முரண்பாடு பற்றி - மாவோ.பகுதி – 3
முரண்பாட்டின் குறித்த தன்மை
அனைத்துப் பொருட்களின் வளர்ச்சிப் போக்கிலும் முரண்பாடு இருந்தே வருகிறது. அது, ஒவ்வொன்றின் வளர்ச்சிப் போக்கிலும் தொடக்கம் முதல் இறுதி வரை ஊடுருவிப் பரவியுள்ளது. இதுதான் முரண்பாட்டின் எங்கும் நிறைந்த இயல்பும், சார்பற்ற தன்மையும்ஆகும். இதுபற்றியே நாம் இதுவரை விவாதித்தோம். இனி நாம், முரண்பாட்டின் குறிப்பிட்டதன்மை - முரண்பாட்டின் குறித்த தன்மை - (Particularity of Contradiction) பற்றியும் அதன்சார்புத் தன்மை பற்றியும் விவாதிப்போம்.
இப்பிரச்சனை பல மட்டங்களிலும் ஆராயப்பட வேண்டும்.முதலாவதாக, சடப்பொருளின் இயக்க வடிவம் ஒவ்வொன்றிலும் இருக்கும் முரண்பாடு தனக்கே உரிய குறிப்பிட்ட தனிஇயல்பைக்கொண்டுள்ளதாயுள்ளது.சடப்பொருள் பற்றி மனிதன் அறிந்துள்ளவைஎல்லாம்அப்பொருளின் இயக்க வடிவம் பற்றிய அறிவேயாகும். ஏனெனில், இயக்கத்தில் உள்ள பொருள்களைத் தவிர இவ்வுலகில் வேறு ஏதும் இல்லை.இவ்வியக்கம் குறிப்பிட்ட வடிவங்களை எடுத்தே தீரவேண்டும். சடப்பொருளின் இயக்க வடிவம் ஒவ்வொன்றையும் நாம் ஆராயும்பொழுது அதற்கும் வேறு இயக்க வடிவங்களுக்கும்இடையே உள்ள ஒத்த அம்சங்கள் என்ன என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒருபொருளைப் பற்றிய நமது அறிவின் அடித்தளமாக அமையும் சடப்பொருளின் இந்த இயக்கவடிவத்தில் உள்ள குறிப்பிட்ட தனி இயல்பு என்ன - குறித்த தன்மை என்ன - என்பதை கவனிப்பதுதான் தனி முக்கியத்துவம் வாய்ந்ததும், ஒன்றைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமையக் கூடியதும் ஆகும். அதாவது, இந்த இயக்க வடிவத்திற்கும் இதர வடிவங்களுக்கும் இடையேயுள்ள பண்பு வகை வேறுபாட்டை கவனிப்பதேயாகும். இதைச்செய்தால்தான் பொருட்களி டையே உள்ள வேறுபாட்டை நம்மால் காண முடியும். ஒவ்வொரு இயக்க வடிவமும் தன்னகத்தே தனக்கே உரிய தனியானதொரு குறிப்பிட்ட முரண்பாட்டைக்கொண்டுள்ளது. இந்த குறிப்பிட்ட முரண்பாடுதான், ஒரு பொருளை வேற ஒரு பொருளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற அதன் சாரத்தை உருவாக்குகிறது. இது, உலகிலுள்ள எண்ணிலடங்காப் பல்வகைப் பொருட்களுக்கான அகக்காரணம், அல்லது அடிப்படை எனலாம். எந்திரவகை இயக்கம், ஒலி, ஒளி, வெப்பம், மின்னாற்றல், பிரிகை, சேர்க்கை என்பன போன்று பல இயக்க வடிவங்கள் இயற்கையிலே உள்ளன. சடப்பொருளின் இயக்க வடிவங்கள் எல்லாம் ஒன்றையொன்று சார்ந்து இருப்பன. ஆயினும், அவை தமது சாரத்தில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டவை. ஒவ்வொரு இயக்க வடிவத்தின் தனித்தன்மை கொண்ட சாரம், அதற்கே உரிய அதன் தனி இயல்புடைய முரண்பாட்டாலேயே நிர்ணயிக்கப்படுகிறது.இதுஇயற்கைக்கு மட்டுமின்றி சமுதாய நிகழ்ச்சிப் போக்குகளுக்கும், சித்தாந்த விஷயங் களுக்குங்கூட பொருந்தக் கூடியதாகும். ஒவ்வொரு சித்தாந்த வடிவமும் அதற்கே உரிய குறித்த முரண்பாட்டையும், தனக்கே உரிய சாரத்தையும் கொண்டுள்ளது.
அறிவியல் எவ்வாறு பாகுபடுத்தப் படுகின்றன? அவை எந்தெந்த அம்சங்களை கூறுகளைத் தம் ஆய்வுகளுக்கு எடுத்துக் கொள்கின்றன வோ, அக்கூறுகளில் இயல்பாய் அமைந்துள்ள முரண்பாடுகளின் அடிப்படையில்தான் அவை பாகுபடுத்தப்படுகின்றன. எனவே, நிகழ்ச்சிப்போக்குகளின் குறிப்பிட்ட ஒரு துறையைச் சார்ந்த தனிப்பட்ட முரண்பாடுதான்,குறிப்பிட்ட அறிவியல் பிரிவின் ஆய்விற்குரியப் பொருளாக அமைகிறது. எடுத்துக்காட்டாக, கணிதத்தில் கூட்டலும், கழித்தலும்; எந்திரவியலில் வினையும் - எதிர்வினையும்; இயற்பியலில் - நேர்மின் ஆற்றலும், எதிர் மின்னாற்றலும்; வேதியலில் - சேர்க்கையும், பிரிவும்; சமூக அறிவியலில் உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும்; வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டங்களும்; இராணுவ அறிவியலில் - தாக்குதலும் தற்காப்பும்; தத்துவத்தில் கருத்துமுதல் வாதமும், பொருள்முதல்வாதமும், இயங்கியல் நோக்கும், இயங்காவியல் நோக்கும், இவை போன்று ஒவ்வொரு அறிவியல் பிரிவுக்கும் அதற்கே உரிய ஆய்வுக்கான குறிப்பிட்ட தனி இயல்புடைய முரண்பாடுகள் உள்ளன. மேற்கூறியவை யாவும் வெவ்வேறான அறிவியல் பிரிவுகளுக்குரிய ஆய்வுப் பொருட்களாகும். ஏனெனில், ஒவ்வொரு பிரிவும் தனக்கே உரிய குறிப்பிட்ட தனி முரண்பாட்டையும் தனக்கே உரிய குறிப்பிட்ட சாரத்தையும் கொண்டுள்ளது. முரண்பாட்டின் எங்கும் நிறைந்த தன்மையைப்புரிந்துகொண்டாலொழிய,பொருட்களின் இயக்கத்திற்கோ, வளர்ச்சிக்கோ உரிய பொதுக் காரணத்தையோ, பொது அடிப்படை யையோ கண்டறிவதற்கு நமக்கு எந்த வழியும் இருக்காது என்பது உண்மைதான், ஆயினும், முரண்பாட்டின் குறிப்பிட்ட தனி இயல்பை நாம் ஆராயாவிட்டால், ஒரு பொருளை பிற பொருட்களிலிருந்து வேறுபடுத்துகிறதும், அப்பொருளுக்கே உரிய குறிப்பிட்ட தனி இயல்புடைய உட்சாரத்தையும் வரையறுத்துச் சொல்ல நமக்கு வழியேதும் இல்லை. ஒருபொருளின் இயக்கம் அல்லது வளர்ச்சிக்கான குறிப்பிட்ட காரணத்தையோ குறிப்பிட்ட அடிப்படையையோ கண்டுபிடிக்கவும் வழியேதுமில்லை. ஒரு பொருளை வேறொன்றிலிருந்து பிரித்தறியவோ, விச்ஞானத்துறை ஒவ்வொன்றுக்கும் எல்லை வகுக்கவோ வழியேதுமிராது.
மனித அறிவின் இயக்கத்தினுள்ள ஒழுங்குமுறையைவரிசைப்படுத்தினால், அது எப்போதுமேகுறிப்பிட்டவை, தனிப்பட்டவை பற்றிய அறிவாகத் தொடங்கி,படிப்படியாகபொதுவானவைபற்றிய அறிவாக வளர்கிறது. பல்வேறு பொருட்களின் தனி இயல்புடைய உட்சாரம் ஒவ்வொன்றையும் புரிந்துகொண்ட பிறகே, மனிதனால் அப்பொருட்களைப்பொதுமைப்படுத்தவும், அவற்றின் பொதுவான உட்சாரத்தை அறியவும்இயலும். இப்பொதுவானஉட்சாரத்தை அறிந்து கொண்ட பிறகு, அவன் இவ்வறிவைத் தனதுவழிகாட்டியாகப் பயன்படுத்தி, இதற்கு முன் ஆராயப்படாத அல்லது முற்றாக ஆராயப்படாத பல்வேறு பருண்மையான பொருட்களை ஆராய்ந்தறியவும், அப்பொருட்கள் ஒவ்வொன்றிலுமுள்ள குறிப்பிட்ட தனி இயல்பைக் கண்டுபிடிக்கவும் முற்படுகிறான்.
இவ்வாறுதான் மனிதனால் பொருட்களின் பொது உட்சாரம் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ளவும், அதை நிறைவுபடுத்தி அதைச் செழுமைப்படுத்தி வளர்ச்சியடையச் செய்யவும் இயலும்; அது மட்டுமன்று, அத்தகைய அறிவு உலர்ந்து கெட்டி தட்டிப் போகாமல் பாதுகாக்கவும் முடியும்.
அறிவதில் இரு போக்குகள் உள்ளன. ஒன்று, குறிப்பிட்ட தனி இயல்பிலிருந்து பொதுவானதைப் பற்றி அறிவது. மற்றொன்று, பொதுவானதிலிருந்து குறிப்பிட்ட தனி இயல்பு வாய்ந்ததை அறிந்துகொள்வது. இவ்வாறு அறிவு எப்போதுமே சுழல் வட்டங்களாக இயங்குகிறது. அறிவியல் முறை நெறி பிறழாமல் கடைபிடிக்கும் வரை, ஒவ்வொரு சுற்றுவட்டமும் மனித அறிவை மேலும் ஒருபடி உயர்த்தி அதை மென்மேலும் ஆழமானதாக்குகிறது. இப் பிரச்சனையில் நமது வறட்டுத் தத்துவவாதிகள் எங்கேதவறுகிறார்கள் தெரியுமா? ஒருபுறம், முரண்பாட்டின் எங்கும் நிறைந்த இயல்பையும் பொருட்களின் பொது உட்சாரத்தையும் போதிய அளவு அறிந்துகொள்ளாமல், பொருட்களிலுள்ள முரண்பாட்டின் குறிப்பிட்ட தன்மையையும், தனித்தொரு பொருளின் அதற்கே உரிய குறிப்பிட்ட தனி இயல்புடைய உட்சாரத்தையும் ஆராய வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்வ தில்லை. மற்றோர்புறம், பொதுவான உட்சாரத்தை புரிந்துகொண்ட பிறகு, நாம் தொடர்ந்து சென்று, இதுவரை முற்றாக ஆராய்ந்து அறியப்படாத அல்லது இப்போது புதிதாகத் தோன்றியுள்ள பருண்மையான பொருட்களை எல்லாம் ஆராய வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளாததிலும்தான் அவர்கள் தவறிழைக்கின்றனர். நமது வறட்டுத் தத்துவவாதிகள் முழுச்சோம்பேறிகள். அவர்கள் பருண்மையான விசயங்களைப் பற்றி ஆராயஎவ்வித முயற்சியையும் எடுக்க மறுக்கிறார்கள். பொதுஉண்மைகள்வெறுமையிலிருந்து -சூன்யத்திலிருந்து தோன்றுவதாகக் கருதுகிறார்கள். அவர்கள் அவற்றைச் சிறிதும் புலனீடற்ற அருவமான ஆழங்காண முடியாத ஓட்டை வாய்ப்பாடுகளாக ஆக்கி விடுகிறார்கள். இவ்வாறுஅவர்கள், உண்மையை அறிய மனிதன் மேற்கொள்கிற இயல்பான ஒழுங்கு முறையை முற்றாக மறுக்கின்றனர். இவ்வொழுங்கு முறையைத் தலைகீழாக்குகின்றனர். அறிதலில் உள்ள இரண்டு போக்குகளுடைய, அதாவது, குறிப்பிட்டதிலிருந்து பொதுவானதற்கும்,பொதுவானதிலிருந்து குறிப்பிட்டதற்கும் உள்ள, ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பற்றியும்அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. அவர்கள் அறிவு பற்றிய மார்க்சியக் கோட்பாடு எதையும் புரிந்துகொள்வதில்லை.
பொருளின் இயக்க வடிவங்களின் பேரமைப்புகளைஎடுத்துக்கொள்ளுங்கள் இவை ஒவ்வொன்றிலுமுள்ள குறிப்பான முரண்பாட்டையும், அம்முரண்பாட்டால்நிர்ணயிக்கப்படுகிற உட்சாரத்தையும் பற்றி ஆராய்வது மட்டுமல்லாது, சடப்பொருளின் ஒவ்வொரு இயக்க வடிவத்தின் நீண்ட வளர்ச்சிப் பாதையில் உள்ள, ஒவ்வொரு இயக்கப் போக்கிலுமுள்ள குறிப்பிட்ட தனி முரண்பாட்டையும், குறிப்பிட்ட உட்சாரத்தை ஆராய்வதும் இன்றியமையாதது ஆகும். ஒவ்வொரு இயக்க வடிவத்திலுமுள்ள ஒவ்வொரு உண்மையான, கற்பனையற்ற வளர்ச்சிப் போக்கும் வேறுவேறு பண்புடையதாகவே உள்ளது. நமது ஆய்வு இதனை வலியுறுத்தி, இங்கிருந்தே தொடங்க வேண்டும்.
பண்பால்வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட முறைகளாலேயே தீர்க்கவேண்டும். எடுத்துக்காட்டாக, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையில் உள்ள முரண்பாடு சோசலிசப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். பரந்துபட்ட மக்களுக்கும், நிலவுடமை அமைப்புக்கும் இடையில் உள்ள முரண்பாடு ஜனநாயகப் புரட்சி முறையால் தீர்க்கப்பட வேண்டும். குடியேற்ற நாடுகளுக்கும் (காலனிகளுக்கும்)ஏகாதிபத்தியத்துக்கும் இடையில் உள்ள முரண்பாடு தேசிய புரட்சி யுத்த முறையால்(National Revolutionary War) தீர்க்கப்பட வேண்டும். சோசலிச சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்துக்கும்,விவசாயிவர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாடு விவசாயத்தை கூட்டுறவுமயமாக்கி, அதை எந்திரமயமாக்கும் முறையால் தீர்க்கப்பட வேண்டும். பொதுவுடமைக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடு விமர்சனம் - சுயவிமர்சனம் என்ற முறையில் தீர்க்கப்பட வேண்டும்.
சமுதாயத்திற்கும் இயற்கைக்கும் இடையில் உள்ள முரண்பாடு உற்பத்திச் சக்திகளை வளர்ச்சியுறச் செய்யும் முறையால் தீர்க்கப்பட வேண்டும். இயக்கப் போக்குகள் மாறுகின்றன.
பழைய இயக்கப் போக்குகளும், பழையமுரண்பாடுகளும் மறைகின்றன. புதிய இயக்கப்போக்குகளும், புதிய முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இவற்றுக்கேற்ப முரண்பாடுகளைத் தீர்க்கும் முறைகளும் மாறுகின்றன. ரஷ்யாவில் பிப்ரவரிப் புரட்சியால் தீர்க்கப்பட்ட முரண்பாடுகளுக்கும், அக்டோபர் புரட்சியால் தீர்க்கப்பட்ட முரண்பாடுகளுக்கு இடையிலும்; இவற்றைத் தீர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட முறைகளுக்கு இடையிலும் அடிப்படையான வேறுபாடு ஒன்று இருந்தது. வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட முறைகளைப் பயன்படுத்தும் கோட்பாடு, மார்க்சிய லெனினிய வாதிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டியஒன்றாகும். நமது வறட்டுத் தத்துவவாதிகள் இக்கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதில்லை. வெவ்வேறு வகையான புரட்சியில் அதனதன் நிலைமைகள் வேறுபடுகின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. எனவே, வேறுபட்ட முரண்பாடுகளைத் தீர்க்க வேறுபட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.
அதற்கு மாறாக, தாம் கற்பனை செய்துகொண்ட மாற்றமுடியாத வாய்ப்பாடு ஒன்றை,எப்போதும் எல்லா இடங்களிலும் மனம் போனபடி எதிலும் கையாளுகின்றனர். இது, புரட்சிக்குப் பின்னடைவுகளை உருவாக்குகிறது, அல்லது சிறப்பாகச் செய்யக்கூடியவைகளை முற்றாகக் குழப்பிவிடுகின்றது.
ஒரு பொருளின் வளர்ச்சியில் உள்ள எந்த இயக்கப் போக்கையும் எடுத்துக்கொள்வோம், இவ்வியக்கப் போக்கில் உள்ள முரண்பாடுகளின் குறிப்பானஇயல்பை, அம்முரண்பாடு களின் முழுமையிலோ, அல்லது அவற்றின் ஒன்றுக்கொன்றான தொடர்பிலோ வெளிப்படுத்துவதற்கு, அதாவது அந்த இயக்கப் போக்கின் உட்சாரத்தை வெளிப்படுத்துவதற்கு இன்றியமையாதது எது? இவ்வியக்கப் போக்கில் உள்ள முரண்பாடுகள் ஒவ்வொன்றிலும் எதிரும் புதிருமான இரு கூறுகள் உள்ளனவே. இவற்றின் குறிப்பான இயல்பை வெளிப்படுத்து வதுதான். இதைச் செய்யாவிட்டால், இந்த இயக்கப் போக்கின் உட்சாரத்தைக் கண்டறிவது இயலவே இயலாது.
நமது ஆய்வில் மிகக் கூடுதலான கவனம் இதிலும் செலுத்த வேண்டும்.
பெரும் நிகழ்ச்சிப் போக்குகள் எதை எடுத்துக்கொண்டாலும், அதன் வளர்ச்சிப் பாதையில் பல முரண்பாடுகள் இருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சிக்கலான சூழல்களைக் கொண்ட சீன முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் பாதையைப் பார்ப்போம். இங்கு சீன சமுதாயத்தில் உள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலுள்ள முரண்பாடு; மிகப்பரந்துபட்ட மக்கள் திரளுக்கும், நிலவுடமை அமைப்புக்கும் உள்ள முரண்பாடு; பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் உள்ள முரண்பாடு; ஓர்புறமுள்ள, விவசாயிகளுக்கும் நகர சிறு முதலாளி வர்க்கம் ஆகியவற்றுக்கும், மற்றொருபுறமுள்ள முதலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள முரண்பாடு; பல்வேறு பிற்போக்கு ஆளும் குழுக்களுக்கு இடையே உள்ள முரண்பாடு என்று இவ்வாறு பல்வேறு வகையான முரண்பாடுகள்உள்ளன. இம்முரண்பாடுகளில் ஒவ்வொன்றும் தனக்கே உரியதனிப்பட்ட குறிப்பான தன்மையைக் கொண்டிருப்பதால், இம்முரண்பாடுகளை ஒரேமாதிரியாகக் கையாள முடியாது. மேலும், ஒவ்வொரு முரண்பாட்டிலும் உள்ள இருகூறுகளையும் ஒரே சீராகக் கையாள முடியாது. ஏனெனில், முரண்பாட்டில் உள்ள ஒவ்வொரு கூறும் அதற்கே உரிய குறிப்பான பண்புகளைக் கொண்டுள்ளது. சீனப் புரட்சியில் ஈடுபட்டுள்ள நாம் முரண்பாடுகளின் முழுமையில், அதாவது, அவற்றுக்கிடையே உள்ள ஒன்றுக்கொன்றான தொடர்பில், இம்முரண்பாடுகளின் குறிப்பான தன்மையை மட்டுமல்லாது,ஒவ்வொரு முரண்பாட்டிலுமுள்ளஇருகூறுகளையும் ஆழ்ந்து பயில வேண்டும். முழுமையைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை இதுதான். ஒரு முரண்பாட்டின்கூறு ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ளுதல் என்று நாம் கூறுகிறோமே, இதன் பொருள் என்ன? இதன் பொருள், கீழ்கண்டவற்றைப் புரிந்துகொள்ளுதல்தான்: ஒவ்வொரு கூறும் மேற்கொள்ளும் குறிப்பிட்ட தனிநிலையாது?தனது எதிர்மறையுடன்
சம்பந்தப்பட்டிருக்கும் தொடர்பிலும், முரண்பட்டும் இருக்கும்போது அது மேற்கொள்ளும் பருண்மையான வடிவங்கள் யாவை என்பதையும்; இவ்விறு கூறுகளும் ஒன்றை ஒன்று சார்ந்தும், அதே வேளையில் முரண்பட்டு இருக்கும்போதும், இச்சார்பு தகர்ந்த பின்னரும்கூட ஒரு கூறு தனது எதிர்மறையுடன் மேற்கொள்ளும் போராட்டத்தில் கடைபிடிக்கும் பருண்மையான வழிமுறைகள் என்ன என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்பிரச்சனைகளை ஆழ்ந்து கற்பது முதன்மையானது ஆகும். மார்க்சியத்தில் மிக அடிப்படையானது, அதன் உயிர் என்பது, பருண்மையான நிலைமைகளைப் பற்றிய பருண்மையான ஆய்வே என லெனின் கூறியபோது மேற்காணும் கருத்தையே அவர் மனதில் கொண்டிருந்தார். நமது வறட்டு தத்துவவாதிகள் லெனின் புகட்டிய கல்வியை மீறிவிட்டார்கள்.
என்பதையும் பருண்மையாக ஆராய்வதற்கு அவர்கள் தமது சொந்த மூளையைப் பயன்படுத்துவதில்லை. தமது எழுத்திலும், பேச்சிலும் உள்ளடக்கம் ஏதுமற்ற, அலுப்பூட்டும் பழைய முறைகளையே எப்போதும் பின்பற்றுகிறார்கள். இது நமது கட்சியில் மிகக் கேடு பயக்கும் வேலை முறையைத் தோற்றுவிக்கிறது.
ஒரு பிரச்சனையை ஆராயும் பொழுது, அகநிலைப்போக்கு, ஒருதலைப்பட்ச போக்கு,மேலோட்டமான போக்கு, ஆகியவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
அகநிலைப் போக்கு என்பது, பிரச்சனைகளைப் புறநிலையில் பார்க்கத் தவறுவது ஆகும்.
அதாவது,பிரச்சனைகளைப் பார்க்கும் போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் பார்க்கத் தவறுவதுவது ஆகும். “நடைமுறை பற்றி” என்ற கட்டுரையில் நான் இதை விளக்கியுள்ளேன்.
ஒருதலைப்பட்சப் போக்கு என்பது, பிரச்சனைகளை முழுமையாகப் பார்க்கத் தவறுவதாகும்.
எடுத்துக்காட்டாக,ஜப்பானை புரிந்து கொள்காமல்,சீனாவை மட்டும் புரிந்து கொள்வது; கோமிங்டாங்கைப் புரிந்து கொள்ளாமல் பொதுவுடமைக் கட்சியை மட்டும் புரிந்துகொள்வது; முதலாளி வர்க்கத்தைப் புரிந்து கொள்ளாமல் பாட்டாளி வர்க்கத்தைப் பற்றி மட்டும் புரிந்துகொள்வது; பெருநில உடமையாளர்களைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் விவசாயிகளைப் பற்றி மட்டும் புரிந்துகொள்வது;எதிர்காலத்தைப் புரிந்துகொள்ளாமல் கடந்தகாலத்தைப் பற்றி மட்டும் புரிந்துகொள்வது;முழுமையைப் புரிந்துகொள்ளாமல் தனிப் பகுதியை மட்டும் புரிந்துகொள்வது; சாதனைகளைப் புரிந்துகொள்ளாமல், குறைபாடுகளை மட்டும் புரிந்து கொள்வது, எதிர் வழக்காட்டுபவரைப் (பிரதிவாதியை)புரிந்துகொள்ளாமல் வழக்காடுபவரை (வாதியை மட்டும்) புரிந்துகொள்வது, வெளிப்படையான புரட்சிப் பணியைப் புரிந்துகொள்ளாமல், இரகசிய (மறைமுக)புரட்சிப் பணியை மட்டும் புரிந்துகொள்வது முதலியன ஒருதலைப்பட்ச போக்காகும். சுருங்கக் கூறினால், ஒரு முரண்பாட்டின் ஒவ்வொரு கூறுக்குமுரிய பண்பைப் புரிந்துகொள்ளத் தவறுவதாகும். இதுவே ஒருதலைபட்சமாகப் பார்ப்பது என்பதாகும்; அல்லது முழுமையாகப் பார்க்காமல், பகுதியை மட்டும் பார்ப்பது; காட்டைப் பார்க்காமல் மரங்களை மட்டும் பார்ப்பது என்றும் இதைக் கூறலாம். இம்முறை கொண்டு முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழிமுறையைக் காண்பது இயலாது.
புரட்சியின் கடமைகளை நிறைவேற்று வதோ,ஒப்படைக்கப்பட்ட பணிகளைச் செம்மையாகச் செய்வதோ அல்லது உட்கட்சித் சித்தாந்தப் போராட்டத்தைச் சரிவர வளர்ப்பதோ சாத்தியமாகாது.
போர்க்கலையைப்பற்றிவிளக்குகையில் ஸூன்-வு-ஸூ கூறினார்: “பகைவனை அறிந்துகொள். உன்னைப் பற்றியும் அறிந்துகொள்.தோல்வியைப் பற்றி கவலையே இன்றி நூறு போர்களை நடத்த முடியும்” (ஸூன்-வு-ஸூ ஒரு சீன இராணுவ வல்லுனர்).இங்கு அவர் போர்க்களத்தின் இரு தரப்புகளையும்குறிப்பிடுகிறார். ”தங்”வம்சத்தைச் சேர்ந்த “வெய்செங்” என்பவரும் ஒருதலைப்பட்ச போக்கு தவறானது என்பதை உணர்ந்திருந்தார் என்பதைக் கீழ்காணும் அவரது கூற்று விளக்குகிறது: “இரு தரப்புக்கும் செவி கொடு; அப்போது நீ தெளிவுபெறுவாய்.ஒரு தரப்புக்கு மட்டும் செவி கொடு,அப்போது நீ இருளில் தடுமாறுவாய்”என்றார்(“வெய் செங்” தங் வம்சத்தின் ஒரு அரசியல் நிபுணர் மற்றும் வரலாற்று அறிஞர் ஆவார்). ஆனால்,நமது தோழர்கள் அடிக்கடி பிரச்சனைகளை ஒருதலைப்பட்ச நோக்கில் பார்ப்பதால் இடையூறுகளுக்கு ஆட்படுகிறார்கள்.
“ஷூய் ஹூசுவான்” என்ற நாவலில் “ஸூங் கியாங் என்ற ஒரு கதைப் பாத்திரம். இவர் “சூ” கிராமத்தின் மீது மும்முறை தாக்குதல் தொடுத்தார்,நிலைமைகளைப் பற்றி தெளிவான அறிவு இல்லாததாலும் தவறான முறைகளைக் கையாண்டதாலும் அவர் இருமுறை தோல்வியைத் தழுவினார். பிறகு அவர்,தமது முறைகளை ஆராயத் தொடங்கினார்.ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும் சாலைகளைப் பற்றி அறிந்து கொண்டார்.லீ,ஹூ என்ற இரு கிராமங்களின் இணைப்பைத் துண்டித்தார்.வெளிநாட்டுக் கதை ஒன்றில் வரும் “ட்ரோஜன்”குதிரையைப் போன்றதொரு தந்திரத்தைப் பயன்படுத்தி,தனது போர் வீரர்களுக்கு மாறுவேடமிட்டு அவர்களைப் பகைவர் முகாமிற்குள் மறைமுகமாக கொண்டுபோனார்.
மூன்றாம் முறைத் தாக்குதலில் வெற்றி பெற்றார். “ஷூய்-ஹூ-சுவான்” கதை, பொருள்முதல்வாத இயங்கியலுக்குப்பல எடுத்துக் காட்டுகளை வழங்குகிறது. அவற்றுள் “சூ”கிராமத்தின் மீது நடைபெற்ற மூன்று தாக்குதல் பற்றிய கிளைக்கதை மிகச் சிறந்ததாகும்.
லெனின் கூறினார்: “ஒரு பொருளை உண்மையாக அறிய வேண்டுமானால், நாம் அப்பொருளின் அனைத்துப் பகுதியையும்,எல்லாத்தொடர்புகளையும், “இடைத்தொடர்பு”களையும் தழுவிய வகையில் ஆராய வேண்டும்.இதை நாம் ஒருபோதும்முழுமையாக சாதிக்க இயலாது.ஆனால் எல்லாப் பகுதிகளையும் ஆராய வேண்டும் என்ற கோரிக்கை,தவறுகளுக்கு எதிரான வளைந்து கொடுக்காத இறுகிய தன்மைக்கு எதிரானபாதுகாப்பு வழங்குகிறது”.
நாம் அவரது சொற்களை நினைவில் இருத்தல் வேண்டும்.
மேலோட்டமான போக்கு என்பது முரண்பாட்டின் முழுமையான பண்புகளையோ,அல்லதுமுரண்பாட்டின் ஒவ்வொரு கூறுகளுக்குமுரிய பண்புகளையோஆராயத்தவறுவதாகும். ஒருபொருளை ஆழமாகத் துருவிப் பார்த்து அதிலுள்ள முரண்பாட்டின் பண்புகளை நுணுக்கமாக ஆராயும் தேவையை மறுப்பதும்,இதற்கு மாறாக அதைத் தொலைவிலிருந்து நோக்கி, முரண்பாட்டின் மேலோட்டமான தோற்றத்தை மட்டும் ஓரளவு பார்த்துவிட்டு, அதற்கு உடனடியாகத் தீர்வு காண (கேள்விக்கு விடை பெற, தகராறு ஒன்றைத் தீர்க்க, ஒரு பணியைக் கையாள போர் நடவடிக்கைக்கு வழிகாட்ட) முயல்வதாகும். இவ்வகைச் செயல்முறைகள் தொல்லைகளுக்கே வழிவகுக்கும். சீனத்தில் இந்த வறட்டு தத்துவார்த்த தோழர்களும் அனுபவவாதத் தோழர்களும் தவறுகளைச் செய்யக் காரணம், அவர்கள் அகநிலை நோக்கிலும், ஒருதலைப் பட்சமாகவும், மேலோட்டமாகவும் பிரச்சனைகளைப் பார்ப்பதேயாகும்.
ஒருதலைப்பட்சபோக்கும்,மேலோட்டப் போக்கும் கூட அகநிலை நோக்குதான்.காரணம், புறநிலையில் உள்ளவை அனைத்தும், உண்மையில் ஒன்றுக்கொன்று தொடர்புடயவை.
ஆனால்,ஒரு சிலரோ,உள்ளவை உண்மையில் எவ்வாறு உள்ளனவோ அவ்வாறே அவற்றைச் சிந்தனைக்கு உட்படுத்தும்கடமையைச் செய்வதற்குப் பதிலாக, அவற்றை ஒருதலைப் பட்சமாகவும், மேலோட்டமாகவும் மட்டும் பார்க்கிறார்கள்.அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்புகளையோ,அவற்றின் அகவிதி களையோ அறியாதிருக்கின்றனர்.
எனவே, அவர்களுடைய முறை அகநிலைப் போக்காக உள்ளது.
ஒரு பொருளின் வளர்ச்சியிலுள்ள எதிரானவைகளின் இயக்கத்தின் வளர்ச்சிப் போக்கு முழுவதும் சிறப்புத் தன்மைகளைக் கொண்டிருக்கிறது.இச்சிறப்புத் தன்மை,அவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பிலும்,அவற்றின் ஒவ்வொரு கூறிலும் காணப்படுகிறது.அதோடு அவ்வளர்ச்சிப் போக்கிலுள்ள ஒவ்வொரு கட்டமும் அக்கட்டத்திற்கே உரிய சிறப்புத் தன்மைகளைக் கொண்டுள்ளது. இவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள அடிப்படை முரண்பாடும், இந்த அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட உட்சாரமும்,இவ்வளர்ச்சிப் போக்கு முற்றுப் பெறும்வரை மறையாது:ஆனால்,ஒரு நீண்ட வளர்ச்சிப் பாதையில் உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் அதனதன் நிலைமைகள் வேறுபடும்.ஏனெனில்,ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் அடிப்படை முரண்பாட்டின் தன்மையும், இந்த அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்பட்ட உட்சாரமும், இந்த போக்கு முற்றுப்பெறும் வரை மறையாது. ஆனால் ஒரு நீண்ட வளர்ச்சிப்போக்கிலுள்ள அடிப்படை முரண்பாட்டின் தன்மையும், வளர்ச்சிப் போக்கின் உட்சாரத்தின் தன்மையும் மாறாமல் இருந்த போதிலும், இந்த நீண்ட போக்கில் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும் போது அடிப்படை முரண்பாடானது மேன்மேலும் கடுமையானதாகிறது. கூடவே, அடிப்படை முரண்பாட்டால் நிர்ணயிக்கப்படுகிற அல்லது அதன் தாக்கம் பெறுகிற பல்வேறு பெரிய அல்லது சிறிய முரண்பாடுகளில் சில கடுமையாகின்றன;சில தற்காலிக மாகவோ, அல்லது அரைகுறையா கவோ தீர்வு பெறுகின்றன;அல்லது அவற்றின் கடுமை தணிக்கப் பெறுகின்றன.அத்துடன் சில புதிய முரண்பாடுகளும் தோன்றுகின்றன. இதனால்தான்,இந்த போக்குகள் பல கட்டங்களாக வடிவம் பெறுகின்றன.ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கில் உள்ள பல படித்தான கட்டங்களில் கவனம் செலுத்த முடியாதவர்களால் அம்முரண்பாடுகளைச் சரியாக கையாள முடியாது.
எடுத்துக்காட்டாக, முதலாளிய காலகட்ட சமூகத்தை எடுத்துக் கொள்வோம். இக்கட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கும்முதலாளிவர்க்கத்திற்கும் இடையில் உள்ள முரண்பாடுதான் அடிப்படையான முரண்பாடு. இதுதான், ஒரு சமுதாயம் முதலாளிய சமூகம் என்றாகியஉட்சாரத்தைநிர்ணயிக்கிறது. சுதந்திரப் போட்டியை வளர்த்த காலத்திலிருந்தே முதலாளிய சமுதாயத்தின்அடிப்படை முரண்பாடாக இருந்துவருவது இம்முரண்பாடுதான்.இதே முதலாளியம் ஏகாதிபத்தியமாக வளர்ச்சி பெற்ற போதும்,இவ்வடிப்படை முரண்பாட்டில் இருந்த இவ்விரு வர்க்கங்களின் தன்மையில் மாறுதல் ஏதும் ஏற்படவில்லை.முதலாளியசமுதாயம் என்ற உட்சாரத்தில் எவ்வித மாறுதலும் ஏற்படவில்லை. ஆயினும், இவ்விரு வர்க்கங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்தது. ஏகபோக மூலதனத்திற்கும், ஏகபோகமல்லாத மூலதனத்துக்கும் இடையே முரண்பாடு தோன்றியது.
குடியேற்ற நாடுகளை (காலனி)ஆள்வோருக்கும்,குடியேற்றநாடுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடு கடுமையாகியது.ஏற்றத்தாழ்வான வளர்ச்சியின் காரணமாக,முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு குறிப்பிடத்தக்க கூர்மையுடன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.இவ்விதமாக,முதலாளியத்தின் சிறப்புமிகு கட்டமானஏகாதிபத்திய கட்டம் தோன்றியது.லெனினியம் என்பது ஏகாதிபத்தியக் காலகட்டத்தின் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் காலத்தின் மார்க்சியமாகியது.இதற்கான காரணம்,லெனினும்,ஸ்டாலினும்இம்முரண்பாடு களைச் சரியாக விளக்கி,இவற்றைத் தீர்ப்பதற்கான பாட்டாளி வர்க்கக் கோட்பாடுகளையும், போர்த்தந்திரங் களையும் சரியாக வகுத்ததுதான்.
சீனத்தின் முதலாளிய ஜனநாயகப் புரட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். 1911-இன் புரட்சிதான் இதன் தொடக்கம். இந்த முதலாளிய ஜனநாயகப் புரட்சியில் குறிப்பிட்டு வேறுபடுத்திக் காட்டக்கூடிய பல கட்டங்களைக் காணலாம். குறிப்பாக, முதலாளி வர்க்கத் தலைமை இருந்த காலகட்ட புரட்சியையும், பாட்டாளி வர்க்கத் தலைமை உள்ள காலகட்டப் புரட்சியையும்எடுத்துக் கொள்வோம். இவை ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்ட வரலாற்றுக் கட்டங்களை எடுத்துக் காட்டுகின்றன. வேறு வகையாக இவைகளைப் பார்த்தால்,பாட்டாளி வர்க்கத் தலைமை புரட்சியின் முழுத் தோற்றத்தையும் அடிப்படையிலே மாற்றியுள்ளது.புதிய வர்க்க உறவு முறையொன்றை அமைத்துள்ளது; விவசாயப் புரட்சியில் மாபெரும் பேரெழுச்சி ஒன்றைத் தோற்றுவித்துள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும்,நிலவுடமைக்கும் எதிரான புரட்சிக்கு நிறைவானத் தன்மையை வழங்கியுள்ளது;ஜனநாயகப் புரட்சியிலிருந்து சோசலிசப் புரட்சிக்கு மாறும் சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளது. இப்படி பல.
புரட்சிக்கு முதலாளிய வர்க்கம் தலைமை தாங்கிய காலகட்டத்தில் இவற்றில் எதுவுமே சாத்தியமடைய வில்லை.இவ்வளர்ச்சிப் போக்கு முழுவதிலும்அடிப்படை முரண்பாட்டின் தன்மையில் அதாவது ஏகாதிபத்திய நிலவுடமை எதிர்ப்பு தன்மை கொண்ட ஜனநாயகப் புரட்சியின் தன்மையில் (இதன் எதிர்மறை - அரைக்காலனி, அரைநிலவுடமைத் தன்மை) எவ்வித மாற்றமும் ஏற்படாத போதிலும், இருபதுக்கும் மேலான ஆண்டுக் காலத்தில் இந்தப் போக்கு பல வளர்ச்சிக் கட்டங்களினூடே சென்றுள்ளது.
இந்தக் காலப் பகுதியில் மாபெரும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன: 1911 ஆம் ஆண்டுப் புரட்சியின் தோல்வி; வடமாநில யுத்தப் பிரபுக்களின் ஆட்சி நிறுவப்படுதல்; முதலாவது தேசிய ஐக்கிய முன்னணியின் தோற்றம்; 1924 - 27-ஆம் ஆண்டுகளின் புரட்சி; ஐக்கிய முன்னணி உடைதல்; முதலாளிய வர்க்கம் எதிர்ப்புரட்சி முகாமிற்கு ஓடுதல்;புதியயுத்தப்பிரபுக்களுக்கிடையே போர்; உழவர்களின் புரட்சிப் போர்; இரண்டாவது ஐக்கிய முன்னணி நிறுவப்படுதல்;ஜப்பானிய எதிர்ப்புப் போர் ஆகியவை இந்நிகழ்ச்சிகளாகும்.
இந்தக் கட்டங்களில் கீழ்க்காணும் தனிச்சிறப்பு வாய்ந்த கூறுகளைக் காணலாம்.
1.சில முரண்பாடுகள் தீவிரமாயின(எடுத்துக்காட்டாக,விவசாயிகளின் புரட்சிப் போரும்; நான்கு வடகீழ் மாநிலங்கள் மீது நடந்த ஜப்பானிய ஆக்கிரமிப்பும்)
2.சிலமுரண்பாடுகள்தற்காலிகமாகவோ அல்லது ஓரளவுக்கோ தீர்வு பெற்றன. (எடுத்துக்காட்டாக, வடமாநில யுத்தபிரபுக்கள்அழித்தொழிக்கப்பட்டனர். நிலவுடமையாளர்களின் நிலம் நம்மால் பறித்தெடுக்கப்பட்டது)
3. வேறு சில முரண்பாடுகளின் தோற்றம். (எடுத்துக்காட்டாக, புதிய யுத்த பிரபுக்களிடையே மோதல்கள் ஏற்பட்டன;தென்மாநிலங்களில் நாம் புரட்சி தளப்பகுதிகளை இழந்த பின்னர், நிலவுடமையாளர்கள் நிலங்களை திரும்பக் கைப்பற்றிக் கொண்டார்கள்.
ஒரு பொருளின் வளர்ச்சிப் போக்கிலுள்ள ஒவ்வொரு கட்டத்தையும் எடுத்துக்கொள்வோம்.
இந்த ஒவ்வொரு கட்டத்திலுமுள்ள முரண்பாடுகளின் குறித்த தன்மைகளைப் பற்றி நாம் ஆராயும் பொழுது,நாம் அவற்றை,அவை ஒன்றோடொன்றான தொடர்புகளிலோ அல்லது அவற்றின் முழுமையின் சேர்க்கையிலோ மட்டும் பார்க்கக் கூடாது,ஒவ்வொரு கட்டத்திலுமுள்ள இரு கூறுகளையும் நாம் பார்க்க வேண்டும்.
உதாரணமாக, “கோமிங்டாங்:” கட்சியையும், பொதுவுடமைக் கட்சியையும் எடுத்துக்கொள்வோம், இவற்றில் ஒரு கூறான கோமிங்டாங்கைப் பார்ப்போம்.
1.முதலாவது ஐக்கிய முன்னணி காலத்தில்,கோமிங்டாங் ரஷ்யாவுடன் ஒற்றுமையைப் பேணுதல்;பொதுவுடமைக் கட்சியுடன் ஒற்றுமை பேணுதல்;விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவி செய்தல் ஆகிய “சன்-யாட்-சன்”னின் முப்பெரும் கொள்கையைநடைமுறைப்படுத்தியது. அப்போது,அது புரட்சிகரமானதாகவும் உயிர்த் துடிப்புள்ளதாகவும்விளங்கியது.பல்வேறு வர்க்கங்களுடைய ஜனநாயகப் புரட்சிகரமான நட்பு அணியாய் அது விளங்கியது.
2.இருப்பினும் 1927ஆம் ஆண்டுக்குப் பின்னர்,கோமிங்டாங் நேர் எதிர்மாறானதாகியது.நிலவுடமையாளர்கள்,பெருமுதலாளிகள் ஆகியோருக்கான பிற்போக்கு கும்பலாகியது.
3.1936ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் ஏற்பட்ட “சியான்” (சீனாவில் ஜப்பானை எதிர்த்துப்போர் நடத்த வேண்டும் என்ற கொள்கையை சியாங்கே ஷேக் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அவனது இராணுவத் தலைவர்களில் இருவர் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின்
ஐக்கியமுன்னணிக் கொள்கையை ஏற்றுக்கொண்டு சியாங்கே ஷேக்கை கைது செய்து இந்த ஐக்கிய முன்னணியை ஏற்றுக்கொள்ளச் செய்தனர்)நிகழ்ச்சிக்குப் பிறகு உள்நாட்டுப் போரை நிறுத்தி வைத்து விட்டு,ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்த கூட்டு எதிர்ப்புக்காக பொதுவுடமைக் கட்சியுடன் ஒத்துழைக்கும் திசையில் அது மற்றொரு மாற்றம் பெறத் தொடங்கியது.
மேற்கூறிய மூன்று கட்டங்களிலும் கோமிங்டாங்கிலிருந்த குறிப்பிட்ட தனி இயல்புகள் இவைதான். இந்த குறிப்பிட்ட தனி இயல்புகள் தோன்ற பலவகைக் காரணங்கள் இருந்தன என்பதே உண்மை.
இனி, மற்றொரு கூறான சீனப் பொதுவுடமைக் கட்சியை எடுத்துக்கொள்வோம்.
1.முதலாவது ஐக்கிய முன்னணிக் காலத்தில் சீனப் பொதுவுடமைக் கட்சி தனது குழந்தைப் பருவத்தில் இருந்தது. அது 1924 - 27-ஆம் ஆண்டுகளின் புரட்சிக்கு, துணிவுடனும் வீரத்துடனும் தலைமை தாங்கியது. ஆனால், புரட்சியின் தன்மை, கடமைகள், வழிமுறைகள் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் தனக்கு இருந்த பக்குவமின்மையை இக்கட்சி வெளிப்படுத்தியது. அதன் காரணமாக, புரட்சியின் பிற்பகுதியில் தோன்றிய “சென்-து-சியு”வின் கொள்கை மேலோங்கி புரட்சிக்குத் தோல்வியைக் கொண்டு வந்தது.
2.1927ஆம் ஆண்டுக்குப் பின்னர்,பொதுவுடமைக் கட்சி நிலப்புரட்சி யுத்தத்திற்கு துணிவுடன் தலைமை தாங்கி, புரட்சிகரப் படையையும், புரட்சிகரத் தளப் பகுதிகளையும் உருவாக்கியது. இருப்பினும்,படை,தளப் பகுதிகள் இரண்டுக்குமே மிகப் பெரும் இழப்புகளை உருவாக்கிய “துணிச்சல்வாதத்” தவறுகளைச் செய்தது. 1935 முதல் கட்சி இத்தவறுகளை திருத்தியுள்ளதோடு, ஜப்பானிய எதிர்ப்புக்கான புதிய ஐக்கிய முன்னணிக்குத் தலைமைதாங்கியும் வருகிறது. இம்மாபெரும் போராட்டம் இப்போது வளர்ச்சிபெற்று வருகிறது.
3.தற்போதைய கட்டத்தில் பொதுவுடமைக் கட்சி,இரண்டு புரட்சிகளினூடேயும் புடம்போட்டு எடுக்கப்பட்ட செழிப்பான அனுபவம் பெற்ற ஒரு கட்சியாகியுள்ளது.
இவைதான்,மூன்று கட்டங்களிலும் சீனப் பொதுவுடமைக் கட்சிக்குள்ள குறிப்பிட்ட தனி இயல்புகள் ஆகும்.இந்தக் குறிப்பிட்ட தனி இயல்புகள் தோன்றுவதற்கும் பல் வேறு காரணங்கள் இருந்தன.
ஒவ்வொரு கூறுகளிலுமுள்ள இக் குறிப்பிட்ட தனி இயல்புகளை ஆராயாவிட்டால், இரு கட்சிகளுடைய வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும் இவற்றுக்கிடையே இருந்த உறவுகளை, அதாவது ஐக்கிய முன்னணியின் தோற்றம் என்ற உறவு, அது சீர்குலைந்தபோது இருந்த உறவு,மற்றோர் ஐக்கிய முன்னணியின் உருவாக்கம் என்ற உறவு -ஆகியவற்றை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.ஒவ்வொரு கட்சிக்குமுள்ள சிறப்புக் கூறுகள் பற்றிய ஆய்வுக்கு மிகவும் அடிப்படையாக இருப்பதுஎது? இரண்டு கட்சிகளுடைய வர்க்க அடிப்படைபற்றிய ஆய்வும்,ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு கட்சிக்கும் மற்றும் பிறசக்திகளுக்கும் இடையே இந்த வர்க்க அடிப்படையின் காரணமாகத் தோன்றிய முரண்பாடு பற்றிய ஆராய்வுமேயாகும். எடுத்துக்காட்டாக,பொதுவுடமை கட்சியுடன் முதன்முறையாக இணக்கமான கூட்டுறவு கொண்டிருந்த காலத்தில் கோமிங்டாங் கட்சியானது வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களுடன் முரண்பட்டு நின்றிருந்தது. எனவே, அது ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை வாய்ந்திருந்ததாக இருந்தது. மற்றோர்புறமோ, அது நாட்டிலுள்ள பெருந்திரளான மக்களுடன் முரண்பட்டிருந்தது. சொல்லளவில் உழைக்கும் மக்களுக்குப் பல நன்மைகள் செய்வதாக வாக்குறுதி தந்த போதிலும், செயலளவில் அது செயல்பட்டதும் செய்ததும் மிகவும் அற்பமானது அல்லது ஏதும் செய்யவில்லை என்றே கூறலாம்.
பொதுவுடமை எதிர்ப்புப் போராட்டத்தைக் கோமிங்டாங் நடத்திய காலத்தில், அது பரந்துபட்டமக்களுக்கு எதிராக ஏகாதிபத்தியம் மற்றும் நிலவுடமை சக்திகளுடன் ஒத்துழைத்தது.
புரட்சியில் மக்கள் வென்றெடுத்த பலன்கள் அனைத்தையும் துடைத்தெறிந்து, மக்களுக்கும் தனக்குமிடையிலிருந்த முரண்பாட்டை மேலும் கடுமையாக்கியது.
தற்போதைய ஜப்பானிய எதிர்ப்புப் போர் நடைபெறும் இக்காலக் கட்டத்தில், கோமிங்டாங் கட்சியானது ஜப்பானை எதிர்ப்பதற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதால், கோமிங்டாங் மற்றும் உள்நாட்டு நிலவுடமைச் சக்திகளைப் பொறுத்து, பொதுவுடமைக் கட்சியானது இறுக்கமற்ற,மிதமானநிலைபாட்டையே மேற்கொண்டுள்ளது. மேற்கூறிய சூழ்நிலைமைகள்,ஒரு சமயத்தில் இரண்டு கட்சிகளுக்கு இடையே நட்பு அணியையும், மற்றொரு நேரத்தில் இவற்றுக்கிடையே போராட்டத்தையும் உருவாக்கியுள்ளன. நட்பு அணிக்காலத்திலும் கூட, நட்பு இருக்கும் அதேவேளையில் போராட்டமும் இருக்கும் ஒரு சிக்கலான நிலைமை நிலவிவருகிறது.
முரண்பாட்டின் இரு கூறுகள் ஒவ்வொன்றினுடைய குறிப்பிட்ட சிறப்பு இயல்புகளையும் ஆராயாவிட்டால் நாம், ஒவ்வொரு கட்சியையும் இதர சக்திகளுடன் கொண்டுள்ள உறவுகளைப் புரிந்துகொள்ளத் தவறுவோம்;மேலும்,இவ்விரண்டு கட்சிகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் புரிந்துகொள்ளத் தவறுவோம்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்வது என்னஎவ்வகையானமுரண்பாட்டையும் எடுத்துக் கொள்வோம்,அது பொருளின் இயக்க வடிவம் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு,அதன் வளர்ச்சிப் போக்குகள் ஒவ்வொன்றிலுமுள்ள முரண்பாடு,ஒவ்வொரு வளர்ச்சிப் போக்கிலுமுள்ள முரண்பாட்டின் இரு கூறுகள்,வளர்ச்சிப் போக்கின் ஒவ்வொரு கட்டத்திலுமுள்ளமுரண்பாடு,ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள முரண்பாட்டின் இரு கூறுகள் என பல்வேறு வகையானதாக இருக்கலாம்.எந்த வகையான முரண்பாட்டின் தனி இயல்பைப் பற்றி ஆராய்ந்தாலும்,இம்முரண்பாடுகள் அனைத்தின் சிறப்பு இயல்புகளைப் பற்றி ஆராயும்போதும்,நாம் மனதில் தோன்றுகிறபடி நடப்பவரானஅகநிலைப்போக்குடையவர்களாகவும்,தன்னிச்சைப்போக்குடையவர்களாகவும் இருக்கக் கூடாது.அவற்றை நாம் பருண்மையான முறையில் பருண்மையாக ஆராய்ந்து அறிய வேண்டும்.பருண்மையான பகுப்பாய்வு இன்றி, எந்தவொரு முரண்பாட்டின் குறிப்பிட்ட தனி இயல்பு பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியாது. லெனின் சொற்களை எப்போதும் நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.அவை “பருண்மையான நிலைமைகளை பருண்மையானமுறையில் பகுத்தாய்வு செய்ய வேண்டும்.” என்பனவாகும்.
இத்தகைய பருண்மையான பகுப்பாய்வுக்கு மிகச் சிறந்த முன்னெடுத்துக்காட்டுகளை முதன் முதலாக நமக்கு வழங்கியவர்கள் மார்க்சும் எங்கெல்சும் தான்.
சமூக வரலாற்று இயக்கத்தை ஆராய்ந்துஅறிவதற்காக பொருட்களில் உள்ள இந்த முரண்பாடு பற்றிய விதியை மார்க்சும் எங்கெல்சும் கையாண்டபோது,உற்பத்திசக்திகளுக்கும் - உற்பத்தி உறவுகளுக்குமிடையே உள்ள முரண்பாட்டை; சுரண்டும் வர்க்கங்களுக்கும் - சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை; இதனைத் தொடர்ந்து இவற்றின் விளைவான பொருளாதார அடித்தளத்திற்கும் மேலடுக்குக்கும் (அரசியல், சித்தாந்தம் முதலானவை) இடையே ஏற்படும் முரண்பாட்டையும் கண்டறிந்தனர். அத்துடன் இம்முரண்பாடுகள் பல்வேறு வர்க்க சமுதாயங்களில் பல்வேறு வகையான சமூகப் புரட்சிக்குத் தவிர்க்கவியலாத படி எவ்வாறு இட்டுச் செல்கின்றன என்பதையும் கண்டுபிடித்தனர்.
முதலாளிய சமுதாயத்தின் பொருளாதார அமைப்பை ஆய்ந்தறிய, இவ்விதியைமார்க்ஸ்கையாண்டபோது, உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் உடமை முறையின் தனியுடமைத் தன்மைக்கும் உள்ள முரண்பாடுதான் இந்த சமுதாயத்தின் அடிப்படை முரண்பாடு என்பதைக்கண்டறிந்தனர். இம்முரண்பாடு எங்கு புலப்படுகிறது? (தனியார் தொழில் அமைப்புகளில் உற்பத்தியானது ஒழுங்கமைப்புக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சமுதாயம் முழுவதிலுமுள்ள உற்பத்தியை எடுத்துக் கொண்டாலோ, அது எவ்வித கட்டுப்பாட்டிற்கும், ஒழுங்கு முறைக்கும், திட்டமிட்ட நோக்குக்கும் உட்படாத தறுதலைப் போக்கு கொண்டிருப்பதைக் காணலாம்) தனியார் முயற்சிகளிலுள்ள முறைப் படுத்தப்பட்ட அமைப்புக்குட்பட்ட உற்பத்தியின் இயல்புக்கும் - சமுதாயத்தின் முழுமையிலுள்ள உற்பத்தியின் தறுதலைப் போக்குமாகிய (அராஜகப் போக்கு) இரண்டுக்குமுள்ள முரண்பாடே, மேற்கூறிய அடிப்படை முரண்பாட்டின் வெளிப்பாடுதான் எனலாம். இந்த அடிப்படை முரண்பாடு வர்க்க உறவுகளில் எவ்வாறு புலப்படுகிறது? முதலாளிய வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையேயுள்ள முரண்பாடு என்ற வடிவத்தில்தான் அது வெளிப்படுகிறது.
உலகில் உள்ள பொருட்கள் அளவற்றவை. அவற்றின் வளர்ச்சியோ எல்லையற்றவை. எனவே, ஒரு நேரத்தில் எங்கும் நிறைந்த முரண்பாடாக காணப்படுவது மற்றொரு நேரத்தில் குறிப்பிட்ட தனி முரண்பாடாக அமைகிறது. இதற்கு மாறாக, ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பான முரண்பாடாக இருப்பது மற்றொரு சூழலில் எங்கும் நிறைந்த முரண்பாடாகிறது. முதலாளிய அமைப்பில் உற்பத்தியின் சமுதாய இயல்பிற்கும், உற்பத்தி சாதனங்களின் தனிவுடமை முறைக்கும்இடையிலுள்ள முரண்பாடு முதலாளியம் தோன்றி வாழ்ந்து, வளர்கிற எல்லா நாடுகளுக்கும் பொதுவானதாகும். முதலாளியத்தைப் பொறுத்தவரை, இது முரண்பாட்டின் எங்கும் நிறைந்த இயல்பாக அமைகிறது. ஆனால், முதலாளியத்தின் இம்முரண்பாடு, வர்க்க சமுதாயத்தின் பொது வளர்ச்சியில் பார்க்கும்போது, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்திற்கு மட்டுமேஉரியதாகிறது என்பது தெளிவு. வர்க்க சமுதாயத்தில் உற்பத்தி சக்திகளுக்கும், உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை முழுமையாக எடுத்துக் கொண்டால், அது முரண்பாட்டின் குறித்த தன்மையாய் அமைகிறது. இருப்பினும் முதலாளிய சமுதாயத்தில் உள்ள இம்முரண்பாடுகள் அனைத்தின் குறித்த தன்மையைப் பகுத்தாய்ந்த மார்க்ஸ், எங்கும் நிறைந்த முரண்பாடு பற்றிய மேலும் ஆழமான, மேலும் நிறைவான, மேலும் முழுமையான தொரு விளக்கமும் வழங்கினார். வர்க்க சமுதாயம் அனைத்துக்கும் பொதுவாக உள்ள முரண்பாட்டின் எங்கும் நிறைந்த தன்மைதான் இது. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள முரண்பாடுதான் இது.
முரண்பாட்டின் குறித்த தன்மை எங்கும் நிறைந்த முரண்பாட்டுடன் ஒன்று சேர்ந்துள்ளது. ஒவ்வொரு பொருளிலும் முரண்பாட்டின் குறித்த தன்மையுடன் எங்கும் நிறைந்த முரண்பாடு இயற்கையாய் அமைந்துள்ளது. எங்கும் நிறைந்த முரண்பாடு முரண்பாட்டின் குறித்த தன்மையில் உறைகிறது. எனவே, நாம் ஒரு பொருளைப்பற்றி ஆராயும்போது குறிப்பிட்டது, எங்கும் நிறைந்தது ஆகிய இரண்டைப் பற்றியும்; அவை ஒன்றோடொன்று கொண்டுள்ள உறவையும் கண்டறிய முனைய வேண்டும். ஆராயப்படும் பொருளுக்குள்ளேயே இருக்கும் குறித்த தனிஇயல்பு, அதன் எங்கும் நிறைந்த இயல்பு ஆகிய இவை இரண்டையும்: இவை ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பையும்; இப்பொருள் தனக்கு வெளியேயுள்ள பல்வேறு பொருட்களுடனும் நிகழ்ச்சிப் போக்குகளுடனும் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள தொடர்பையும் கண்டறிய முனைய வேண்டும்.
“லெனினிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” என்ற புகழ் பெற்ற நூலில் ஸ்டாலின்,லெனினிசத்தின் அடிப்படைகளை விளக்குகிறார். இவ்விளக்கத்தின் போது, லெனினியம் தோன்றியதற்குரிய அனைத்து நிலைமைகளை ஆராய்கிறார். ஏகாதிபத்தியத்தின் கீழ்உச்சக்கட்டத்தை அடைந்த முதலாளிய முரண்பாடுகளை ஆராய்கிறார்.மேலும்,இம்முரண்பாடுகள் பாட்டாளி வர்க்கப் புரட்சியை உடனடிச் செயலுக்குரிய ஒன்றாக மாற்றியதைப் பற்றியும், முதலாளியத்தின் மீது நேரடித் தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்கான சாதகமான நிலைமைகளை உருவாக்கின என்பதையும் எடுத்துக் காட்டினார். மேலும் ரஷ்யாவானது, லெனினியத்தைப் பேணி வளர்த்த தொட்டிலாக உருவானதற்கான காரணங்களையும்: ஜாரிச ரஷ்யாவானது, அப்போது ஏகாதிபத்திய முரண்பாடுகள் அனைத்தினதும் குவிமையமாக ஆகியதற்கான காரணங்களையும்; ரஷ்யப் பாட்டாளி வர்க்கமானது அனைத்துலகப் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகியதற்கான காரணங்களையும் ஆராய்கிறார். இவ்வகையில் ஸ்டாலின் ஏகாதிபத்தியத்தில் உள்ள எங்கும் நிறைந்த முரண்பாட்டின் இயல்பை ஆராய்ந்து லெனினிசம், ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக் காலகட்டத்தின் மார்க்சியமானது ஏன் என்பதையும் விளக்கினார். அதேவேளையில், இந்த சாதாரண முரண்பாட்டிற்குள் ஜாரிச ரஷ்யா ஏகாதிபத்தியத்தின் குறித்த தன்மை இருப்பதை ஆராய்ந்து, பாட்டாளி வர்க்கப் புரட்சிக் கோட்பாடு, செயல் தந்திரங்கள் ஆகியவற்றின் பிறப்பிடமாக ரஷ்யா உருவாவதற்குக் காரணம் என்ன என்பதையும், இந்த முரண்பாட்டின் குறித்த தன்மையில் எங்கும் நிறைந்த முரண்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வானது, முரண்பாட்டின் குறித்த தன்மையையும், எங்கும் நிறைந்த முரண்பாட்டையும் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஒரு முன் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
புறநிலையில் உள்ள நிகழ்ச்சிப் போக்குகளை ஆராய்வதில் இயங்கியலைப் பயன்படுத்துதல் பற்றி மார்க்சும் எங்கெல்சும் சரி, அதேபோல லெனினும் ஸ்டாலினும் சரி நமக்கு என்னஅறிவுறுத்துகிறார்கள்?
நாம் எவ்வகையிலும் அகநிலைப் போக்குடையவர்களாக இருக்கக் கூடாது.தன்னிச்சைப்போக்குடையவர்களாக இருக்கக்கூடாது. இந்த நிகழ்ச்சிப் போக்குகளின் மெய்யான புறநிலை இயக்கத்தில் உள்ள பருண்மையான நிலைமைகளிலிருந்து அவற்றின் பருண்மையான முரண்பாடுகளைக் கண்டறிய வேண்டும். ஒவ்வொரு முரண்பாட்டிலுமுள்ள ஒவ்வொரு கூறின்பருண்மையான நிலைமை களையும் கண்டறிய வேண்டும். முரண்பாடுகள் ஒன்றுக்கொன்று கொண்டுள்ள பருண்மையான உறவுகளையும் காண வேண்டும். இவற்றையே அவர்கள் அறிவுறுத்து கின்றனர். நமதுவறட்டுக் கோட்பாட்டாளர்களின் ஆய்விலோ இத்தகைய கண்ணோட்டம் இடம் பெறவில்லை. எனவே, சரியானது எதனையும் அவர்களால் ஒருபோதும் பெறமுடியாது. நாம் அவர்கள் அடைந்த தோல்விகளிலிருந்து எச்சரிக்கைப் பெறவேண்டும்.
இந்தக் கண்ணோட்டத்தைப் பெறக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆராய்வில் கொள்ளப்படவேண்டிய சரியான கண்ணோட்டம் இதுவொன்றே ஆகும். முரண்பாட்டின் எங்கும் நிறைந்த தன்மைக்கும் முரண்பாட்டின் குறித்த தன்மைக்கும் இடையில் உள்ள உறவுமுறை, முரண்பாட்டின் பொதுப் பண்புக்கும், தனிப்பண்புக்கும் இடையிலுள்ள உறவு முறையாகும். பொதுப் பண்பு என்று நாம் கருதுவது எது? முரண்பாடு எல்லாவற்றிலும் நிலவுகிறது. துவக்கம் முதல் இறுதிவரை ஊடுருவிப் பரவி நிற்கிறது. என்பதுதான். அதாவது இயக்கம், பொருட்கள், நிகழ்ச்சிப் போக்குகள், சிந்தனை - இவை எல்லாவுமே முரண்பாடுதான்.
முரண்பாட்டை மறுப்பது என்பது அனைத்தையும் மறுப்பது ஆகும். இது எல்லாக் காலத்துக்கும், எல்லா நாட்டுக்குமுரிய, விதிவிலக்கற்ற, பொதுமை தழுவிய உண்மையாகும்.
எனவேதான், முரண்பாடு எல்லாவற்றிற்கும் பொதுவானது, முற்றானது என்று நாம் கொள்கிறோம். பொதுப்பண்பு, முரண்பாட்டின் சார்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது.
ஆனால்,இந்தபொதுப்பண்பு ஒவ்வொரு தனிப்பண்பிலும் இருக்கின்றது. தனிப்பண்புஇன்றி பொதுப்பண்பு இருக்கமுடியாது.அனைத்து தனிப்பண்பு களையும் அகற்றினால் என்ன பொதுப்பண்பு மிஞ்சும்? ஒவ்வொரு முரண்பாடும் குறித்ததன்மை கொண்டிருப்பதாலேயே தனிப்பண்பு தோன்றுகிறது. தனிப்பண்புகள் யாவும் நிலைமைக்குட்பட்டவையாகவும், தற்காலிகமானவையாகவும்இருக்கின்றன. ஆகவே,அவை சார்புடையனவா யிருக்கின்றன.
பொதுப்பண்பு, தனிப்பண்பு, முற்றான தன்மை, சார்பு நிலைத்தன்மை, சார்பற்றத் தன்மை என்ற உண்மைப் பொருட்களில் உள்ள முரண்பாடு பற்றிய பிரச்சனையின் செறிவான சாரமாகும். இவற்றைப் புரிந்து கொள்ளத் தவறுவது, இயங்கியலைக் கைவிடுவதற்குச் சமமாகும்.
குறிப்பு:- இந்த கட்டுரையிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது பற்றிய விளக்கத்தை அடுத்துவரும் இலக்கு இதழில் கொண்டுவருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.- தேன்மொழி
++++++++++++