அம்பேத்கரும் கம்யூனிசமும்- ஆர்.பட்டாபிராமன்

 அம்பேத்கரும் கம்யூனிசமும் என்கிற இந்த சிறிய வெளியீடு அம்பேத்கர் குறித்த புத்தகம் ஒன்றிற்காக எழுதிபார்க்கப்பட்ட பகுதிகளில் ஒன்று. அம்பேத்கர் இயக்கங்களுக்கும் மார்க்சிய இயக்கங்களுக்கும் கருத்து நிலைகளில் வேறுபாடுகள் அவ்வப்போது இருந்தாலும் சமூக மாற்றம் என்பதற்கான பல புள்ளிகளில் அவை சந்தித்து கரம்கோர்க்கவேண்டிய அவசியத்தில் இருக்கின்றன. உலக தொழிலாளிவர்க்க விடுதலையின் பெரும் ஆளுமையான மார்க்சை அந்த அந்தப்பகுதியில் அவர் சொன்ன சில முழக்கங்களை முன்வைத்து எடுத்துச் செல்வதா - இல்லையாயின் குறிப்பிட்ட சமூகத்தின் உச்சபிரச்னைகளை முரண்பாடுகளை புரிந்து அவரை உள்வாங்கிக்கொள்வதா என்பது எல்லா நாடுகளின் விவாதப் பொருளாகவே இருக்கிறது. இதை மண்ணிற்கேற்ற மார்க்சிசம் எனவும் சுருக்கி புரியும் போக்கும் இருக்கிறது.

 குறிப்பிட்ட நாட்டின் பெரும் ஆளுமைகளாக உரு எடுப்பவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக சொந்த நாட்டு அனுபவத்துடன் மார்க்சியத்தையும் எதிர்கொண்டு தங்கள் எதிர்வினைகளை தந்துள்ளனர். இவ்வரிசையில் இந்தியாவில் மார்க்சியத்தை எதிர்கொண்டவர்கள் எனும் ஆளுமைகளாக மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால், பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர், இந்திய சோசலிஸ்ட்களான ஜேபி, லோகியா, ஆச்சார்யா நரேந்திரதேவ் ஆகியோர் முன்வரிசையில் வருகின்றனர். தமிழகத்தில் தந்தை பெரியார் வருகிறார். இவர்கள் மார்க்சியத்தின் நடைமுறைகளை இங்குள்ள அன்றைய இளம் கம்யூனிஸ்ட்கள் வாயிலாக அவர்களின் போதாமையுடன் பார்த்தனர்.

 சோவியத் யூனியன் பெருமிதம் என்கிற கட்டுமான ஒற்றைபரப்பை மட்டுமே தங்களுக்கான சிந்தனை தளமாக கொண்டு இளம் கம்யூனிஸ்ட்கள் செயல்படுவதை அவர்கள் கண்ணுற்றனர். மேற்கூறிய ஆளுமைகளுக்கு பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க தொடர்புகள் மற்றும் அவர்களின் சிந்தனா முறைகளும் பழக்கமாக இருந்தது. சிந்தனை பரப்பு என்பதில் அவர்கள் சோவியத்துடன் என்று தங்களை நிறுத்திக்கொள்ளவில்லை. புரட்சி குறித்தும், ஸ்டாலின் கால செயல்பாடுகள் குறித்தும் மேற்கத்திய தகவல்களை அவர்கள் ஏற்பவராகவும் இருந்தனர். ஜவஹர் இதில் சற்று மாறுபட்டவராக இருந்தாலும் அவரும் முழு ஏற்பை தரவில்லை.

 தமிழகத்தில் அறிஞர் சாமிநாத சர்மா போன்றவர்கள் இன்றும் நிலைத்து நிற்கும் கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை 1942லேயே முழுவடிவில் தரமுடிந்தது. சாமிநாத சர்மா அதற்கு சோவியத் வெளியீடுகளை அல்லது பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களை கணக்கில் கொள்ளாமல் லண்டன் பாபியன் சோசலிஸ்ட்களின் வெளியீடான ஹரால்ட் லாஸ்கியின் Essay on Marx என்பதையும் 1939ல் வந்த இசையா பெர்லினின் புகழ்வாய்ந்த Karl Marx His Life and Environment என்கிற ஆக்கத்தையும் அடிப்படையாக கொண்டே எழுதியுள்ளதை நாம் பார்க்கமுடியும். இப்புத்தகம் இன்றும் மார்க்சியர் பலரால் வாசிக்கப்பட்டு வரும் புத்தகமாகவும் இருக்கிறது.

 புத்தர் குறித்து தான் ஏராளம் படித்தது போலவே மார்க்ஸ் குறித்தும் மற்ற எவரையும்விட அதிகமாக படித்ததாக அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார். அவர் மார்க்சின் எந்த எந்த நூல்களை அல்லது மார்க்ஸ் குறித்து எழுதப்பட்ட நூல்களில் எவற்றையெல்லாம் படித்தார் என்பதை நம்மால் சரியாக தெரிந்துகொள்ளமுடியவில்லை.

 இந்திய சமூகம் குறித்தும் சாதி குறித்தும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். செவ்வியல்தரம் வாய்ந்த ஆக்கங்களாக பலவற்றை நாம் பார்க்கமுடியும். மனித உறவுகள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில்தான் அது அரசியலானாலும், சமூகமானாலும் மற்றும் மதமானாலும், பொருளாதாரமானாலும் இருக்கவேண்டும் என்பதைத்தான் அவர் வாழ்நாள் முழுதும் வற்புறுத்திவந்தார். மனிதனின் டிக்னிட்டி என்பதற்கு அவர் முன்னுரிமை கொடுத்தார். அன்றாட அரசியல் நிகழ்வுகள், தொழிற்சங்கம், பிரிட்டிஷாருடன் உறவு, காங்கிரஸ் காந்தியுடனான உறவு, இந்து மதம் சாதி படிநிலைகள் போன்ற பல்வேறு அம்சங்களில் அவர் தனது கருத்துக்களை சொல்லவேண்டியிருந்தது. தனது அடித்தட்டு மக்களின் விடுதலைக்காக மேற்கூறிய சக்திகளுடன் உறவையும் மோதலையும் அவர் கைக்கொள்ள நேர்ந்தது. இதன் ஒரு பகுதியாக அவரின் மார்க்சியம் குறித்த கம்யூனிஸ்ட்கள் குறித்த கருத்துக்களை நாம் புரிந்துகொள்ளமுடியும்.

 இந்திய சமூகத்தை புரிந்துகொள்வதற்கான் விமர்சனகுறிப்புகளாக அம்பேத்கர் அவர்கள் கம்யூனிஸ்ட்கள் மீது வைத்த விமர்சனங்களை புரிந்துகொள்ளலாம் என்றால் வர்க்கப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள்- விடுதலைப் போராட்டம் அதில் அம்பேத்கரின் நடைமுறைகள் குறித்த விமர்சனங்களாக கம்யூனிஸ்ட்களின் எதிர்வினையை புரிந்துகொள்ளலாம்..

 இந்த சிறு வெளியீட்டில் அம்பேத்கர் இந்தியாவில் கம்யூனிசம் என்பதை எழுத ஆரம்பித்து அப்படியே நின்று போன சிறு ஆக்கங்கள் குறித்தும், அதனை தனிப்புத்தகமாக்கி அதற்கு ஆனந்த டெல்டும்டே எழுதிய முன்னுரையும் , சாதியை ஒழிக்க எனும் அம்பேத்கர் ஆக்கத்தில் அம்பேத்கர் கம்யூனிஸ்ட்களை குறித்து முன்வைத்த விமர்சனங்களும், அம்பேத்கர் பல்வேறு கூட்டங்களில் எத்தகைய (புத்தரா கார்ல் மார்க்சா உள்ளிட்டு) கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பதை தொகுத்த அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தமிழ் வால்யூம் 37ம் (ஆங்கிலம் 17 பகுதி 3) விவாதிக்கப்பட்டுள்ளன. அம்பேத்கர் குறித்து உயர் மதிப்பீடுகளுடன் கூடிய W N குபர் ஆய்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 அம்பேத்கர் கம்யூனிசம் குறித்து பேசிய அனைத்துமோ, கம்யூனிஸ்ட்கள் அம்பேத்கர் குறித்து முன்வைத்த அனைத்துமோ இவ்வாக்கத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ளது என ஏதும் சொல்லமுடியாது. ஆனால் ஓரளவிற்கு விவாத பரப்பை அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளது எனச் சொல்லமுடியும்.

 

-   ஆர். பட்டாபிராமன்

அம்பேத்கரும் கம்யூனிசமும் நூல் இந்த இணைப்பில்

இந்தியாவும் கம்யூனிசமும் என்கிற புத்தகத்தை அம்பேத்கர் எழுத முற்பட்டார். ஆனால் அது முழுமை பெறவில்லை. மார்க்ஸ் குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட்கள் குறித்தும் அவ்வப்போது அம்பேதகர் தனது விமர்சனபார்வையை முன்வைத்துள்ளார். அம்பேத்கரின் இந்தியாவும் கம்யூனிசமும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள The Hindu Social Order- its essential principles The Hindu Social Order- Its unique features என்கிற இரு ஆக்கங்களும் பார்க்கப்படவேண்டியவை. இந்த ஆக்கங்கள் அம்பேத்கரின் ஆங்கில வால்யூம் 3ல் இடம்பெற்றவைதான். இதை தனியாக எடுத்து டெல்டும்டே அறிமுகத்துடன் லெஃப்ட்வேர்ட் பதிப்பகமும் வெளியிட்டுள்ளது.

முதல் ஆக்கமான இந்து சமூக முறை- அதன் இன்றிமையாக் கோட்பாடுகள் என்பதின் சாரத்தைப் பார்க்கலாம். இந்தியாவின் பொதுவுடைமைக்கான முற்படுதேவைகள் என நிபந்தனை குறித்த ஆக்கமாக அம்பேத்கர் இதை எழுதினார்.

இந்து சமூக அமைப்பு சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ளவர்களின் சமூக அந்தஸ்தை ஒரே மாதிரியாக காலந்தோறும் மாற்றமுடியாதபடி நிர்ணயித்துள்ளது. கல்வி வாய்ப்பை

மறுத்துள்ளது. அவர்களின் பொருளாதார நிலையும் மாற்றமுடியாதபடி நிலைப்படுத்தப்பட்டுள்ளது.. இழிநிலையே துயருக்கு காரணம் என தோன்றாமல் தலைவிதி என ஆக்கப்பட்டுள்ளது. எவரும் பொறுப்பாளியாக்கப்படவில்லை. இந்து அமைப்பில் ஆயுதம் ஏந்தும் உரிமையும் மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் முஸ்லீம், நாஜிகளின் அமைப்பில் இந்த உரிமை உள்ளது. அங்கு சமவுரிமை, கல்வி பெறும் வாய்ப்புள்ளது.

இங்கு அறிவைப்பெறவும் ஆயுதம் ஏந்தும் உரிமையும் மறுக்கப்பட்டு மனிதனை ஆண்மையற்றவனாக முடமாக்கும் வேலையை மனுவின் மூலம் செய்துள்ளதை அமபேத்கர் சுட்டிக்காட்டுகிறார். வன்முறையற்ற செயல்முறையை பல இடங்களில் பேசிவந்த அம்பேத்கர் இங்கு ஆயுதம் ஏந்துவது உரிமையாக வேண்டும் எனும் சுதந்திரம் பற்றி ஏன் பேசுகிறார் என்பது புரிந்துகொள்ள சற்றுக் கடினமானதாகவே இருக்கிறது. இங்கு அவர் கம்யூனிஸ்ட்கள் கோரும் ஆயுதப்போராட்டம் என்பதிலிருந்து எப்படி வேறுபடுகிறார் என்பதும் தெளிவுப்படுத்தப்படாமல் இருக்கிறது.

இந்து சமூகத்தின் மூன்றாவது தனித்தன்மை கடவுள் உருவாக்கிய தெய்வீக அமைப்பாக அதனை ஆக்கியது. அது புனிதமானது- அழிக்கமுடியாதது. மாற்றங்களுக்கும் குற்றங்களுக்கும் இடமளிக்காதது. இதற்கு கிருஷ்ணரின் கீதை உபதேசங்களை மேற்கோளாக அம்பேத்கர் காட்டுகிறார். பாசிசம், நாசிசம் போல்ஷ்விசம் ஆகிய அமைப்புகள் சமூக அமைப்புகளே தவிர தெய்வத்தொடர்பு கொண்டவை என்றோ பக்தியுடன் மீறமுடியாததாகவோ, காப்பாற்றப்பட வேண்டியவையாகவோ ஆக்கப்படவில்லை. அம்பேத்கர் சுட்டிக்காட்டிய மூன்று அமைப்புகளும் அவர் கூறியதைப்போல் காலஓட்டத்தில் காப்பாற்றப்படாமல் போனதையும் நாம் பார்க்கமுடிகிறது. ஆனால் அவை முழுமையாக அரசியல்வடிவ அமைப்புக்கள்தான். நாசிசம் யூதர் விஷயத்தில் பிறப்பு என்பதை பார்த்தாலும் இந்து அமைப்பு போல சமூக முறைமை கொண்டதல்ல.

ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் இடையேயுள்ள உறவுகள் மதத்தால் திருநிலைப்படுத்தப்பட்டு தெய்வத்தன்மையுடையதாகவும், நிரந்தரமானதாகவும் மாற்ற முடியாததாகவும் உள்ள பொருளாதார அமைப்பினை உலகில் இந்துக்கள் மட்டுமே பெற்றிருக்கின்றனர் என்கிற வரிகளை கோட்பாடுபோல அம்பேத்கர் தருகிறார்.

தொடரும்....

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்