அரசும் புரட்சியும். 1848 - 51 ஆம் ஆண்டுகளின் அனுபவம். அரசு பற்றிய மார்க்சிய போதனையும் அதனை பின்பற்ற வேண்டியஅவசியமும் பாகம் 1 ன் தொடர்ச்சி. பாகம் – 2. தேன்மொழி
1. புரட்சியிலிருந்து பெறப்பட்ட முடிவுகளின் தொகுப்புரை:-
நாம் பரிசீலிக்கும் அரசு எனும் பொருள் குறித்து மார்க்ஸ் 1848 – 51 ஆம் ஆண்டுகளின் புரட்சியிலிருந்து தாம் வந்தடைந்த முடிவுகளை லுயீ போனப்பார்ட்டின் புரூமேர் பதினெட்டு என்ற நூலில் பின்வருமாறு தொகுத்துரைக்கிறார்:-
‘’........ ஆனால் புரட்சி முற்றிலும் முறைப்படி, யாவற்றையும் செய்கிறது. கழித்தொழிக்கப்பட வேண்டியவற்றை எரித்துச் சாம்பலாக்கும் நெருப்புக் கட்டத்திலேதான் இன்னமும் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. மறை தவறாது அது தனது பணியைச் செவ்வனே செய்கிறது. தனது தயாரிப்புப் பணியில் ஒரு பாதியை 1851 டிசம்பர் 2 ஆம் நாளுக்குள் (லுயீ போனாப்பார்ட் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்திய நாள்) செய்து முடித்துவிட்டது. இப்பொழுது மற்றொரு பாதியைச் செய்து முடித்துக்கொண்டு இருக்கிறது. முதலில் அது நாடாளுமன்ற ஆட்சி முறையைச் செம்மை செய்த்து. – இதனை வீழ்த்திடுவதற்காக, தற்போது அது இதில் சித்தி பெற்றுவிட்டதனால், நிர்வாக ஆட்சி முறையைச் செம்மை செய்து வருகிறது; கலப்பற்ற இதன் தூய வடிவுக்கு இதைத் தேய்த்துக் குறுக்கி, தனிமைப்படுத்தி, இதைத் தனக்கு எதிரான ஒரே பகையாய் அமைத்து வருகிறது – அழித்தொழித்திடு வதற்கான சக்திகள் அனைத்தையும் இதற்கு விரோதமாய் ஒன்றுகுவியச் செய்ய வேண்டும் என்பதற்காக (அழுத்தம் எம்முடையது.) புரட்சி தனது பூர்வாங்கப் பணியின் இந்த இரண்டாவது பாதியைச் செய்து முடித்ததும், ஐரோப்பா அதன் இருக்கையைவிட்டுத் துள்ளியெழுந்து, முழக்கமிடுமே!
‘’இந்த நிர்வாக ஆட்சியமைப்பு பிரமாண்டமான அதிகாரவர்க்க, இராணுவ அமைப்பைப் கொண்டது, சிக்கல் மிக்க செயற்கையான அரசுப் பொறியமைவுடன் கூடியது, ஐம்பது லட்சம் எண்ணிக்கை கொண்ட ஏராளமான அதிகாரிகளையும் மற்றும் ஐம்பது லட்சம் ஆட்களுடைய சேனையையும் பெற்றிருப்பது, இந்த மிகக் கொடிய புல்லுருவி அமைப்பு – பிரெஞ்சு சமுதாயத்தின் உடல் பூராவும் படர்ந்து வலை போல இறுக்கி சர்வாங்கத்தையும் நெரித்துத் திணறடிக்கும் இவ்வமைப்பு – எதேச்சிகார முடியரசு காலத்தில், பிரபுத்துவ அமைப்பு சிதைந்து வந்த காலத்தில் உதித்தது. பிரபுத்துவ அமைப்பின் அழிவைத் துரிதப்படுத்த உதவியது.’’
முதலாவது பிரெஞ்சுப் புரட்சி மத்தியத்துவத்தை வளரச் செய்தது; ‘’அதே போதில் அரசாங்க அதிகாரத்தின் வீச்சையும், அதன் பரிவாரங்களையும், கையாட்களின் எண்ணிக்கையையும் அதிகமாக்கிற்று. இந்த அரசுப் பொறியமைவு நெப்போலியனால் பூரண நிறைவுடயதாக ஆக்கப்பட்டது.’’ மரபுவழி முடியரசும் ஜூலை முடியரசும் ‘’ வேலைப் பிரிவினையை அதிகமாக்கியதற்கு மேல் புதிதாய் ஒன்றும் செய்யவில்லை.....
‘’........ இறுதியில் நாடாளுமன்றக் குடியரசானது புரட்சிக்கு எதிரான தனது போராட்டத்தில், அடக்குமுறை நடவடிக்கைகளுடன் கூடவே அரசாங்க அதிகாரத்தின் சாதனங்களையும் அதன் மத்தியத்துவத்தையும் வலுவாக்கிச் செல்ல வேண்டியதாயிற்று. எல்லாப் புரட்சிகளும் இந்தப் பொறியமைவைத் தகர்ப்பதற்குப் பதிலாய் மேலும் செம்மையாக்கியே வந்தன. (அழுத்தம் எம்முடையது) ‘’ஆதிக்கத்துக்காக ஒன்றன் பின் ஒன்றாய்ப் போராடிய கட்சிகள் அரசெனும் இந்தப் பிரமாண்டக் கோட்டையைக் கைப்பற்றி வைத்துக் கொள்வதே வெற்றியாளனுக்குக் கிடைக்கும் பிரதானமான சன்மானமென்று கருதின.’’ (லுயீ போனப்பார்ட்டின் புரூமேர் பதினெட்டு, பக்கங்கள் 98 – 99, நான்காம் பதிப்பு, ஹாம்பர்க், 1907).
மார்க்சியமானது சிறப்புக்குரிய இந்த வாசகத்தில், கம்யூனிஸ்டு அறிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரியதொரு முன்னேற்ற அடி எடுத்து வைக்கிறது. கம்யூனிஸ்டு அறிக்கையில் இன்னமும் அரசு மிகப் பெருமளவுக்குக் கருத்தியலான முறையிலேயேதான்,
மிகவும் பொதுப்படையான தொடர்களிலும் வாக்கியங்களிலும்தான் பரிசீலனைக்கு எழுப்பப்படுகிறது. மேலே தரப்பட்ட வாசகத்தில் இப்பிரச்சனை ஸ்தூலமான முறையில் பரிசீலிக்கப்படுகிறது; மிகமிகத் துல்லியமான, திட்டவட்டமான, நடைமுறை சார்ந்த, கண்கூடான முடிவு பெறப்படுகிறது. முந்தையப் புரட்சிகள் எல்லாம் அரசுப் பொறியமைவைச் செம்மையே செய்தது, ஆனால் இந்தப் பொறியமைவு தகர்த்து நொறுக்கப்பட்டாக வேண்டும்.
இம்முடிவுதான் அரசு பற்றிய மார்க்சிய போதனையில் தலையாயதும் அடிப்படையானது மான அம்சம். இந்த அடிப்படை அம்சத்தைத்தான் ஆதிக்கத்திலுள்ள அதிகாரப் பூர்வமான சமூக – ஜனநாயகக் கட்சிகள் அறவே புறக்கணிக்கின்றன; மேலும் இரண்டாவது அகிலத்தின் பிரபல தத்துவவாதியான கார்ல் காவுத்ஸ்கி (பிற்பாடு நாம் காணப்போவது போல) திரித்துப் புரட்டுகிறார்.
கம்யூனிஸ்டு அறிக்கை வரலாற்றைப் பொதுப்படச் சுருக்கமாகத் தொகுத்துரைக்கிறது. இந்தத் தொகுப்புரை, அரசை வர்க்க ஆதிக்கத்துக்கான உறுப்பாகக் கருத வேண்டும் என்பதை நமக்கு வற்புறுத்துகிறது. பாட்டாளி வர்க்கம் முதலில் அரசியல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமல், அரசியல் ஆதிக்கத்தைப் பெறாமல், அரசை ‘’ஆளும் வர்க்கமாய் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கமாய்’’ மாற்றாமல், முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்த முடியாது; இந்தப் பாட்டாளி வர்க்க அரசு அதன் வெற்றியை அடுத்து உடனடியாய் உலர்ந்து உதிரத் தொடங்கிவிடும், ஏனெனில் வர்க்கப் பகைமைகள் இல்லாத ஒரு சமுதாயத்தில் அரசு தேவையில்லை, இருக்கவும் முடியாது என்கிற தவிர்க்க முடியாத முடிவுக்கு அது நம்மை இட்டுச் செல்கிறது. முதலாளித்துவ அரசு நீங்கி அதனிடத்தில் பாட்டாளி வர்க்க அரசு தோன்றுவது வரலாற்று வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் எப்படி நடந்தேறும் என்ற பிரச்சனை எழுப்பப்படவில்லை.
இந்தப் பிரச்சனையைத்தான் மார்க்ஸ் 1852 இல் எழுப்பி அதற்குப் பதில் அளிக்கிறார். தமது இயக்கவியல்பொருள்முதல்வாதத் தத்துவவியலுக்கு ஏற்ப மார்க்ஸ் 1848 லிருந்து 1852 வரையிலான மாபெரும் புரட்சி ஆண்டுகளின் வரலாற்று ரீதியான அனுபவத்தைத் தமதுஅடிப்படையாகக் கொள்கிறார்.மற்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் போலவே இங்கும் அவருடைய போதனை அனுபவத்தைத் தொகுத்துரைப்பதாகவே அமைகிறது;ஆழ்ந்த தத்துவவியல் உலகக் கண்ணோட்டத்திலும் வரலாறு பற்றிய செழுமிய ஞானத்தாலும் இது ஒளி ஊட்டப்பட்டிருக்கிறது.
அரசு பற்றிய பிரச்சனை தனிப்பட்டத் தெளிவாய் எழுப்பப்படுகிறது; முதலாளித்துவ அரசு, முதலாளித்துவ வர்க்கத்தின் ஆட்சிக்குத் தேவையான இந்த அரசுப் பொறியமைவு, வரலாற்று வழியில் உருவானது எப்படி? முதலாளித்துவப் புரட்சிகளின் போதும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய சுயேச்சையான செயல்களின் முன்னாலும் அதில் ஏற்படும் மாறுதல்களும் அதன் பரிணாம்மும் என்ன? இந்த அரசுப் பொறியமைவு சம்பந்தமாய்ப் பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய பணிகள் யாவை?
முதலாளித்துவ சமுதாயத்துக்கே உரித்தான மத்தியத்துவ அரசு அதிகாரம் வரம்பில்லா முடியாட்சியின் வீழ்ச்சிக் காலத்தில் தோன்றியதாகும். அதிகார வர்க்கமும் நிரந்தரச் சேனையும் இந்த அரசுப் பொறியமைவின் இன்றியமையாத இரு அங்கங்கள். முதலாளித்துவ வர்க்கம் இவ்விரு அங்கங்களுடன் ஆயிரமாயிரம் தொடர்புகளால் இணைக்கப்பட்டிருப்பதை மார்க்சும் எங்கெல்சும் தமது நூல்களில் திரும்பத் திரும்பத் தெளிவுபடுத்துகின்றனர். ஒவ்வொரு தொழிலாளியின் அனுபவமும் இந்த இணைப்பினை தெட்டத் தெளிவாகவும் எடுப்பாகவும் நிருபித்துக் காட்டுகிறது.தொழிலாளி வர்க்கம் கொடுமையான சொந்த அனுபவத்தின் வாயிலாய் இந்த இணைப்பினைக் கண்டறியத் தெரிந்துகொள்கிறது.எனவேதான் அது இந்தஇணைப்பின் தவிர்க்க இயலாத் தன்மையைப் பற்றிய கோட்பாட்டை அவ்வளவு சுலபமாய்ச் சடுதியில் புரிந்துகொள்கிறது, அவ்வளவு உறுதியாய்க் கற்றறிந்து கொள்கிறது. ஆனால் குட்டிமுதலாளித்துவ ஜனநாயகவாதிகள் அறியாமையின் காரணமாகவோ அலட்சியம் காரணமாகவோ இதனை மறுக்கின்றனர்; அல்லது இன்னுங்கூட அதிக அலட்சியமாய் இதனை ‘’பொதுப்படையாய்’’ ஒத்துக்கொண்டு அதேபோதில் உரிய நடைமுறை முடிவுகளைச் செய்யத் தவறி விடுகிறார்கள்.
அதிகாரவர்க்கமும் நிரந்தரச் சேனையும் முதலாளித் துவச் சமுதாயத்தின் உடலில் புல்லுரிவாயாய் அமைந்தவை – இந்தச் சமுதாயத்தைப் பிளந்திடும் உட்பகைமைகளால் தோற்றுவிக்கப்பட்ட புல்லுரிவியாய் அமைந்தவை. இந்தப் புல்லுருவி இச்சமுதாயத்தின் சர்வாங்கத்தையும் ‘’நெரித்துத் திணறடிக்கிறது’’ ஒரு புல்லுரிவியாய் அமைந்ததே அரசென்னும் கருத்து அராஜகவாத்த்துக்கு மட்டுமே உரிய ஒரு தனிக் குணத்தைக் குறிப்பதாகுமென்று அதிகாரப் பூர்வமான சமூக – ஜனநாயத்தில் தற்பது கோலோச்சி வரும் காவுத்ஸ்கிவாதச் சந்தர்ப்பவாதம் கருதுகிறது. மார்க்சியத்தை இவ்வாறு திரித்துப் புரட்டுவது, ‘’தாயகப் பாதுகாப்பு’’ எனும் கருத்தைக் கையாண்டு ஏகாதிபத்திய யுத்தம் நியாயமென நிருபித்து,
அதைச் சிங்காரித்து மினுக்கச் செய்திடும், கண்டும் கேட்டுமிராத அவக்கேடாய் சோசலிசத்தை இழிவு படுத்தியுள்ள இந்த அற்பர்களுக்கு மிகவும் ஆதாயமாயிருப்பது கூறாமலே விளங்கினாலும், சந்தேகத்துக்கு இடமின்றி இது ஒரு புரட்டே ஆகும்.
பிரபுத்துவத்தின் வீழ்ச்சிக்குப் பிற்பாடு ஐரோப்பா கண்டிருக்கும் எண்ணிலடங்கா முதலாளித்துவப் புரட்சிகள் யாவற்றின் போதும் அதிகாரவர்க்க இராணுவ இயந்திரம் தொடர்ந்து வளர்ச்சியுற்று செம்மையாக் கப்பட்டு வழுவடைந்தே வந்துள்ளது. குறிப்பாக. குட்டிமுதலாளித்துவப் பகுதியோர் பெருமளவுக்கு இந்த அமைப்பு மூலம்தான் பெருமுதலாளிகளின் பக்கத்துக்குக் கவரப்பட்டு அவர்களுக்குக் கீழ்படியலாயினர்.
விவசாயிகள், சிறு கைவினைஞர்கள், வணிகர்கள் முதலானோரின் மேல் மட்டப் பகுதியோருக்கு இவ்வமைப்பு ஒப்பளவில் வசதியான, அமைதிவாய்ந்த கவுரவமான உத்தியோகங்கள் அளித்தது, அவர்களை மக்களுக்கு மேலானோராய் உயர்த்தி வைக்கிறது. 1917 பிப்ரவரி 27க்குப் பிறகு வந்த ஆறு மாதங்களில் ரஷ்யாவில் நடைபெற்றதை கவனியுங்கள் (குறிப்பு:- லெனின் இங்கு குறிப்பிடுவது ரஷ்யாவில் 1917 பிப்ரவரி 27 இல் (மார்ச் - 12 இல்) நடைபெற்ற முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி. இப்புரட்சியின் விளைவாய் எதேச்சதிகாரம் வீழ்த்தப்பட்டு முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது) முன்பெல்லாம் முன்னுரிமையாய்க் கறுப்பு நூற்றுவருக்கே (குறிப்பு:- கறுப்பு நூற்றுவர் - புரட்சி இயக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ஜாரிஸ்டுப் போலீஸ் நிறுவிய முடியரசுவாதக் கும்பல்கள். இவர்கள் புரட்சியாளர்களைக் கொலை செய்தனர். முற்போக்கான அறிவுத்துறையினரைத் தாக்கினர். யூதர்களுக்கு எதிரான வன்முறை நடத்தினர்.) அளிக்கப்பட்டு வந்த அரசாங்கப் பதவிகள் இப்பொழுது காடேட்டுகளுக்கும் (அரசியல் சட்ட ஜனநாயகக் கட்சி (காடேட்டுகள்) - ரஷ்ய மிதவாத முடியரசுவாத முதலாளித்துவ வர்க்கத்தினரின் முதன்மையான கட்சியாக இருந்தது. இக்கட்சி 1905 இல் நிறுவப்பட்டது. முதலாளித்துவ வர்க்கத்தினர், நிலப்பிரபுக்கள், முதலாளித்துவ அறிவுத்துறையினர் ஆகியோர் இதில் சேர்ந்திருந்தனர். காடேட்டுகள் சட்டமுறை முடியரசை கோருவதற்கு மேல் செல்லவில்லை. முதலாவது உலகப் போரின் போது இவர்கள், ஜார் அரசாங்கத்தின் நாடுபிடிக்கும் கொள்கையை ஆதரித்தார்கள். 1917 பிப்ரவரியில் நடந்த முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியின் போது காடேட்டுகள் முடியரசை காப்பாற்ற முயன்றனர்.
முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தில் தலைமைப் பதவிகள் வகித்த இவர்கள் மக்களுக்கு விரோதமான எதிர்ப்புரட்சிகரக் கொள்கையை கடைபிடித்தார்கள்) மென்ஷ்விக்குகளுக்கும் சோசலிஸ்டுப்– புரட்சியாளர் களுக்குமுரிய சன்மானங்களாக ஆகிவிட்டன. உண்மையில் யாருக்கும் எந்த முக்கிய சீர்திருத்தம் கொண்டு வருவதிலும் நாட்டமில்லை. சீர்திருத்தங்களை‘’ அரசியல் நிர்ணயச் சபை கூடும்வரை’’ ஒத்திபோடவும், அரசியல் நிர்ணயச் சபை கூட்டப்படுவதை யுத்தம் முடியும் வரை தொடர்ந்து ஒத்திப்போட்டுச் செல்லவும்தான் எல்லா வழிகளிலும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. (குறிப்பு:- 1917 மார்ச் 2 (15) ல் வெளியிடப்பட்ட அறிக்கையில் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கம் அரசியல் நிர்ணயச் சபையைக்கூட்டுவதாக அறிவித்தது. அதற்கான தேர்தல்கள் 1917 செப்டம்பர் 17 (30) இல் நடைபெறுமெனக் குறிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தேர்தல் நவம்பர் 12 (25) வரை ஒத்திபோடப்பட்டது. சோவியத்து அரசாங்கம் அரசியல் நிர்ணயச் சபையை 1918 ஜனவரி 5 (18) இல் பெத்ரொகிராத்தில் கூட்டியது. அக்டோபர் சோசலிசப் புரட்சிக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாக்காளர் பட்டியல்களைக் கொண்டே இச்சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டன. சமாதானம், நிலம், ஆட்சி அதிகாரத்தை சோவியத்துகளுக்கு மாற்றுதல் ஆகியவைகள் குறித்து சோவியத்துகளின் இரண்டாவது காங்கிரஸ் நிறைவேற்றிய சட்டங்களை இந்த அரசியல் நிர்ணயச் சபை அங்கீகரிக்க மறுத்த பின், அனைத்து ரஷ்யாவின் மத்திய செயற்குழு ஏற்ற தீர்மானத்தின்படி இது கலைக்கப்பட்டது) ஆனால் சன்மானங்களைப் பகிர்ந்து கொள்வதில், அமைச்சர்கள், துணையமைச்சர்கள், கவர்னர் – ஜெனரல்கள் போன்ற பசையுள்ள மிகப் பல பதவிகள் பெறுவதில் தாமதம் ஏற்படவில்லை. அரசியல் நிர்ணயச் சபைக்காக காத்திருக்க வேண்டி வரவில்லை. ‘’சன்மானங்களைப்’’ பங்கீடும் மறுபங்கீடும் செய்து கொள்வதானது மேல் மட்டங்களிலும் கீழ் மட்டங்களிலும், நாடெங்கும், மத்திய அரசாங்கத்திலும் ஸ்தல அலுவலங்களிலும் நடைபெற்றுள்ளது. அரசாங்கம் நிறுவுவதில் பல்வேறு கூட்டுகள் சேர்ந்து ஆடப்பட்டுள்ள நாடகம் சாராம்சத்தில் இந்தப் பங்கீடும் மறுபங்கீடும் நடந்தேறுவதன் வெளியீடே ஆகும். 1917 பிப்ரவரி 27க்கும் ஆகஸ்டு 27க்கும் இடைப்பட்ட ஆறு மாதங்களில் நடைபெற்றுள்ளதைச் சர்ச்சைக்கு இடமின்றிப் புறநோக்குடன் சுருக்கமாய் இவ்வாறு கூறிவிடலாம்; சீர்திருத்தங்கள் ஒத்திப்போடப்பட்டன, அரசாங்க உத்தியோகங்களின் வினியோகம் முடிக்கப்பட்டது, வினியோகத்தின் போது நிகழ்ந்த ‘’தவறுகள்’’ ஒருசில மறு வினியோகங்களின் மூலம் சரிசெய்யப்பட்டன.
ஆனால் அதிகாரவர்க்க இயந்திரம் பல்வேறு முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவக் கட்சிகளுக்கு இடையே (ரஷ்ய உதாரணத்தில் காடேட்டுகள், சோசலிஸ்டு – புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் ஆகியோரிடையே) எவ்வளவுக்கு எவ்வளவு ‘’மறுபங்கீடு’’செய்துகொள்ளப்படுகிறதோ, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் அவற்றின் தலைமையிலுள்ள பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவ சமுதாயம் அனைத்துக்கும் தமக்குள்ள இணக்கம் காண முடியாத பகைமையை அவ்வளவுக்கு அவ்வளவு துல்லியமாய் உணர்ந்து கொள்கின்றன.
ஆகவே எல்லா முதலாளித்துவக் கட்சிகளும், மிகவும் ஜனநாயகமான, ‘’புரட்சிகர – ஜனநாயகமான’’ கட்சிகளுங்கூட, புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து அடக்குமுறைநடவடிக்கைகளைக் கடுமையாக்க வேண்டியதாகிறது, பலவந்தம் செய்வதற்கான இயந்திரத்தை, அதாவது அரசுப் பொறியமைவைப் பலப்படுத்த வேண்டியதாகிறது.
நிகழ்ச்சிகளின் இந்தப் போக்கு புரட்சியை அரசு அதிகாரத்துக்கு விரோதமாக ‘’அழித்தொழித்திடு வதற்கான சக்திகள் அனைத்தையும் ஒன்றுகுவியச் செய்து கொள்ளும்படி’’ நிர்பந்தம் செய்கிறது; அரசுப் பொறியமைவை மேம்பாடு செய்வதை அல்ல, அதனைத் தகர்த்து நொறுக்குவதையே, அழித்துவிடுவதையே தனது குறிக்கோளாய்க் கொள்ளும்படி நிர்பந்தம் செய்கிறது.
இந்த விவகாரம் இம்முறையில் எடுத்துரைக்கப் படுவதற்கு வழிகோலியது. 1848 – 51 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நிகழ்ச்சியானது எதார்த்த வளர்ச்சிப் போக்கே அன்றி,இவ்வாண்டுகளில் கிடைத்த நடைமுறை அனுபவமே அன்றி, தர்க்கவாத முறையிலான காரணகாரிய ஆய்வு அல்ல. எவ்வளவு கண்டிப்பாய் மார்க்ஸ் வரலாற்று அனுபவமெனும் உறுதி வாய்ந்த அடிப்படையிலே நின்றார் என்பதை, தகர்த்து நொறுக்கப்படும் அரசுப்பொறியமைவுக்குப் பதிலாய்த் தோன்றப் போவது எது என்னும் பிரச்சனையை 1952 இல் திட்டவட்டமான முறையில் இன்னும் அவர் எழுப்பாமல் இருந்ததில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இந்தப் பிரச்சனையை எழுப்பிப் பதில் காண்பதற்கு வேண்டிய உண்மைவிவரங்களை இன்னமும் அனுபவம் அப்பொழுது அளித்தாகவில்லை. பிற்பாடுதான், 1871 இல் தான் வரலாறு இப்பிரச்சனையை நிகழ்ச்சி நிரலுக்குக் கொண்டு வந்தது. 1852 இல்வரலாற்று விஞ்ஞானப் பார்வையின் பிழையற்ற துல்லியத்துடன் நிலைநாட்ட முடிந்ததெல்லாம், பாட்டாளி வர்க்கப் புரட்சியானது ‘’அழித்தொழித்திடுவதற்கான சக்திகள் அனைத்தையும்’’ அரசு அதிகாரத்தை எதிர்த்து ‘’ஒன்றுகுவியச் செய்யும்’’ பணியினை, அரசுப்பொறியமைவை ‘’நொறுக்கும்’’ பணியினை நெருங்கிவந்துவிட்டது என்பதுதான்.
இங்கே ஒரு கேள்வி எழலாம்; மார்க்ஸ் கண்ட அனுபவத்தையும் அவர் கண்ணுற்றவற்றையும்அவர் வந்தடைந்த முடிவுகளையும் பொதுப்படக் கொள்வது சரியா? 1848 க்கும் 1851 க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளிலான பிரெஞ்சு வரலாற்றைக் காட்டிலும் விரிவான ஓர் அரங்கில் அவற்றைக் கையாளுவது சரியா? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க முற்படுமுன், நாம் எங்கெல்ஸ் கூறிய ஒரு குறிப்பை நினைவு படுத்திக் கொண்டு, பிறகு உண்மைகளைப் பரிசீலிப்போம்.
புரூமேர் பதினெட்டின் மூன்றாம் பதிப்பிற்குரிய தமது முன்னுரையில் எங்கெல்ஸ் எழுதினார்:
‘’வரலாற்றுச் சிறப்புடைத்த வர்க்கப் போராட்டங்கள் வேறு எங்கேயும்விட பிரெஞ்சு நாட்டில்தான் ஒவ்வொரு தடவையும் இறுதி முடிவு வரை நீடித்து நடைபெற்றுள்ளன; ஆகவே, இந்தப் போராட்டங்கள் இயக்க வரையறைகளாகி இப் போராட்டங்களின் பலாபலன்கள் தொகுத்தளிக்கப்படும் மாறியவண்ண முள்ள அரசியல் வடிவங்கள் வேறு எங்கேயும் விட இங்கு மிகத் தெளிவான உருவரைகளில் குறிக்கப்பட்டிருக்கின்றன. மத்திய காலத்தில் பிரபுத்துவத்தின் கேந்திரமாகவும், மறுமலர்ச்சிக்குப் பிற்பாடு சமூகப் படிநிலைகளை அடிப்படையாய்க் கொண்ட ஒன்றுபட்ட முடியாட்சிக்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்த பிரெஞ்சு நாடு, மாபெரும் புரட்சியின் போது பிரபுத்துவத்தைத் தகர்த்திட்டு வேறு எந்த ஐரோப்பிய நாடும் கண்டிராத கலப்பற்ற அவ்வளவு தூய வடிவில் முதலாளித்துவ ஆதிக்கத்தை நிறுவிக்கொண்டது. தலைதூக்கி வந்த பாட்டாளி வர்க்கமானது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் போராட்டம் வேறெங்கும் கண்டிராத உக்கிர வடிவில் இங்கு மூண்டது’’ (பக்கம் 4, 1907 ஆம் ஆண்டு பதிப்பு).
இறுதியில் கூறப்படுவது காலம் கடந்தவை ஆகிவிட்டது. ஏனெனில் 1871 க்குப் பிறகு பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. இது நீடிப்பதாகவே இருப்பதானாலுங்கூட, இறுதி முடிவு வரை வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதில் பிரெஞ்சு நாடு வரப்போகிற பாட்டாளி வர்க்கப் புரட்சியில் முன்னுதாரணமாய்த் திகழும் சாத்தியப்பாடு இதனால் இல்லாமல் போய்விடவில்லை.
நிற்க, பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்திலும் முன்னேறிய நாடுகளது வரலாற்றைப் பொதுவில் பார்வையிடுவோம். அதே வளர்ச்சிப்போக்கு இன்னும் மெதுவாகவும், பலதரப்பட்ட வடிவங்களிலும், பரவலான அரங்கிலும் நடைபெறுவதைக் காண்கிறோம். ஒருபுறம் ‘’நாடாளுமன்ற ஆட்சிமுறை’’ குடியரசு நாடுகளிலும் (பிரான்ஸ், அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து), முடியரசுகளிலும் (பிரிட்டன், ஓரளவுக்கு ஜெர்மனி, இத்தாலி, ஸ்காந்தினேவிய நாடுகள் முதலானவை) வளர்ச்சியுறுவதைக் காண்கிறோம். மறுபுறத்தில், முதலாளித்துவ சமுதாயத்தின் அடித்தளங்களில் எந்த மாற்றமுமின்றி அரசாங்கப் பதவிச் ‘’சன்மானங்களை’’ வினியோகமும் மறுவினியோகமும் செய்துகொண்ட பல்வேறு முதலாளித்துவ, குட்டிமுதலாளித்துவக் கட்சிகளிடையே ஆட்சியதிகாரத்துக்கான போராட்டம் நடைபெறக் காண்கிறோம். முடிவாக, ‘’நிர்வாக அதிகாரம்’’, அதன் அதிகாரிகளாலான அமைப்பு, இராணுவம் இவற்றின் இயந்திரம் செம்மை செய்யப்பட்டு உறுதியாக்கப்படுவதைக் காணலாம்.
இந்தப் போக்குகள் எல்லா முதலாளித்துவ அரசுகளின் நவீன காலப் பரிணாமம் முழுவதுக்கும் பொதுவானவை என்பதில் துளியும் சந்தேகமில்லை. முதலாளித்துவ உலகு அனைத்துக்கும் தனி விஷேசமாய் அமைந்த அதே வளர்ச்சிப் போக்குகள் அதிவிரைவான, கூர்மையான, செறிவுமிக்க வடிவில் 1848 க்கும் 1851 க்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் பிரான்சில் நடந்தேறின.
ஏகாதிபத்தியமானது – வங்கி மூலதனத்தின், பிரமாண்ட முதலாளித்துவ ஏகபோகக் கம்பெனிகளின், ஏகபோக முதலாளித்துவம் அரசு – ஏகபோக முதலாளித்துவமாய் வளர்வதன் சகாப்தம் இது – ‘’அரசுப் பொறியமைவு’’ அசாதரணமாய்ப் பலம் பெறுவதையும், முடியாட்சி நாடுகளில் மட்டுமின்றி மிகுந்த சுதந்திரம் படைத்த குடியரசு நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராய் அடக்குமுறை நடவடிக்கைகள் கடுமையாகிவிட்டதை யொட்டி அரசாங்க அதிகார வர்க்க, இராணுவ இயந்திரம் முன்பின் கண்டிராத அளவுக்கு வளருவதையும் குறிப்பதாகும் என்பது தெளிவாய்ப் புலனாகியுள்ளது.
அரசுப் பொறியமைவை ‘’அழித்தொழிப்பதற்காக’’ 1852 ஐக் காட்டிலும் தற்போது ஒப்பீடில்லாப் பெரிய அளவில் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ‘’எல்லாச் சக்திகளும் ஒன்றுகுவிக்கப்படுவதை’’ நோக்கி உலக வரலாறு நடைபோடுகிறது என்பதில் ஐயமில்லை.
அழித்தொழிக்கப்படும் அரசுப் பொறியமைவின் இடத்தில் பாட்டாளி வர்க்கம் அமர்த்தப் போவது என்னவென்பதை பாரிஸ் கம்யூன் அளித்திடும் படிப்பினை மிக்க விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவைகள்.
சமூகத்தை மாற்றுவதற்கான வழிகளில் ஒன்றுதான் புரட்சி என்ற கருத்தை பாரிசில் நடைபெற்ற புரட்சிகளின் அனுபவத்திலிருந்து காரல்.மார்க்ஸ் முடிவுக்கு வந்தார். புரட்சிதான் சமூகத்தில் தேவையில்லாத அல்லது சமூக வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள, சமூகத்திற்கு எதிராக வுள்ள அனைத்தையும் அழித்தொழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி தீயவற்றை அழிப்பதில் ஆர்வமுள்ள சமூக சக்திகளை அதாவது வர்க்கங்களை ஒன்றுதிரட்டி அழிக்கிறது என்றார் கா.மார்க்ஸ். அவரது இந்தக் கருத்துக்கு நடைமுறை சான்றாக பாரிசில் நடைபெற்ற புரட்சியை கா.மார்க்ஸ் ஆதாரமாகக் காட்டுகிறார். ஆகவே நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், சமூகத்தில் பல்வேறுவிதமான அநியாயங்கள் நடக்கலாம். ஆனால் இந்த அநியாங்கள் எதையும் புரட்சிகர சக்திகள் அதாவது வர்க்கங்கள் ஒன்றுதிரண்டு ஒரு புரட்சியின் மூலமாக அல்லாது வேறு எந்த முறையிலும் ஒழிக்க முடியாது. இதுதான் மனிதகுல வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும். இதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் தான் ரஷ்யாவில் நடந்த புரட்சியாகும். அந்தப் புரட்சியின் மூலம் உருவான சோவியத்து அரசுதான் அங்குள்ள தீய சக்திகளையும் தீய நிகழ்வுகளையும் ஒழித்துக்கட்டி அந்த நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல வாழ்வை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கு மாறாக இந்தியாவில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு புரட்சியை நடத்தி இங்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மாறாக பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் தலைவர் களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தின் மூலமாகவே இந்தியாவில் ஒரு போலியான சுதந்திரம் கிடைத்தது. இதன் போலித்தன்மையின் காரணமாகவே இந்தியாவை பிரிட்டீஷார் ஆண்டபோது அவர்களால் நம்மை ஆளுவதற்காக உருவாக்கப்பட்ட சட்டங்களைக் கொண்டே இங்கே ஆட்சி நடக்கிறது. பிரிட்டீஷாரின் ஆட்சி காலத்தில் நடந்த கொடுமைகள் இன்றும் தொடர்ந்து நடக்கிறது. மேலும் உழைக்கும் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் இல்லை என்பது மட்டுமல்லாமல் அவர்களது வாழ்க்கை மேலும் கொடூரமாக மாறி இருக்கிறது. உதாரணமாக பிரிட்டீஷாரின் ஆட்சியின் போது உணவுப் பஞ்சம் வந்தது, அப்போது கூட விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஆனால் இப்போது லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைகிறார்கள். ஆகவே இப்போதும் இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள்,
நெசவாளர்கள், மீனவர்கள், நடுத்தர மக்கள், மாணவர்கள் ஆசிரியர்கள் போன்றவர்கள் சந்திக்கும் துண்பங் களிலிருந்து விடுதலை பெற இவர்கள் அனைவரும் ஒரு கொடியின் கீழ், ஒரு பொதுத்திட்டத்தின் கீழ் ஒன்றுதிரண்டு இவர்களுக்கு எதிரான தீய சக்திகளை எதிர்த்துப் போராடி ஒரு புரட்சியின் மூலம் தீயவற்றை அழித்து ஒழிக்காமல் இந்த வர்க்கங்களுக்கு வாழ்வு இல்லை என்பதே மார்க்சிய லெனினியப் போதனை ஆகும்.
நிலவுடமை காலத்தில் மன்னராட்சி நிலவியபோது இருந்த அரசு நிர்வாக மற்றும் இராணுவ அமைப்பு போல் இல்லாமல், முதலாளிகளின் ஆட்சி காலத்தில் அரசு அதிகாரத்தின் வீச்சையும், போலீஸ், இராணுவம், கோர்ட்டுகள், சிறைச்சாலைகள் மற்றும் அரசு அதிகாரம் போன்ற வன்முறையிலான அரசுப் பொறியமைவை இந்த முதலாளி வர்க்கம் அதிக வலுவுடன் வளர்த்துள்ளது என்பதை கா.மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். மக்ளின் நலனுக்காகவே இந்த அரசுப் பொறியமைவை வளர்த்துள்ளதாக முதலாளித்துவ வர்க்கங்களும் அதன் அரசியல் கட்சித் தலைவர்களும் சொன்னாலும், இந்த அரசுப் பொறியமைக் கொண்டுதான் இவர்கள்
மக்களுக்கு அச்சமூட்டி மக்களை அடக்கி ஆளுவதை நாம் பார்க்கிறோம்.வரலாற்றில் இதுவரை நடந்த புரட்சிகளில் ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த புரட்சிகள் தவிர பிற நாடுகளில் நடந்த புரட்சிகள் அல்லது போராட்டங்களின் மூலம் அந்த நாடுகளில் நிலவிய அரசுப் பொறியமைவைக் கைப்பற்றி மேலும் மேலும் தங்களின் சுரண்டலுக்காகவும் ஆதிக்கத்துக்காகவும் அரசுப் பொறியமைவை செழுமைப்படுத்தினார்கள். இந்தியாவில் பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடி காங்கிரஸ் தலைவர்கள் பிரிட்டீஷாரால் உருவாக்கப்பட்ட போலீஸ், இராணுவம் போன்ற அதே அரசுப் பொறியமைவைக் கைப்பற்றி அந்த அரசுப் பொறியமைவை செழுமைப்படுத்தி அதன் மூலம் பிரிட்டீஷார் இங்கு என்ன செய்தார்களோ அதே காரியத்தை தொழிலாளர்களை சுரண்டுவது, விவசாயிகளின் வாழ்வை சூறையாடுவது, தேசிய இனங்களை ஒடுக்குவது, சாதித் தீண்டாமையை வளர்ப்பதே போன்ற காரியங்களை இந்த அரசுப் பொறியமைவைப் பயன்படுத்தி செய்துகொண்டு இருப்பதை நாம் காணலாம்.இதற்கு மாறாக ரஷ்யாவில் ஜாரின் ஆட்சியிலும் கெரென்ஸ்கியின் ஆட்சியில் இருந்த அரசுப் பொறியமைவைத் தகர்த்துவிட்டு தொழிலாளர் களின் சோவியத்து, விவசாயிகளின் சோவியத்து, மற்றும் படையாட்களின் சோவியத்து என்ற புதிய வகையிலான அரசு அமைப்பை உருவாக்கி, இந்த அரசமைப்பானது முழுவதும் மக்களுக்கு கட்டுப்பட்டு செயல்படும் முறையை உருவாக்கி மக்களுக்கு எதிரான நிலப்பிரபுக்கள் மற்றும் முதலாளிகளை ஒடுக்கும் அரசுப் பொறியமைவை உருவாக்கினார்கள். ஆகவே நமக்குத் தேவை உழைக்கும் மக்களை ஒடுக்கும் அரசுப் பொறியமைவா? அல்லது உழைக்கும் மக்களை பாதுகாக்க மக்களின் எதிரிகளை ஒடுக்கும் அரசுப் பொறியமைவா? என்ற கேள்வியை முன்வைத்து மக்களை சிந்திக்கச் செய்வதற்கு அரசு பற்றிய மார்க்சிய – லெனினிய போதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமை ஆகும்.
முந்தைய புரட்சிகளும் போராட்டங்களும் இந்த அரசுப் பொறியமைவை செம்மை செய்தன. ஆனால் இந்த அரசுப் பொறியமைவு தகர்க்கப்பட வேண்டும் என்பதுதான் மார்க்சின் மிகவும் முக்கியமான போதனை ஆகும்.
பாட்டாளி வர்க்கமானது முதலில் அரசியல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றாமல், அதாவது பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கமாக மாற்றாமல் அதனால் முதலாளி வர்க்கத்தின் ஆதிக்க சுரண்டலுக்கு முடிவுகட்ட முடியாது என்பதுதான் மார்க்சின் போதனை ஆகும். பாட்டாளி வர்க்கத்தால் அல்லது கம்யூனிஸ்டுக் கட்சியால் உருவாக்கப்படும் அரசானது முதலாளிகளால், முதலாளிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட அரசாக ஒருபோதும் இருக்க முடியாது. வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயத்திற்கு இதுபோன்ற வன்முறைக் கருவியான அரசு தேவைப்படாது. கம்யூனிச சமூகமாக சமுதாயத்தை மாற்றியமைக்க விரும்பும் கம்யூனிஸ்டுகள் இந்த அரசின் தேவையில்லாத ஒரு சமூகச் சூழலை உருவாக்குவதற்குத்தான் பாடுபட வேண்டும். ஆகவே கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்படும் அரசானது தற்காலிகமானதாகவே அதாவது அரசு என்ற ஒரு அமைப்பே தேவையில்லை என்ற சூழலை உருவாக்குவதை தனது லட்சியமாகக் கொண்ட அரசாகவே இருக்க வேண்டும். அது சாராம்சத்தில் உலர்ந்து உதிரும் அரசையே கம்யூனிஸ்டுகள் உருவாக்க வேண்டும். அத்தகைய அரசையே சோசலிச அரசு என்று மார்க்சியம் போதிக்கிறது. இதற்கு மாறாக கேரளாவில் சுரண்டும் வர்க்கங்களைப் பாதுகாப்பதற்கான முதலாளித்துவ அரசுப் பொறியமைவை சி.பி,எம். கட்சி கைப்பற்றி ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அரசை கம்யூனிச அரசு என்று சொல்லி மார்க்சியப் போதனைகளையே திரிக்கிறது. கேரள மாநில சி.பி.எம்.ன் அரசு ஒரு சோசலிச அரசும் இல்லை. உழைக்கும் மக்களின் நலன் காக்கும் அரசும் இல்லை. முதலாளிகளின் நலன் காக்கும் அரசுப் பொறியமைவுகளான கேரள போலீஸ் போன்ற அமைப்புகளை இயக்கும் அரசாங்கம்தான் கேரள அரசாங்கமாகும். இங்கே கேரள சி.பி.எம். கட்சியானது நிலவுகின்ற அரசுப் பொறியமைவை தகர்த்துவிட்டு உருவாகவில்லை. மாறாக நிலவுகின்ற அரசுப் பொறியமைவைப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை அன்று காவுத்ஸ்கி போன்றவர்கள் புறக்கணித்தது போலவே புறக்கணிக்கிறார்கள்.
அதிகார வர்க்கமும் நிரந்தரமான ஆயுதம் தாங்கிய சேனையும் இந்த அரசுப் பொறியமைவின் இன்றியமையாத இரு அங்கங்கள் என்றும், முதலாளி வர்க்கங்கள் இவ்விரு அங்கங்களுடனும் ஆயிரக்கணக்கான வழிகளில் தொடர்பு கொண்டிருக்கிறது என்றும், முதலாளி வர்க்கங்கள் இந்த அரசுப் பொறியமைவை தங்களது நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன என்ற மார்க்சியப் போதனைகளை திருத்தல்வாதிகள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள். ஆகவேதான் திருத்தல்வாதிகள் மார்க்சியத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளாக மாறி, முதலாளிகளுடன் சமரசங்கள் செய்துகொண்டு தேர்தல் மூலமாக ஆட்சிக்கு வந்து சில சில்லரை சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். எனினும் அவர்களால் சீர்திருத்தங்கள் செய்வதைக் காட்டிலும் முதலாளிகளின் நலன் காக்க உழைக்கும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவி உழைக்கும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்க முடியவில்லை. இதற்கு மேற்கு வங்கத்தில் நந்திகாரமத்தில் சி.பி.எம். அரசாங்கம் மேற்கொண்ட விவசாயிகளின் மீதான ஒடுக்குமுறை ஒரு நல்ல உதாரணமாகும்.
அதிகார வர்க்கத்துக்கும் போலீசுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பை வர்க்க உணர்வுள்ள தொழிலாளி வர்க்கத்தால் புரிந்துகொள்ள முடியும் என்றும், இந்த உறவை குட்டிமுதலாளித்துவ வர்க்க உணர்வுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியாது என்றும் லெனின் இங்கே விளக்குகிறார். இங்குள்ள கம்யூனிச அமைப்புகளிலுள்ள குட்டிமுதலாளித்துவ உணர்வும், சிந்தனை முறையும் கொண்டவர்களால் மார்க்சின் இந்த போதனையை புரிந்துகொள்ள முடியாது. இவர்கள் எந்தளவுக்கு தங்களது பாட்டாளிவர்க்க உணர்வைப் பெற்று வளர்க்கிறார்களோ அந்தளவுக்குத்தான் மார்க்சின் போதனைகளை இவர்களால் புரிந்துகொள்ள முடியும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே பாட்டாளி வர்க்க உணர்வுகளை வளர்த்துக்கொள்வதும், பாட்டாளிவர்க்க சிந்தனைமுறையில் நாம் சிந்திக்கும் பயிற்சி பெறுவதும் கம்யூனிஸ்டுகளின் முன் உள்ள கடமையாக உள்ளது.
முதலாளித்துவ சமூகத்தில் செயல்படும் அதிகார வர்க்கமும் நிரந்தர சேனையும் மக்களின் வரிப்பணத்தில் வாழ்ந்துகொண்டே உழைக்கும் மக்களை ஒடுக்கிக்கொண்டு புல்லுரிவியாக இருக்கிறது என்ற கூற்று அராஜகவாதிகளின் கூற்று என்று கம்யூனிசத்தை கைவிட்டு ஓடிப்போன காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் பிரச்சாரம் செய்தாலும் காவுத்ஸ்கியின் வாதம் ஒரு புரட்டே என்பதுதான் மார்க்சிய போதனை ஆகும். கம்யூனிச சமுதாயத்தில் மக்களுக்கு பாரமாகவும் புல்லுருவியாகவும் இருக்கும் அரசு என்பதே சமுதாயத்திற்கு தேவையில்லாமல் போய்விடும். அதாவது அரசு உலர்ந்து உதிர்ந்துவிடும் என்பதுதான் மார்க்சின் போதனை ஆகும்.
முதலாளித்துவ அரசுகளில்தான் ஏராளமான குட்டி முதலாளித்துவ பிரிவினர்கள் அரசு அதிகாரிகளாக ஆனார்கள். ஆகவே இந்த முதலாளித்து அரசுகளை குட்டிமுதலாளித்துவ வர்க்கங்கள் ஆதரிப்பதோடு முதலாளிகளின் பக்கம் ஆதரவு கொடுக்கிறார்கள். இந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கப் பிரிவினர்கள்தான் முதலாளித்துவ அரசியல் கட்சிகளில் உறுப்பினர்களாகவும், தலைவர்களாகவும் இருந்துகொண்டு முதலாளி வர்க்கங்களின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து பாதுகாக்கிறார்கள். இந்த உண்மையை வர்க்க உணர்வுள்ள பாட்டாளி வர்க்கம் பார்க்கிறது, மேலும் பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ சமுதாயத்துக்கும் இணக்கம் காண முடியாத பகை உள்ளது என்பதை தனது சொந்த அனுபவங்களிலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள். ஆகவே வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் வர்க்கமானது முதலாளித்துவ சமூகத்தை அழித்திடுவதற்கான சமூக சக்திகள் அனைத்தையும் ஒன்றுகுவித்து அரசுப் பொறியமைவை மேம்பாடு செய்வதல்ல, அதனை தகர்த்து நொறுக்கும் லட்சியத்தை கொள்கையாக ஏற்று செயல்படுகிறது.
இவ்வாறு முதலாளித்துவ அரசு அமைப்பை நொறுக்கிவிட்டு அதனிடத்தில் எவ்வகையான அரசமைப்பை பாட்டாளி வர்க்கம் அல்லது கம்யூனிஸ்டு கட்சி உருவாக்கப் போகிறது என்ற கேள்விக்கும் மார்க்சியம் போதனை அளிக்கிறது. அதாவது இந்த அரசுக்கு மாற்று சோசலிச அரசுதான் என்கிறது. ரஷ்யாவில் தொழிலாளர்களின் சோவியத்து, விவசாயி களின் சோவியத்து, படையாட்களின் சோவியத்து என்ற சோவியத்துக்கள் உருவாக்கப்பட்டது. அனைத்து அரசியல் அதிகாரமும் இந்த சோவியத்துக்களே வழங்கப்பட்டது. இந்த சோவியத்துக்கான உறுப்பினர் களை மக்களே தேர்ந்தெடுத்தனர், மேலும் சோவியத்து உறுப்பினர்கள் தவறு செய்தால் அவர்களை திருப்பி அழைக்கும் உரிமையும் அதிகாரமும் மக்களுக்கு வழங்கப்பட்டது. மக்களிடம் விவாதித்தே சட்டங்கள் போடப்பட்டது. மக்களால் ஒரு சட்டம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் அந்தச் சட்டம் விலக்கிகொள்ளப் பட்டது.
பெருமுதலாளிகளிடமிருந்து மூலதனங்களை சோவியத்து அரசு பறிமுதல் செய்து மக்களுக்குச் சொந்தமாக்கியது. இதுபோன்ற அரசமைப்புதான் உண்மையிலேயே மக்களுக்கான மிகச் சிறந்த ஜனநாயக அரசாகும். இத்தகைய அரசமைப்புக்காகப் பாடுபடுபவர்கள்தான் கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.