அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரீஸ் கம்யூனதுஅனுபவம். இலக்கு 46 கட்டுரையே

 அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரீஸ் கம்யூனதுஅனுபவம். மார்க்சின் பகுத்தாய்வு பாகம் 5,அத்தியாயம் 4,

3. பெபலுக்கு எழுதிய கடிதம்

அரசு பற்றி மார்க்ஸ்,எங்கெல்ஸ் நூல்களிலே மிகச் சிறப்பானதென இல்லை யேல் மிகச் சிறப்பானவற்றுள் ஒன்றெனக் கொள்ளத்தக்க கருத்துரை 1875 மார்ச் 18-28 தேதியிட்டு பெபலுக்கு எங்கெல்ஸ் எழுதியகடிதத்தின் பின்வரும் வாசகத்தில் காணப்படுகிறது. நமக்குத் தெரிந்தவரை இந்தக் கடிதம் பெபலால் 1911 ல் வெளிவந்த தமது நினைவுக் குறிப்புகளின் இரண்டாம் தொகுதியில்தான் வெளியிடப்பட்டது,அதாவது இக்கடிதம் எழுதி அனுப்பப் பட்டதற்கு முப்பத்தியாறு ஆண்டுகளுக்குப் பிற்பாடுதான்வெளியிடப்பட்டது என்பதை இங்கு நாம் இடைக்குறிப்பாய் சொல்ல வேண்டும்.

மார்க்ஸ் முன்பு பிராக்கேயிற்கு எழுதிய புகழ்பெற்ற கடிதத்தில் விமர்சனம் செய்யும் அதே கோத்தா வேலைத்திட்ட நகலை விமர்சித்து எங்கெல்ஸ் பெபலுக்கு எழுதினார். குறிப்பாய் அரசு பற்றிய பிரச்சனை குறித்து எங்கெல்ஸ் எழுதினார். (குறிப்பு:- கோத்தா வேலைத்திட்டம் ஜெர்மனியின் சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் கோத்தா காங்கிரஸ் 1875 இல் ஏற்ற வேலைத்திட்டம். கோத்தா காங்கிரஸ் ஐசனாஹர்கள்,லஸ்ஸாலியர்கள் ஆகிய இரு ஜெர்மன் சோசலிஸ்ட் கட்சிகளையும் ஒன்றிணைத்தது.ஐசனாஹர்கள் ஔகுஸ்ட், பெபல், வில்ஹெல்ம் லீப்னெக்ட் தலைமையில் இருந்தனர்; இவர்கள் சித்தாந்த வழியில் மார்க்ஸ், எங்கெல்சின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். கோத்தா வேலைத்திட்டம் கதம்பத் தேர்வுவாதத்தால் களங்கப் பட்டிருந்தது. ஐசனாஹர்கள் பிரதானப் பிரச்சனைகளில் லஸ்ஸாலியர்களுக்கு விட்டுக் கொடுத்து லஸ்ஸாலிய  நிர்ணயிப்புகளை ஏற்றுக்கொண்டுவிட்டதால் இந்த வேலைத்திட்டம் சந்தர்ப்பவாதத் தன்மை கொண்டிருந்தது. 1869 ஆம் ஆண்டின் ஐசனாஹரின் வேலைத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் கோத்தா வேலைத்திட்டம் வெகுவாய் பின்னோக்கிச் சென்றுவிட்டதென்று மார்க்சும் எங்கெல்சும்கருதினர். மார்க்ஸ் அவருடைய கோத்தா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்திலும், எங்கெல்ஸ் 1875 மார்ச் 18 - 28 பெபலுக்கு எழுதிய கடிதத்திலும் இந்த வேலைத் திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துதாக்கினர்).

“..... சுதந்திர மக்கள் அரசு என்பது சுதந்திர அரசாய் மாற்றப்பட்டிருக்கிறது.அதன் இலக்கண வழிப் பொருளில், சுதந்திர அரசு என்பது தமது குடிமக்கள் சம்பந்தமாய் சுதந்திரமாய் உள்ள அரசாகும்., ஏற்கனவே எதேச்சிகார அரசாங்கத்தைக் கொண்ட அரசாகும். அரசு பற்றிய வெறும் பேச்சையே -குறிப்பாய், அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய் இருக்காத கம்யூனுக்குப் பிற்பாடு - விட்டுவிடவேண்டும். சோசலிச சமுதாய அமைப்புதோற்றுவிக்கப்பட்ட பிறகு அரசு தானாகவே தேய்ந்து மறைந்துவிடுமென்றுபுருதோனுக்கு எதிரான புத்தகமும் பிற்பாடு கம்யூனிஸ்டு அறிக்கையும்தெட்டத் தெளிவாய் கூறிய போதும் அராஜகவாதிகள் மக்கள் அரசுஎன்பதனைக் குறிப்பிட்டு சலிப்பும் அருவருப்பும் ஊட்டத்தக்க அளவுக்கு ஓயாது அதனை நம் முகத்திலே எறிந்து வருகிறார்கள். அரசு என்பது இடைக்காலத்துக்கு மட்டுமே உரிய அமைப்பாகையால், போராட்டத்தில் புரட்சியில் வன்முறையின் மூலம் எதிராளிகளை அடக்கி வைப்பதற்குரிய அமைப்பாகையால், ‘சுதந்திர மக்கள் அரசுஎன்பதாய்ப் பேசுவது கிஞ்சிற்றும் பொருளுடையதாய் ஆகாது. பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவையாயிருக்கும் வரையில், தனது எதிராளிகளை அடக்கிவைக்கும் பொருட்டே அல்லாமல் சுதந்திரத்தின் நலனுக்காக அதற்கு அரசு தேவைப்படவில்லை. சுதந்திரம் குறித்துப் பேசுவது சாத்தியமானதுமே அரசு அரசாய் இல்லாதொழிகிறது. ஆகவே எல்லா இடங்களிலும் அரசு ன்பதற்குப் பதிலாய்க் கம்யூன்எனும் பிரெஞ்சு சொல்லுக்குப் பிரதியாய் அமையக்கூடிய மக்கட்சமுதாயம்என்கிற நல்லதொரு பழையஜெர்மானியச் சொல்லை பயன்படுத்தலாமென நாங்கள் ஆலோசனை கூறவிரும்புகிறோம்”. (ஜெர்மானிய மூலத்தில் பக்கங்கள் 321-322) இந்தக் கடிதம் இதற்குச் சில வாரங்களுக்குப் பின்புதான் மார்க்ஸ் எழுதியஒரு கடிதத்தில் (மார்க்சின் கடிதம் 1875 மே 5 ஆம் தேதியிடப்பட்டது) விமர்சிக்கப்பட்ட அதே கட்சி வேலைத்திட்டத்தைத்தான் குறிப்பிடப்படுகிறது. என்பதையும்,அவ்வமையம் எங்கெல்ஸ் லண்டனில் மார்க்சுடன் வசித்துவந்தார் என்பதையும் மனதிற் கொள்ள வேண்டும். ஆகவே கடைசிவக்கியத்தில் எங்கெல்ஸ் நாங்கள்என்று குறிப்பிடுவதன் மூலம் தன்சார்பிலும் மற்றும் மார்க்சின் சார்பிலும் ஜெர்மன் தொழிலாளர் கட்சியின் தலைவருக்கு அரசுஎனும் சொல்லை வேலைத்திட்டத்திலிருந்துஎடுத்துவிட்டு அதற்குப் பதில் மக்கள் சமுதாயம்என்னும் சொல்லைக் கையாளும்படி ஆலோசனை கூறுகிறார் என்பதில் ஐயமில்லை. சந்தர்ப்பவாதி களுடைய வசதிக்காக வேண்டி பொய்யாய்த் திருத்திப் புரட்டப்பட்டு விட்ட இன்றைய மார்க்சியத்தின்தலைவர்களிடம்,வேலைத்திட்டத்தில் இத்தகைய ஒரு திருத்தம் செய்ய வேண்டுமென்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டால் அராஜகவாதம்”  என்பதாய் ஏக கூச்சல் அல்லவா எழுப்புவார்கள்!

அவர்கள் கூச்சல் எழுப்பட்டும்.அது அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கத்தாரிட மிருந்து புகழ்மாலைகள் பெற்றுத்தரும்.நாம் நமது வேலையைச் செய்து செல்வோம். நம்முடைய கட்சியின் வேலைத்திட்டத்தில் திருத்தம் செய்கையில், உண்மையிடம் மேலும் நெருங்கிச் செல்லும் பொருட்டு, திரித்துப் புரட்டப்பட்டவற்றைக் களைந்தெறிந்து மார்க்சியத்தை மீட்டமைக் கவும் தொழிலாளி வர்க்கம் அதன் விடுதலைக்காக நடத்தும் போராட்டத்துக்குப் பிழையின்றி மேலும் சரியானபடி வழிகாட்டவும் பொருட்டு, எங்கெல்ஸ் மற்றும் மார்க்சின் ஆலோசனையை தவறாமல் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

எங்கெல்ஸ் மற்றும் மார்க்சின் ஆலோசனைகளை எதிர்ப்பவர்கள் யாரும் போல்ஷ்விக்குகளுக்கு இடையே இருக்க மாட்டார்கள் என்பது உறுதி. ஒரே ஒரு சங்கடம் வேண்டுமானால் எழலாம்- சொல்லைக் குறித்து ஒருவேளை சங்கடம் எழலாம். ஜெர்மன் மொழியில் மக்கட் சமுதாயம்என்று பொருள்படும் இரு சொற்கள் உள்ளன.இவை இரண்டில் தனியொரு மக்கட்சமுதாயத்தை அல்லாமல் மக்கட் சமுதாயங்களது கூட்டமைப்பை,அவற்றின் முழுமையையும் குறிக்கும் சொல்லை எங்கெல்ஸ் உபயோகித்தார்.ருஷ்யனில் இதுபோன்ற ஒரு சொல் இல்லை.கம்யூன்எனும் பிரெஞ்சு சொல்லும் குறைபாடுகள் உடையதே என்றாலும் இதையே நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கலாம்.

கம்யூனானது அரசெனும் சொல்லின் சரியான பொருளில் அரசாய்இருக்கவில்லை” - தத்துவ வழியில் இது எங்கெல்ஸ் அளித்திடும் மிகவும் முக்கியமான நிர்ணயிப்பு. மேலே கூறப்பட்டுள்ளதற்குப் பிற்பாடு இந்த நிர்ணயிப்பு தெட்டத்தெளிவாய் விளங்கும் ஒன்று. கம்யூனானது அரசாய் இருப்பது முடிவுற்றுக் கொண்டிருந்தது. ஏனெனில் அது பெரும்பான்மை மக்களை அல்ல, சிறுபான்மையினரை (சுரண்டலாளர்களை) மட்டுமே அடக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ அரசுப் பொறியமைவை அது நொறுக்கிவிட்டது. தனிவகை வன்முறை சக்திக்குப் பதிலாய் மக்கள் தமே செயலரங்குக்கு வந்துவிட்டனர். இவை யாவும் அரசெனும் சொல்லின் சரியான பொருளிலிருந்து விலகிச் செல்வதைக் குறிப்பவை ஆகும். கம்யூன் உறுதியாய் நிலைபெற்றிருந்தால்,அரசுக்குரிய எல்லாச் சாயல்களுமே தாமாகவே உலர்ந்து உதிர்ந்திருக்கும்அரசின் நிறுவனங்களைக் கம்யூன் ஒழிக்கவேண்டியிருக்காது. - இந்தநிறுவனங்கள் வேலையற்றவனவாகி இயங்காது ஓய்ந்து போயிருக்கும். “;அராஜகவாதிகள் மக்கள் அரசுஎன்பதனை .... நம் முகத்தில் எறிந்து

வருகிறார்கள்.யாவற்றுக்கும் மேலாய், பக்கூனினையும் ஜெர்மன் சமூக -ஜனநாயகவாதிகள் மீது அவர் தொடுத்த தாக்குதல்களையும் மனதில் கொண்டே எங்கெல்ஸ் இதைக் கூறுகிறார். சுதந்திர மக்கள் அரசைப்போலவே மக்கள் அரசும்அதே அளவுக்கு அபத்தமும், சோசலிசத்திலிருந்து தடம் புரள்வதும் ஆகுமாததால் இத்தாக்குதல்கள் நியாயமானவை என்று எங்கெல்ஸ் ஒப்புக்கொள்கிறார். அராஜகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் சமூக -ஜனநாயகவாதிகளுடைய போராட்டத்தை சரியான பாதையில் செலுத்தவும், இந்தப் போராட்டத்தை கோட்பாட்டு அடிப்படையில் பிழையற்றதாக்கவும், “அரசுபற்றிய சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை அதனிடமிருந்து அகற்றவும் எங்கெல்ஸ் முயன்றார்.

துரதிர்ஷ்டவசமாய் எங்கெல்சின் கடிதம் முப்பத்தியாறு ஆண்டுகளுக்கு மூலையிலேயே முடக்கப்பட்டுவிட்டது. இக்கடிதம் வெளியிடப்பட்ட பிற்பாடும் கூட காவுத்ஸ்கி, எந்தத் தவறுகள் குறித்து எங்கெல்ஸ் எச்சரித்தாரோ அதே தவறுகளை தொடர்ந்து செய்து வந்தார்.

பெபல் 1875 செப்டம்பர் 21 ஆம் தேதியிட்ட கடிதத்தில் எங்கெல்சுக்குப் பதில் அளித்தார். இந்தக் கடிதத்தில் வேறு பலவற்றுடன் கூட,அவர் நகல் வேலைத்திட்டம் பற்றி எங்கெல்ஸ் கூறிய அபிப்பிராயத்தைத் தாம் பூரணமாய் ஒத்துக்கொள்வதாயும்விட்டுக்கொடுக்கும் மனோபாவத்திற்காக லீப்னெஹ்ட்டைத் தாம் கண்டித்ததாகவும் எழுதினார். (பெபலின் நினைவுக் குறிப்புகள், ஜெர்மன் பதிப்பு, 2 ஆம் தொகுதி, பக்கம் 334).ஆனால் நமது குறிக்கோள்கள் என்னும் பெபலின் பிரசுரத்தை எடுத்துக்கொள் வோமானால்,அரசு பற்றிய முற்றிலும் தவறான கருத்துக்களை நாம் அதில் காண்கிறோம்.அரசானது ...... வர்க்க ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட நிலைநீக்கப்பட்டு மக்கள் அரசாய் மாற்றப்பட வேண்டும்” ( Unsere Ziele, ஜெர்மன் பதிப்பு, 1886, பக்கம் 14). பெபல் பிரசுரத்தின் ஒன்பதாவது (ஆம், ஒன்பதாவது!) பதிப்பில் இது அச்சிடப்பட்டது.இப்படி விடாப்பிடியாய்த் திரும்பத் திரும்ப கூறப்பட்டு வந்த அரசு பற்றிய சந்தர்ப்பவாதக் கருத்துக்கள் ஜெர்மன் சமூக -ஜனநாயகவாதிகளைப் பீடித்துக் கொண்டுவிட்டதில், முக்கியமாய் எங்கெல்சின் புரட்சிகர விளக்கங்கள் ஜாக்கிரதையாய் (கவனமாய்) மூலையில் முடக்கப்பட்டுவிட்டதாலும் வாழ்க்கை நிலைமைகள் யாவும் அவர்களை நெடுங்காலத்துக்குப் புரட்சியிலிருந்து விலக்கிவைத்ததுஇருந்தாலும் இக்கருத்துக்கள் அவர்களைப் பீடித்துக் கொண்டுவிட்டதில் வியப்பில்லை.

4. எர்ஃபுர்ட் நகல் வேலைத்திட்டத்தின் விமர்சனம்.

அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை ஆராய்கையில், எர்ஃபுர்ட் நகல் வேலைத் திட்டத்தின் (குறிப்பு:- ஜெர்மன் சமூக - ஜனநாயகக் கட்சியின் எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் :- 1891 அக்டோபரில் எர்ஃபுர்ட் நகரில் நடந்த காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது. கோத்தா வேலைத் திட்டத்தை விட இது ஓர் அடி முன்னால் இருந்தது. முதலாளித்துவ உற்பத்தி முறை அழிந்து சோசலிச உற்பத்தி முறை வருவது தவிர்க்க முடியாதது எனும் மார்க்சியத் தத்துவம் இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையாக இருந்தது. தொழிலாளி வர்க்கம் அரசியல் போராட்டத்தை நடத்துவதின் அவசியத்தை அது வலியுறுத்தியது. இந்தப் போராட்டத்தில் கட்சியின் தலைமைப் பாத்திரம் முதலியவற்றை எல்லாம் வரையறுத்தது. எனினும் அவ்வேலைத்திட்டத்தில் சந்தர்ப்பவாதத்திற்கு சில மோசமான சில சலுகைகள் தரப்பட்டிருந்தன. 1891 சமூக - ஜனநாயகவாத நகல் வேலைத்திட்டம் பற்றிய விமர்சனத்திற்கு அளிக்கும் ஒரு பங்கு என்பதில் எங்கெல்ஸ் இந்த நகலை விரிவாக விமர்சித்தார்.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் குறித்து இது தட்டிக்கழித்ததானது, இவ் வேலைத் திட்டத்தின் முதற் பெரும் குறைபாடு என்றும்,சந்தர்ப்பவாதத்துக்கு அளிக்கப்பட்ட பேடித்தனமான சலுகை என்றும் லெனின் கருதினார்).

விமர்சனத்தை எங்கெல்ஸ் 1891 ஜூன் 29 இல் காவுத்ஸ்கிக்கு அனுப்பிவைத்த விமர்சனம் பத்து ஆண்டுகளுக்குப் பிற்பாடுதான் Neue Zeitஇல் வெளியிடப்பட்டது. - கவனியாது விடமுடியாது. ஏனெனில் அரசின் கட்டமைப்பு சம்பந்தமான பிரச்சனைகளில் சமூக ஜனநாயகவாதி களுடைய சந்தர்ப்பவாதக் கண்ணோட்டங் களைப் பற்றிதான் இந்த விமர்சனம் பிரதானமாகப் பரிசீலிக்கிறது.

இதற்கிடையில் பொருளாதாரப் பிரச்சனைகள் குறித்தும் எங்கெல்ஸ் அளிக்கும் அளவுகடந்த மதிப்புடைய ஒரு கருத்துரையை இங்கு நாம் குறிப்பிடுதல் வேண்டும். நவீன முதலாளித்துவத்தில் ஏற்படும் பல்வேறு மாறுதல்களையும் அவர் எவ்வளவு உன்னிப்பாகவும் கருத்தோடும் கவனித்து வந்தார் என்பதையும்,இதன் காரணமாய் இன்றைய ஏகாதிபத்திய சகாப்தத்தில் நமது கடமைகளை ஓரளவுக்கு எப்படி அவரால் முன்னறிந்து கூற முடிந்தது என்பதையும் இது காட்டுகிறது.இதோ அந்தக் கருத்துரை: நகல் வேலைத்திட்டத்தில் முதலாளித்துவத்துக்குரிய தனி இயல்பாய்க்குறிப்பிட்டுத் திட்டமின்மைஎன்னும் சொல் உபயோகிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி எங்கெல்ஸ் எழுதியதாவது:-“.....கூட்டுப் பங்குக் கம்பெனியிலிருந்து நாம் முழுமுழுத் தொழில்களையே தம் பிடிக்குள் கொண்டுவந்து ஏகபோக ஆதிக்கம் பெறும் டிரஸ்டுகளுக்கு வந்து சேருகையில், தனியார் பொருளுற்பத்திக்கு மட்டுமின்றி, திட்டமின்மைக்கும் கூட முடிவு ஏற்பட்டுவிடுகிறது”. ( Neue Zeit , தொகுதி 20, 1, 1901 - 1902, பக்கம் 8) நவீன முதலாளித்துவத்தின்,அதாவது ஏகாதிபத்தியத்தின் தத்துவார்த்த மதிப்பீட்டின் மிகவும் முக்கியமான சாராம்சம்,அதாவது முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்துமாக ஆகிவிடுகிறது என்பது இங்கு நமக்கு எடுத்துரைக்கப்படுகிறது. கடைசியில் குறிக்கப்படுவதை வலியுறுத்திக் கூற வேண்டும். ஏனெனில் ஏகபோக முதலாளித்துவம் அல்லது அரசு ஏகபோக முதலாளித்துவமானது முதலாளித்துவமாய் இருக்கவில்லை, இப்பொழுது அதை அரசு சோசலிசம்என்பதாய் அழைக்கலாம் என்றும், இன்னும் பலவாறாகவும் கருதும் தவறான முதலாளித்துவ சீர்திருத்தவாதக் கூற்று மிக சகஜமாகிவிட்டது. முழுநிறைவாய்த் திட்டமிடுவதற்கு டிரஸ்டுகள் என்றுமே ஏற்பாடு செய்ததில்லை, இப்பொழுதும் செய்யவில்லை,செய்யவும் முடியாது.ஆனால் அவை எவ்வளவுதான் திட்டமிட்டபோதிலும்,எவ்வளவுதான் மூலதன அதிபர்கள் தேசிய அளவிலும்,ஏன்சர்வதேச அளவிலுங் கூட பொருளுற்பத்திப் பரிமாணத்தை முட்கூட்டியே கணக்கிட்டுக் கொண்ட போதிலும், எவ்வளவுதான் அவர்கள் இந்தப்பரிமாணத்தை திட்டமிட்டு ஒழுங்கு செய்து கொண்டபோதிலும், இன்னமும் நாம் இருப்பது முதலாளித்துவமேதான். - புதிய கட்டத்தை வந்தடைந்துவிட்ட முதலாளித்துவம் என்பது மெய்தான், ஆயினும் இன்னமும் அது சந்தேகத்துக்கு இடமின்றி முதலாளித்துவமேதான். இத்தகைய முதலாளித்துவம் சோசலிசத் துக்கு அண்மையதாய் இருப்பதானதுபாட்டாளி வர்க்கத்தின் மெய்யான பிரதிநிதிகளுக்கு சோசலிசப் புரட்சி அண்மையதும் எளியதும் நடைமுறை சாத்தியமானதும் அவசர அவசியமானதும் ஆகிவிட்டதை நிரூபிப்பதற்குரிய வாதமாய் அமைய வேண்டுமே ஒழிய,இந்தப் புரட்சி புறக்கணிக்கப்படுவதற்கும்,முதலாளித்து வத்தை கவர்ச்சியுடையதாய்க் காட்டுவதற்கான முயற்சியாய் - எல்லா சீர்திருத்தவாதிகளும்இந்தப் பணியில்தான் ஈடுபட்டிருக்கிறார்கள் -இடந்தரும் வாதமாய் ஒருபோதும் ஆகிவிட முடியாது.

நிற்க, அரசு பற்றிய பிரச்சனைக்கு திரும்பி வருவோம்.எங்கெல்ஸ் தமது கடிதத்தில் விஷேச முக்கியத்துவமுள்ள மூன்று மிக முக்கிய ஆலோசனைகளை அளிக்கிறார். முதலாவது, குடியரசைப் பற்றியது; இரண்டாவது, தேசியப் பிரச்சனைக்கும் அரசின் கட்டமைக்கும் உள்ள தொடர்பைப் பற்றியது; மூன்றாவது, வட்டாரத் தன்னாட்சி பற்றியது.

குடியரசைப் பொறுத்தவரை,எங்கெல்ஸ் இதை எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் பற்றிய தமது விமர்சனத்தின் மையக் கூறாய்க் கொண்டார். எர்ஃபுர்ட் வேலைத்திட்டம் உலகின் எல்லா சமூக ஜனநாயகவாதிகளுக்கும் எவ்வளவு முக்கியத்துவமுடையதாகியது என்பதையும், இரண்டாவது அகிலம் அனைத்துக்குமே முன்மாதிரியாகியது என்பதையும் நினைவு கூர்வோமாயின், எங்கெல்ஸ் இரண்டாவது அகிலம் அனைத்தின் சந்தர்ப்பவாதத் தைத்தான் இதன் மூலம் விமர்சித்துக் கண்டித்தார் என்று கூறுவது மிகையாகாது.

இந்த நகலின் அரசியல் கோரிக்கைகளில் ஒரு பெரும் குறைபாடு உள்ளதுஎன்று எங்கெல்ஸ் எழுதினார். உண்மையில் எது சொல்லப்பட வேண்டுமோ அது சொல்லாமல் விடப்படுகிறது”(அழுத்தம்எங்கெல்சினுடையது).

ஜெர்மன் அரசியல் சட்டம் பழுத்த பிற்போக்குவாத 1850 ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தின் அச்சுப் பிரதியே அன்றி வேறில்லை,வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் குறிப்பிட்டது போல ரைஹ்ஸ்டாக் வரம்பில்லா முடியாட்சியை மூடி மறைப்பதற்கான அலங்காரத் திரையேஆகும், சின்னஞ்சிறு குட்டி ஜெர்மன் அரசுகளுடைய கூட்டாட்சிக்கும் சட்ட அங்கீகாரம் அளிக்கும் ஓர் அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உழைப்புக் கருவிகள் யாவற்றையும் பொதுச் சொத்தாய் மாற்றவிரும்புவது கண்கூடான அபத்தமேஆகும் என்று பிற்பாடு எங்கெல்ஸ் தெளிவுபடுத்துகிறார்.

ஆயினும் அதைப்பற்றி பேச முற்படுவது அபாயகரமானதுஎன்று எங்கெல்ஸ் மேலும் எழுதினார்; ஏனெனில் ஜெர்மனியில் ஒரு குடியரசுவேண்டுமென்ற கோரிக்கையைப்  பகிரங்கமாய் வேலைத்திட்டத்தில் சேர்த்துக்கொள்வது முடியாத காரியம் என்பது எங்கெல்சுக்குத் தெரியும்.

அதேபோதில், “எல்லோரும்திருப்தியுடன் ஏற்றுக்கொண்டுவிட்ட இந்த வெளிப் படையான காரணத்தை ஏற்றுக்கொள்வ தோடு நின்றுவிட எங்கெல்ஸ் மறுத்தார். மேலும் தொடர்ந்து அவர் எழுதியதாவது:

இருப்பினும்,எப்படியேனும் ஒரு வழியில் இதனைச் செய்தாக வேண்டும். தற்போது இது எவ்வளவு அவசியமானது என்பதைச் சமூக ஜனநாயக பத்திரிக்கையின் ஒரு பெரும் பகுதியில் மேலோங்கி வரும் சந்தர்ப்பவாதம் தெளிவாய் காட்டுகிறது. (சோசலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம்:- அதாவது சோசலிஸ்டுகளுக்கு எதிரான விசேச சட்டம் - ஜெர்மனியில் தொழிலாளி வர்க்க, சோசலிஸ்ட் இயக்கத்தை எதிர்ப்பதற்காக பிஸ்மார்க் அரசாங்கம் 1878 ல் பிறப்பித்த சட்டம். இந்த சட்டத்தின்படி எல்லா சமூக ஜனநாயக கட்சி நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுடைய வெகுஜன நிறுவனங்களுக்கும் தொழிலாளி வர்க்கப் பத்திரிக்கைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டது; சோசலிச நூல்களும் வெளியீடுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 1500க்கும் மேற்பட்ட சமூக - ஜனநாயகவாதிகள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் இந்த அடக்குமுறை நடவடிக்கைகளால் சமூக -ஜனநாயகக் கட்சி தகர்ந்துவிடவில்லை.கட்சி தலைமறைவாகி அதன் வேலைகளை சட்டவிரோத நிலைமைகளில் திரும்பவும் தொடங்கியது.

அதனுடைய மத்திய ஏடு வெளிநாடுகளிலிருந்து வெளியிடப்பட்டது. ஜெர்மனிக்குள் சமூக - ஜனநாயக நிறுவனங்களும் குழுக்களும் சட்ட விரோதமாய்ச் செயல்பட்டு வந்தன; தலைமறைவான மத்தியக் குழு இவற்றுக்குத் தலைமை நாங்கியது. அதேபோது கட்சியானது மக்கள் பெரும் திரளினருடன் தனது தொடர்புகளை வலுப்பெறச் செய்வதற்கானசட்டப்பூர்வமான சாத்தியப்பாடுகளையும் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

கட்சியின் செல்வாக்கு இடையறாது ஓங்கி வந்தது.1890 இல் வளர்ந்து ஓங்கிவிட்ட தொழிலாளி வர்க்க இயக்கத்தின் நிர்பந்தம் காரணமாகசோசலிஸ்ட் - எதிர்ப்புச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியதாயிற்று).

சோசலிஸ்ட் எதிர்ப்புச் சட்டம் திரும்பவும் வந்துவிடுமோ என்று அஞ்சியும்,அந்தச் சட்டம் ஆட்சிபுரிந்த காலத்தில் அவசரப்பட்டுக் கூறப்பட்ட பலவற்றையும் நினைவிற் கொண்டும் இவர்கள் எல்லாக் கட்சிக்கோரிக்கைகளையும் சமாதான வழியிலேயே செயல்படுத்திவிட தற்போது ஜெர்மனியிலுள்ள சட்டமுறை போதுமெனக் கட்சி கருதவேண்டும் என்று விரும்புகிறார்கள்...சோசலிஸ்டு எதிர்ப்புச் சட்டம் மீண்டும் வந்துவிடுமோ என்று அஞ்சி ஜெர்மன் சமூக - ஜனநாயகவாதிகள் இவ்வாறு நடந்துகொண்டனர். – இந்த அடிப்படை உண்மையை எங்கெல்ஸ் முக்கியமாய் வலியுறுத்தினார்.

இதனை சந்தர்ப்பவாதமே என்று வெளிப்படையாகவே விவரித்தார். ஜெர்மனியில் குடியரசும் இல்லை, சுதந்திரமும் இல்லை ஆதலால், “சமாதானவழி பற்றிய கனவுகள் முற்றிலும் அபத்தமாகும் என்று கூறினார்.எங்கெல்ஸ் தமக்குத் தளையிட்டுக் கொள்ளாதவாறு எச்சரிக்கையுடன் இதனைக் குறிப்பிட்டார்.குடியரசு நாடுகளிலோ,மிகுந்தசுதந்திரம் நிலவும் நாடுகளிலோ சோசலிசத்தை நோக்கி சமாதான வழியில் வளர்ச்சி காணலாமென நினைக்க சாத்தியமுண்டு” (நினைக்க மட்டும்தான்!) என்று ஒத்துக்கொண்டார்.ஆனால் ஜெர்மனியைப் பொறுத்தவரையில்,அவர் திரும்பவும் ஒரு முறை கூறினார்.

“......... அரசாங்கம் அனேகமாய் அனைத்து ஆட்சியதிகாரம் படைத்ததாகவும், ரைஹ்டாக்கும் ஏனைய பிரதிநித்துவ உறுப்புகளும் மெய்யான அதிகாரமில்லாதன வாகவும் இருக்கும் ஜெர்மனியில் இவ்விதம் பிரகடனம்செய்வது,அதுவும் இவ்வாறு செய்ய எந்த அவசியமும் இல்லாதபோது இதைச் செய்வது வரம்பில்லா முடியாட்சியை மறைத்திடும் அலங்காரத் திரையை நீக்கித் தானே அதன் அம்மண நிலையை மறைக்கும் திரையாய்ச் செயல்படுவதாய் ஆகிவிடும்”.வெளியே தெரியாதபடி இந்த ஆலோசனையை மூலையிலே ஒதுக்கி வைத்து விட்ட ஜெர்மன் சமூக -ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வமான தலைவர்களில் மிகப் பெரும்பாலோர் வரம்பில்லா முடியாட்சிக்குத் தாம் மூடுதிரையாய் செயல்படுவோரே என்பதைத்தான் காட்டிக்கொண்டுவிட்டார்கள்.

“..... கட்சி திசைதிருப்பிவிடுவதற்கே இத்தகைய கொள்கை காலப்போக்கில் வகைசெய்யும். பொதுப்படையான,கருத்தியலான அரசியல் பிரச்சனைகளை முன்னணிக்கு கொண்டுவந்துவைக்கிறார்கள். இதன் மூலம், ஸ்தூலமானஉடனடிப் பிரச்சனைகளை, முதலாவது பெரும் நிகழ்ச்சிகள், முதலாவது அரசியல் நெருக்கடி ஏற்பட்டதும் தாமாகவே நிகழ்ச்சி நிரலுக்கு வந்துவிடும் இப்பிரச்சனைகளை மூடி மறைத்துவிடுகிறார்கள்.தீர்மானகரமான தருணத்தில் கட்சி திடுதிப்பென நிர்க்கதியாய் நிற்க வேண்டியதாய் ஆகிவிடுகிறது. முக்கியமான பிரச்சனைகள் குறித்து, இப்பிரச்சனைகள் விவாதிக்கப்படாமலே இருந்துவிட்டதால்,கட்சியினுள் தெளிவின்மையும் குழப்பமும் தலைதூக்கி விடுகின்றன என்பதைத் தவிர விளைவு வேறு எப்படி இருக்க முடியும்?.... .

தற்போதைய கண நேர நலன்களுக்காக வேண்டி பெரிய தலையாய கருத்துக்களை இப்படி மறப்பதானது, பிற்பாடு ஏற்படப் போகிறவிளைவுகளைப் பற்றி கவலையின்றி கண நேர வெற்றிக்கான இந்தப் போராட்டமும் முயற்சியும், எதிர்கால இயக்கத்தை தற்காலஇயக்கத்திற்காக இப்படி தியாகம் புரிவதானது, ‘நேர்மையானகாரணங்களுக்காகச் செய்யப்படுவதாய் இருக்கலாம்; இருப்பினும் இது சந்தர்ப்பவாதமே அன்றி வேறல்ல. நேர்மையானசந்தர்ப்பவாதத்தைப் போல ஆபத்தானது எதுவுமில்லை எனலாம்.....அறுதியிட்டு நிச்சயமாய்ச் சொல்லக் கூடியது என்னவெனில், நமது கட்சியும் தொழிலாளி வர்க்கமும் ஜனநாயகக் குடியரசின் வடிவிலேதான் அதிகாரத்துக்கு வரமுடியும் என்பதே. மாபெரும் பிரெஞ்சுப் புரட்சி ஏற்கனவே காட்டியுள்ளது போல, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்குரிய பிரத்தியோக வடிவமும் இதுவேதான்.....

மார்க்சின் நூல்களில் எல்லாம் இழையோடி நிற்கும் அடிப்படை கருத்தினை இங்கு எங்கெல்ஸ் மிகவும் எடுப்பான முறையில் திரும்பவும் கூறுகிறார்.பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்கு மிக அருகாமையில் இட்டுச் செல்வது ஜனநாயகக் குடியரசுதான் என்பதே இந்த அடிப்படை கருத்து.இத்தகைய குடியரசு சிறிதும் மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழித்துவிடுவதில்லை.ஆகவே திரளான மக்களை இருத்தும் ஒடுக்குமுறையையும் வர்க்கப் போராட்டத்தையும் இது ஒழித்துவிடுவ தில்லை.ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் திரள்களின் அடிப்படை நலன்கள் பூர்த்தி செய்யப்படுவதற்குரிய சாத்தியப்பாடு தோன்றியதுமே தவிர்க்க முடியாத வகையில் முற்றிலும் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் மூலம்,இம் மக்கள் திரள்களுக்குப் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்குவதன் மூலம் இந்த சாத்தியப்பாடு சித்தி பெறும்படியாய்,வர்க்கப் போராட்டம் அந்தளவுக்கு விரிந்து வளர்ந்து மலர்ச்சியுறவும் கடுமை பெறவும் ஜனநாயகக் குடியரசு வகை செய்கிறது.

இவையுங்கூட இரண்டாவது அகிலம் அனைத்துக்கும் மார்க்சியத்தின் மறக்கப்பட்டுவிட்டவாசகங்கள் ஆகிவிட்டன.இவை மறக்கப்பட்டுவிட்டனஎன்பது 1917 ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் முதல் ஆறு மாதங்களில் மென்ஷ்விக் கட்சியானது வரலாற்றின் வாயிலாய்த் தெட்டத் தெளிவாய் நிரூபித்துக் காட்டப் பெற்றது.மக்களது தேசிய இயைபு சம்பந்தமாகக் கூட்டாட்சி குடியரசு குறித்து

எங்கெல்ஸ் எழுதியதாவது: தற்போதுள்ள ஜெர்மனியின் இடத்தில் உதித்தெழ வேண்டியது என்ன?” (தற்போதுள்ள ஜெர்மனி பிற்போக்கான முடியாட்சி அரசியல் அமைப்புச் சட்டமுடையது; இதே அளவுக்குப் பிற்போக்கான முறையில் சின்னஞ்சிறு குட்டி அரசுகளாய்ப் பிளவுண்டு இருக்கிறது; “பிரஷ்யனித்தின்தனி இயல்புகளை எல்லாம் அனைத்து ஜெர்மனியிலும் கரைந்துவிடச் செய்வதற்குப் பதிலாய், இந்தப் பிளவு அவற்றை நீடித்து நிலைக்கச் செய்கிறது). என்னுடைய கருத்துப்படி, பிரிக்க முடியாத ஒருமித்த குடியரசை மட்டும்தான் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் பிரமாண்டப் பரப்பில், கூட்டாட்சி குடியரசு மொத்தத்தில் இன்னும் அவசியம் தான். ஆயினும் இந்நாட்டின் கீழ் பகுதியில் ஏற்கனவே அது தடையாக மாறிவருகிறது. இங்கிலாந்தில் அது ஒருபடி முன்னேற்றத்தைக் குறிப்பதாய் இருக்கும். அங்கு இரு தீவுகளில் நான்கு தேசிய இனத்தவர்கள் வசிக்கின்றனர். தனியொரு நாடாளுமன்றம் இருப்பினும் வெவ்வேறான மூன்று சட்ட முறைகள் அடுத்தடுத்து இருந்து வருகின்றன. சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்தில் அது நீண்டகாலமாகவே தடையாய் இருந்து வருகிறது. ஐரோப்பிய அரசுகளின் அமைப்பில் சுவிட்சர்லாந்து முற்றிலும் செயலற்ற ஓர் உறுப்பாய் இருப்பதுடன் திருப்தி அடைந்து விடுவதால்தான் இக்கூட்டாட்சி அமைப்பு சகித்துக் கொள்ளப் படுகிறது. ஜெர்மனிக்கு, சுவிட்சர்லாந்தின் பாணியிலான கூட்டாட்சிமுறை மிகப் பெரிய பின்னடைவாய் இருக்கும். கூட்டரசு முற்றிலும் ஒன்றிணைந்த ஒருமை அரசிலிருந்து இரு வழிகளில் வேறுபடுகிறது. முதலாவதாக, கூட்டரசைச் சேர்ந்த தனி அரசு ஒவ்வொன்றும், மாநிலம் ஒவ்வொன்றும், அதற்குரிய தனி சிவில், கிரிமினல் சட்ட அமைப்பும்நீதிமன்றமும் பெற்றிருக்கிறது. இரண்டாவதாக, மக்கள் சபையுடன் கூடவே,பெரியதாயினும் சிறியதாயினும் ஒவ்வொரு மாநிலமும் தனியொன்றாகவாக்களிக்கும் ஒரு கூட்டரசு சபையும் இருக்கிறது”. ஜெர்மனியில் கூட்டரசானது முற்றிலும் ஒன்றிணைந்த ஒருமை அரசுக்குரிய இடைக்கால வடிவம் ஆகும். 1866, 1870 ஆம் ஆண்டுகளில் மேலிருந்து நிகழ்ந்த புரட்சிதிருப்பிவிடப் படக் கூடாது, “அடியிலிருந்து எழும் இயக்கத்தால் மேலும் உறுதியூட்டப்பட வேண்டும்”.

அரசின் வடிவங்கள் குறித்து எங்கெல்ஸ் கருத்தின்றி இருந்துவிடவில்லை; மாறாக, குறிப்பிட்ட ஒரு இடைக்கால வடிவம் எதுலிருந்து எதுவாக மாறிச் செல்கிறது என்பதை அதனதன் ஸ்தூலமான வரலாற்றுத் தனிஇயல்புகளுக்கு ஏற்ப நிலைநாட்டும் பொருட்டு, அவர் இடைக்கால

வடிவங்களை மிகவும் தீர்க்கமாய்ப் பகுத்தாராய முயன்றார்.

பாட்டாளி வர்க்கம்,பாட்டாளி வர்க்கப் புரட்சி இவற்றின்கண்ணோட்டத்திலிருந்துஇப்பிரச்சனையை அணுகி, மார்க்சைப் போலவே எங்கெல்சும் ஜனநாயக மத்தியத்துவத்தை, பிரித்திடவொண்ணாதவாறு இணைந்து ஒன்றியக் குடியரசை ஆதரித்து வாதாடினார். கூட்டாட்சிக் குடியரசை அவர் விதிவிலக்காகவும் வளர்ச்சிக்கு இடையூறாகவும் கருதினார், அல்லது முடியரசிலிருந்து மத்தியத்துவக் குடியரசுக்கான வளர்ச்சியில் ஒரு இடைக்காலக் கட்டமாய், குறிப்பிட்ட சில தனிநிலைமைகளில் ஒரு முன்னேற்றப் படியாய்க்கருதினார். இந்த தனி நிலைமைகளில் அவர் தேசிய இனப் பிரச்சனையை முதலிடத்துக்குரியதாய்க் குறிப்பிட்டார். சின்னஞ் சிறு அரசுகளின் பிற்போக்குத் தன்மையையும், குறிப்பிட்ட சிலஉதாரணங்களில் தேசிய இனப் பிரச்சனையால் இவற்றின் பிற்போக்குத்

தன்மை மூடிமறைக்கப்படுவதையும் தயவுதாட்சண்யமின்றிக் கண்டித்து விமர்சனம் செய்த போதிலும், மார்க்சைப் போலவே எங்கெல்சும் தேசியஇனப் பிரச்சனையை ஒதுக்கித் தள்ளிவிடலாம் என்ற விருப்பத்துக்கு டச்சு மார்க்சியவாதிகளும் போலந்து மார்க்சியவாதிகளும் அவர்களுடைய சின்னஞ் சிறுஅரசுகளின் குறுகிய குட்டிமுதலாளித்துவ தேசியவாதத்தின் மீது அவர்களுக்குள்ள முற்றிலும் நியாயமான எதிர்ப்பினால் தூண்டப்பட்டு அடிக்கடி இறையாகிவிடுகிறார்களே அந்த விருப்பத்துக்கு ஒருபோதும் துளியளவும் இடமளித்ததில்லை. பிரிட்டன் சம்பந்தமாகவும் கூட - பூகோள நிலைமைகளும் பொது மொழியும் பல நூற்றாண்டு கால வரலாறும் இந்த நாட்டின் தனித்தனி சிறு பிரிவுகளில் தேசிய இனப் பிரச்சனைக்கு முடிவுகட்டியிருக்கும்என்பதாய் நினைக்கத் தோன்றும் பிரிட்டன் சம்பந்தமாயுங்கூட - தேசிய இனப் பிரச்சனை கடந்தகாலத்துக்குரியதாய் ஆகிவிடவில்லை என்னும் கண்கூடான உண்மையைக் கணக்கிலெடுத்து, கூட்டாட்சி நிறுவப்படுவதானது முன்னேற்றப் படியாய் இருக்கும்என்பதை எங்கெல்ஸ் அங்கீகரித்தார். அதே போதில் கூட்டாட்சி குடியரசுக்குள்ள குறைபாடுகள் பற்றிய விமர்சனத்தை எங்கெல்ஸ் கைவிட்டு விடுகிறார் என்பதற்கோ, ஒன்றிணைந்த மத்தியத்துவ ஜனநாயகக் குடியரசுக்கான உறுதிமிக்க வாக்குவாதத்தையும் போராட்டத்தையும் துறந்துவிடுகிறார் என்பதற்கோ கிஞ்சித்தும் இங்கு அறிகுறி காண முடியாது.

ஆனால் ஜனநாயக மத்தியத்துவம் என்னும் தொடரை முதலாளித்துவ சித்தாந்தவாதி களும், அராஜகவாதிகளும் அடங்கலான குட்டிமுதலாளித்துவ சித்தாந்தவாதிகளும் பயன்படுத்தும் அதிகார வர்க்க அர்த்தத்தில் எங்கெல்ஸ் இதனை பிரயோகிக்கவில்லை. மத்தியத்துவத்தைப் பற்றிய அவருடைய கருத்தோட்டம் அரசின் ஒற்றுமையைக் கம்யூன்களும்”  மாவட்டங்களும் தாமே விரும்பிப் பேணி பாதுகாப்பதற்கும், அதே போதில் எல்லாவிதமான அதிகார வர்க்க நடைமுறைகளும் மேலிருந்து செலுத்தப்படும் எல்லாவிதமான நாட்டாண்மையும்அறவே ஒழிந்து போவதற்கும் ஒருங்கே வகை செய்யும் அவ்வளவு விரிவான வட்டாரத் தன்னாட்சிக்கு முழு இடமளித்தது. அரசு பற்றிய மார்க்சிய வேலைத்திட்டக் கருத்துக்களை மேலும் விரிவுபட விளக்கி, எங்கெல்ஸ் எழுதியதாவது: “.... ஆகவே நமக்கு வேண்டியது ஒன்றிணைந்த குடியரசு - ஆனால், தற்போதுள்ள பிரெஞ்சுக் குடியரசின் அர்த்தத்தில் அல்ல. தற்போதுள்ள பிரெஞ்சுக் குடியரசு 1798 இல் நிறுவப்பட்ட முடிப் பேரரசிலிருந்து முடி மன்னர் மட்டும் நீக்கப்பட்ட அரசே அன்றி வேறல்ல. 1792 முதல் 1798 வரையில் ஒவ்வொரு பிரெஞ்சு மாவட்டமும் ஒவ்வொரு கம்யூனும் அமெரிக்க மாதிரியிலான முழுநிறைத் தன்னாட்சி பெற்றிருந்தது. – நமக்கும் இதுவேதான் வேண்டும். தன்னாட்சியை எப்படி நிறுவ வேண்டும்,

அதிகார வர்க்கம் இல்லாமலேயே எப்படி நிர்வகிக்க முடியும் என்பதை அமெரிக்காவும் முதலாவது பிரெஞ்சு குடியரசும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளன, இன்றுங்கூட இதை ஆஸ்திரேலியாவும் கனடாவும் ஏனைய ஆங்கிலேயக் காலனிகளும் நமக்குத் தெளிவுபடுத்தி வருகின்றன. இந்தப் பாணியில் அமைந்த மாநில (பிராந்திய), கம்யூன் தன்னாட்சியானது, உதாரணமாய் சுவிட்சர்லாந்துக் கூட்டாட்சி முறையைக் காட்டிலும் பன்மடங்கு சுதந்திரமுடையது. சுவிட்சர்லாந்துக் கூட்டாட்சி முறையில் கான்டோனானது கூட்டரசு (அதாவது, கூட்டாட்சி அரசு அனைத்தும்) சம்பந்தப்பட்டவரை மிகவும் சுயேட்சையான துதான், ஆனால் மாவட்டம்,கம்யூன் இவை சம்பந்தமாவுங் கூட சுயேட்சையானதாகவே இருக்கிறது. கான்டோன் அரசாங்கங்கள் மாவட்டப் போலீஸ் அதிகாரிகளையும் தலைவர்களையும் நியமிக்கின்றன. ஆங்கிலம் பேசப்படும் நாடுகளில் இதனைக் காண முடியாது; வருங்காலத்தில் நாம் பிரஷ்ய லாண்டிரேட்டுடனும் ரிகிருன்க்ஸ்ரேட்டுடனும்” (கமிஷனர்கள், மாவட்டப்போலீஸ் அதிகாரிகள்,கவர்னர்கள் ஆகியோரும் மற்றும் பொதுவில் மேலிருந்து நியமிக்கப்படும் எல்லா அதிகாரிகளும்) கூடவே இதையும் தீர்மானமாய் ஒழித்திட வேண்டும்”  ஆகவே எங்கெல்ஸ் இந்த வேலைத்திட்டத்தில் தன்னாட்சி பற்றியப் பிரிவை பின்வருமாறு திருத்திக்கூற வேண்டுமென்று ஆலோசனை கூறுகிறார்: மாநிலங்களுக்கும்” (குபேர்னியாக்கள் அல்லது பிராந்தியங்களுக்கும) மாவட்டங்களுக்கும் கம்யூன்களுக்கும் அனைத்து மக்கள் வாக்குரிமையின் அடிப்படையில் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப் படுவதன் மூலமான முழுநிறைத் தன்னாட்சி;

வட்டார, மாநில அதிகாரி எவரும் அரசால் நியமிக்கப்படுவது ஒழிக்கப்படுதல்போலிப் புரட்சிகரப் போலி ஜனநாயகத்தின் எமது போலி சோசலிஸ்டுப் பிரதிநிதிகள் எப்படி இந்த விவகாரத்தில் (இதில் மட்டுந்தானா இல்லவே இல்லை) ஜனநாயகத்திலிருந்து அப்பட்டமாய்த் தடம் புரண்டு விலகி ஓடிவிட்டனர் என்பதை ஏற்கனவே நான் பிராவ்தாவில் (இதழ் 68, மே 28, 1917) - கெரன்ஸ்கியையும் ஏனைய சோசலிஸ்டுஅமைச்சர்களையும் கொண்ட அரசாங்கம் இந்தப் பத்திரிக்கையை வெளிவராது தடுத்து

அடக்குமுறை செய்துவிட்டது - சுட்டிக்காட்டி இருக்கிறேன்* (*அடிப்படையான ஒரு பிரச்சனை - லெனின்). ஏகாதிபத்திய முதலாளித்துவ வர்க்கத்தாருடன் கூட்டுச்சேர்ந்துவிட்டவர்கள் இந்த விமர்சனத்துக்குச்

செவிசாய்க்காது இருந்ததில் வியப்பில்லை வெகுவாய்ப் பரவியிருந்த தப்பெண்ணத்தை முக்கியமாய் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகளிடையே பரவியிருந்த தப்பெண்ணத்தை - கூட்டாட்சிக் குடியரசு மத்தியத்துவக் குடியரசைக் காட்டிலும் கட்டாயமாய் அதிக அளவு சுதந்திரம் அளிப்பதாகும் என்றதப்பெண்ணத்தை எங்கெல்ஸ் உண்மைகளை ஆயுதமாய்க் கொண்டு, மிகத் துல்லியமான உதாரணத்தின் மூலம் பொய்யென நிரூபித்துக் காட்டுவதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம். 1792 - 98 ஆம் ஆண்டுகளின் மத்தியத்துவ பிரெஞ்சுக் குடியரசு குறித்தும், சுவிட்சர்லாந்து கூட்டாட்சிக் குடியரசு குறித்தும் எங்கெல்ஸ் எடுத்துரைக்கும் உண்மைகள் இந்த எண்ணம் தவறானது என்பதை நிரூபிக்கின்றன. மெய்யான ஜனநாயக மத்தியத்துவம் கொண்ட குடியரசு கூட்டாட்சிக் குடியரசைக் காட்டிலும் அதிக அளவு சுதந்திரம் அளித்தது. வேறுவிதமாய்க் கூறுமிடத்து,வரலாற்றிலேயே மிகவும் அதிகமாய் வட்டார, பிராந்திய சுதந்திரம் கிடைக்கச் செய்தது மத்தியத்துவக் குடியரசே அன்றி கூட்டாட்சிக் குடியரசு அல்ல. இந்த உண்மைக்கும், மற்றும் கூட்டாட்சிக் குடியரசு, மத்தியத்துவக்குடியரசு, வட்டாரத் தன்னாட்சி ஆகிய இவை குறித்த பிரச்சனை முழுவதற்கும், நமது கட்சியின் பிரச்சாரத்திலும் கிளர்ச்சியிலும் போதிய கவனம் இத்காறும் செலுத்தப்பட்டதில்லை, தற்போதும் செலுத்தப்படவில்லை

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

1. அரசு என்பது வரலாற்றில் தற்காலிகமானதே ஆகும். ஆனால் சுரண்டும்வர்க்கங்கள் அரசை வரலாற்றில் நிரந்தரமானதாகக் கருதுகிறார்கள்.உதாரணமாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்தபோது மன்னர்கள்,மன்னராட்சி முறைதான் நிரந்தரமானது என்று கருதினார்கள். ஆனால் தற்போது உலகில் எங்கும் மன்னராட்சி இல்லை. மன்னராட்சிஒழிக்கப்பட்டுவிட்டது. அதுபோலவே இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய வாதிகளின் காலனி ஆட்சிதான் நிரந்தரமாக நீடிக்கும் என்று பிரிட்டீஷ் காலனி ஆதிக்கவாதிகள் கருதினார்கள். ஆனால் பிரிட்டீஷார் காலனி ஆதிக்கத்தை கைவிட்டுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்கள். அது போலவே இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் பாராளுமன்ற ஆட்சியே இறுதிவரை நீடிக்கும் என்று சிலர் கருதுகிறார்கள்.ஆனால் வரலாற்றில் பாரீஸ்கம்யூன் தொடங்கி ரஷ்ய சோசலிசப் புரட்சியின் மூலம் பாராளுமன்ற ஆட்சியைவீழ்த்தியதைப் போலவே இந்தியாவிலும் பாராளுமன்ற ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.இறுதியாக மனித சமுதாயம் எவ்விதமான அரசுகளின் தேவை இல்லாத கம்யூனிச சமுதாயமாக மாறும்.இதுதான் வரலாற்று விதியாகும் என்ற கோட்பாட்டை உருவாக்கி மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியவர்கள் மார்க்சிய ஆசான்கள் ஆவார்கள்.ஆகவே உழைக்கும் மக்கள் நம்பிக்கையோடு நிலவுகின்ற பாராளுமன்ற ஆட்சிமுறைக்கு முடிவுகட்ட ஓர் அணியில் திரள வேண்டும் 

2. வரலாற்றில் அரசுகள் ஒரே மாதிரியானவையாக இருந்ததில்லை.உதாரணமாக மன்னர்களின் ஆட்சி இருந்தது,பாராளுமன்ற முறையிலானஆட்சி இருந்தது,அந்நியர்களின் நேரடியான கட்டுப்பாட்டில் அமைந்தகாலனி ஆட்சி நிலவியது,அந்நியர்களின் மறைமுகமான கட்டுப்பாட்டில்அமைந்த புதிய முறையிலான காலனிய ஆட்சிமுறை நிலவியது,பின்புதொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சோவியத்து ஆட்சிமுறை நிலவியது.இவ்வாறான பல விதமான ஆட்சிமுறைகள் நிலவிய போதும் இறுதியாக நிலவிடும் ஆட்சி முறை மட்டுமேஉலர்ந்து உதிரும் தன்மையுள்ள ஆட்சி முறையாக அமைந்திடும். அதாவது இத்தகைய உலர்ந்து உதிரும் ஆட்சிமுறையின் போதுதான் சமூகத்தில் நிலவும் வர்க்கங்கள் ஒழிக்கப்படும்,மக்களிடத்திலேயே சமத்துவம் வளர்க்கப்படும்,மக்கள் தங்களுக்கு தாங்களே ஒழுங்கமைத்துக்கொள்ளும் முறைகளை புரிந்துகொண்டு அதற்கான பயிற்சி பெறுவார்கள், அதன் காரணமாகவே மனிதர்களை ஒழுங்கமைப்பதற்கென்று ஒருவகையான நிறுவனத்தின் அவசியம் தேவைப்படாது, அதாவது அரசு என்ற ஒடுக்குமைக்கான நிறுவனம் தேவைப்படாது, ஏனென்றால் அந்த சமுதாயத்தில் ஒடுக்குபவர்கள்,ஒடுக்கப்படுவோர் என்ற சமூகப் பிரிவு இருக்காது மறைந்துவிடும்.எனினும் இத்தகைய சூழ்நிலைகள் தானாக தன்னியல்பாக உருவாகாது.இத்தகைய சமூக மாற்றத்தின் தேவையையும் அதன் அவசியத்தையும் உணர்ந்து மக்கள் ஒன்றுபட்டு செயல்படுவதன் மூலமே இது சாத்தியமாகும். இதற்கு வழிகாட்டும் தத்துவமே மார்க்சியம் லெனினியம் ஆகும். இத்தகைய உலர்ந்து உதிரும் தன்மையில்லாத அரசுகளான மன்னராட்சி, பாராளுமன்ற ஆட்சி, காலனியஆட்சி,மற்றும் புதிய காலனிய ஆட்சிகள் அனைத்தும் உழைக்கும் மக்களின் புரட்சிகரமானநடவடிக்கையின் மூலம் மட்டுமே ஒழிக்கப்படும். இத்தகைய அரசுகள்

உலர்ந்து உதிரும் தன்மை கொண்ட அரசுகள் அல்ல, மாறாக புரட்சியின் மூலம் ஒழித்துக்கட்டப்பட வேண்டிய அரசுகளாகும். இவ்வாறு புரட்சியின் மூலம் மக்களால் ஒழித்துக்கட்டப்படும் வரை இத்தகைய அரசுகள் தற்காலிகமாகவே நீடிக்கும், நிச்சயமாக இந்த அரசுகளுக்கு நிரந்தரமானவாழ்வு இல்லை. இதுவே அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைஆகும்.

3.உழைக்கும் மக்களை அச்சுறுத்தி,உழைக்கும் மக்களுக்காகப்பாடுபடுபவர்களை அவர்கள் மக்களுக்காகப் பேசுவதற்கு கூட அனுமதிதராமல் வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு கைதுசெய்து சிறையில் அடைத்து,மக்களை அடக்கி ஒடுக்கும் பயங்கரவாதத் தன்மை கொண்டதாக உள்ளநிலவுகின்ற அரசைப்போல் இல்லாமல் அரசெனும் சொல்லின் இந்தப்பொருளில் அரசாக இல்லாத அரசுதான் சோசலிச அரசு என்று சோசலிசஅரசுக்குரிய இலக்கணத்தை மீண்டும் மீண்டும் எடுத்துச் சொன்னவர்கள்தான் மார்க்சிய ஆசான்கள். இத்தகைய சோசலிச அரசு பற்றிய மார்க்சிய ஆசான்களது போதனைகளை தூக்கியெறிந்து விட்டு இந்தியாவில் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டுதிருத்தல்வாதிகளாக மாறிவிட்டவர்கள் நிலவுகின்ற இந்த பாராளுமன்ற ஆட்சிமுறைக்குள்ளேயே மாநிலங்களுக்கான தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் ஆட்சி அமைத்து செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் அவர்களது மாநில ஆட்சியை கம்யூனிஸ்டுகளின் ஆட்சியாகசித்தரிக் கிறார்களே இவர்களது கருத்துக்களை கேட்க்கும் போது நமக்கு சலிப்பூட்டு வதாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது.

4. அரசு என்பது இடைக்காலத்தில் நிலவுகின்ற தற்காலிகத் தன்மை படைத்ததாகவே இருக்கிறது என்றும், வர்க்கப் போராட்டத்தின் போதும் புரட்சியின் போதும் தனது எதிரிகளை அடக்கி ஒடுக்குவதற்கான பலாத்காரமான நிறுவனமாகவே அரசு இருக்கிறது என்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். இந்த நிலையில் சுதந்திர மக்கள் அரசுஎன்றும் சேமநல அரசுஎன்றும் கூறுவது உண்மையல்ல என்று மார்க்சியம் நமக்குப் போதிக்கிறது. மக்களுக்கான அரசு என்று அரசு எப்போதும் உலகில் எங்கேயும் இருந்ததில்லை, இனிமேலும் இருக்கப் போவதில்லை.மாறாக ஒரு குறிப்பிட்ட வர்க்க நலனிலிருந்து அதன் எதிரி வர்க்கங்களை அடக்கி ஒடுக்கும் அரசுதான் உலகில் எங்கும் தோன்றிய அரசுகளும் இனி வருங்காலத்தில் தோன்றும் அரசுகளும் இருந்தன,

இருக்கப் போகின்றன. சோசலிச அரசும் பாட்டாளிகள் அல்லது உழைக்கும் மக்களின் நலனிலிருந்து, உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டும் வர்க்கங்களின் மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் செலுத்தக்கூடிய அரசாகத்தான் இருக்கும் என்பதே அரசு பற்றிய மார்க்சிய போதனை ஆகும்.

ஆகவே இந்திய அரசானது எந்த வர்க்கங்களின் நலனிலிருந்து எந்தெந்த வர்க்கங்களை அடக்கி ஒடுக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு,அதனை மக்களுக்கு போதிப்பது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இதற்கு மாறாக காங்கிரஸ் அரசு, பாஜக அரசு, திமுக அரசு, அதிமுக அரசு, சிபிஎம் அரசு என்று சொல்வது சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தை மூடிமறைக்கும் செயலாகும். சுரண்டும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தை பாதுகாத்து உழைக்கும் மக்களை கூலி அடிமைத்தனத்தில் தொடர்ந்து வைத்திருப்பதற்கான துரோகச்செயலாகும்.

5.பாட்டாளி வர்க்கத்துக்கும் அரசு தேவைப்படுகிறது.ஏனெனில் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக சதித்தனமாகப் போராடும் முதலாளி வர்க்கத்தைஅடக்கி ஒடுக்குவதற்காகவே பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படுகிறது.முதலாளி வர்க்கத்தை ஒடுக்க வேண்டிய அவசியம் மறைந்தவுடன் அதாவது முதலாளி வர்க்கமும் பிற வர்க்கங்களும் ஒழிக்கப் பட்டுவிட்டவுடன் பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு தேவைப்படாதுஎன்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னகேராளாவிலுள்ள இடதுசாரி அரசாங்கமானது உழைக்கும் மக்களை சுரண்டும் முதலாளிகளை ஒடுக்குவதற்கான அரசா? இல்லையே. கேரள இடதுசாரி அரசானது வர்க்கங்களை ஒழிப்பதற்கான அரசா? இல்லையேபிறகு எப்படி அதனை பாட்டாளி வர்க்க அரசு என்று கருத முடியும். ஆகவேதான் கேரள இடதுசாரிகளின் அரசாங்கத்தை உழைக்கும் வர்க்கத்திற்கான அரசு என்று சொல்வதை திருத்தல்வாதம் என்கிறோம்

இதற்கு மாறாக உழைக்கும் வர்க்கங்களை வர்க்க அமைப்புகளில் திரட்டி அவர்களின் மூலம் உழைக்கும் வர்க்கங்களின் சோவியத்து வடிவத்திலான மக்கள் கமிட்டிகளை உருவாக்கி, சோவியத்து வடிவத்திலான மக்கள் கமிட்டிகளுக்கே அனைத்து அரசியல் அதிகாரமும் வேண்டும் என்று போராடி சோவியத்து வடிவத்திலான மக்கள்கமிட்டிகளின் ஆட்சி அதிகாரத்தை நிறுவும் போதுதான், அந்த ஆட்சியானது உழைக்கும் மக்களை சுரண்டி ஆதிக்கம் செய்யும் முதலாளிகளை அடக்கி ஒடுக்கும் அரசாகஇருக்கும். அத்தகைய அரசைத்தான் பாட்டாளி வர்க்க அரசு என்று மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்துள்ளார்கள். அத்தகைய அரசை உருவாக்குவதற்கு மக்களை திரட்டி போதித்து அமைப்பாக்கிபோராட்டங்கள் நடத்துவதற்கு மாறாக இங்குள்ள திருத்தல்வாத இடதுசாரிகள் அவர்களுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றும்,திமுக,காங்கிரஸ் போன்ற முதலாளித்துவக் கட்சிகளுக்கும் ஓட்டுப் போட வேண்டும் என்றும் அலைகிறார்கள்.இதன் மூலம் உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்டுகளின் கடமையை கைவிடுகிறார்கள்.அதன் மூலம் இவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்ல என்பதை நடைமுறையில் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு நேர் எதிராக தேர்தலை புறக்கணிக்கின்ற இடதுசாரிகளும்

உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்குவதற்கான முயற்சியில்  ஈடுபடாமல், அத்தகைய உழைக்கும் மக்களுக்கான சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவசியத்தை பிரச்சாரம் செய்வதற்கான மேடையாக இந்த பாராளுமன்றத்தையும், தேர்தலையும் பயன்படுத்த தவறி மக்களிடமிருந்து தனிமைப்பட்டுள்ளார்கள். ஆகவே நடைமுறையில் இவ்விரு வகையினரும் மார்க்சிய ஆசான்கள் நமக்குப் போதித்த பாட்டாளி வர்க்க அரசைப் பற்றி புரிந்துகொள்ளவும் இல்லை.அதற்குத் தேவையான கொள்கை வகுத்து செயல்படவும் இல்லை. ஆகவே இன்றைய இடதுசாரிகளின் பணியானது மக்களை சோவியத்து வடிவத்திலான மக்கள் கமிட்டிகளில் அணிதிரட்டுவதுதான்.மக்கள் கமிட்டிகளின்அரசாங்கத்தைஉருவாக்குவதற்காகவேஇடதுசாரிகள் பாடுபட வேண்டும்.இதற்கு மாறாகதேர்தலில் வெற்று பெற்று அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் முதலாளிகளை ஒடுக்கவும் முடியாது உழைக்கும் மக்களை விடுவிக்கவும் முடியாது.ஆகவே இடதுசாரிகள் தேர்தலில் பங்குகொண்டாலும் மார்க்சியஆசான்களது இந்த போதனைகளை பிரச்சாரம் செய்ய வேண்டும்,இந்த பாராளுமன்ற அரசமைப்பை அம்பலப் படுத்துவதற்கு இந்தத் தேர்தலை பயன்படுத்த வேண்டும்.இத்தகைய மார்க்சிய ஆசான்களது போதனைகளை மக்களுக்கு உணர்த்தாமல் பாசிசத்தை வீழ்த்துவதற்கு திமுக,காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு ஓட்டு சேகரிப்பது அரசு பற்றிய அறியாமையில் இருக்கும் மக்களை முதலாளித்துவ கட்சித் தலைவர்களுடன் சேர்ந்துகொண்டு இடதுசாரிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்றே நாம் கருத வேண்டியுள்ளது.

6.இடதுசாரிகள் அல்லது கம்யூனிஸ்டுகள் தங்களது வேலைகளை ஒழுங்காகவும் சரியாகவும் செய்ய வேண்டுமானால் அவர்களால் உருவாக்கி செயல்படுத்திக் கொண்டு இருக்கும் அவர்களது திட்டம் மற்றும் கொள்கைகளில் தேவையான மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியமாகும். அத்தகைய திருத்தங்களை உருவாக்கும் போது அவர்களது கடந்தகால நடைமுறைகளிலிருந்து தவறான கொள்கை என்று அறியப்பட்ட கொள்கைகளை கைவிட வேண்டும். மேலும் அவர்களால் செய்யப்படும் திருத்தமானது உண்மையை நோக்கி நெருங்கி வரவேண்டும். இதுவரை மார்க்சியத்தை திருத்தி புரட்டப்பட்டதி லிருந்து உருவாக்கிக்கொண்ட கொள்கை களை கைவிட வேண்டும். மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து நடைமுறைக்கான கொள்கைகளை மீட்டமைக்க வேண்டும். இவ்வாறு விஞ்ஞானப்பூர்வமான கொள்கைகளை நாம் வகுப்பதற்கு மார்க்சிய

ஆசான்களது போதனைகளை தவறாமல் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் நினைப்பதெல்லாம் சரியானது என்றும், நாம் செய்வதெல்லாம் சரியானது என்று கருதக் கூடாது. நமது கருத்துக்கள் சரியானது என்றால் நடைமுறையில் அது நிரூபிக்கப்பட வேண்டும். நடைமுறையில் நமது கருத்துக்களை செயல்படுத்தி தொடர்ந்து தோல்வியை சந்தித்தால் அதற்கான காரணத்தை பகுத்தறிந்து புதிய கொள்கை மற்றும் நடைமுறையை வகுத்துச் செயல்பட வேண்டும் என்று கம்யூனிஸ்டுகளுக்கு மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள்.இந்த போதனைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து தேர்தல்களில் ஈடுபட்டு இடதுசாரிகள் தோல்வியடைந்துள்ளார்கள்.

இந்த தேர்தல் முறைகளை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற மார்க்சிய போதனைகளை புறக்கணித்துவிட்டு எம்.எல்.அமைப்பினரும் தேர்தலை புறக்கணித்து செயல்பட்டு தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் பல குழுக்களாக சிதைந்து போனார்கள்.ஆகவே கம்யூனிஸ்டுகள் தேர்தல் மற்றும் பாராளுமன்றம் பற்றிய மார்க்சிய ஆசான்களின் போதனைகளின் அடிப்படையில் கொள்கை வகுத்து செயல்பட்டால்,அவர்கள் சிறிய எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பாக இருந்தாலும் மக்களின் செல்வாக்கைப் பெற்ற பெரிய அமைப்பாக வளர்வார்கள், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். இன்றைக்கும் நமக்கு வழிகாட்டும் ஆசான்களாக மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற ஆசான்களே உள்ளனர்.இந்த ஆசான்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்படுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்ற தவறுபவர்கள் நிச்சயமாக தோல்வி அடைவார்கள். இதுதான் சமூக விதியாகும்.

தேன்மொழி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்