தற்காலத்திய அரசுகள் அனைத்தும் ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை முதலாளிகள் சுரண்டுவதை பாதுகாப்பதற்கான நிறுவனங்களாகவே உள்ளன என்ற கருத்தை காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற கம்யூனிச தத்துவத்தை உருவாக்கி வளர்த்த தலைவர்களால் சொல்லப்பட்டவற்றை மீண்டும் விளக்கம் கொடுத்து லெனின் தனது அரசும் புரட்சி போன்ற நூல்களில் விளக்கியுள்ளார். இதன் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? காரல்மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்றவர்களால் வழிகாட்டப்பட்ட கோட்பாடுகளை அடிப்படையில் சமூகத்தை மாற்றுவதற்கான கோட்பாடுகள் என்ற உண்மையை லெனின் நன்கு உணர்ந்திருந்தார். ஆகவே லெனினால் உருவாக்கப்பட்ட கொள்கைகளுக்கு மார்க்சிய கோட்பாடுகளையே ஆதாரமாகக் கொண்டு சிந்தித்து முடிவெடுத்து அதனையே ரஷ்ய மக்களுக்கு போதித்து, ரஷ்ய மக்களை திரட்டி போராடி ரஷ்யாவில் முதலாளி வர்க்கத்தின் ஆட்சியை தூக்கியெறிந்து உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவினார். ஆகவே நாமும் நமது மார்க்சிய ஆசான்களான காரல்மார்க்ஸ், எக்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களால் சமூக மாற்றத்திற்காக முன்வைக்கப்பட்ட கருத்துகளை ஆழமாக படித்து புரிந்துகொண்டு, நமது நாட்டின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்த்து நாம் தற்போதுள்ள மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை நிறுவுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.
சமூதாயத்திற்கு மேலானதாக நிற்கும், தனிவகைப்பட்ட பொது அதிகாரத்தைக் கொண்ட அரசின் பராமரிப்புக்காக அரசானது மக்களிடமிருந்து வரி வசூல் செய்கிறது, மேலும் அரசானது கடன்களும் வாங்குகிறது. பொது அதிகாரமும், வரிகள் வசூலிக்கும் உரிமையையும் பெற்ற அதிகாரிகள் சமுதாயத்தின் ஆட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் சமுதாயத்திற்கு மேலானவர்களாக நிற்கிறார்கள். என்று எங்கெல்ஸ் எழுதினார்.அன்று எங்கெல்ஸ் எழுதியது இன்றும் உண்மையாய் இருப்பதை நாம் பார்க்கலாம். பொதுவாகவே நம்நாட்டிலுள்ள அரசு அதிகாரிகள் (கடைநிலை போலீஸ் ஊழியன் கூட) மக்களை மதிப்பதில்லை. மக்களை புழு பூச்சிகளாகவே பார்ப்பதை நாம் காணலாம். அதே வேளையில் பணம் படைத்தவர்களிடம் கைகட்டி அடிபணிந்து நிற்பதையும் காணலாம்.
புராதன (குலச்) சமுதாயத்தில் அந்த குல மக்களிடையே ஏழை, பணக்காரன் வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயமாக இருந்த போது, அங்குள்ள மூத்தவர்களுக்கும், அனுபவமிக்கவர் களுக்கும் அந்த சமூகத்தில் வாழ்ந்த மக்கள் எவ்விதமான வற்புறுத்தலுமின்றி மதித்து மரியாதை கொடுத்தார்கள். அவற்றோடு ஒப்பிடும்போது தற்கால அரசாங்க அதிகாரிகள் அரசு அதிகாரத்தின் மூலம் மக்களை அச்சுறுத்தி மக்களிடமிருந்து மதிப்பை பெறுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு புனிதமான அதிகாரத்திற் காகவும், அவர்களின் மேலான உரிமைகளுக்காகவும் தற்கால அரசானது சட்டம் இயற்றி, அந்த சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று மக்களை கட்டாயப்படுத்துகிறது.
கீழ் நிலையிலுள்ள போலீஸ் ஊழியனுக் குக்கூட, அன்றைய குலத்தின் பிரதிநிதிகளைக் காட்டிலும் செல்வாக்கு இருக்கிறது. ஆயினும் குலத்தின் மூத்த பிரதிநிதிகளுக்கு சமூதாயம் அளித்த வலுக்கட்டாயமற்ற மதிப்பையும் மரியாதை யும் கண்டு, நாகரிக அரசின் இராணுவ அதிகாரத்தின் தலைவருங்கூட பொறாமை கொள்வார். அதாவது தற்கால அரசின் அதிகாரிகளுக்கு மக்கள் கொடுக்கும் மரியாதையானது போலியானதாகும். மக்கள் அதிகாரிகளை விட்டு விலகி நிற்க்கும் போது, இந்த அதிகாரிகளை வெறுத்து வசைபாடுவதை நாம் காணலாம். இந்த உண்மை இந்த அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
அரசு அதிகார உறுப்புகளான அதிகாரிகளை சமுதாயத்துக்கு மேலானவர்களாக அமர்த்துவது எது? இந்த தத்துவார்த்தப் பிரச்சனைக்கு 1871ல்பாரீஸ்கம்யூன் நடைமுறையில் எவ்வாறு தீர்வு கண்டது என்பதையும் பிற்போக்கான மற்றும் திருத்தல்வாத நிலையிலிருந்து 1912ல் காவுத்ஸ்கி எப்படி இதனை மூடி மறைத்தார் என்பதை தெரிந்து கொள்ளுவதன் மூலமே நாம் இன்றைய திருத்தல்வாதிகள் அரசு பற்றிய மார்க்சியக் கொள்கையை காவுத்ஸ்கியைப் பின்பற்றி எப்படி திருத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
வர்க்கப் பகைமைகளைக் கட்டுப்படுத்து வதன் அவசியம் காரணமாய் அரசு உதித்தது என்பதினாலும், அதேபோதில் இந்த வர்க்கங்களுக்கு இடையிலான மோதல் களிலிருந்தே அது உதித்தது என்பதனாலும், பொதுவாக அது மிகப்பெரிய பலம் படைத்த, பொருளாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாகிவிடுகிறது. அதாவது வர்க்கப் பகைமையை கட்டுப்படுத்துவதற்காகவும், வர்க்கங் களுக்கு இடையே மோதல்கள் நடந்து கொண்டிருப்பதாலும் உருவான அரசானது சமூகத்தில் பொருளாதார பலம் படைத்த வர்க்கங்களுக்கு சாதகமான அரசாக உருவாகிறது அல்லது மாறிவிடுகிறது. அரசின் உதவியால் இவ்வர்க்கம் பொருளாதாரத் துறையில் மட்டுமல்லாது அரசியல் துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கமாகிவிடுகிறது. அதன் மூலம் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை அடக்கி வைப்பதற்கும் சுரண்டுவதற்கும் இதன் மூலம் புதிய சாதனம் அல்லது கருவியை பொருளாதார பலம் உள்ள வர்க்கங்கள் பெற்றுக்கொள்கின்றன. அதாவது இந்த வர்க்கங்களின் பொருளாதார பலத்தின் காரணமாக உதாரணமாக முதலாளி களிடமுள்ள மூலதனத்தின் பலத்தின் காரணமாக அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் தொழிலாளர்களை கூலி அடிமையாக்கி ஒடுக்கி சுரண்டுகிறார்கள். ஆகவே முதலாளிகள் தங்களது சொந்த நிறுவனங்களில் பொருளாதாரரீதியாக தொழிலாளர்கள் ஒடுக்குகிறார்கள். அதற்கு அவர்களால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்கள் ஒரு கருவியாக இருக்கிறது. கூடுதலாக இந்த அரசை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக பலாத்காரத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களைஒருக்குவதற்கான அரசை மற்றொரு கருவியாக முதலாளிகள் பயன் படுத்துகின்றனர். இந்த இரண்டு கருவிகள் மூலமே முதலாளிகள் உழைக்கும் மக்களை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒடுக்குகிறார்கள்.
புராதன அதாவது ஆண்டான் அடிமை அரசுகளும், நிலப்பிரபுத்துவ அரசுகளும் அடிமைகளையும், பண்ணையடிமை களையும் சுரண்டுவதற்கான அமைப்பு களாய் இருந்தன. இதே போல ''நவீன காலப் பிரதிநித்துவ அரசு'' கூலி உழைப்பை மூலதனம் சுரண்டுவதற்கான கருவியாய் இருக்கிறது. தற்போதும் ஏழை உழைக்கும் மக்கள் அரசு அலுவலங்களுக்குச் சென்று தங்களது கோரிக்கைகளை அரசு அதிகாரிகளிடம் சொன்னால், அரசு அதிகாரிகள் சட்டை செய்வதே இல்லை. அந்த கோரிக்கை மனுக்களை குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஆனால் பணம் படைத்தவர்கள் கோரிக்கை வைத்தால் அவர்களது கோரிக்கைகளை உடனடியாக அரசு அதிகாரிகள் தீர்த்துவிடுகிறார்கள். இந்த வகையில்தான் பணக்கார முதலாளிகள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பணக்காரர்கள் அவர் களது காரியத்தை சாதித்துக் கொள் கிறார்கள். ஆகவே இந்த முதலாளிகளின் அரசியல் ஆதிக்கத்தை ஒழிக்காமல் லஞ்சத்தை ஒழிக்க முடியாது என்று மார்க்சியம் தெளிவாகச் சொல்லுகிறது. இதற்கு மாறாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலின் போது ஊழலை ஒழிப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வருகின்றன. ஆனாலும் அவர்கள் ஊழலை ஒழிப்பதில்லை, மாறாக ஊழலுக்குத் துணைபோவதை நடை முறையில் நாம் பார்க்கிறோம். இத்தகைய ஊழலை உழைக்கும் வர்க்கத்திற்கான ஆட்சிமுறையில்தான் நாம் ஒழிக்க முடியும். எனினும் உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி முறையிலும் உழைக்கும் வர்க்கமும், அதற்காகப் பாடுபடும் கம்யூனிஸ்டுகளும் ஒவ்வொரு கணமும் விழிப்போடு இருந்து ஊழல் எங்கு தோன்றினாலும் அதனை எதிர்த்துப் போராடுவதன் மூலமும், ஆட்சியில் இருக்கும் அரசு அதிகாரிகளைதொடர்ந்து கண்காணித்து தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து உழைக்கும் மக்களின் அரசை தொடர்ந்து பாதுகாப்பதன் மூலமுமே ஊழலை ஒழிக்க முடியும். உழைக்கும் மக்களும் கம்யூனிஸ்டு களும் சிறிது கவனம் தவறினாலும், உழைக்கும் மக்களின் அரசுக்குள்ளேயே ஊடுருவிவிட்ட முதலாளித்துவ பாதை யாளர்கள் கம்யூனிஸ்டு கட்சியையும் அதன் ஆட்சியையும் கைப்பற்றி ஊழல் மிகுந்த முதலாளித்து ஆட்சியை மீட்டெடுத்து விடுவார்கள்.
ஆனால் விதிவிலக்காய் சில காலங்கள் ஏற்படுவதுண்டு. ஒன்றோடொன்று போரிடும் வர்க்கங்கள் ஒன்றுக்கொன்று ஏறத்தாழ சமநிலை பெறும் இக்கட்டங்களில் அரசு அதிகாரம் வெளித் தோற்றத்துக்கு நடுவர் போலாகி, சொற்ப காலத்துக்கு இரு தரப்பாரிடமிருந்தும் அதாவது முதலாளிகள், உழைப்பாளிகள் ஆகிய இருதரப்பாரி டமிருந்தும் விலகி ஓரளவுக்கு சுயேச்சை உடையதாகிறது. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் வரம்பற்ற முடியாட்சி முறையும், பிரான்சில் முதலாவது, இரண்டாவது சாம்ராஜ்யங்களது போனப்பார்ட் ஆட்சியும், ஜெர்மனியில் பிஸ்மார்க் ஆட்சியும் இத்தகையவையே.
குடியரசு ரஷ்யாவில் அதாவது சோசலிச சோவியத் குடியரசு உருவாவதற்கு முன்பு செயல்பட்ட கெரென்ஸ்கி தலைமையிலான ஆட்சியானது குட்டிமுதலாளித்துவ தன்மை கொண்டு செயல்பட்டதன் காரணமாகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சோவியத்துகள் பலமிழந்து வந்த சூழல், எனினும் அதனை கலைத்திட கெரென்ஸ்கி அரசாங்கம் இன்னும் பலம் பெறாத சூழலில், அந்த அரசு பாட்டாளிவர்க்கத்தின் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்தது போன்ற அரசின் சூழலும் இத்தகயதே ஆகும்.
இந்தியாவிலும் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு எழுந்த கப்பல்படை வீரர்களின் எழுச்சியின் காரணமாகவும் மக்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கு வளர்ந்து வந்ததன் காரணமாகவும் பிரிட்டீஷாரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு சவால் விட்டு போராடியதன் காரணமாக பிரிட்டீஷார் இந்தியாவை விட்டு வெளியேறினர். அதன் பின்பு ஆட்சிக்கு வந்தநேரு எழுச்சிபெற்ற மக்களின் உணர்வுகளை மட்டுப்படுத்த ஏகாதிபத்திய வாதிகளின் ஆலோசனையைக் கேட்டு இந்த அரசானது மக்களின் நலனுக்கான அரசாக அறிவித்து மக்களுக்கு சில சலுகைகளை கொடுத்து செயல்பட்டது. இந்த அரசும் போனப்பார்ட் அரசுவகையைச் சேர்ந்ததாகும். தற்போது உழைக்கும் வர்க்கங்களுக்கான கம்யூனிச அமைப்புகள் பலவீனமாகவும் ஒற்றுமையின்றி சிதறி இருக்கின்ற காரணத்தால் முதலாளி வர்க்கங்கள் பா.ஜ.க. ஆட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கங்களுக்கு எதிரான தாக்குதல்களை ஒவ்வொரு நாளும் தொடுத்துக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கலாம். ஆகவே உழைக்கும் வர்க்கங்களும் கம்யூனிஸ்டுகளும் ஓர் அணியில் திரண்டு போராடும்போதுதான் குறைந்தபட்சம் இந்த அரசுக்கு எதிராக சம பலம் உள்ளவர்களாக உழைக்கும் மக்கள் அணிதிரளும் போதுதான். இந்த அரசு மக்கள் மீது தொடுக்கும் தாக்குதல்களை கைவிட்டு பின்வாங்குவார்கள்.
ஜனநாயகக் குடியரசில் ''செல்வமானது, (மூலதனமானது), மறைமுகமாய், ஆனால் முன்னிலும் திடமாய் அதிகாரம் செலுத்துகிறது''. முதலாவதாக ''நேரடியாய் அதிகாரிகளுக்கு லஞ்சம் தருவதன் மூலமும்'' (அமெரிக்கா), இரண்டாவதாக ''அரசாங்கத்தை பங்கு மார்க்கட்டுடன் கூட்டுச் சேரச் செய்வதன் மூலமும்'' (பிரான்சும் அமெரிக்காவும்) அது அதிகாரம் செலுத்துகிறது.
எல்லா வகையான ஜனநாயகக் குடியரசு களிலும் தற்போது ஏகாதிபத்தியமும் வங்கிகளுடைய ஆதிக்கமும், செல்வத்தின் (மூலதனத்தின்) வரம்பில்லா அதிகாரத்தை பாதுகாப்பதற்கும் செயல்படுத்து வதற்குமான இவ்விரு வழிகளையும் தனிப்பெருங் கலையாய் ''வளரச் செய்து விட்டன'' இவ்வாறுதான் மூலதனத்தை உடமையாகக் கொண்ட செல்வந்தர்கள் அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து அரசிலும், அரசாங்கத்திலும் செல்வாக்கை வளர்த்து ஆதிக்கம் செய்வதை இன்றும் நாம் பார்க்கலாம். உதாரணமாக அதானி அம்பானி போன்றவர்கள் கொள்ளையடிப்பதற்காக மூன்று வேளாண் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார்களே? அதற்கு என்ன காரணம் இந்த பெருமுதலாளிகள் கவனிக்க வேண்டியவர்களை கவனித்ததன் மூலமே பெருமுதலாளிகளுக்கு சாதகமான கொள்கையை இந்த அரசாங்கம் சட்டமாக்கி நடைமுறைப்படுத்துகிறது. இது இந்த பெருமுதலாளிகளின் செல்வத்தின் (மூலதனத்தின்) ஆதிக்கத்தை காட்ட வில்லையா? மக்களிடம் ஓட்டு வாங்கி உருவான அரசாங்கமாக இருந்தாலும் இந்த அரசாங்கமானது பெருமுதலாளிகளுக்கு கட்டுப்பட்ட அரசாங்கமாகவே இருக்கிறது. ஏழை சொல் அம்பலமேறாது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த அரசாங்கத்தின் காதுகளில் ஏழைகளின் கோரிக்கைகளுக்கு எவ்விதமான மரியாதையும் இருக்காது என்பதை தற்போது பெருவாரியான மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
இந்த அரசாங்கத்தில் ஜனாதிபதி போன்ற பதவிகளில் இஸ்லாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவை சேர்ந்தவர் களுக்கு லட்சக்கணக்கில்சம்பளம் கொடுத்து உயர்ந்த அரசியல் பதவிகளில் அமர்த்து கிறார்கள். அதன் மூலம் இந்த அரசாங்க மானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசாக காட்டப்படுகிறது. ஆனால் இந்த அரசாங் கத்தால் பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்படும் மக்களுக்காக எதையுமே செய்ததில்லை என்று நாம் பார்க்கிறோம். அதற்கு மாறாக இந்த முதலாளிகளின் கொள்கையை செயல்படுத்துவதற்கு இந்த அரசாங்கத்து துணை போனதுதான் வரலாறாக இருக்கிறது. ஆகவே நாம் ஓட்டுப்போட்டு ஆட்சியை மாற்றினாலும் இந்த பெருமுதலாளிகள் ஆட்சிக்கு வந்த அரசியல்வாதிகளை பெருமுதலாளிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விடு வார்கள். அதனை மக்களால் தடுக்க முடியாது. ஐந்து வருடங்கள் இந்த ஆட்சி முதலாளிகளுக்காகவே நடக்கும். அதற்குப் பிறகு தேர்தலில் வேறு அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் அவர்களும் அடுத்த ஐந்து ஆண்டுகள் பெருமுதலாளிகளுக்காகவே ஆட்சியை தொடர்வார்கள். இதுதான் கடந்தகால வரலாறாகும். செல்வத்தின் (மூலதனத்தின்) ஆதிக்கத்தை ஒழிக்கும்வரை இந்த கொடுமைகள் தொடரும்.ஜனநாயகக் குடியரசில் செல்வத்தின் சக்ராபதித்தியம் (ஆதிக்கம்) மேலும் உறுதியாகிவிடுகிறது. காரணம் என்ன வெனில், அரசியல் பொறியமைவில் (அரசு இயந்திரத்தின்) தனிப்பட்ட குறைபாடு களையோ, முதலாளித்துவத்தின் மோசமான அரசியல் கவசத்தையோ அது ஆதாரமாகக் கொண்டிருக்கவில்லை என்பதுதான். முதலாளிகளுக்கு ஜன நாயகக் குடியரசுதான் மிகச் சிறந்த அரசியல் கவசமாகும். ஆகவே மூலதனம் இந்த மிகச் சிறந்த கவசத்தை (நேரு, இந்திரா காந்தி, அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் போன்றவர்களின் மூலம்) பெற்றுக்கொண்ட உடன் அது முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசின் ஆட்களிலிலோ, நிறுவன ஏற்பாடுகளிலோ, கட்சிகளிலோ ஏற்படும் எந்த மாற்றத்தாலும் அசைக்க முடியாதபடி திடமாகவும் உறுதியாகவும் தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்கிறது. அதாவது முதலாளித்துவ பாராளுமன்றம்தான் முதலாளிகளின் சுரண்டலையும் அவர் களின் ஆதிக்கத்தையும் மறைப்பதற்கு மூடுதிரையாகப் பயன்படுகிறது. ஆகவே இந்த பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறினாலும், புதிய சட்டங்கள் மற்றும் நிறுவன அமைப்புகள் மாறினாலும் பெருமுதலாளி களின் அரசியல் ஆதிக்கத்தை ஒன்றும் செய்யமுடியாது என்பதுதான் உலக வரலாறாக இருக்கிறது.
அனைத்து மக்களுக்குமான வாக்குரிமை என்பது முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கத்திற்கான கருவி என்று எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.ஜெர்மன் சமூக ஜனநாயகத்தின் நீண்டகால அனுபவத் திலிருந்து கீழ்கண்டவாறு எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.
அனைத்து மக்களின் வாக்குரிமை'' தொழிலாளி வர்க்கத்தினுடைய முதிர்ச்சி யின் அளவுகோலாகும். தற்கால அரசில் அது இதற்குமேல் எதுவுமாக இருக்காது, இருக்கவும் முடியாது''
நமது சோசலிசப் புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகளையும் போன்ற குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளும், இவர்களுடைய உடன் பிறந்த சகோதரர்களான மேற்கு ஐரோப்பிய சமூகதேசிய வெறியர்கள், சந்தர்ப்பவாதிகள் அனைவரும் அனைத்து மக்களின் வாக்குரிமையிடமிருந்து இதற்கு ''மேற்பட்ட'' ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். ''இன்றைய அரசில்'' அனைத்து மக்களின் வாக்குரிமை உழைப்பாளி மக்களில் பெரும்பாலோரின் சித்தத்தை மெய்யாகவே புலப்படுத்திக் காட்ட வல்லது, இந்த சித்தம் நிறைவேற வழி செய்ய வல்லது என்ற பொய் கருத்தை இவர்கள் கொண்டுள்ளனர். மக்களுக்கும் இதனை ஊட்டி வருகின்றனர்.
உழைக்கும் வர்க்கம் விழிப்படைந்து போராடியதன் காரணமாக உருவானதுதான் அனைத்து மக்களுக்கு வாக்குரிமை. இதன் மூலம் மக்கள் தங்களின் விருப்பங்களை தெரிவிக்க முடியும். ஆனால் மக்களின் விருப்பங்களை இதன் மூலம் செயல்படுத்த முடியாது என்பதை எங்கெல்சும், லெனினும் தெளிவாக விளக்கியுள்ளார்கள். மேலும் சந்தர்ப்பவாதிகள் இந்த வாக்குரிமையைப் பயன்படுத்தி மக்களின் விருப்பங்களை செயல்படுத்த முடியும் என்ற பொய்யான கருத்தை மக்களிடம் பரப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர்கள் விளக்கியுள்ளனர்.எங்கெல்ஸ், மற்றும் லெனினது இந்த கருத்தை திருத்தி புரட்டுபவர்கள்தான் திருத்தல்வாதி களாவார்கள்.
''ஆகவே அரசு அனாதிக் காலம் முதலாய் இருந்துள்ள ஒன்றல்ல. அரசின்றியே நிலவிய சமுதாயங்கள், அரசையும் அரசு அதிகாரத்தையும் அறியாத சமுதாயங்கள் இருந்திருக்கின்றன. பொருளாதார வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் (சமுதாயம் வர்க்கங்களாய் பிளவுண்ட துடன் இணைந்த ஒரு கட்டத்தில்) அரசு இந்தப் பிளவின் காரணமாக இன்றி யமையாததாகியது. இந்த வர்க்கங்கள் பொருளுற்பத்திக்கு இன்றியமையாத் தேவையாக இருப்பது மறைவதோடு, நேரடியாக இடையூறாகிவிடும் கட்டத்தைப் பொருளுற்பத்தி வளர்ச்சியில் இப்பொழுது நாம் விரைவாய் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம். முந்தைய ஒரு கட்டத்தில் வர்க்கங்கள் தவிர்க்க முடியாதவாறு உதித்தெழுந்தது போலவே, தவிர்க்க முடியாதவாறு அவை மறைந்தொழியும். அவற்றுடன் கூடவே அரசும் தவிர்க்க முடியாதவாறு மறைந்தொழியும்.சமுதாயமானது உற்பத்தியாளர்களுடைய சுதந்திரமான, சரிசமத்துவமான கூட்டமைப் பின் அடிப்படையில் பொருளுற்பத்தியைப் புனரமைத்து, அரசுப் பொறியமைவு அனைத்துமே அதற்கு அப்பொழுது உரித்தானதாகிவிடும் இடத்தில், அதாவது தொல்பொருள் காட்சிக் கூடத்தில், கைராட்டைக்கும் வெண்கலக் கோடாரிக்கும் பக்கத்தில் கொண்டுபோய் வைத்துவிடும்''.
இன்றைய சமூக ஜனநாயகவாதிகளின் (கம்யூனிஸ்டுகளின்) பிரச்சார, கிளர்ச்சி வெளியீடுகளில், இந்த மேற்கோளைக் காண்பது அரிதாகிவிட்டது. அப்படி இது காணப்படும்போது கூட, பூஜையறைப் படத்தை தொழுகின்றவரின் பாணியிலே தான், அதாவது சம்பிரதாய முறையில் எங்கெல்சுக்கு மரியாதை செலுத்தும் பாணியில்தான் பெரும்பாலும் எடுத்தாளப் படுகிறது. ''அரசுப் பொறியமைவு (அரசு எந்திரம்) அனைத்தையும் தொல்பொருள் காட்சிக் கூடத்தில்'' கொண்டுபோய் வைப்பதில் அடங்கியுள்ள புரட்சியின் வீச்சையும் ஆழத்தையும் மதிப்பிட்டறிய எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. அரசுப் பொறியமைவு என்று எங்கெல்ஸ் குறிப்பிடுவதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதாகக் கூட பல சந்தர்ப்பங்களில் தெரியக் காணோம். இன்றைய கம்யூனிஸ்டு கள் அரசு பற்றிய மார்க்சியம் கூறிய உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதில்லை.தங்களுடைய அணிகளுக் குக் கூட அதனை போதிப்பதில்லை. எப்படி வர்க்கங்கள் தோன்றி அரசு உருவானதோ அதேபோல் வர்க்கங்கள் ஒழிந்து அரசும் மறைந்துபோகும் என்று மார்க்சியம் கூறும் உண்மையை மக்களிடம் கொண்டுசெல்ல கம்யூனிஸ்டுகள் தவறுகிறார்கள். மேலும் வர்க்கங்கள் ஒழிவது தானாக, தன்னியல் பாக நடக்காது. அதற்காக மக்கள் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் போராடி சோசலிச அரசை அமைப்பதன் மூலமே இதனை சாதிக்க முடியும் என்ற உண்மை யை மக்களிடம் கொண்டுசெல்ல கம்யூனிஸ்டுகள் தவறுகிறார்கள். இந்த அரசுப் பொறியமைவை அகற்றிவிட்டு அதனை தொல்பொருள் காட்சியகத்தில் வைப்பதை நோக்கி கம்யூனிஸ்டுகள் செயல்பட வேண்டும். அதற்காக மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டி மக்களைத் திரட்ட வேண்டும்….. தேன்மொழி.......