கம்யூனிஸ்டுகளுக்கு தியாக உணர்வு வேண்டும். தன்னலம் கருதாது உழைக்கும் மக்களின் நலன்களை உயர்த்திப் பிடித்து பொதுநல உணர்வோடு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும், தான் என்ற அகம்பாவம் கம்யூனிஸ்டுகளிடம் இருக்கவே கூடாது. கம்யூனிஸ்டுகள் பிறரை மதிக்க வேண்டும், பிறரின் கருத்துக்களை காதுகொடுத்து கேட்க்க வேண்டும், அந்த கருத்துகள் சரியாக இருந்தால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்று பொறுமையாக விளக்க வேண்டும். உழைக்கும் மக்களோடு ஒன்றுபட்டு வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களைக் காட்டிலும் தான் சிறந்த அறிவாளி என்ற மமதை கூடாது. அமைப்பிற்குள் தனக்கு வழங்கப்படும் தலைமை பதவியை தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரமாக கருதி அமைப்புத் தோழர்களின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, மாறாக தனக்கு கொடுக்கப்பட்ட தலைமைப் பதவியை தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பாக எடுத்துக்கொண்டு, அமைப்பிலுள்ள தோழர்களையும் நமக்கு ஆதரவு தரும் மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். அமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதனை பக்குவமாக கையாண்டு முரண்பட்ட கருத்துகளை ஆழமாக இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து அமைப்பு முழுவதும் விவாதிப்பதன் மூலம் முரண்பாடுகளை தீர்த்திட வேண்டும். அப்போது முரண்பாடுகள் ஜனநாயக முறையில் அமைதி வழியில் தீர்க்கப் படுவது மட்டுமல்லாமல் அமைப்பில் செயல்படும் அனைத்து கம்யூனிஸ்டு களுக்கும் மார்க்சிய - லெனினிய போதனைகளை நாம் வழங்க முடியும். இத்தகைய பாடத்தை வீரமிக்க போராட்டத்தை நடத்தி உயிர் விட்டதியாகிகளின் வாழ்க்கையி லிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தியாகம் என்றால் உயிர் தியாகம் மட்டுமே தியாகம் என்று கருதக் கூடாது. தியாகத்தைப் பற்றி மக்கள் கலைமன்ற பாடல் வரிகளில் சொல்வதென்றால், ''குடும்பம் விட்டீர், குழந்தை விட்டீர், அடிமை விலங்கொடிக்க செங்கொடி பிடித்தீர், பாட்டாளி வர்க்க விடுதலைக்கு தோழர்களே நீங்கள் உயிர் கொடுத்தீர்'' இந்த பாடல் வரிகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? பாட்டாளி மக்களின் ஒற்றுமைக் காகவும், அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்று செயல்படுகின்ற ஒவ்வொரு செயல்பாடும் ஒரு தியாகமே. அதேபோல் அவர்கள் நேசிக்கின்ற குடுப்பத்திற்கும், அவர்களது குழந்தைகளுக்கும் கொடுக்கும்.
முக்கியத்துவத்தைக் காட்டிலும், உழைக்கும் மக்களின் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இத்தகைய பண்புள்ளவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியும் என்ற உண்மையை கடந்தகால தியாக கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செயல்படுத்தி காட்டினார்கள். எனினும் கம்யூனிச கொள்கையில் பற்றுக்கொண்ட தோழர்களில் பலர் கம்யூனிச இயக்கத்தில் பங்கு பெற்றாலும் அவர்கள் அவர்களது குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் கம்யூனிச ஆதரவாளர்களாக மட்டுமே இருக்க முடியும். எனினும் அவர்கள் சிறந்த கம்யூனிஸ்டாக மாறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
உயிர்தியாகம் புரிந்த கம்யூனிஸ்டு களால் நடத்தப்பட்ட போர்க்குணமிக்க போராட்டங்களை வன்முறை கொண்டு ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட பின்பு அந்த கம்யூனிச அமைப்புகளுக்கு பொறுப்பிற்கு வந்த தலைவர்களிடம் தியாக கம்யூனிஸ்டுகளிடமிருந்த கம்யூனிச பண்புகள் இல்லை. குறிப்பாக தியாக உணர்வு இல்லை, உழைக்கும் மக்களை நேசிக்கும் பண்பு இல்லை, உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒற்றுமை படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒவ்வொருவரும் தன்னை மிகச்சிறந்த அறிவாளியாக கருதிக் கொண்டு தனக்கென்று பேரும் புகழும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டனர்.
ஒரு நாட்டில் சமூக மாற்றம் நடக்க வேண்டுமானால், அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி, வழிநடத்துவதற்கு ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி தேவை. கம்யூனிஸ்டுகள் பல்வேறு பிரிவாக பல அமைப்புகளில் பிளவுபட்டு இருந்தால் அங்கு சமூக மாற்றம் நடப்பதற்கு வாய்பே இல்லை என்று லெனின் விளக்குகிறார். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டிருப்பது ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமானதே ஆகும். இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி ஆளும் வர்க்கமானது தனது அரசை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் மீது கொடூரமான தாக்குதலை தொடுக்கிறார்கள்.கம்யூனிசகுழுக்களும் அதற்கு எதிராக போராட முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் வாழ்வு மேலும் மேலும் கீழே போய்க்கொண்டிருக்கிறது.
ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்கான திட்டத்தை, பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டியதும், அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை உருவாக்க வேண்டியதும் முதன்மையான கடமையாகும். இத்தகைய ஒரு ஒன்றுபட்ட கட்சி உருவாகிவிட்டால், அந்த கட்சியை உழைக்கும் மக்கள் பின்பற்றினால் சமூக மாற்றமானது எவ்விதமான தடையும் இல்லாமல் நடக்கும். அப்படியே தடைகள் வந்தால் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தடைகள் தகர்க்கப்படும்.
இத்தகைய ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு தடையாக இருப்பது எது? கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைபாடே காரணமாகும். கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளே காரணமாகும். உண்மையிலேயே உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக பாடுபட வேண்டும் என்ற லட்சிய உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள், இதனை உணர வேண்டும். தங்களிடத்தில் குறைகள் உள்ளது என்பதையும், தாங்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன?
தற்போது ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட,பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்த முயற்சியில் ஈடுபடும்போது பல்வேறு விதமான கருத்துகள் விவாதத்திற்கு வரும். அவ்வாறு வரும் கருத்துகளை நாம் புறக்கணிக்கக் கூடாது. மாறாக ஒவ்வொரு கருத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும். எந்த ஒரு கருத்தையும் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து கோட்பாடு அடிப்படையில் அந்த கருத்து தவறு என்று நிருபிக்க வேண்டும். அல்லது அந்த கருத்தை நடைமுறையில் சோதித்துப் பார்த்து அந்த கருத்து தவறு என்று நிருபிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கருத்து கோட்பாடு ரீதியிலோ, நடைமுறையிலோ தவறு என்று நிருபிக்கப்படாதவரை அந்த கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது, அதுவரை அந்த கருத்தானது விவாதத்திற்குரிய கருத்தாகவே கருத வேண்டும். இவ்வாறான அணுகுமுறையின் மூலம் நாம் கருத்து விவாதங்களை நடத்தினால் நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒத்த கருத்தை வந்தடைய முடியும். இதற்கு மாறாக ஒருவரோ, ஒரு அமைப்போ முன்வைக்கும்கருத்தை பரிசீலிக்காமல் அந்த கருத்து தவறானது என்பதை நிருபிக்காமலேயே அராஜகமாக புறக்கணிப்பதால், நம்மால் ஒரு ஒத்த கருத்திற்கு வர முடியாது.
ஒரு தோழர் மற்றொரு தோழரின் மீது விமர்சனம்வைத்தால், விமர்சிக்கப்பட்ட தோழர் அந்த விமர்சனத்தை முதலில் ஏற்றுக்கொண்டு அதனை பரிசீலிக்க வேண்டும். பரிசீலனையின் முடிவில், விமர்சனம் சரியானதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை அவர் களைய வேண்டும். இதற்கு மாறாக அந்த விமர்சனம் தவறாக இருக்குமானால் அந்த விமர்சனம் தவறானது என்பதை விமர்சனத்துக்கு உட்பட்டவர் விளக்க வேண்டும். இந்த முறையை ஒரு கம்யூனிச அமைப்பு முறையாகப் பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக விமர்சனம் வைத்தவருக்கு பதில் சொல்ல மறுத்து விமர்சனம் வைத்தவர் மீதே அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த தோழரைஅமைப்பின் பிற தோழர் களிடமிருந்து தனிமைப்படுத்தும் முறை கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது, இந்த ஜனநாயகத்திற்கு எதிரான முறையை கம்யூனிஸ்டுகள் கைவிட வேண்டும். ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் தலைவரையும் அந்த அமைப்பின் சாதாரண ஊழியர் விமர்சிக்க உரிமை உண்டு. அந்த வகையில் ஒரு ஊழியர் அமைப்பின் தலைவரை விமர்சித்தால், அந்த தலைவர் அந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டும். அந்த விமர்சனமும் தலைவரின் பதிலும் அமைப்பு முழுவதற்கும் சுற்றுக்குவிட வேண்டும். அமைப்பிலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும் அதன் மீது தங்களது கருத்துகளை முன்வைக்க வேண்டும். மேலும் தலைவர் மீதான விமர்சனம் உண்மையாக இருந்தால் தலைவரிடத்திலும் தவறுகள் இருக்கிறது என்ற அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, தலைவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக கடந்த காலங்களில் தலைவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டபோது அந்த விமர்சனமானது கட்சியின் (அமைப்பு) மீதான விமர்சனமாக கருதி விமர்சனம் வைத்தவரை அமைப்பிற்கு எதிரான விரோதி என்றும் சதிகாரர் என்றும் துரோகி என்றும் பலவாறு பிரச்சாரம் செய்து விரட்டியடித்தனர். இதற்கு காரணம் அணிகளிடத்திலுள்ள தலைமை வழி பாடுதான் காரணமாகும். ஆகவே இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான முறையிலிருந்து விடுபட தலைமை வழிபாட்டு முறையை அணிகள் கைவிடுவதற்காக அணிகளிடம் மார்க்சிய லெனினிய அடிப்படை கல்வி புகட்டப்பட வேண்டும்.
உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்காக பாடுபட்டால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நன்கு அறிவார்கள். ''மக்களே வரலாற்றை படைக்கிறார்கள்'' என்று கம்யூனிச தத்துவத்தை உருவாக்கிய காரல்மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியுள்ளார்.ஆகவே மூத்த கம்யூனிஸ்டுகள் தங்களது கடந்தகால அனுபவங்களிலிருந்து, கம்யூனிஸ்டு களிடமுள்ள குறைகளையும், அவர்கள் செய்துகொண்டிருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி, அதனை களைவதற்கான வழிமுறைகளை முன்வைக்க வேண்டும். அதனை கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகளால் அவர்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்வது மட்டுமல்லாது உழைக்கும் மக்களிடையேயும் ஒற்று மையை ஏற்படுத்த முடியும்.
ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், ஈடிணையற்ற புரட்சிகர வீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும்,ஏமாற்றமும்,சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் அரைநூற்றாண்டுக்காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது, பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந்தது. நமது முன்னோடிகளின் வரலாற்று பாடங்களின் கற்று தேறுவதன் நோக்கம் சரியானவற்றை நாம் முன்னெடுத்து செல்லவும் தவறானவற்றை ஒதுக்கி தள்ளவும் நம்மை நாம் வளர்திருக்க வேண்டும். நம்முன் உள்ள பெரிய பிரச்சினை இன்றுவரை அரசு பற்றிய புரிதல் இன்மையும் ஒன்று.
மார்க்ஸ் விளக்கியது போன்று அரசாங்கமென்றால் ஒருவர்க்கம் வேறு ஒரு வர்க்கத்தை அடக்குவதற்கான ஒரு சாதனமாகும். அது வர்க்கங்களுக்கு மேலே, சமுதாயத்திற்கு மேலே உள்ள ஒரு நடுநிலை அமைப்பல்ல. சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை அடிமைத்தனமாக வைத்திருப்பதற்கான ஓர் அடக்குமுறைச் சாதனமே அரசாங்கமாகும். சுரண்டும் வர்க்கங்கள், சுரண்டப்படும் வர்க்கங்களை கீழே வைத்திருப்பதற்காகப் படிப்படியாகக் கட்டப்பட்ட சாதனமே அது. வர்க்க சமுதாயத்தில் ஆட்சி செலுத்துவது உண்மையில் அதுவே. கட்சிகள் வரலாம் போகலாம். ஆனால் சுரண்டும் அமைப்புமுறை இருக்கும்வரை அரசு இயந்திரம் அவ்வாறே இருக்கும். இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், பொலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப் படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது.
அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும்பாதுகாக்க வந்துள்ளார் கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கிய வர்களாக வந்திருக்கின்றார்கள்.அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும்,அவனதுவர்க்கத்தையும் பாதுகாக்கின்றது.அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்கமாட்டார்கள்.
இந்தக் துப்பாக்கிகள் கைமாறும் போதே,சுரண்டப்பட்ட வர்க்கங்கள் புரட்சிகரப் பலாத்காரத்தினால்இந்தக் துப்பாக்கி களைப் பறித்துத் தொழிலாளர்களினதும் அவர்களினது நேச அணிகளினதும் கைகளில் அவற்றை ஒப்படைக்கும் போதே அவர்கள் தம்மை விடுதலை செய்து கொள்வார்கள்.வேறு எந்த மார்க்கமும் இல்லை.மற்றவை யாவும் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றும் ஒரு திட்டமிட்ட முயற்சி அல்லது போலியாகும்.
இந்த உண்மையை மறைப்பதற்கும்,மக்களைக் குழம்பச் செய்து அவர்களின் கவனத்தைத்திசை திருப்புவதற்காகவுமே முதலாளிகளும்மற்றைய சுறுங்கக்கூறின் அரசு பலத்தைப்பெற்று அதைத் தீவிரமாகமாற்ற வேண்டும்.கடந்த கால நிகழ்கால எதிர்கால’நமது அரசியல் போராட்டங்கள் அனைத்தும் இப்பிரச்சினையை மையமாகக்கொண்டு அமைந்ததே.
காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடி வருகிறது ஆனால் கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடி பணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்குஒத்துப்போகவும் போராடுகிறார் (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95).உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்ககட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும்தேர்ச்சிபெற வேண்டும் வேறுபட்ட வடிவங்களை ஒன்றிணைக் கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்குஏற்பஒரு வடிவத்தி லிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான பாராளுமன்ற முறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும் தேர்ச்சிபெற்று இருந்தால்தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப்பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய வாதிகளாய் நாம் எப்போதும் கூறுகிறோம்.குறிப்பான தனித்தன்மை களுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.லெனின் தனது விமர்சனத்தை சரியாகவே சுட்டிக்காட்டிய படி காவுட்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் முதலாளித்துவ சட்டவாதத்தால் இழிவுக்கும் அவமதிப்பும் உள்ளாக்கப் பட்டார்கள் தற்போதைய போலீஸ் சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மொந்தை கூழுக்கு பாட்டாளி வர்க்கத்தின் புரட்சி செய்யும் உரிமை விற்கப்பட்டு விட்டது (லெனின் இரண்டாம் அகிலத்தின் தகர்வு தொகுதி 18 பக்கம் 314 ).
திரிப்புவாதிகள் பல்வேறு போராட்ட வடிவங்கள் குறித்து பேசினாலும் உண்மையில் அவர்கள் போராட்ட வடிவத்தை மாற்றுவது என்ற பெயரில் சட்டவாதத்தில் ஊன்றிநின்று பாட்டாளி வர்க்க புரட்சியின் குறிக்கோளையே கைவிட்டுவிடுகிறார்கள் இன்று லெனினியதிற்கு பதிலாக காவுட்ஸ்கியத்தை பின்பற்றுவது தான் இது காட்டுகிறது.
திருத்தல்வாதிகள் லெனினுடைய "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு" எனும் மாபெரும் படைப்பினை தங்களின் தவறான பாதையை நியாயப்படுத்துவதற்காக பயன் படுத்தி மார்க்சிய லெனினியத்தை குறுக்கி பயன்படுத்தி வருகின்றனர்.
உண்மையில் "இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவ கோளாறு" என்ற நூலில் சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் முதன்மையான எதிரி அந்த சமயத்தில் காவுட்ஸ்கிய வகைப் பட்ட சந்தர்ப்பவாதம் என்பதை குறிப்பிட்டு இருந்தார் லெனின். மேலும் அவர் திருத்தல் வாதத்திலிருந்து முழுமையாக முறியடித்துக் கொள்ளாத வரை புரட்சிகரப் போர் தந்திரங்கள் தேர்ச்சி பெறுவது எப்படி என்று பேச்சுக்கே இடம் இருக்க முடியாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். இன்னொறு போக்கு ட்ராட்ஸ்கியம், பல்வேறு பிரச்சனைகளை பல்வேறு விதமாக வெளிப்படுகிறது ட்ராட்ஸ்கியம்; அது அடிக்கடி "தீவிர இடதுசாரி" முகமூடி அணிந்து கொள்கிறது;ஆனால் அதன் சாரம் புரட்சியை எதிர்ப்பதும் புரட்சியை மறுப்பதுமேயாகும்.
பாட்டாளி வர்க்க புரட்சியையும் பட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் ட்ராட்ஸ்கியம் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதமும் உண்மையில் இரண்டும் ஒன்றாக இருக்கின்றன. அதனால்தான் ஸ்டாலின் திரும்பத் திரும்ப ட்ராட்ஸ்கியத்தை ஒருவகையில் மென்ஸ் விஸயம் என்றும் காவுட்ஸ்கியதியம் என்றும் சமூக ஜனநாயகம் என்றும் மேலும் எதிர் புரட்சிகர முதலாளிகளின் முன்னேறிய பிரிவு என்றும் கூறினார். திருத்தல்வாதம் சாரத்தில் புரட்சி எதிர்ப்பதாகவும் மறுப்பதாகவும் இருக்கிறது. திருத்தலவாதமும் காவுட்ஸ்கியமும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்பது மட்டுமல்ல; புரட்சி எதிர்ப்பதில் ட்ராட்ஸியத்தோடு ஒன்று சேர்கிறது என்பது தர்க்கரீதியான முடிவு .
ஓடுகாலி காவுட்ஸ்கி பற்றி தனது விமர்சினத்தில் லெனின் கூறினார் " 1870களில் மார்க்ஸ் இங்கிலாந்தில் அமெரிக்க போன்ற நாடுகளில் சோசலிசம் சமாதானம் மாற்றம் பற்றிய சாத்திபாட்டை ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும் சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள் களையும் குறிப்புகளையும் வைத்துக் கொண்டு செப்புவித்தைகாட்டுகிறஏமாற்றுப்பேர்வழிகளின் வேலையாகும் ,மார்க்ஸ்முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார் இரண்டாவதாக அப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியம் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்க வில்லை"( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).
தனது அடிப்படை பொருளாதாரக் குணாம்சங்களின் காரணமாக ஏகாதிபத்தி யமானது சமாதானம் மற்றும் சுதந்திரத்தின் மீதான அதன் குறைவான பற்றுதலேனாலும் ராணுவ வல்லாட்ச்சி கொள்கையின் அனைத்தும் தெளிவு வளர்ச்சியின் மீதான அதன் அதிகபட்ச பற்றுதலினாலும் பிரித்தாளப்படுகிறது என்று லெனின் கூறினார். சமாதான முறை மாற்றமும் அல்லது பலாத்கார முறை மாற்றம் என்ற கேள்வி பற்றிய விவாதத்தில் இதை கவனிக்க தவறுவது என்பது முதலாளித் துவத்தின் ஒரு சாதாரண அல்லது தோட்டக் காரனை போன்று அடிவருடியின் நிலைக் குத் தாழ்ந்து விடுவதாகும்" ( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 357).
1917 அக்டோபரில் லெனின் போல்ஷ்விக் கட்சியின் தொழிலாளர்கள் படைவீரர்கள் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு தீர்மானகரமாக தலைமை தாங்கி அரசு அதிகாரத்தை கைப்பற்றினார்கள். சிலர் கூறுவதைப் போல் புரட்சியில் ரத்தம் சிந்தாமல் மாற்றம் அதாவது புரட்சி கிட்டத்தட்ட சமாதான முறையில் சாதிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள் அவர்களுடைய கூற்றுகள் யாவும் வரலாற்று உண்மைகளுக்கு மாறுபட்டவையாகும் உலகத்தின் முதல் சோசலிச அரசின் உருவாக்குவதற்காக ரத்தம் சிந்திய புரட்சிகர தியாகிகளுக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?.
உலக வரலாறு இதுவரை முதலாளித்து வத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம் தானாகவே நடந்தேறியதாக எந்த முன்மாதிரியும் உருவாகவில்லை என்பது வரலாற்று உண்மை …
இந்திய கம்யூனிச அமைப்புகள் கடந்த காலத்தில் பல தவறுகள் செய்துள்ளது. அந்த தவறுகளை இப்போதும் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றன. இந்த தவறுகளை ஒவ்வொன்றாக பரிசீலித்து, அந்த தவறுகளை களைந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நடைமுறையில் செயல்படுவதன் மூலமே கம்யூனிச இயக்கமானது மக்களின் செல்வாக்கை பெற்று வளரும்.
கம்யூனிச அமைப்பில் சேர்ந்துவிட்டால் அவர் உடனடியாக புனிதமானவராக மாறிவிட மாட்டார். சமுகத்தில் மக்களிடையேயுள்ள தவறான கருத்துகள், சிந்தனைமுறை, பழக்கவழக்கங்களை நீண்டகாலம் பின்பற்றி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகியே இருப்பார். இந்த தீய பழக்கவழக்கங்களிலிருந்து அவர் உடனடியாக மீண்டுவருவது மிகவும் சிரமமானதேயாகும். ஆகவே கம்யூனிச அமைப்பிலுள்ளவர்கள் அனைவரும் தவறே செய்யாத உத்தமர்கள் என்று கருதுவது தவறானதாகும். கம்யூனிஸ்டுகளும் தவறு செய்வார்கள் என்ற உண்மையை நாம் எப்போதும் மறுக்கக் கூடாது.
இவ்வாறு கம்யூனிச அமைப்பில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் அவர்கள் தலைவர்களாகக்கூட இருக்கலாம். அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் தவறு செய்யும் போது, அந்த தவறை கம்யூனிஸ்டு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் சுட்டிக்காட்டி விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கும் அந்த உரிமை உண்டு என்றார், மாவோ. ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் மக்களின் சேவகர்கள். ஆகவே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இதற்கு மாறாக மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் ஆதிக்க சக்திகள் அல்ல, கம்யூனிஸ்டுகள் என்ற கருத்தை மாவோ நமக்கு தெளிவாகச் சொல்லிஉள்ளார். இந்த கருத்தை ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கம்யூனிஸ்டு தனக்காக மட்டும் பாடுபடக் கூடியவர் இல்லை. பரந்துபட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்தான் கம்யூனிஸ்டாக இருக்க முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டிடம் தவறுகளும் குறைகளும் இருக்குமானால் அது உழைக்கும் மக்களையும் பாதிக்கும். ஆகவே உழைக்கும் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தன்னிடமுள்ள குறைகளை பிற தோழர்கள் சுட்டிக் காட்டினால் உடனடியாக களைந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். அதற்குத்தான்கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை அமைப்பு முறையாக கம்யூனிஸ்டுகள் பின்பற்றுகிறார்கள். நிலவுகின்றதனிவுடமை சமுதாயத்தில், தனிநபரின் அறிவு மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் அறிவு மற்றும் திறமை பெற்றவராக இருந்தால் பொருளாதாரரீதியில் செல்வத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், அவ்வாறு அறிவு, திறமை இல்லாதவரால் செல்வந்தராக ஆக முடியாது என்றும் அவர் வறுமையில் வாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்து இந்த தனிவுடமை சமூகத்தில் பரவலாக விதைக்கப் பட்டுள்ளது. இந்த சமூகத்தில் வாழ்ந்துவரும் குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள் இந்த கருத்துக்கு பலியாகி ஈகோ என்று சொல்லப்படும் தனிமனித அகம்பாவப் பண்பிற்கு ஆளாகிறார்கள். இவ்வாறு தனிமனித அகம்பாவப் பண்பு கொண்டவர்கள் கம்யூனிச அமைப்பிற்குள் சேர்ந்து செல்வாக்கு பெற்ற கம்யூனிஸ்டு களாகவும் இருக்கிறார்கள்.
இவர்களில் பலர், தான் சொல்வதெல்லாம் சரியானது என்றும், தான் தவறே செய்யமாட்டோம் என்று கருதுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினால் இவர்கள் அதனை பொருட்படுத் துவதில்லை. இவர் மீது வைக்கும் விமர்சங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. மாறாகவிமர்சனம் வைத்தவரிடமிருந்து உறவை துண்டித்துக்கொள்கிறார்கள். அமைப்பிற்குள் இவர்களுக்கு செல்வாக்கு இருக்குமானால் அதனை பயன்படுத்தி இவர் மீது விமர்சனம் வைத்தவரை தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டி விடுகிறார்கள்.
இத்தகைய அகம்பாவம் பிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகளின் அமைப்புக் கொள்கையான விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை பின்பற்ற மாட்டார்கள் என்பது நமது அனுபவமாக உள்ளது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் உள்ள தோழர்களிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஏற்படும். ஒரு தோழரின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அவர் முகம் கோணாமல் அந்த விமர்சனத்திற்கு பதில் அளித்தால் அந்த தோழரின் மீது மற்ற தோழர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், அந்த தோழரின் மீது நம்பிக்கை வளரும். ஆகவே விமர்சனம், சுயவிமர்சன முறையை பின்பற்றுவதன் மூலம் கம்யூனிச அமைப்பின் மீது அணிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து அமைப்பிற்குள் ஒற்றுமை பலப்படும். ஆனால் கடந்த காலங்களில் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சனமுறை பின்பற்றப் படவில்லை. இதற்குத் தடையாக அமைப்பிற்குள்இருந்த குட்டி முதலாளிய தான் என்ற அகம்பாவம் பிடித்த நபர்களே காரணமாகும். ஆகவேஇன்றைய கம்யூனிஸ்டுகளிடம் தான் என்ற அகம்பாவப் பண்பு இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும்.
கம்யூனிஸ சமுதாயத்தை உண்மையில் தோற்றுவிக்கும் பணியை எதிர் நோக்க போகிறவர்கள் இளைஞர்களே எப்படி எனில், முதலாளித்துவ சமுதாயத்தில் வளர்ந்து ஆளான உழைப்பாளி மக்கள் தலைமுறையினர் அதிகம் செய்யக் கூடியதெல்லாம் சுரண்டலின் அடிப்படையில் நிறுவப்பட்ட பழைய முதலாளித்துவ வாழ்க்கை முறையின் அடித்தளங்களை அழித்திடும் பணியை நிறைவேற்றுவது தான் என்பது தெளிவு.
மனிதனை மனிதன் சுரண்டுவதன் அடிப்படையில் ஆன உறவுகள் இல்லாமல் போய்விடும் சூழ்நிலையில் வேலை செய்யத் தொடங்கும் ஒரு தலைமுறையினர்தான் இந்த அடித்தளத்தின்மீது கட்டியெழுப்ப கூடியவர்கள் இளைஞர்களுக்கான பயிற்சியும் போதனையும் கல்வியும் பழைய சமுதாயம் நமக்கு விட்டுச் சென்றுள்ளவற்றில் இருந்தே தொடங்க வேண்டும். பழைய சமுதாயம் நமக்கு விட்டுச் சென்றுள்ள அறிவு நிறுவன அமைப்புகள் ஏற்பாடுகள் இவற்றின் முழு மொத்தத்தையும் அடிப்படையாகக் கொண்டுதான் இந்த மானுட சக்திகள் சாதனங்கள் ஆகியவற்றின் கையிருப்பு களை பயன்படுத்தி கொள்வதன் மூலம் தான் கம்யூனிசத்தை கட்டி அமைக்க முடியும். இளைஞர்களுக்கான பயிற்சியும் போதனையும் ஒழுங்கமைக் கும் தீவிர முறையில் திருத்தி அமைத்தால்தான் இளையதலை முறையினது முயற்சியின் பயனாய் பழைய சமுதாயம் போன்றல்லாத ஒரு சமுதாயத்தை தோற்றுவிக்கும்படி அதாவது நாம் கம்யூனிஸ்ட் சமுதாயத்தை தோற்று விக்கும் படி உத்திரவாதம் செய்யப்பட முடியும்.
கம்யூனிசத்திற்கு முன்னேறிச் செல்ல விரும்பும் அனைவரும் கம்யூனிஸத்தை கற்றறிய வேண்டும்.
மதங்களைப் பற்றிய நவீன விஞ்ஞான விமர்சர்னகளை சற்று உற்று நோக்குங்கள். கல்வி அறிவுடைய இந்த முதலாளித்து எழுத்தாளர்கள் மத மூடநம்பிக்கைகளைப் பற்றிய தமது மறுப்புரைகளுடன் கூட "தான் முதலாளி வர்க்கத்தின் அடிமையாகவே, சமய சித்தாந்தத்தின் பட்டம் பெற்ற அடிவருடியாகவே"இருப்பதைஅம்பலமாகி காட்டும்வாதங்கள் அநேகமாக அவர்களின் எழுத்தின் ஊடாக சேர்ந்து அளிக்கின்றனர்.
இவர்கள் கருத்துமுதல்வாதம் பொருள் முதலாகும் ஆகிய இரண்டின் கடை கோடிநிலைகளுக்கும் தான் மேம்பட்டவர் என்பதாய் நகைத்தக்கதான மிகவும் பிற்போகான முறையில் உரிமை கொண்டாடுகின்றனர். உழைப்பாளி மக்களை கசக்கிப் பிழிந்து பெறப்பட்ட லாபங்களில்இருந்துமதத்தின்ஆதரவுக்காக உலகெங்கும் கோடான கோடி பணம் செலவிடும் ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு தொண்டுஊழியம் புரிவதே இவர்கள் பணி.
முதலாளி வர்க்கத்தின் முற்போக்குப் பிரிவுகளுடன் ஓரளவுக்கு கூட்டணி கொண்டு செயல்படுவது போலவே கம்யூனிஸ்ட்களிடமும் முரண் அற்ற பொருள்முதல்வாதிகளுக்கும் எல்லோருக்கும் இக்காலத்து முதலாளி வர்க்கத்தின் வர்க்க நலன்களும் வர்க்க நிறுவனங்களும் மத நிறுவனங்களுடன் மதப் பிரச்சார நிறுவனங்களுடன் எப்படி இணைந்திருக்க வேண்டும் என்பதை காட்டும் மதத்துக்கும் மூலதனத்துக்கும் அதிகாரப்பூர்வமான அரசு வழியிலான இணைப்பு எவ்வளவு வெளிப்படையாக தெரிகிறது என்பன பற்றி எல்லா விவரங்களையும் நவீன ஜனநாயகத்தின் பெயரில் முதலாளி வர்க்கத்துக்கு ஏதெல்லாம் அனுகூலமாய் இருக்கிறதோ அதை அதாவது மிகவும் பிற்போக்கான கருத்துகளையும் மதத்தையும் மௌடீகத்தையும் சுரண்டலாளர்களை பேணி காப்பதையும் பின்பற்றி உபதேசிப்பதற்கான சுதந்திரமே ஆகும்.
கம்யூனிசத்தை கற்றறிவீர். கம்யூனிஸ்ட் பாடப்புத்தங்கிலும் பிரசுரங்களிலும் நூல்களிலும் அடங்கியுள்ள ஒட்டுமொத்த அறிவை கிரகித்துக் கொள்வதே கம்யூனிசத்தை கற்றறிவதாகும் என்பது இயல்பாய் ஒருவர் மனதில் முதலில் தோன்றும் எண்ணம் ஆனால் கம்யூனிசத்தை பயிலுதல் என்பதற்கு இவ்விதம் இலக்கணம் கூறுவதானது மிக மிஞ்சி கொச்சைப்படுத்துவதும் குறைபடுத்துவதுமே ஆகும்.
கம்யூனிஸ்டுகள் புத்தகங்களின் பிரசுரங்களிலும் இருப்பதை கிரகிப்பது கம்யூனிசம்பயிலுவதாய்இருப்பின். கம்யூனிஸ்ட் வாசகம் பேசி வித்தை காட்டுவோரை அல்லது வாய்சவடால் காரர்களை எளிதில் நாம் நிறைய பெற்றுக் கொண்டு விடலாம் பல சந்தர்ப்பங்களில் இதற்கு தீங்கே ஏற்படும். ஏனெனில் இத்தகையோர் கம்யூனிஸ்ட் புத்தகங்களிலும் பிரசுரங்களிலும் எடுத்துரைக்கப்பட்டதை படித்து தெரிந்து கொண்டபின் பல்வேறு அறிவுத் துறைகளை சேர்த்து இணைத்திடும் திறன் அற்றவர்களாக இருப்பார். கம்யூனிசத்திற்கு உண்மையில் அவசியமாய் உள்ள முறையில் இவர்களால் செயல்பட முடியாது.
புத்தகங்களுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கு இடையிலான ஆதாலபாதாள வேறுபாடு பழைய முதலாளித்துவ சமூகம்நமக்கு விட்டுச் சென்றுள்ள பெரும் கேடுகளிலும் இன்னல்களிலும் ஒன்றாகும்.
எனவே கம்யூனிசத்தைப் பற்றிய ஏட்டறிவு கிரகித்துக் கொள்வதுடன் நின்று விடுவது மிகப்பெரும் தவறாகும்
நமது பேச்சுகளும் கட்டுரைகளும் எல்லா துறைகளிலும் நமது அன்றாட வேலைகளுடன் இணைந்து இருக்கின்றன வேலையில் ஈடுபடாமல் போராட்டம் இல்லாமல் பிரசுரங்களில் இருந்தும் நூல்களில் இருந்தும் கம்யூனிசத்தை குறித்து பெறப்பட்ட ஏட்டு அறிவு சிறிதும் பயனற்றதாகும். தத்துவத்துக்கும் நடைமுறைக்குமான பழைய முதலாளித்துவ கேடுகெட்ட இயல்பை தொடர்ந்து நீடிக்கவே செய்யும்
கோடிக்கணக்கான மக்கள் நவீன கால சமுதாயம் அனைத்திலும் இருளிலும் அறியாமையிலும் மூடநம்பிக்கையிலும் வதைப்படும்படி இருத்தப்பட்டு இருக்கும் இவர்கள் கலப்பற்ற தூய மார்க்சிய போதனை என்னும் நேரான பாதையில் தான் இந்த இருளில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியும் என நினைப்பது மார்க்சியவாதியாக ஒருவர் புரியக்கூடிய மிகப்பெரிய மிகவும் கடும் தவறாகிவிடும். இந்த வெகுஜனங்களை நாட்டம் கொள்ளும்படி செய்வதற் காகவும் மதத்தால் மயக்குண்ட நிலையில் இருக்கும் இவர்களை விழித்தெழ செய்வதற்காகவும் பல்வேறு வகைப்பட்ட கோணங்களில் இருந்தும் பல்வேறு வகைப்பட்ட வழியில் இருந்தும் இவர்களை உசுப்பி விடுவதற்காகவும் வாழ்க்கையின் மிகப் பல்வேறு துறைகளில் இருந்து உண்மைகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் சாத்தியமான எல்லா வழிகளிலும் இவர்களை அணுகி ஆக வேண்டும். தொடரும்… சிபி