கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பும் இன்றைய விவாதமும்

இன்று வாசிக்க உள்ள பகுதி (02/08/2025)

3. விமர்சன-கற்பனாவாத சோஷலிசமும், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசமும்

பாபியோவும்[42] [அவரையொத்த] பிறரும் எழுதிய எழுத்துகளைப் போன்று, மகத்தான நவீனப் புரட்சி ஒவ்வொன்றிலும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்குக் குரல்கொடுத்திருக்கும் இலக்கியத்தை இங்கு நாம் குறிப்பிடவில்லை.

நிலப்பிரபுத்துவ சமுதாயம் வீழ்த்தப்படுகையில் உலகெங்கும் பரபரப்பு நிலவிய அந்தக் காலங்களில் பாட்டாளி வர்க்கம் தன் சொந்த லட்சியங்களை எட்டுவதற்காக மேற்கொண்ட முதல் நேரடி முயற்சிகள் தவிர்க்க முடியாதவாறு தோல்வியடைந்தன. காரணம், பாட்டாளி வர்க்கத்தின் அப்போதைய வளர்ச்சியுறாத நிலை. அத்துடன், அது விடுதலை பெறுவதற்கான பொருளாதார நிலைமைகள் அப்போது நிலவவில்லை. அத்தகைய நிலைமைகள் இனிமேல்தான் தோற்றுவிக்கப்படவிருந்தன. வரவிருந்த முதலாளித்துவ சகாப்தம் மட்டுமே அந்த நிலைமைகளைத் தோற்றுவிக்க முடியும். பாட்டாளி வர்க்கத்தின் இந்தத் தொடக்க கால இயக்கங்களுடன் கூடவே தோன்றிய புரட்சிகர இலக்கியம், தவிர்க்க முடியாதவாறு ஒருவித பிற்போக்குத் தன்மையைக் கொண்டிருந்தது. உலகளாவிய துறவுவாதத்தையும், மிகவும் முரட்டு வடிவிலான சமூகச் சமமாக்கத்தையும் அது போதித்தது.

சரியான சோஷலிச, கம்யூனிசக் கருத்தமைப்புகள் என்று சொல்லப்பட்ட, சான் சிமோன்[43], ஃபூரியே[44], ஓவன்[45] மற்றும் பிறரின் கருத்துகள், மேலே விவரிக்கப்பட்ட, பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டத்தின் வளர்ச்சியுறாத தொடக்கக் காலகட்டத்தில் தோன்றி நிலவியவையே. (அத்தியாயம்-1, 'முதலாளிகளும் பாட்டாளிகளும்' என்பதைப் பார்க்கவும்). இந்தக் கருத்தமைப்புகளைத் தோற்றுவித்தவர்கள், நடப்பிலிருந்த சமுதாய அமைப்புமுறையில் நிலவிய வர்க்கப் பகைமைகளையும், அதோடுகூட, சிதைந்து கொண்டிருந்த கூறுகளின் செயல்பாட்டையும் கண்டனர் என்பது உண்மையே. ஆனால் இன்னமும் மழலைப் பருவத்தில் இருந்த பாட்டாளி வர்க்கம், எந்தவொரு வரலாறு படைக்கும் முன்முயற்சியோ, எந்தவொரு சுயேச்சையான அரசியல் இயக்கமோ இல்லாத ஒரு வர்க்கமாகவே அவர்களுக்குக் காட்சி தந்தது.

வர்க்கப் பகைமையின் வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடைபோடுவதால், அவர்கள் [சான் சிமோன் முதலியோர்] காணும் பொருளாதாரச் சூழ்நிலை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்குகந்த பொருளாயத நிலைமைகளை இன்னும் அவர்களுக்குப் புலப்படுத்தவில்லை. எனவே, அவர்கள் அத்தகைய நிலைமைகளைத் தோற்றுவிப்பதற்கான ஒரு புதிய சமூக விஞ்ஞானத்தை, புதிய சமூக விதிகளைத் தேடிச் செல்கின்றனர்.

வரலாற்று ரீதியான செயல்பாடு, அவர்களுடைய சொந்தமுறையிலான கண்டுபிடிப்புச் செயலுக்கு உட்பட வேண்டும்; வரலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட விடுதலைக்கான நிலைமைகள், [அவர்களின்] கற்பனையில் உருவான நிலைமைகளுக்கு உட்பட வேண்டும்; பாட்டாளி வர்க்கத்தின் படிப்படியான, தன்னியல்பான வர்க்க ஒழுங்கமைப்பு, இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் இதற்கெனப் பிரத்தியேகமாகப் புனைந்தளிக்கும் சமூக ஒழுங்கமைப்புக்கு உட்பட வேண்டும் [என்றாகியது]. அவர்தம் சமூகத் திட்டங்களுக்கான பிரசாரத்தையும், அத்திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்துவதையும் சுற்றியே வருங்கால வரலாறு அமையும் என அவர்களின் பார்வைக்குத் தோன்றுகிறது.

அவர்கள் தம் திட்டங்களை வகுத்தமைக்கும்போது, மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற வகையில் தொழிலாளி வர்க்கத்தின் நலன்களில்தான் முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டும் என்பதை உணர்ந்தே உள்ளனர். அவர்களைப் பொறுத்தவரையில் பாட்டாளி வர்க்கம் என ஒன்று இருக்கிறதெனில், மிக அதிகமாகத் துன்புறும் வர்க்கம் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே.

இந்த வகைப்பட்ட சோஷலிஸ்டுகள், வர்க்கப் பகைமைகள் அனைத்துக்கும் மிகமிக மேலானோராகத் தம்மைத்தாமே கருதிக்கொள்வதற்கு, வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பெறாத நிலையும், அதோடுகூட அவர்களின் சொந்தச் சுற்றுச்சார்புகளும் காரணமாயின. சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரின் நிலையையும், மிகவும் சலுகை படைத்தவரின் நிலையையுங்கூட, மேம்படுத்த அவர்கள் விரும்புகின்றனர். எனவே, வர்க்க வேறுபாடு கருதாமல் சமுதாயம் முழுமைக்கும் வேண்டுகோள் விடுப்பதை, சரியாகச் சொல்வதெனில், முன்னுரிமை தந்து ஆளும் வர்க்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்கள் எடுத்துரைக்கும் அமைப்பினை ஒருவர் புரிந்துகொண்டபின், சமுதாயத்தின் சாத்தியமான நிலைகளுள் மிகச்சிறந்த நிலையை எய்துவதற்குரிய, சாத்தியமான திட்டங்களிலேயே மிகச்சிறந்த திட்டம் அது என்பதை அவர் காணத் தவற முடியுமோ?

எனவே, அவர்கள் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும், குறிப்பாக அனைத்து புரட்சிகரச் செயல்பாடுகளையும் நிராகரிக்கின்றனர்; சமாதான வழிகளில் தம் லட்சியங்களை அடைந்திட விரும்புகின்றனர்; நிச்சயமாகத் தவிர்க்க முடியாத தோல்வியில் முடிகிற சிறு பரிசோதனைகள் மூலமும், முன்மாதிரி [அமைப்புமுறை]யின் சக்தியைக் கொண்டும், புதிய சமூக வேதத்துக்குப் பாதை வகுத்திட அவர்கள் பெருமுயற்சி செய்கின்றனர்.

வருங்கால சமுதாயத்தைப் பற்றிய இத்தகைய கற்பனைச் சித்திரங்கள், பாட்டாளி வர்க்கம் இன்னமும் வளர்ச்சி பெறாத நிலையில், ஆனால் அதனுடைய சொந்த நிலைகுறித்துக் கற்பனையான கருத்தோட்டம் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தீட்டப்பட்டவையாகும். சமுதாயத்தின் பொதுவான மறுசீரமைப்புகுறித்து, அந்த வர்க்கத்துக்கு உள்ளுணர்வு ரீதியாக எழும் ஆசைகளுக்கு ஏற்பவே அச்சித்திரங்கள் அமைந்துள்ளன.

ஆனால், இந்த சோஷலிச, கம்யூனிச வெளியீடுகளில் ஒரு விமர்சனக் கூறும் அடங்கியுள்ளது. தற்போது நிலவும் சமுதாயத்தின் ஒவ்வொரு கோட்பாட்டையும் அவை தாக்குகின்றன. எனவே, தொழிலாளி வர்க்கம் அறிவொளி பெறுவதற்கான மிகவும் மதிப்புவாய்ந்த விவரக் குறிப்புகள் அவற்றில் நிறைந்துள்ளன. நகரத்துக்கும் கிராமத்துக்கும் இடையிலான பாகுபாட்டை ஒழித்தல், குடும்ப அமைப்புமுறையை ஒழித்தல், தனிப்பட்ட நபர்களின் நலனுக்காகத் தொழில்கள் நடத்துவதை ஒழித்தல், கூலிமுறையை ஒழித்தல், சமுதாயத்தின் ஒருங்கிசைவைப் பிரகடனம் செய்தல், அரசின் பணிகளை வெறுமனே உற்பத்தியை மேற்பார்வை செய்யும் பணியாக மாற்றிவிடல் - இவைபோன்ற நடைமுறை நடவடிக்கைகள் அந்த வெளியீடுகளில் முன்மொழியப்படுகின்றன. இத்தகைய முன்மொழிவுகள் அனைத்தும், வர்க்கப் பகைமைகள் மறைந்துபோவது ஒன்றை மட்டுமே சுட்டுவதாக உள்ளன. இந்த வர்க்கப் பகைமைகள் அந்தக் காலகட்டத்தில் அப்போதுதான் முளைவிடத் தொடங்கியிருந்தன. வர்க்கப் பகைமைகள் அவற்றின் தொடக்க காலத்தே நிலவிய தெளிவற்ற, வரையறுக்கப்படாத வடிவங்களில் மட்டுமே இந்த வெளியீடுகளில் அடையாளம் காணப்படுகின்றன. எனவே, இந்த முன்மொழிவுகள் கலப்பற்ற கற்பனாவாதத் தன்மை கொண்டவையாகவே உள்ளன.

விமர்சன-கற்பனாவாத சோஷலிசம், விமர்சன-கற்பனாவாத கம்யூனிசம் ஆகியவற்றின் முக்கியத்துவம் வரலாற்று வளர்ச்சியுடன் எதிர்விகித உறவைக் கொண்டுள்ளது. நவீன வர்க்கப் போராட்டம் எந்த அளவுக்கு வளர்ச்சிபெற்று திட்டவட்டமான வடிவம் பெறுகிறதோ, அந்த அளவுக்குப் போராட்டத்திலிருந்து இவ்வாறு கற்பனையாக விலகி நிற்றலும், அதன்மீது தொடுக்கப்படும் கற்பனையான தாக்குதல்களும் நடைமுறை மதிப்பனைத்தையும், தத்துவ நியாயம் அனைத்தையும் இழந்து விடுகின்றன. எனவே, இந்த [தத்துவ] அமைப்புகளின் மூலவர்கள், பலவிதத்தில் புரட்சிகரமாக விளங்கியபோதும், இவர்களின் சீடர்கள் ஒவ்வொரு சூழலிலும் வெறும் பிற்போக்குக் குறுங்குழுக்களாகவே அமையப் பெற்றுள்ளனர். பாட்டாளி வர்க்கத்தின் முற்போக்கான வரலாற்றுபூர்வ வளர்ச்சிக்கு எதிராகத் தங்கள் குருநாதர்களின் மூலக் கருத்துகளை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளனர். எனவே, வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கவும், வர்க்கப் பகைமைகளைச் சமரசப்படுத்தவும் விடாமல் தொடர்ந்து முயலுகின்றனர். தங்களின் கற்பனாவாத சமூகத் திட்டங்களைச் சோதனை பூர்வமாக நடைமுறைப்படுத்தி விடலாமென இன்னமும் கனவு காண்கின்றனர். ஆங்காங்கே தனித்தனியான சில ”வேலைக் கூட்டமைவுகளைத்” (Phalansteries) தோற்றுவித்தல், ”உள்நாட்டுக் குடியிருப்புகளை” (Home Colonies) நிறுவுதல், ஒரு ”குட்டி ஐகேரியாவை” (Little Icaria) அதாவது புது ஜெரூசலத்தின் குட்டி மாதிரிகளை அமைத்தல்[ஏ11] ஆகியவை இவர்களின் கற்பனாவாத சமூகத் திட்டங்கள். இந்த ஆகாயக் கோட்டைகளையெல்லாம் கட்டிமுடிக்க, இவர்கள் முதலாளிமார்களின் பரிவுணர்வுக்கும் பணத்துக்கும் வேண்டுகோள் விடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றனர். படிப்படியாக இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட பிற்போக்குப் பழமைவாத சோஷலிஸ்டு வகையினராகத் தாழ்ந்துவிடுகின்றனர். அவர்களிடமிருந்து இவர்கள் வேறுபடுவது, மிகவும் முறைப்படுத்தப்பட்ட பகட்டுப் புலமையிலும், இவர்தம் சமூக விஞ்ஞானத்தின் அதிசயப் பலன்களின்பால் இவர்கள் கொண்டுள்ள வெறித்தனமான மூட நம்பிக்கையிலும் மட்டுமே.


[ஏ11] வேலைக் கூட்டமைவுகள் (Phalansteries) என்பவை ஷார்ல் பூரியே (Charles Fourier) திட்டத்தின்படி அமைந்த சோஷலிசக் குடியிருப்புகள் ஆகும். ஐகேரியா (Icaria) என்பது காபே (Cabet) அவருடைய கற்பனை உலகத்துக்கு இட்ட பெயராகும். பின்னாளில் அவருடைய அமெரிக்கக் கம்யூனிசக் குடியிருப்புக்கு அப்பெயரைச் சூட்டினார். [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

“உள்நாட்டுக் குடியிருப்புகள்” (Home Colonies) என்பது, ஓவன் (Owen) அவருடைய கம்யூனிச முன்மாதிரிச் சமுதாயங்களுக்கு இட்டழைத்த பெயராகும். வேலைக் கூட்டமைவுகள் (Phalansteries) என்பது, பூரியே திட்டமிட்டிருந்த பொது மாளிகைகளுக்கு இட்ட பெயராகும். ஐகேரியா என்பது [காபேயின்] கற்பனை தேசத்துக்குச் சூட்டப்பட்ட பெயராகும். காபே அந்தக் கற்பனை தேசத்தின் கம்யூனிச நிறுவனங்களைச் சித்தரித்துள்ளார். [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].


எனவே, இவர்கள் தொழிலாளி வர்க்கம் சார்பிலான அரசியல் நடவடிக்கைகள் அனைத்தையும் வன்மையாக எதிர்க்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை, புதிய வேதாகமத்தில் (New Gospel) கொண்டுள்ள குருட்டுத்தனமான அவநம்பிக்கையின் விளைவாக மட்டுமே அத்தகைய நடவடிக்கை இருக்க முடியும் எனக் கருதுகின்றனர்.

இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites) சாசனவாதிகளையும் (Chartists)[46], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists) ’சீர்திருத்தம்’வாதிகளையும் (Reformistes)[47] எதிர்க்கின்றனர்.

(அத்தியாயம்-3 முற்றும்) 


அத்தியாயம்-4

தற்போதுள்ள பல்வேறு எதிர்க்கட்சிகள் குறித்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைபாடு

இங்கிலாந்திலுள்ள சாசனவாதிகள், அமெரிக்காவிலுள்ள விவசாயச் சீர்திருத்தவாதிகள் ஆகியோரின் இயக்கங்களையொத்த, தற்போது நிலவும் தொழிலாளி வர்க்கக் கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை குறித்து [இந்நூலின்] இரண்டாவது பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.

கம்யூனிஸ்டுகள், தொழிலாளி வர்க்கத்தின் உடனடி லட்சியங்களை எய்திடவும், அவ்வப்போதைய நலன்களை நிறைவேற்றிக் கொள்ளவும் போராடுகிறார்கள். ஆனாலும், நிகழ்கால இயக்கத்திலேயே அந்த இயக்கத்தின் எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்; இயக்கத்தின் எதிர்காலம் குறித்து அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். ஃபிரான்சில் கம்யூனிஸ்டுகள் பழமைவாத, தீவிரவாத முதலாளித்துவ வர்க்கத்தினருக்கு எதிராகச் சமூக-ஜனநாயகவாதிகளுடன்[ஏ12] கூட்டுச் சேர்ந்துகொள்கின்றனர். என்றாலும், மாபெரும் புரட்சியிலிருந்து பாரம்பரியமாகப் பெறப்பட்டு வந்துள்ள சொற்கோவைகள், பிரமைகள் குறித்து ஒரு விமர்சன நிலைபாட்டை மேற்கொள்ளும் உரிமையை விட்டுவிடாமல் தம் கையில் வைத்துள்ளனர்.


[ஏ12] அக்காலத்தில் பாராளுமன்றத்தில் லெத்ரு-ரொலேனும்[48], இலக்கிய உலகில் லூயீ பிளாங்க்கும்[49], தினசரிப் பத்திரிக்கை ஊடகத்தில் சீர்திருத்தம் (Reforme) என்னும் பத்திரிகையும் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சி இது. சமூக-ஜனநாயகம் என்ற பெயரைப் பொறுத்தவரை அப்பெயரைக் கண்டுபிடித்தவர்களுக்கு, ஜனநாயகக் கட்சி அல்லது குடியரசுக் கட்சியின், கூடக்குறைய சோஷலிச சாயம் பூசப்பட்ட ஒரு பிரிவு என்பதையே குறித்தது. [1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].

ஃபிரான்சில் அக்காலத்தில் தன்னைத்தானே சமூக-ஜனநாயகக் கட்சி என்று அழைத்துக் கொண்ட இக்கட்சியை, அரசியல் வாழ்வில் லெத்ரு-ரொலேனும், இலக்கியத்தில் லுயீ பிளாங்க்கும் பிரதிநிதித்துவப்படுத்தினர். இவ்வாறு, அக்கட்சி இந்நாளைய ஜெர்மன் சமூக-ஜனநாயகத்திலிருந்து அளவிட முடியாத அளவுக்கு வேறுபட்டிருந்தது. [1890-ஆம் ஆண்டின் ஜெர்மானியப் பதிப்புக்கு ஏங்கெல்ஸ் எழுதிய குறிப்பு].


சுவிட்ஸர்லாந்தில், தீவிரக் கொள்கையினரைக் (Radicals) கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். ஆனால், அதே வேளையில், தீவிரக் கொள்கையினரின் கட்சி, ஒருபாதி ஃபிரெஞ்சு நாட்டில் உள்ளது போன்ற ஜனநாயக சோஷலிஸ்டுகளையும், மறுபாதி தீவிரக் கொள்கையுடைய முதலாளித்துவ வர்க்கத்தாரையும் கொண்ட, ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டும் கூறுகளால் ஆனது என்பதைக் கம்யூனிஸ்டுகள் காணத் தவறவில்லை.

போலந்தில், தேச விடுதலைக்கு விவசாயப் புரட்சியே தலையாய நிபந்தனை என்பதை வலியுறுத்தும் கட்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர். 1846-இல் கிராக்கவ் (Cracow) எழுச்சிக்குத்[50] தூண்டுகோலாக இருந்த கட்சி அது.

ஜெர்மனியில், எதேச்சாதிகார முடியாட்சியையும், நிலப்பிரபுத்துவப் பண்ணை உடைமையாளர்களையும் (feudal squirearchy), [நகர்ப்புறப் பிற்போக்குவாதக்] குட்டி முதலாளித்துவப் பிரிவினரையும் (petty bourgeoisie)[51] எதிர்த்து முதலாளித்துவ வர்க்கம் புரட்சிகரமான முறையில் செயல்படும் போதெல்லாம், கம்யூனிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்துநின்று போராடுகின்றனர். ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையேயான தீராப் பகைமையைச் சாத்தியமான அளவுக்குத் தெளிவாக உணரும்படி, தொழிலாளி வர்க்கத்துக்கு அறிவு புகட்டுவதைக் கம்யூனிஸ்டுகள் எந்தவொரு சூழலிலும் ஒருபோதும் நிறுத்தவில்லை. காரணம், முதலாளித்துவ வர்க்கம் தன் மேலாதிக்கத்துடன்கூடவே தவிர்க்க முடியாதபடி புகுத்த வேண்டியிருக்கும் சமூக, அரசியல் நிலைமைகளை, ஜெர்மானியத் தொழிலாளர்கள் அப்படியே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தக்கூடும். மேலும், ஜெர்மனியில் பிற்போக்கு வர்க்கங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதே முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் உடனடியாகத் தொடங்கக்கூடும்.

கம்யூனிஸ்டுகள் முதன்மையாக ஜெர்மனியிடம் தங்கள் கவனத்தைத் திருப்புகின்றனர். காரணம், ஜெர்மனியில் ஒரு முதலாளித்துவப் புரட்சி நடைபெறும் தறுவாயில் உள்ளது. ஐரோப்பிய நாகரிகம் மிகவும் முன்னேறியுள்ள நிலைமைகளின் சூழலில் அது நடத்தப்பட வேண்டியுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்திலும், பதினெட்டாம் நூற்றாண்டில் ஃபிரான்சிலும் இருந்த பாட்டாளி வர்க்கத்தையெல்லாம்விட மிக அதிக வளர்ச்சிபெற்ற ஒரு பாட்டாளி வர்க்கம் அதை நடத்தவுள்ளது. மேலும், ஜெர்மனியில் நடைபெறப்போகும் முதலாளித்துவப் புரட்சி, உடனடியாக அதனைப் பின்தொடரப்போகும் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான முன்னோடியாகவே இருக்கப் போகிறது என்பதும் காரணமாகும்.

சுருங்கக் கூறின், கம்யூனிஸ்டுகள் எங்கும் தற்போதுள்ள சமூக, அரசியல் அமைப்பு முறைகளுக்கு எதிரான புரட்சிகர இயக்கம் ஒவ்வொன்றையும் ஆதரிக்கின்றனர். இந்த இயக்கங்கள் அனைத்திலும், அவை ஒவ்வொன்றின் தலையாய பிரச்சினையாகச் சொத்துடைமைப் பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் முன்னிலைக்குக் கொண்டு வருகின்றனர். அந்த நேரத்தில் அது எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பதைப் பொருட்படுத்துவதில்லை.

முடிவாக, அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்![52]

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்