நேற்றைய வகுப்பில் வாசிக்க முடிந்தவையும் எங்கள் புரிதலும்
லெனின் காலத்தில் திருத்தல்வாதியான காவுத்ஸ்கியின் மார்க்சியத்தை திருத்திய வாதங்களை முறியடிப்பதன் மூலம் லெனின் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை மட்டுமல்லாது மார்க்சியத்தை பாதுகாத்தார்.
எனினும் இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசுபற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களைமுறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்.
அரசின் தோற்றத்தைப் பற்றி குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது ‘’அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதேபோல அது எவ்வகையிலும் ஹெகல்வலியுறுத்தும் ‘அறநெறி கருத்தின் எதார்த்தஉருவோ’, ‘அறிவின் பிம்பமும்எதார்த்தமோ அல்ல’. மாறாக சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தசமுதாதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டது, இணக்கம் காணமுடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்த பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகி விட்டதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பொருளாதார நலன்களைக்கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலை தணித்து ‘ஒழுங்கின்’ வரம்பிற்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை வெளிப்பார்வைக்கு சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியைநிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததனாலும்சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக்கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்இந்தச் சக்தியே அரசு எனப்படுவதாகும்’’என்றார் எங்கெல்ஸ்.
இதன் மூலம் அரசானது சமுதாயத்திற்கு அப்பால் வெளியிலிருந்து உருவானது அல்ல. அதாவது கடவுளால் உருவாக்கப்பட்டதோ, அல்லது புனிதமானதோ அல்ல என்பது மார்க்சியம். ஆனால் முதலாளிகளும்சீர்திருத்த திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை வளர்ந்து,
இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்து விடாமல் பாதுகாப்பிற்கான ஒழுங்கைஏற்படுத்துவதற்காகவே அரசு அவசியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.
மேலும் சமூகத்திற்கு மேலானதாக நிறுவிக்கொண்ட அரசானது மேலும் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு மக்களுக்கு எதிரான பகை சக்தியாகவே அரசு மாறிவிட்டது. இந்தஉண்மையை மூடிமறைத்துவிட்டு அரசை மக்களின் நண்பனாகவும், மக்களுக்காக பாடுபடும் நிறுவனமாகவும் அதிலுள்ள சிலர் தவறு செய்வதால்அரசே தவறானது என்று கருதக்கூடாது என்று முதலாளித்துவ வாதிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும்கருதுகிறார்கள்.
‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும்வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சியகோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ,அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம்காணமுடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும்.
இதிலிருந்து நாம் வந்தடையும் முடிவுஎன்ன? அரசு ஒன்று இருந்தால்அங்கே வர்க்கங்கள் இருக்கிறது மேலும் அங்கே வர்க்கப்பகைமைகள் நிலவுகின்றது என்பது பொருளாகும். அதே போலவே வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் நிலவும் சமூகத்தில் அரசுஎன்ற ஒரு நிறுவனம் கட்டாயம் இருக்கும். இந்த கோட்பாட்டிலிருந்துதான் சோசலிச சமூகமாக இருந்தாலும் அங்கே தொழிலாளர்களின் அரசு இருக்கும் அதேநிலையில் சோசலிச சமூகத்திலும் வர்க்கங்களும் வர்க்க பகைமைகளும் இருக்கும் என்று மார்க்சியம் வரையறுத்தது. அவ்வாறு சோசலிச சமூகத்தில் முதலாளி வர்க்கங்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்காத நிலையில், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் நிலையில் முதலாளித்துவ வர்க்கங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பாட்டாளி வர்க்கத்திற்குஅரசியல் அதிகாரம் வேண்டும் என்கிறது மார்க்சியம்.
மார்க்சியம் கூறும் இந்த உண்மையைதிருத்தி, புரட்டிடும்முதலாளித்துவவாதிகளும், சீர்திருத்த திருத்தல்வாதிகளும் இரண்டுவகையாகமார்க்சியத்தை திருத்துகிறார்கள்.
எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டங்களும் உள்ளனவோஅங்கே மட்டும் அரசு இருக்கிறதுஎன்ற புறநிலை உண்மையை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் இந்த வர்க்கப்பகைமைகளுக்குஇணக்கம் காண்பதற்காகவே அரசு உருவாகிறது என்றும்அரசானது பகைவர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காண்பதற்கான நிறுவனம்தான் அரசு என்று வாதிடுகிறார்கள். ஆனால் பகை வர்க்கங்களுக்கு இடையே இணக்கம்காண முடிந்திருந்தால் அரசு என்பதே தோன்றுவதற்கு அவசியமில்லை என்பதுதான் மார்க்சின் கருத்தாகும்.
அதாவது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததன்விளைவே அரசு என்பதுதான் மார்க்சின் கருத்தாகும். இந்த கருத்தைத்தான் திருத்தல்வாதிகள்இணக்கம் காணமுடியாத வர்க்கப் பகையையை இணக்கம்காணச் செய்ய முடியும் என்று திருத்துகிறார்கள். இதன் மூலம் வர்க்கப்பகைமைகள் இணக்காணமுடியாதவை என்ற உண்மையை மூடிமறைத்து இந்த அரசானது வர்க்கப்பகைமையை ஒழித்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம்செய்கிறார்கள்.மார்க்சின் கருத்துப்படி ‘’வர்க்க ஆதிக்கத்திற்கான ஓர்உறுப்பே, ஒரு வர்க்கம் பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு’’ என்ற புகழ்பெற்றமார்க்சிய கோட்பாட்டை இவர்கள் மறுக்கிறார்கள்.
வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி அதன்வாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்டமாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை’ நிறுவதுவே அரசாகும் என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவவாதிகள் இந்த ‘ஒழுங்கை’வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒழுங்கு என்று பார்ப்பதற்கு எதிராக வர்கங்களுக்கு இடையில் இணக்கம் உண்டாவதற்கான ஒழுங்கு என்று பார்க்கிறார்கள்.மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்கும் முதலாளிகளின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட மக்களின் போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, மாறாக வர்க்கங்களுக்கு இடையே இணக்காண்பதற்காக மோதலை மட்டுப் படுத்துவதுதான் என்று குட்டி முதலாளித்துவ வாதிகள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவ அரசானது, உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராடும்போது அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக தனது வன்முறை கருவிகளான போலீசையும்இராணுவத்தையும்ஏவிவிடுகின்ற எதார்த்த உண்மையை மூடி மறைக்கிறார்கள்.
முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் இணக்கம்காண முடியாத பகைத் தன்மைஉருவாகிவிட்டதால்,முதலாளிவர்க்கத்தின்அரசானது தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசாக இருக்கிறது என்ற உண்மையை குட்டி முதலாளித்துவவாதிகளால் புரிந்துகொள்ள முடியவில்லை.‘’மறுபுறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய காவுத்ஸ்கிவாதப் புரட்டு இன்னும்நுண்ணியம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்திற்கானஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில் ’இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அதுபாராமுகமாய் அது விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆகியதன்விளைவேஅரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய்நின்று ‘மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்சக்தி ஆகும்’என்றால்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியம் இல்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும்‘அயலானாய்இருக்கும்’இந்த நிலையின் உருவகமானதுமான அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு.’’ (லெனின்- அரசும் புரட்சியும்)இங்கே மார்க்சியம் அரசு பற்றிய சொன்னகருத்துக்களை எல்லாம் காவுத்ஸ்கி ஏற்றுக்கொள்கிறார். அதிலிருந்து இந்த அரசை பலாத்கார முறையில் ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்ற மார்க்சியத்திற்கு எதிரான தவறான இடதுசாரி முடிவிற்குவருகிறார். இந்த கருத்திற்கு மாறாக அரசை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்றும், தற்போது நிலவும்முதலாளித்துவ அரசிற்கு முடிவுகட்டிவிட்டு, பாட்டாளிவர்கத்திற்கான இடைக்கால அரசை உருவாக்கி சமூகத்தைவர்க்கமற்ற சமூகமாகமாற்றியமைக்கும் போக்கில் அரசானது உலர்ந்து உதிரும்என்ற கருத்தை மார்க்சியம் முன்வைக்கிறது. அதுபற்றி தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம். வரும் வகுப்புகளில்...
இன்னும் சில
அரசுப்பொறியமைவை‘’அழித்தொழிப்பதற்காக’’1852 ஐக் காட்டிலும் தற்போது ஒப்பீடில்லாப் பெரிய அளவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ‘’எல்லாச் சக்திகளும் ஒன்றுகுவிக்கப்படுவதை’’ நோக்கி உலக வரலாறு நடைபோடுகிறது என்பதில் ஐயமில்லை.
அழித்தொழிக்கப்படும் அரசுப் பொறியமைவின் இடத்தில் பாட்டாளி வர்க்கம் அமர்த்தப் போவது என்னவென்பதை பாரிஸ் கம்யூன் அளித்திடும் படிப்பினை மிக்க விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்.
சமூகத்தை மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றுதான் புரட்சி என்ற கருத்தை பாரிசில் நடைபெற்ற புரட்சிகளின் அனுபவத்திலிருந்து காரல்.மார்க்ஸ் முடிவுக்கு வந்தார். புரட்சிதான் சமூகத்தில் தேவையில்லாத அல்லது சமூக வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள, சமூகத்திற்கு எதிராக வுள்ள அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி தீயவற்றை அழிப்பதில் ஆர்வமுள்ள சமூக சக்திகளை அதாவது வர்க்கங்களை ஒன்றுதிரட்டி அழிக்கிறது என்றார் கா.மார்க்ஸ். அவரது இந்தக் கருத்துக்கு நடைமுறை சான்றாக பாரிசில் நடைபெற்ற புரட்சியை கா.மார்க்ஸ் ஆதாரமாகக் காட்டுகிறார். ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சமூகத்தில் பல்வேறுவிதமான அநியாயங்கள் நடக்கலாம். ஆனால் இந்த அநியாங்கள் எதையும் புரட்சிகர சக்திகள் அதாவது வர்க்கங்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியின் மூலமாக அல்லாது வேறு எந்த முறையிலும் ஒழிக்க முடியாது. இதுதான் மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் தான் ரஷ்யாவில் நடந்த புரட்சியாகும். அந்தப் புரட்சியின் மூலம் உருவான சோவியத்து அரசுதான் அங்குள்ள தீய சக்திகளையும் தீய நிகழ்வுகளையும் ஒழித்துக்கட்டி அந்த நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கு மாறாக இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தி இங்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மாறாக பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் தலைவர் களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் மூலமாகவே இந்தியாவில் ஒரு போலியான சுதந்திரம் கிடைத்தது. இதன் போலித்தன்மையின் காரணமாகவே இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டபோது அவர்களால் நம்மை ஆளுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டே இங்கே ஆட்சி நடக்கிறது. பிரிட்டீஷாரின் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. மேலும் உழைக்கும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கை மேலும் கொடூரமாக மாறி இருக்கிறது. உதாரணமாக பிரிட்டீஷாரின் ஆட்சியின் போது உணவுப் பஞ்சம் வந்தது, அப்போது கூட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால் இப்போது லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைகிறார்கள். ஆகவே இப்போதும் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்,
நெசவாளர்கள், மீனவர்கள், நடுத்தர மக்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் சந்திக்கும் துண்பங் களிலிருந்து விடுதலை பெற இவர்கள் அனைவரும் ஒரு கொடியின் கீழ், ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் ஒன்றுதிரண்டு இவர்களுக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்துப் போராடி ஒரு புரட்சியின் மூலம் தீயவற்றை அழித்து ஒழிக்காமல் இந்த வர்க்கங்களுக்கு வாழ்வு இல்லை என்பதே மார்க்சிய லெனினியப் போதனை ஆகும்.
நிலவுடமை காலத்தில் மன்னராட்சி நிலவியபோது இருந்த அரசு நிர்வாக மற்றும் இராணுவ அமைப்பு போல் இல்லாமல், முதலாளிகளின் ஆட்சி காலத்தில் அரசு அதிகாரத்தின் வீச்சையும், போலீஸ், இராணுவம், கோர்ட்டுகள், சிறைச்சாலைகள் மற்றும் அரசு அதிகாரம் போன்ற வன்முறையிலான அரசுப் பொறியமைவை இந்த முதலாளி வர்க்கம் அதிக வலுவுடன் வளர்த்துள்ளது என்பதை கா.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். மக்ளின் நலனுக்காகவே இந்த அரசுப் பொறியமைவை வளர்த்துள்ளதாக முதலாளித்துவ வர்க்கங்களும் அதன் அரசியல் கட்சித் தலைவர்களும் சொன்னாலும், இந்த அரசுப் பொறியமைக் கொண்டுதான் இவர்கள்
மக்களுக்கு அச்சமூட்டி மக்களை அடக்கி ஆளுவதை நாம் பார்க்கிறோம்.வரலாற்றில் இதுவரை நடந்த புரட்சிகளில் ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த புரட்சிகள் தவிர பிற நாடுகளில் நடந்த புரட்சிகள் அல்லது போராட்டங்களின் மூலம் அந்த நாடுகளில் நிலவிய அரசுப் பொறியமைவைக் கைப்பற்றி மேலும் மேலும் தங்களின் சுரண்டலுக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் அரசுப் பொறியமைவை செழுமைப்படுத்தினார்கள். இந்தியாவில் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடி காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட போலீஸ், இராணுவம் போன்ற அதே அரசுப் பொறியமைவைக் கைப்பற்றி அந்த அரசுப் பொறியமைவை செழுமைப்படுத்தி அதன் மூலம் பிரிட்டீஷார் இங்கு என்ன செய்தார்களோ அதே காரியத்தை தொழிலாளர்களை சுரண்டுவது, விவசாயிகளின் வாழ்வை சூறையாடுவது, தேசிய இனங்களை ஒடுக்குவது, சாதித் தீண்டாமையை வளர்ப்பதே போன்ற காரியங்களை இந்த அரசுப் பொறியமைவைப் பயன்படுத்தி செய்துகொண்டு இருப்பதை நாம் காணலாம்.இதற்கு மாறாக ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியிலும் கெரென்ஸ்கியின் ஆட்சியில் இருந்த அரசுப் பொறியமைவைத் தகர்த்துவிட்டு தொழிலாளர் களின் சோவியத்து, விவசாயிகளின் சோவியத்து, மற்றும் படையாட்களின் சோவியத்து என்ற புதிய வகையிலான அரசு அமைப்பை உருவாக்கி, இந்த அரசமைப்பானது முழுவதும் மக்களுக்கு கட்டுப்பட்டு செயல்படும் முறையை உருவாக்கி மக்களுக்கு எதிரான நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளை ஒடுக்கும் அரசுப் பொறியமைவை உருவாக்கினார்கள். ஆகவே நமக்குத் தேவை உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசுப் பொறியமைவா? அல்லது உழைக்கும் மக்களை பாதுகாக்க மக்களின் எதிரிகளை ஒடுக்கும் அரசுப் பொறியமைவா? என்ற கேள்வியை முன்வைத்து மக்களை சிந்திக்கச் செய்வதற்கு அரசு பற்றிய மார்க்சிய – லெனினிய போதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும்.
முந்தைய புரட்சிகளும் போராட்டங்களும் இந்த அரசுப் பொறியமைவை செம்மை செய்தன. ஆனால் இந்த அரசுப் பொறியமைவு தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சின் மிகவும் முக்கியமான போதனை ஆகும்.
பாட்டாளி வர்க்கமானது முதலில் அரசியல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல், அதாவது பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக மாற்றாமல் அதனால் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்க சுரண்டலுக்கு முடிவுகட்ட முடியாது என்பதுதான் மார்க்சின் போதனை ஆகும். பாட்டாளி வர்க்கத்தால் அல்லது கம்யூனிஸ்டுக் கட்சியால் உருவாக்கப்படும் அரசானது முதலாளிகளால், முதலாளிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயத்திற்கு இதுபோன்ற வன்முறைக் கருவியான அரசு தேவைப்படாது. கம்யூனிச சமூகமாக சமுதாயத்தை மாற்றியமைக்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் இந்த அரசின் தேவையில்லாத ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்குத்தான் பாடுபட வேண்டும். ஆகவே கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்படும் அரசானது தற்காலிகமானதாகவே அதாவது அரசு என்ற ஒரு அமைப்பே தேவையில்லை என்ற சூழலை உருவாக்குவதை தனது லட்சியமாகக் கொண்ட அரசாகவே இருக்க வேண்டும். அது சாராம்சத்தில் உலர்ந்து உதிரும் அரசையே கம்யூனிஸ்டுகள் உருவாக்க வேண்டும். அத்தகைய அரசையே சோசலிச அரசு என்று மார்க்சியம் போதிக்கிறது. இதற்கு மாறாக கேரளாவில் சுரண்டும் வர்க்கங்களைப் பாதுகாப்பதற்கான முதலாளித்துவ அரசுப் பொறியமைவை சி.பி,எம். கட்சி கைப்பற்றி ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அரசை கம்யூனிச அரசு என்று சொல்லி மார்க்சியப் போதனைகளையே திரிக்கிறது. கேரள மாநில சி.பி.எம்.ன் அரசு ஒரு சோசலிச அரசும் இல்லை. உழைக்கும் மக்களின் நலன் காக்கும் அரசும் இல்லை. முதலாளிகளின் நலன் காக்கும் அரசுப் பொறியமைவுகளான கேரள போலீஸ் போன்ற அமைப்புகளை இயக்கும் அரசாங்கம்தான் கேரள அரசாங்கமாகும். இங்கே கேரள சி.பி.எம். கட்சியானது நிலவுகின்ற அரசுப் பொறியமைவை தகர்த்துவிட்டு உருவாகவில்லை. மாறாக நிலவுகின்ற அரசுப் பொறியமைவைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை அன்று காவுத்ஸ்கி போன்றவர்கள் புறக்கணித்தது போலவே புறக்கணிக்கிறார்கள்.
அதிகார வர்க்கமும் நிரந்தரமான ஆயுதம் தாங்கிய சேனையும் இந்த அரசுப் பொறியமைவின் இன்றியமையாத இரு அங்கங்கள் என்றும், முதலாளி வர்க்கங்கள் இவ்விரு அங்கங்களுடனும் ஆயிரக்கணக்கான வழிகளில் தொடர்பு கொண்டிருக்கிறது என்றும், முதலாளி வர்க்கங்கள் இந்த அரசுப் பொறியமைவை தங்களது நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற மார்க்சியப் போதனைகளை திருத்தல்வாதிகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆகவேதான் திருத்தல்வாதிகள் மார்க்சியத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளாக மாறி, முதலாளிகளுடன் சமரசங்கள் செய்துகொண்டு தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்து சில சில்லரை சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். எனினும் அவர்களால் சீர்திருத்தங்கள் செய்வதைக் காட்டிலும் முதலாளிகளின் நலன் காக்க உழைக்கும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவி உழைக்கும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு மேற்கு வங்கத்தில் நந்திகாரமத்தில் சி.பி.எம். அரசாங்கம் மேற்கொண்ட விவசாயிகளின் மீதான ஒடுக்குமுறை ஒரு நல்ல உதாரணமாகும்.
அதிகார வர்க்கத்துக்கும் போலீசுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பை வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியும் என்றும், இந்த உறவை குட்டிமுதலாளித்துவ வர்க்க உணர்வுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் லெனின் இங்கே விளக்குகிறார். இங்குள்ள கம்யூனிச அமைப்புகளிலுள்ள குட்டிமுதலாளித்துவ உணர்வும், சிந்தனை முறையும் கொண்டவர்களால் மார்க்சின் இந்த போதனையை புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் எந்தளவுக்கு தங்களது பாட்டாளிவர்க்க உணர்வைப் பெற்று வளர்க்கிறார்களோ அந்தளவுக்குத்தான் மார்க்சின் போதனைகளை இவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே பாட்டாளி வர்க்க உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும், பாட்டாளிவர்க்க சிந்தனைமுறையில் நாம் சிந்திக்கும் பயிற்சி பெறுவதும் கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள கடமையாக உள்ளது.
முதலாளித்துவ சமூகத்தில் செயல்படும் அதிகார வர்க்கமும் நிரந்தர சேனையும் மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டே உழைக்கும் மக்களை ஒடுக்கிக்கொண்டு புல்லுரிவியாக இருக்கிறது என்ற கூற்று அராஜகவாதிகளின் கூற்று என்று கம்யூனிசத்தை கைவிட்டு ஓடிப்போன காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் பிரச்சாரம் செய்தாலும் காவுத்ஸ்கியின் வாதம் ஒரு புரட்டே என்பதுதான் மார்க்சிய போதனை ஆகும். கம்யூனிச சமுதாயத்தில் மக்களுக்கு பாரமாகவும் புல்லுருவியாகவும் இருக்கும் அரசு என்பதே சமுதாயத்திற்கு தேவையில்லாமல் போய்விடும். அதாவது அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் மார்க்சின் போதனை ஆகும்.
முதலாளித்துவ அரசுகளில்தான் ஏராளமான குட்டி முதலாளித்துவ பிரிவினர்கள் அரசு அதிகாரிகளாக ஆனார்கள். ஆகவே இந்த முதலாளித்து அரசுகளை குட்டிமுதலாளித்துவ வர்க்கங்கள் ஆதரிப்பதோடு முதலாளிகளின் பக்கம் ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவினர்கள்தான் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருந்துகொண்டு முதலாளி வர்க்கங்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து பாதுகாக்கிறார்கள். இந்த உண்மையை வர்க்க உணர்வுள்ள பாட்டாளி வர்க்கம் பார்க்கிறது, மேலும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ சமுதாயத்துக்கும் இணக்கம் காண முடியாத பகை உள்ளது என்பதை தனது சொந்த அனுபவங்களிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் வர்க்கமானது முதலாளித்துவ சமூகத்தை அழித்திடுவதற்கான சமூக சக்திகள் அனைத்தையும் ஒன்றுகுவித்து அரசுப் பொறியமைவை மேம்பாடு செய்வதல்ல, அதனை தகர்த்து நொறுக்கும் லட்சியத்தை கொள்கையாக ஏற்று செயல்படுகிறது.
இவ்வாறு முதலாளித்துவ அரசு அமைப்பை நொறுக்கிவிட்டு அதனிடத்தில் எவ்வகையான அரசமைப்பை பாட்டாளி வர்க்கம் அல்லது கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப் போகிறது என்ற கேள்விக்கும் மார்க்சியம் போதனை அளிக்கிறது. அதாவது இந்த அரசுக்கு மாற்று சோசலிச அரசுதான் என்கிறது. ரஷ்யாவில் தொழிலாளர்களின் சோவியத்து, விவசாயி களின் சோவியத்து, படையாட்களின் சோவியத்து என்ற சோவியத்துக்கள் உருவாக்கப்பட்டது. அனைத்து அரசியல் அதிகாரமும் இந்த சோவியத்துக்களே வழங்கப்பட்டது. இந்த சோவியத்துக்கான உறுப்பினர் களை மக்களே தேர்ந்தெடுத்தனர், மேலும் சோவியத்து உறுப்பினர்கள் தவறு செய்தால் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்களிடம் விவாதித்தே சட்டங்கள் போடப்பட்டது. மக்களால் ஒரு சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்தச் சட்டம் விலக்கிகொள்ளப் பட்டது.
பெருமுதலாளிகளிடமிருந்து மூலதனங்களை சோவியத்து அரசு பறிமுதல் செய்து மக்களுக்குச் சொந்தமாக்கியது. இதுபோன்ற அரசமைப்புதான் உண்மையிலேயே மக்களுக்கான மிகச் சிறந்த ஜனநாயக அரசாகும். இத்தகைய அரசமைப்புக்காகப் பாடுபடுபவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.