முந்தைய பகுதியின் தொடர்ச்சி
5. எப்படி “புரட்சியை முன்னேற்றுவது” தீர்மானத்தின் அடுத்த பகுதியை மேற்கோள் காட்டுவோம்:”இப்படிப்பட்ட நிலைமைகளில், சமூக - ஜனநாயகவாதம் புரட்சி நெடுகிலும் ஒரு நிலை எடுத்து நிலைநிறுத்த முயன்று வரவேண்டும்; அந்த நிலை புரட்சியை முன்னேற்றி வருவதற்கான சாத்தியப்பாட்டை அதற்கு மிகச் சிறப்பாக உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும், முதலாளித்துவ கட்சிகளின் முரணான, தன்னலமுள்ள கொள்கையை எதிர்த்துத்தான்நடத்தும் போராட்டத்தில் சமூக - ஜனநாயகவாதத்தின் கையைக்கட்டிப்போடாததாய் இருக்க வேண்டும், முதலாளித்துவ ஜனநாயகத்தில்கலந்து மறைந்துவிடாமல் பாதுகாக்கிறதாய் இருக்க வேண்டும்”. எனவே, சமூக - ஜனநாயகவாதம் அரசதிகாரத்தைக் கைப்பற்றும் குறிக்கோளையோ தற்காலிக அரசாங்கத்தில் அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்ளும் குறிக்கோளையோ வகுத்துக் கொள்ளக் கூடாது, மிகத் தீவிரமான புரட்சிகர எதிர்க்கட்சியாக இருந்து வரவேண்டும்.”புரட்சியை முன்னேற்றுவதற்கான சாத்தியப்பாட்டை மிகச் சிறப்பாக உறுதிப்படுத்து கிறதாயுள்ள நிலையை எடுத்துக் கொள்ளச் சொல்லும் அறிவுரை நமக்கு உண்மையாகவே மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும், இந்த நல்ல அறிவுரையோடு கூடவே, இன்றைய அரசியல் நிலைமையில், மக்களின் பிரதிநிதிகளைக் கூட்டுவதைப் பற்றிய வதந்திகளும் ஊகங்களும் பேச்சும் திட்டங்களும் நிலவும் காலத்தில், சமூக - ஜனநாயகவாதம் எப்படிப் புரட்சியை முன்னேற்ற வேண்டும் என்று நேரடியாக குறித்துக் காட்டவேண்டும் என்றுதான் விரும்புவோம். மக்களுக்கும் ஜார் மன்னனுக்கும் இடையே “சமரசம்” பற்றிய ஒஸ்வபஷ்தேனியேயின் தத்துவத்திலுள்ள அபாயத்தைப் புரிந்துகொள்ளத் தவறுகிறவர்கள், அரசியல்நிர்ணய சபையைக் கூட்டுவது எனும் வெறும் “முடிவையே” ஒரு வெற்றியாகக் கூறுகிறவர்கள், தற்காலிகப் புரட்சி அரசாங்கம் தேவை எனும் கருத்தை தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் பணியை வகுத்துக் கொள்ளாதவர்கள், அல்லது ஜனநாயகக் குடியரசு வேண்டும் எனும் கோஷத்தை பின்னணியில் விட்டு வைக்கிறவர்கள் – இவர்களால் புரட்சியை மேலும் முன்னேற்றி வைக்க முடியுமா? இப்படிப் பட்டவர்கள் உண்மையிலே புரட்சியை பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள்; காரணம், நடைமுறை அரசியலைப் பொறுத்தவரை, அவர்கள் ஒஸ்வபஷ்தேனியே நிலையின் மட்டத்துடன் நின்றுவிட்டார்கள். புரட்சிக் காலகட்டத்தில் கட்சியின் இன்றைய உடனடியான பணிகளை வரையறுத்துக் கொடுக்கும் போர்த்தந்திரத் தீர்மானத்தில் குடியரசிற்காகப் போராட வேண்டும் எனும்கோஷத்தை அவர்கள் விட்டுவிடுவார்களேயானால், எதேச்சிகார முறைக்குப் பதிலாக குடியரசை வைக்க கோருகிற வேலைத்திட்டத்தை அவர்கள் அங்கீகரிப்பதில் என்ன பயன்? அனைத்து மக்களின் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவது பற்றிய முடிவையே ஒரு நிர்ணயமான வெற்றியாக் கருதுவதும், தற்காலிகப் புரட்சி அரசாங்கம், குடியரசு ஆகியவற்றின் விஷயத்தில் முன்புத்தியோடு கூடிய மௌனம் சாதிப்பதும் ஒஸ்வபஷ்தேனியின் நிலையை, அரசியல் சட்டவாத முதலாளி வர்க்கத்தாரின் நிலையைத்தான் இன்று உண்மையிலே இனங்காட்டுகிறது!
புரட்சியை முன்னேற்றுவதற்கு, முடியரசுவாத முதலாளித்துவ வர்க்கத்தின் அதை முன்னேற்றும் எல்லைக்கும் அப்பால் அதை எடுத்துச் செல்வதற்கு முதலாளித்துவ ஜனநாயகத்தின் “முரணான தன்மையை” விலக்கி வைக்கிற கோஷங்களை முயற்சியுடன் உருவாக்கித் தருவதும் வலியுறுத்துவதும் முன்னணிக்கு கொணர்வதும் அவசியம். தற்சமயம் இவ்வகைப்பட்ட கோஷங்கள் இரண்டுதான் உள்ளன:
1) தற்காலிகப் புரட்சி அரசாங்கம்,
2)குடியரசு, என்று, ஏனெனில் அனைத்து மக்களின் அரசியல் நிர்ணய சபை எனும் கோஷத்தை முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினர்ஏற்றுக்கொண்டுள்ளனர் (ஒஸ்வபஷ்தேனியே சங்கத்தின் வேலைத்திட்டத்தைப் பார்க்க), புரட்சியைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுதல், அது முழு வெற்றி பெறாமல் தடுப்பது, ஜாராட்சியுடன் பெருமுதலாளி வர்க்கத்தினர் பேரம் முடித்துக்கொள்ளச் செய்வது எனும்ஒரே நோக்குடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆக, இப்போது பார்க்கிறோம்:
“புரட்சியை முன்னேற்றவல்ல இரண்டே இரண்டு கோஷங்களில் குடியரசு வேண்டும் எனும் கோஷத்தை மாநாடு முற்றாக மறந்துவிட்டது,தற்காலிகப் புரட்சி அரசாங்கம் வேண்டும் என்கிற கோஷமும் அனைத்து மக்களின் அரசியல் நிர்ணய சபை பற்றிய ஒஸ்வபஷ்தேனியே கோஷமும் சமம் என்று வெளிப்படையாக வைத்து அதுவும் இதுவும் ஒருங்கே புரட்சியின் நிர்ணயமான வெற்றி” என்று வர்ணித்தது!!
உண்மை, இதுதான் விஷயம் என்பதில் ஐயமில்லை. ரஷ்ய சமூக -ஜனநாயகவாதத்தின் எதிர்கால வரலாற்றாசிரியருக்கு இது ஒரு எல்லைக் கல்லாக விளங்கும் என்று உறுதியாக நம்புகிறோம். 1905 மே மாதத்தில் நடந்த சமூக - ஜனநாயகவாதிகளின் மாநாடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது;அதில் ஜனநாயகப் புரட்சியை முன்னேற்றுவதின் அவசியத்தைப் பற்றி நேர்த்தியான வார்த்தைகள் இருந்த போதிலும் உண்மையிலே அப்புரட்சியைப் பின்னுக்கு இழுக்கிறது, முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் ஜனநாயகக் கோஷங்களுக்கு அப்பால்போகவில்லை.
முதலாளித்துவ ஜனநாயகத்தில் பாட்டாளி வர்க்கம் கலந்து கரைந்துவிடக்கூடிய அபாயத்தை நாம் புறக்கணிக்கிறோம் என்று புதிய இஸ்க்ராகுழுவினர் நம்மை குற்றஞ்சாட்ட விரும்புகின்றனர். ரஷ்யாவின் சமூகஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தின் வாசகத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை நிருபிக்க யாராவது முன்வரட்டும், பார்ப்போம். நம் எதிர்ப்பாளர்களுக்கு நாம் கொடுக்கும் பதில் இதுதான்: முதலாளித்துவ சமுதாயத்தில் வேலை செய்துவரும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சி சில வழக்குகளில் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் அக்கம் பக்கமாக வழிநடையிடாமல் அரசியலில் கலந்துகொள்ள முடியாது. இவ்விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வேற்றுமை இதுதான்: நாங்கள் புரட்சிகரமான குடியரசு வழிப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினருடன் ஒன்றுகலந்து விடாமல் அக்கம் பக்கமாக வழிநடையிடுகிறோம், ஆனால் நீங்கள் மிதவாத, முடியரசு வழிப்பட்ட முதலாளி வர்க்கத்தினருடன் ஒன்றுகலந்துவிடாமல் அக்கம் பக்கமாக வழிநடையிடுகிறீர்கள். அதுதான் விவகாரம்.
மாநாட்டின் பேரால் நீங்கள் வரையறுத்துள்ள போர்த்தந்திரக் கோஷங்கள் “அரசியல் சட்ட – ஜனநாயகக்” கட்சியின் -- அதாவது, முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் கட்சியின் -- கோஷங்களுடன் பொருந்துகின்றன.
மேலும் இப்படிப் பொருந்தி நிற்பதை நீங்கள் பார்க்கவோ உணரக்கூட இல்லை, எனவே உண்மையில் நீங்கள் ஒஸ்வபஷ்தேனியே கூட்டத்தாரை வால்பிடித்துச் செல்கிறீர்கள்.
ரஷ்யாவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் பேரால் நாங்கள் வரையறுத்துள்ள போர்த்தந்திரக் கோஷங்கள் ஜனநாயகப் போக்கான, புரட்சிகரமான, குடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் கோஷங்களுடன் பொருந்துகின்றன. ரஷ்யாவில் இந்த முதலாளி வர்க்கத்தினரும் சிறுமுதலாளி வர்க்கத்தினரும் தங்களை ஒரு பெரிய, மக்கள் கட்சியாக இன்னும் அமைத்துக் கொள்ளவில்லை. *என்றபோதிலும், இன்று ரஷ்யாவில் நடந்துவருவதைப் பற்றி ஒன்றுமேயறியாத ஒருவர்தான் இவ்வகைப்பட்ட கட்சிக்குரிய அம்சங்கள் இருக்கிறதைப் பற்றிச் சந்தேகப்பட முடியும். (மாபெரும் ரஷ்யப் புரட்சி முன்னேறுமானால்) நாங்கள் சமூக - ஜனநாயகக் கட்சியால் ஒழுங்கமைக்கப் பெற்ற பாட்டாளி வர்க்கத்தை மட்டுமின்றி எங்களுடன் அக்கம் பக்கமாக வழிநடையிட திறமை படைத்த இந்தச் சிறுமுதலாளி வர்க்கத்தினரையும் வழிகாட்டி நடத்திச் செல்வதென்று எண்ணங்கொண்டிருக்கிறோம்.
மாநாடு தன்னுடைய தீர்மானத்தின் வழியாக மிதவாத, முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் தரத்துக்குத் தன்னையறியாமலே தாழ்ந்துவிடுகிறது. கட்சிக் காங்கிரஸ் தன்னுடைய தீர்மானத்தின் வழியாகப் புரட்சிகரமான ஜனநாயகத்தின் தரகர்களாகவேலைசெய்யாமல் போராடும் திறமையுள்ள பகுதிகளை உணர்வுப்பூர்வமாகத் தன்னுடைய தரத்துக்கு உயர்த்துகிறது.
பெரும்பாலும் விவசாயிகளிடையே இப்படிப்பட்ட பகுதிகளைக் கண்டு கொள்ளலாம். பெரும் சமுதாயக் குழுக்களை அவற்றின் அரசியல் போக்குகளின்படி வகைப்படுத்துவதில் பெருந் தவறு செய்யும் அபாயம் இல்லாமல் புரட்சிகரமான, குடியரசு வழிப்பட்ட ஜனநாயகம் என்பது திரளான விவசாயி மக்களே என்று இனங்கண்டு கொள்ள முடியும் -- சமூகஜனநாயகம் என்பது தொழிலாளி வர்க்கம் என்று நாம் இனங்கண்டு கொள்ளமுடிகிற அதே பொருளில், அதே வில்லங்கங்களோடு, அதே உட்கிடையான நிபந்தனை களோடு செய்யமுடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், பின்வரும் சொற்களிலும் நம்முடைய முடிவுகளை வரையறுக்க முடியும்
---------------------
*சோசலிஸ்டு – புரட்சியாளர்களை”; இப்படிப்பட்ட கட்சியின் கரு என்று சொல்வதைவிட அறிவுஜீவிகளின் பயங்கரவாதக் குழு என்று சொல்லலாம்; என்றபோதிலும், இந்தக் குழுவின் நடவடிக்கைகளின் புறநிலைக் குறிபொருள் புரட்சிகரமான, குடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் குறிக்கோளைச் சாதிக்கும் பணி என்று வடித்துச் சொல்லிவிட முடியும்.
------------------
புரட்சி காலத்தில் மாநாடு தன்னுடைய நாடுதழுவிய* அரசியல் கோஷங்கள் வழியாகத் திரளான நிலப்பிரபுக்களின் தரத்துக்குத் தன்னையறியாமல் தாழ்ந்துவிடுகிறது. கட்சிக் காங்கிரஸ் தன்னுடைய நாடுதழுவிய அரசியல் கோஷங்கள் வழியாகத் திரளான விவசாயிகளைப் புரட்சிகரமான தரத்துக்கு உயர்த்துகிறது. இந்த முடிவுகளைக் கொண்டு நமக்கு முரணுன்மைகளின் மீது விருப்பம் இருப்பதாக யாராவது குற்றஞ்சாட்டுவார்களேயானால் அவருக்கு நாம் சவால் விடுகிறோம்: புரட்சியை வெற்றிகரமானமுடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்மிடம் போதிய வலிமை இல்லாமற்போனால், ஒஸ்வபஷ்தேனிய அர்த்தத்தில் -- அதாவது ஜார்கூட்டப்படும் பிரதிநிதித்துவ சபை (கேலியாகத்தான் இதை அரசியல் நிர்ணய சமை என்று அழைக்க முடியும்) எனும் வடிவத்தில் மட்டுமே --ஒரு “நிர்ணயமான வெற்றியில்” புரட்சி முடிகிறது என்றால், அது நிலப்பிரபு, பெருமுதலாளி அம்சமே மிகுந்திருக்கும் புரட்சியாகத்தான் இருக்கும் எனும் முன்கூற்றை அவர் பொய் என்று காட்டட்டும். மறுபுறம், நம் வாழ்நாளில் உண்மையிலேயே மகத்தான புரட்சியைக் கண்டு அனுபவிக்க இருப்போமேயானால், இந்தத்தடவை ஒரு ”குறைப்பிரசவத்தை” வரலாறு அனுமதிக்கவில்லையானால், புரட்சியை வெற்றிகரமான முடிவுக்கு கொண்டுவரும் வலிமை போதியளவுக்கு நம்மிடம் இருக்குமேயானால், ஒஸ்வபஷ்தேனியே அரத்தத்திலோ புதிய - இஸ்க்ரா அர்த்தத்திலோ இல்லாத நிர்ணயமான வெற்றிக்கு கொண்டுவர முடியுமேயானால், அதுவிவசாயி, பாட்டாளி வர்க்க அம்சம் மிகுந்திருக்கும் புரட்சியாய் இருக்கும்.
இவ்வாறு மிகுந்திருப்பது சாத்தியமே என்று நாம் ஒப்புக்கொள்வதை வைத்து வரப்போகும் புரட்சி முதலாளித்துவத் தன்மை கொண்டதாயிருக்கும் எனும் கருத்தை நாம் கைவிட்டுவிட்டதாகச் சிலர் ஒருக்கால் வியாக்கியானம் செய்யக் கூடும். இஸ்க்ராவில் இந்தச் சொல் கேடாகப் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கும் போது இவ்வாறு நடக்கவுங்கூடும். எனவே இப்பிரச்சனையைக் கவனிப்பது தேவையற்றதல்ல.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை ரஷ்யாவில் ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டிய லெனின், ரஷ்யாவின் அப்போதைய சூழலில் சமூக ஜனநாயகவாதம் அதாவது கம்யூனிஸ்ட் கட்சியானது, புரட்சி நெடுகிலும் ஒரு நிலை எடுத்து நிலைநிறுத்த முயன்று வரவேண்டும்; அந்த நிலை புரட்சியை முன்னேற்றி வருவதற்கான சாத்தியப்பாட்டை அதற்கு மிகச் சிறப்பாக உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும், முதலாளித்துவ கட்சிகளின் முரணான, தன்னலமுள்ள கொள்கையை எதிர்த்துத் தான்நடத்தும் போராட்டத்தில் சமூக -ஜனநாயகவாதத்தின் கையைக் கட்டிப்போடாததாய் இருக்க வேண்டும்,முதலாளித்துவ ஜனநாயகத்தில் கலந்து மறைந்துவிடாமல்
பாதுகாக்கிறதாய் இருக்க வேண்டும் என்றார் லெனின்.
அதாவது ஜனநாயகப் புரட்சிக்கான (அல்லது சோசலிசப் புரட்சிக்கான) வேலைத்திட்டத்தை உருவாக்கி அந்தப் புரட்சியை நடத்தி முடிக்கும் வரை அதற்காகவே உணர்வுப்பூர்வமாகவும் உண்மையாகவும் பாடுபட வேண்டும் என்கிறார்.
அந்தப் புரட்சிக்கான பணிகளில் ஈடுபடும் காலத்தில் கம்யூனிஸ்டுகளின் பணியானது புரட்சியை நோக்கியும் அதன் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் விதமாகவும், புரட்சிகரமான இயக்கமானது முன்னேற்றப் பாதையில் செல்வதை உத்திரவாதப் படுத்துவதாகவும் இருக்க வேண்டும் என்றார் லெனின். முதலாளித்துவ கட்சிகள் தன்நல அடிப்படையில் கொள்கை வகுத்து செயல்படும் போது அவர்களின் தன்நலக் கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டும் மேலும் அதனை மக்களிடம் அம்பலப்படுத்தி மக்களை முதலாளித்துவ கட்சிகளை புறக்கணிக்கச் செய்ய வேண்டும் என்கிறார் லெனின். முதலாளித்துவ கட்சிகளை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராடும் போது முதலாளித்துவ கட்சிகள் அவர்களிடமுள்ள அரசியல் பலத்தைக்கொண்டு கம்யூனிஸ்டுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள், அதற்கு கட்டுப்படாமல் முதலாளித்துவ கட்சிகளை எதிர்த்து வீரமாக கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும் என்றார் லெனின். மேலும் கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்துக்காகப் போராடும் அதே வேளையில் முதலாளித்து ஜனநாயகத்துக்குள் கம்யூனிஸ்டுகள் கலந்து ஐக்கியமாகிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் லெனின்.
ஏனெனில் இந்த முதலாளித்துவ ஜனநாயகமானது உழைக்கும் மக்களுக்கு முதலாளிகளை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறது என்றாலும் முதலாளித்துவ ஜனநாயகம் என்பது முதலாளித்துவ சர்வாதிகாரமே என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொண்டு முதலாளித்து ஜனநாயகத்தை மக்களின் போராட்டத்திற்காகப் பயன்படுத்த வேண்டும், மாறாக இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை முழுமையாக கம்யூனிஸ்டுகள் நம்பிவிடக்கூடாது மேலும் இந்த ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடாது என்றார் லெனின்.
பாராளுமன்ற ஆட்சி முறையின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பது பற்றி லெனின் பேசும் போது, “சமூக - ஜனநாயகவாதம் அரசதிகாரத்தைக் கைப்பற்றும் குறிக்கோளையோ தற்காலிக அரசாங்கத்தில் அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்ளும் குறிக்கோளையோ வகுத்துக் கொள்ளக் கூடாது, மிகத் தீவிரமான புரட்சிகர எதிர்க்கட்சியாக இருந்து வரவேண்டும்.” என்றார்.
லெனின். அதாவது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் கம்யூனிஸ்டுகள் கலந்துகொள்ள வேண்டும். ஆனால் அதன் மூலம் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது, என்றும் பிறமுதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு சேர்ந்து கூட்டணி அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தைப் பங்குபோட்டுக் கொள்ளக்கூடாது என்றார் லெனின். இதற்கு மாறாக பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் புரட்சிகரமான எதிர்க்கட்சியாகவே கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும் என்றார் லெனின்.
இதற்கு என்ன காரணம்? இந்தப் பாராளுமன்ற ஆட்சி முறையானது பெருவாரியான மக்களுக்கானது அல்ல என்ற உண்மை மக்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது. ஆகவே பெரும்பாலான மக்களுக்கு இந்த உண்மையை புரியவைக்க வேண்டியதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் இந்த உண்மையை மக்களுக்கு தொடர்ந்து எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டியதற்காக இந்த பாராளுமன்றத்தில் பங்கெடுத்து கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டியது அவர்களின் கடமையாகும்.
அதே வேளையில் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையில் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம்கூடும் உரிமை, போராடும் உரிமை போன்றவற்றை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இந்த பாராளுமன்ற ஆட்சி முறையே போதுமானது என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது, ஏனெனில் மக்களின் போராட்டங்கள் கூர்மையடையும் போது இந்த பாராளுமன்ற ஆட்சியானது மக்களின் போராட்ட உரிமையைப் பறித்து போராட்டத்தை நசுக்கிவிடும். ஆகவேதான் இந்த பாராளுமன்ற ஆட்சியானது எப்போதுமே மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்காது என்பதையும் மக்களுக்கு எப்போதும் தொடர்ந்து ஜனநாயகத்தைவழங்கக்கூடிய சோவியத்து வடிவத்திலான சோசலிச ஆட்சி முறைதான் நமக்கு வேண்டும் என்று மக்களுக்கு புரியவைக்க வேண்டியதுதான் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆகவேதான் இந்த பாராளுமன்றத்திலோ சட்டமன்றத்திலோ பெரும்பான்மையை கைப்பற்றி கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் கம்யூனிஸ்டுகளே இந்த பாராளுமன்ற ஆட்சி முறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
அதன்மூலம் கம்யூனிஸ்டுகளே மக்களை ஏமாற்ற வேண்டி வரும் என்பதற்காகவே லெனின் கம்யூனிஸ்டுகள் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையில் ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்றும் கூட்டணி ஆட்சியில் பங்குகொள்ளவும் கூடாது என்றார் லெனின். லெனினது இந்த போதனைகளை மீறுபவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. ஆகவே கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற ஆட்சி முறையை அம்பலப்படுத்த வேண்டும், பாராளுமன்ற ஆட்சியை கலைப்பதற்கு மக்களைத் திரட்டி மக்களை புரட்சிக்குத் தயாரிக்க வேண்டும். அதுவரை பாராளுமன்ற ஆட்சியை மக்களின் போராட்டத்துக்கும் பாராளுமன்ற ஆட்சிமுறையை மக்களிடம் அம்பலப்படுத்துவதற்கும் கம்யூனிஸ்டுகள்
பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும்.
பாராளுமன்ற ஆட்சிமுறையில் கம்யூனிஸ்ட்டுகள் முதலாளித்துவ ஜனநாயகத்தில் கலந்து மறைந்துவிடக்கூடாது என்கிறார் லெனின். ஆகவே முதலாளித்துவ ஆட்சி முறையில் அதிகாரத்தை கைப்பற்றுவதோ, ஆட்சியில் பங்குபோடுவதோ நோக்கமாக கம்யூனிஸ்டுகளுக்குஇருக்கக் கூடாது என்றும் புரட்சிகரமான எதிர்க்கட்சியாகவே கம்யூனிஸ்டுகள் இருக்க வேண்டும் என்றார் லெனின். ஆனால் லெனினியத்தை திருத்திய திருத்தல்வாதிகள், லெனினது போதனைகள கைவிட்டவர்கள் தேர்தலில் பங்குபெற்று ஆட்சிக்கு வந்தார்கள். இவ்வாறு ஆட்சிக்கு வந்த பின்பு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கேட்க்கிறார்கள். முதலில் இவர்கள் லெனினது போதனைகளை கைவிட்டுவிட்டு திருத்தல்வாதப் பாதையை மேற்கொண்ட தவறை மக்களிடம் வெளிப்படுத்தி சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும்.
இரண்டாவது இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து ரஷ்ய போல்ஷ்விக்குகள் போல் மக்களுக்கு எவ்விதமான நன்மையையும் செய்ய முடியவில்லை என்ற உண்மையை மக்கள் முன்னால் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மூன்றாவது இனிமேல் லெனினைப் பின்பற்றி இந்தப் பாராளுமன்ற ஆட்சியில் கிடைத்துள்ள பேச்சுரிமை, எழுத்துரிமை, கூட்டம்கூடும் உரிமை, போராடும் உரிமைகளைப் பயன்படுத்தி மக்களுக்கு மார்க்சிய தத்துவ அரசியலை போதிப்பது, சோவியத்து வடிவத்திலான உண்மையான மக்கள் ஆட்சியை அடைந்திட மக்களை அணிதிரட்டி புரட்சிக்கு மக்களை தயாரிப்பது போன்ற பணிகளைச் செய்வோம் என்றும் அதற்காக இந்த பாராளுமன்றத்தை பயன்படுத்துவோம் என்றும் இந்த பாராளுமன்றத்தை கலைப்பதுதான் லெனினிய வழியில் தங்களது லட்சியம் என்று அறிவிக்க வேண்டும். சோவியத்து வடிவத்திலான ஆட்சி அமைக்க முதலாளித்துவ கட்சிகளிடம் ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து வெளியேறி மக்களிடம் கூட்டணி அமைப்போம் என்று அறிவிக்க வேண்டும்.
தற்போது கிடைத்துள்ள மாநில ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தங்களால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மேற்குவங்க ஆட்சியின் மூலம் விவசாயிகளை சுட்டுக் கொன்றது போலத்தான் செயல்பட முடியும் என்று அறிவித்து ஆட்சியிலிருந்து வெளியேறி உண்மையான மக்களாட்சியை அமைப்பதற்கு பாடுபட முன்வர வேண்டும். இதற்கு மாறாக இவர்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இவர்களால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. அப்படியே மக்களுக்காக நன்மைகளை செய்ய முயன்றால் சிலி நாட்டு கம்யூனிஸ்டுகளுக்கு ஏற்பட்ட கதிதான் இவர்களுக்கும் ஏற்படும்.
ஆகவே இந்திய கம்யூனிஸ்டுகள் மார்க்சிய லெனினியத்தையும் மக்களையும் நம்பி செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சிபிஎம்லிருந்து வெளியேறிய எம்எல் கட்சித் தலைவர்கள் லெனினைப் பின்பற்றி தேர்தல்மூலம் ஆட்சிக்குவரும் கொள்கையை கைவிட்டார்கள். ஆனால் மக்களுக்கு போதிப்பதற்கும் மக்களுக்காக போராடுவதற்கும் இந்த சட்ட வாய்ப்பை பயன்படுத்திட பாராளுமன்றத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற லெனினது கொள்கையை பின்பற்றாமல் அழித்தொழிப்பு பாதையை தேர்ந்தெடுத்தனர்.
எனினும் அவர்களது சொந்த நடைமுறையில் அழித்தொழிப்பு பாதை தவறு என்பதை உணர்ந்து பெரும்பான்மையான எம்எல் குழுக்கள் கைவிட்டுவிட்டனர். ஆகவே எம்எல் குழுவைப் போலவே தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றும் திருத்தல்வாத கொள்கையால் பயன் ஏதும் இல்லை என்ற உண்மையை திருத்தல்வாத சிபிஐ, சிபிஎம் கட்சித் தலைவர்கள் உணர்ந்து கைவிட வேண்டும். சிபிஐ, சிபிஎம் மற்றும் எம்எல் குழுக்களும் ஒன்று சேர்ந்து லெனினிய வழியில் ஒரு பலம்வாய்ந்த புரட்சிகரமான ஒன்றுபட்ட கட்சியை கட்ட வேண்டும். அந்தக் கட்சியானது லெனினைப் பின்பற்றி இந்தியாவில் மக்கள் புரட்சியை நடத்தி உண்மையான மக்கள் ஆட்சியை நிறுவ வேண்டும். மாநில ஆட்சியை கைப்பற்றிய கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டிய சில கடமைகளை நான் இங்கு வலியுறுத்தியுள்ளேன். இதன் மீது விமர்சனங்கள் இருந்தால் கூறுங்கள் தோழர். தவறுகளை கைவிட்டாலே நாம் பாதி வெற்றி பெற்றுவிட்டோம் என்பது ஒரு கோட்பாடு.
(ஒஸ்வபஷ்தேனியே (விடுதலை) -- ரஷ்ய மிதவாத முதலாளி வர்க்கத்தினரின் பிரதிநிதியான பி.ஸ்துருவேயை ஆசிரியராகக் கொண்டு வெளிநாட்டிலிருந்து (1902-1905) வெளிவந்து கொண்டிருந்த திங்களிருமுறை பத்திரிக்கை; மிதவாத - முடியரசுவாதக் கருத்துக்களை விடாமல் பிரச்சாரம் செய்து வந்தது. 1903ல் இப்பத்திரிக்கையைச் சூழ்ந்து “ஒஸ்வபஷ்தேனியே சங்கம்” தோன்றி 1904 ஜனவரியில் திட்டமான உருவம் பெற்று 1905 அக்டோபர் வரை இருந்து வந்தது. பின்னால் இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் “அரசியல் சட்ட-ஜனநாயகக் கட்சி” (காடேட்டுகள்) -- ரஷ்யாவில் மிதவாத-முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் தலைமையான கட்சியாகும்). மக்களுக்கும் ஜார் மன்னனுக்கும் இடையே “சமரசம்” பற்றிய ஒஸ்வபஷ்தேனியேயின் தத்துவத்திலுள்ள அபாயத்தைப் புரிந்துகொள்ளத் தவறுகிறவர்கள், அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவது எனும் வெறும் “முடிவையே” ஒரு வெற்றியாகக் கூறுகிறவர்கள், தற்காலிகப் புரட்சி அரசாங்கம் தேவை எனும் கருத்தை தீவிரமாகப் பிரச்சாரம் செய்யும் பணியை வகுத்துக் கொள்ளாதவர்கள், அல்லது ஜனநாயகக் குடியரசு வேண்டும் எனும் கோஷத்தை பின்னணியில் விட்டு வைக்கிறவர்கள் -- இவர்களால் புரட்சியை மேலும் முன்னேற்றி வைக்க முடியுமா? இப்படிப் பட்டவர்கள் உண்மையிலே புரட்சியை பின்னுக்கு இழுத்துச் செல்கிறார்கள்; காரணம், நடைமுறை அரசியலைப் பொறுத்தவரை, அவர்கள் ஒஸ்வபஷ்தேனியே நிலையின் மட்டத்துடன் நின்றுவிட்டார்கள். புரட்சிக் காலகட்டத்தில் கட்சியின் இன்றைய உடனடியான பணிகளை வரையறுத்துக் கொடுக்கும் போர்த்தந்திரத் தீர்மானத்தில் குடியரசிற்காகப் போராட வேண்டும் எனும் கோஷத்தை அவர்கள் விட்டுவிடுவார்களேயானால், எதேச்சிகார முறைக்குப் பதிலாக குடியரசை வைக்க கோருகிற வேலைத்திட்டத்தை அவர்கள் அங்கீகரிப்பதில் என்ன பயன்? அனைத்து மக்களின் அரசியல் நிர்ணய சபையைக் கூட்டுவது பற்றிய முடிவையே ஒரு நிர்ணயமான வெற்றியாக் கருதுவதும்,தற்காலிகப் புரட்சி அரசாங்கம், குடியரசு ஆகியவற்றின் விஷயத்தில் முன்புத்தியோடு கூடிய மௌனம் சாதிப்பதும் ஒஸ்வபஷ்தேனியின் நிலையை, அரசியல் சட்டவாத முதலாளி வர்க்கத்தாரின் நிலையைத்தான் இன்று உண்மையிலே இனங்காட்டுகிறது! என்றார் லெனின்.
தற்போதும் இந்தியாவில் முதலாளித்துவ கட்சியினரின் சமரசவாதத்தை அதன் அபாயத்தை புரிந்துகொள்ளத் தவறுபவர்களும், அன்றைய ரஷ்யாவில் அரசியல்நிர்ணய சபையை கூட்டுவதையே வெற்றியாக கருதியவர்களைப் போல இந்திய தேர்தலில் போட்டியிட்டு வெல்வதையே வெற்றியாக கருதிக்கொள்பவர்களும், அன்று ரஷ்யாவில் ஜனநாயகக் குடியரசு வேண்டும் என்ற கொள்கையையே புறக்கணிப்பவர்கள் போன்று இந்தியாவில் புரட்சிகரமான தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை புறக்கணித்துவிட்டு முதலாளித்துவ பாராளுமன்றத்திலேயே ஆட்சிக்கு வரவேண்டும் என்ற திருத்தல்வாதக் கொள்கையை கடைபிடிப்பவர்களும் அன்றைய ரஷ்யாவில் ஒஸ்வபஷ்தேனியின் அதாவது முடியரசுவாத முதலாளித்துவ கட்சியினரது நிலைக்கும் கீழ்ப்பட்டவர்களானர்கள் என்பதுபோல இந்தியாவில் முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளின் நிலைக்கு கீழிறங்கி சமூகத்தை மாற்றுவதற்கான புரட்சியை கைவிட்டவர்களாகிறார்கள்.
ஆகவே லெனினால் விமர்சிக்கப்பட்டவர்கள் போல் இல்லாமல் லெனினது வழிகாட்டுதலைப் பின்பற்றி புரட்சியை நோக்கமாகக் கொண்டு கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும்.“முதலாளித்துவ சமுதாயத்தில் வேலை செய்துவரும் ஒரு சமூக ஜனநாயகக் கட்சி சில வழக்குகளில் முதலாளித்துவ ஜனநாயகத்துடன் அக்கம் பக்கமாக வழிநடையிடாமல் அரசியலில் கலந்துகொள்ள முடியாது. இவ்விஷயத்தில் உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கும் வேற்றுமை இதுதான்: நாங்கள் புரட்சிகரமான, குடியரசு வழிப்பட்ட முதலாளித்துவ வர்க்கத்தினருடன் ஒன்றுகலந்து விடாமல் அக்கம் பக்கமாக வழிநடையிடுகிறோம், ஆனால் நீங்கள் மிதவாத, முடியரசு வழிப்பட்ட முதலாளி வர்க்கத்தினருடன் ஒன்றுகலந்துவிடாமல் அக்கம் பக்கமாக வழிநடையிடுகிறீர்கள். அதுதான் விவகாரம்” என்றார் லெனின். (ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் நூல் பக்கம் 48.) அன்றைய ரஷ்யாவில் முதலாளித்துவ கட்சிகளில் இரண்டு வகையான கட்சிகள் இருந்தது. அன்றைய ரஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடத்திட வேண்டிய அவசியம் இருந்தது. ஆகவே ரஷ்ய கம்யூனிஸ்டுகளாகிய போல்ஷ்விக்குகள் புரட்சிகரமான குடியரசுவாத முதலாளித்துவ கட்சிகளுடன் ஒன்றுகலக்காமல் அக்கம்பக்கமாக உறவு வைத்துக்கொண்டு செயல்பட்டார்கள்.
அதற்கு மாறாக ரஷ்ய திருத்தல்வாதிகள் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை காரணமாகக் காட்டி அன்றைய முடியரசுவாத முதலாளித்துவ கட்சியோடு ஒன்றுகலக்காமல் அக்கம்பக்கமாக உறவுகொண்டு செயல்பட்டார்கள். அவ்வாறு செயல்பட்ட திருத்தல்வாதிகளின் செயலைத்தான் லெனின் தவறு என்று குறிப்பிட்டார். ஆகவே இந்தியாவிலும் முதலாளித்துவ சமுதாயத்தில் வேலைசெய்யும் கம்யூனிஸ்ட்டுகள் இங்குள்ள எத்தகைய முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டுசேர வேண்டும் என்பதையும், அவர்களோடு ஒன்றுகலக்காமல் அக்கம்பக்கமாக எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வர்க்க அடிப்படையில் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
இதற்கு மாறாக ஒரு சமயம் ஒரு முதலாளித்துவ கட்சியோடு கூட்டு, மறு சமயம் பிற முதலாளித்துவ கட்சியோடு கூட்டு என்று செயல்படுவது சந்தர்ப்பவாதமே ஆகும். இங்கு ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை மறுக்கும் போது ஜனநாயகத்தை முதன்மை படுத்தும் முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டு வைக்க வேண்டும். இதற்கு மாறாக இந்தியாவில் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளையும் அதன் அரசையும் ஆதரிக்கும் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாட்டாளிமக்கள் கட்சி போன்ற கட்சிகளோடு கம்யூனிஸ்டுகள் கூட்டு சேரக்கூடாது. அப்படியானால் இங்கே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்ற முதலாளித்துவகட்சிகளே இல்லை என்ற நிலையில் கம்யூனிஸ்டுகள் எந்தக் கட்சியோடு கூட்டு சேருவது என்ற கேள்வி உள்ளது. பிரிட்டீஷாரின் ஆட்சிகாலத்திலிருந்தே ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முதலாளிகளுக்கான கட்சி இங்கு உருவாக்கப்படவில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளிகள் காங்கிரஸ், திமுக போன்ற ஏகாதிபத்திய ஆதரவு முதலாளித்துவக் கட்சிகளையே ஆதரித்தார்கள். அந்த நிலையே இன்றும் தொடர்கிறது.
ஆகவே ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சிகள் இங்கு இல்லை என்ற போதும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முதலாளிகளும் கிராமங்களில் பணக்கார விவசாயிகளும் இங்குள்ளார்கள். அந்த வர்க்கங்களோடு கம்யூனிஸ்டுகள் கூட்டு சேர்ந்து செயல்பட வேண்டும். அதன் மூலமே கம்யூனிஸ்டுகள் லெனினை பின்பற்றியவர்கள் ஆவார்கள்.
அன்றை ரஷ்யாவிலுள்ள முதலாளித்துவ கட்சிகளுக்கு லெனின் சொன்னதை இங்குள்ள முதலாளித்துவ வர்க்கங்களுக்குப் பொருத்தி கம்யூனிஸ்டுகள் நடைமுறையை வகுத்துக்கொள்ள
வேண்டும்.
“மாநாட்டின் பேரால் நீங்கள் வரையறுத்துள்ள போர்த்தந்திரக் கோஷங்கள்” “அரசியல் சட்ட - ஜனநாயகக்” கட்சியின் -- அதாவது, முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் கட்சியின் -- கோஷங்களுடன் பொருந்துகின்றன. மேலும் இப்படிப் பொருந்தி நிற்பதை நீங்கள் பார்க்கவோ உணரக்கூட இல்லை, எனவே உண்மையில் நீங்கள் ஒஸ்வபஷ்தேனியே கூட்டத்தாரை வால்பிடித்துச் செல்கிறீர்கள்.
ரஷ்யாவின் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் மூன்றாவது காங்கிரசின் பேரால் நாங்கள் வரையறுத்துள்ள போர்த்தந்திரக் கோஷங்கள் ஜனநாயகப் போக்கான, புரட்சிகரமான, குடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் கோஷங்களுடன் பொருந்துகின்றன. ரஷ்யாவில் இந்த முதலாளி வர்க்கத்தினரும் சிறுமுதலாளி வர்க்கத்தினரும் தங்களை ஒரு பெரிய, மக்கள் கட்சியாக இன்னும் அமைத்துக் கொள்ளவில்லை.* என்றபோதிலும், இன்று ரஷ்யாவில் நடந்துவருவதைப் பற்றி ஒன்றுமேயறியாத ஒருவர்தான் இவ்வகைப்பட்ட கட்சிக்குரிய அம்சங்கள் இருக்கிறதைப் பற்றிச் சந்தேகப்பட முடியும். (மாபெரும் ரஷ்யப் புரட்சி முன்னேறுமானால்) நாங்கள் சமூக - ஜனநாயகக் கட்சியால் ஒழுங்கமைக்கப் பெற்ற பாட்டாளி வர்க்கத்தை மட்டுமின்றி எங்களுடன் அக்கம் பக்கமாக வழிநடையிட திறமை படைத்த இந்தச்சிறுமுதலாளி வர்க்கத்தினரையும் வழிகாட்டி நடத்திச் செல்வதென்று எண்ணங்கொண்டிருக்கிறோம்” (ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் என்ற நூலில் பக்கம் 48) என்றார் லெனின்.
அதாவது கம்யூனிஸ்டுகளின் போர்த்தந்திரமானது ஆட்சியிலிருக்கும் ஆளும் வர்க்கங்களை ஆதரிக்கின்ற முதலாளித்துவ கட்சிகளின் போர்த்தந்திரங்களை ஒத்திருக்கக்கூடாது என்றும், ஆட்சியிலிருக்கும் உதாராணமாக இந்தியாவில் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளை ஆதரிக்கின்ற முதலாளித்துவ கட்சிகளை அதன் கொள்கைகளை எதிர்த்துப் போராடுகின்ற முதலாளித்துவக் கட்சிகளின் கொள்கைகளோடு அதாவது ஆளும் வர்க்கங்களின் (பெருமுதலாளிகளின்) நலன்களை எதிர்த்துப் போராடுகின்ற கொள்கைகளோடு ஒத்துப்போவதாக இருக்க வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும். .இங்கே அத்தகைய கட்சி இல்லாத நிலையில் ஆளும் வர்க்கங்களின் நலன்களை எதிர்த்துப் போராடும் வர்க்கங்களின் எண்ணங்களோடு ஒத்துப்போவதாக கம்யூனிஸ்டுகளின் போர்த்தந்திரங்கள் இருக்க வேண்டும். இதற்கு மாறாக ஆளும் வர்க்கங்களையும், ஆளும் வர்க்க கட்சிகளையும் வால்பிடிப்பதாக கம்யூனிஸ்டுகளின் கொள்கையும் நடைமுறையும் இருக்கக் கூடாது.
“மாநாடு தன்னுடைய தீர்மானத்தின் வழியாக மிதவாத, முடியரசுவாத முதலாளி வர்க்கத்தினரின் தரத்துக்குத் தன்னையறியாமலே தாழ்ந்துவிடுகிறது. கட்சிக் காங்கிரஸ் தன்னுடைய தீர்மானத்தின் வழியாகப் புரட்சிகரமான ஜனநாயகத்தின் தரகர்களாக வேலைசெய்யாமல் போராடும் திறமையுள்ள பகுதிகளை உணர்வுப்பூர்வமாகத் தன்னுடைய தரத்துக்கு உயர்த்துகிறது” என்றார் லெனின். அதாவது மென்ஷ்விக்குகள் அவர்களை மிதவாத முடியரசுவாத முதலாளிகளின் தரத்துக்கு கீழ் இறங்கிவிட்டது என்றும் இதற்கு மாறாக போல்ஷ்விக்குகள் புரட்சிகரமான ஜனநாயகவாதிகளின் முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்காமல் அவர்களையும் தங்களைப் போன்ற புரட்சிகரமான சக்திகளாக வளர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என்றார் லெனின். ஆகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஆளும் வர்க்கங்களை ஆதரிக்கும் முதலாளித்துவ கட்சிகளின் தரத்துக்கு தங்களை கீழ்படுத்திக்கொள்ளக் கூடாது. அதாவது காங்கிரஸ் மற்றும் திமுக போன்ற கட்சிகளின் தரத்துக்கு கீழிறங்கி அவர்களுக்கு வால்பிடிக்கக் கூடாது. இதற்கு மாறாக இந்தியாவில் ஆளும் வர்க்கத்தை (உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளை) எதிர்த்துப் போராடும் குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களை பாட்டாளி வர்க்கப் போராளிகளாக வளர்க்கும் விதமாக செயல்பட வேண்டும் என்பதே லெனினது வழிகாட்டலாகும்.
அத்தகைய முயற்சியில் ஈடுபட்டு குட்டிமுதலாளித்துவ வர்க்கங்களையும் புரட்சிகரமான வர்க்கங்களாக மாற்றுவதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியானது ஒரு பலமிக்க புரட்சிகரமான கட்சியாக வளரும்.
“புரட்சி காலத்தில் மாநாடு தன்னுடைய நாடுதழுவிய* அரசியல் கோஷங்கள் வழியாகத் திரளான நிலப்பிரபுக்களின் தரத்துக்குத் தன்னையறியாமல் தாழ்ந்துவிடுகிறது. கட்சிக் காங்கிரஸ் தன்னுடைய நாடுதழுவிய அரசியல் கோஷங்கள் வழியாகத் திரளான விவசாயிகளைப் புரட்சிகரமான தரத்துக்கு உயர்த்துகிறது. இந்த முடிவுகளைக் கொண்டு நமக்கு முரணுன்மைகளின் மீது விருப்பம் இருப்பதாக யாராவது குற்றஞ்சாட்டுவார்களேயானால் அவருக்கு நாம் சவால் விடுகிறோம்: புரட்சியை வெற்றிகரமான முடிவிற்குக் கொண்டு வருவதற்கு நம்மிடம் போதிய வலிமை இல்லாமற் போனால், ஒஸ்வபஷ்தேனிய அர்த்தத்தில் -- அதாவது ஜார் மன்னனால் கூட்டப்படும் பிரதிநிதித்துவ சபை (கேலியாகத்தான் இதை அரசியல் நிர்ணய சமை என்று அழைக்க முடியும்) எனும் வடிவத்தில் மட்டுமே -- ஒரு ”நிர்ணயமான வெற்றியில்” புரட்சி முடிகிறது என்றால், அது நிலப்பிரபு, பெருமுதலாளி அம்சமே மிகுந்திருக்கும் புரட்சியாகத்தான் இருக்கும் எனும் முன்கூற்றை அவர் பொய் என்று காட்டட்டும். மறுபுறம், நம் வாழ்நாளில் உண்மையிலேயே மகத்தான புரட்சியைக் கண்டு அனுபவிக்க இருப்போமேயானால், இந்தத்தடவை ஒரு “குறைப்பிரசவத்தை” வரலாறு அனுமதிக்கவில்லையானால், புரட்சியை வெற்றிகரமான முடிவுக்கு கொண்டுவரும் வலிமை போதியளவுக்கு நம்மிடம் இருக்குமேயானால், ஒஸ்வபஷ்தேனியே அரத்தத்திலோ புதிய -இஸ்க்ரா அர்த்தத்திலோ இல்லாத நிர்ணயமான வெற்றிக்கு கொண்டுவர முடியுமேயானால், அது விவசாயி, பாட்டாளி வர்க்க அம்சம் மிகுந்திருக்கும் புரட்சியாய் இருக்கும்.
இவ்வாறு மிகுந்திருப்பது சாத்தியமே என்று நாம் ஒப்புக்கொள்வதை வைத்து வரப்போகும் புரட்சி முதலாளித்துவத் தன்மை கொண்டதாயிருக்கும் எனும் கருத்தை நாம் கைவிட்டுவிட்டதாகச் சிலர் ஒருக்கால் வியாக்கியானம் செய்யக் கூடும். இஸ்க்ராவில் இந்தச் சொல் கேடாகப் பயன்படுத்தப் படுவதைப் பார்க்கும் போது இவ்வாறு நடக்கவுங் கூடும். எனவே இப்பிரச்சனையைக் கவனிப்பது தேவையற்றதல்ல”என்ற கருத்தை ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் என்ற நூலில் லெனின் முன்வைக்கிறார். அன்றைய ரஷ்யாவில் திருத்தல்வாதிகள் முன்வைக்கும் கோஷமானது நிலப்பிரபுகளின் தரத்துக்கு தாழ்ந்துவிட்டதாக லெனின் கூறுகிறார். இதற்கு மாறாக போல்ஷ்விக்குகளின் கோஷமானது விவசாயிகளை புரட்சிகரமான தரத்துக்கு உயர்த்துவதாக இருந்தது என்கிறார் லெனின்.
ஆகவே இன்றைய கம்யூனிஸ்டுகள் கோஷங்களை உருவாக்கும் போது உழைக்கும் மக்களிடம் புரட்சிகரமான உணர்வுகளை தூண்டும் விதமாகவும், புரட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ள வேண்டும். புரட்சியை ரஷ்யாவில் வெற்றிகரமாக கம்யூனிஸ்டுகள் நடத்திட முடியவில்லை என்றால் அதற்குத் தேவையான பலம் இல்லை என்றால் ஜார் மன்னனால் உருவாக்கப்பட்ட பாராளுமன்றத்தில் மட்டும் ஈடுபட வேண்டிய அவசியம் இருக்குமானால்அதற்கான நடவடிக்கையில் மட்டும் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் ஈடுபட்டால் அது முடியரசுவாத முதலாளிகளின் கொள்கைக்கு ஏற்ப நிலப்பிரபுக்கள் மற்றும் பெருமுதலாளிகளின் வெற்றியினை அடிப்படையாகவே கொண்டிருக்கும் என்றார்.
ஆகவே இந்தியாவிலும் புரட்சியை நடத்திட கம்யூனிஸ்டுகளுக்கு வலிமை இல்லை என்ற காரண்தைக் காட்டி பாராளுமன்றத்தின் மூலமாகவே அரசை கைப்பற்றிவிடலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டால் கம்யூனிஸ்டுகளால் அமைக்கப்படும் அரசானது இங்குள்ள நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளிகளின் நலன் காக்கும் அரசாகவேதான் இருக்க முடியும் என்பதை லெனினது கண்ணோட்டத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு எதிராக லெனின் சொன்னது இந்தியாவுக்கு பொருந்தாது என்று எவரும் தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கட்டும்.
உண்மையில் இந்தியாவில் உருவான இடதுசாரிகளின் மாநில ஆட்சியில் காவல்துறையானது தொழிலாளர்களின் நண்பர்களாக மாறிவிட்டதா? அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்பட்டுவிட்டதா? விவசாயிகளின் போராட்டங்களை நசுக்கியதுதானே இந்த இடதுசாரி அரசு. முதலாளிகளின் மூலதனத்தை மக்களுக்கு உடமையாக மாற்றிவிட்டதா?
ஆகவே இந்திய இடதுசாரிகளின் கோஷமான இந்திய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்பதன் மூலம் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது. இவர்களும் காங்கிரஸ் போன்ற முதலாளித்து கட்சியைப் போலவே ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் வகையிலேயேதான் ஆட்சியை நடத்துவார்கள். உதாரணமாக கேராளாவை ஆண்ட காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் முல்லைப்பெரியார் ஆற்று நீரை தமிழக மக்களுக்கு கொடுக்க மறுக்கும் ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுவதை நாம் காணலாம் மேலும் காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையைத்தான் பின்பற்றுகிறார்கள். அதன் காரணமாகவே மேற்குவங்க இடதுசாரி அரசு விவசாயிகளிடமிருந்து நிலங்களை கைப்பற்றி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுத்தது..
தொடரும்- தேன்மொழி
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++