இலக்கு இதழ் கட்டுரைகள் மீதான விமர்சனமும் பதிலும்

 இலக்கு இணைய இதழ் 01 ஜீன் 2022 அன்று தொடங்கினோம். இதுவரை  நான்கு இணைய இதழ்களை வெளியிட்டுள்ளோம். அதன் மீதான நேரடி மறைமுக விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் முகமாகவும் மற்றும் "இலக்கு" இதழின் நோக்கத்தையும் தெரிவித்துக் கொண்டு மேலே செல்வோம் தோழர்களே.

இலக்கு இணைய இதழின்  நோக்கம்:- இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதாரகலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும்நடை முறை நீரை ஊற்றுவதும்வளர்ப்பதும்மார்க்சிய லெனினிய அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”.

இதில் முதற்கண் புரட்சிகர அறிவு ஜீவிகளோடு விவாதிப்பதும்,சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்க்கும் வகையில் புரிய வைப்பதுமேயாகும்.

"இலக்கு” இதழில் தங்களது விமர்சனங்களை விவாதங்களை மார்க்சிய- லெனினிய முறையில் வைக்கும் படி அழைக்கும் அதே நேரத்தில் தங்களின் நிலையை  சரிப்படுத்துவதோடு மற்ற தோழர்களின் அறிவு மேலும் செழுமைப்படுத்தப் படுவதுடன் புரட்சிகர சக்திகளின் மீதான விமர்சனத்தின் அவசியம் தவறுகளில்  இருந்து விடுபட்டு மீண்டும் தவறுகள் வராத முறையில் இருப்பதற்காகவே  ஆகும்அதாவது “மருத்துவர் ஒருவர் நோய்க்கு சிகிச்சை அளித்தல் என்பதுநோயாளியைக் காப்பாற்றுவதே அன்றி அவர் இறப்பதற்கு சிகிச்சை அளிப்பதல்ல”.

பாட்டாளி வர்க்கத்தின் அரசியல்பொருளாதாரம்தத்துவம் ஆகிய துறைகளில்  மார்க்சிய லெனினிய வாதிகளை வளர்க்க முயற்சிப்போம்சமூக நிகழ்வுகளையும்மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தில் விவாதித்து சரியான வழிமுறையை  முன்வைத்து பேசுவோம்.

ஆக தோழர்களே நமது நான்கு இதழில் பேசப் பட்ட கருத்துகள் மீது நேரடியாக நமது இணையத்தில் கேட்க்காத கேள்விகள்தான் அவை அவர்களின் நல்னை சார்ந்து எழுப்பட்டுள்ளதால் அதனை விமர்சிப்பதன மூலம் அவர்களின் மார்க்சிய விரோத போக்கை அம்பலமாகும், சிலர் புரிதல் இன்மையில் உள்ளனர் மேலும் சிலரோ அவர்களின் கருத்தை வலிந்து திணிக்க நினைக்கின்றனர்.

அதனால் கட்டுரை ஆசிரியரின் கருத்தே சரியென்று வாதிக்க வரவில்லை சரியான கோணத்தில் நீங்களும் வாதித்தால் எமது தவறுகளை களைந்து சரியானவற்றை புரிந்துக் கொள்ள உதவும் என்பதே எமது வாதம் தோழர்களே.

இதுவரை இலக்கு இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு:- 

1. மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் - செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல் குறித்து மத்தியக் குழுவின் வழிகாட்டுதல் மாவோ.

2. மார்க்சியம் தோற்றம் வளர்ச்சி

3. இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம்

4. சோசலிசப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மறுக்கும் மார்க்சியலெனினியத்திற்கு எதிரான கருத்திற்கு எதிராகப் போராடுவோம்!.

5 .கலை இலக்கியம்

6. சமூக வளர்ச்சிக்கு மார்க்சியத்தின் திறவுகோள்

7. இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு-1

8. வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடம் - லெனின்

9. இயந்திர மனிதன் (Robot) உற்பத்தியில் ஈடுபடும்போது உபரி

   மதிப்பு படைக்கப்படுகிறதா? இல்லையா?.-அ.கா.ஈஸ்வரன்

10. காரல் மார்க்ஸின் பண்டமும், க்ரிப்டோ கரன்ஸியும் – சத்யா

11. பரிவர்த்தனை – சத்யா

12. சினிமா, சின்னதிரை, செல்போன் சீரழிவு கலச்சாரத்தை

     பரப்பும் ஆளும் வர்க்க கருவிகளாக

13. மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம்-பிரேமசந்திரன்

14. சீர்திருத்தவாதம் குறித்து லெனின், மற்றும் இந்தியாவில்

சீர்திருத்தங்களின் விளைவும்-தேன்மொழி

15. மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்)

16. விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்

17.  திரைபட விமர்சனம் 2000

இத்தனை கட்டுரைகளும் தொடர்களாகவோ அல்லது ஒரே இதழோடோ முடிந்து விட்டாலும் இந்த பகுதிகளை தொகுத்து PDF வடிவில் இங்கே இதே பகுதியில் வெளியிட உத்தேசித்துள்ளோம். படிக்க ஏதுவாக இருக்கும் என்பதனால். இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் பகுதியையும் மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்) கட்டுரையையும் தோழர் அ.கா.ஈஸ்வரன் எழுதிக் கொண்டுள்ளார். அவை முடிந்த பின் அவரின் அனுமதியோடு வெளியிடுவோம்.

நாம் பேச வந்தவை விமர்சனம் குறித்தல்லவா சரி அதனை பார்ப்போம்.

மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் - செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல் குறித்து மத்தியக் குழுவின் வழிகாட்டுதல் -மாவோ. இந்த கட்டுரைக்கு முன்னுரையாக இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மார்க்சிய லெனினியவாதிகள் பல குழுக்களாக பிளவுபட்டு சிதைந்து இருக்கிறார்கள். அதற்கு முதன்மையான காரணம் அந்த குழுக்களின் தலைவர்களிடமுள்ள குட்டிமுதலாளித்துவ பண்பான தான் என்ற அகம்பாவம்தான். தமிழகத்திலுள்ள குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்களிடம் இந்த பண்பு இயல்பாக காணப்படுகிறது. இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களிலிருந்து வருபவர்கள்தான் இந்த குழுக்களில் தலைவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் இயல்பாக உள்ள இந்த குட்டிமுதலாளித்துவ பண்பை கைவிட்டு பாட்டாளி வர்க்க பண்பை வளர்த்துக்கொள்வதன் மூலமாகவும் பிறரிடமிருந்தும் பிற குழுக்களிலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து செயல்படுவதன் மூலமே பாட்டாளிவர்க்க முன்னணியில் பலரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பொதுக்கொள்கையை உருவாக்கி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட முடியும் என்பதை வாசகர்களுக்கு உணர்த்துவதற்காகவே மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி ஒன்பதிலிருந்து இந்த கட்டுரையை தொடர் கட்டுரையாக இலக்கு கொண்டுவருகிறது. இவை விமர்சிக்கப் படவேயில்லை.

மார்க்சியம் தோற்றம் வளர்ச்சி கட்டுரையில்"பொருள், சிந்தனை இரண்டில் பொருள் முதன்மை வகிப்பதுபோல, நடைமுறை, தத்துவம் இரண்டில், நடைமுறை முதன்மையானது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், (சிந்தனை அல்லது) மனம் பொருளின் அதியுயர்ந்த வடிவமாக விளங்கு வதுபோல, தத்துவம் கூட நடைமுறையிலிருந்தே எழுகின்றது. இருந்தும், தத்துவத்தின் சரி தவறை, மீண்டும் செழுமைப்படுத்துகின்ற நடைமுறையில் தான் பரீட்சிக்கப்பட முடியும்".

ஆகவே, தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது”.

ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது. சொந்த நாட்டின் ஸ்தூலமான நடைமுறையைப் படிக்க மறுக்கும் அதேவேளையில், தத்துவத்தின் முக்கியத்துவத்தை யார் மிகைப்படுத்திக் கூறுகிறாரோ, அவர் வறட்டுவாதியாவர். யார் (அனுபவத்தில்) நடைமுறையில் மாத்திரம் அக்கறை செலுத்தி தத்துவத்தின் முக்கி யத்துவத்தை மறக்கிறாரோ, அவர் அனுபவவாதியாவர். இதில் நாம் கற்றுக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்ச்சி இன்னும் ஆழப்படுத்த வேண்டியுள்ளது என்பதே.

இந்தியத் தத்துவம் ஒரு சிறிய அறிமுகம் இந்தியத் தத்துவங்கள் பெரும்பாலும் மதத்துடன் இணைந்தே காணப்படுகிறது. ஏன் என்றால் மதத்தின் தலைவர்களே தத்துவத்தின் தலைவர்களாக இருக்கின்றனர். மத்துவர் விவரித்த மதம் வைணவம், தத்துவம் துவைதம். ராமானுஜர் விவரித்த மதம் வைணவம், தத்துவம் விசிட்டாத்வைதம், ஆதி சங்கரின் மதம் வைதீகம் (சனாதனம்), தத்துவம் அத்வைதம். அதே போல புத்த மதத்தை உருவாக்கியவர் புத்தர் அவரது தத்துவம் தம்மம். மகாவீரரும் சமண (ஜைனம்) மதம், தத்துவம் ஆகியவற்றை உருவாக்கியவர். சைவத்திலும் மதமும் தத்துவமும் இணைந்தே காணப்படுகிறது. சைவத்தில் மத இலக்கியங்களை சைவ தோத்திரங்கள் என்றும் தத்துவ இலக்கியங்களை சைவ சித்தாந்தம் என்று கூறப்படுகிறது. என தேடுதலில் நமக்கு புதிய தரிசனத்தை தருகிறார் கட்டுரையாசிரியர்.

சோசலிசப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டை மறுக்கும் மார்க்சியலெனினியத்திற்கு எதிரான கருத்திற்கு எதிராகப் போராடுவோம்!.

"இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், சோவியத் யூனியனும் அணுக் குண்டு கண்டு தயாரித்த பின்னர், அன்றைய உலக ஏகாதிபத்தியங்கள் முதல் உள்ளூர் முதலாளிகள், நிலப்பிரபு வர்க்கங்கள், அதிகார வர்க்கங்கள் விரைவாக அழியாமல் இருப்பதை தடுக்க வேண்டுமானால், மார்க்சீய சோசலிச பொருளாதாரத்தை உள்வாங்கி மாறியாக வேண்டிய கட்டாயம் உலகப்பழைய ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்பட்டது..

அதனால், வேறு வழியின்றி மார்க்சீயப் பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளின் தன்மைக் கேற்பமாற்றியமைத்து, புதிய வகைகலப்பு உற்பத்திமுறைக்கு மாறிவிட்டனர் பழையஏகாதிபத்தியங்கள்.

இவ்வாறு மாறுவதற்கு, அறிவியல் தொழில் நுட்பத்தின் வேகமான வளர்ச்சியும், அதனால் தற்செயலாக ஏற்பட்ட, அதிபயங்கர அணுவாயுத கண்டுபிடிப்பும் பேருதவி செய்தது.

இந்த சோசலிசமும் முதலாளித்துவமும் கலந்த, புதியகலப்பு வகை உற்பத்திமுறை, சோசலிச பொருளாதாரத்தின் போட்டியற்ற, திட்டமிட்ட உற்பத்திமுறையை விட முன்னேறியது".

மேலே காணப்படும் கருத்தை முன்வைத்து அதுதான் இன்றைய மார்க்சியம் என்ற கருத்தை பரப்பி வருகிறார்கள். இந்த கருத்து தவறானது என்ற எமது பதிலை முன்வைத்து விவாதிப்பது எமது கடமை என்று கருதிஇலக்குஇங்கே எமது கருத்தை விவாதத்திற்காக முன்வைக்கிறது.

ஏகாதிபத்தியங்களுக்கு இடையே காலனிகளை கைப்பற்று வதற்காகவும், செல்வாக்கு மண்டலங்களை அடைவதற்காகவும் முதல் உலக யுத்தம் நடத்தப்பட்டது. அந்த யுத்தத்தைப் பயன்படுத்தி ரஷ்யாவில் புரட்சியை நடத்தி பாட்டாளி வர்க்கம் தனது முதல் சோவியத்துபாட்டாளிவர்க்க அரசை உருவாக்கியது.

அதற்குப்பின்பு சோசலிச சோவியத்து அரசை ஒழித்துக்கட்டவும் உலக ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் உலகை மறுபங்கீடு செய்வதற்காகவும் இரண்டாவது உலகயுத்தத்தை ஏகாதிபத்தியவாதிகள் நடத்தினார்கள். அந்த யுத்தத்திற்குப் பிறகு சீனாவிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஏற்படுத்தப்பட்டது

கம்யூனிஸ்டுகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பிரிட்டீஷ் முதலாளித்துவ பொருளியலாலரான கீன்ஸ் என்பவரால் முன்வைக்கப்பட்ட கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ஏகாதிபத்தியவாதிகள் முடிவு செய்து அதனை இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு முன்பாகவே அவர்களது நாட்டில் செயல்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போருக்குப்பின்பு அதே கீன்சியக் கொள்கையை அவர்களது நாட்டில் மட்டுமல்ல, அவர்களது செல்வாக்கிலுள்ள அவர்களைச் சார்ந்து செயல்படும் புதியகாலனி மற்றும் சார்புநாடுகளிலும் செயல்படுத்தினர். இவ்வாறு ஏகாதிபத்தியவாதிகளால் செயல்படுத்திய கொள்கையையே " மார்க்சீயப் பொருளாதாரத்தை உள்வாங்கி, முதலாளிகளின் தன்மைக் கேற்ப மாற்றியமைத்து, புதியவகை கலப்பு உற்பத்திமுறைக்கு மாறிவிட்டனர் பழைய ஏகாதிபத்தியங்கள்." என்று ஏகாதிபத்தியத்தை இரண்டாம் உலகப்போருக்கு முன்பு பழையஏகாதிபத்தியம் என்றும் போருக்குப்பிறகு இந்த பழைய ஏகாதிபத்தியங்கள் புதிய ஏகாதிபத்தியமாக மாறிவிட்டது என்ற கருத்தைப் பரப்பும் புதிய வகையான மார்க்சியர்கள் முன்வைக்கிறார்கள்.

முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது தனியுடமையை பாதுகாப்பது. சோசலிசப் பொருளாதாரம் என்பது சுரண்டலை ஒழித்த தனியுடமையை ஒழித்த பொருளாதாரம் ஆகும்.

சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தில் உழைக்கும் மக்கள் சுரண்டப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு கூலி குறைவாக கிடைக்கும். அந்த குறைந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்கு தேவையான பொருள்களை அவர்களால் வாங்க முடியாது. அதாவது மக்களின் வாங்கும் சக்தி குறையும். ஆதனால் சந்தையில் பொருள்களை விற்க முடியாமல் பொருள்கள் தேங்கும். முதலாளிகளால் பொருள்களை தொடர்ந்து உற்பத்தி செய்யமுடியாத நிலை ஏற்படும். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர ஏகாதிபத்தியவாதிகள் சந்தைக்காகவும் செல்வாக்கு மண்டலங்களுக்காகவும் போர் நடத்துகிறார்கள்

இப்படி முதலாளித்துவப் பொருளாதாரம் என்பது சுரண்டலை அடிப்படையாகக் கொண்டது என்பதனை புரிந்துக் கொள்ள முடியாத சிலர் இந்தக் கட்டுரைக்கு வக்காலத்து வாங்கி உள்ளதிற்க்கு பதிலாக மேலே உள்ளது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கலை இலக்கியம் மற்றும் சினிமா, சின்னதிரை, செல்போன் சீரழிவு கலச்சாரத்தை பரப்பும் ஆளும் வர்க்க கருவிகளாக. இக்கட்டுரை மூலம் நமது கலை இலக்கியம் சினிமா பற்றிய ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தை வழங்க முயற்சித்தோம்.

வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடம் - லெனின்  கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும், பங்கு கொண்டு இருக்கிறது. மக்கள் திரள்களின், சமூக இயக்கங்கள், அரசியல் இயக்கங்களுடன் கம்யுனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் – குழுக்கள் இணைந்து இவைகள் நடைபெற்றன. இன்றும் நடைபெற்று வருகின்றன.

இருந்தும் இந்திய கம்யூனிச இயக்கம் இடதுசாரி கட்சிகள் என்பது அதற்கான பணியிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது அதனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம் என்ற அவாவில் இந்த தொடரை எழுத நினைத்தேன் என்கிறார் கட்டுரையாளர்.

இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு-1 

ஏகாதிபத்தியமாக வளர்ந்து விட்ட முதலாளிகள் இதுவரை கடைபிடித்து வந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை கைவிட்டு விட்டு பாசிச சர்வாதிகார ஆட்சிமுறைக்கு மாறுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள ஏகாதிபத்தியம் பற்றிய லெனினிய ஆய்வுகளை நாம் கற்ற வேண்டும்.

ஏகாதிபத்தியம் குறித்து நாம் அறிந்திருக்கவில்லை என்றால்  பாசிசம் என்றால் என்ன என்பது குறித்து நாம் தெளிவாக தெரிந்து கொள்ளமுடியாது.

இந்தியாவில் RSS துவங்கும் போதே இத்தாலிய பாசிஸ்டான முசோலினி யுடனான தொடர்போடுதான் துவங்கப்பட்டது. அதன் துவக்கம் முதலே அதன் கொள்கை பாசிசமாகும். RSSன் பாசிசத்திற்கு அடிப்படை இந்துத்துவ கொள்கையாக இருந்த போதும் அதன் நோக்கம் அன்றைய பிரிட்டீஷ் காலனி ஆதிக்கவாதிகளின் நலன்களை பாதுகாத்து வளர்ப்பதாகவே இருந்தது. பிரிட்டீஷ் ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்தபாசிச அமைப்பு தற்போது பா... என்ற அரசியல் அமைப்பை உருவாக்கி ஆட்சியையும் கைப்பற்றி உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனிலிருந்து இந்திய மக்களின் மீதுபாசிசதாக்குதலை மிகவும் வெளிப்படையாகவே நடத்திவருகிறது. இன்றைய சூழலில் பாசிசம் பற்றியும் குறிப்பாக இந்தியாவில் பாசிசத்தின் வளர்ச்சியைப் பற்றியும் ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களும் அதற்காக பாடுபடுபவர்களும் ஆழமாக தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கான விவாதத்திற்காக இந்த தொடர்கட்டுரையை இலக்கு முன்வைக்கிறது.

மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம்

பி.ஜே.பி.யின்   தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்சும்  மற்றும் அதன் மதவெறிப்பயங்கரவாத கூட்டாளி அமைப்புகளும் தற்போது மத்தியிலுள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கார்பரேட்டுகளுக்கு சாதகமான மற்றும்  மக்களுக்கு எதிரான  தனியார்மய , தாரளமய மற்றும் உலகமய கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துகிற அதே நேரத்தில்   அக்கொள்கைகளின் விளைவுகளை எதிர்த்து உழைக்கும் மக்கள்  மற்றும் ஜனநாயக சக்திகளின் உரிமைகளுக்கான போராட்டங்களை  ஒடுக்குவதற்கான புதுப்புது பாசிசசட்டங்களை இயற்றியும் மற்றும் இவற்றுக்கு எதிராக போராடும் அனைத்து மதத்தைச் சார்ந்த உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட வர்க்கப்போராட்டத்தை  தடுக்கவும் ஒடுக்கவும் திசைதிருப்பவும்  சிறுபான்மை மதத்தினரின்   குறிப்பாக .இஸ்லாமியர்களின்  வாழ்வியல் உரிமை மற்றும் மதஉரிமைகளை படிப்படியாக பறித்து வருகின்றனர். அவர்களை பெரும்பான்மைஇந்துமக்களுக்கு எதிரியாக செயற்கையாக சித்தரிக்கின்றனர்மேலும் பா... அரசானது  சட்டமன்றம், , பாராளுமன்றம்மற்றும் நீதிமன்றம் போன்ற போலி ஜனநாயக நிறுவனங்களை பயன்படுத்தி அவைகளின்  ஒத்துழைப்புடன் இந்துமதவெறி அமைப்புகள் மூலம்  மக்கள் மத்தியில் இஸ்லாமியர்களுக்கு  எதிரான  இந்துமதவெறி பிரச்சாரத்தையும் மிகமூர்க்கமான பாசிச ஒடுக்குமுறைகளையும்  கையாண்டு தங்களது மதவெறி அமைப்புகளை பலப்படுத்தியும் விரிவாக்கியும் இந்துத்துவ அரசு அமைப்பதை நோக்கி முன்னேறுகின்றனர்நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும்  நாடுமுழுக்க மதக்கலவரங்களையும் மதப்படுகொலைகளையும்  அன்றாட  பதட்டமான நிகழ்வுகளாக்கும் வகையிலும்   அதை நோக்கிய திட்டமிடுதலுடன்  மிகநுணுக்கமாக  செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் மக்களை மதவெறியிலிருந்து மதமோதலிருந்து பாதுகாக்கவும் அனைத்து மதங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு இந்த கார்பரேட்டு காவி பாசிச அரசை எதிர்த்து போராட வைக்கவும்  பொதுவாக மதத்தை  பற்றிய மார்க்ஸியதத்துவத்தின்  அறிவியல் விளக்கத்தையும், (அதன் தோற்றம் , அதன் மாற்றம் மற்றும் அதன் அழிவு) மார்க்ஸியவாதிகள் மதத்தின் மீது மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறையையும்  தெரிந்துகொள்வதும் மக்களுக்கு புரியபை்பதும்  தற்போதைய காலக்கட்டத்தில் மிக அவசியமானது ஆகும்அதன் அடிப்படையில் மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம் என்ற இந்த கட்டுரையை முன்னணிகளின் புரிதலுக்காகவும், விவாதத்திற்காகவும் இலக்கு கொண்டுவருகிறது.

சீர்திருத்தவாதம் குறித்து லெனின், மற்றும் இந்தியாவில்சீர்திருத்தங்களின் விளைவும்

"மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்கி விட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்" என்றார் லெனின்.

லெனின் சொன்னது போலவே இந்தியாவில் கீன்சிய சீர்திருத்தக் கொள்களை 1950 ஆண்டில் அமல் படுத்தினார்கள். அரசேமக்களுக்கு கல்வி வழங்குவது, மருத்துவ வசதி செய்து கொடுப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த அரசு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்குவது என்ற சீர்திருத்தக் கொள்கைகளை தற்போது கைவிட்டு விட்டதையும் தொழிலாளர்களுக்கு

இதுவரை வழங்கிவந்த சலுகைகளை பறித்துக்கொண்டு இருப்பதையும் நாம் காணலாம். இதிலிருந்து அன்று லெனின் சொன்னது போலவே முதலாளிகளின் அரசு வழங்கிய சலுகைகளை பறித்துக் கொள்வார்கள் என்பது இன்றும் உண்மையாக இருப்பதைநாம் காணலாம்.

‘’தொழிலாளர்களை அடிமைப்படுத்தவும், தனித்தனி கோஷ்டிகளாகப் பிளவுபடுத்தவும் கூலி அடிமை முறையைநிரந்தரமாய் நீடிக்கச் செய்யவும் இந்த சீர்திருத்த முறையை முதலாளிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே

இந்த சீர்திருத்தமானது தொழிலாளர்களை சீர்கெடுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும் முதலாளிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதமாக மாறிவிடுகிறது என்றும் சீர்திருத்தவாதிகளை நம்பும் தொழிலாளர்கள் எப்போதும் ஏய்க்கப்படுகிறார்கள் என்பதை அனைத்து நாடுகளின் அனுபவம் தெளிவாக்க் காட்டுகிறது" என்றார் லெனின்.

1950ஆம் ஆண்டுகளிலிருந்துபல காலம் இங்கு நடைமுறைப் படுத்தப்பட்ட கொள்கை கீன்சியம் என்று சொல்லப்படும் கலப்புப் பொருளாதார சீர்திருத்தக் கொள்கையாகும். இந்த கொள்கையை செயல்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று ஆட்சியாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் இந்தக் கொள்கையால் மக்களின் பிரச்சனைகள் தீரவில்லை. மாறாக மக்களின்பிரச்சனைகள் மேலும் மேலும் மோசமாகியது.இவ்வாறு 1970ஆம் ஆண்டுகளிலேயே தோல்வியடைந்த கொள்கைக்கு பூச்சூட்டி அலங்கரித்து இப்போது அதாவது 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் மீண்டும் கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்று சிலர்வாதிடுகிறார்கள். இப்படி வாதாடுபவர்கள் தங்களை மார்க்சியவாதிகள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். தோல்வி யடைந்த கொள்கையை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சொல்பவர்கள் இவர்கள் மார்க்சியவாதியா? என்ற சந்தேகம் நமக்கு இயல்பாக எழுகிறது. மார்க்சியவாதிகள் என்றுசொல்பவர்கள் வறட்டுச் சிந்தனையாளர்கள் அல்ல, மாறாக வளமான சிந்தனையாளர்களே மார்க்சியவாதிகள் ஆவார்கள். அவர்கள் வரலாற்றை முன்னோக்கி நகர்த்துவதற்கான வழிமுறைகளை சுதந்திரமாக சிந்தித்துமுடி வெடுக்கிறார்கள். வரலாற்றை பின்நோக்கி நகர்த்துவதற்கான வழிமுறைகளை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து கடன் வாங்கி சிந்திப்பவர்கள் அதையே மார்க்சியம் என்றும் முன்னேற்றத்திற்கான வழி என்றும் கூறுபவர்கள் மார்க்சியவாதிகளாக இருக்க முடியாது.

மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்) தோழர் அ.கா.ஈஸ்வரன் அவர்களின் பங்களிப்பு எல்லோரும் எளிமையாக உள்வாங்கிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள இந்த தொடர் கட்டுரை.

தோழர்களே முடிந்தளவு பல்வேறு தளங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடிந்தது விடுபட்டிரிருந்தால் அடுத்த இதழில் அதனைப் பேசுவோம் தோழர்களே.

                                                                                                                        தோழமையுடன் 

                                                                                                                        ஆசிரியர் குழு.



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்