இவை நான் பலமுறை எழுதியும் ஏனோ இவை தொடக்கம் என்ற மனநிலையிலே மீண்டும் மீண்டும் எழுத வேண்டியுள்ளது.நீண்ட கட்டுரை இடதுசாரிகள் பொதுவுடமைவாதிகள் எப்படியுள்ளனர் அவர்கள் புரட்சிக்கான பணியில் எந்த இடத்தில் உள்ளனர் என்பதனை தேடிய ஒரு பகுதிதான் இவை முழுமையல்ல வாசியுங்கள் வாருங்கள் திறந்த விவாதத்திற்கு தோழர்களே
பொதுவுடமைக் கட்சியின் நோக்கம் சமூக மாற்றமே. இது செயல்பாட்டுக்கான இயக்கமாகும் கட்சி என்பது பிழைப்புவாதிகளின் கூடாரம் அல்ல.பொதுவுடைமை இயக்கம் பாட்டாளி வர்க்க தத்துவத்தால் தலைமை தாங்கப்படும் இயக்கமாகும் . ஒரு பொதுவுடமை கட்சி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதலோடு தொடர்பு படுத்தி காண வேண்டும். சமூக மாற்றத்திற்குரிய குறிக்கோள்களை வரையறை செய்தலை கட்சியின் திட்டம் ஆகும். புரட்சிக்கான திட்டத்தை வழிமுறை களை கண்டறிந்து அதனை வழிகாட்டியாக கொண்டு மக்களை புரட்சிகர இயக்கத்தின்பால் இருக்கும் நடைமுறை சாத்தியமான நடவடிக்கைகள் தான் நடைமுறை தந்திரம் என்கிறோம்.
நம்மத்தியில் உள்ள இரண்டு தீர்மானகரமான போக்கை பற்றி ஆய்வு செய்வோம்.
1). பாராளுமன்றத்தின் மூலம் சோசலிசம் அடைவதை பேசுவோரும்.
2).பாராளுமன்றத்தை நிராகரிப்போர்.
பாராளுமன்றம் பற்றிய நமது ஆசான்கள்
ஒரு புரட்சிகர கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கான சிறந்த எடுத்துகாட்டாக “போல்ஷ்விக் கட்சி” நடைமுறை அரசியலில் சுயவிமர்சணத்தோடு இயங்கி உலக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பாதை அமைத்து சென்றுள்ளது.
ஜார் மன்னர்களின் கொடுமையை ஆரம்பகாலம் முதல் மக்கள் சில இடங்களில் எதிர்த்தும். கிளர்ச்சி செய்து கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.
மார்க்சியம் வருவதற்கு முன்பே மக்களின் எதிர்புணர்வு கொண்ட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் சில இடங்களில் தற்காலிகவெற்றியும் பெற்றியிருக் கிறார்கள். விவசாயிகள் தொழிலார்கள் இணைப்பு இல்லாமால் சரியான அரசியல் தலைமை இல்லமால் நடந்திருக்கிறது. இதுபோக ஜெர்மன் பொதுவுடமை கட்சி, பெண்கள் தலைமையிலானகுழு, மக்களை அரசியல்படுத்தும் எழுத்தாளர்கள், செஞ்சேனைபடை, லெனின், ஸ்டாலின், ஏன் பின்னர் துரோகிகளாக மாறிப்போன டிரட்ஸ்கி, கமனோவ், இன்னும் எனது வாயில் நுழையாத பெயர்களை கொண்ட போல்ஷ்விக் தோழர்கள் என அனைவரும் ஒரே நேர்கோட்டு திசையில் இல்லமால் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் தனக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.அப்படிபட்ட மார்க்சிய லெனின்ய கண்ணோட்டம் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் குறிப்பாக இந்தியாவில் தேர்தல் அரசை நம்பி அல்லது நிகழ்கின்ற அரசோடு நட்பு பாராட்டி பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டு மக்களுக்கு எதிராக ஆளும் வர்க்க தேவைக்காக பணி செய்யும் NGOவாக செயல்படுவது தான் மிகவும் வேதனையாக இருக்கிறது. இன்னொரு பக்கம் ஏகாதிபத்திய எதிர்பரசியலை பேசிக் கொண்டே குறுங்குழுவாத குட்டிமுதலாளித்துவ பண்புகளை முன்னிறுத்தி செயல்படும் கொண்டிருக்கும் மா-லெ குழுக்கள். கமியூனிஸ்டுகளின் அறிவு களஞ்சியமான மார்க்கசிய லெனினிய கோட்ப்பாடுகளை மக்கள் மத்தியில் நீர்த்துபோக செய்து வருகிறார்கள்.
- தனிமனித விருப்பு மகிழ்வுதான் சிறந்த வாழக்கையாக உழைக்கும்மக்கள் நலம்சார்ந்த அரசியல் புரட்சியெல்லாம் வீண்வேலை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதில் வெற்றியும்பெற்று வருகிறது இங்குள்ள எதிர்புரட்சிகர சக்தி.
அனைவரையும் அரசியல் படுத்தவேண்டிய பணி நம்முடையது அது கடிணமான பணியாகயிருக்கலாம் “எது கடினமான பணியோ அதுவே நாம் செய்து முடிக்க வேண்டிய முதல் பணி” என்றார் லெனின்...
இந்த அரசானது தனிசொத்தின் பாதுகாவலன்தான் பணம் படைத்தவன் அதிகாரம் படைத்தவன் எந்த பயமும் இன்றி கொடுமைகள் நடத்துவதும், கடைநிலையில் உள்ள மக்கள் அடுத்தவேளை உணவுக்கு கூட வழியின்றி வதங்கி சாவதும். இதனை ஆளும் வர்க்கத்தின் அரசின் தூண்கள் கண்மூடி கடந்து செல்வதை தினநிகழ்வுகளாக நாம் இச்சமூகத்தில் காண முடியும்.
இன்னும் விரிவாக புரிந்துக் கொள்ள அண்மை பட்ஜெடில் உள்ள 18% ஜி.எஸ்.டி பேரு பொருளான உயிர் காப்பீடுதான்.
நாட்டில் உள்ள எல்லா தொழிலாளிகளின் வாழும்வுரிமைக்கான காப்பீடுதான் ஆம் ஆத்மி பீமா யோஜனா அவற்றை பற்றி சிறிது தெரிந்துக் கொள்வோம். கீழ்காணும் தகவல் அரசின் செய்தி குறிப்பே:-
நாட்டின் மொத்த தொழிலாளர்களில் 93% அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் ஆவர். சில தொழில் குழுக்களுக்கு அரசாங்கம் சில சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது, ஆனால் பாதுகாப்பு மிகக் குறைவு. பெரும்பான்மையான தொழிலாளர்கள் இன்னும் எந்த சமூக பாதுகாப்பும் இல்லாமல் உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. வறுமைக்கு வழிவகுக்கும் சுகாதார செலவினங்களின் அபாயத்திலிருந்து ஏழை குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளித்தல். இருப்பினும், கடந்த காலங்களில் சுகாதார காப்பீட்டை வழங்குவதற்கான பெரும்பாலான முயற்சிகள் வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தல் இரண்டிலும் சிரமங்களை எதிர்கொண்டன. ஏழைகள் மருத்துவக் காப்பீட்டின் செலவு, அல்லது உணரப்பட்ட நன்மைகள் இல்லாததால் அதை எடுக்க முடியவில்லை அல்லது விரும்புவதில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் சுகாதார காப்பீட்டை ஏற்பாடு செய்து நிர்வகிப்பதும் கடினம்.
நாம் புரிந்துக் கொள்ள:- புற்றீசல் போல் முளைத்துள்ள காப்பீட்டு நிறுவனங்கள் கோடிக் கோடியாய் கொள்ளை அடிக்கிறது. ஆனால் இழப்பீட்டு தொகை அந்த ஏழைஎளிய மக்களுக்கு போய் சேர்கிறதா எனும் பொழுது யானை பசிக்கு சோளப்பொறியாக உள்ளது எனலாம். 25 லட்சம் கோடியை பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வாரி வழங்கியுள்ள இவர்கள் நாட்டில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை பற்றி கண்டுக் கொள்வதே இல்லை எனலாம்.இவ்வாறாக செயல்படும் பாராளுமன்ற ஜனநாயகத்தை பற்றி நமது மார்க்சிய ஆசான்கள் தெளிவுப்படுத்தியுள்ளதை புரிந்துக் புரிந்து கொண்டிருக்கிறார்களா?
பட்ஜெட்டுக்கு பின்னர் பாராளுமன்ற நடவடிக்கைகள் என்ன தெளிவுபடுகின்றன? அதில் பாராளுமன்றம் யாருக்கானது என்பதனை ஆனால் பாராளுமன்றமாயையில்மூழ்கியுள்ளஇடதுசாரிகள் குறிப்பாக பாராளுமன்றத்தில் பங்கேற்பதையும் பாராளு மன்றத்தின் செயல்பாடுகளை மக்களுக்கு எப்படி புரியவைக்க வேண்டும் என்பதையும் நமது ஆசான்களின் வலியுறுத்தலை மிகத் தெளிவாகப்பாராளுமன்ற ஜனநாயகத்திற்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்திற்கும் உள்ள வேறுபாடுகளையும் ஏன் பாராளுமன்றத்தை கலைத்து பாட்டாளி வர்க்க ஜனநாயகமான சோசலிசத்தை நிறுவ வேண்டும் என்பதை தெளிவாக்காமல் உள்ளனர்.
பாரிஸ் கம்யூன் படிப்பினைகளானது பாராளு மன்றமானது வரலாற்று ரீதியாக காலாவதி ஆகிவிட்டது என்பதை கட்டியம் கூறியது. இருந்தும் பல நாடுகளில் இன்றும் பாராளுமன்றம் கட்டிக் காக்கப்படுகிறது. ஆக மக்களுக்கு உண்மையாலுமே அவர்களுக்கான ஜனநாயகம் என்பது இந்த முறையில் இல்லை என்பதை உணர்த்தும் அதே வேளையில் அதற்கான பணியினை இடதுசாரிகள் செய்ய வேண்டும் அதனை செய்கிறார்களா?
ஜனநாயகக் குடியரசு என்று சொல்லப்படும் ஒரு அரசும் கூட ஒரு வர்க்கத்தை இன்னொரு வர்க்கம் அடக்குமுறை செய்வதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு எதுவும் இல்லை. ஆக ஜனநாயகமான ஒரு முதலாளித்துவக் குடியரசு முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தையும், விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில முதலாளிகள் பெரும் திரளான உழைக்கும் மக்களையும் ஒடுக்கப் பயன்படும் ஒரு இயந்திரமாகவே உள்ளது. ஆக சுதந்திரமான ஒரு குடியரசிலும்கூட முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு முதலாளித்துவவர்க்க சர்வாதிகார மாகவே இருக்கின்றது. மேலும் தற்கால ஏகாதிபத்திய முதலாளித்துவ அரசுகளில் ராணுவ வகைப்பட்ட சர்வாதிகாரம் நிறுவப்பட்டிருப்பதையும் காணலாம். இது அரசு பற்றிய ஜனநாயக குடியரசு பற்றிய மார்க்சிய-லெனினியப் போதனை ஆகும். தற்கால முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசுகள் அனைத்தும் இந்த அரசு இயந்திரத்தை நீடித்து வைத்திருக்கின்றன. எனவே “பொதுவான ஜனநாயகம்” என்று ஆரவாரத்துடன் கூக்குரலிடுவது உள்ளபடியே முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சுரண்டலாளர்கள் என்ற முறையில் அவர்களது தனியுரிமைகளையும் ஆதரிப்பதே ஆகும் என லெனின் எடுத்துரைத்தார். முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ நாடாளுமன்ற அமைப்பு முறையின் கீழ் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் ஒரு சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சொத்துடமை வர்க்கங்களின் எந்த பிரதிநிதி நாடாளுமன்றத்தில் “மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவர் மற்றும் அடக்குவார்” என்பதை முடிவு செய்யும் உரிமைகளை அனுபவிக்கின்றன என்ற மார்க்சியப் போதனையை லெனின் திரும்பத் திரும்ப நினைவூட்டினார்.பாட்டாளி வர்க்கப் புரட்சியின் அனைத்தையும் தழுவிய விதிகளில் ஒன்றான பலாத்காரப்புரட்சி என்ற விதியையும், பழைய அரசு நிறுவனங்களை ஒழித்துக் கட்டுவதின் அவசியத்தையும் ஆளும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதனிடத்தில் பாட்டாளிவர்க்கத்தின் தலைமையின் கீழ் ஆளப்படும் வர்க்கங்களின் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும் உள்ள அமைப்பு முறையினிடத்தில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதின் அவசியத்தையும், பண்டைய திருத்தல்வாதிகளிலிருந்து நவீனதிருத்தல் வாதிகள் வரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். சமாதான மாற்றத்திற்கு வாய்ப்புண்டு என்று வாதிடுகின்றனர்.இங்கேதான் நமக்கான படிப்பினைகள் உள்ளன அதனில் தெளிவடையவும்.
சமாதான மாற்று பாதைக்காக வாதிட்ட பழைய திருத்தல் வாதிகள் தங்களது வாதத்திற்கு நியாயம் கற்பிப்பதற் காக, 1870- களில் அமெரிக்க இங்கிலாந்துபோன்ற நாடுகளில் “தொழிலாளர்கள் தங்கள் இலட்சியத்தைசமாதான முறையில் அடைய முடியும்” என்று மார்க்ஸ் கூறியதை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
கம்யூனானது முதலாளித்துவ அரசு இயந்திரத்தையும் அதிகாரவர்க்கம் நீதித்துறை இராணுவம் மற்றும் போலீஸ் இயந்திரம் ஆகியவற்றின் அடித்தளம் வரைக்கும் சென்று அவற்றை நசுக்கவும் முயன்றது. சட்டமியற்றல் மற்றும் நிர்வாக அதிகாரத்திற்கு இடையே பிரிவினை இல்லாத தொழிலாளர் திரளின் ஒரு சுயாட்சி நிர்வாக நிறுவனம் மூலம் மாற்றீடு செய்ய முயன்றது இம்முயற்சிகளில்தான் உண்மையிலே கம்யூனின் முக்கியத்துவம் அடங்கி இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டி பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைப் பற்றிய மார்க்சீய போதனையை எல்லா வகையான சந்தர்ப்பவாதி களின் தாக்குதலில் இருந்து பாதுகாத்தார்.
பாரீஸ் கம்யூனின் அனுபவத்திற்கு பிறகு மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்து வர்க்கத்தினால் தயார் நிலையில் வைக்கப் பட்டிருக்கும் அரசு இயந்திரத்தை தொழிலாளி வர்க்கம் அப்படியே எடுத்துக் கொண்டு அதைத் தனது குறிக்கோளுக்குப் பயன்படுத்த முடியாது, அதை தகர்த்தெறிய வேண்டும் என்று எடுத்துரைத்த புரட்சியைப்பற்றிய அடிப்படையான விதியை லெனின் உறுதியாக ஆதரித்ததுடன் அதை மேலும் செழுமைப்படுத்தினார்.
புரட்சியின் உயிர்நாடி: மார்க்சிய-லெனினிய போதனையின்படி ஒவ்வொரு புரட்சியிலும் உயிர்நாடியான பிரச்சினை அரசு அதிகாரப் பிரச்சினைதான். பாட்டாளி வர்க்கப் புரட்சியில் உயிர் நாடியான பிரச்சினை பாட்டாளிவர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் பொருட்டு, முதலாளித்துவ அரசு அதிகார நிறுவனங்களைப் பலாத்காரத்தின் மூலம் ஒழித்துக் கட்டி, பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தை நிறுவுவதும், முதலாளித்துவ அரசை அகற்றி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசை நிறுவுவதும் ஆகும்.
திருத்தல்வாதிகளுக்கு எதிரான லெனினின் போராட்டம். மேலும் லெனின் கூறினார் "புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு முதலாளித்துவ பாராளு மன்றத்தில் பங்கெடுக்க வேண்டும் தேர்தலின் போதும் பாராளுமன்றத்தில் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் போராட்டங்களின் போதும் அவ்வாறுசெய்ய முடியும். ஆனால் வர்க்கப்போராட்டத்தை பாராளுமன்ற போராட்டமாக குறுக்கி விடுவது பாராளுமன்ற போராட்டத்தை உயர்ந்த பட்ச தீர்மானகரமான வடிவமாக்கி அனைத்துப்போராட்ட வடிவங்களையும் இதற்கு உட்பட்டவே ஆக்குவது உண்மையில் பாட்டாளி வர்க்கத்துக்கும் எதிராகமுதலாளிவர்க்கதினரின் பக்கம் ஓடி விடுவதாகும்" ( லெனின் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தலும் பாட்டாளி மக்கள் சர்வாதிகாரம் பக்கம் 36 ஆங்கில பதிப்பு மாஸ்கோ).
உலகமயம் 1980 இல் துவங்கியது இது ஒரு பன்முக நிகழ்ச்சி போக்கு. பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் உலகமயமானது ஒரு குறிப்பிட்ட திசையில் செயல்படுகிறது. இந்த உலகமயமானது உலக நாடுகளையே தீர்மானிக்கும் சக்தியாக பொருளாதார மாற்றங்களில் விளங்குகின்றன. இன்றைய உலகமயமானது ஏகதிபத்தியத்தின் உலகமயம் இது முதலாளித்துவ தற்கான ஒரு புதிய கட்டமாகும். பின்தங்கிய நாடுகளிலும் தங்களின் சந்தைக்காக சுரண்டலுக்காக என்னென்ன செய்துக் கொண்டுள்ளனர்.
உலகமயம் பற்றிய அரசியல் பொருளாதார ஆய்வை முதலாளித்துவத்தின் இயல்புகளில் ஒன்றாக அணுகி விளக்கியவர்கள் காரல் மார்க்சும் எங்கெல்சும் ஆவர்.
உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேலும் மேலும் உற்பத்திதிறன் உள்ளதாக மாற்றியதன் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றி .... சமூகத்தின் ஒட்டுமொத்த உறவுகளை மாற்றினால் .... என்று தொடங்கும் சமூக விதிகளை பற்றிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசித்த முதலாளித்துவம் தனக்கான விதிகளை உலகமயமாக்கல் மூலம் செயல்படுத்திக் கொண்டுள்ளது.
செய்தி தொடர்பு சாதனங்களின் மிகப் பரந்த அளவில் மேம்பாடுஅடைந்துள்ளதால்முதலாளித்துவவர்க்கமானது எல்லா நாடுகளையும் மிகவும் பின்தங்கி அநாகரிக நாடுகளைக் கூட நாகரீகத்துக்கு கட்டி இழுத்து வருகிறது அதன் உற்பத்தி பண்டங்களின் மலிவான விலைகள் சீன சுவர் போன்ற பெரும் தடை சுவர்களை தகர்த்தெறியும் பீரங்கிகள். அதை வேற்று நாட்டின் பால் அநாகரிக மக்கள் கொண்டுள்ள மிகவும் பிடிவாதமான முகத்தைக் கூட மண்டியிட செய்கின்றன. ஏற்காவிடில் அழிவது உறுதி என்று அச்சுறுத்தி எல்லா நாடுகளையும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறையை ஏற்க வலியுறுத்துகிறது. அவ்வர்க்கம் எதை நாகரிகம் என்றும் கருதுகிறதோ அதை அவர்களிடம் புகுத்துகிறது. சுருங்கச் சொன்னால் தன் சாயலாகவே ஒருவரைப் படைத்து விடுகிறது.
நவீன உற்பத்தி பொருள்களுக்கு வேண்டிய சந்தை சந்தையை தேடிய உலகப் பயணம் விளைவு உற்பத்தியும் விநியோகமும் நுகர்வும் உலகெங்கும் முதலாளித்துவ தன்மையில் ஆனதாக மாற்றப்படுகிறது.
மக்கள் தொகையும் உற்பத்தி சாதனங்களும் சொத்தும் சிதறுண்டு கிடக்கும் நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கண்டு வருகிறது. அது மக்களை ஓரிடத்தில் குவித்துள்ளது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தி உள்ளது. ஒரு சிலர் கைகளில் சொத்தை குவித்துள்ளது. இதன் இயல்பான கட்டாய முடிவாக அரசியல் அதிகாரமும் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டு விட்டது (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).
முதலாளித்துவ அடிப்படைகளை ஆராய்ந்த மார்க்சிய ஆசான்கள் உலகமயத்தின் முதல் காலகட்டத்தின் அடிப்படைகளை முதலாளித்துவத்தின் இயல்பாகவே விளக்கினர்.
முதலாளித்துவம் உலகமயமும் மூலம் உருவாக்கிய உற்பத்தி உறவுகள் தொழில் வாணிப நிலைகள் வளக்கப்படும் உற்பத்தி சக்திகள் காரணமாக நெருக்கடிக்கு உள்ளாகிறது. இதுவே மூலதனத்தின் இயல்பாகும்.
ஒருபுறம் முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளின் பெரும் பகுதியை பலவந்தமாக அழித்தும் மறுபுறம் புதிய சந்தைகளை கைப்பற்றியும் பழைய சந்தைகளின் மேலும் ஆழமாக சுரண்டியும் (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை), மேலும் மேலும் நெருக்கடிகளை சம்பாதித்துக் கொள்ளாமல் முதலாளித்துவத்தால் ஒரு அடி கூட வைக்க முடியாதுஇதனால் சமூகமயமாக்கப்படும் உற்பத்திக்கும் தனிநபர் அபகரிப்பிற்கும் மூலதனத்துக்கும் உழைப்புக்கும் இடையிலான மோதல் முரண்பாடு முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடாக இருந்து கொண்டே இருக்கிறது. இது வர்க்கப் போராட்டத்தில் விதியாக்கி விடுகிறது. மூலதனக் குவியல் செல்வத்தை சிலரிடம் கூவிப்பதும் வறுமையை பெருமளவு மக்களுக்கு பரிசாக அளிப்பதுமே ஆகும். மூலதனக் குவியலே அனைத்துக்கும் காரணமாகி விடுகிறது. லெனின் ஏகாதிபத்தியின் 5 அடிப்படையான இயல்புகளை விளக்கினார் .லெனின் ஏகாதிபத்தியின் 5 அடிப்படை விளக்கினார் .
1). ஏக போகங்களை உருவாக்கும் படியான உயர்ந்த கட்டத்திலான உற்பத்தி மூலதன குவியல் வளர்ச்சி.
2). வங்கி மூலதனம் தொழில் மூலதனத்துடன் கலந்து நிதி மூலதனத்தின் அடிப்படையில் நிதி ஆதிக்க கும்பலை உருவாக்குதல்.
3).மூலதனை ஏற்றுமதி உற்பத்தி.
4). சர்வதேச ஏகபோக கூட்டுகள் உருவாகி உலகை தமக்கிடையே பங்கிடுதல்.
5). மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கு இடையே உலக பரப்பு பங்கிட்டுகொள்ளுதல் (ஏகாதிபத்தியங் களுக்கு இடையே) .இதை சந்தேகத்துக்கு இடம் இன்றி முதலாளித்துவளர்ச்சியின் ஒருதனிக்கட்டம் என்றார் லெனின்.
அது முதலாளிதுவத்தின் உச்சகட்டம் என்று பிரகடனப்படுத்திய லெனின் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளும் சுரண்டலும் பன்மடங்கு தீவிரமடைந் துள்ளது என்பதையும் விளக்கியுள்ளார்.
ஏகாதிபத்தி மையங்கள் அந்த நாடுகளின் அமைப்பாக உலகவங்கி பன்னாட்டுநிதி நிறுவனம் காட் பன்னாட்டு பாசுர கம்பெனிகள் என்ற நிதிநிறுவன அமைப்பு களில் இரண்டாம்உலகப் போருக்கு பிந்தைய மூலதனக் குவியல் செயல்பட்டு கொண்டுள்ளது.
இன்றைய உலகமயமானதுஅறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் புரட்சியின் அடிவொற்றி மின்னணுவியல் உயிரியல் இணையதள வளர்ச்சி விண்வெளி கண்டுபிடிப்புகள் இன்றுஉலகை ஒரேகுடையின் கீழ்ஒட்டுமொத்த உலகின் அறிவு ஒரே சமூகமாய்ஓர் உலகஉற்பத்தி விநியோகம் நுகர்வுக்கான தேசங்கள் கடந்த சமூகமாய் மாறியுள்ளது.
இன்றைய உலகமயத்தின் மற்றொரு அம்சம் உலகப் போர் ஏற்படாமலேயேமுதலாளித்துவ அமைப்பின் கீழ் உலகின் பொருளாதார அரசியல் வரைபடம் மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் தலைமையிலான ஓர் உலகஏற்பாடு என்றஏகாதிபத்திய கனவு அமலாக்கப்பட்டு வருகிறது. இன்றைய உலக மயமானது நிதிமூலதன ஆதிக்க கும்பலின்உத்தரவு படியான உலகமயம்.
அறிவியல் தொழில்நுட்ப ஏகபோகம் உலகளாவிய நிதிசந்தையில் நிதிமூலதன ஆதிக்கம். இயற்கை வளங்கள் மீதான ஏகபோகும் . தகவல் தொழில்நுட்பஏக போகம் ஆயுத ராணுவ ஏகபோகம். ஆகிய ஐந்து வகைபட்ட ஏகபோகங்களும் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில்உலகமயமானசமூக வயப்பட்ட உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாடு தற்போதைய உலகமயத்தின் அடிப்படை முரண்படாக எழுந்துள்ளது.
முதலாளித்துவத்தின் வரலாற்றில் என்றும் காணாத அளவுக்கு முதலாளித்துவம் மனிதகுலத்தை தனது உற்பத்தி உறவுமுறைக்குள் அமைப்பு ரீதியாக ஒன்று படுத்தி இருக்கிறது மூலதனக் குவியலின் வேகம் வர்க்க வேறுபாடுகளை தீவிரமாகியதோடு வறுமைக்கும் வளமைக்குமான இடைவெளி பெருமளவு அதிகரித்துவிட்டது. ஏகாதிபத்தியத்தின் நாகரிக மனிதர்கள் என்பவர்கள் நாகரிகம் மற்ற மூன்றாம்உலக மனிதர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது இன்றைய உலக மயத்தில் ஏகாதிபத்திய புல்லுருவித்தனத்தில் ஒன்றாக முதிர்ந்து விட்டது. இதனைக் கீழ்காணும்புள்ளி விவரங்களில் இருந்து அறியலாம்.
உலக நாடுகளில்வாழும் பணக்காரர்கள் 20% மக்கள்உலக வளங்களில் 86% அனுபவிக்கின்றனர். 20% ஏழைகள் 1.3 சதவீதம் மட்டுமே நுகர்கின்றனர்.
20% பணக்காரர்கள் வசதியானவர்கள் 50 சதவீதமான உணவை உட்கொள்கின்றனர். கீழ் நிலையில் உள்ள 20 சதவீதம் உடைய ஏழைகள்பட்டினியால் வாழ்வில் துவள்கின்றனர். 200 பெரும் பணக்காரர்களின் செல்வம்பல்கி பெருகிவிட்டது. அதேசமயத்தில் வேலையின்மையும் வறுமையும் உலகமயமாக பட்டுவிட்டது. ஒருபணக்காரனுக்கு 95 ஏழைகள் என்றாகிவிட்டது. உலகில் 85 சதவீதம் மக்கள் மீது 15 சதவீத உயர் குடிமக்களின் ஆதிக்கம் நிறுவப்பட்டுள்ளது.
இவை மூலதனகுவியலின் விளைவுகள். இவை தனியார்மயம் தாராளமயம் சுதந்திரசந்தை என்றஉலக ஏகாதிபத்திய உலகமயமாக்களானது.
ஓடுகாலி காவுத்ஷ்கியைப் பற்றி விமர்சிக்கும்போது லெனின் கூறினார் " 1870 களில் மார்க்ஸ் இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் சோசிலிசம் சமாதான மாற்றம் பற்றிய சாத்திபட்டையே ஏற்றுக் கொண்டார் என்ற குதர்க்க வாதமும் இன்னும்சொல்லப்போனால் பச்சையாக மேற்கோள்களையும் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு செப்பு வித்தை காட்டுகிற ஏமாற்றுப் பெயர்களில் வேலையாகும். மார்க்ஸ்முதலாவதாக இந்த சாத்தியப்பாட்டை விதிவிலக்கு என்ற அளவில் தான் ஏற்றுக்கொண்டார் இரண்டாவதாகஅப்பொழுது ஏகபோக முதலாளித்துவம் அதாவது ஏகாதிபத்தியமும் இருக்கவில்லை மூன்றாவதாக அப்போது இங்கிலாந்து அமெரிக்க போன்ற நாடுகளில் இன்று வளர்ந்துள்ளது போல முதலாளித்து அரசு இயந்திரம் முதன்மையான கருவியாக பணிபுரியக்கூடிய ராணுவம் இருக்கவில்லை ."( லெனின் நூல் திரட்டு 23 பக்கம் 233).அடுத்து இரண்டாம் உலக யுத்ததிற்கு பிறகு அதாவது சீனாவில் இருந்து கியூபா வரை எல்லா நாடுகளிலும் நடைபெற்ற புரட்சிகள் விதிவிலக்கன்றி ஆயுதம்தாங்கி போராட்டத்தின் மூலமே ஏகாதிபதிக்கு எதிர்ப்பு ராணுவ ஆக்கிரமிப்புக்கும் தலையிட்டுக்கும் எதிராக போராடியதன் மூலமாக வெற்றி அடைந்திருக்கின்றன (மாபெரும் விவாதம் நூல் பக்கம் 695 புதுமை பதிப்பகம் வெளியீடு ).
1945 ஆகஸ்டில்வியட்நாம் மக்கள் அரசியல் அதிகாரத்தை ஆயுதம் தாங்கி எழுச்சியின் மூலம் கைப்பற்றினர்.
1953 ல் கியூபா மக்கள் ஆயுதம் தாங்கி எழுச்சியை தொடங்கினார்கள் கியூபாவில் அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் பொம்மை ஆதரவாளர்களை தூக்கி எறிந்து புரட்சிகரமான ஆட்சிநிறுவினர் . இவ்வாறாக இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பல நாடுகளில் ஆயுதப் போராட்டம் மூலமாகதான் சோசலிச நாடுகள் நிறுவப்பட்டன . ஆக நமது படிப்பினைகளை சீர் செய்ய பாட்டாளி வர்க்க புரட்சி போர்களின் வெற்றியிலிருந்து நமக்கு கிடைப்பதை புரிந்து கொள்ளவே... பாராளுமன்ற பாதைக்கு மறுப்பு இரண்டாம்அகிலத்தின் திருத்தல் வாதிகளால் விளம்பரப்படுத்தப்பட்ட பாராளுமன்ற பாதை என்ற கருத்து லெனினால் முறியடிக்கப்பட்டது நீண்டகாலத்திற்கு முன்பே செல்லாக் காசாகிவிட்டது . ( அதே நூல் பக்கம் 682 ).
இரண்டாம்உலகப்போருக்கு பின் நடந்த நிகழ்வுகள் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பாராளுமன்றபாதையை நம்பி பாராளுமன்றமாயை என்ற தீர்க்க முடியாத நோய்க்கு பலியாகி விட்டனர் அவர்கள்இயல்பாகவே எதையும் சாதிக்க முடியாது என்பதோடு தவிர்க்க முடியாத படி திருத்தல்வாத சகதியில் புதைந்து பாட்டாளிவர்க்க புரட்சி இலட்சியத்தை சீரழிப்பவர்கள் என்பதை தான் காட்டுகின்றன.
முதலாளித்துவ பாராளுமன்றதின் பால் கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து மார்க்சிய லெனினிய வாதிகளுக்கும் பிற சந்தர்ப்பவாதி களுக்கும் மற்றும் திருத்தல்வாதிகளுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் வந்திருக்கிறது.
முதலாளித்துவத்தின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும் புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும் உதவும் குறிப்பான சூழ்நிலைகளில் பாட்டாளிவர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும் தேவைப்படும்போது இந்தசட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள மறுப்பது தவறாகும் ஆனால்பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு மாறாக பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது அல்லது சோசலிசத் திற்கான மாற்றாக பாராளுமன்ற பாதை மூலம் சாதித்துவிடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும் .
மற்றொரு பக்கம் குறுங்குழுவாதத்தில் வீழ்ந்துள் ளோர் பற்றி
குறுங்குழுவாத புதை சேற்றில் வீழ்ந்துள்ள புரட்சிகர அமைப்புகள் தங்களுக்குள் ஒன்றுபடுவதற்கு பதிலாக தினம் தினம் பிளவுபட்டுக் கொண்டே உள்ளனர். அதற்கான ஆய்வை மேற்கொண்டோமானல். அவை பற்றி சற்று அலுசுவோம்.
தீவிர கம்யூனிஸ்ட் எதிரி கலகக்காரர் என்று அடையாளம் காணப்பட்டவர்களை தவிர ஒவ்வொரு தோழர்களும் ஒற்றுமை பேண வேண்டும் என்பது நமது அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் -மாவோ நவம்பர் 18,1957.
ஒரு சிறு தவறு கூட செய்யாத மனிதன் உலகில் ஒருவரை கூட காட்ட முடியாது -லெனின்.
கட்சிக்கு விசுவாசமான சக தோழரையும் மார்க்சிய விரோதிகளோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. சோவியத் யூனியனின் ட்ராட்ஸ்கி சீனாவின் சென்- டு- சியு காவ் காவ் போன்றவர்கள் வலதுசாரிகள் இவர்களுக்கான தலைவர்கள் ஹிட்லர் சியாங்க ஷேக் ஜார் போன்றவர்கள். இவர்களை திருத்த முடியாது இவர்களை வரலாற்றின் குப்பை கூடையில் தூக்கி எறிய வேண்டிய நபர்கள். ஆனால் இயக்கம் சார்ந்த தோழர்களிடம் நாம் அணுகுமுறை வேறு விதமாக இருக்க வேண்டும். தோழர்களுக்கு இடையே தவறான புரிதல் ஏற்படும் சூழ்நிலை வரலாம் அப்போது ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினால் பூசல்கள் தீரும் .கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டால் போதும் ஒருவர் ஞானி ஆகிவிடுவார் தவறு செய்ய மாட்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள் கட்சியும் அப்படியே அது ஒரு பேரியக்கம் எல்லாவற்றையும் கடந்தது சோதனைக்கு அப்பாற்பட்டது என்றும் எனவே பேச்சுவார்த்தைகள் கருத்து பரிமாற்றங்கள் தேவையில்லை என்றும் கருதுகின்றார்கள்.
குறுங்குழுவாத போக்கானது இடதுசாரி கட்சியில் இருந்து இடதுசாரி குழுக்கள் வரை எல்லாருக்கும் பொருந்தும் எப்படி எனில் நாங்கள் மட்டும் தான் சரியானவர்கள் என்று தனித்தனியாக இயங்கும் போக்கை என்ன சொல்ல?ஆனால் மார்க்சியவாதிகளில் பல வகையாக உள்ளனர் . 100% மார்க்சியவாதி ,90,80,70,60,50% மார்க்சியவாதிகள் இருக்கிறார்கள் ஏன் 20%,10% மார்க்சியவாதிகளும் கூட இருக்கிறார்கள். ஆக மார்க்சிய லெனினிய தத்துவத்திற்கு குந்தகம் ஏற்படாதவரை அடுத்தவர்களின் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. அதேபோல் உங்களிடம் உள்ள வேண்டப்படாத கருத்து களை விட்டொழிப்பதிலும் தவறில்லை ஆக தவறு செய்த ஒரு தோழரிடம் நீங்கள் இரண்டு விதமான அணுகு முறைகளை கையாள வேண்டி உள்ளது.(மாவோவின் தேர்ந்தெடுகப் பட்ட படைப்புகள் தொகுப்பு 5 பக்கம் 752லிருந்து).
முதலில் அவர் தனது தவறான சிந்தனையில் இருந்து வெளியே வர நாம் போராட்டத்தை துவக்க வேண்டும்.
இரண்டாவது அவருக்கு நாம் உதவ வேண்டும். ஒருபுறம் அவருடன் போராட்டமும் மறுப்புரம் அவருடன் தோழமை உணர்வேன் என்ன நெருக்கமாக்குதல் வேண்டும். போராட்டம் என்பது மார்க்சிய லெனினிய தத்துவத்தை உயர்த்தி பிடிப்பதற்கும் மேலும் மார்க்சியத்தை சரியாக புரிய வைப்பதற்தானதாக இருக்க வேண்டும். அவருடன் இணைந்து நிற்க வேண்டும் ஏனென்றால் அவரை இழந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அவருடன் சமரசமாக இணக்கமாக செல்ல வேண்டும் தத்துவமும் இணக்கமும் இணைந்து செல்வதும் மார்க்சிய தத்துவமே. அது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவே.
எந்த மாதிரியான உலகமானாலும் எந்த மாதிரியான வர்க்க சமூகமானாலும் அது முரண்பாடுகளின் குவியலாக தான் இருக்கும்.
முரண்பாடுகளை தேடி நீங்கள் அலைய வேண்டாம் அது இருக்கவே செய்கின்றது. முரண்பாடுகள் இல்லாத இடம் எது நீங்கள் சொல்லுங்கள்? அதேபோல் புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் இவர்கள் என்று யாரையாவது நீங்கள் காட்ட முடியுமே? ஒருவரை திருத்தவே முடியாது என்று நீங்கள் முடிவு கட்டினால் அது கருத்தியல்வாத அணுகுமுறையாகும். அணு என்பது என்ன எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு தானே? எலக்ட்ரான் என்பது எதிர் மின்னோட்டம் கொண்டது, புரோட்டான் என்பது நேர் மின்னூட்டம் கொண்டது இது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவு தானே.
இத்தகைய குறுங்குழுவாதத்தை முறியடிப்பதற்கு விரிவான அளவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கட்சிக் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவோ.
இதன் மூலம் குறுங்குழுவாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார். ஒரு பலம் வாய்ந்த கட்சிக்கே ஆபத்தானது இந்த குறுங்குழுவாதமாக இருக்கின்ற போது, இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களில் இந்த குறுங்குழுவாதம் எந்தளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் நீண்ட காலமாக கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு இருக்கும் சூழலில், குறுங்குழுவாதத்திற்கு இவர்கள் பழக்கப்பட்டு அது இயல்பானது என்று குறுங்குழுவாதத்தில் ஊறிப்போய்விட்டனர். அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் தனது பலத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு பரிதாபமான நிலையை இந்த குறுங்குழுவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகவே பாசிஸ்டுகள் மக்களின் மீது மிகக் கடுமையாக தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள்.
இந்த கொடுமைக்கு பாசிஸ்டுகள் மட்டும் காரணம் இல்லை. கம்யூனிச அமைப்புகளிலுள்ள குறுங்குழு வாதிகளும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்கள் இந்த குறுங்குழு வாதத்திலிருந்து மீளாதவரை உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை.
சில குறுங்குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன்வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார்.
எல்லா வகையான குறுங்குழுவாதத்திற்கும் அகவயவாதமே (எண்ணமுதல்வாதமே) அடிப்படை யாகும் என்றார் மாவோ. அதாவது தனது மனதிற்குப் பட்டதே உண்மையானது என்றும் பிறர் சொல்வதில் உண்மைகள் எதுவும் இல்லை என்று கருதும் சிந்தனைப் போக்குதான் இதற்கு காரணம் என்பதாகும். இத்தகைய சிந்தனை படைத்தவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்தும் கேட்க்கமாட்டார்கள். தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க்க வேண்டும் என்று கருதுவார்கள். புறநிலை எதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாகவே இவர்கள் பிறறோடு தோழமையாகப் பழக மாட்டார்கள். தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். இத்தகைய சிந்தனைப் போக்குள்ளவர் களால் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய தன்மை படைத்தவர்களால் ஒரு பலம்வாய்த கட்சிக்கே கேடு விளையும் .
நமது படினையிலிருந்து சில
இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) கட்சியிலிருந்து பிரிந்து வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) மக்கள் யுத்த குழுவானது, இதுவரை கடைபிடித்து வந்த அழித்தொழிப்பு கொள்கையை கைவிட்டது. அது மிகவும் தவறான கொள்கை என்று மக்கள் மத்தியிலேயே சுயவிமர்சனம் செய்துகொண்டது.
''வீரப்புளியம்பட்டி தீரர் திம்மக்காளி போல் போர்வழி செல்வோமையா, அதில் புரியாமல் செய்த பிழைகளை போக்கி மக்கள் படையினை அமைப்போமையா'' என்ற மக்கள் கலைமன்ற பாடல் வரிகளின் மூலம் மக்கள்யுத்த குழு பகிரங்கமாக மக்களிடம் சுயவிமர்சனம் செய்து கொண்டது, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பின்பு மக்களின் செல்வாக்கோடு மக்கள்யுத்த குழு வளர்ந்தது. மக்களிடையே பகிரங்கமாக தனது தவறுகளை வெளிப்படுத்தி சுயவிமர்சனம் செய்துகொள்ளும் அமைப்பானது மக்களின் செல்வாக்கை பெற்று வளரும் என்பது நிருபிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்பு மக்கள் யுத்த குழு பிளவுபட்டது. அந்த குழுவின் தலைமை மீது புரட்சிப்பண்பாட்டு இயக்கத் தோழர்கள் வைத்த விமர்சனங்களுக்கு தலைமையானது பதில் கொடுக்க தவறியது. அவர்கள் வைத்த விமர்சனம் சரியானது என்றால் அதனை திருத்தி சுயவிமர்சனம் செய்து கொள்ளவில்லை. வைத்த விமர்சனம் தவறானது என்றால் அதனை அணிகளிடம் விளக்கத் தவறியது. இதற்கு மாறாக தலைமையானது தன்மீது விமர்சனம் வைத்தவர்கள் குட்டிமுதலாளியவாதிகள் என்றும்,தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் முத்திரைகுத்தி தோழர்களை அமைப்பிலிருந்து விரட்டியடித்தது. முன்பு அழித்தொழிப்பு பாதை தவறு என்று மக்களிடம் சுயவிமர்சனம் செய்து வளர்ந்த குழு, அதே முறையைப் பின்பற்ற தவறியதால் அமைப்பிலுள்ள அறிவுஜீவிகளின் நம்பிக்கையை இழந்து தொடர்ந்து பல பிளவுகளை சந்தித்து தற்போது சிறுசிறு குழுவாக சிதறிக்கிடக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த குழுக்களிலுள்ள கம்யூனிஸ்டுகள் சுயவிமர்சனம் செய்வதற்கு மறுப்பதுதான்.
கம்யூனிச அமைப்புகளிலுள்ள தோழர்கள், பல தவறுகளை தொடர்ந்து செய்ய வாய்ப்புள்ளதால், அவர்களது தவறுகளை தொடர்ந்து திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டே இருந்தால்தான், உண்மையில் சரியான கம்யூனிஸ்டாக தங்களை வளர்த்துக் கொள்ள முடியும். பெரும்பாலும் ஒரு கம்யூனிஸ்டு செய்யும் தவறு அவருக்கு தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த கம்யூனிஸ்டை தொடர்ந்து கண்காணித்து வரும் பிறரால் மட்டுமே அவரது தவறுகளை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே ஒரு அமைப்பிற்குள் செயல்படும் ஒரு கம்யூனிஸ்ட் செய்யும் தவறுகளை பிறர்தான் தெளிவாக சுட்டிக்காட்டுவார்கள். ஆகவே பிறரால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் எப்போதும் வரவேற்ப்பார். ஏனென்றால் பிறரால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை தான் களைந்தால் மட்டுமே அவரால் குறைகள் இல்லாத கம்யூனிஸ்டாக மாற முடியும், மேலும் உழைக்கும் மக்களுக்காக எவ்விதமான குறையும் இல்லாமல் பாடுபட முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டு தனக்காக மட்டும் பாடுபடக் கூடியவர் இல்லை. பரந்துபட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்தான் கம்யூனிஸ்டாக இருக்கமுடியும். ஆகவே ஒருகம்யூனிஸ்டிடம் தவறுகளும் குறைகளும் இருக்குமானால்அது உழைக்கும் மக்களையும் பாதிக்கும். ஆகவே உழைக்கும் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தன்னிடமுள்ள குறைகளை பிற தோழர்கள் சுட்டிக் காட்டினால் உடனடியாக களைந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். அதற்குத்தான் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை அமைப்பு முறையாக கம்யூனிஸ்டுகள் பின்பற்றுகிறார்கள்.
நிலவுகின்ற தனிவுடமை சமுதாயத்தில், தனிநபரின் அறிவு மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் அறிவு மற்றும் திறமை பெற்றவராக இருந்தால் பொருளாதாரரீதியில் செல்வத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், அவ்வாறு அறிவு, திறமை இல்லாதவரால் செல்வந்தராக ஆக முடியாது என்றும் அவர் வறுமையில் வாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்து இந்த தனிவுடமை சமூகத்தில் பரவலாக விதைக்கப்பட்டுள்ளது.
இந்த சமூகத்தில் வாழ்ந்துவரும் குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள் இந்த கருத்துக்கு பலியாகி ஈகோ என்று சொல்லப்படும் தனிமனித அகம்பாவப் பண்பிற்கு ஆளாகிறார்கள். இவ்வாறு தனிமனித அகம்பாவப் பண்பு கொண்டவர்கள் கம்யூனிச அமைப்பிற்குள் சேர்ந்து செல்வாக்கு பெற்ற கம்யூனிஸ்டு களாகவும் இருக்கிறார்கள். இவர்களில் பலர், தான் சொல்வதெல்லாம் சரியானது என்றும், தான் தவறே செய்ய மாட்டோம் என்று கருதுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினால் இவர்கள் அதனை பொருட்படுத் துவதில்லை.இவர் மீது வைக்கும் விமர்சங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. மாறாக விமர்சனம் வைத்தவரிட மிருந்து உறவை துண்டித்துக் கொள்கிறார்கள். அமைப்பிற்குள் இவர்களுக்கு செல்வாக்கு இருக்குமானால் அதனை பயன்படுத்தி இவர் மீது விமர்சனம் வைத்தவரை தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டி . விடுகிறார்கள் .
இத்தகைய அகம்பாவம் பிடித்தவர்கள் கம்யூனிஸ்டு களின் அமைப்புக் கொள்கை யான விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை பின்பற்ற மாட்டார்கள் என்பது நமது அனுபவமாக உள்ளது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் உள்ள தோழர்களிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஏற்படும். ஒரு தோழரின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அவர் முகம் கோணாமல் அந்த விமர்சனத்திற்கு பதில் அளித்தால் அந்த தோழரின் மீது மற்ற தோழர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், அந்த தோழரின் மீது நம்பிக்கை வளரும். ஆகவே விமர்சனம், சுயவிமர்சன முறையை பின்பற்றுவதன் மூலம் கம்யூனிச அமைப்பின் மீது அணிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து அமைப்பிற்குள் ஒற்றுமை பலப்படும். ஆனால் கடந்த காலங்களில் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சன முறை பின்பற்றப்படவில்லை. இதற்குத் தடையாக அமைப்பிற்குள் இருந்த குட்டிமுதலாளிய,, தான் என்ற அகம்பாவம் பிடித்த நபர்களே காரணமாகும். ஆகவே இன்றைய கம்யூனிஸ்டுகளிடம் தான் என்ற அகம்பாவப் பண்பு இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும். விமர்சனம், சுயவிமர்சன முறையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு அதனை செயல்படுத்த வேண்டும்.
சில தனிநபர்கள் எவ்வளவு அறிவும் திறமையும் படைத்தவர்களாக இருந்தாலும் அந்த அறிவு, திறமையின் பலத்தைக் கொண்டு மட்டும் சமூகத்தை மாற்றிவிட முடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்களே என்ற மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் மட்டுமே சமூகத்தை மாற்ற முடியும் என்பதை இந்த குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவிகள் உணர வேண்டும்.கம்யூனிஸ்டு என்றாலே உழைக்கும் மக்களின் மீது பாசம் கொண்டு அவர்களை நேசிப்பவர், அவர்களுக்காக பாடுபடுவதே ஒரே லட்சியமாகக் கொண்டவர்கள். அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் தியாகிகள் என்பது பொருளாகும்.கம்யூனிஸ்டுகளிடம்இருக்கும்இத்தகைய தியாக உணர்வையே பாட்டாளி வர்க்க உணர்வு என்று கம்யூனிஸ்டுகள் வரையறை செய்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பு இந்த வர்க்க உணர்வுதான் என்பதை கம்யூனிஸ்டுகள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.ரஷ்யாவிலும், சீனாவிலும் இத்தகைய பாட்டாளி வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள் அந்த நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளில் பலர் இருந்தனர். அதனால்தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக் காக உறுதியுடன் போராடி உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவினார்கள். (ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உண்டு, எனினும் இந்த கட்டுரையின் மூலம் கம்யூனிஸ்டுகளுக்கு பாட்டாளி வர்க்க உணர்வின் அவசியத்தை உணர்த்துவதும், அதன்அடிப்படையில் தீயகுணமாகிய தான் என்ற அகம்பாவத்தை கைவிட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவதும், அதன் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் விமர்சனம், சுயவிமர்சன முறையைக் கடைபிடித்து தனது தவறுகளை களைவது மிகமிக அவசியம் என்பதை உணர்த்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.).
இந்தியாவிலும் பல கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இந்தியாவில் இவ்வாறு உயிர் தியாகம் செய்த கட்சிகளில் முதன்மையானது கம்யூனிஸ்டு கட்சியே ஆகும். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தில், தெலுங்கானா போராட்டம் ஒரு சிறப்பான போராட்டமாகும். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளையும், விவசாயி களையும் பாசிச நேருவின் ஆட்சியில் அதன் இராணுவம் தொலுங்கானா போராட்டத்தை நசுக்குவதற்காக அது செய்த கொடுமைகள் அதனால் பல கம்யூனிஸ்டுகளும், விவசாயிகளும் கொல்லப்பட்ட வரலாற்றை படிப்பவர்களின் கண்களிலிருந்து இரத்த கண்ணீர் வருவதை இன்றும் காணலாம். அந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைந்தாலும், அந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக அன்றைய காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே செல்வாக்கு பலமாக இருந்தது.
அதற்குப் பின் தோன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்ஸிஸ்டு-லெனினிஸ்டு) கட்சியானது விவசாயி களையும், தொழிலாளர்களையும், மாணவர் களையும், இளைஞர்களையும் திரட்டிப் போராடியது. இந்த கட்சி நடத்திய போராட்டங்கள் வீரத் தெலுங்கானா போராட்டப் பாதையையே பின்பற்றியது. இவர்கள் நக்சல்பாரியிலும், கல்கத்தா நகர வீதிகளிலும், ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் போன்ற பகுதிகளிலும் தமிழகத்தில் தருமபுரி, வடஆர்க்காட்டுப் பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. அப்போது இந்த கம்யூனிஸ்டுகளின் மீது ஆட்சியாளர்கள் கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தியதன் காரணமாக பல தியாக கம்யூனிஸ்டுகள் வீரமரணம் அடைந்தார்கள். பலர் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டாலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை.
கம்யூனிஸ்டுகளுக்கு தியாக உணர்வு வேண்டும். தன்னலம் கருதாது உழைக்கும் மக்களின் நலன்களை உயர்த்திப் பிடித்து பொதுநல உணர்வோடு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும், தான் என்ற அகம்பாவம் கம்யூனிஸ்டுகளிடம் இருக்கவே கூடாது. கம்யூனிஸ்டுகள் பிறரை மதிக்க வேண்டும், பிறரின் கருத்துக்களை காதுகொடுத்து கேட்க்க வேண்டும், அந்த கருத்துகள் சரியாக இருந்தால் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்று பொறுமையாக விளக்க வேண்டும்.உழைக்கும் மக்களோடு ஒன்றுபட்டு வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். உழைக்கும் மக்களைக் காட்டிலும் தான் சிறந்த அறிவாளி என்ற மமதை கூடாது. அமைப்பிற்குள் தனக்கு வழங்கப்படும் தலைமை பதவியை தனக்கு கொடுக்கப்பட்ட அதிகாரமாக கருதி அமைப்புத் தோழர்களின் மீது அதிகாரம் செலுத்தக் கூடாது, மாறாக தனக்கு கொடுக்கப்பட்ட தலைமைப் பதவியை தனக்குகொடுக்கப்பட்ட பொறுப்பாக எடுத்துக்கொண்டு, அமைப்பிலுள்ள தோழர்களையும் நமக்கு ஆதரவு தரும் மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.
அமைப்பிற்குள் முரண்பாடுகள் ஏற்பட்டால் அதனை பக்குவமாக கையாண்டு முரண்பட்ட கருத்துகளை ஆழமாக இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து அமைப்பு முழுவதும் விவாதிப்பதன் மூலம் முரண்பாடுகளை தீர்த்திட வேண்டும். அப்போது முரண்பாடுகள் ஜனநாயக முறையில் அமைதி வழியில் தீர்க்கப் படுவது மட்டுமல்லாமல் அமைப்பில் செயல்படும் அனைத்து கம்யூனிஸ்டு களுக்கும் மார்க்சிய - லெனினிய போதனைகளை நாம் வழங்க முடியும்.
இத்தகைய பாடத்தை வீரமிக்க போராட்டத்தை நடத்தி உயிர் விட்ட தியாகிகளின் வாழ்க்கையிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். தியாகம் என்றால் உயிர் தியாகம் மட்டுமே தியாகம் என்று கருதக் கூடாது.
தியாகத்தைப் பற்றி மக்கள் கலைமன்ற பாடல் வரிகளில் சொல்வதென்றால், ''குடும்பம் விட்டீர், குழந்தை விட்டீர், அடிமை விலங்கொடிக்க செங்கொடி பிடித்தீர், பாட்டாளி வர்க்க விடுதலைக்கு தோழர்களே நீங்கள் உயிர் கொடுத்தீர்'' இந்த பாடல் வரிகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? பாட்டாளி மக்களின் ஒற்றுமைக்காகவும், அவர்களுக்கு நல்ல வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தை ஏற்று செயல்படுகின்ற ஒவ்வொரு செயல்பாடும் ஒரு தியாகமே. அதேபோல் அவர்கள் நேசிக்கின்ற குடுப்பத்திற்கும், அவர்களது குழந்தைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டிலும், உழைக்கும் மக்களின் நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இத்தகைய பண்புள்ளவர்களே உண்மையான கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியும் என்ற உண்மையை கடந்தகால தியாக கம்யூனிஸ்டுகள் நடைமுறையில் செயல்படுத்தி காட்டினார்கள். எனினும் கம்யூனிச கொள்கையில் பற்றுக்கொண்ட தோழர்களில் பலர் கம்யூனிச இயக்கத்தில் பங்கு பெற்றாலும் அவர்கள் அவர்களது குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் கம்யூனிச ஆதரவாளர்களாக மட்டுமே இருக்க முடியும். எனினும் அவர்கள் சிறந்த கம்யூனிஸ்டாக மாறுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
உயிர்தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்ட போர்க்குணமிக்க போராட்டங்களை வன்முறை கொண்டு ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட பின்பு அந்த கம்யூனிச அமைப்புகளுக்கு பொறுப்பிற்கு வந்த தலைவர்களிடம் தியாக கம்யூனிஸ்டுகளிடமிருந்த கம்யூனிச பண்புகள் இல்லை. குறிப்பாக தியாக உணர்வு இல்லை, உழைக்கும் மக்களை நேசிக்கும் பண்பு இல்லை, உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒற்றுமை படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
ஒவ்வொருவரும் தன்னை மிகச்சிறந்த அறிவாளியாக கருதிக் கொண்டு தனக்கென்று பேரும் புகழும் வேண்டும் என்ற அடிப்படையிலேயே செயல்பட்டனர். ஒரு நாட்டில் சமூக மாற்றம் நடக்க வேண்டுமானால், அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி, வழிநடத்துவதற்கு ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி தேவை. கம்யூனிஸ்டுகள் பல்வேறு பிரிவாக பல அமைப்புகளில் பிளவுபட்டு இருந்தால்அங்கு சமூகநடப்பதற்கு வாய்பே இல்லை என்று லெனின் விளக்குகிறார். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் பிளவு பட்டிருப்பது ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமானதே ஆகும். இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி ஆளும் வர்க்கமானது தனது அரசை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் மீது கொடூரமான தாக்குதலை தொடுக்கிறார்கள். கம்யூனிச குழுக்களும் அதற்கு எதிராக போராட முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் வாழ்வு மேலும் மேலும் கீழே போய்க்கொண்டிருக்கிறது.
ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்கான திட்டத்தை, பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டியதும், அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை உருவாக்க வேண்டியதும் முதன்மையான கடமையாகும். இத்தகைய ஒரு ஒன்றுபட்ட கட்சி உருவாகிவிட்டால், அந்த கட்சியை உழைக்கும் மக்கள் பின்பற்றினால் சமூக மாற்றமானது எவ்விதமான தடையும் இல்லாமல் நடக்கும். அப்படியே தடைகள் வந்தால் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தடைகள் தகர்க்கப்படும்.
இத்தகைய ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு தடையாக இருப்பது எது? கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைபாடே காரணமாகும். கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளே காரணமாகும். உண்மை யிலேயே உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக பாடுபட வேண்டும் என்ற லட்சிய உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள், இதனை உணரவேண்டும். தங்களிடத்தில் குறைகள் உள்ளது என்பதையும், தாங்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன?தற்போது ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்த முயற்சியில் ஈடுபடும்போது பல்வேறுவிதமான கருத்துகள் விவாதத்திற்கு வரும். அவ்வாறு வரும் கருத்துகளை நாம் புறக்கணிக்கக் கூடாது. மாறாக ஒவ்வொரு கருத்தையும் நாம் பரிசீலிக்க வேண்டும். எந்த ஒரு கருத்தையும் இயக்கவியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில் பரிசீலித்து கோட்பாடு அடிப்படையில் அந்த கருத்து தவறு என்று நிருபிக்க வேண்டும். அல்லது அந்த கருத்தை நடைமுறையில் சோதித்துப் பார்த்து அந்த கருத்து தவறு என்று நிருபிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அந்த கருத்து கோட்பாடு ரீதியிலோ, நடைமுறையிலோ தவறு என்று நிருபிக்கப்படாதவரை அந்த கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது, அதுவரை அந்த கருத்தானது விவாதத்திற்குரிய கருத்தாகவே கருத வேண்டும். இவ்வாறான அணுகுமுறையின் மூலம் நாம் கருத்து விவாதங்களை நடத்தினால் நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒத்த கருத்தை வந்தடைய முடியும். இதற்கு மாறாக ஒருவரோ, ஒரு அமைப்போ முன்வைக்கும் கருத்தை பரிசீலிக்காமல் அந்த கருத்து தவறானது என்பதை நிருபிக்காமலேயே அராஜகமாக புறக்கணிப்பதால், நம்மால் ஒரு ஒத்த கருத்திற்கு வர முடியாது.ஒரு தோழர் மற்றொரு தோழரின் மீது விமர்சனம் வைத்தால், விமர்சிக்கப்பட்ட தோழர் அந்த விமர்சனத்தை முதலில் ஏற்றுக்கொண்டு அதனை பரிசீலிக்க வேண்டும். பரிசீலனையின் முடிவில், விமர்சனம் சரியானதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தவறுகளை அவர் களைய வேண்டும். இதற்கு மாறாக அந்த விமர்சனம் தவறாக இருக்குமானால் அந்தவிமர்சனம் தவறானது என்பதை விமர்சனத்துக்கு உட்பட்டவர் விளக்க வேண்டும். இந்த முறையை ஒரு கம்யூனிச அமைப்பு முறையாகப் பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக விமர்சனம் வைத்தவருக்கு பதில் சொல்ல மறுத்து விமர்சனம் வைத்தவர் மீதே அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி அந்த தோழரைஅமைப்பின் பிற தோழர்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முறை கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது, இந்த ஜனநாயகத்திற்கு எதிரான முறையை கம்யூனிஸ்டுகள் கைவிட வேண்டும்.
ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் தலைவரையும் அந்த அமைப்பின் சாதாரண ஊழியர் விமர்சிக்க உரிமை உண்டு. அந்த வகையில் ஒரு ஊழியர் அமைப்பின் தலைவரை விமர்சித்தால், அந்த தலைவர் அந்த விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டும். அந்த விமர்சனமும் தலைவரின் பதிலும் அமைப்பு முழுவதற்கும் சுற்றுக்குவிட வேண்டும். அமைப்பிலுள்ள தோழர்கள் ஒவ்வொருவரும் அதன் மீது தங்களது கருத்துகளை முன்வைக்க வேண்டும். மேலும் தலைவர் மீதான விமர்சனம் உண்மையாக இருந்தால் தலைவரிடத்திலும் தவறுகள் இருக்கிறது என்ற அந்த விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு, தலைவர் தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக கடந்த காலங்களில் தலைவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டபோது அந்த விமர்சனமானது கட்சியின் (அமைப்பு) மீதான விமர்சனமாக கருதி விமர்சனம் வைத்தவரை அமைப்பிற்கு எதிரான விரோதி என்றும் சதிகாரர் என்றும் துரோகி என்றும் பலவாறு பிரச்சாரம் செய்து விரட்டியடித்தனர்.இதற்குகாரணம்அணிகளிடத்திலுள்ள தலைமை வழி பாடுதான்காரணமாகும். ஆகவே இத்தகைய ஜனநாயகத்திற்கு எதிரான முறையி லிருந்து விடுபட தலைமைவழிபாட்டு முறையை அணிகள் கைவிடுவதற்காக அணிகளிடம் மார்க்சிய லெனினிய அடிப்படை கல்வி புகட்டப்பட வேண்டும்.
கடந்த காலங்களில், தலைவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டவுடன் அந்த தலைவர் அமைப்பிற்குள் தலைமை வழிபாடு இருப்பதை பயன்படுத்தி, அமைப்பைச் சேர்ந்த ஒவ்வொரு தோழரையும் தனித்தனியாக சந்தித்து தன்மீது விமர்சனம் வைத்தவர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவர் அமைப்பை உடைப்பதற்கு முயற்சி செய்யும் ஊடுருவல்காரர் என்றும் பலவாறாகச் சொல்லி தனக்கென ஒரு அணியை சேர்த்து தனது தலைமையை தக்க வைத்துக்கொண்டு தனக்கு எதிரானவர்களை விரட்டியடித்து, அமைப்பிற்குள் பிளவுபடுத்த முயற்சித்தது கடந்தகால வரலாறு ஆகும். கடந்தகால தவறான இந்த வழிமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தலைவர்கள் இவ்வாறு அமைப்புத் தோழர்களை தனித்தனியாக சந்தித்து அவர்களை சமாதானப் படுத்துவதை அணிகள் அனுமதிக்கக் கூடாது. மாறாக அனைத்துப் பிரச்சனை களையும் அமைப்பு முறையில்தான் விவாதித்து தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இதன் மூலம் நாம் நமது தலைவர்களை மதிக்கவில்லை என்பது பொருளாகாது. தலைவரும் அமைப்பு முறைகளை பின் பற்றினால் மட்டுமே அவர் மதிப்பிற் குரியவராக ஆகிறார் என்பதுதான் இதன் பொருளாகும். கம்யூனிஸ்டுகளுக்கு கம்யூனிச அமைப்பைவிட மேலானது ஒன்று மில்லை. ஆகவே தலைவராக இருந்தாலும் பிரச்சனைகளை அமைப்பு முறையில்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
மாறாக தனது தலைமை பதவி, மற்றும் அமைப்பிற்குள் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தீர்க்க முயல்வது அமைப்பு முறைக்கு எதிரானது, மட்டுமல்ல அமைப்பு தோழர்களுக்கு இடையில் நம்பிக்கை இன்மையை தோற்றுவிக்கும் மேலும் ஒற்றுமைக்கும் குழிபறிக்கும் அபாயகரமான முறையாகும். கடந்த காலத்தில் கையாளப்பட்ட இந்த முறையை கம்யூனிஸ்டுகள் ஒழித்திட வேண்டும். இதற்கு மாறாக அமைப்பு முறையை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
பொதுவாக கம்யூனிஸ்டுகள் மக்களை நேசிப்பவர்களா கவும், மக்களுக்காக பாடுபடுபவர்களாகவுமே இருக்கிறார்கள். எனினும் அவர்களால் இதுவரை மக்களின் நல்வாழ்விற்கான சமூகத்தை உருவாக்க முடியவில்லை என்பதற்கு என்ன காரணம் என்றால், அவர்களிடத்தில் உள்ள குறைபாடுகளும், அவர்கள் செய்யும் தவறுகளுமே முக்கிய காரணமாக இருக்கிறது. இத்தகைய குறைகளும் தவறுகளும் கம்யூனிஸ்டு களுக்கு இடையில் ஒற்றுமையை சீர்குலைத்துக் கொண்டு இருக்கிறது. தங்களுக்கு இடையிலேயே ஒற்று மையை இவர்கள் ஏற்படுத்த முடியாதவர்களால் உழைக்கும் மக்களிடையிலும் ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லை.
உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்காக பாடுபட்டால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை கம்யூனிஸ்டுகள் நன்கு அறிவார்கள். ''மக்களே வரலாற்றை படைக்கிறார்கள்'' என்று கம்யூனிச தத்துவத்தை உருவாக்கிய காரல்மார்க்ஸ் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ஆகவே மூத்த கம்யூனிஸ்டுகள் தங்களது கடந்தகால அனுபவங்களிலிருந்து, கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைகளையும், அவர்கள் செய்துகொண்டிருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி, அதனை களைவதற்கான வழிமுறைகளை முன் வைக்க வேண்டும். அதனை கம்யூனிஸ்டு கள் ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகளால் அவர்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்வது மட்டுமல்லாது உழைக்கும் மக்களிடையேயும் ஒற்று மையை ஏற்படுத்த முடியும்.
இத்தகைய நடைமுறை மூலமே கம்யூனிஸ்டுகளை ஒன்றுபடுத்திட வேண்டும் என்ற லட்சியத்தை அடிப்படை யாகக் கொண்டு ஒரு குழு செயல்பட்டாலும், அந்த குழு வளரும். அதன் பாதிப்பு பிற குழுக்களிலும் ஏற்படும். அதன் விளைவாக குழுக்கள் ஒன்றுபடும். இப்பிரச்சனையில் பூனைக்கு மணி கட்டுவது யார்? என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு குழுவில் துவங்கி பல குழுக்களுக்கும் பரவும்படி செய்திட ஒரு குழு முயற்சி செய்தாலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும். கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைகளை களைவோம், தவறுகளை திருத்திக்கொள்வோம், கம்யூனிஸ்டு களிடமும், உழைக்கும் மக்களுக்கு இடையிலும் ஒற்றுமைக்காகப் பாடுபடுவோம். இதுதான் இன்றைய கம்யூனிஸ்டுகளுக்கு முன்னால் உள்ள முதன்மையான கடமையாகும் என்று இலக்கு கருதுகிறது.
மார்க்சியவாதிகளின் உண்மையான நோக்கம் என்ன என்பதனை தெரிந்துதான் செயல்படுகின்ற னரா என்பது என் கேள்வியாக உள்ளது!
உலகத்தை விளக்குவதற்கு மட்டுமல்லாமல் அதை மாற்றி அமைப்பதற்கான கடமையை முதன்மைப் படுத்தும் ஒரு சமூக விஞ்ஞானம் மார்க்சியம். இது ஒரு சமூக விஞ்ஞானம் என்பதனாலயே இதற்கு முன்னிருந்து வந்த கோட்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியது. இது ஒரு சமூக விஞ்ஞானம் என்பதாலேயே இதன் காலத்திலும்இதற்குப் பின்னரும் எழுந்த பலகேள்விகளுக்கும் இது உள்ளாகியது. விஞ்ஞானம் என்ற சிந்தனைப் பிரிவின் பண்பும் பயனுமே அது தான்அதாவது கேள்வி கேட்பதும் கேள்விக்குள்ளாவதும்தான் . இப் பரிசோதனையில் ஆதாரமற்ற கருதுகோள் வாழ்வதற் கான தகுதியை இழக்கின்றன. உண்மையை அடிப்படையாகக் கொண்ட கோட்பாடுகள் வளர்ச்சி பெறுகின்றன.
ஆக இடதுசாரி என்பவர்களின் செயல்பாட்டின் அடிப்படையில் மற்றும் இங்குள்ள நடைமுறை போக்கின்படி மார்க்சியம் பேசுபவர்களை நான் சில பிரிவாக பிரிக்க நினைக்கின்றேன்.
அவர்களில் முதல் பிரிவினர் சிபிஐ தொடங்கி வெறும் பாராளுமன்றம் சார்ந்த அந்த அரசியல் மேற்கொள்பவர்கள் இதிலிருந்து மாறுபட்ட இன்னொரு பிரிவினர் மார்க்சியத்தை நடைமுறை தந்திரமாக்கி புரட்சி மூலம் சமூகத்தை மாற்ற நினைப்பவர்கள் இவர்கள் மிக மிகக் குறைவு சொர்பம் என்பேன். இவர்கள் அல்லாத மூன்றாம் பிரிவினர் மார்க்சியம் வேண்டும் எதற்கு என்று தெரியாமல் இங்குள்ள முதலாளித்துவ எல்லா வகையான சிந்தனைகளும் அதனுள் அடக்கி அதற்குள்ளேயே தீர்வு தேடும் ஒரு கூட்டம் இவர்கள் முதலாளித்துவ நடைமுறையையும் சீர்திருத்தவாதத்தை கொள்கையாகவும் கொண்டவர்கள்.
கம்யூனிசத்தின் அடிப்படைகளை புறக்கணித்துவிட்ட முதலாம் பிரிவினர் கம்யூனிசத்தை ஏற்றுக் கொள்ளாத மூன்றாம் பிரிவினர் இருவரும் ஓரம்சத்தில் இணைகின்றனர் அவை இந்த அமைப்பு முறை அதாவது ஆளும் வர்க்கத்தை கட்டி காப்பது தான் இரண்டாம் பிரிவினரின் இங்கு உள்ளவர்கள் தங்களின் தத்துவத்தை நடைமுறையாக்குவதில் திறனின்றி இயலாநிலையில் உள்ளார்கள்...
உண்மையைப் பேசுங்கள்; மெய்யான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்; ஊக்கத்தோடு பணியாற்றுங்கள்; நடைமுறையில் விளைவுகளைச் சாதிக்கப் போராடுங்கள். இவையனைத்தின் வார்த்தெடுக்கப் பட்ட சாரம்தான், "எதார்த்தமான சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடு!" என்ற முதுமொழியாகும். தோழர் மாசேதுங் இந்த முதுமொழிக்குப் புதிய வியாக்கியானத்தைக் கொடுத்தார் அவரது முதன்மையான சித்தாந்தக் கூறுகளில் ஒன்றாக இது எப்போதும் குறிப்பிடப்படுகிறது. இது மிகவும் செறிவுடைய, மிகவும் செழுமையான பொருள் பொதிந்த சொற்றொடராக விளங்குகிறது. இதை நடைமுறைப் படுத்த சிறந்த வழி எது? விரிவான விசாரணையும் ஆய்வையும் பரிசீலனையையும், படிப்பையும் மேற்கொள்வதே இதற்கான முதற் தேவையாகும். சமூக ஆய்வு - விசாரணையை மேற்கொள்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஏனெனில் தொடர்ந்த நான்கு ஆண்டுகளாக தற்பெருமையும் மிகை மதிப்பீடு செய்யும் போக்கும் நீடித்து வருகிறது. இதை ஒரேயடியில் மாற்றியமைப்பது சிரமமானது. - (சௌ என் லாய், உண்மையைத் தேடுங்கள் என்ற கட்டுரையிலிருந்து)
புறநிலை எதார்த்தமான ஆதாரங்களிலிருந்தும், சாட்சிகளிலிருந்தும் உண்மையைத் தேடுபவர்களால் மட்டுமே உண்மையைக் கண்டுபிடிக்க முடியும் என்றார் தோழர் சௌ என் லாய். இந்த கோட்பாட்டை தங்களை பெரிய புரட்சியாளர்கள் என்று கருதி தற்பெருமை யடித்துக் கொண்டு இருக்கும் இங்குள்ளோர் துளியும் கருத்தில் கொள்ளவே இல்லை எனலாம். தொடரும்...