லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணிதான்.
கேள்வியை இடையறாது எழுப்புவதும், அதற்கான விடை காண்பதும் செயல் வியூகத்தை வகுத்து செயல்படுவதும்தான் லெனினது மகத்துவம்!
உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒரு மிகப் பெரிய சவாலாக நீடித்து வருகிற ஒரு பிரச்னை உண்டு. அது என்ன பிரச்னை? தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால். இதற்கு லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது.
சொந்த வாழ்க்கையில் சொந்த நோக்கங்கள் அவருக்கு இருந்ததாக எதிரிகள்கூட எழுதவில்லை. பாட்டாளி வர்க்க விடுதலை, உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிதான் அவரது மூச்சு.
லெனினுடைய எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட வேண்டும் என்று காமனாவ் கூறியபோது,’ முழுக்க முழுக்க தேவையற்ற வேலை’ என்று லெனின் குறிப்பிட்டார். ‘பழைய எழுத்துக்களை மீண்டும் பிரசுரித்தால் நாம் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறோம் என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, அதனை மறுத்தார்.
பிறகு அவரிடம் ‘உங்கள் எழுத்தை பிரசுரிக்காமல் இருந்தால் எதிரிகளுடைய எழுத்துக்களை வருங்கால தலைமுறை படிப்பார்கள்” என்று சக தோழர்கள் பிடிவாதமாக இருந்ததால், அதனை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உறுதியாக இருந்ததனால்தான் உலகிற்கு புரட்சிகர சிந்தனை பெட்டகம் கிடைத்தது. 45 தொகுதி நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றும், ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்டவை. இன்னமும் அவரது எழுத்துக்கள் ஏராளமாக வெளிவர வேண்டியுள்ளது.
கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை. இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும்.
மார்க்சியம் ஐரோப்பிய தத்துவமா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் சர்வதேச கம்யூனிச இயக்கமானது மார்க்சிய லெனினிய தத்துவத்தை ஒவ்வொரு நாட்டின் நடைமுறையோடு பொருத்திப்பார்த்து ஒவ்வொருநாட்டின் பிரச்சனையையும் தீர்த்து வெற்றி கொள்ள முடியுமா? என்ற சவாலை எதிர்கொள்கிறது. இந்த சவாலை ரஷ்ய மற்றும் சீனக் கம்யூனிஸ்டுகள் எதிர்கொண்டு மார்க்சிய தத்துவத்தை அவர்களது நாட்டின் நடைமுறையோடு இணைத்து வெற்றி கொண்டார்கள். அவர்களைப் பின்பற்றி ஒவ்வொரு நாட்டு கம்யூனிஸ்டுகளும் இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதற்கு லெனினியம் வழிகாட்டுகிறது. அதற்கு லெனினது எழுத்துக்களை வாசித்து சமகால பிரச்சனைகளோடு பொருத்திப் பார்த்து விடை காணுவதற்கான பயிற்சியைப் பெறுவதும் ஒரு வகையான புரட்சிப் பணியாகும்.
தத்துவத்தின் பணி சமூகத்தை விளக்குவது மட்டும் அல்ல. அதை மாற்றியமைக்க வழிகாட்டுவதாக இருக்க வேண்டும் என்னும் மார்க்சின் கூற்றுப்படி மானுட விடுதலைக்கு வழிகாட்டும் தத்துவமாக விளங்குவது மார்க்சியத் தத்துவமே.மக்கள் அத்தத்துவத்தை இறுகப் பற்றிக் கொள்ளும்போது அது மாபெரும் பொருண்மைச் சக்தியாக மாறும், அதைத்தான் வரலாறு திரும்பத் திரும்ப மெய்ப்பித்து வருகிறது. மக்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்குப் புரட்சிகரமான மார்க்சியத்தைப் பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும்,அல்லது சித்தாந்தமாகும்.இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவமாகும்.
மார்க்சிய சித்தாந்தமானது மனித சமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்னமாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப் போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவையல்ல. அவை சில நுண்ணியவிதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவுப்படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை, பொதுவான வழிகாட்டு தலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது. ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது.
மார்க்ஸ் ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார் என்பது உண்மையே. ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார். குறிப்பான ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால் உணர முடியாது.
ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக் கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது.
ஆனால் உலகளாவிய சோஷலிச மாற்றம் நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின் பொதுக் கோட்பாடுகளை கண்டறிந்தவர் லெனின். லெனினியத்தின் மகத்துவம் இது. இதனையும், ஆழ்ந்த வாசிப்பு இல்லாத சாதாரண ‘அறிவுஜீவிகள்’ உணர வாய்ப்பில்லை.
“லெனின் எப்போதுமே பிரச்சனைகளை இந்த சகாப்தத்தின் பிரச்னைகள் என்ற முழுமைத் தன்மையுடன் பார்த்தார்”என்று எழுதுகிறார்.
இதில் முக்கிய சில அம்சங்கள் அடங்கியிருக் கின்றன. முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக தற்போதைய காலம் விளங்குகிறது.இது, பாட்டளி வர்க்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திட எண்ணற்ற வாய்ப்புக்களை தவிர்க்க இயலாதவாறு இன்றைய நிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது. இந்த இறுதிப் போராட்டமே, மனித விடுதலைக்கு இட்டுச்செல்லும். இதுவே லெனினிய சிந்தனைகளின் அடிப்படை.
வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதி கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம்.
புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப் பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது.
முதலாளித்துவ அரசு ஒரு மைனாரிட்டி அரசு. ஏனெனில் அது சமூகத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறது. அந்த அரசு உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டுவதற்கும் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் இடையறாமல் முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை வராமல் தடுத்து, அது புரட்சிகர சக்தியாக வளர்ந்திடாமல் தடுக்க, இடைவிடாமல் முயன்று வருகிறது. எனவே அரசு பற்றிய பிரச்னைகளும், அதனை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும் பிரச்னைகளும் முக்கியமானதாக லெனினியம் கருதுகிறது.
மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.
லெனின் புரட்சி பற்றித்தான் 24 மணி நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார் என்றால் அது மிகையாகாது. மார்க்ஸீய நிலைபாட்டில் நின்று, கள அனுபவங்களின் அடிப்படையில், சமகால அரசியல், சமூக, பண்பாட்டு, பொருளாதார தளங்களில் மார்க்ஸீய புரிதலை மேம்படுத்திக்கொண்டே இருந்தவர் லெனின். அந்த அடிப்படையில், அவர் வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவில் சோசலிச புரட்சி வெற்றிபெற தொழிலாளி-விவசாயி கூட்டு என்பது இன்றியமையாதது என்ற நிலைப்பாட்டிற்கு ஆழமான கள அனுபவமும் (குறிப்பாக, 1905 ரஷ்ய விவசாயிகளின் எழுச்சி) மார்க்சீய புரிதலும் லெனினை இட்டுச்சென்றது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜனநாயக புரட்சியில் விவசாயிகளின் பங்கு பற்றி லெனின் முன்வைத்த புரிதல் மார்க்சீயத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் எனலாம்.
முழுமையாக கீழ் உள்ள இணைப்பில் pdf வடிவில்
நாளை வேறொரு தலைப்பில் ரசிய புரட்சியை ஆசான் லெனினின் எப்படி நடத்த வழிகாட்டல் அனத நிகழ்வுகளை தேடிய பயணம் தொடரும் தோழர்களே...