பாபுலிசம் பற்றி தேடல்

 உட்கட்சி போராட்டமும் மார்க்சியத்தை மறுத்த தலைமையின் வழிபடலும்


பொருளாதார வளர்ச்சியும் ‘பாப்புலிசம்’ ஆபத்தும்



இ ன்றைய காலத்தில், ‘பாப்புலிசம்’ (Populism) எனும் கருத்து, பொருளியலில் முக்கிய தாக்கத்தைச் செலுத்துகிறது. இதை அறிந்துகொள்ளலாம் வாருங்கள். ‘அனைவரும் துன்பங்களை பொறுத்துக்கொண்டு ஒற்றுமையாக உழைத்தால், 10 ஆண்டுகளில் பெரும் சாதனையைச் செய்துவிடலாம்’ என்று பிரசாரம் செய்கிறார் கார்த்திக் என்ற அரசியல்வாதி. மறுபுறம், சுப்ரமணி என்ற அரசியல்வாதி, ‘கறுப்புப் பணத்தை ஒழிப்பேன்; வெறும் ஆறே மாதத்தில் அனைவரின் சம்பளத்தையும் இரண்டு மடங்காக உயர்த்துவேன். 50 சதவீதம் வரியைக் குறைப்பேன்‘ என்று பிரசாரம் செய்கிறார். இவர்களில் யார் அதிகம் ஓட்டுகளை வாங்குவார்கள்? சந்தேகமே இல்லாமல் சுப்ரமணி தான். இதை ‘பாப்புலிசம்’ என்பார்கள்.

பாப்புலிசம் என்றால், பொதுமக்களின் அதிருப்தி, கனவுகள், ரசனைகளுக்கு ஏற்றவாறு பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுவது என்று பொருள். ‘பணக்காரர்கள் தூக்கம் இழக்கப்போகிறார்கள் ; பாட்டாளிகளுக்கு பொற்காலம் வரப்போகிறது’, ‘ஏழைகளுக்கு புதிய இந்தியா’ என்பதெல்லாம் அரசியல்வாதிகள் பேசும் பாப்புலிச வசனங்கள் தான்.

நீண்டகால வளர்ச்சி, எல்லா தரப்பினருக்குமான பட்ஜெட், தொழில்முனைவுப் பெருக்கம் போன்றவற்றை எல்லாம் மக்கள் காதுகொடுத்துக் கேட்பதில்லை. ஊழல் அமைப்பை சீர்திருத்துவோம், சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு கடினமாக உழைப்போம் என்று சொல்லி மக்களை கவர முடிவதைவிட, ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வங்கியில் 15 லட்சம் ரூபாய் போடுவேன், இலவச கலர் ‘டிவி’ தருகிறேன் என்று சொல்லி கவருவது ஈசியான விஷயம். ‘என்னிடம் உடற்பயிற்சி உபகரணத்தை வாங்கினால், 15 நிமிடத்தில் உடல் இளைத்துவிடும்’, ‘இந்தப் புத்தகத்தைப் படித்தால், 10 நாட்களில் பணக்காரனாகி விடலாம்’ என்று சொல்லி, சேல்ஸ்மேன் வாடிக்கையாளரைக் கவர்வது போல்தான் இதுவும். துரதிர்ஷ்டவசமாக இதுபோன்று வாக்குறுதிகளை தரும் அரசியல்வாதிகள்தான், அதிக ஓட்டுகளைப் பெறுகின்றனர். காரணம், மாற்றத்தை எதிர்பார்க்கும் பெரும்பாலான மக்கள், அது ஒரே நாளில் மேஜிக் போன்று நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். கனவுக்கு செயல்வடிவம் கொடுக்கும் பொருட்டு, பாடுபடத் தயாராக இல்லை.

இது பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சிக்கு அத்தியாவசியமான நடவடிக்கை எதுவோ அதை விட்டுவிட்டு, பொதுமக்களை திருப்திப்படுத்தி அனாவசியமான செலவுகளை அரசு செய்யத் தொடங்கும். மக்களிடம் முறையான விழிப்புணர்வு ஏற்பட்டாலே தவிர, பாப்புலிசத்தின் ஆபத்திலிருந்து பொருளாதாரத் திட்டங்கள் காக்கப்படாது.

இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தப்போவதாக ஒருவர் வாக்குறுதி அளித்தால், அதற்கு பொருளாதாரம் எங்கிருந்து வரும் என்று கேள்வி கேட்க வேண்டும். வரியை பாதி குறைத்துவிட்டால், அரசுக்கு வேறு எந்த வகையில் வருவாய் கிடைக்கும் என்று கேட்க வேண்டும்.

கறுப்புப் பணம் ஒழிக்கப்படும் என்றால், அதற்கான வழி என்ன என்று கேட்க வேண்டும். அப்படிக் கேட்டால்தான், பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
இன்னொரு பதிவு

populism என்பதை ஜனரஞ்சக அரசியல் என்று சொல்வது ஓரளவிற்கு ஆங்கிலத்தில் உள்ள அதன் புரிதலுக்கு நெருக்கமாக வரலாம். ஏனென்றால் தமிழில் ஜனரஞ்சக என்பது ஜனரஞ்சக சினிமா என்பது போன்ற சொற்தொடர்களில் புழங்கும் அர்த்தத்தில், எளிய மக்களின் ரசனை, எளிய மக்கள் விருப்பம், எளிய மக்களின் எதிர்பார்ப்பு, எளிய மக்களின் சந்தோசம், என்கிற பதங்களில் பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச அரசியலில் வெனிசுலாவின் யுகே சாவேஸ். இங்கிலாந்தின் ஜெர்மி கோர்பின் போன்ற இடது முலாம் பூசக்கொள்ளும் அரசியல்வாதிகளிலிருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரை பலரும் இந்த populist வகைமையில் வருகிறார்கள். இவர்களுக்கு இடையில் உள்ள பல்வேறு வேற்றுமைகளுக்கு இடையில் இவர்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளின் அம்சம்தான் populism என்பதாக கருதப்படுகிறது.
“Populism: A Very Short Introduction” என்கிற நுாலின் ஆசிரியரான Cas Mudde என்பவரின் கருத்துப்படி, அரசியல் விஞ்ஞானத்தில், பாப்புலிச கருத்துப்படி, உலகம் முரண்பட்ட இரு குழுக்களாக பிரிந்துள்ளது. ஒன்று ‘துாய மக்கள்’ மற்றொன்று ‘சீரழிந்த மேட்டுக்குடி’.
இந்த எதிரிடை இடது முதல் வலதுவரையான அனைத்து பாப்புலிஸ்ட்களாலும் வெற்றிகரமாக பயன்படுத்தப்படுகிறது. வலது பாப்புலிஸ்ட்கள் மேட்டுக்குடியினர் பக்கம் நின்று கொண்டு மக்களின் பொருளாதார, கலாச்சார பிரச்னைகளை – நிலவும் சமூக அமைப்பின் அடிப்படைப் பிரச்னைகளை கவனப்படுத்தாமல் – அடையாளப்படுத்துகிறார்கள். இடது பாப்புலிஸ்ட்கள் மக்களின் பக்கம் நின்று கொண்டு பேசுவதான ஒரு தோரணையில் வெறும் வருமான ஏற்றதாழ்வுகளையும், வருமானத்திற்கான வழிமுறைகளையும், ஒரு சமரச வழிமுறைகளாக முன் வைக்கிறார்கள்.
பேராசிரியர் Mudde “ஆனாலும் இன்றைய வெற்றிகரமான பாப்புலிஸ்ட்கள் வலதுகள் தான்” என்கிறார்.
இந்தியா போன்ற நாடுகளின் தேர்தல் அரசியலில் இதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. நம் காலத்தில் எம்ஜிஆர் முதல் அர்விந்த் கேஜ்ரிவால் வரை அடையாளம் காணலாம்.
அடிப்படையில் பாப்புலிசம் என்றால் வர்க்கப் பார்வையை நீக்கி, ஏழைப் பணக்காரன் என்கிற எதிர்மைகளின் ஊடாக சமூகப் பொருளாதார அமைப்பையும், இயக்கத்தையும், உறவுகளையும், அவற்றின் முரண்களையும் கைவிடுதலும், கொஞ்சம் இனவாதம், நாட்டுப்பற்று, பழம்பெருமை, பாரம்பரியம் என்கிற மசாலாக்களோடு சூழலின், மக்களின் தேவைக்கேற்ப நவீன மசாலாக்கள் கொஞ்சமும் கூட கலந்து பரிமாறப்படுவதுதான்.
வளர்ந்த நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவில் உலகமயமாக்கல் மற்றும் கார்ப்ரேட் நிதி மூலதன அமைப்பு முறையால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் தினசரி வாழ்வாதார பிரச்னைகளை கண்முன்னால் இதுதான் காரணம் என்பதாகத் தெரியும் அம்சங்களை பிரதானப்படுத்தி பாப்புலிச அரசியல் வெற்றி பெறுகிறது.
மற்றொருபுறம் முன்னாள் காலனிய நாடுகளில், உலகமயமாக்கல், கார்ப்ரேட் பொருளாதார அமைப்பு, முதலாளித்துவ சுரண்டல், நிலவுடமை முறையின் மிச்ச மீதங்களால் கடுமையாக சுரண்டப்படும் மக்களுக்கு சலுகைகளையும், இலவசங்களையும், கவர்ச்சி அரசியலையும் முன் வைத்து வெற்றி பெறுவதாக பாப்புலிச அரசியல் உள்ளது.
மற்றொரு வாதம் நிறுவன எதிர்ப்பு மனநிலையை எதிர்கொள்வதற்கான காரிய சாத்தியமான அணுகுமுறையாக பாப்புலிச அரசியல் பார்க்கப்படுகிறது. பாப்புலிச அரசியலில் வலுவான, மக்கள் ஆதரவு பெற்ற கவர்ச்சிகரமான ஆளுமை முன் நிறுத்தப்படுகிறார். அவர் தன்னை எப்பொழுதும் நிறுவனமயத்திற்கு, பாரம்பரிய ஜனநாயக அமைப்பு வடிவத்திற்கும், முறைகளுக்கும் எதிரானவராக காட்டிக் கொண்டே இருக்கிறார். தனிநபர் எதேச்சதிகாரத்தை பாப்புலிசம் உயர்த்திப் பிடிக்கிறது.
பாப்புலிசம் முதலாளித்துவத்திற்கு ஏதோ ஒரு வகையில் தன்னுடைய அரசியல் நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்ள உதவினாலும், அதை தன்னுடைய முழுமையான சுதந்திரமான சமூக பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட சிக்கலாகவுமே பார்க்கிறது. அவற்றை நாம் இலவசங்கள், மானியங்கள், வரிச்சலுகைகள் துவங்கி referendum, immigration, அரசியல் ஜனநாயக நடைமுறைகள், என பல அம்சங்களிலும் காண முடிகிறது.


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்