தோழமைகளுடன் ஓர் விமர்சன பூர்வமான விவாதம்-3

நான் இந்த தொடர் விவாதத்தை மேற்கொள்வதன் நோக்கம் நம்மிடையே ஏற்படும் கசப்பான விவாத அனுபங்களை தொகுப்பதோடு ஒரு சரியான விவாதமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதே.

இன்றைய ஏகாதிபத்திய காலகட்டம், இங்கே முதலாளித்துவ தனியுடைமை சிந்தனைமுறை எங்கும் நிரம்பி வழியும் பொழுது இடதுசாரி சிந்தனையாளர்கள் மத்தியில் இந்த கருத்து பரவாமல் இருக்குமா? தன்னை விமர்சித்து விட்டாலே எதிரியாக பார்ப்பதும், தன் கருத்து மட்டுமே உயர்வானது தான் மட்டுமே உயர்ந்த சிந்தனை அறிவாற்றல் உள்ளவன் இவை எல்லாம் இந்த ஏகாதிபத்திய குப்பைகள் புகுத்தியுள்ள தனிநபர்வாதமே என்பேன்.

ஆக தோழர்களே கடந்த 28 ஜீலை தோழர் சாரூவின் நினைவுநாள் ஒட்டி நான் எழுதியது மற்றும் வேறொரு தோழர் சாரூ மீது வைத்த விமர்சனம் என்ற பெயரில் குற்றசாட்டுகள் அதற்கு நான் அளித்த விளக்கம் கேள்விக்கு பதிலளிக்காமல் எழுதியவர் கடந்து சென்றது ஆகியவையுடன் சாரூவை குறைத்து மதிபிடும் இவர்களின் தேவை என்ன? என்பதனையும் பேசுவதே சிறப்பாக இருக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப் பட்டதிலிருந்து பல்வேறு போராட்டங்கள் பல்வேறு அடக்குமுறைகள் பல தியாகங்கள் கண்டிருந்தாலும் அவை ஒரு புரட்சியை சாதிக்கவல்ல கட்சியாக வளரவே இல்லை ஏனெனில் அவை லெனின் வழிகாட்டிய மூன்றாம் அகிலத்தின் முடிவுகளை புரிந்துக் கொள்வதிலும் ஏகாதிபத்திய ஏதிர்ப்பு முண்ணனி கட்டுவதிலும் தோல்வி கண்டது, அதன் பிறகு குருசேவின் வழிகாட்டுதலில் சமதான சுகவாழ்வு என்ற பாராளுமன்ற வாத புதச்சேற்றில் வீழ்ந்தது அதையையே அதன் வழி தோன்றலும் செய்த பொழுது இங்குள்ள தீமைகளை ஒழிக்க பாராளுமன்றத்தில் தீர்வில்லை புரட்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதனை அறிந்து அதற்கான பணியினை முன்னெடுத்தவர் சாரூ. அதில் அவர் மீது பல விமர்சனங்கள் உள்ளன ஆனால் இந்தியாவை ஒரே அணியில் இணைத்து மக்களின் உண்மையான நாடித்துடிப்பை அறிந்து செயல்பட்டார் என்பதில் மாற்று கருத்தேயில்லை அவர் செய்த தவறுக்கான படிப்பினைகளை நாம் இனம் கண்டு இதுவரை ஏன் முன்னேரவே முடியவில்லை? ஏனென்றால் புரட்சியானது தியாகத்தை கோருகிறது சீர்திருத்தமோ அல்லது பாராளுமன்ற வாதமோ எந்த பயமும் இழப்புமின்றி வாழவழிவகை செய்கிறது.

என்ன செய்ய மார்க்சியம் உள்ள சுரண்டல்முறைக்கு முடிவு கட்ட சொல்கிறது, நீங்களோ உள்ள அமைப்புமுறையில் எப்படியேனும் வாழ்ந்தால் போதும் என்னும் பொழுது புரட்சியை பேசுவது கூட அபத்தமாக தெரியும் தோழர்களே.

இந்திய கம்யூனிச அமைப்புகள் கடந்த காலத்தில் பல தவறுகள் செய்துள்ளது. அந்த தவறுகளை இப்போதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றன. இந்த தவறுகளை ஒவ்வொன்றாக பரிசீலித்து, அந்த தவறுகளை களைந்திட நாம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து நடைமுறையில் செயல்படுவதன் மூலமே கம்யூனிச இயக்கமானது மக்களின் செல்வாக்கை பெற்று வளரும்.

கம்யூனிச அமைப்பில் சேர்ந்துவிட்டால் அவர் உடனடியாக புனிதமானவராக மாறிவிட மாட்டார். சமுகத்தில் மக்களிடையேயுள்ள தவறான கருத்துகள், சிந்தனைமுறை, பழக்கவழக்கங்களை நீண்டகாலம் பின்பற்றி அதன் பாதிப்புகளுக்கு உள்ளாகியே இருப்பார். இந்த தீய பழக்க வழக்கங்களிலிருந்து அவர் உடனடியாக மீண்டுவருவது மிகவும் சிரமமானதேயாகும். ஆகவே கம்யூனிச அமைப்பிலுள்ளவர்கள் அனைவரும் தவறே செய்யாத உத்தமர்கள் என்று கருதுவது தவறானதாகும். கம்யூனிஸ்டுகளும் தவறு செய்வார்கள் என்ற உண்மையை நாம் எப்போதும் மறுக்கக் கூடாது.

இவ்வாறு கம்யூனிச அமைப்பில் செயல்படும் கம்யூனிஸ்டுகள் அவர்கள் தலைவர்களாகக்கூட இருக்கலாம். அவர்கள் தவறு செய்வதற்கு வாய்ப்பு தொடர்ந்து இருக்கும். ஆகவேதான் கம்யூனிஸ்டுகள் தவறு செய்யும் போது, அந்த தவறை கம்யூனிஸ்டு அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் சுட்டிக்காட்டி விமர்சிப்பதற்கு உரிமை உண்டு. கட்சித் தோழர்கள் மட்டுமல்லாமல் கட்சிக்கு வெளியே உள்ள பொதுமக்களுக்கும் அந்த உரிமை உண்டு என்றார், மாவோ. ஏனென்றால் கம்யூனிஸ்டுகள் மக்களின் சேவகர்கள். ஆகவே மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். இதற்கு மாறாக மக்களின் மீது அதிகாரம் செலுத்தும் ஆதிக்க சக்திகள் அல்ல, கம்யூனிஸ்டுகள் என்ற கருத்தை மாவோ நமக்கு தெளிவாகச் சொல்லிஉள்ளார். இந்த கருத்தை ஒவ்வொரு கம்யூனிஸ்டுகளும் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

சுயவிமர்சனம் செய்து வளர வேண்டியவர்கள், அந்த முறையைப் பின்பற்ற தவறியதால் அமைப்பில் நம்பிக்கை இன்மை வளர்ந்தது தொடர்ந்து பல பிளவுகளை சந்தித்து தற்போது சிறுசிறு குழுவாக சிதறிக்கிடக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த குழுக்களிலுள்ள கம்யூனிஸ்டுகள் சுயவிமர்சனம் செய்வதற்கு மறுப்பதுதான்.

கம்யூனிச அமைப்புகளிலுள்ள தோழர்கள், பல தவறுகளை தொடர்ந்து செய்ய வாய்ப்பள்ளதால், அவர்களது தவறுகளை தொடர்ந்து திருத்துவதற்கு  முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் தங்களது தவறுகளை திருத்திக்கொண்டே இருந்தால்தான், உண்மையில் சரியான கம்யூனிஸ்டாக தங்களை வளர்த்துக் கொள்ள முடியும். பெரும்பாலும் ஒரு கம்யூனிஸ்டு செய்யும் தவறு அவருக்கு தெரிவதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த கம்யூனிஸ்டை தொடர்ந்து கண்காணித்து வரும் பிறரால் மட்டுமே அவரது தவறுகளை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆகவே ஒரு அமைப்பிற்குள் செயல்படும் ஒரு கம்யூனிஸ்ட் செய்யும் தவறுகளை பிறர்தான் தெளிவாக சுட்டிக்காட்டுவார்கள். ஆகவே பிறரால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் எப்போதும் வரவேற்ப்பார். ஏனென்றால் பிறரால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை தான் களைந்தால் மட்டுமே அவரால் குறைகள் இல்லாத கம்யூனிஸ்டாக மாற முடியும், மேலும் உழைக்கும் மக்களுக்காக எவ்விதமான குறையும் இல்லாமல் பாடுபட முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டு தனக்காக மட்டும் பாடுபடக் கூடியவர் இல்லை. பரந்துபட்ட மக்களின் நலனுக்காகப் பாடுபடுபவர்தான் கம்யூனிஸ்டாக இருக்க முடியும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டிடம் தவறுகளும் குறைகளும் இருக்குமானால் அது உழைக்கும் மக்களையும் பாதிக்கும். ஆகவே உழைக்கும் மக்களின் நலன் கருதி ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தன்னிடமுள்ள குறைகளை பிற தோழர்கள் சுட்டிக் காட்டினால் உடனடியாக களைந்துகொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும். அதற்குத்தான் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை அமைப்பு முறையாக கம்யூனிஸ்டுகள் பின்பற்றுகிறார்கள்.

நிலவுகின்ற தனிவுடமை சமுதாயத்தில், தனிநபரின் அறிவு மற்றும் திறமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவர் அறிவு மற்றும் திறமை பெற்றவராக இருந்தால் பொருளாதாரரீதியில் செல்வத்தை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும், அவ்வாறு அறிவு, திறமை இல்லாதவரால் செல்வந்தராக ஆக முடியாது என்றும் அவர் வறுமையில் வாடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கருத்து இந்த தனிவுடமை சமூகத்தில் பரவலாக விதைக்கப்பட்டுள்ளது. இந்த சமூகத்தில் வாழ்ந்துவரும் குட்டிமுதலாளிய அறிவுஜீவிகள் இந்த கருத்துக்கு பலியாகி ஈகோ என்று சொல்லப்படும் தனிமனித அகம்பாவப் பண்பிற்கு ஆளாகிறார்கள். இவ்வாறு தனிமனித அகம்பாவப் பண்பு கொண்டவர்கள் கம்யூனிச அமைப்பிற்குள் சேர்ந்து செல்வாக்கு பெற்ற கம்யூனிஸ்டு களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் பலர், தான் சொல்வதெல்லாம் சரியானது என்றும், தான் தவறே செய்ய மாட்டோம் என்று கருதுகிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை யாராவது சுட்டிக் காட்டினால் இவர்கள் அதனை பொருட்படுத் துவதில்லை. இவர் மீது வைக்கும் விமர்சங்களுக்கு பதில் கொடுப்பதில்லை. மாறாக விமர்சனம் வைத்தவரிடமிருந்து உறவை துண்டித்துக்கொள்கிறார்கள். அமைப்பிற்குள் இவர்களுக்கு செல்வாக்கு இருக்குமானால் அதனை பயன்படுத்தி இவர் மீது விமர்சனம் வைத்தவரை தனிமைப்படுத்தி ஒழித்துக்கட்டி .விடுகிறார்கள் .

இத்தகைய அகம்பாவம் பிடித்தவர்கள் கம்யூனிஸ்டுகளின் அமைப்புக் கொள்கை யான விமர்சனம், சுயவிமர்சனம் என்ற முறையை பின்பற்ற மாட்டார்கள் என்பது நமது அனுபவமாக உள்ளது. விமர்சனம், சுயவிமர்சனம் என்ற கொள்கையை பின்பற்றுவதன் மூலம் ஒரு கம்யூனிச அமைப்பிற்குள் உள்ள தோழர்களிடையே ஒருவருக்கொருவர் நம்பிக்கை ஏற்படும். ஒரு தோழரின் மீது ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் அவர் முகம் கோணாமல் அந்த விமர்சனத்திற்கு பதில் அளித்தால் அந்த தோழரின் மீது மற்ற தோழர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும், அந்த தோழரின் மீது நம்பிக்கை வளரும். ஆகவே விமர்சனம், சுயவிமர்சன முறையை பின்பற்றுவதன் மூலம் கம்யூனிச அமைப்பின் மீதுஅணிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை அதிகரித்து அமைப்பிற்குள் ஒற்றுமை பலப்படும். ஆனால் கடந்த காலங்களில் கம்யூனிச அமைப்பிற்குள் விமர்சனம், சுயவிமர்சன முறை பின்பற்றப்படவில்லை. இதற்குத் தடையாக அமைப்பிற்குள் இருந்த குட்டிமுதலாளிய,, தான் என்ற அகம்பாவம் பிடித்த நபர்களே காரணமாகும். ஆகவே இன்றைய கம்யூனிஸ்டுகளிடம் தான் என்ற அகம்பாவப் பண்பு இருந்தால் அதனை உடனடியாக கைவிட வேண்டும். விமர்சனம், சுயவிமர்சன முறையைப் பற்றி ஆழமாகப் புரிந்துகொண்டு அதனை செயல்படுத்த வேண்டும். சில தனிநபர்கள் எவ்வளவு அறிவும் திறமையும் படைத்தவர்களாக இருந்தாலும் அந்த அறிவு, திறமையின் பலத்தைக் கொண்டு மட்டும் சமூகத்தை மாற்றிவிட முடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்களே என்ற மார்க்சிய கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட உழைக்கும் மக்களின் போராட்டங்களின் மூலம் மட்டுமே சமூகத்தை மாற்ற முடியும் என்பதை இந்த குட்டிமுதலாளித்துவ அறிவுஜீவிகள் உணர வேண்டும்.

கம்யூனிஸ்டு என்றாலே உழைக்கும் மக்களின் மீது பாசம் கொண்டு அவர்களை நேசிப்பவர், அவர்களுக்காக பாடுபடுவதே ஒரே லட்சியமாகக் கொண்டவர்கள். அதற்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் தியாகிகள் என்பது பொருளாகும். கம்யூனிஸ்டுகளிடம் இருக்கும் இத்தகைய தியாக உணர்வையே பாட்டாளி வர்க்க உணர்வு என்று கம்யூனிஸ்டுகள் வரையறை செய்கிறார்கள். ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்க வேண்டிய முதன்மையான பண்பு இந்த வர்க்க உணர்வுதான் என்பதை கம்யூனிஸ்டுகள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ரஷ்யாவிலும், சீனாவிலும் இத்தகைய பாட்டாளி வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள் அந்த நாடுகளிலுள்ள கம்யூனிஸ்டுகளில் பலர் இருந்தனர். அதனால்தான் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக உறுதியுடன் போராடி உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவினார்கள். (ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றதற்கு பல காரணங்கள் உண்டு, எனினும் இந்த கட்டுரையின் மூலம் கம்யூனிஸ்டுகளுக்கு பாட்டாளி வர்க்க உணர்வின் அவசியத்தைஉணர்த்துவதும், அதன் அடிப்படையில் தீய குணமாகிய தான் என்ற அகம்பாவத்தை கைவிட வேண்டியது அவசியம் என்பதை உணர்த்துவதும், அதன் அடிப்படையில் கம்யூனிஸ்டுகள் விமர்சனம், சுயவிமர்சன முறையைக் கடைபிடித்து தனது தவறுகளை களைவது மிகமிக அவசியம் என்பதை உணர்த்துவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.). இது வரை இலக்கு 12 கட்டுரையே.

நக்சல்பாரி அமைப்புகளை அரசுமட்டுமா அழித்தது ? இன்றுள்ள சாதிகட்சிகளின் பங்களிப்பு இல்லையோ? போராட்டத்திலே சாவதெல்லாம் நம்ம இளைஞர்கள் தலைமையிலிருந்து கொண்டு பெயர் வாங்குவது, பேட்டிக் கொடுப்பதெல்லாம் மேல்சாதி இந்துக்கள் என்று பரஸ்பர குற்றம் சுமத்தி தத்தமது சாதி இளைஞர்களுக்கு நக்சல்பாரிகள் மீது சந்தேகத்தையும்,  அவநம்பிக்கையையும் உண்டு பன்னியவர்கள் இந்த சாதி கட்சிகளின் தலைவர்கள் இல்லையோ?

நக்சல்பாரிகளுக்குப்_பயந்து எங்ககிட்ட _எந்த_வம்புதும்பும்_ இல்லாம_ இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க” இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் அப்போது கூறியிருந்தது.

“நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப் பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று அச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் அப்போது எழுதியிருந்தன. இன்றைய நிலையை பாருங்கள். நக்சல்பாரிகள் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்து போராடுபவர்களில் ஆதிக்க சாதியை சார்ந்த வாட்டாக்குடி இரணியன்கள், சீனிவாசராவுகள் போன்ற தலைவர்களும் தோழர்களும் தான் முன்ணனியில் நிற்ப்பார்கள். என்றைக்குமே அனைத்து சாதியிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, உயர்சாதி திமிர் ஒழித்து, உழைக்கும் மக்களாய் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் இழந்த உரிமைகளை பெறமுடியும் என அப்போது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதை வென்றும் காட்டினார்கள். நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தததால் அவர்கள் புரட்சியாளர்களை நம்பினார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரண்டார்கள்.

  பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரித்தார்கள். நக்சல்பாரிகளும் அவர்களை அப்போது காப்பாற்றினார்கள். இன்று பாருங்கள். நிலைமை அப்படியே தலைகீழ். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கட்சி. தருமபுரியில் மட்டுமல்ல; தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் எந்த ஊரிலும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்துவதில்லை? அந்த இடத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனுங்களும், அடையாள அரசியலை உயர்த்தி பிடிக்கும் அமைப்புகளும், பாமக போன்ற சாதிவெறி கட்சிகளும் தான் இருக்கின்றன. ஏனென்றால் எதை, எப்போது, யாரை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கு தெரியும். தொண்டு நிறுவனங்களுக்கு தெரியும். சாதிவெறி அமைக்களுக்கு தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெறுகிறார்களா உடனே அவர்களை ஆண்ட பரம்பரை பெருமை கொள்ள வை, ஒவ்வொருத்தரையும் தனக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்க வை. சண்டை மூட்டு. குடிசையை கொழுத்து, பின் கொஞ்சம் சலுகை கொடு. தேவையற்ற தத்துவங்களை, அமைப்புகளை தலையில் ஏற்றிவிடு. தேர்தல் அரசியலுக்குள் இழு. மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்.இதுதான் 1980களில் நக்சல்பாரிகள் பின்னடவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை தமிழகத்தில் நடக்கும் நடைமுறையாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகள், அவர்கள் அவர்களது எல்லைக்குள்தான் இயங்க முடியும் ஆதிக்க சாதி அமைப்புகளுக்கு மரண பயத்தை உண்டாக்காது.

மேல் உள்ளவை இலக்கு 8 இணைய இதழ் கட்டுரையே

நாளை தோழர் சாரூவின் மீதான விமர்சனத்தோடு தொடரும் தோழர்களே.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்