வர்க்க அமைப்பு

தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் தற்போதுள்ள முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை உள்ளவாறே எடுத்துத் தமது நலன்களுக்காக உபயோகிப்பதும் சாத்தியமில்லை. அரச இயந்திரம் முதலாளித்துத்தின் நலன்களைப் பாதுகாக்கக் கட்டப்பட்டது. அதைத் தொழிலாள வர்க்க நலன்களைப் பாதுகாக்கப் பயன்படுத்த இயலாது. அதனால் தான் மார்க்ஸ், லெனின், மாசேதுங் ஆகியோர் முதலாளித்துவ அரசாங்க இயந்திரம் நிச்சயமாத நொருக்கப்படல் வேண்டும் என வலியுறுத்திக் கூறினர். அதனைச் சீர்திருத்தம் செய்யவோ அல்லது அதன் வரையறைக்குள் அமைப்பில் சீர்திருத்தம் செய்யவோ முடியாது. முதலாளித்துவ அரசு இயந்திரம் இருக்கவேண்டும் அல்லது பாட்டாளிவர்க்க அரசு இயந்திரம் இருக்க வேண்டும். இவற்றிற்கு இடைப்பட்டதாக ஒன்றும் இருக்க முடியாது. அதனால்தான் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் நொருக்கி அதனிடத்தில் பாட்டாளிகளின் அரசு இயந்திரத்தை தொழிலாளிவர்க்கமும் அதன் நேச அணிகளும் ஏற்படுத்தவேண்டியது பொறுப்பென மார்க்சிய - லெனினிய - மாவோ சிந்தனை போதிக்கின்றது. பாட்டாளிகளின் அரசாங்க இயந்திரத்தை மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என விவரித்தார்.

இந்தக் கடமையைச் சரிவரச் செய்த புரட்சிகள் வெற்றி பெற்றன. அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதற்கு உதாரணங்களாகும். இந்த இரண்டிலும் பழைய அரசியல் அதிகாரத்தின் அழிவில் புதியது பெறப்பட்டது. பழைய அரசு இயந்திரத்தை அல்லது அதன் ஒரு பகுதியையாவது உபயோகிக்கும் முயற்சி நடைபெறவில்லை. ஜேர்மன் ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடி நகரத்தைக் காப்பாற்றுமாறு லெனின் கிராட் தொழிற்சாலைகளிலிருந்த தொழிலாளர்களுக்கு லெனின் அறைகூவல் விடுத்து துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கியதன் மூலமே சோவியத் செஞ்சேனை உருவாகியது. அவர்கள் பழைய நீதித்துறையை தொடர்ந்தும் வைத்திருக்கவோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தைப் பற்றியோ அதிகம் புலம்பிக்கொண்டிருக்கவில்லை.

சீனாவைப் பொறுத்தமட்டில் விடயம் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகவுள்ளது. சீனாவை முழுமையாக விடுதலை செய்யுமுன்னர் சீனக் கம்யூனிஸ்டுகள் சீனப் புரட்சியின் தொட்டில் எனஇன்று அழைக்கப்படும் யெனானில் 13 வருடங்கள் தோழர் மாவோ தலைமையில் தளமாக செயல்பட்டது. புதிதாக விடுதலை செய்யப்பட்ட பிரதேசங்களின் ஆளுமை மேற்கொள்ளும் பொருட்டு மக்கள் விடுதலைச் சேனையின் பின்னால் செல்வதற்காக ஒரு புதிய பாட்டாளி வர்க்க பரிபாலன அமைப்பை இங்கே பயிற்றுவித்துக் கட்டி அமைத்தனர். இது ஒரு முழுமையான புதிய பரிபாலன அமைப்பு. அது பழைய அமைப்புடன் எந்தவித தொடர்பையோ, உறவையோ வைத்துக்கொளாதது மட்டுமல்ல, பழைய ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரத்தை அடித்து நொருக்குவது என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டது..

புரட்சியின் வெற்றிக்கு முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசாங்க இயந்திரம் அடித்து நொருக்கப்படுவது எவ்வளவு அவசியமோ, அதே போல புதிய பாட்டாளி வர்க்க அரசதிகாரம் நிலைத்து நிற்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாகும். லெனின் காலத்தில் அராஜக வாதிகள் எனப்பட்ட ஒரு பகுதியினர் முதலாளித்துவ ஒடுக்குமுறை அரசு அதிகாரத்தை புரட்சிமூலம் நிர்மூலமாக்கியபின் ஒரு பாட்டாளி வர்க்க அரசதிகாரம் வேண்டியதில்லை எனக் கூறினர். இந்தக் கோட்பாட்டின் பிரயோசனமற்ற தன்மையை லெனின் தனது பிரசித்தி பெற்ற “அரசும் புரட்சியும்” என்ற நூலின் ஒரு பகுதியில் விமர்சித்திருக்கின்றார். சந்தேகத்திற்கு உரிய வகையில் இந்தக் கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் கிட்டத்தட்ட ஒருவருமே இல்லையெனக் கூறலாம். ஆனால், நாம் பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரம் பாட்டாளி வர்க்க சர்வாதிகார உருவத்தில் முதலாளித்துவ சர்வாதிகாரத்தின் இடத்திற்கு வர வேண்டும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.. லெனின் குறிப்பிட்டதுபோல, வெற்றியடைந்த சகல புரட்சிகளும் சர்வாதிகாரத்தால் பின் தொடரப்பட்டன. ஏனெனில் தோற்கடிக்கப்பட்ட வர்க்கம் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதும் இல்லை அல்லது இசைந்து போனதும் இல்லை. அது எப்பொழுதும் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்காக சதி செய்தும், சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கும். இம்மாதிரியான சகல முயற்சிகளும் ஓர் உருக்குப் போன்ற சர்வாதிகாரத்தினால் மட்டுமே அடக்கப்பட முடியும். அதனால்தான் தொழிலாளி வர்க்கமும் அதன் நேச அணிகளும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரத்தை அழித்ததும் அதைத் தொடர்ந்து பாட்டாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதன் மூலம் தோற்கடிக்கப்பட்ட வர்க்கங்களினால் தூக்கியெறியப்படாமல் இருக்கவும், புரட்சியைப் பாதுகாக்கவும் முடியும். இதைச் செய்யத் தவறினால் புரட்சியின் வெற்றி பலவீனமடையும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்