ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஏன் வேண்டும்?. ஒரு கம்யூனிஸ்டு கட்சியானதுபுரட்சிகர கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?. உலகத்தில் வாழம் உழைக்கும்மக்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றனர். அம்மக்கள் எதிரியினுடைய ஒடுக்குமுறையினைத் தூக்கியெறிந்திடவே விரும்புகின்றனர். முதலாளியமற்றும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி போன்ற ஒரு கட்சியே தற்போதுதேவைப்படுகிறது. அதனைப் போன்ற ஒரு கட்சியில்லாமல் எதிரியின் ஒடுக்குமுறையை மக்களால் தூக்கியெறிந்திட முற்றிலும் சாத்தியமற்றதாகும். நாம் கம்யூனிஸ்டுகள். எதிரியைத்தூக்கியெறிவதில் மக்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம். ஆகவே நமது படையின் அணிவகுப்புகளைச் சிறந்த நிலையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்துச்சென்றாக வேண்டும். நமது துருப்புகள் அதாவது நமது கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அது தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் சிறந்தஆயுதங்களாக இருக்க வேண்டும். அதாவது நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள்விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அத்தகைய தத்துவஆயுதம்தான் நமது ஆயுதமாகும். இந்த நிலைமைகள் இல்லாமல் எதிரியை நம்மால்தூக்கியெறிய முடியாது. -மாவோ-
மாவோவின் காலத்தில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பொதுவழியானது சரியானதாகவே இருந்தது. எவ்விதமான சிக்கலையும் கட்சிக்கு கொண்டுவரவில்லை. கட்சியின் பணியானதுபயன் உள்ளதாகவே இருந்தது. கட்சியானது பல்வேறு வகைப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. அந்த உறுப்பினர்கள் எதிரிக்கு எதிரான கடுமையான போராட்டங்களில்துன்ப துயரங்களை ஏற்றுக்கொண்டு மக்களுக்குத் தலைமை தாங்கினார்கள். அவ்வாறு மிகச்சிறந்த உறுப்பினர்களைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியும் சில சிக்கல்களைஎதிர்கொண்டது, அந்த சிக்கல்கள் மிகவும் தீவிரமாக இருந்தது.
சீனக் கம்யூனிஸ்டு கட்சித் தோழர்களிடம் பலரின் உள்ளங்களில் உள்ள ஏதோ ஒன்று சரியல்ல,முற்றிலும் முறையானது அல்ல . வேறு சொற்களில் சொல்வதென்றால் பயிலுதல் குறித்தபாணியிலும், கட்சியின் உள் மற்றும் வெளி உறவுகளில் உள்ள பாணியிலும், எழுத்துபாணியிலும் ஏதோ ஒருவகையான தவறு இருந்தது.
பயிலுதல் குறித்த பாணியிலுள்ள தவறை அகநிலைவாத நோயாகவும், கட்சி உறவுகளில் உள்ளபாணியிலுள்ள தவறை குறுங்குழுவாத நோயாகவும், எழுத்து பாணியிலுள்ள தவறைசலிப்பூட்டும் வகையிலான எழுத்து நோயாகவும் (வார்த்தை ஜாலங்களைக் கொண்டுஉள்ளடக்கமின்றி வடிவத்தின் மீது கவனத்தை குவிக்கும் எழுத்து வடிவமாகும். விவரங்களைஅலசி ஆராய்வதற்குப் பதிலாக புரட்சிகர சொற்றொடர்களையும் வாசகங்களையும் பெரும்குழப்பமாக எழுதி குவிப்பதாகும். இந்த வகையான எழுத்து முறைகளை மார்க்சியத்தை எதிர்ப்பாளர்களிடம் இன்றும் நாம் காணலாம். குறிப்பாக அடையாள அரசியல்வாதிகளின்எழுத்தில் நாம் காணலாம். ஏராளமாக கதையடிப்பார்கள், அவர்களது நிலைபாட்டைதெளிவாகச் சொல்ல மாட்டார்கள். வாசகர்களை முழுவதும் குழப்பத்தில் ஆழ்த்துவார்கள்.)
இந்த மூன்றுமே தவறானவையாகும். அவை கெட்ட காற்றுகள் ஆகும். அகநிலைவாதம்,குறுங்குழுவாதம், மற்றும் கட்சியின் சலிப்பூட்டும் எழுத்துக்களை ஒழிக்க வேண்டும் என்றுமாவோ போராடினார். ஆனாலும் இந்த கெட்ட காற்று சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்வீசிக்கொண்டுதான் இருந்தது. அவைகளை உருவாக்குகின்ற வழிகளை நாம் அடைத்து வைக்கவேண்டும். நமது முழு அமைப்பும் இவ்வழிகளை அடைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
கட்சியானது மார்க்சியப் பள்ளிகளை நடத்தி இதற்காகப் பாடுபட வேண்டும். அகநிலைவாதம்,குறுங்குழுவாதம், சலிப்பூட்டும் கட்சியின் எழுத்து ஆகிய மூன்று கெட்ட காற்றுகளும் தங்களின்வரலாற்று மூலங்களைக் கொண்டுள்ளன. அவை முழு கம்யூனிச அமைப்புகளிலும் இனிமேலும்நம்மை ஆதிக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. இவைகள்தான் நம்மிடையே குழப்பத்தைஉண்டாக்கி நம்மீது தாக்குதல்கள் தொடுக்கின்றன. ஆகவே அவற்றை எதிர்த்துப்போராடுவதும், மார்க்சியத்தை முறையாகப் பயில்வதும், அதன் அடிப்படையில் பிரச்சனைகளை அலசி ஆராய்வதற்கான பயிற்சியை மேற்கொள்வதும் நமக்கு அவசியமாகும். -மாவோ-
அகநிலைவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலமே நாம் மார்க்சியத்தை முறையாககற்றுக்கொள்ள முடியும். குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலமே கட்சிஉறுப்பினர்களுக்கு இடையிலான உறவுகளை தோழமையாக நட்பாக வைத்துக்கொள்ளமுடியும். சலிப்பூட்டும் எழுத்து முறைகளை எதிர்த்துப் போராடுவதன் மூலமே நம்மைகுழப்பத்தில் ஆழ்த்தும் எழுத்தாளர்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
மார்க்சியத்தை முறையாக கற்றுக்கொள்ள முடியும்.
நாம் எதிரிகளைத் தோல்வியுறச் செய்யும் கடமையினை நிறைவேற்றுவதற்கு, கட்சிக்குள்இருக்கும் இப்பாணிகளை சீர் செய்யும் கடமையினை நாம் கட்டாயமாக நிறைவேற்றிடவேண்டும். பயிலுதல் குறித்த பாணியும் எழுதும் பாணியும் கூட கட்சியின் வேலைப்பணியே ஆகும். நமது கட்சியின் வேலைப்பணி சரியாக்கப்பட்டவுடன் நாடு முழுவதுமுள்ள மக்கள் நமது எடுத்துக்காட்டிலிருந்து கற்றுக்கொள்வார்கள். (தற்போது தலைகீழாக மக்களிடமுள்ள தீயபண்புகளைத்தான் கம்யூனிச அமைப்பிலுள்ளவர்கள் எடுத்துக்காட்டாகஎடுத்துக்கொண்டுள்ளார்கள்) அதே வகையிலான பாணியைக் கொண்டு கட்சிக்கு வெளியேஇருப்போர் நல்லவர்களாகவும் நாணயமானவர்களாகவும் இருப்பார்களானால் நமதுஎடுத்துக்காட்டிலிருந்து கற்றுக்கொண்டு தங்களின் தவறுகளை சரிசெய்வார்கள். இவ்வாறு முழுதேசமும் மாறுதலுக்கு உள்ளாகும். நமது கம்யூனிஸ்டு அணிவரிசைகள் சிறந்த ஒழுங்கில்இருந்து சரியான வழியில் அணிவகுக்கின்ற வரையில் நமது துருப்புகள் (உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்கும் வரையில், நமது ஆயுதங்கள் (நமதுகொள்கைகள்) சிறந்த ஆயுதங்களாக இருக்கும் வரையில் எந்தவொரு எதிரியும் அவர்கள்எவ்வளவு பலம் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாதுமாறாக அவர்களை கம்யூனிஸ்டுகளாகிய நம்மால் தூக்கி எறிய முடியும். -மாவோ-
ஆகவே அகநிலைவாதம், குறுங்குழுவாதம், சலிப்பூட்டும் எழுத்துமுறைகளையும் நாம் எதிர்த்துப்போராடி வீழ்த்திவிட்டு நம்மை முறையாக ஒழுங்கமைத்து செயல்படுவதன் மூலம் நாம்மக்களுக்கு எடுத்துக்காட்டாக நடந்துகொள்வதன் மூலமே நாம் மக்களின் நம்பிக்கையைப்பெற்ற சிறந்த கம்யூனிஸ்டாகவும் சிறந்த கம்யூனிஸ்டுக் கட்சியாகவும் மாற முடியும். இந்தமுறையை இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் பின்பற்றத் தவறியதால்தான் கம்யூனிஸ்டுக்கட்சியானது மக்களின் நம்பிக்கையையும் செல்வாக்கையும் இழந்து நிற்கிறது.
அகவியம் என்பது முறையற்ற பாணியில் பயில்வதேயாகும்; அது மார்க்சிய-லெனினியத்திற்குஎதிரானது. கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒவ்வாதது. நாம் விரும்புவது என்னவெனில் மார்க்சிய-லெனினிய பயிலுதல் பாணியேயாகும். பயிலுதல் பாணி என நாம் அழைப்பது வெறும் பள்ளிக்கூடங்களிலுள்ள பயிலுதல் பாணியே எனப் பொருள்கொள்ளவில்லை. மாறாக முழுக்கட்சியிலும் உள்ள பயிலுதலையே பொருள் கொள்கிறோம். அது நமது தலைமையமைப்புகளில்உள்ள தோழர்கள், அனைத்து ஊழியர்கள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோரின் சிந்தனையின்வழிமுறை குறித்த சிக்கலே ஆகும். அச்சிக்கல் மார்க்சிய-லெனினியத்தை நோக்கிய நமது எண்ணப்போக்கைப் பற்றிய சிக்கலே ஆகும். சரியான பொருளில் அது அசாதாரணமானசிக்கலே ஆகும். உண்மையில் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது. மடத்தனமான சிலகருத்துகள் மக்கள் பலரிடையே பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒரு கோட்பாளர்என்றால் என்ன, ஓர் அறிவுஜீவி என்றால் என்ன, கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைப்பது என்றால் என்ன ஆகியவை பற்றிய மடத்தனமான கருத்துகள் உள்ளன . -மாவோ-
கம்யூனிஸ்டு அமைப்புகளில் உள்ள தோழர்களின் சிந்திக்கும் முறைகளில் சிக்கல்கள் உள்ளது.
இந்த சிக்கலானது மார்க்சிய-லெனினியத்தை நோக்கிய நமது புரிதலில் சிக்கலைஉருவாக்குகிறது. பிரச்சனைகளை புரிந்துகொள்வதிலும், அதனை வெளிப்படுத்துவதிலும்சிக்கலையும் தவறுகளையும் உருவாக்குகிறது. மக்களிடையே சில மடத்தனமான கருத்துகளும்,அனுகுமுறைகளும் உள்ளது. அவைகள் எல்லாம் கம்யூனிஸ்டுகளிடமும் உள்ளது. ஆகவேகம்யூனிஸ்டுகளின் சித்தாந்த அறிவு மட்டத்தை உயர்த்த கட்சி அமைப்பு முழுவதும் ஒன்றுபட்டுஇயக்கமாகவே நடத்தப்பட வேண்டும்.சீனக் கம்யூனிஸ்டு கட்சியின் அனுபவம் பற்றி மாவோ கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
"முதலாவதாக, நமது கட்சியின் கோட்பாட்டு மட்டம் உயர்வாக உள்ளதா, அல்லது தாழ்வாகஉள்ளதா எனக் கேட்ப்போம். அண்மையில் மார்க்சிய-லெனினியப் படைப்புகள் அதிக அளவில்மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அதிகமான மக்கள் அவற்றை வாசித்து வருகிறார்கள். அது மிகச்சிறந்ததே. ஆனால் இதன் விளைவாய் நமது கட்சியின் கோட்பாட்டு மட்டம் பெருமளவில்உயர்ந்துவிட்டது என நாம் கூற இயலுமா? இப்பொழுது உள்ள மட்டம் முன்பைவிட ஓரளவுஉயர்வாக உள்ளது என்பது உண்மையே. ஆனால் நமது கோட்பாட்டு அரங்கமானது சீனப்புரட்சிகர இயக்கத்தின் செழுமையான உள்ளடக்கத்தோடு மிகவும் அதிக அளவில்பொருந்தாமல் உள்ளது. இரண்டின் ஒப்பீடானது கோட்பாட்டுத் தரப்பு மிகவும் பின்தங்கிக்கொண்டிருக்கிறது என்பதை காட்டுகிறது. பொதுவாகக் கூறுகையில் நமது கோட்பாடானதுபுரட்சிகர நடைமுறைக்கு வழிகாட்டுவதற்குத் தலைமைதாங்க வேண்டும் என்பது ஒருபுறம்இருக்க நமது புரட்சிகர நடைமுறையின் வேகத்திற்கு இன்னமும் தொடர இயலாமல் உள்ளது.
நாம் நமது பல்வேறு வகையிலான வளமான நடைமுறையை முறையான கோட்பாட்டுத்தளத்திற்கு இன்னமும் உயர்த்தவில்லை. நாம் புரட்சிகர நடைமுறையின் அனைத்துச்சிக்கல்களையும் - முக்கியமான வற்றையும்கூட - இன்னமும் ஆராயாமல் அவற்றைகோட்பாட்டுத் தளத்திற்கு உயர்த்தாமல் உள்ளோம். சற்றே சிந்திப்பீர், நம்மில் எத்தனை பேர்சீனாவின் பொருளியல், அரசியல் இராணுவ விவகாரங்கள், அல்லது பண்பாடு பற்றி பெயர்சொல்லக்கூடிய அளவிற்கு கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர். நம்மில் எத்தனை பேர்பட்டை தீட்டப்படாத முழுமையுறாத கோட்பாடுகளை அல்லாமல் அறிவியல்ரீதியானவிரிவான கோட்பாடுகள் எனக் கருதப்படுகின்றவாறு உருவாக்கியுள்ளனர்? குறிப்பாக,பொருளாதார கோட்பாட்டுத் தளத்தில்; முதலாளியமானது அபினிப்போர் முதற்கொண்டுநூற்றாண்டுகால வளர்ச்சியை கொண்டுள்ளது. எனினும் சீனாவின் பொருளாதார வளர்ச்சியின் எதார்த்தங்களோடு ஒத்திசைகிற உண்மையிலேயே அறிவியல்ரீதியான தனியொருகோட்பாட்டுப் படைப்பு உருவாக்கப்பட்டிருக்கவில்லை. எடுத்துக்காட்டாக சீனாவின்பொருளாதாரச் சிக்கல்கள் குறித்த பயிலுதலில் கோட்பாட்டு மட்டம் ஏற்கனவே உயர்வாகஉள்ளதென நாம் கூற இயலுமா? நமது கட்சி ஏற்கனவே பெயர் சொல்கின்றவாறானபொருளாதார கோட்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது எனக் கூற இயலுமா? நிச்சயமாகஇல்லை. நாம் மாபெறும் மார்க்சிய-லெனினிய நூல்கள் பலவற்றை வாசித்துள்ளோம்.ஆகையால் நாம் கோட்பாட்டாளர்களை கொண்டுள்ளோம் எனக் கூறிக்கொள்ள இயலுமா?நம்மால் முடியாது. ஏனெனில் மார்க்சிய-லெனினியம் என்பது எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின்ஆகியோரால் நடைமுறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கோட்பாடாகும். அவர்களின்பொதுமுடிவானது வரலாறு மற்றும் புரட்சிகர எதார்த்தத்திலிருந்து வரையப்பட்டது.அவர்களின் படைப்புகளை வெறுமனே வாசித்து அவற்றின் கோட்பாட்டு ஒளியில் சீனவரலாறு மற்றும் புரட்சியின் எதார்த்தங்களைப் பயிலுவதற்கு முன் செல்லாமல்இருப்போமானால் கோட்பாட்டின் அடிப்படையில் கவனமாக சீனப் புரட்சிகர நடைமுறையின்மூலம் சிந்திப்பதற்கு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்போமானால் நம்மைமார்க்சிய கோட்பாளர்கள் என அழைத்துக்கொள்வதற்கு மிகவும் அளவுகடந்த துணிச்சல்இருந்திடக் கூடாது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சீனாவின்சிக்கல்களுக்கு நமது கண்களை மூடிக்கொண்டு புறத் தொடர்பு இல்லாத முடிவுகளை அல்லதுமார்க்சிய எழுத்துகளிலிருந்து கொள்கை நெறிகளை மனப்பாடம் மட்டுமே செய்யஇயலுவோமானால் உண்மையில் நமது சாதனைகள் கோட்பாட்டு அளவில் மிகவும்அற்பத்தனமாக இருக்கும். ஒரு நபர் மார்க்சியப் பொருளியல் அல்லது தத்துவத்தை மனப்பாடம்செய்வது முதல் அத்தியாயத்திலிருந்து பத்தாம் அத்தியாயம் வரை பேச்சளவில் ஒப்பிக்கஇயன்று அவற்றைச் செயல்படுத்த முழுமையாக முடியாமல் இருப்பாரானால் அவர் மார்க்சியக்கோட்பாட்டாளர் எனக் கருதப்பட இயலுமா? இல்லை. அவ்வாறு அவர் கருதப்பட இயலாது".
"என்ன வகையான கோட்பாட்டாளர்களை விரும்புகிறோம்? மார்க்சிய-லெனினிய நிலைபாடு,நோக்குநிலை வழிமுறை ஆகியவற்றிற்கு ஏற்ப வரலாறு மற்றும் புரட்சியின் செல்திசையில்எழும் நடைமுறை சிக்கல்களைச் சரியாகப் பொருள் விளக்கிச் சீனாவின் பொருளாதார, அரசியல், இராணுவ, பண்பாடு மற்றும் இதர சிக்கல்களில் அறிவியல் விளக்கங்கள் மற்றும்கோட்பாட்டுரீதியான தெளிவுரைகளை அளிக்க இயலுகின்ற கோட்பாட்டாளர்களையேவிரும்புகிறோம். ஒரு நபர் இவ்வகையான கோட்பாட்டாளராக இருப்பதற்கு மார்க்சிய-லெனினிய சாரம், மார்க்சிய-லெனினிய நிலைபாடு, நோக்குநிலை மற்றும் வழிமுறை மற்றும்காலனிய புரட்சி, சீனப் புரட்சி ஆகியவை பற்றிய லெனின், ஸ்டாலின் ஆகியோரின்கோட்பாடுகள் பற்றிய உண்மையான உட்கிரகிப்பைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும்".
"அவர் அவற்றை சீனாவின் நடைமுறைச் சிக்கல்களைத் துருவிப் பார்ப்பதிலும்அறிவியல்ரீதியாகப் பகுப்பாய்வதிலும் செயல்படுத்தி இச்சிக்கல்கள் குறித்த வளர்ச்சியின்விதிகளை கண்டுபிடிக்க ஏதுவாக இருந்தாக வேண்டும். அத்தகைய கோட்பாளர்களேஉண்மையில் நமக்குத் தேவையாக இருக்கின்றனர்". -மாவோ-
இங்கே மாவோ வலியுறுத்துவது என்ன? கம்யூனிஸ்டு கட்சியின் கோட்பாட்டு மட்டம்உயர்வாக இருக்க வேணடியது அவசியமாகும் என்பதைத்தான் மாவோ இங்கேவலியுறுத்துகிறார்.
கட்சியுள்ள தோழர்களின் கோட்பாட்டு அறிவானது சமூக மாற்றத்திற்கு மக்களை அணிதிரட்டிபோராட்டத்திற்கு வழிகாட்டத்தக்க அளவு பயனுள்ளாதாக இருக்க வேண்டும் என்கிறார் மாவோ.
சீனாவில் கம்யூனிஸ்டு கட்சியிலுள்ளவர்களின் கோட்பாட்டு மட்டம் சற்று உயர்வாக இருந்தபோதும் மக்களை வழிநடத்துவதற்கு தேவையான அளவு இல்லை என்கிறார் மாவோ.
சீனாவில் நடைமுறையில் அவர்கள் சந்தித்த சிக்கல்களை தீர்ப்பதற்காக ஆய்வுகள் செய்துகோட்பாடு அடிப்படையிலான தீர்வுகளை கண்டுபிடிக்காமல் இருப்பதாக மாவோ கூறுகிறார்.
சீனாவில் பொருளியல், அரசியல், இராணுவ விவகாரங்கள், அல்லது பண்பாடுகள் குறித்துகோட்பாடுகளை எத்தனை பேர் உருவாக்கியுள்ளனர் என்று கேள்வி எழுப்பி அங்கு சீனமுதலாளித்துவம் வளர்ச்சி பற்றிய கோட்பாடுகள் உருவாக்கப்படவில்லை என்கிறார் மாவோ.
மேலும் கட்சிக்குள் கோட்பாட்டாளர்கள் அதிகமாக இல்லை என்றார் மாவோ.
லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் நடைமுறையின் அடிப்படையில் கோட்பாடுகளைஉருவாக்கினார்கள். அக்கோட்பாடுகளிலிருந்து போதுவான முடிவுகளை நாம் அவர்களதுநூல்களை வாசிப்பதன் மூலம் புரிந்துகொண்டு அதனை நாம் நடைமுறையில் சந்திக்கும்சிக்கல்களைத் தீர்ப்பதற்கு புதிய கோட்பாடுகளை உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்தி சோதித்துப் பார்ப்பதன் மூலம் கோட்பாடுகளை உருவாக்கும் திறன் படைத்தவர்களையேகோட்பாட்டாளர்கள் என்று சொல்ல முடியும் என்றும் அத்தகைய கோட்பாட்டாளர்கள்தான்நமக்குத் தேவை என்று மாவோ வலியுறுத்தினார். அதாவது நடைமுறைக்குப் பயனளிக்கத்தக்ககோட்பாடுகளை உருவாக்குபவர்கள்தான் நமக்குத் தேவை என்றார் மாவோ..
மார்க்சிய ஆசான்களின் நடைமுறையிலிருந்து உருவான கோட்பாட்டுகளை பயின்று நமதுநடைமுறைக்கு அதன் பொதுத்தன்மையை பொருத்தி குறிப்பாக நமது நடைமுறைக்கான கோட்பாடுகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே மாவோவின் வழிகாட்டுதலாகும்.
கோட்பாட்டிற்கும், நடைமுறைக்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது. அதனைபுரிந்துகொண்டு நடைமுறைக்கு பயனளிக்கத்தக்க கோட்பாட்டாளர்களாக வளர வேண்டியதுகம்யூனிஸ்டுகளின் கடமையாகும். ஆகவே கம்யூனிஸ்டுகள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்,ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்களின் நூல்களை படிக்க வேண்டும். அதே வேளையில்அவர்கள் வகுத்துக்கொடுத்த கோட்பாட்டின் அடிப்படையில் நடைமுறைப் போராட்டங்களில்ஈடுபட வேண்டும். அந்த நடைமுறையில் கிடைக்கும் அனுபவங்களை தொகுத்து புதிய கோட்பாடுகளை உருவாக்க வேண்டும்.
தொழிலாளி வர்க்கம் தனது கூலி உயர்வு போன்ற கோரிக்கைகளுக்காக மட்டும்போராடுவதோடு தனது போராட்டத்தை நிறுத்திக்கொள்ளக் கூடாது, சமூகத்தில் நடக்கும்கொடுமைகளை எதிர்த்தும் அத்தகைய கொடுமை செய்பவர்களை எதிர்த்தும் போராடுவதுஅவசியம் என்று லெனின் கொள்கை வகுத்துக் கொடுத்தார்.
இந்தப் பொதுக் கொள்கையை உள்வாங்கி இந்தியாவில் கம்யூனிஸ்டுகள், அவர்களால்தொழிற்சங்கங்களில் திரட்டப்பட்டுள்ள தொழிலாளர்களை அவர்களின் கூலி உயர்வு போன்றகோரிக்கைகளுக்காகப் போராடுவதோடு கூடவே இந்தி திணிப்பை எதிர்த்தும், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்தும், ஜிஎஸ்டி வரிக்கொள்கையை எதிர்த்தும், அரசுக்குச் சொந்தமானபொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரைவார்ப்பதை எதிர்த்தும் போராடுவதற்குஅணிதிரட்ட வேண்டும். இந்த வகையில்தான் மார்க்சிய ஆசான்களால் வகுத்துக் கொடுத்தகொள்கை கோட்பாடுகளில் பொதிந்துள்ள பொது உண்மைகளை உள்வாங்கி நாம் சந்திக்கும்அரசியல், பொருளியல் சிக்கல்களை தீர்ப்பதற்கு பொதுக்கோட்பாடுகளின் அடிப்படையில்அதாவது தொழிலாளி வர்க்கமானது தனக்காக மட்டுமல்லாது பொது மக்களுக்காகவும்மக்களுக்கு எதிராக செயல்படுத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட வேண்டும்என்ற பொது உண்மையின் அடிப்படையில் குறிப்பாக இந்திய சூழலில் நாம் சந்திக்கும்பிரச்சனைகளுக்குப் பொருத்தி செயல்பட வேண்டும்.
மாவோ வழிகாட்டுவது போல இந்தியாவின் வரலாறு, பொருளியல், அரசியல், இராணுவவிவகாரங்கள், மற்றும் பண்பாடு ஆகியவை பற்றிய தீவிரமான பயிலுதல் மூலம் மார்க்சிய-லெனினிய நிலைபாடு, நோக்குநிலை, மற்றும் வழிமுறையினை எவ்வாறு செயல்படுத்துவதுஎன்பதை கம்யூனிஸ்டுகள் கற்க வேண்டும். விரிவான தகவலின் அடிப்படையில் ஒவ்வொருசிக்கலையும் பருண்மையாக அலசி ஆராய்ந்து அதன் பின் கோட்பாட்டு முடிவுகளை வகுக்கவேண்டும். இந்த பொறுப்பை கம்யூனிஸ்டுகள் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியது அவசியமாகும். இதற்காக கம்யூனிச அமைப்பு முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்திய மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம்,கல்வி அறிவில்லாத நிலை, மருத்துவ வசதி கிடைக்காத நிலை, தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்கும்பிரச்சனைகள், தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள நிலை, விவசாயிகள்நாடோடிகளாக புலம்பெயர்ந்து வாழும் நிலை, இயற்கை சூழலைப் பற்றி கவலைப்படாமல்முதலாளிகள் தொழிற்சாலைகளை நிறுவி மக்கள் பாதிக்கப்படும் நிலை போன்ற பல்வேறுபிரச்சனைகளுக்கு கம்யூனிஸ்டுகள் தீர்வு கண்டு அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்துமக்களை திரட்டிட வேண்டும். அதற்கு கம்யூனிச அமைப்புகளிலுள்ள தோழர்களுக்கு வேலைப்பிரிவினை அடிப்படையில் ஒவ்வொருவருக்குமோ அல்லது ஒவ்வொரு சிறு குழுவிற்கோஒவ்வொரு பிரச்சனைகளை பிரித்துக்கொடுத்து பிரச்சனைகளையும் அதற்கான தீர்வுகளையும்கண்டுபிடிக்கச் சொல்வதன் மூலம் கம்யூனிச அமைப்பு முழுக்க ஈடுபடுத்தப்பட வேண்டும்.
இப்படிச் செய்து கட்சி முழுக்க உள்ள தோழர்கள் ஒவ்வொருவரும் இந்த மக்கள் சந்திக்கும்பிரச்சனைகளுக்கான தீர்வை மக்களிடம் பிரச்சாரமாக எடுத்துச் செல்ல முடியும். மக்களும்பிரச்சனைகளைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் விழிப்புணர்வு பெற்று மக்களுக்குஎதிரானவர்களை எதிர்த்துப் போராட முன்வருவார்கள்.
மாவோ மிகச் சிறந்த அறிவாளி என்பது எல்லோரும் அறிந்ததே. எனினும் சீன வரலாறு,பொருளியல், அரசியல், இராணுவ விவகாரங்கள், பண்பாடு ஆகியவை பற்றிய தீவிரமானபயிலுதலில் மார்க்சிய-லெனினிய நிலைபாடு, நோக்குநிலை மற்றும் வழிமுறையினை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை கற்குமாறும் விரிவான தகவலின் அடிப்படையில் ஒவ்வொரு சிக்கலையும் பருண்மையாக அலசி ஆராய்ந்து அதன் பின் கோட்பாடு முடிவுகளைவகுக்குமாறும் கட்சி அணிகளுக்கு மாவோ அறைகூவல் விடுத்தார். இந்த பொறுப்பை கட்சிமுழுக்கச் சுமந்தாக வேண்டும் என்றார்.
இதன் மூலம் கட்சி முழுக்க வரலாறு, பொருளியல், அரசியல், இராணுவ விவகாரங்கள்,பண்பாடு பற்றிய புரிதல் ஏற்படுவதற்கு பாடுபட வேண்டும் என்கிறார்.
இந்தியாவில் இதனை சாதிக்க வரலாற்றை ஆய்வு செய்ய ஒரு குழு, பொருளியலை ஆய்வுசெய்ய ஒரு குழு போன்று பல குழுக்களை உருவாக்கி ஆய்வு செய்வதன் மூலமே இந்தஆய்வுகள் முழுமை அடையும். இத்தகைய பணியை ஒரு சிறு குழுவால் செய்ய முடியுமா?
நிச்சயமாக முடியாது.
ஆனால் சிறு குழுவைச் சேர்ந்த தலைவர்கள் தங்களை லெனின் மற்றும் மாவோ போல்கருதிக்கொண்டு இதனை தன் ஒருவனால் மட்டும் செய்ய முடியும் என்று சொல்லி பலகாலங்களை வீணடித்துவிட்டார்கள். இனிமேலாவது இதனை உணர்ந்து தனது குழுமட்டுமல்லாது பிற குழுக்களோடும் இணைந்து இந்த சித்தாந்தப் பணியை செய்து நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையையும் தீர்ப்பதற்கான கோட்பாட்டு முடிவை அடைய முயலவேண்டும்.
கம்யூனிஸ்டுகள் மார்க்சியக் கோட்பாட்டை உயிரற்ற வறட்டுச் சூத்திரமாகப் பாவிக்கக் கூடாது.
மார்க்சியக் கோட்பாட்டில் முழுத் தேர்ச்சிப் பெற்று அதை செயல்படுத்துவது இன்றியமையாதது. மார்க்சியக் கோட்பாட்டை செயலாக்குதல் என்ற ஒரே செயல்நோக்கத்திற்காகவே அதில் முழு தேர்ச்சிப் பெறுவது இன்றியமையாதது. ஒருவர் ஒன்று அல்லதுஇரண்டு நடைமுறைச் சிக்கல்களைத் தெளிவாக்குவதில் மார்க்சிய-லெனினிய நோக்குநிலையைச் செயல்படுத்த முயன்றால் அவர் தகுதியுடைவராக ஆவார். மேலும்குறிப்பிட்ட அளவு சாதனையை படைத்தவராக பிறரால் நம்பப்படுவார். ஒருவர் எந்தளவுக்குசிக்கலை தெளிவாக்குகிராறோ, எந்தளவுக்கு அதனை விரிவாகவும் ஆழமாகவும் செய்கிராறோஅந்தளவுக்கு அவரின் சாதனை பெரியதாக இருக்கும்.மார்க்சிய கல்வியை பயின்றவர்கள் எவ்வாறு இந்தியாவின் சிக்கல்களை காண்கிறார்கள்என்பதற்கேற்ப, அவர்கள் அனைத்துச் சிக்கல்களையும் காண்கிறார்களா இல்லையா என்பதற்குஏற்பவே அவர்களை சிறந்தோர் என்றோ தாழ்ந்தோர் என்றோ தரப்படுத்த முடியும்.
ஆகவே ஒரு கம்யூனிஸ்ட் சிறந்த கம்யூனிஸ்டாக ஆகவேண்டும் என்றால், அவர் முதன்மையாகமார்க்சிய கல்வியைப் பெற்றிருக்க வேண்டும். அதற்கு கம்யூனிச அமைப்பானது மார்க்சியகல்வியை அணிகளுக்கு கற்றுக்கொடுக்க மார்க்சியப் பள்ளிகளை சீனக் கம்யூனிஸ்டு கட்சிஉருவாக்கியது போல உருவாக்க வேண்டும். அத்தகைய பள்ளியில் பயின்ற மாணவர்களுக்குஇந்தியாவிலுள்ள அனைத்துச் சிக்கல்களையும் காண்பதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன்மூலம் மட்டுமே இந்தியாவில் சிறந்த கம்யூனிஸ்டுகளை உருவாக்க முடியும்.
இதனை கம்யூனிச அமைப்புகள் செய்யத் தவறியதால் சிறந்த கம்யூனிஸ்டுகள்உருவாகவில்லை. குழுக்களின் தலைவர்களைச் சார்ந்து செயல்படுபவர்களாகவேகுழுக்களிலுள்ள உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களால் மக்களுக்கு தலைமைதாங்கவோவழிகாட்டவோ இயலாத நிலையில், கம்யூனிஸ்டுகள் வளராமலும், மக்களின் செல்வாக்கைப்பெறாமலும் உள்ளனர்.
அறிவுஜீவிகளைப் பற்றி மாவோ கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்:- "சீனா ஒரு அரைக்காலனிய- அரை நிலவுடமை நாடாக இருப்பதாலும் அதன் பண்பாடு நன்றாக வளராததாலும்அறிவுஜீவிகள் குறிப்பாகவே புதையலைப் போன்றவர்கள். கட்சியின் மையக் குழுவானதுபெருமளவில் அறிவுஜீவிகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் புரட்சியாளராகஇருந்து ஜப்பான் எதிர்ப்புப் போரில் பங்கெடுக்க விரும்புவார்கள் என்றால் அவர்கள்அனைவரையும் வரவேற்க வேண்டும் எனவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பேயேஅறிவுஜீவிகள் பற்றிய சிக்கலின் மீது முடிவை மேற்கொண்டது. அறிவுஜீவிகளை உயர்வாகக்கருதுவது நம்மைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாகவே சரியானதே. ஏனெனில் புரட்சிகரஅறிவுஜீவிகள் இல்லாமல் புரட்சியை வெல்ல இயலாது. ஆனால் பல அறிவுஜீவிகள் மிகவும்கற்று அறிந்தவராக தம்மை கற்பனை செய்துகொண்டு புலமை குறித்த இறுமாப்பைப் புனைந்துகொள்வோராக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர்கள் அத்தகைய இறுமாப்புகள்தீயவை என்பதையும் மோசமானவை என்பதையும் தங்களின் சொந்த முன்னேற்றத்திற்கேகுந்தகமாக இருக்கும் என்பதையும் உணர்வதில்லை. உண்மையில் அறிவுஜீவிகள் என அழைக்கப்படுகின்ற பலர் ஒப்பு நோக்கி பேசுகையில் மிகவும் அறியாமையில் உள்ளனர் மற்றும்சில நேரங்களில் தொழிலாளர்களும் உழவர்களும் அவர்களை விடவே அதிகமாகஅறிந்திருக்கின்றனர். என்ற பேருண்மையை நாம் புரிந்துகொண்டு விழிப்போடு இருக்கவேண்டும். ஆனால் இது விசயங்களை தலைகீழாகப் புரட்டி பேசுவதாக சிலர் கருதலாம்.ஆனால் இதில் கொஞ்சம் பொருள் உள்ளது". -மாவோ-
சீனா ஒரு அரைக்காலனிய-அரைநிலவுடமை நாடாக மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது.அது போலவே இந்தியாவும் ஒரு பின்தங்கிய நாடாகவே உள்ளது. இந்தியாவில் கல்விஅறிவற்ற மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஆகவே இங்கே அறிவாற்றல் மற்றும்பண்பாடு நன்றாக வளராத நிலையிலேயே உள்ளது. ஆகவே இந்திய சமூக மாற்றத்தில் அறிவுஜீவிகளின் பங்களிப்பு அதிகமாகவே தேவைப்படுகிறது. ஆகவே இந்தியாவிலுள்ளகம்யூனிச அமைப்புகளுக்குள் சீனாவைப் போலவே அதிக அளவில் அறிவுஜீவிகளை ஈர்க்கவேண்டும். அறிவுஜீவிகளும் இந்திய சமூக மாற்றத்திற்காக தம்மை அற்பணிக்க வேண்டும்.
அதன் மூலம் மட்டுமே இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளால் ஒரு சமூக மாற்றத்தைகொண்டுவர முடியும். இந்தியாவில் புரட்சிகர அறிவுஜீவிகளின் பங்களிப்பு இல்லாமல் சமூகமாற்றம் சாத்தியமே இல்லை. ஆனால் இங்குள்ள அறிவுஜீவிகளில் பலர்தலைகனம்பிடித்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் மிகச் சிறந்தஅறிவாளிகளாக இருந்தாலும் பரந்துபட்ட உழைக்கும் மக்களின் உணர்வுப்பூர்வமான ஒன்றுபட்ட போராட்டம் இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது என்ற உண்மையைஅவர்கள் உணர வேண்டும். ஆனால் இந்த உண்மையை அறியாத அறியாமையில்உள்ளவர்களாகவே இந்திய அறிவுஜீவிகள் உள்ளனர். அதே வேளையில் சிலதொழிலாளர்களும், விவசாயிகளும் கூட இந்த அறிவுஜீவிகளைக் காட்டிலும் சிலபிரச்சனைகளை சரியாகவே அறிந்திருக்கின்னர். ஆகவே அறிவுஜீவிகளை பெருமளவுகம்யூனிச அமைப்பிற்குள் கொண்டுவர வேண்டும், அதேவேளையில் அவர்களிடத்திலுள்ள தீயகுணங்களை சமூக மாற்றத்திற்கு கேடுசெய்யும் குணங்களை கைவிடச் சொல்லி தொடர்ந்துபோராட வேண்டும். என்பதை சீன புரட்சியின் அனுபவத்திலிருந்தும் மாவோவின்வழிகாட்டுதலில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
...தொடரும்.... தேன்மொழி