உட்கட்சி போராட்டம் நடத்தாத கட்சிகள்

நேற்றைய விவாதம்தான் அவர் இன்றும் அமைப்பில் இருந்துக் கொண்டு பேசுகிறார் அவர்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் நான் எழுதுகிறேன்.

உட்கட்சி போராட்டம் பற்றி லியூ ஷோசி எழுதிய நூலை வாசித்து என் கேள்விகளையும் அவரின் வழிகாட்டுதலையும் தொகுத்துள்ளேன் நேரமுள்ளவர்கள் வாசித்து விவாதிக்க அழைக்கிறேன் தோழர்களே.

அமைப்பில் கேள்வி கேட்க கூடாது, எதையையும் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். நாம் வைக்கும் கேள்வி அவர்களுக்கு பிரச்சினை என்றால் அவர்களிடம் தயார் நிலையில் உள்ள ஏதாவது ஒரு முத்திரையை குத்தி வெளியேற்றி விடுவர். அந்த தயார்நிலையில் உள்ள முத்திரைகள். நீ, NGO, களைப்புவாதி, எதிரி வர்க்க கையாள், இன்னும் சில அவர்களிடம் உள்ள ரப்பட் ஸ்டாம்ப்பை நம்மீது குத்தி அணிகளுக்கு அறிவித்து விடுவர். தவறியும் அந்த தவறான, இல்லை இல்லை கேள்வி கேட்கும் நபரிடம் விவாதிக்கவோ ஏன் அவரின் கண்ணோட்டம் என்ன? அவை சரியா தவறா பரிசீலிக்க முயற்சித்ததுண்டா? மாவோ சொல்வார், விமர்சனம் என்பது நோயாளியை குணப்படுத்தும் மருத்துவனாக இருக்க வேண்டும்" என்று, இங்கே என்ன நடக்கிறது? மக்கள் அதிகார மாவட்ட அமைப்பாளர் அதிகார வர்க்கதிடம் சேர்ந்து கூட்டு கலவாணியா உள்ளார் இதனை கேளுங்கள் அவர் தோழருக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் கேளுங்கள் என்றதும், அதெல்லாம் எங்கள் வேலை, உங்கள் வேலையை பாருங்கள் என்று கண்டுக் கொள்ளவில்லை, அந்த உழைக்கும் மக்கள் விரோதியால் நான் இழந்தது சில இலட்ச ரூபாய் நான் சிவில் சமூக நடைமுறைகளை அன்று புரிந்திருக்கவில்லை. சட்ட ரீதியாக நான் நேர்கொள்ள கிடைத்த தண்டனை. 

அவர்களை விட்டு வேறொரு அமைப்பில் வந்தேன். அவர்கள் என்னை எந்தளவு வளர்த்தனர் என்ன செய்தனர் எனக்கு அளித்த பணி என்ன? எதையையும் கண்டுக்கொள்ளவில்லை. நான் நட்பு பாராட்டும் தோழருடன் நடந்த அமைப்பு பிரச்சினையில் நான் கேட்டதை பயன்படுத்திக் கொண்டனர். ஆம் நான் தோழர் பாலன் நூல் வாங்கி என்பகுதி அணிகளுக்கு கொடுக்க நினைத்தேன். ஏனெனில் எனக்கு அவரை பற்றி கிடைத்த முதல் நூல். இவர்கள் அந்த நூல் கொண்டு வரவில்லை அதனால். இவர்கள் என்மீது வைத்த குற்றசாட்டு "அந்த நூல் வாங்கியது தவறு நீங்கள் அணிகளுக்கு கொடுக்க முயற்சித்தது தவறு", என்று என்னை ஊடுறுவல்காரன் என்று முத்திரை குத்தி இவர்கள் ஆவணங்களில் பிரபளம் படுத்தியுள்ளனர். 

என்னிடம் யாராவது இந்த நூல் ஏன் வாசிக்க கூடாது? இதில் என்ன தவறு உள்ளது என்று விமர்சிதுள்ளீர்களா நியாவாங்களே? நான் அதன் பிறகு என் மார்க்சிய கல்வி கற்றல் பணியினை தொடர தொடர்ந்து வாசித்து விவாதித்து கொண்டுள்ள பொழுது உங்களை அணுகி கடிதம் கொடுத்தேன், என் மீதான விமர்சனங்கள் தவறு அவை மார்க்சிய வகைபட்டவை அல்ல அவை உங்களின் (அமைப்பின்) அகநிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்னை மட்டுமல்ல இதுபோல் அமைப்பை கேள்விக்கேடாலே எதிரியாக பாவித்து வெளியேற்றும் பண்பு உங்களின் தொற்று நோய், இருந்தும் சுயவிமர்சன ரீதியில் நீங்கள் (அமைப்பு) திருத்திக் கொள்ளவும் எங்களை சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கும் படியும் கோரியிருந்தேன். அதற்கான பதில் எனக்கு கிடைக்கவில்லை. 

ஆனால் ஒரு கட்டுரை மீது நான் விமர்சன வைத்த உடன் என் மீது கொதிதெழுந்த மாண்பை என்ன சொல்ல? அதன் பின் இலக்கு இணைய இதழ் மீதான காழ்ப்புணர்ச்சி உங்களின் மார்க்சிய லெனினிய தத்துவ போதாமையை வெளிகாட்டி விட்டது. நேற்று தலைமை பொறுபிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன் இன்று நேரட்சியாக தி.மு.க வின் தொண்டனாக மாறியுள்ள அந்த மாண்புமிகு கழிச்சடை தான் வாங்கி தின்னும் எச்சில் காசை நினைத்து இதே முத்திரை குத்தும் பொழுது ஆதாரம் அற்ற விமர்சனங்களில் மூழ்கி வீணடித்துக் கொண்டுள்ளீர் என்பதோடு என் விமர்சனத்தை முடித்துக் கொள்கிறேன். 

ஆம் தனிநபர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என்ற உங்களின் அமைப்பின் அண்மைகால நடைமுறை கவர்ச்சிவாதத்தில் வீழ்ந்து கிடக்கிறது. விடுங்கள் இவை என் புலம்பல். 

உட்கட்சி போராட்டம் பற்றி வெளியிட்டோர் எந்தளவு அணிகளுக்கு/கட்சிகளுக்கு உட்கட்சி போராட்டம் பற்றி போதித்துள்ளீர். முதலில் நூலில் சொல்லப்பட்டதை நீங்கள் புரிந்துக் கொண்டீரா? இதுவரை நடந்த சண்டைகள் எல்லாம் தலைமை போட்டியா கோட்பாட்டு பிரச்சினையா? துளியும் அறிவில்லா நீங்கள் புரட்சி நடத்தப் போகிறீர் நாங்கள் நம்ப வேண்டும்?

ஆக மார்க்சிய லெனினிய தெளிவு இல்லாமல் இந்த பிரச்சினைகளை புரிந்துக் கொள்ள முடியாது. ஆசான் களின் நூல்களை கற்றுதேறுங்கள். இல்லையேல் என்னை ஏமாற்றிய கூட்டம் உங்களையும் ஏமாற்றும் அதனை புறம் தள்ளி ஒரு சரியான புரட்சிக்கான கட்சியை பற்றி சிந்திக்க வழிகிடைக்கும்.   

மொத்தத்தில் உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட போராட்ட, வாக்குவாத வடிவமாகும். கட்சிக்குள் எல்லாம் பகுத்தறிவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்; எல்லா விசயங்களும் பகுத்தாராயப்பட வேண்டும்; ஏதொன்றுக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும்; இல்லையெனில் அது பிரயோஜனப்படாது. ஒரு விசயத்தை பகுத்தாராய்ந்துவிட்டோமானால் எதையும் கஷ்டமின்றி செய்துவிடலாம்.

விசயங்களைப் பகுத்தாராய ஏதுவாக இருப்பதற்கு உட்கட்சி ஜனநாயகமும், பிரச்சினைகளின் சிக்கலைத் தீர்க்க சாந்தமான விருப்பு, வெறுப்பு இல்லாத விவாதமும் அத்தியாவசியமாகிறது. அடக்கத்துடன் கற்றறிவதும், தோழர்களின் தத்துவப் பயிற்சியை அதிகப்படுத்துவதும், நிலைமையைப் பற்றி தெளிவான போதம் பெறுவதும், சம்பந்தப்பட்ட விசயத்தை துருவித் துருவி ஆராய்வதும், பிரச்சினைகளை வெகு கவனமாக பரிசீலிப்பதும் மிகமிக அவசியம். கவனக் குறைவாகவும், தன் மனப்போக்குடனும், கிளிப்பிள்ளை போன்றும் , நடைமுறையோடு சம்பந்தப்படாமலும் விசயத்தை பரிபூரணமாக ஆராயாமலும், நாம் விசயங்களை என்றுமே பகுத்தாராய முடியாது.

பகுத்தறிவுக்கு நாம் உடன்படவில்லையென்றால் அல்லது விசயங்களை பகுத்தாரயத் தவறினால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாறாக நாம் பலவந்தம், தந்திரங்கள், கட்சி அளிக்கும் அதிகாரம், ஏன் மோசடியைக் கூட கையாள வேண்டி வரும். அந்த விசயத்தில் உட்கட்சி ஜனநாயகம் இனி அவசியமில்லாது போய்விடும். ஏனெனில் உட்கட்சி ஜனநாயகத்திற்கு நாம் கூடி நடவடிக்கை எடுப்பதற்கு விசயங்களை பகுத்தாராய வேண்டும்.

எல்லாம் பகுத்தறிவுக்கு உடன்பாடுள்ளதாக இருக்க வேண்டும்; இல்லையெனில் உதவாது! தவறாக ஆராய்ந்தாலும் பயன்படாது! வெற்றுப் பேச்சில் காலங்கழித்தோமானால் அது இதைக்காட்டிலும் விரும்பத்தகாது. இது கொஞ்சம் கடினமான வேலை என்பது என்னமோ உண்மைதான். ஆனால் இந்த வழியாகத்தான் நாம் போல்ஷ்விக்குகள் என்ற தகுதியை பெறுகிறோம்.

தோழர்களே! உட்கட்சிப் போராட்டங்களை எப்படி நடத்துவது என்பதற்கு நான் யோசனை கூறும் சில முறைகள் இவை.

உட்கட்சிப் போராட்டங்களை நடத்துவதற்கும், கட்சிக்குள் தவறான போக்குகளை எதிர்ப்பதற்கும், ஒவ்வொரு கட்சி அங்கத்தினரின் குறிப்பாக ஊழியர்களின், கட்சி உணர்வை பரிசீலிப்பதற்கும் இந்த முறைகளை தோழர்கள் அமல்நடத்த வேண்டும்; அப்பொழுதுதான் கட்சி மேலும் சித்தாந்த ரீதியாகவும், அமைப்புரீதியாகவும் உறுதிப்படும் என்று நான் அபிப்பிராயப் படுகிறேன். இதுவே நமது லட்சியம்.- லியூ ஷோசி

கட்சி உருவெடுத்த தினத்திலிருந்தே கட்சிக்கு வெளியிலுள்ள விரோதிகளை எதிர்த்து மட்டுமல்ல. கட்சிக்குள் இருக்கும் பலவித விரோத, தொழிலாளி வர்க்க சார்பற்ற போக்குகளை எதிர்த்தும் போராடி வந்திருக்கிறது. இந்த இரண்டுவித போராட்டங்களும் வேறானவை. ஆனால் இரண்டும் அவசியம். இரண்டிற்கும் பொதுவான வர்க்க உள்ளடக்கமிருக்கிறது. நமது கட்சி இரண்டாவது விதப்போராட்டத்தை நடத்தவில்லையென்றால், விரும்பத்தகாத போக்குகளை எதிர்த்து கட்சிக்குள் சதாசர்வ காலம் போராடவில்லையென்றால், கட்சியை ஒவ்வொரு தினுசான, தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தம், இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள் முதலியவற்றிலிருந்து சதா சுத்தப்படுத்திக் கொண்டிருக்காவிடில், பின், அத்தகைய தொழிலாளி வர்க்க சார்பற்ற சித்தாந்தமும், அத்தகைய இடதுசாரி வலதுசாரி சந்தர்ப்பவாதமும் கட்சியில் மேலோங்கி, கட்சியை பாதிக்கவும், கட்சியின் மீது ஆதிக்கம் செலுத்தவும் கூடும். இது கட்சியை ஆபத்துக்கு உட்படுத்தும். அதன் சீரழிவிற்கு வழி செய்யும். அத்தகைய தொழிலாளி வர்க்கசார்பற்ற சித்தாந்தமும் இடதுசாரி, வலதுசாரி சந்தர்ப்பவாதமும் நமது கட்சியை அல்லது அதன் சில பகுதிகளின் தன்மையைக் கூட தொழிலாளி வர்க்க சார்பற்ற ஸ்தாபனமாக மாற்றவும் கூடும். உதாரணமாக இந்த முறையில்தான் ஐரோப்பாவிலுள்ள சோஷலிக் டெமாக்ரடிக் கட்சிகள் பூர்ஷ்வா சித்தாந்தத்தினால் சீர்கேடடைந்து, பூர்ஷ்வா தினுசான அரசியல் கட்சிகளாக மாற்றப்பட்டு பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரதான சமூகத்தூண்களாக ஆயிற்று.

உள்கட்சிப் போராட்டம் பிரதானமாக சித்தாந்தப் போராட்டமாகும். அதன் உள்ளடக்கம் சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயங்களிலிருந்து எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளுமாகும். சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் நமது தோழர்களிடையே எழுகின்ற திரிபுகளும், முரண்பாடுகளும் கட்சிக்குள் அரசியல் பிளவுகளில் கொண்டு செல்லலாம்; சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாத ஸ்தாபன பிளவுகளிலும் கொண்டு செல்லலாம். ஆனால் குணாம்சத்திலும் உள்ளடக்கத்திலும் அத்தகைய திரிபுகளும் முரண்பாடுகளும் அடிப்படையில் சித்தாந்தப் போராட்டங்கள்.

இதிலிருந்து ஏற்படுவதென்னவென்றால், சித்தாந்தம், கோட்பாடு முதலிய விஷயங்களில் திரிபு சம்பந்தப்படாத உள்கட்சி போராட்டமும், கட்சி அங்கத்தினர்களுக்கிடையே கோட்பாடு சம்பந்தமான விஷயங்களில் வேறுபாட்டை அடிப்படையாகக் கொள்ளாத தகராறுகளும், கோட்பாடில்லாத போராட்ட ரகத்தைச் சேர்ந்ததாகும்; உள்ளடக்கம் இல்லாத போராட்டமாகும். கட்சிக்குள் கோட்பாடோ அல்லது உள்ளடக்கமோ இல்லாத இம்மாதிரியான போராட்டம் அறவே தேவையில்லை. அது கட்சிக்குத் தீமை பயக்கவல்லது; கட்சிக்கு உதவிகரமானதன்று அத்தகைய போராட்டங்களை கட்சி அங்கத்தினர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

‘கட்சிக்குள்’ இருக்கும் முரண்பாடுகளை போக்குவதின் அடிப்படையில்தான் நமது கட்சி பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
நான் இப்போது பேச விரும்பும் பிரச்சினை உட்கட்சி போராட்டத்தை எப்படி நடத்துவது என்பது பற்றியேயாகும். நமக்கு இது இன்னும் புதிய பிரச்சினை. இன்று இந்த பிரச்சினையை எல்லோரும் கற்று வருகின்றனர். இது பரிபூரண முக்கியத்துவம் கொண்டதுதான். ஆனால் இந்தச் சமயம் இப்பிரச்சினைப் பற்றி சகல அம்சங்களையும் தழுவிய முறையில் பேச உத்தேசிக்கவில்லை. நான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சரித்திர பூர்வமான அனுபவத்தை பற்றி என்னுடைய தனிப்பட்ட முறையில் குறித்துள்ள விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட எனது அபிப்பிராயங்களை வெறுமனே சமர்ப்பிக்கிறேன். இந்த அபிப்பிராயங்கள் சரியானவைதானா என்பதைப் பற்றி விவாதிக்கும்படி எல்லா தோழர்களையும் அழைக்கிறேன்.-

லியூ ஷோசி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்ட அனுபவத்தின் அடிப்படையில் கீழ்க்கண்ட விசயங்களை தோழர்களின் கவனத்திற்கு இன்று நான் கொண்டு வருகிறேன்.

முதலாவதாக, உட்கட்சிப் போராட்டம் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், பொறுப்புமிக்கதுமான விசயம் என்று தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்; மிகக் கண்டிப்பானதும், பொறுப்புமிக்கதுமான, மனோபாவத்துடன் நாம் அதை நடத்த வேண்டும்: அதை எப்பொழுதுமே அஜாக்கிரதையாக நடத்தக் கூடாது. உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், முதலாவதாக கட்சியின் சரியான கொள்கையை, கட்சியின் நலனுக்கு பாடுபடும் தன்னலமற்ற நிலை, இன்னும் சிறந்த வேலை செய்தால் மற்ற தோழர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்கும் உதவி புரியவும், பிரச்சினைகளைப் பற்றி மேலும் சிறந்த போதம் பெறுவதற்கும் ஆன கொள்கையை பரிபூரணமாக அமல் நடத்த வேண்டும். முறைப்படுத்திய ஆராய்ச்சி, கல்வி முதலியவற்றின் மூலம் தாமே விசயங்களை பற்றியும், பிரச்சினைகளைப் பற்றியும் தெளிவு பெற வேண்டும். அதே சமயத்தில், முறைப்படுத்திய, நன்கு தயாரிக்கப்பட்ட, நன்கு வழிகாட்டப்பட்ட உட்கட்சி போராட்டங்களை நாம் நடத்த வேண்டும்.

முதலாவதாக, தான் சரியான கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும்தான், மற்றவர்களின் தவறுகளைத் திருத்த முடியும் என்பதை தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் சரியாக நடந்து கொள்வதின் மூலம்தான் மற்றவர்களின் தவறான நடத்தையைத் திருத்த முடியும். “மற்றவர்களை திருத்துவதற்கு முன்பு முதலில் ஒருவர் தன்னைத் திருத்திக் கொள்ளவேண்டும் என்பது” முதுமொழி.

தான் ஊசலாடாமல் இருந்தால்தான் ஊசலாடுபவர்கள், ஊசலாட்டத்திலிருந்து மீள்வதற்கு உதவ முடியும்.

தான் சரியான கோட்பாடுகள், தத்துவம் கொண்டு, கவசமிட்டிருந்தால்தான், மற்றவர்களுடைய தவறான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் திருத்த முடியும்.

தனக்கு கோட்பாட்டுப் பிரச்சினைகளில் தெளிவான போதமிருந்தால்தான், மற்றவர் குழப்பத்தைத் தெளிவுபடுத்த உதவ முடியும். குறிப்பான பிரச்சினைகளில் நிறைய யதார்த்தமான புள்ளி விவரங்களை தான் சேகரித்திருந்தால், அந்த பிரச்சினைகளை முறைப்படுத்தி கற்றறிந்திருந்தால்தான் மற்ற தோழர்களுக்கும், கட்சிக்கும் உதவிகரமாக இருக்க முடியும்.

ஒரு தோழர் இதைச் செய்யத் தவறினால் முதலிடத்தில் அவரே சரியான கொள்கையை கைக் கொள்ளத் தயாராயில்லையென்றால், சரியான கோட்பாடுகளை கசடறக் கற்றறியவில்லையென்றால், கோட்பாட்டின்படி யதார்த்த நிலைமையை அவர் பரிசீலனை செய்யவில்லையென்றால், முறைப்படுத்தி பிரச்சினைகளை ஆராய்ந்தறியவில்லையென்றால் அல்லது அவருக்கு ஏதும் விசேஷ குறைபாடு இருந்தாலும் சில விசயங்களைப்பற்றி அவருக்கே போதிய அளவுக்கு தெளிவு இல்லாவிட்டாலும், உட்கட்சிப் போராட்டத்தில் பிறரிடமுள்ள தவறை திருத்த முடியாது. இவையெல்லாம் இருந்தும், மண்டைக் கனத்துடன் போராட்டத்தை நடத்துவதில் பிடிவாதம் பிடிப்பார்களானால், முடிவாக அது தவறில்தான் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நமது சுயவிமர்சனமும், உட்கட்சிப் போராட்டமும், கட்சியின் அமைப்பும், ஒருமைப்பாடு, கட்டுப்பாடு, கௌரவம் முதலியவற்றிற்கு தீங்கு தேடுவதற்கோ அல்லது அதன் வேலைக்கு இடுக்கண் தேடுவதற்கோ நடத்தப்படுவதன்று. அதற்கு மாறாக கட்சி அமைப்பையும் ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தவும், அதன் கட்டுப்பாட்டையும் கௌரவத்தையும் உயர்த்தவும், அதன் வேலையைத் துரிதப்படுத்தவும்தான் அவை நடத்தப்படுகின்றன. ஆதலின் உட்கட்சிப் போராட்டம் தன்னிச்சையான போக்கிலே போகவும் அதிதீவிர ஜனநாயக வாதத்திற்கு கொண்டு செல்லவும் விடக்கூடாது; கட்சிக்குள் குடும்பத் தலைவன் தோரணையும் சரி, அதிதீவிர ஜனநாயக வாதமும் சரி இரண்டுக்குமே இடமில்லை. கட்சிக்குள் நிலவும் அசாதாரண நிலைமையின் இரண்டு அதி தீவிர பிரதிபலிப்புகள் இவை.

கட்சியின்பாலும், புரட்சியின்பாலும் மாபெரும் பொறுப்புணர்ச்சியுடன் உட்கட்சிப் போராட்டம் நடத்தப்படவேண்டும்.

இரண்டாவதாக, உட்கட்சிப் போராட்டம் அடிப்படையில், கட்சிக்குள் மாறுபட்ட சித்தாந்தம், கோட்பாடுகளுக்குள் நிகழும் போராட்டமாகும். கட்சியில் வேறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகளுக்குள் எழும் எதிர்ப்பை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது. சித்தாந்தம், கோட்பாடு சம்பந்தமாக தெளிவான வரையறுப்பு வகுப்பது இன்றியமையாத அவசியங்கொண்டதாகும். ஆனால் அமைப்பு, போராட்ட வடிவம், பேசும் தோரணை, விமர்சிக்கும் விதம் முதலிய விசயங்களில் கூடுமான வரையில் எதிர்ப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்; விசயங்களை அமைதியான முறையில் வாதம் செய்யவும் விவாதிக்கவும் தன்னாலியன்ற வரை முயல வேண்டும். அமைப்பு நடவடிக்கைகள் எடுக்காமலிருக்க, அமைப்பு முடிவுகள் எடுக்காமலிருக்க ஆனமட்டும் முயல வேண்டும்.

உட்கட்சிப் போராட்டம் நடத்துவதில், சித்தாந்தத்திலும், கோட்பாட்டிலும் ஐக்கியம் ஏற்படுத்த நாணயமான, மனம்திறந்த உருப்படியான, ஆராய்ச்சி பூர்வ மனோபாவம் காட்டுவதற்கு தோழர்கள் முயலவேண்டும். வேறு வழியில்லை என்ற சந்தர்ப்பங்களில்தான், அத்தியாவசியம் என்று கருதும் பொழுதுதான், நாம் போர்க்குணமிக்க போராட்ட வடிவங்களை கடைப்பிடிக்கக் கூடும்: அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்தலாம். எல்லா கட்சி அமைப்புகளுமே, குறிப்பிட்ட வரையறைக்குள் திருந்தாமல் தவறு செய்து வரும் ஒரு கட்சி அங்கத்தினர் மீது அமைப்பு முடிவு எடுப்பதற்கு பரிபூரண உரிமை உண்டு. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் கட்சிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுப்பதும், அமைப்பு நடவடிக்கைகளை அமல் நடத்துவதும் முற்றிலும அவசியமாகிறது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் பேதா பேதம் பார்க்காமலும், தன்னிச்சையாகவும் அமல்படுத்தக் கூடாது.

கட்சி அமைப்புகள் தோழர்களுக்கு மிதமிஞ்சிய தண்டனை விதிப்பதனால் மட்டுமே கட்சிக் கட்டுப்பாடு நிலைநாட்டக் கூடியதன்று. கட்சிக் கட்டுப்பாடு, கட்சி ஐக்கியம் முதலியவற்றை நிலைநாட்டுவதென்பது பிரதானமாக தோழர்களை தண்டிப்பதில் அடங்கியிருக்கவில்லை. (இந்த முறையில்தான் அவை நிலைநாட்டப்பட வேண்டுமெனில்,  கட்சியில் நெருக்கடியிருக்கிறது என்பதையே அது காட்டும்). அதற்குப் பதிலாக அது சித்தாந்த ரீதியாகவும், கோட்பாடு பூர்வமாகவும் உள்ள யதார்த்த ஒற்றுமையிலும், பெருவாரியான கட்சி அங்கத்தினர்கள் உணர்விலும் அடங்கியிருக்கிறது. இறுதியாக நாம் சித்தாந்தம் பற்றியும், கோட்பாடு பற்றியும் முற்றிலும் தெளிவு பெற்று விட்டோமானால், அவசியம் ஏற்படும் பொழுது அமைப்பு முடிவுகள் எடுப்பதென்பது நமக்கு வெகு சுலபமாகும். கட்சி அங்கத்தினரை நீக்குவதற்கும், தானாக கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பதற்கும் ஒரு நிமிடம் கூட பிடிக்காது.

மாறுபட்ட சித்தாந்தங்கள், கோட்பாடுகள் சம்பந்தமாக தோழர்கள் காட்டும் பிடிவாதம், எதிர்ப்பு, முன்வைக்கும் வாதங்கள் முதலியன கட்சி அமைப்பிற்கும், பெரும்பான்மைக்கு, மேல்கமிட்டிக்கு கீழ்படிவதிலிருந்து பிரிக்க முடியாதவையாகும். இல்லையென்றால் கட்சி ஐக்கியம், நடைமுறை ஒற்றுமை ஆகிய எதுவுமே இருக்கமுடியாது. தோழர்கள் கோட்பாட்டிற்கு பிடிவாதம் பிடிப்பதினால், எப்பொழுதுமே கட்சியை அமைப்பு ரீதியாக எதிர்க்கவோ, பெரும்பான்மையையும் உயர்மட்ட தோழர்களையும் மீறவோ, சுயேச்சையான நடவடிக்கைகளில் இறங்கவோ கூடாது. அது கட்சியின் அடிப்படை கட்டுப்பாட்டை மீறும் செயலாகும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்