பொதுவுடைமைவாதிகளாகிய நம்முன் உள்ள பணிகள்- சிபி

 பொதுவுடைமைவாதிகளாகிய நம்முன் உள்ள பணிகள்

தோழர்களே மார்க்சியவாதிகளாகிய நாம் மார்க்சியம் கற்பதும் பேசுவதன் நோக்கம் என்ன? அதனை தெரிந்துதான் நாம் எல்லோரும் செயல்படுகிறோமா?

ஆக மார்க்சியத்தின் தேவை என்ன? இன்றுள்ள சமூகத்தில் காணும் எல்லா ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஏன் சுரண்டலுக்கும் இந்த சமூக அமைப்பே காரணம் என்னும் பொழுது இங்குள்ள ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரான சுரண்டல், ஒடுக்குமுறை, அடக்குமுறைக்கு தீர்வென்பது இந்த அமைப்புமுறையை மாற்றி அமைப்புதானே மார்க்சியவாதியின் வேலை.

மார்க்சியத்தை புரிந்துக் கொண்ட மார்க்சியவாதி தன் நாட்டில் நிலவும் சமூக அமைப்பை புரிந்துக் கொள்வதும் அந்த அமைப்புமுறையில் எவ்வகையான வர்க்கப் பிரிவினை உள்ளது? அதனை அரசியல் படுத்த எவ்வகையான நடைமுறையை கையாள வேண்டும் என்பதனை நமது மார்க்சிய ஆசான்களின் வழியில் நின்று செயல்படுத்த வேண்டும் அல்லவா? மார்க்சும் ஏங்கெல்ஸ்சும் மார்க்சியமானது என்னவென்பதனை மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகையும், அதன் அங்கமான மானுட சமூகத்தையும் குறித்த ஒருபொதுவான கோட்பாடாகும், அல்லது சித்தாந்தமாகும்.  இந்த சித்தாந்தத்திற்கு அடிப்படை இயக்கவியல் பொருள்முதல் வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல் வாதம் என்ற தத்துவம் ஆகும். மார்க்சிய சித்தாந்தமானது மனிதசமூகம் என்றால் என்ன? அது ஏன் மாறுகிறது? இதற்கு மேலும் என்னென்ன மாற்றங்கள் மனிதகுலத்திற்கு ஏற்படப்போகிறது என்பதை தொடர்ந்து கண்டறிவதற்கு பயன்படும் சித்தாந்தமாகும். இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அவை சில நுண்ணியவிதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன?  எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொது உண்மையை,  பொதுவான வழிகாட்டு தலையை,  பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது.  இந்த பொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்துகிறது.ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற் கான பொதுவான வழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூகமாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டி ருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து ஆய்வு செய்வதன் மூலம்மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர் களையோ,  அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக்கொள்ளக்கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ,  மதத்தலைவர் களையோ அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது, மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல் பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கிய மானபங்கு இருக்கிறது.  ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ளவேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர் வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால்,  அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.

உலக மயமாக்கலும் இன்றைய சூழலும்

உலகமயம் 1980 இல் உருவாக்கியது இது ஒரு பன்முக நிகழ்ச்சிப் போக்கு. பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் உலகமயம் ஒரு குறிப்பிட்ட திசைவழியில் செயல்படுகிறது. எல்லா வற்றையும் தீர்மானிக்கும் காரணியாக உலகமய காலத்திய பொருளாதார மாற்றங்களை விளங்குகின்றன. இது முதலாளித்துவ உலகமயம். இன்றைய ஏகாதிபத்திய உலகமயம். இது முதலாளித் துவத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம்.

உலகமயம் பற்றிய அரசியல் பொருளாதார ஆய்வை முதலாளித்துவத்தின் இயல்பு களில் ஒன்றாக அணுகி விளக்கியவர்கள் காரல்மார்க்ஸ் எங்கல்ஸ் மட்டுமே. உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேலும் மேலும் உற்பத்திதிறன் உள்ளதாக மாற்றி அதன் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றி நிர்வாக முறைகளில் மாற்றி இவற்றுடன் சமுதாயத்தின் மொத்த உறவுகளையும் மாற்றினால் ஒழிய முதலாளித்துவத்தால் வாழவே முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை பற்றி விளக்குகிறது.

நவீன உற்பத்திப் பொருள்களுக்கு வேண்டி சந்தை, சந்தையை தேடி உலகப் பயணம். விளைவு, உற்பத்தியும்,விநியோகமும் நுகர்வும் உலகெங்கும் முதலாளித்துவ தன்மையானதாக மாற்றப்பட்டு விட்டது.

செய்தித் தொடர்பு சாதனங்கள் மிகப்பரந்த அளவில் மேம்பாடு அடைந்தால் முதலாளித்துவ வர்க்கமானது எல்லா நாடுகளையும் மிகவும் பின்தங்கிய நாகரிக நாடுகளிலும் கூட நாகரிகத்துக்கு கட்டி இழுத்து வருகிறது.அதன் உற்பத்தி பண்டங்களின் மலிவான விலையில் சீனச் சுவர் போன்ற பெரும் தடை சுவர்களை தகர்த்தெறியும் பீரங்கிகள். அவை வேற்று நாட்டில் நாகரிக மக்கள் கொண்டுள்ள மிகப் பிடிவாதமாக மூலதனத்தை கூட மண்டியிட செய்கின்றன, ஏற்காவிடில் அழிவது உறுதி என்று அச்சுறுத்துகிறார்கள். எல்லா நாடுகளையும் முதலாளித்துவ பொருளுற்பத்திமுறை ற் ற்புறுத்து கிறது. அவர்கள் நாகரிகம் என்று எதை கருதுகிறற்களோ அதை அவர்களிடம் புகுத்துகிறது அதாவது தாமும் முதலாளி ஆகிவிட செய்கிறது. பிற்போக்கு சிந்தனைகளை விதைக்கிறது.

மக்கள்தொகையும் உற்பத்தி சாதனங்களும் சொத்தும் சிதறுண்டு கிடக்கும் நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கண்டு வருகிறது அது மக்களை ஓர் இடத்தில் குவித்துள்ளது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தி உள்ளது.ஒரு சிலர் கைகளில் சொத்தை குவித்துள்ளது. இதன் இயல்பான கட்டாய முடிவாக அரசியல் அதிகாரமும் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டு விட்டது (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).

இது வர்க்கப் போராட்டத்தை விதியாக்கி விடுகிறது.மூலதன குவியல் செல்வத்தை சிலரிடம் குவிப்பதும். வறுமையை பெருமளவு மக்களுக்கு பரிசாக அளிப்பதுமே ஆகும். முதலாளித்துவம் மூலதன குவியல் என்ற அடித்தளத்தையே ஆதாரமாக கொண்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான ஓர் உலகம் என்ற கற்பனைக்கு தடை ஏற்பட்ட நிலையில், உலகையே ராணுவ மிரட்டலில் வைக்கவும்,அரசியல் பொருளாதார சிந்தனைகளை இராணுவ மயமாக்கவும், பாசிசத்தை உலகமயமாக்கமும் ஏகாதிபத்தியம் தயங்கவில்லை.

சீர்திருத்தம் என்ற பெயரில் நிதி மூலதன உலகமயத்தின் ஏஜென்சிகளாக மாறிய அரசுகளும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் வளர்த்தல் போன்ற பலவும் உலகமயத்தின் முதலாளித்துவ அமைப்பு நெருக்கடியை புதிய கட்டத்திற்கு தள்ளி வருகின்றன.

என்ன செய்ய வேண்டும் நூலில் லெனின் சொன்னவை

"ஒரு செங்குத்தான, கடினமான பாதையில் ஆளுக்கு ஆள் கை கோர்த்துக் கொண்டு ஒரு நெருக்கக் கட்டுள்ள குழுவாக நாம் நடையிட்டுக் கொண்டிருக்கிறொம். எல்லா பக்கங்களிலும் பகைவர்கள் நம்மை சூழ்ந்துள்ளனர். அவர்களின் அனேக இடையறாத தாக்குதலுக்கு எதிரே நாம் முன்னேற வேண்டியுள்ளது. எடுத்துக் கொண்ட முடிவுப்படி பகைவரை எதிர்த்துப் போராடுவற்காக நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். அருகாமையில் உள்ள சதுப்பு குழியைநோக்கி பின் வாங்குவதா அல்லது செங்குத்து பாறையில் ஏறுவதா? சமரச பாதைக்கு பதிலாக போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டோ மென்று இப்பொழுதே நம்முள் சிலரே பதுங்கு குழியில் இறங்கிவிடலாம் வாருங்கள் என்று குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். நாமும் அவர்களின் மானத்தை வாங்க தொடங்கினால் பத்தாம் பசலி ஆசாமிகள் இருக்கிறார்கள். நீங்கள் விரும்பும் இடத்துக்கு போக உங்களுக்கு சுதந்திரம் உண்டு சதுப்புகுழிக்குள் கூடப் போகலாம். உண்மையை சொன்னால் சரியான உங்களுக்கு தகுதியான இடம் என்று நினைக்கிறேன் அங்கே போய் சேருவது உங்களுக்கு எல்லா உதவியையும் செய்ய நாங்கள் தயார். எங்கள் கையை மட்டும் விட்டுவிடுங்கள் இழுத்து நிறுத்த வேண்டாம், சுதந்திரம் எனும் மேன்மையான சொல்லையும் கறைப்படுத்த வேண்டாம். ஏனென்றால், நாங்கள் விரும்பும் இடத்துக்குப் போக எங்களுக்கும் சுதந்திரம் உண்டு, சதுப்புக்குழியை எதிர்த்து மட்டுமின்றிச் சதுப்புக்குழியை நோக்கி திரும்புகிறவர் களையும் எதிர்த்தும் போராடும் சுதந்திரம் எங்களுக்கு உண்டு!" (பக்கம் 16-17). இதை நாம் எவ்வளவு உள்வாங்கியிருக்கிறோம்?

இன்று மார்க்சியம் அல்லாத போக்கு

இன்று மார்க்சியலெனினிய அமைப்புகள் மிகவும் பின்தங்கி பிளவுபட்டுக்கிடக்கும் நேரத்தில் பின்நவீனதுவாதிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உருவாக்கிய சாதிய அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக் கின்றன அவைகள் மக்களை பிளவுபடுத்தி மக்களின் வளங்களை சூறையாடத் ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றது. பின்நவீனத் துவவாதிகள் முன்னெடுக்கப்பட்ட அடையாளஅரசியல் ஆண்டபரம்பரை அரசியலையும் புதிய இனவாத கட்சிகளின் பிரசவித்து மக்களை மேலும் மேலும் கூறு போட்டுக் கொண்டிருக் கின்றது இவர்கள் எல்லோரும் தவறாமல் கம்யூனிச எதிர்ப்பை கொள்கையாகக் கொண்டு கடமையாற்றி வருகிறார்கள். மறுபுறம் புரட்சி வேசம் போட்டும் ஏமாற்ற தயங்குவதில்லை.

அரசுசாரா அமைப்புகள் சமூக அரசியல் விஞ்ஞான மத மற்றும் சுற்றுச்சூழல் விவகாரங்களில் சர்வதேச சக்திகளாக செயல்படுகின்றன.இவ்வாறான அரசு சாரா அமைப்புகள் மக்கள் அபிப்பிராயங்களை எண்ணங்களையும் மாற்றியமைப்பதில் மிகப் பெரும் பாத்திரத்தை வகிக்கின்றன என்று கூறும் கில்ஸ் (கோ.கேசவன்கட்டுரையிலிருந்து) கூறிகிறார்.மேலும்  சந்தைப்படுத்துவதற்கான சூழல் தன்னார்வ நிறுவனங்கள் தோன்றுகின்றன என்கிறார் .அதனைமக்களின் மொழியில் சொன்னால் உலகமயமாதலில் மூலதன  சுரண்டலுக்கான சூழலில் தோற்றுவிக்கின்றன எனலாம்.

தமிழ்நாடு மற்றும் இந்தியாவுக்கு மட்டுமல்ல ஈழத்திலே இவர்கள் செய்த கை காரியங்கள் சபா நாவலன்(inioru.com)கூறுவதாவது மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்துக் கொண்டு தன்னார்வ உதவி நிறுவனங்கள் அல்லது அரசுசாரா அமைப்புகள் மூன்றாம் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றன.வறிய நாடுகளின் வளர்ச்சியை தடுத்துநாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட NGOகள் அதன் செயல்பாடுகளும் மொத்த மனித குலத்தையும் பயங்கர அழிவிற்கு எடுத்துச் செல்கின்றன.

ஆக பொதுவுடைமைவாதியானவன் புரிந்துக் கொள்ள வேண்டியது இன்று மொதுவுடைமை கண்ணோட்டமானது பல்வேறு தப்பெண்ணங் களாலும் நஞ்சூட்டப்பட்டுள்ளது அதனை புரிந்து செயலாற்றும்திறமைவேண்டும்ஆக அனைத்து தரவுகள் மீதும் விமர்சனப் பூர்வமான அணுகுமுறையோடு, கடினமான, பெரிய, முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை செய்யாமல், கம்யூனிசம் பற்றிய ஆயத்த பதில்களை ஒரு கம்யூனிஸ்ட் எதிர்பார்பாரேயானால் அவர் மோசமான கம்யூனிஸ்ட்டாகத்தான் இருப்பார்

கம்யூனிசம் என்பது மனனம் செய்து அப்படியே ஏற்றுக்கொள்வதல்ல. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சி மற்றும் நவீன கல்வி மூலம் உங்களுக்குள்ளாகவே எழுந்து உருவாகும் தவிர்க்க இயலாத முடிவாகும்என்று ரஷ்ய இளைஞர்களின் மூன்றாவது மாநாட்டில் (1920)லெனின் குறிப்பிட்டுள்ளார். இன்றைய உலகமய தாராளமய கொள்கையை தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது இதற்கு எந்த சிறு தடங்கலுமின்றி நாடு முழுவதும் அந்நிய மூலதனம் வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது.இவற்றை முறியடிக்க ஒரு தலைமை தாங்கிட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது எதிர்கொள்ளும் திறன் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியோ இங்கே இல்லை என்பது உண்மை அல்லவா?

இங்குள்ள ஒவ்வொரு கம்யூனிஸ்ட் குழுக்களும் பாட்டாளி வர்க்கத்தின் உழைக்கும் மக்களின் வெவ்வேறு கொள்கை முழக்கத்தை முன்வைத்து வழிநடத்தி வருகின்றன இது பாட்டாளி வர்க்கத்தின் பலவீனத்தையும் இதன் எதிர்மறையாக பிற்போக்காளர்களுக்கு பலத்தையும் அளிக்கக்கூடியது அன்றோ?

ஒரு தத்துவத்திற்க்கு இரண்டு பயன்கள் உண்டு, இயற்கையையும் சமூகத்தையும் விளங்கி கொள்வதும் அவற்றை மாற்றுவதும் என்ற இரண்டு பயன்கள் உண்டு. இவை இரண்டும் ஒன்றொடோன்று தொடர்பு கொண்டதாகும். விளங்கி கொள்ளும் நெறிமுறைகளும் அவற்றின் அடிப்படையில் பெற்ற கருத்துகளும் அக்குறிப்பிட்ட தத்துவத்தின் முறையியலாக  அமைவதுண்டு இம்முறையில் உள்ள சிற்சில கூறுகள் மாற்றம் பெற்று காலப்போக்கில் செழுமையடையும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் ஒரு முறையியலுக்குரிய அடிப்படை அம்சங்களே மாற்றத்துக்கு உள்ளாகிவிடின் மாறிய அம்சங்கள் பழைய முறையியலுக்கு உரிதாக இராது. அவ்வாறு அடிப்படையில் மாறிய அம்சங்கள் புதிய தத்துவத்திற்குரிய முறையியலாக அமையும்; பழைய தத்துவத்தின் நீட்சியாக இருக்காது. இது அனைத்துத் தத்துவத்துக்கும் பொறுந்தும். இங்கு சிலர் மார்க்சியதிற்கு தவறான மதிபுரை எழுதிக் கொண்டுள்ளனர் அவர்களை புரிந்துக் கொள்க.

"இதுவரை பூசாரிகளும் மதத்தலைவர் களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை காட்டிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயே பொன்னுலகம் அடைய வைக்கும்..… வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்க படுவது அல்ல. உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான் நிர்ணயிக்கப்படுகிறது" (மார்க்ஸ் 1861) போராட்ட வரலாறு: மார்க்ஸ் (1818 - 83).

மார்க்ஸ் நடைமுறை வாழ்வில் பயனளிக்காத ஹெகலின்தத்துவத்தயும் எதிர்த்தார். ஆனால் ஹெகலின் அடிப்படை சித்தாந்தமான "சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய தேடலின் உருவாக்கம்" என்பதை அவர் ஒப்புக்கொண்டார். 

ஒடுக்குவோனுகும் ஒடுக்கப்படுபவனும்  இடையே நடைபெறும்  யுத்ததை அவர் "வர்க்க போராட்டம்" என்றார். அவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வாழ முடியாது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். ஒடுக்கப்படுவோர் தனது விதியை போராட்டம் மூலம் மாற்றி அமைக்க முடியும் என அவர் தனது தத்துவத்தில் நிறுவினார்.முன்னெறியஐரோப்பிய சமூகத்தில் ரோமானியா காலத்து அடிமைகளையும் தற்போது உள்ள பஞ்சாலை தொழிலாளிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை என்றார். ஆகையால் இந்த அடிமை சங்கிலியாக உள்ள அரசமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்றும் பொதுவுடமை சமுகத்தில் மட்டுமே ஏற்ற தாழ்வு இல்லா சாத்தியம் என்றார். அவரின் தத்துவத்தை தூக்கிபிடித்து ஒடுக்கப்பட்ட வர்க்கம் போராடி முதல் உலகப்போரில் ரஷ்யாவும் இரண்டாவது உலகப் போரில் சீன சோசலிச நாடானது 

சோவியத்தின் தகர்வும் அதன் பின் உலக நாடுகளில் முதலாளித்துவம்(ஏகதியபத்தியம்) சோசலிசத்தின் மீதான பொய்யான தோற்றங்களோடு உலகெங்கிலும் பரப்பினர் என்றால் திருதல்வாதிகளான குருசேவ் & கம்பெனி மார்க்சியத்தின் முக்கிய அடிப்படையான கோட்பாடுகளில் திருத்தம் கொணர்ந்தனர் அவை சமாதானம் சக வாழ்வு என்று வர்க்க போராட்டத்தை கைவிட்டு சரணாகதியயை போதித்தனர். அவையே பல்வேறு நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கோட்பாடுகளாக மாறி வெற்று பாராளுமன்ற போராட்டத்தோடு தங்களின் போராட்ட எல்லையை சுருக்கிக் கொண்டனர் உழைக்கும் மக்களை நட்டாற்றில் விட்டதோடு நவதாராள கொள்கையான ஏகாதிபத்திய கொள்கை கேற்ப வளைந்து நெழிந்து செல்லும்படி தனது தொழிற்சங்களுக்கு போதிகின்றனர்.

வர்க்க அரசியலை கைவிட்டு ஏகாதிபத்தியம் வலை விரித்துள்ள எல்லா சதிகளையும் புரிந்தோ புரியமலோ தன்னகத்தே கொணர்ந்து கட்சியை சீரழித்துக் கொண்டுள்ளனர்.

இன்று கட்சிக்குள் மார்க்சியத்தை விட மார்க்சியம் அல்லாத போக்கு தலை தூக்கும் பொழுது அவை தன்னை இடதுசாரி பிரிவு என்று சொல்லிக் கொள்ள தகுதியுள்ளதா பரிசீலிக்க வேண்டும்.

வர்க்க சமுகம் உள்ளவரை வர்க்கபோர் தொடரவே செய்யும். மக்களை வர்க்கமாக அணி சேர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது அது போலவே எதிருக்கு எதிரான போரில் ஒன்று பட்ட பாட்டாளி வர்க்கம் ஓரணியில் திரள வேண்டுமல்லவா?

நமது ஆசான்கள் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்என்றனர்.  கம்யூனிஸ்டாகிய நாம் ஒன்று சேர்ந்து இங்குள்ள எல்லா ஒடுக்குமுறைக்கும் முடிவு கட்ட வேண்டாமா தோழர்களே????.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்