூழல்.
எனவே, தேர்தல் முறைகேடுகளை எதிர்கட்சிகள், மக்கள் மத்தியில் முன்வைத்து, பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
துரதிருஷ்டவசமாக, சரியாக ஒன்றிணையாமல் இருக்கும் எதிர்கட்சிகள், இதன் உண்மையான ஆபத்தை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில், பாஜகவுடன் கூட்டணி வைத்த பல கட்சிகள் (சிவசேனா, பிஜு ஜனதா தளம், தேசிய வாத காங்கிரஸ்) பாஜகாவால் விழுங்கப்பட்டு விட்டன. மீதமுள்ள கட்சிகள், பாஜக அரசு ஆணையின் கீழ் இயங்கும் மத்தியப் புலனாய்வுத்துறை, Enforcement Directorate போன்ற ஒன்றிய நிறுவனங்களின் நடவடிக்கைக்கு அஞ்சுகின்றன. அஞ்சினாலும், ஓடி ஒளிந்து கொண்டாலும் பாஜக விடப் போவதில்லை.. எப்படியும் தேடிப் பிடித்து அழிக்கத்தான் போகிறது. அதைவிட, எதிர்த்து மடிவது மேலான மரணமாக இருக்கும்.
இந்தப் பின்ணணியில், தேர்தல் கமிஷனின் நடவடிக்கைகள், மக்களாட்சியின் முன் மிகப்பெரும் அபாயமாக எழுந்துள்ளன. மக்களாட்சியும், இந்திய அரசியல் கட்சிகளும் உயிர் பிழைத்திருக்க வேண்டுமெனில், மக்கள் முன் இந்தப் பிரச்சினைகளைக் கொண்டு சென்று, பெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.
அண்மையில் ஒரு நேர்காணல் ஒன்றில், தேவசகாயம், நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்ப்ரகாஷ் நாராயண் நடத்திய சம்பூர்ண கிராந்தி (முழுமையான புரட்சி) போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டமே இன்றைய அவசரத் தேவை எனச் சொல்லியிருக்கிறார்.
அடுத்த தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் உள்ளன எனவே பின்னர் பார்ப்போம் என தாமதிப்பது பெரும் ஆபத்து. சென்ற முறை போல, தேர்தலுக்கு 5-6 மாதங்கள் முன்பு ஒன்றிணைவது பெரும் பயனைத் தராது.
’நன்றே செய்க, அதையும் இன்றே செய்க’, என்பதே எதிர்கட்சிகளுக்கு காலம் சொல்லும் செய்தி.
No comments:
Post a Comment