பெண் குழந்தைகள்தினமாம் 11 அக்டோபர்.

 பெண் குழந்தைகளை.. பெண் குழந்தைகளாக வாழ விடுங்களேன்11 அக்டோபர் பெண் குழந்தைகள் தினம். அதனை பற்றிய எனது விமர்சனத்தோடு வாசியுங்கள் விவாதியுங்கள்

பழைய முகநூல் பதிவே அந்தநாளில் நான் பகிர்ந்தவை இவை இரண்டும் ஆணாதிக்க கொடுமைகளை கூறியிருந்தாலும் பெண்ணிய வாதத்தோடு சுருங்கி விட்டது. ஆக பெண்களுக்கான விடுதலைக்கான போராட்டம் என்பதனை பற்றி நமது ஆசான் பேசியுள்ளதே,"சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும்சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது.என்பது தான் நிதர்சனமான உண்மைபுரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது"புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக, சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும்

கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின், திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்

தொழிலாளர்கள், நேரடியாகப் பிரச்சினைகளைச் சந்திப்பதனால் அவர்கள் அதனை உணர்ந்து, உடனடியாக எதிர்பை தெரிவிக்கின்றனர்.நிச்சயமாக அது தன்னியல்பான போராட்டம் தான் இருக்கும்.தன்னியல்பான போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவது கம்யூனிஸ்ட் கட்சியின் பணிசீர்திருத்த அரசியல் போராட்டம்,தொழிலாளர்களின் அன்றைய மேம்பாட்டை மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளது.அந்த மேம்பாடு தொழிலாளர்களின் பிரச்சினைகளை முழுமையாகப் போக்காது

ஏன் என்றால் முதலாளி,தொழிலாளிகளுக்கு ஒரு வகையில் கொடுத்ததை,மற்றொரு வகையில் பறித்துக் கொள்ளவார்.

தன்னியல்பு போராட்டத்துடன் நிறுத்திக் கொள்வதை லெனின் ஏன் எதிர்க்கிறார்? அதை அவரே விளக்குகிறார்

தொழிலாளி வர்க்க இயத்தின் தன்னியல்பு மீதான வழிபாட்டுப் போக்கும், தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வு பெறுவதை மறுக்கிற போக்கும், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,தொழிலாளிகள் மீது,முதலாளி வர்க்க சித்தாந்தத்தின் செல்வாக்கைப் பலப்படுத்துவதாகவே அர்த்தம் என்கிறார் லெனின்

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது, இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை,முதலாளித்துவ வர்க்க தத்துவத்திற்கு ஆட்படுத்துவதில் போய்முடியும்

உலகில் இரண்டு தத்துவப் போக்கு தான் இருக்கிறது. ஒன்று தொழிலார்களுக்கான தத்துவம், மற்றது முதலாளிக்களுக்கான தத்துவம். இதைக் கடந்து நடுவழி என்று எதுவும் கிடையாது, அப்படி நடுவழியை முயற்சிக்கிற போக்கு, இறுதியில் முதலாளித்துவத் தத்துவத்துக்கே சேவை செய்யும். இது தான் நடைமுறையில் கண்ட உண்மை

கூலி உயர்வுக்காகப் போராடுகிற தொழிற்சங்க போராட்டம், ஓர் அரசியல் போராட்டம் தான், ஆனால் அது கம்யூனிச அரசியல் போராட்டம் அல்ல. அதே நேரத்தில் லெனின், பொருளாதாரப் போராட்டத்தை மறுக்கவில்லை, அந்தப் போராட்டத்தைக் கம்யூனிசம் பரப்புவதற்கான தொடக்கமாகக் கொள்ள வேண்டும் என்று தான் கூறியிருக்கிறார்

கூலி உயர்வுக்கான போராட்டத்தையே மேலோங்கிய போராட்டமாக, பொருளாதாரப் போராட்டத்தையே சோஷலிசத்திற்கானப் போரட்டமாகக் கருதுகிற போக்கைத் தான் லெனின் மறுகிறார்

பொருளாதாரப் போராட்டம் மட்டுமே,மக்களை அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாகும் என்ற கருத்தையும் லெனின் மறுத்துள்ளார்

மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டவர்கள் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே அரசியலுக்கு உகந்தது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் அது தவறானதாகும்

ஒரு பெண்,தான் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அரசியலில் ஈடுபடலாம். அது கம்யூனிச அரசியலாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அந்தப் பெண் தனக்கும்,தமது பெண் இனத்திற்கும் ஏற்பட்ட ஒடுக்கு முறைக்கு முதலில் குரல் கொடுக்க அரசிலுக்கு வரலாம், அப்படி வந்த பிறகு, தான் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கத்தால் மட்டுமல்ல, வர்க்க சமூகத்தில் சொத்துடைமையின் அடிப்படையில் தான் ஒடுக்க முறை நிகழ்கிறது. அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்றால், வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம்

கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்துடன் முடங்கிப் போகாமல், அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்

லெனின் பொருளாதாரப் போராட்டத்தைத் தவிர்த்த மற்ற பிரச்சினைகளில் இருந்தும் மக்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறுகிறார்

அது என்வென்று பார்ப்போம்

லஞ்சல், ஊழல், பாதிக்கப்பட்ட மக்களையே போலீஸ் தாக்குவது, அதிகமான வரிப்போட்டு மக்களை வாட்டுவது, மதப் பிரிவினரை அடக்கி ஒடுக்குவது, மாணவர்களையும், முற்போக்கு அறிவாளிகளையும் ஒடுக்குவது போன்ற பிரச்சினைகளும், மக்களை அரசியலில் ஈடுபட வைக்கும்

பொருளாதாரப் போராட்டத்திற்குக் காத்துக் கொண்டிருக்காமல்,மக்களிடம் ஏற்படுகிற அனைத்து அதிருப்தியையும்,அரசியலாக்கத் தெரிந்தவர்களே சிறந்த கம்யூனிஸ்ட் ஆவர்கள்

புரட்சிகரமான கம்யூனிசமானது, பொருளாதாரம் போன்ற சீர்திருத்த போராட்டத்தை, தமது நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. ஆனால், சீர்திருத்த போராட்டத்தையே சோஷலிசப் போராட்டமாகக் கருதுவதை மறுக்கிறது

என்ன செய்ய வேண்டும் நூலிலிருந்து எடுத்து கையாண்டுள்ளேன்.

இதிலிருந்து இந்த பெண்ணியவாதிகளின் நிலைப்பாட்டை புரிந்துக் கொண்டால் சிறப்பு 

தி இந்து தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள கட்டுரை
அன்புள்ள திரு யேசுதாஸ்.....
மறைத்தே வைத்துக் கொள்கிறோம் திரு.யேசுதாஸ்…
கவலைப்படாதீர்கள். இந்தப் பாவப்பட்ட பெண்கள் திசை மாறி போகிறார்களே என்று துயருறாதீர்கள்…நல்ல மேய்ப்பர் ஒருவரைப் போல்.
உங்கள் குரல் எங்கள் தந்தைமார்களின் குரல்போல், எங்கள் அண்ணன்மார்களின் குரல்போல் இதயத்திற்கு வெகு அணுக்கமாகவே இருக்கிறது. அதனால் உங்கள் குரலில் ஒலிக்கும் துயரத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது. கடந்தும் போக முடியாது. அப்படியெல்லாம் போகக் கூடியவர்களா நாங்கள்?
2004 - ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம். யு. எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றுக்குள் சென்ற முதல் இந்தியப் பெண் என்று டென்னிஸ் உலகம் சானியா மிர்ஸாவை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்ணுக்கு அப்பொழுது வயது வெறும் பதினெட்டுதான். டென்னிஸ்ஸில் இந்தியாவின் பெயரை உலக அளவில் உயர வைப்பாள் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் அந்தச் சின்னப் பெண்ணுக்கு வரவேற்பு முகமன் கூறிக் கொண்டிருந்தபோது எங்கள் தந்தைமார்களாகிய நீங்கள் இந்தியாவில் என்ன சொல்லிக் கொண்டிருந்தீர்கள் தெரியுமா?
சானியா மிர்ஸா ஆறு இஞ்ச் குட்டைப்பாவாடை போட்டுக் கொண்டு டென்னிஸ் விளையாடுகிறாள். அந்தக் குட்டைப் பாவாடையுடனே பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறாள். ஓர் இஸ்லாமியப் பெண் பேருக்குக் கூட தலையில் ஒரு துணிப் போடுவதில்லை….
அப்படிச் சொன்னவர்களை நாங்கள் பிற்போக்குவாதிகள் என்றோ, இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்றோ புறந்தள்ள முடியவில்லை. அவர்கள் மேல் பொங்கி எழுந்து போர்த் தொடுக்க முடியவில்லை.
சாதனை முகத்துடன் ஊர் திரும்பிய மயக்கும் புன்னகைக்குச் சொந்தக்காரியான அந்த சானியா மிர்ஸா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தன்னுடைய ஒவ்வொரு சொல்லும் தன்னுடைய குட்டைப் பாவாடையும் விவாதத்திற்குரிய செய்தியானதில் அந்தப் பெண் அடிபட்டவளாகி அறைக்குள் முடங்கிக் கிடந்தாள். தன்னுடைய குட்டைப் பாவாடை ஆறு இன்ச்சோ, ஆறு அடியோ அது என் தனிப்பட்ட விஷயம் என்பதில் அந்தப் பெண் உறுதியாக இருந்தாலும் அவள் உங்கள் யாருக்கும் பதிலே சொல்லவில்லை. யு.எஸ்.ஓபன் டென்னிஸில் நான்காம் சுற்றில் நுழைந்ததற்கான பரிசாக, ஃப்த்வாவை வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள்.
அவள் யு.எஸ்.ஓபன் டென்னிஸில் பெற்ற வெற்றியின் பரவசம் அவளுடைய குட்டைப் பாவாடைக்குள் புதைந்துப் போன உண்மையை நாங்கள் எவ்வளவு சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டோம்?
அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக்கூடாது…என்று சொல்லியிருக்கிறீர்கள்…
பட்டிமன்றங்களில் மட்டும்தான் இன்னும் பெண்கள் ஆண்களுக்குத் தொல்லை தந்து கொண்டிருக்கிறார்கள். நிஜத்தில் இருக்கிறது என்று நீங்களுமா நம்புகிறீர்கள்?
நம் தலைநகரம் டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி, ஆறுபேர் (ஆண்களேதான் சார்) கொண்ட கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வதைகளையும் பேச்சுகளையும் சந்தித்தப்பின் மரணத்தைத் தழுவினாள்.
அத்துமீறி தனக்குத் தொடர்பில்லாத பெண்ணிடம் வன்முறையில் ஈடுபட்ட ஆறுபேர் யார்? அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? பின்புலம் என்ன? எந்தச் சூழலில் அவர்களுக்குள் இப்படி ஒரு மிருகத்தனமான எண்ணம் வந்தது? அவர்கள் குடித்திருந்தார்களா? அல்லது வேறு போதையில் இருந்தார்களா? என்பதெல்லாம் நமக்குத் தேவையில்லாத ஆராய்ச்சிகள்தானே?
நள்ளிரவில் அரைகுறை ஆடையுடன் ஆண் நண்பருடன் அந்தப் பெண் ஏன் தனியாகச் சென்றாள்? அவளுக்குக் கிடைத்த இந்தத் தண்டனைக்கு முழுக்க முழுக்க அந்தப் பெண்ணின் அரைகுறை ஆடை மட்டும்தான் காரணம். அவள் மட்டும் அன்று ஒன்பது கெஜப் புடவையில் போயிருந்தாள் என்றால் இந்த வம்பே வந்திருக்காது என்று நாங்கள் ஆண்களுக்குத் தொல்லை கொடுத்ததற்காக வருத்தப்பட்டு எங்களை நாங்களே அவமதித்துக் கொண்டோம்தானே? ஆறு வயது குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டாலும் நாங்கள் இந்த பதிலையே ஆறுதலாக்கிக் கொள்கிறோம்.
வெட்கமேயில்லாமல் உள்மனசில் இப்பொழுது ஒரு கேள்வி வருகிறது. திரௌபதியை எதற்குத் துயில் உறிந்தார்கள்? அவள் நிச்சயம் இன்றைய நவீனப் பெண்ணைப்போல நாகரீக உடை அணிந்திருக்க மாட்டாள். இந்தியப் பண்பாட்டின் அத்தனைக் கூறுகளையும் ஒருங்கே பெற்றவளாகவே இருந்திருப்பாள். அண்ணன் தம்பிகள் சூதாட்டத்தில் அவளைப் பகடையாக உருட்டினீர்களே ஏன்? அவள் சிரித்த ஒரு சிரிப்புக்காகவா? சபையோர் முன் துகில் உறியப்பட்ட திரௌபதி எப்படி கூசிப்போய் நின்றிருப்பாள்?
பிரச்சனை என்றால் ஆடையை உறிவதும், ஆடையை காரணம் காட்டுவதும் உங்களுக்கு இரண்டாயிரம்கால வழக்கம் என்பதைப் புரிந்து கொண்ட நாங்கள் எப்பொழுதாவது உங்களுக்குத் தொல்லை தந்திருக்கிறோமா? எல்லா தவறுகளுக்கும் தலை வணங்கி ஆமென் சொல்லித்தானே பழகியுள்ளோம்?
இன்னும் கொஞ்சம் குரல் உள்ளொடுங்கி, தலை கீழே தாழ வேண்டுமோ?
ஜீன்ஸ் போன்ற உடைகள் எளிமையையும், அன்பையும் பெண்களின் உயர்ந்த குணங்களாகக் கொண்ட இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்கிறீர்கள்.
நிச்சயமாக...சந்தேகமேயில்லாம உங்களின் கூற்றை ஏற்றுக் கொள்கிறோம்.
இன்று இளைய தலைமுறை ஆண்கள் துவங்கி முதுமையைத் தொடும் ஆண்கள் வரை எல்லோருமே ஜீன்ஸ் உள்ளிட்ட நவீன ஆடைகளைத்தான் அணிகிறார்கள்.
பெண்களின் ஆடை வடிவமைப்பாளர்கள் கொஞ்சம் ரசனைக்காரர்கள். அவர்களின் அழகைக் கூட்டிக் காண்பித்துவிடும்படி ஆடைகளை வடிவமைத்து விடுகிறார்கள். ஆண்களுக்கு ஆடை வடிவமைக்கும் ஆண்கள் அவ்வளவு ரசனை குறைவானர்களோ என நாங்கள் அய்யுறுகிறோம்.
இடுப்புப் பெருத்த ஆண்களுக்கு இந்த ஜீன்ஸ் பேண்ட் அடிவயிறைத் தாண்டி இடுப்புக்கு ஏறவே மாட்டேன்கிறது. சட்டைகளையும் குட்டையாக்கிவிட்டார்கள். குட்டைச் சட்டையும் இடுப்புக்கு ஏறாத ஜீன்ஸ் பேண்டுகளுடனும் ஆண்களை நாங்கள் பொது இடங்களில் எதிர்கொள்கிறோம். பேருந்தில் முன்சீட்டில் உட்கார்ந்திருக்கும் ஆண்களின் பேண்ட் உள்ளாடையைத் தாண்டி கீழே இறங்கி, அவர்கள் போட்டிருக்கும் உள்ளாடைக்கு இலவச விளம்பரம் செய்துக் கொண்டிருப்பதை தினம் தினம் பார்க்கிறோம். ஆனால் அவர்களின் இறங்கிய ஆடையைப் பார்த்தவுடன் இந்தியப் பெண்களின் கலாச்சாரத்தினை முழுமையாகப் பாதுகாக்கும் பெண்கள் அந்த ஆபாசத்தைக் கண்டு கொள்ளாமல் முகத்தைத் திரும்பிக் கொள்கிறோம். அல்லது இருக்கை மாறி உட்கார்ந்து கொள்கிறோம்.
பேருந்தின் கம்பிகளைப் பிடிக்க உயரக் கையைத் தூக்கிக் கொண்டிருக்கும் ஆண்களின் அடிவயிறை, அரை, கால்ச் சராய்களுடன் மேலாடை இல்லாமல் சுற்றும் இளைஞர்களை நாங்கள் ஏறெடுத்தும் பார்த்ததில்லை. ஏன் இவ்வளவு...ஜனாதிபதி முதல் உள்ளூர் பிரபலங்கள் வரை கோவில் வாசலிலும் மடாதிபதிகளைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து சட்டையணியாத வெற்றுடம்புடன் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையும் நாங்கள் பாரம்பரிய இந்தியப் பெண்களின் பக்தியுடந்தான் இன்னும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருநாள் கூட பொது இடத்தில் அவர்களின் வெற்றுடம்புகளுக்காக நாங்கள் முகம் சுளித்ததில்லை.
இன்னும் எங்களை சந்தேகிக்கலாமா நீங்கள்?
நாங்கள் இன்னும் எங்கள் தாத்தன்மார்கள், தந்தைமார்களை, கணவன்மார்களை,பெற்றெடுத்தப் பிள்ளைமார்களை நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். எங்களுக்கு வேண்டிய, வேண்டியிராத எல்லா ஆண்களையும் கணக்கில் கொண்டே நாங்கள் நடந்து கொள்கிறோம். உயரதிகாரி உள்ளிட்ட திருவாளர் பொதுஜனம் முதல் நள்ளிரவில் குடித்துவிட்டு தங்களின் பெண் வக்ரம் தணிக்க முகநூலில் ஊரில் உள்ள பெண்களைப் பற்றியெல்லாம் ஆபாசமாய் நிலைத்தகவல் இடும் ஆண்கள் நண்பர்கள் வரைக்கும் எல்லாரின் தணிக்கைக்கும் நாங்கள் எங்களை உட்படுத்திக் கொண்டே இருக்கிறோம்.
எங்கள் சுதந்திரம் என்பது உங்களின் கை பிடித்து, உங்களுக்குப் பின்னால் ஓரடி இடைவெளிவிட்டு நடந்துவருவதே என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
உங்களின் அங்கீகாரத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம். உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சுகிறோம். நாங்கள் பேசலாம். பாடலாம். ஆடலாம்.எழுதலாம்.ஆளலாம். எல்லாம் உங்களின் பெருமைக்காகத்தான். பெண்களை அடிமைப்படுத்தும் பிற்போக்குவாதிகள் இந்தியாவில் இல்லை என்று காட்டப்படும் புள்ளிவிவரங்களுக்காகத்தான் என்பது நம் இருபாலாருக்கும் தெரியும்.
கடைசியாக ஒன்று...நாங்கள் நடந்துகொள்வதைப் பார்த்து பயந்துவிடாதீர்கள். உங்களின் அதிகாரங்களால் நாங்கள் உணர்ச்சி மேலெழுந்து பத்மஸ்ரீஇ கமலஹாசனைப் போல் நாங்கள் நாட்டைவிட்டு மொத்தமாக வெளியேறுவோம் என்று சொல்லமாட்டோம்.
எங்கள் ஆடைகளை உறித்துத்தான் நீங்கள் எல்லோரும் ஆண்பிள்ளைகள் என்ற கௌரவ ஆடையுடன், மீசை முறுக்கிக் கொண்டு எகத்தாளமாக உலா வருகிறீர்கள் என்ற ரகசியம் அறிந்தவர்கள் நாங்கள்.
எங்கள் பிரியத்திற்குரிய ஆண்களை நிர்வாணமாக்கிவிட்டு நாங்கள் எப்படி வெளியேறுவோம் திரு.யேசுதாஸ் அவர்களே?
Like
Comment
உலக பெண் குழந்தைகள் தின #சிறப்புபகிர்வு!
பெண் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கவும், 19- 12- 2011 அன்று ஐ.நா சபை நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, அக்டோபர் 11ம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக அறிவிக்கப்பட்டது.
உங்களைச் சுற்றி இருக்கும் பெண் குழந்தைகளுக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். நம் சிறுமிகள் எத்தனை ஆபத்துகளுக்கு நடுவில் வளர்ந்து வருகிறார்கள் என்பதை, தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்..!
இன்று உலகில் சுமார் 1.1 பில்லியன் சிறுமிகள் இருக்கிறார்கள். அவர்களின் பெரும்பாலான சிறுமிளை பாலியல் ரீதியாக மனித மிருகங்கள் சீரழிக்கிறார்கள். இந்த அவலம் மறையும்வரை, இந்தக் கசப்புக்கு நீங்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்.
காரணம், எந்த மனிதன் எப்போது மிருகமாகிறான் என்பது யாராலும் யூகிக்க முடிவதில்லை.
நவீன குழந்தைத் திருமணம் பற்றி தெரியுமா?
பெண் கல்விக்கு முக்கியத் தடையாக இருப்பது குழந்தைத் திருமணம். சீனாவைத் தவிர, உலகில் வளர்ந்த நாடுகளில் 18 வயதில் இருக்கும் மூன்று பெண் குழந்தைகளில் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது.
இதனால் அவர்களுக்குக் கல்வி தடைப்பட்டு, கணவரால் பதின் வயதில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி, இளம் வயதில் தாயாகி, உடலாலும் மனதாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்குகிறார்கள் பெண் குழந்தைகள்.
இப்போது கல்வியின் முக்கியத்துவம் பற்றிய புரிதல் பரவலாகி இருப்பதால், பெண் பிள்ளைகளை வீட்டுக்குள் முடக்கி வைப்பதில்லை.
பரவலாக, பெண் பிள்ளைகள் படிக்க வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், கல்லூரி செல்லும்போது காதலித்து விடுவார்களோ என்று பயந்து, பூப்படைந்தவுடன் அவர்களுக்குத் திருமணம் முடித்துவிடுகிறார்கள். இதுதான் குழந்தைத் திருமணத்தில் ஏற்றப்பட்ட நவீன மாற்றம்.
உங்கள் பெண் குழந்தைக்கு என்ன தற்காப்புக் கலை தெரியும்?
இன்று டிவி ஷோக்களின் மோகத்தால் பாட்டு, நடன வகுப்புகளுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் அதிகம். தவறில்லைதான். ஆனால், அதைவிட குழந்தையின் பாதுகாப்புதான் முதல் தேவை.
குறைந்தபட்சம் தன்னைத் தற்காத்துக்கொள்ள, பெண் குழந்தைகளுக்கு கராத்தே, குங்பூ போன்ற எதாவது ஒரு தற்காப்புக் கலை கற்றுக்கொடுப்பது அவசியம். இதனால் பாதுக்காப்புடன், அந்தப் பெண் குழந்தைகள் தைரியமும், தன்னம்பிக்கையும் கிடைக்கப்பெற்று, வாழ்வையும், சமூகத்தையும் துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்.
அதிகரிக்கும் இளம் வயது காதல்!
சிறுமிகள் பதின் வயதில் அவர்களுக்கு ஏற்படும் கிளர்ச்சியை காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். ''சமீபத்தில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி, 'என் எதிர்காலக் கணவரைப் பற்றின கனவு எனக்கு இருக்காதா?' என்று கேட்டபோது நான் அதிர்ச்சியாகிவிட்டேன்'' என்கிறார், மனநல மருத்துவர் பீனா.
“இப்போது குழந்தைகளுக்கு குழந்தைப் பருவமே இல்லாமல் போய்விட்டது. அந்தக் கேள்வியைக் கேட்ட குழந்தையைபோல், இன்று பலர சிறுமிகள் காதல்(!) வசப்படுகிறார்கள். இதற்குக் காரணம் பெற்றோர்கள்தான். சிலர், 'நான் ரொம்ப சோஷியலா பழகுறேன்' என்று, குழந்தையிடம் அனைத்தையும் வெளிப்படையாகப் பேசுவார்கள்.
இன்னும் சிலர் தங்கள் குழந்தையிடம் ராணுவ ஆட்சி செலுத்துவார்கள். இவை இரண்டுமே தவறு. குழந்தைகளிடம் சில நெறிமுறைகளோடு, நட்போடு பழக வேண்டும். அது கடினம்தான். இருப்பினும் சரியாகச் செய்தே ஆகவேண்டும். அதற்கு முதலில் அவர்கள் பேசுவதை காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.
அவர்களின் ஆண் நண்பர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் நட்பை ஆதரிக்கும் அதே நேரம், அவர்களுக்கான எல்லையையும் அவர்களின் மன நோகாதவாறு புரியவைக்கவேண்டும்.
உங்கள் பெண் குழந்தையின் மேல் உங்களுக்கு முழு நம்பிக்கை இருப்பதும், அதைக் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியம். அப்போதுதான் அவர்களின் இன்பம், துன்பம், குழப்பங்கள் போன்றவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.
குட் டச், பேட் டச்... கற்றுக்கொடுங்கள்!
பெண் குழந்தையின் உடல் பற்றியும், பாலியல் தீண்டல்களில் இருந்து அதைப் பாதுகாக்கவும் அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். குழந்தைக்கு விபரம் தெரிந்ததுமே, அவர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுப்பது காலத்தின் அவசியம்'' என்கிறார் உளவியல் நிபுணர் நப்பின்னை.
''ஆண்கள், பெண்களுக்கு எதிரானவர்களே!"
''2014ல் 1,565 பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார்கள். இதில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளின் எண்ணிக்கை 1,110. தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளில் 60% - 68% பெண் குழந்தைகள் மீது நடந்தப்படுபவையே.
பெண் குழந்தைகளை வேட்டையாடும் சமூகமாகத்தான் நாம் இருக்கிறோம். தங்களுக்கு நடக்கும் வன்முறையை வெளியில் சொல்லமுடியாத சூழலை சிறுமிகளுக்கு நாம் கொடுத்திருப்பதுதான் கொடூரத்தின் உச்சம்.
வெளியில் சொல்லக்கூடாது என்ற மிரட்டல் ஒரு பக்கம் என்றால், பாதிக்கப்படும் பெண்களையே குற்றவாளியாகப் பார்க்கும் இந்தச் சமூகத்தின் குருட்டுப் பார்வை இன்னொரு பக்கம். பாலியல் வன்முறைக்கு ஆடைதான் காரணம் என்றால், சிறுமிகளையும் சேலையால் போர்த்த வேண்டுமா?
பின் தொடர்ந்து வருவது, தவறான ஜாடை காட்டுவது, தொடுவது, அநாகரிகமாகப் பேசுவது என பலதரப்பட்ட வன்முறைகளை பெண்களும் பெண் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள்" என்கிறார் சமூக ஆர்லவர் எவிடன்ஸ் கதிர்.
''நீதிமன்றங்களில் தண்டனை பெறும் பாலியல் வன்முறைகள் வெறும் 19% தான். இதில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் 3% கூட இல்லை. பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்ட பெண் பிள்ளைகளில் 80 % பேருக்கு 20 நாட்களுக்குப் பிறகுதான் பரிசோதனை நடத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தவுடனேயே எச்சில், நகம், முடி, காயங்கள் போன்ற நுணுக்கமான தடயங்கள் ஆராயப்படுகின்றன. இங்கு அதுபோன்று இல்லை என்பதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணை மனதளவில் மீட்கும் கவுன்சிலிங்கூட சரியாகக் கொடுக்கப்படுவதில்லை.
பாலியல் கொடுமைகள் மட்டுமல்ல...
குழந்தைத் திருமணம், பெண் கருக்கொலை, பெண் சிசுக்கொலை, ஆணவக் கொலைகள் என இன்றும் கிராமப்புறங்களில் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன.
தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல... உலகத்தின் எல்லா நாடுகளிலும் பெண் பிள்ளைகளுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.
வன்முறையின் அளவுகோல் வேறுபடுமே தவிர, பெண் இனத்தை நசுக்காத சமூகம் இந்தப் பூமியில் இல்லை.
நான் உட்பட் எல்லா ஆண்களுமே பெண்களுக்கு எதிரானவர்களாக ஏதோ ஒரு நேரத்தில் மாறிவிடுகிறார்கள். அது காந்தி, பெரியார், பாரதியார், அம்பேத்கார் என யாராக இருந்தாலும் பொருந்துகிறது. அவர்கள் பெரிய புரட்சி செய்திருக்கலாம்.
ஆனால் அனைவருமே ஏதோ ஓர் இடத்தில், 'நான் ஆண்' என்ற ஒரு திமிரான மனோபாவத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். எங்களுக்குத் தெரியாமலேயே அந்த எண்ணம் எட்டிப்பார்த்துவிடுகிறது.
ஓர் ஆண் பிறந்து இறப்பதற்குள் தனக்குள் இருக்கும் ஆணாதிக்க மனோபாவத்தின் சதவிகிதத்தை குறைக்க முயற்சி செய்ய வேண்டும்'' என்கிறார் எவிடன்ஸ் கதிர்.
பெண் பிள்ளை கடத்தல்!
பெரும்பாலும் 10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்தி கடத்தல்கள் நடக்கின்றன. இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற இடங்களில் பாலியல் தொழிலுக்காகவும், ஆபாச படங்கள் எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம், 20 மாவட்டங்களில் ஆண் குழந்தைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவாக உள்ளது.
உங்களுக்குத் தெரிந்து குழந்தை கடத்தல், பாலியல் வன்முறை, பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணம், படிக்கத் தடை என்ற செயல்பாடுகள் நடந்தால்.. உடனே 1098 என்ற எண்ணுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இப்போது புரிகிறதா... உங்களைச் சுற்றியிருக்கும் பெண் பிள்ளைகள், எவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறார்கள் என்பது. அவர்களை நீங்கள் கொண்டாட வேண்டாம். அவர்களின் குழந்தைப் பருவக் கொண்டாட்டத்தை சிதைக்காமல் இருந்தால் போதுமானது.
நீங்கள் முன் பின் அறியாத பெண் பிள்ளைகள் உட்பட, நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் உங்களால் முடிந்த குறைந்தபட்ச பாதுகாப்பைக் கொடுத்து வாழவிடுங்கள். அதுவே பெரிய வாழ்த்தாக அமையும்!

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்