இலக்கு இணைய இதழ் 63

 இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1). தொழிற்சங்கங்கள் குறித்து மார்க்சிய ஆசான்கள் பாகம்-2

2). நேர்மையான நாள் வேலைக்கு நேர்மையான நாள் கூலி. - எங்கெல்ஸ்

3).மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை. ஜார்ஜ் தாம்ஸன்.பாகம் - 1.

4).கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்ற முறையும்.பாகம் 1.

5). கம்யூனிசமும் கம்யூனிஸ்ட்டுகளும்


ஒடுக்குமுறையை மூடிமறைத்துவிட்டு பகைவர்க்கங்கள் சமாதானமான முறையில் சீர்திருத்த வழியிலேயே சமத்துவமாக வாழ முடியும் என்று கூறுபவர்கள், மார்க்சியம் முன்வைத்த வர்க்கப் போராட்ட கோட்பாட்டை மறுக்கும் துரோகிகள், இவர்கள் ஒருபோதும் மார்க்சிய லெனினியவாதிகள் ஆகமாட்டார்கள். இவர்கள் உண்மையில் மார்க்சிய லெனினியத்தின் எதிரிகளே ஆவார்கள்.

வர்க்கப் போராட்டம்தான், சமகாலத்திய சமூக வாழ்வின் அச்சாணியான விசயமாகும். இந்தப் போராட்டத்தின் வளர்ச்சியில், ஒவ்வொரு வர்க்கமும் தனது சொந்த சித்தாந்தத்தால் வழிகாட்டப்படுகிறது. முதலாளித்துவ வர்க்கம் தனக்கென ஒரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த சித்தாந்தம் தாராளவாதம் என்று அழைக்கப்படுகிறது. இது போலவே, பாட்டாளி வர்க்கமும் தனக்கென பிரபலமானதொரு சித்தாந்தத்தைக் கொண்டுள்ளது. இந்த மார்க்சிய லெனினிய சித்தாந்தம் உழைக்கும் மக்களின் விடுதலைக்கான பாதையை காண்பிக்கிறது. அதனை விடுத்து சீர்திருத்தவ வகைபட்ட முதலாளித்துவ சந்தர்பவாத சித்தாந்தம் மார்க்சியம் அல்ல.

சோசலிசமானது மூன்று பிரதானப் போக்குகளாகப் பிரிந்துள்ளது. அவை சீர்திருத்தவாதம், அராஜகவாதம், மார்க்சியம் ஆகியவையாகும்.-ஸ்டாலின்

பெர்ன்ஸ்டின் வகையறாக்கள் சீர்திருத்தவாதத்தை உயர்த்திப் பிடிக்கின்றனர். சோசலிசம் ஒரு தொலைதூர இலட்சியமே ஒழிய, வேறொன்றுமல்ல என்று இவர்கள் கருதுகின்றனர். அமைதியான வழிமுறைகளிலேயே சோசலிசத்தை அடைவதில் அவர்கள் குறியாக உள்ளனர். சீர்திருத்தவாதமானது, வர்க்கப் போராட்டத்தை ஆதரித்து வாதிடாமல், வர்க்க சமரசத்துக்காக நிற்கிறது. இது நாளுக்கு நாள் கெட்டழுகிக் கொண்டும், சோசலிசத்தின் எல்லா அடையாளங்களையும் இழந்து கொண்டும் இருக்கிறது.

அராஜகவாதிகளின் “பின்னால் ஆட்கள் ஒன்றும் அதிகமில்லை : ஆகவே, அவர்களால் அபாயம் ஏதுமில்லை” என்று நினைத்து தம்மைத்தாமே ஆறுதல்படுத்திக் கொள்ளும் இரகத்தைச் சேர்ந்தவர்களும் அல்ல நாங்கள். இன்றைக்கு அதிகமான அல்லது குறைவான “மக்கள் செல்வாக்கு” யாருக்கு உள்ளது என்பதல்ல பிரச்சினை; ஆனால் யாருடைய தத்துவத்தின் சாரம் சரியானது என்பதே பிரச்சினை. அராஜகவாதிகளின் “தத்துவம்” உண்மையை வெளிப்படுத்துமானால், அவர்கள் தமக்கென ஒரு பாதையை நிச்சயம் அமைத்துக் கொள்வார்கள் என்பதும், பரந்துபட்ட மக்களை தம்மைச் சூழ்ந்து அணிதிரட்டிக் கொள்வார்கள் என்பதும் சொல்லாமலே விளங்கக்கூடிய விசயம்தான். இருப்பினும், அவர்களுடைய தத்துவம் உண்மை ஆதாரம் அற்றதாகவும், பொய்யான அடிப்படைகளின் (அஸ்திவாரம்) மீது கட்டப்பட்டதாகவும் இருக்குமானால், அந்தத் தத்துவம் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாமலும் அந்தரத்தில் தொங்குவதாகவும் இருக்கும். ஆகையால், அராஜகவாதத்தின் ஆதாரமற்ற தன்மை நிரூபிக்கப்பட்டாக வேண்டும்.

மார்க்சியமும் அராஜகவாதமும் ஒரே வகைப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையைக் கொண்டுள்ளதாகவும், அவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் செயல்தந்திரங்கள் தொடர்பானவை மட்டுமே என்றும் சிலர் நம்புகின்றனர். இவ்விரு போக்குகளுக்கு இடையில் எத்தகைய வேறுபாட்டையும் கண்டறிய முடியாது என்றும் இவர்கள் கருதுகின்றனர். இது மாபெரும் தவறு, மார்க்சியத்தின் உண்மையான எதிரிகள் அராஜகவாதிகள் என்று நாங்கள் நம்புகிறோம்.

இதற்கேற்ப உண்மையான எதிரிகளுக்கு எதிராக, உண்மையிலேயே கடுமையான போராட்டம் நடத்தப்பட்டே தீரவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆகவே, அராஜகவாதிகளின் தத்துவத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை பரிசீலிக்க வேண்டும் என்றும், அவர்களின் எல்லா தத்துவக்கூறுகளையும் சீர்தூக்கி மதிப்பிடுவது அவசியத் தேவை என்றும் நாங்கள் கருதுகிறோம். (அரசும் புரட்சியும் நூல் பக்கம் 7 – 9)

முதலாளித்துவத்தைத் தூக்கியெறிவதும் சோசலிசத்தைக் கட்டியமைப்பதுமான தனது திட்டத்தை உணர்வுபூர்வமாக நிறைவேற்றுவதற்கு பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய வேண்டும்? எந்தப் பாதையை மேற்கொள்ள வேண்டும்? – இதற்கான விடை மிகத் தெளிவானது.

முதலாளித்துவ வர்க்கத்துடன் சமாதானம் செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்கம் சோசலிசத்தை அடைவதைச் சாதிக்க முடியாது. தவறாமல் போராட்டப் பாதையை அது மேற்கொள்ள வேண்டும்; இந்தப் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தாக வேண்டும்; முதலாளித்துவ வர்க்கம் முழுவதற்கும் எதிராக, பாட்டாளி வர்க்கம் முழுவதும் தொடுக்கும் போராட்டமாக அது இருக்க வேண்டும். ஒரு பக்கம் முதலாளித்துவ வர்க்கமும் அதன் முதலாளித்துவமும்! அல்லது இன்னொரு பக்கத்தில் பாட்டாளி வர்க்கமும் அதன் சோசலிசமும் ! இரண்டில் எது என்ற கேள்வியை பாட்டாளி வர்க்கம் எப்போதும் முன் வைக்க வேண்டும். இதுதான், பாட்டாளி வர்க்கத்தினுடைய நடவடிக்கைகளின் அடிப்படையாக, அதனுடைய வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையாக தவறாமல் இருக்க வேண்டும்.(அதே நூல் மேல் பக்கதில்)

இலக்கு 63 இணைய இதழை பதிவிறக்கம் செய்து வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே








இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்