நமது நடைமுறைக்கான மார்க்சிய கோட்பாடுகளை புரிந்துகொள்வோம். பகுதி-2.இலக்கு 49 இதழிலிருந்து

 வெகுஜனங்களிடையை கட்சிப் பணி என்ற நூலில் பக்கம் 16 லிருந்துபக்கம் 18 வரையிலான பக்கங்களிலிருந்து இந்த கட்டுரைதயாரிக்கப்பட்டுள்ளது..

சமூகத்திலுள்ள மக்களின் எதிரிகளை எதிர்த்து உறுதியாகப் போராடிக்கொண்டிருக்கும் மக்கள் பிரிவினரை ஆளும் வர்க்கங்களாலும், அதன் அரசுகளாலும் அடக்கி ஒடுக்கி நசுக்கிவிட முடியாது. ஆனால் மக்களின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு மக்களுக்கு துரோகம் செய்பவர்களால், அதாவது கருங்காலிகளால் புரட்சிகரமான மக்களை குழப்பி, பிளவுபடுத்தி, சீரழிக்க முடியும் என்பதுதான் வரலாறு. இத்தகைய துரோகிகள் சமூகத்திலுள்ள பிற்போக்கான மூர்க்க குணம் படைத்தவர்களிடமும், பிற்போக்கான உழைக்கும் வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ அரசியல் நிறுவனங்களுடனும், கூடிக்குலவுவார்கள். இந்தியாவில் இராணுவ வீரர்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு ஒதுதுழைப்பு கொடுப்பதை மறுத்து பிரட்டீஷ் அரசாங்கத்துக்கு எதிராகப் போராடினார்கள்.. பிரிட்டீஷ் ஆட்சியால் இந்தப் போராட்டத்தை நசுக்க முடியவில்லை அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் தொழிலாளர்களும், விவசாயிகளும் பிரிட்டீஷை எதிர்த்து உறுதியுடன் போராடினார்கள். அதன் விளைவாக பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். அதற்குப் பிறகு இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின்

போர்க்குணம் மழுங்கடிக்கப்படதற்கு யார் காரணம்? மேலே லெனின் கூறியது போலவே தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தலைமை தாங்கிய துரோகத்தனமான தலைவர்கள்தான் காரணம். இந்தத் தலைவர்கள்தான் பிற்போக்காளர்களுடனும், முதலாளித்துவ ஆளும் வர்க்க கட்சிகளுடனும் கூடிக்குலாவி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடம் குழப்பத்தை உருவாக்கி, சாதி மதம் இனம் போன்ற பேதங்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தி சீரழித்துவிட்டார்கள். இப்போதும் தொழிலாளர் வர்க்க அமைப்பில் செயல்படும் தலைவர்களில் சிலர் பிற்போக்கு முதலாளித்துவ அரசியல் கட்சிகளோடு பாசிச எதிர்ப்பு ஐக்கியமுன்னணி என்ற போர்வையில் கூடிக்குலாவி உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்யத் துடித்துக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.

ஆகவே கம்யூனிஸ்டுகளின் இன்றைய உடனடியான கடமையானது உழைக்கும் மக்களிடம் சோசலிச உணர்வையும், சோசலிச சிந்தனைமுறையையும் ஊட்டி, உழைக்கும் மக்களின் எதிரிகளை சுட்டிக்காட்டி எதிரிகளை உறுதியுடன் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதையும் உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்களை அடையாளம் காண்பதற்கு மக்களுக்கு உதவி செய்து, மக்களின் நண்பர்களோடு உறுதியான ஒற்றுமையை உழைக்கும் மக்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி புரட்சிகரமான பலம்வாய்ந்த அமைப்பை உருவாக்க வேண்டியது கம்யூனிஸ்டுகளின் முதன்மையான கடமையாகும். சுரண்டும் வர்க்கங்கள்தான் உலகில் பல நாடுகளில் நீண்டகாலம் ஆட்சியில் இருக்கிறது. சுரண்டப்படும் மக்களை ஆளுவதற்கான பயிற்சி பெற்று நீண்டகால அனுபவங்களை கொண்ட அறிவுத் திறமை பெற்றிருக்கிறது. இதன் காரணமாக சுரண்டும் வர்க்கத்தின் ஆட்சிக்கு எதிராக செயல்பட முனைபவர்களை ஆரம்பத்திலேயே ஒடுக்கி நசுக்கி டுவதற்கான செயல்தந்திரத்தை நடைமுறைப் படுத்துகிறது. அதன் மூலம் புரட்சிகரமான உழைக்கும் மக்களை அச்சுறுத்தி, உழைக்கும் மக்கள் செய்ய வேண்டிய கடமையிலிருந்து அவர்களை திசைதிருப்புகிறது .மக்களிடையே குறிப்பாக மெய்யான புரட்சிகர வர்க்கங்களுக்கு இடையே புரட்சிகரமான கருத்துக்களை பரப்பி, அவர்களிடையே புரட்சிகரமான உணர்வுகளை ஏற்படுத்தி செயல்படும் அமைப்பின் செல்வாக்கு வளரும் போது, புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்களின் மத்தியில் ஆத்திரமூட்டி அவர்களை தேவையற்ற வன்முறையில் இறங்கச் செய்வதன் மூலம் புரட்சியாளர்களை மக்களிடமிருந்து பிரித்து புரட்சிகர அமைப்பின் செல்வாக்கை இழக்கச் செய்யும் தந்திரத்தை ஆட்சியாளர்கள் எப்போதும் கையாளுவார்கள் என்பதை பல நாடுகளில் நடந்த புரட்சிகளின் அனுபவங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் லெனின்..

இவ்வாறு ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ அரசும் நமக்கு ஆத்திரமூட்டும் போது அதற்கு நாம் பலியாகிவிடக்கூடாது. எங்காவது ஒரு இடத்தில் மக்கள் ஒன்றுகூடி புரட்சிகரமான போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றுவிட்டால், அதைக்கண்டு நாம் உணர்ச்சிவசப்பட்டு மதிமயங்கிவிடக்கூடாது, மேலும் நமது நிதானத்தை இழந்துவிடக் கூடாது என்கிறார் லெனின். மேலும் நமது சிந்தனையை சீர்படுத்துவதற்காக ஐரோப்பா மற்றும் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் அனுபவத்தையும், திட்டவட்டமான சோசலிச கொள்கையின் மீதான நமது நம்பிக்கையும், நடைமுறைக்கு சாதகமான நமது கொள்கையின் மீதான நம்பிக்கையும் சாகசவாதத்தை எதிர்த்து நமது தலைவர்கள் போடிய அனுபவத்தையும் நாம் ஒருபொழுதும் மறந்துவிடக் கூடாது மேலும் அதனை நாம் கைவிட்டுவிடக் கூடாது என்றார் லெனின்..

இதன் மூலம் உழைக்கும் மக்களை ஆள்பவர்களின் அறிவு மற்றும் திறமையை நாம் புரிந்துகொண்டு அவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..

ஆனால் நமது நாட்டிலுள்ள மக்களின் முன்னணிகள் இந்த ஆளும் வர்க்க அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் புரிந்துகொள்ளாமல் அப்பாவித்தனமாக இருப்பதை பார்க்க முடிகிறது இவ்வாறு புரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த அரசானது நமக்கு ஆத்திரமூட்டும் போது நமது நிதானத்தை இழக்காமல் சரியான செயல்தந்திரம் வகுத்து செயல்படுவதன் மூலம் இந்த அரசு அதிகாரிகளின் சதியை முறியடித்து, உழைக்கும் மக்களிடம் இந்த அரசை அம்பலப்படுத்த வேண்டும். இந்தியாவில் நடந்த வர்க்கப் போராட்ட வரலாற்றை நாம் படிக்க வேண்டும். அதில் ஈடுபட்ட நமது தலைவர்களின் தியாகத்தைப் போற்றி அவர்களின் லட்சியத்தை அதாவது இந்தியாவில் உழைக்கும் மக்களின் அரசியல் அதிகார அமைப்பை உருவாக்கும் கொள்கையை நிறைவேற்றுவதற்கு நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்ற உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது தலைவர்கள் செய்த தவறுகளையும் துரோகங்களையும் புரிந்துகொண்டுஅத்தகைய தவறுகளையும் துரோகங்களையும் நாம் இனிமேல் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இந்த தவறுகளைத்தான் தறபோதைய திருத்தல்வாத, கலைப்புவாத, குறுங்குழுவாதிகளும் தொடர்ந்து செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை உழைக்கும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆகவே புரட்சியாளர்கள் இந்த உண்மைகளை எல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட மக்களிடம் செல்ல வேண்டும். ஆகவே எத்தகைய உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்ற தத்துவ அரசியல் புரிதல்களை வளர்த்துக்கொண்டு அத்தகைய தத்துவ அரசியல் புரிதல் கொண்டவர்களாக மக்களை மாற்றக் கூடியவர்களால் மட்டுமே மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்ய முடியும். இந்தப் பணியானது சில குறிப்பிட்ட நாட்களுக்குள்ளேயே செய்து முடிக்கக் கூடிய பணி இல்லை. இது கம்யூனிஸ்டுகளின் தொடர்ச்சியான வாழ்நாள் பணியாகும். ஆகவே கம்யூனிஸ்டுகள் சமூகத்தைப் பற்றியும் அதனை மாற்றுவது பற்றியும் சமூக மாற்றத்தில் உறுதியாக பங்கெடுத்த வர்க்கங்கள் பற்றியும் சமூக மாற்றத்துக்கு எதிராகவும் தடையாக இருக்கின்ற வர்க்கங்கள் பற்றியும் தொடர்ந்து படித்தும் அனுபவத்தின் மூலமும் தெரிந்துகொண்ட விசயங்களை அவ்வப்போது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இந்தப் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்.. அதே வேளையில் பிற பணிகளையும் செய்ய வேண்டும். பிற பணிகளிலேயே நமது கவனத்தை குவித்துவிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பணியை தொடர்ந்து செய்வதில் கவனத்தை குறைத்துவிடவோ அல்லது புறக்கணிக்கக்வோ கூடாது என்பதுதான் ஒரு புரட்சிகர கட்சி செய்ய வேண்டிய பணியாக கடமையாகும் என்று லெனின் குறிப்பிடுகிறார்.

இதன் மூலமே கம்யூனிச உணர்வுள்ளவர்கள் அனைவரையும் ஓர் அமைப்புக்குள் திரட்டி ஒரு பலம்வாய்ந்த கம்யூனிஸ்ட் கட்சியை கட்ட முடியும் என்று நமக்கு லெனின் போதித்தார்.. கம்யூனிஸ்டுகளாகிய நாம் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்ன?

1. இதுவரை நாம் செய்துவந்த, தற்போதும் செய்துகொண்டிருக்கும் தவறுகளை வெளிப்படையாக அறிவித்து களைந்துகொள்ள முன்வர வேண்டும். நாம் இதுவரையிலும் சரி, தற்போதும் சரி தவறே செய்யவில்லை என்று கருதுவது நாம் மக்களை மட்டுமல்ல நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும். இவ்வாறு மக்களையும் நமது அணிகளையும் நம்மையும் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டு இருந்தால் நாம் நிச்சயமாக மக்களின் நலன்களுக்கு பயன்பட மாட்டோம். மாறாக மக்களின் எதிரிகளுக்கே பயன்படுவோம், பயன்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது நமது மக்களுக்கு மட்டுமல்ல நமது குடும்பத்தவர்களுக்கும் நமது வருங்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். மேலும் நமது தவறுகளை நாம் புரிந்துகொண்டு நமது தவறுகளை களைந்தால் நாம் நமது லட்சியத்தில் பகுதி வெற்றியடைந்தவர்கள் ஆவோம் என்று மாவோ நமக்குப் போதித்துள்ளார். ஆகவே நமது குறைகளை வெளிப்படையாக அறிவித்து களைவது மிகமிக முக்கியமான கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அதே போலவே நம்மைப் பார்த்து பிறர் நமது குறைகளைச் சுட்டிக்காட்டினால் ஆத்திரப்படாமல் அதனை மார்க்சிய சிந்தனை முறையினை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்க வேண்டும், உண்மையில் நாம் தவறு செய்கிறோம் என்று உணர்ந்தால் அதனை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு நமது தவறுகளை களைய வேண்டும்..நமது தவறுகளை களைகிறோம் என்று வார்த்தையில் சொல்லிவிட்டால் மட்டும் போதாது. அந்த தவறை களைவதற்காக நாம் நடைமுறையில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நாம் முடிவு செய்து, அந்த முடிவை செயல்படுத்த வேண்டும். ஆனால் உதாரணமாக ஒரு புரட்சிகர அமைப்பானது தொடர்ந்து குழுக்களாக பிளவுபட்டுக்கொண்டு இருப்பதற்கு முடிவு கண்டு, குழுக்களை இணைப்பதற்கு குழுக்களுக்கு என்று ஒரு பொதுவான பத்திரிக்கை நடத்த வேண்டும் என்றும், அந்தப் பத்திரிக்கையில் ஒவ்வொரு குழுவும் தனது கருத்துக்களை முன்வைத்து விவாதிப்பது என்றும் அதன் மூலம் குழுக்களுக்கு இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக்கொண்டு நாம் ஒன்றுபடலாம் என்ற முடிவை எடுத்தது. அதன் மூலம்அந்தக் குழுவானது சிதறிக்கிடக்கும் குழுக்களினால் பயனில்லை என்பதை உணர்ந்து இந்த தவறை களைய வேண்டும் என்ற முடிவை எடுத்ததை நாம் வரவேற்க வேண்டும். அதற்கான நடைமுறைப் பணியை தீர்மானித்ததும் சரியானதே ஆகும். எனினும் இந்தப் பணியை அந்தக் குழு இதுவரை செயல்படுத்த முயற்சி செய்யவில்லை என்பது தவறானதாகும். ஆகவே நமது தவறை களைந்துகொள்கிறோம் என்று சொல்லிவிட்டால் மட்டும் போதாது அதனை நடைமுறையில் களைவதற்கான முயற்சிகளை நாம் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் நாம் உண்மையான கம்யூனிஸ்டாக இருக்க முடியும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும் போது இத்தகைய ஒற்றுமையை உருவாக்குவதற்கு முயற்சி செய்யும் கம்யூனிச அமைப்புகள் எதுவும் நமது கண்களுக்குத் தென்படவில்லை என்பதுதானே உண்மையாகும்.

இந்திய பொதுவுடமை இயக்கத்திற்குள் ஆரம்பகாலங்களில் திருத்தல்வாதம், மற்றும் சீர்திருத்தவாதம் போன்ற முதலாளித்துவ சித்தாந்தங்கள் ஊடுருவி பொதுவுடமை அமைப்பை சீரழித்தது. அதனை எதிர்த்த போராட்டத்தின் காரணமாக கம்யூனிஸ்டுக் கட்சி பிளவுபட்டு மார்க்சிய லெனினிய கட்சி உருவானது. எம்.எல் கட்சியானது திருத்தல்வாதத்தை எதிர்த்து புரட்சிப் பாதையில் பொதுவுடமை இயக்கம் நடைபோட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உழைக்கும் மக்களிடம் செல்வாக்கு பெற்று, அந்த கட்சியைச் சேர்ந்தவர்களில் பலர் பல தியாகங்கள் புரிந்தனர். எனினும் அந்த அமைப்பிலுள்ளவர்கள் சோசலிச சிந்தனை முறையை வளர்த்துக்கொள்ளத் தவறினார்கள். அதன் காரணமாக அவர்களால் திருத்தல்வாதத்தையும், சீர்திருத்தவாதத்தையும் எதிர்த்து சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி அதனை வீழ்த்த முடியவில்லை. அதனால் பொதுவுடமை இயக்கத்துக்குள் திருத்தல்வாதம், சீர்திருத்தவாதம் போன்ற தவறுகள் தொடர்ந்தன. மேலும் மா.லெ.யின் தலைவர்களால் சோசலிச சிந்தனைமுறையையின் குறைபாட்டின் காரணமாக அவர்களால் 1970ஆம் ஆண்டுகளில் ஒரு விஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை உருவாக்க முடியவில்லை. மேலும் திட்டத்தில் குறைகள் உள்ளது என்பதை கட்சிக்குள் இருந்த சில தோழர்களும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் சுட்டிக்காட்டிய பின்பும் அதனை கட்சி முழுக்க சுற்றுக்குவிட்டு குறைகளை களைந்துகொள்ள மா.லெ. கட்சித் தலைவர்கள் மறுத்துவிட்டனர். தற்போது பொதுவுடமை இயக்கத்துக்குள் புதிய வகையான முதலாளித்துவ சந்தர்ப்பவாத சித்தாந்தங்கள் ஊடுருவியுள்ளன. பின்நவீனத்துவம் அடையாள அரசியல், தலித்தியவாதம், டிராட்ஸ்கியவாதம், தேசிய இனவாதம், குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாதம் போன்ற மார்க்சியத்துக்கு எதிரான புதிய சித்தாங்களும் பொதுவுடமை இயக்கத்துக்குள் ஊடுருவி செல்வாக்கு செலுத்துகின்றதை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு பழைய மற்றும் புதிய மார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்தங்களை கட்சிக்குள் ஊடுருவதற்கு ஏற்றார் போல கட்சியின்கதவுகளை திறந்துவிடும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சியின்

வேலைத்திட்டமும் அதன் நடைமுறையும் அதாவது கட்சியானது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருக்கக் கூடாது என்று லெனின் போதித்தார். இந்த போதனையை இந்திய பொதுவுடமையாளர்கள் பின்பற்றத் தவறியதால்தான் இந்திய பொதுவுடமை இயக்கத்துக்குள் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்துக்கு எதிரான பல்வேறு சித்தாந்தங்களும் ஊடுருவி கம்யூனிஸ்டு அமைப்புகள் தனது நிறத்தை இழந்து பல்வேறு வண்ண நிறங்களாக மாறி முதலாளித்துவத்தையும் அதன் சதிகளையும் எதிர்த்துப் போராடும் பலத்தை இழந்து நிற்கின்றன. ஆகவேதான் இன்றைய கம்யூனிஸ்டுகளின் உடனடியான கடமையாக பொதுவுடமை இயக்கத்துக்குள் ஊடுருவியுள்ள மார்க்சியத்து எதிரான சித்தாந்தங்களை அணிகளுக்கும் மக்களுக்கும் அம்பலப்படுத்தி அந்த தவறான சித்தாந்தங்களை வீழ்த்திட வேண்டும். இத்தகைய தவறான சித்தாந்தங்களை கட்சிக்குள் வைத்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியால் மக்களை திரட்டிப் போராட முடியாது. கம்யூனிஸ்டுகளால் குறிப்பாக சிறிய குழுக்களால் இத்தகைய சித்தாந்தப் போராட்டத்தையும் உறுதியான மக்கள் திரள் போராட்டங்களையும் நடத்திட முடியாமல் பலவீனமாக இருப்பதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்று அவர்கள் மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பதுதான். ஆகவே கம்யூனிஸ்டுகள் மக்கள் திரள் வர்க்க அமைப்புகளில் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் என்றார் லெனின்.

லெனினது இந்த போதனையை கம்யூனிஸ்டுகள் பின்பற்றத் தவறினார்கள். மக்களிடம் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபடும் போது மக்களின் நிலைக்கு தன்னை தாழ்த்திக்கொள்ளாமல் கம்யூனிஸ்டுகளின் நிலைக்கு அதாவது சோசலிச சிந்தனை முறையை வளர்க்கும் விதமாக செயல்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிஸ்டுகள் அவர்களது அமைப்பிற்குள் ஊடுருவியுள்ள மார்க்சிய விரோத சித்தாந்தத்தை விரட்டியடிக்க முடியும். இந்திய பொதுவுடமை இயக்கத்தை மார்க்சிய சோசலிச சிந்தனை முறையின் அடிப்படையில் வளர்ப்பன் மூலமும், அதன் அடிப்படையில் இயக்கத்தை கொண்டுசெல்வதன் மூலமே கம்யூனிஸ்டுகள் மக்களிடத்தில் தனது தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் லெனின். ஆகவே லெனினை பின்பற்றி இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள் கட்சியின் பலத்தை வளர்ப்பதற்கு 1. கட்சிக்குள் புகுந்துள்ளமார்க்சியத்துக்கு எதிரான சித்தாந்தங்களை அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்

2. உழைக்கும் மக்களிடம் மார்க்சிய சோசலிச உணர்வையும் சிந்தனை முறையையும் வளர்க்க வேண்டும்.

3. சோசலிச சிந்தனை முறையின் அடிப்படையில் இந்திய சமூகத்தை பகுத்தறிந்து ஒரு விஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை வகுத்து அதனை சோதித்து அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

4. இந்த அடிப்படையில் பொதுவுடமை இயக்கத்தை கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு மக்களிடம் ஐக்கியப்பட வேண்டும். இதனை சொல்வது எளிது ஆனால் நடைமுறையில் செயல்படுத்துவது மிகவும் கடினமாகும். இந்த கடுமையான பணிகளை கம்யூனிஸ்டுகள் செய்யாமல் அவர்களது லட்சியத்தில் வெற்றி அடையமுடியாது. தொழிலாளர் இயக்கம் ஒன்றுதான் சமூகத்தில் புரட்சிகரமான இயக்கமாகும் என்றார் லெனின்.. ஏனெனில் அந்த இயக்கம் ஒன்றுதான் சமூகத்தினால் பாதிக்கப்பட்டு நிலவுகின்ற இழிவான சமூகத்தை மாற்றுவதற்கு விரும்புகின்ற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களை விழித்தெழச்செய்கின்றது என்றார் லெனின். அதன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கான அரசியல்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியானது தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமல்லாமல் சமூகச் சூழலால் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்துப் பிரிவினரின் நலன்களுக்காகவும் பாடுபட வேண்டும், மேலும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களிடம் விழிப்புணர்வும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே லெனினது போதனையாகும்.

தொழிலாளிவர்க்கமானது இழப்பதற்கு ஏதுமில்லாத வர்க்கமாக இருக்கிறது, மேலும் கூட்டாக சிந்திக்கிறது, கூட்டாக முடிவெடுக்கிறது, கூட்டாக கட்டுப்பாடோடு செயல்படுகிறது, இதன் காரணமாகவே தொழிலாளி வர்க்கமானது புரட்சிகரமான வர்க்கமாக இருக்கிறது என்று மார்க்சிய

ஆசான்கள் கூறினார்கள். இந்த கருத்தை பலரும் வறட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் புரட்சிகரமானவர்கள் என்று கருதுகிறார்கள். அது தவறானதாகும். ஏனெனில் தொழிலாளி வர்க்கத்தை எத்தகைய பண்பின் காரணமாக அந்த வர்க்கத்தை புரட்சிகரமான வர்க்கம் என்று மார்க்சிய ஆசான்கள் வரையறுத்தார்களோ, அத்தகைய பண்புள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் புரட்சிகரமானவர்களே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் மார்க்சிய அடிப்படையில் விசயங்களை புரிந்துகொள்ளும் முறையாகும். உதாரணமாக எங்கெல்ஸ், சூயென்லாய் போன்ற கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்கள் அல்ல, மாறாக செல்வந்தர்கள் என்பது நமக்குத் தெரியும். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் மார்க்சியம் வரையறுத்த புரட்சிகர பண்புகளைக் கொண்டவர்களாக அவர்கள் இருந்ததால் அவர்களை நாம் புரட்சியாளர்கள் என்றே மதிப்பிட வேண்டும். இதற்கு மாறாக ஒரு தொழிலாளியிடம் உதாரணமாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவராக இருந்த குருஷேவ் தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரிடம் தொழிலாளி வர்க்கப் பண்புகளுக்கு எதிரான முதலாளித்து பண்புகளும் நடைமுறையுமே இருந்தது. ஆகவே குருஷேவ் போன்ற தொழிலாளிகளை நாம் புரட்சியாளராக மதிப்பிடக் கூடாது. ஆகவே மார்க்சியம் வரையறுத்த இத்தகைய புரட்சிகரமான மனிதர்களை நாம் ஓர் அமைப்பில் திரட்ட வேண்டும். அவர்களுக்கு சர்வதே புரட்சியின் வரலாற்றையும் சமூகத்தை சோசலிச சமூகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் போதிக்க வேண்டும். இந்த வகையிலேயேதான் உண்மையான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை நம்மால் கட்ட முடியும். இத்தகைய புரட்சிகரமான அமைப்பில் சேர்ந்து செயல்பட்டால்தான் நாம் நமது புரட்சிகர உணர்வைப் பெறுவதோடு கூடவே புரட்சிகரமான உணர்வை இழந்துவிடாமல் வளர்த்துக்கொள்ள முடியும். இத்தகைய கட்சியில் சேர்ந்து செயல்படுவதன் மூலமே சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் கட்சியின் தலைமையில் ஒருங்கிணைக்க முடியும். இத்தகைய கட்சியினால்தான் புரட்சிகரமான ஜனநாயகத்துக்காவும், சோசலிசத்துக்காகவும் நாம் ஒன்றுபட்டு மக்களை போராட வைக்க முடியும். இத்தகைய புரட்சிகரமான கட்சியால் மட்டுமே, அனைத்து முற்போக்கான உழைக்கும் மக்களையும் புரட்சிக்கு அணிதிரண்டு வாருங்கள் என்று அழைக்க முடியும். ஆகவே இத்தகைய புரட்சிகரமான போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான பலம்வாய்ந்த கம்யூனிஸ்டுக்

கட்சியை கட்ட வேண்டும் என்பதே லெனினது போதனை ஆகும். ஆகவே தோழர்களே லெனினது போதனையைப் பின்பற்றி போல்ஷ்விச பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதே நமது பணியாகும் என்பதை உணர்ந்து அத்தகைய கட்சியை கட்டுவதற்கு முன்வர வேண்டும் என்று தோழர்களிடம் முன்மொழிகிறோம். ஆனால் இங்குதான் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதே என்று பலரும் கருதலாம். ஆனால் அவைகள் லெனினால் வரையறுக்கப்பட்ட போல்ஷ்விக் பாணியிலான கட்சியாக இருக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும். இந்த அமைப்புகளுக்குள் மேசமான ஊழல் பேர்வழிகள் உள்ளனர், அகம்பாவம் கொண்டவர்கள் உள்ளனர், சாதிய உணர்வுள்ளவர்கள் உள்ளனர், இந்த கட்சிகளிடம் விஞ்ஞானப்பூர்வமான திட்டம் இல்லை, பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி இல்லை, ஏன்நாட்டிலுள்ள கம்யூனிச உணர்வாளர்களை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சி கூட இல்லை, பிற்போக்காளர்களுடனும் பிற்போக்கு அமைப்புகளுடனும் கூடிக்குலாவுகிறார்கள், கட்சி அணிகளுக்கும் மக்களுக்கும் சோசலிச உணர்வையும் சோசலிச சிந்தனை முறையையும் வளர்ப்பதற்கான திட்டமும் இல்லை, நடைமுறையும் இல்லை, இது போன்று பல குறைகளைக் கொண்டவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். ரஷ்ய போல்ஷ்விக் கட்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதனை புரிந்துகொள்ள முடியும். இவர்களில் பலர் சிறு குழுவாகவே இருக்கிறார்கள்.

இவர்களையும் இவர்களது அமைப்பையும் போல்ஷவிக் என்றும் போல்ஷ்விக் பாணியிலான அமைப்பு என்று கூற முடியுமா? முடியாதுஎன்பதுதான் எதார்த்த உண்மையாகும். ஆகவே போல்ஷ்விக் பாணியிலான புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு இவர்களில் யார் முன்வருகிறார்களோ அவர்களை இணைத்துக்கொண்டு நாட்டிலுள்ள ஏராளமான மக்களில் பொதுவுடமையை விரும்புபவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களிடம் புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தை விளக்கிக் கூறி புரட்சிகரமான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கு உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் முன்வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.- தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்