பெரியார் சீர்த்திருத்தவாதி என்கிற அடிப்படையில் கம்யூனிஸ்ட்கள் அவரை ஆதரிக்க வேண்டுமா?
முதலில் ஒருவரை புரட்சியாளர் என்றோ, முதலாளிய சீர்த்திருத்தவாதி என்றோ, முதலாளிய ஆளும் வர்க்க அடிவருடி என்றோ, நிலவுடமை சமூக கருத்துகள் கொண்ட பிற்போக்குவாதி என்றோ அவரது வர்க்க தன்மையை தீர்மானிப்பதற்கு முன்பு அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிலவிய உற்பத்தி முறையையும், நிலவிய அரசமைப்பையும் பற்றி பரிசீலிப்பதுதான் இயக்கவியல் பொருள் முதல்வாத பார்வை.
பெரியார் வாழ்ந்த காலம் என்பது நிலவுடமை சமூக காலம் அல்ல. ஏனென்றால் அதற்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன்பே முகலாயர் ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தில் இந்தியா முதலாளிய உற்பத்தி முறையின் தொடக்கமான பட்டறை தொழிலும், முதலாளித்துவ தொழில் நகரங்கள் உருவாகிக்கொண்டிருந்தன.
இவற்றை இந்தியாவை பற்றி ஆய்வு செய்த பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இன்றைய இந்திய ஆட்சியாளர்களின் ஒரு பிரிவினருக்கு பெரும் நம்பிக்கைக்குரிய பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளர்களே இதனை தங்கள் நூல்களில் கூறுகின்றனர்.
முதலாளித்துவத்தின் துவக்க கூறுகள் உருவான காலக்கட்டம் என்றால் அதற்கு பொருள் நிலவுடமை சமூகத்தின் அழிவின் ஆரம்பம் என்பது பொருள். நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்கிற மார்க்சிய இயக்கவியல் விதியை அறிந்தவர்களுக்கு இது புரியும்.
அப்படியென்றால் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு பிறகு முதலாளித்துவம் உருவாகி விட்டதா என்றால்? அதற்கும் இல்லை என்கிற பதிலையே வரலாறு நமக்கு தருகிறது.
காரணம். நிலவுடமை சமூகத்தின் சிதைவிலிருந்து முதலாளியம் உருவாகி கொண்டிருந்த போது இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள் இந்தியாவின் வளங்களையும், இங்கிருக்கும் மூலப்பொருட்களையும் கண்டு இந்தியாவின் இயல்பான உற்பத்தி முறையின் வளர்ச்சியை தங்கள் ஆயத வலிமையாலும், இந்தியாவின் வட்டித்தொழில்காரர்களுடனும் கூட்டணி வைத்து தடுத்தனர். தங்களது ஐரோப்பிய நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் மூலதனம் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றினர். இதற்கு இந்தியாவில் நிலபிரபுத்துவமும்,முதலாளித்துவமும் கலந்த ஒரு காலனிய பொருளாதார முறையை கட்டியமைத்தனர்.
விவசாயிகளிடம் ,நூற்பாலை தொழிலாளர்களிடமும் ஈவிரக்கமின்றி உபரி மட்டும் இல்லாமல் மொத்த உற்பத்தி பொருட்களும் வட்டியின் பெயராலும், வரியின் பெயராலும் பிடுங்கப்பட்டன. யூக வணிகத்தின் பெயரால் நெசவுத்தொழில் முழுக்க முழுக்க அழிக்கப்பட்டு , நெசவாளர்கள் ஐரோப்பிய தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருள் தயாரிக்கும் கொத்தடிமைகளாக்கப்பட்டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட நிலமானிய முறைகளால் விவசாயிகள் பெரிதும் தங்கள் நிலங்களை பிரிட்டிஷ் கைக்கூலிகளான கந்துவட்டிக்கும்பலிடம் இழந்து பண்ணையடிமைகளாக மலேயா,சிங்கப்பூர்,பர்மா, இந்தோனேசிய ,கொழும்பு போன்ற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். உள்நாட்டிலே பலர் கொத்தடிமைகளாக தேயிலை தோட்டங்களுக்கும், ரப்பர்,காபி எஸ்டேட்டுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
1850லிருந்து 1890 களின் இறுதிவரை வரை இந்தியாவில் உற்பத்தி மிகையாக இருந்தும் பல பத்துலட்சம் மக்கள் பட்டினியால் செத்துமடிந்தனர். உலகின் பெரும் எண்ணிக்கையில் பசியால் மக்கள் செத்து மடிந்ததில் முதன்மையான இடத்தில் பிரிட்டிஷ் இந்தியாவின் செயற்கை பஞ்சம் இருக்கும்.
பிரிட்டிஷ் தொழில்புரட்சிக்கு தேவையான பெரும் மூலப்பொருட்களும், மூலதனமும் இந்திய மக்களை உறிஞ்சியே கொண்டு செல்லப்பட்டன. இந்தியாவில் உற்பத்தியாகும் எதுவும் இந்தியாவிற்கோ இந்திய மக்களுக்கோ இல்லை என்பதே காலனிய பொருளாதாரத்தின் முதன்மையான நிலை.
கடந்த 2000 ஆண்டுகளில் இந்தியா சந்தித்திராத பெரும் சுரண்டல் பெரும் கொடுங்கோன்மை என்பது ஐரோப்பியர்களின் ஆட்சி காலம்தான்.
நிலவுடமை சமூகத்திலருந்து முதலாளிய சமூகமாக மாறும் போது பழைய நிலவுடமை கருத்துகள் தாங்கள் இழக்கும் உரிமைக்காக போராடும் அப்போது அந்த போராட்டத்தை தடுக்க முதலாளித்துவத்திலிருந்து நிலவுடமை கருத்துகளை எதிர்த்த கருத்துகள் உருவாகும். இத்தகைய கருத்தை பிரச்சாரம் செய்பவர்களை சீர்திருத்தவாதிகள் என மார்க்சியத்தின் பார்வையில் அழைக்கப்படுவார்கள்.
இங்கு பிரதான முரண்பாடு நிலவுடமைக்கும் முதலாளியத்திற்குமானதாக இருக்கும். அப்போது முதலாளிய கருத்துகளை கூறுபவர்களை முதலாளிய சீர்திருத்தவாதிகள் என்கிற வர்க்க கண்ணோடத்தில் அடையாளப்படுத்தலாம்.
இந்தியாவில் நிலவுடமை அழிந்து முதலாளியம் உருவாகவில்லை. இந்திய சமூகத்தின் உற்பத்தி முறை என்பது நிலவுடமையிலிருந்து முதலாளியமாக மாறுகின்ற போது அதன் கருவிலே அது ஐரோப்பியர்களால் சிதைக்கப்பட்டு காலனிய பொருளாதாரமாக மடைமாற்றப்பட்டது. இந்த பொருளாதார முறையால் இந்தியா அதன் உள்ளுக்குள் பெரும் சிதைவை சந்தித்தது, பிரிட்டன் ஏகாதிபத்தியமாக உருமாறியது.
இத்தகைய உற்பத்தி முறை நிலவிய காலக்கட்டத்தில் காலனிய பொருளாதாரமும், ஏகாதிபத்தியமும், அதற்கு ஆதரவான உள்ளூர் அரசுமே மக்களுக்கு பிரதான எதிரிகள். இந்திய மக்கள் அனைவரையும் இனைத்து மேற்கண்ட காலனிய உற்பத்தி முறையையும், அதனை பாதுகாத்த அரசையும், உற்பத்தி முறையால் ஆதாயமடையும் பிரிட்டன் ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்துவதே பிரதானமானதாக இருந்தது. இச்சூழ்நிலையில் அத்தகைய பிரிட்டனை ஆதரித்து நின்ற யாவரும், அவர்கள் எத்தகைய முற்போக்கு கருத்துகள் பேசினாலும் அவர்கள் பெரும்பான்மை மக்கள் நலனுக்கு எதிரானவர்களும், சுரண்டுபவர்களை பாதுகாக்கும் ஆளும் வர்க்கத்திற்கு சொம்படிக்கும் கையாட்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.
இந்திய மக்களை கொடுமையாக சுரண்டி அவர்களது வாழ்வாதாரத்தை அழித்த பிரிட்டிஷ் அரசின் நிர்வாகத்தில் இடம்பிடிக்கும் போராட்டத்தை, அதாவது மக்களை ஒடுக்குவதில் பங்கு பெறும் போராட்டத்தை இன்று வரை பெரும் சாதனையாக கூறிக்கொண்டிருக்கும் அவலம் நம் ஊரில் தவிர வேறு எங்கும் நடக்காது. இதற்கு கம்யூனிஸ்ட்களும் மதிப்புரை வழங்கி வருவதுதான் பெரும் அவலம். உழைக்கும் மக்கள் அரசியல் எழுச்சி பெரும்போது ஒருபோதும் இவர்களை மன்னிக்கமாட்டார்கள்.
நிலவுடமை கால சாதியை அழியவிடாமல் தங்கள் சுரண்டலுக்காக காத்து நின்றவர்களே பிரிட்டிஷ் காலனியவாதிகள். அவர்களை சாதி ஒழிக்க வந்தவர்களை போல் இந்திய வரலாறும், இந்திய பொருளாதார முறையும் புரியாமல் அதற்கான தேடலும் இல்லாமல் கூறியதும், மக்களை தங்களது முதன்மை எதிரியான பிரிட்டிஷ் அரசை எதிர்க்க விடாமல் திசை திருப்பியதுமில்லாமல், அப்படி போராடியவர்களை காலிகள் என்று தூற்றியும், அவர்களுக்கு எதிராக வாய் சவடால் அடித்ததும்தான் பெரியார் போன்றவர்கள் செய்தது.
இவர்களை எந்த விதத்திலும் சீர்திருத்தவாதிகள் என அழைக்கமுடியாது. அப்படி அழைப்பது மார்க்சியத்தின் படி சரியானதும் இல்லை.
பதிவு தோழர் சே ரா
முகநூலில் காரள்மார்க்ஸ்