செப்டம்பர் 12 தியாகி தின நாளில் கற்றதும் பெற்றதும்- சிபி

 


தோழர்களே செப்டம்பர் 12 சிறப்பிதழ் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அதில் அன்றை நக்சல்பாரி எழுச்சியும் அதன் முன்னணி தோழர்களின் செயல்களை விவரித்ததோடு அன்று பங்கு கொண்ட இன்றுள்ள தோழர்களையும் நேர்காணல் கண்டேன் இருந்தும் அதன் சாதகம் பாதகம் கருதி பெயரில் வெளிவிட முடியாமைக்கு வருந்தும் அதே வேளையில் தோழர்களின் கருத்துகளை தொகுத்து வழங்க நினைக்கிறேன். அங்கே கண்டதையும் பெற்றதும் அடிப்படையில் சில விவாதங்களை தொடங்க நினைக்கின்றேன். புரட்சிக்கான கட்சி என்பவர்கள் தங்களிடையே ஒற்றுமையை சாதிக்காத பொழுது எங்கே மக்கள் மத்தியில் ஒற்றுமைக்காக பாடுபட போகின்றனர். பிற்போக்குவாதிகள் உடன் ஐக்கிய முன்னணி கட்டியுள்ள இவர்கள் ;நேற்று வரை இவர்கள் உடன் பயணித்த சக தோழர்களுடன் முன்னணி கட்டுவதில் என்ன பிரச்சனை. தன்னுடன் பயணித்து ஒரு தோழரை அரவணைத்து செல்வதற்கு கட்சியில்குழுவில் உள்ள திறமையற்ற போக்குதான் என்பேன். அவரை விமர்சித்து அவரை சரிப்படுத்த வேண்டியது அக்குழுவின் அவசியம் அப்படி சரிப்படாத போது அவரை வெளியேற்றி சரியான முறையில் விமர்சித்து இருக்க வேண்டும். தனித்தனி குழுக்களாக இயங்குவதால் எந்த பயனும் இல்லை என்பதே லெனினியம். அப்பு பாலன் சிலைக்கு மாலை போட ஏணியை கூட கொடுக்க மறுத்து நீங்கள் எங்கே ஒன்றுபட்ட போராட்டக் களத்தில் இணைந்து செயல்படப் போகிறீர்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியானது அன்றைய காலத் தேவைக்காக உருவாக்கப்பட்டது மற்றும் கட்டப்பட்டதும் சரியானதாக தெரிந்தாலும் உண்மையான நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்சி கட்டப்படவில்லை. சீனாவில் போல இந்திய நிலைகளையும் அனுமானித்து அவற்றை பெயர்த்தெடுத்து இங்கே பொருத்தியது தவறானதாக காலத்தால் புரிய வைத்துள்ளது.இன்று நமது புரட்சிகர அமைப்புகள் இடையே உள்ள சில போக்குகளை சுருக்கமாக காண்போம் இவை எனது தேடுதலான நேர்காணலில் தோழர்களிடம் நான் பெற்றவைதான்.

அகில இந்திய காங்கிரஸ்க்கு 1969ல் கூடிய பிறகு மத்தியகுழு ஒருமுறை கூட கூட்டவே இல்லை. கட்சியின் அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள் வேலை முறை ஆகியவை அனைத்தும் தோழர் சாரு அவர்களால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டு லிபரேஷன் ஏட்டில் மூலமாக நேரடியாக வழி காட்டப்பட்டது. மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை போன்று சாருவின் சிந்தனையும் புரட்சிகரமான கருத்தாக தோழர்கள் கருதினர். இந்த சிந்தனை முறையில் இருந்து அதிகாரவர்க்க போக்கு தோன்றியது. சமூக வளர்ச்சி விதி பற்றிய இயக்கம் மறுப்பில் கண்ணோட்டமே கட்சியில் அன்று மேலோங்கியது. இந்தக் கண்ணோட்டத்தின் விளைவாக அமைப்பு துறையின் கீழ் கண்ட தவறுகள் நேர்ந்தன.

1). அதிகாரவர்க்க போக்கு காரணமாக கட்சியின் தலைமை கமிட்டிகள் ஜனநாயகம் மத்தியதுவம் நிராகரிக்கப்பட்டது கட்சியின் மீது தனிப்பட்டவரின் அதிகாரத்தை திணிப்பதற்கு கொண்டு சென்றது.

2). விமர்சனம் சுயவிமர்சனம் செய்யும் முறை கடைப்பிடிக்கப்படவில்லை.

3). அனுபவங்களிலிருந்து படிப்பினை தொகுக்கப்படும் முறையும் புறக்கணிக்கப்பட்டது.

4). தகவல்கள் இருந்து உண்மைகளை அறியும் பொருள்முதல்வாத முறையும் சூழ்நிலைகள் மாறும் தன்மையில் பார்க்கும் இயங்கியல் முறையும் புற நிலைமைகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு கடைப்பிடிக்கப்படவில்லை அதற்கு மாறாக மனம் போன போக்கில் நிலைமைகளை கணிக்கும் முறை ஆதிக்கம் செலுத்தியது.

5). கட்சி கமிட்டிகள் செயல்படும் முறை அற்றுப்போய்விட்டது.

6). கட்சிக்குள் அரசியல் ஸ்தாபன பிரச்சினைகளில் தோன்றிய முரண்பாடுகள் தீர்ப்பதற்கான உட்கட்சி போராட்டத்திற்கு இருவழி போராட்டத்திற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

(இவை விரிவாக வரும் இதழ்களில் காண்போம்).

வரலாற்று வழியில் தோன்றிய இ.க.க (மா-லெ) கட்சியின் ஆரம்பகாலம் அதன் நடவடிக்கைகளை புரிந்துக் கொள்ள ஒரு முயற்ச்சி.

1967 அக்டோபர் 8 புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கட்ட சாருமஜீம்தார் அறைகூவல் விடுத்தார்.

1967 நவம்பர் 13 இல் புரட்சிக்கான ஒருங்கிணைப்புக்குழு புரட்சிக்கான கட்சியை கட்டுவதற்கான முதல் பிரகடனத்தை வெளியிட்டது.

1968 ஏப்ரல் 23 இரண்டாம் பிரகடனத்தை புரட்சியாளர்கள் ஒருங்கிணைப்புக்குழு வெளியிட்டது.

1969 ஏப்ரல் 19 - 22 ல் கூடிய புரட்சியாளர் ஒருங்கிணைப்பு குழு புதிய கட்சியை கட்டும் பணியை செய்தது .

1969 ஏப்ரல் 22 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் உருவாக்கப்பட்டது.

1969 மே மாதம் முதல் வாரத்தில் தமிழகத்திற்க்கு சாரு வந்தார். அவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பல்வேறு குழு கூட்டங்களில் கலந்து கொண்டார் .

1969 டிசம்பரில் தமிழ் மாநில மாநாடு கூடியது அதில் தோழர் எல். அப்புவை செயலாளராக கொண்ட ஒரு மாநில கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த மாநில கமிட்டிக்கு தோழர்கள் எல்.ஆப்பு, ஏஎம்கே கலியபெருமாள், பிவிஎஸ், மாணிக்கம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த ஐந்து பேரும் கட்சியின் அகில இந்திய மாநாடு பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநிலக்குழு செயலாளரும் மத்திய கமிட்டி உறுப்பினருமான எல்.அப்பு 1970 செப்டம்பர் 28 -30 வேலூரில் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அதன் பின் மத்திய கமிட்டி உறுப்பினரான AMK மாநிலக்குழு செயலாளராக தொடர்ந்தார்.

1971 மே நாள் பொதுக்கூட்டத்தில் தமிழகமெங்கும் ஏராளமான அனுதாபிகள் கைது செய்யப்படுகின்றனர் இதனால் மாநில கமிட்டி கூட்டம் கூட்டுவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது .

தோழர்கள் ஏஎம்கே, பிவிஎஸ் இவர்களுடன் தோழர்கள் அப்துல்கனி, தமிழரசன் தமிழ்வாணன், தாத்தா பாண்டியன் இவர்களையும் இணைத்து கமிட்டி உருவானது . தோழர் ஏஎம்கே செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுகிறார் சாருவை சந்திக்க கல்கத்தா இருமுறை முயற்சித்தார் .சந்திக்க முடியாமலே போய்விட்டது.

1972 நவம்பரில் தஞ்சை மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நடைபெற்றது அதில் கட்சியின் அரசியல் வழி மீது மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின.

தோழர் ஏஎம்கே அழித்தொழிப்பு வழியையும் சாருவின் அதிகாரத்தை எதிர்த்தார். வெகுஜன மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

தோழர்கள் பிவிஎஸ், கனி, தமிழ்வாணன் தாத்தா பாண்டியன் ஆகியோர் அழித்தொழிப்பு மற்றும் புரட்சிகர போராட்டங்கள் உள்ளடக்கத்தையும் ஆதரித்தனர். இன்னொருபுறம் தோழர் தமிழரசன் அழித் தொழிப்பு ஒன்றே போராட்ட வடிவம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார் .

ஏ எம் கே தனது கருத்துக்களை ஓர் அறிக்கையாக எழுதி கமிட்டி கூட்டத்தில் வைத்தார் அந்த அறிக்கை படிப்பினை அடிப்படையில் உள்ளதா என்று கேட்ட கேள்விக்கு இல்லையென்றால் அவை அனுமதிக்கக்கூடாது என்று கனியும் பிவிஎஸ் யும் வாதிட்டனர் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படவில்லை.இந்நிலையில் தன்னை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக முன்வந்தார் ஏஎம்கே ஆனால் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஏற்க மறுத்ததால் தொடர்ந்தார். படிப்பினை அடிப்படையில் வேறொரு அறிக்கை எழுதி அடுத்த கூட்டத்தில் வைக்கும்படி அவரிடம் கோரப்பட்டது.

ஏப்ரல் 1973 இல் தோழர் ஏஎம்கே கைதாகிறார் 1978 இல் விடுதலையாகிறார்.

தோழர் ஏஎம்கேவின் கைதுக்குப் பிறகு நடந்த மாநில கூட்டத்திற்கு தோழர் தமிழரசன் வந்து சேராததால் தோழர் கனி மா.கு செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1973 ம் ஆண்டின் கடைசியில் மாநிலக் குழுவில் மூன்று விதமான போக்குகள் நிலவின.

1). கூட்ட குழு நிலையை தோழர்கள் தமிழரசன், தமிழ்வாணன், சின்னதுரை ஆகியோர் எடுத்தனர்

2). அழித்தொழிப்பு நிலையை தோழர்கள் பழனியப்பன், தாத்தா பாண்டியன் எடுத்தனர்.

3). தோழர் கனி வலது சந்தர்ப்பவாத நிலையில் இருந்தார். 1974 தொடக்கத்தில் இருந்து மேற்கு பிராந்திய குழு என்ற பெயரில் இயங்கி வந்த தோழர்கள் ராமானுஜம் ராகவன் மாநில குழுவிற்கு கீழ் பட்ட பிராந்திய குழு என்று கூறி செயல்பட்டு வந்தனர்.

(இவர்களின் செயலை இங்கே விமர்சிக்கப் படவில்லை பின்னர் பார்ப்போம்).

இவர்கள் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் தமிழ்நாடு என்று அழைத்துக் கொண்டு பத்திரிக்கை நடத்த தொடங்கினர்.

இக்கட்டத்தில் மேற்குவங்க சுனிதி குமார் கோஷ், பஞ்சாப் சர்மா குழு, ஆந்திரா கொண்டபள்ளி சித்தராமையா குழு இவற்றை உள்ளடக்கிய சிஒசி அமைப்பின் தொடர்பு ஆந்திராவில் கிடைத்தது. அவர்களை சந்தித்து பேசுவது என முடிவு எடுத்தது.

தோழர்கள் கனி, தத்தா இருவரையும் அனுப்பி வைத்தது. அவர்கள் சந்தித்துப் பேசிவிட்டு வந்தனர் மீண்டும் சந்திப்பதற்கு சில நொண்டிச் சாக்குகளை கூறிவந்தனர். பிறகு தோழர்கள் தமிழரசன் தமிழ்வாணன் இருவரையும் ஆந்திர தோழர்களை சந்திக்க அனுப்பியது. அவர்கள் இருவரும் அந்திர தோழர்களை சந்தித்து பல்வேறு அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர் அவர்களின் அனுபவ நிலைப்பாடுகள் அடங்கிய அறிக்கையை ஆந்திர மாநில குழு அளித்து அதனை குறித்து விவாதிக்கும் படியும் சிஓசியில் இணையும் படியும் கேட்டுக்கொண்டனர்.((1973 SELF CRITICAL REPORT CPI (ML) PW COC).

தோழர் தமிழரசன் அன்று ஒரு அகில இந்திய இணைப்பில் ஆர்வம் காட்டவில்லை தனது சொந்த அனுபவத்தின் மூலம் தான் ஒரு தலைமையாக வளரமுடியும் வளரவேண்டும் என்ற அனுபவத்தால், தன்அகங்கார போக்கு கொண்டிருந்தார். இவருடைய குட்டி முதலாளித்துவ தனிநபர் மனப்பாங்கும் அனுபவமே பிற்காலத்தில் பூர்சுவா தேசிய வாதமாக வளர்ந்தது ;இருந்தாலும் அன்று அழித்தொழிப்பு ஒரே வடிவம் என்ற நிலையை மறுத்து வெகுஜனப் போராட்டங்களை நடத்தவேண்டும் என்ற தெளிவுடன் இருந்தார்.

ஆந்திரா அறிக்கை தோழர் சாரு மீதான விமர்சனம் கீழ்வருவன.

1). சர்வதேச சூழ்நிலை பற்றிய இந்த சகாப்தத்தின் தன்மை பற்றி மதிப்பீடு தவறு மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்ற கருத்து தவறு.

2). அகநிலை அம்சத்தை அதாவது மக்களின் தயார் நிலை அமைப்பு வலிமை இவற்றைப் புறக்கணித்து இடது தீவிரவாத வழியை

கடைபிடித்தால் முதிர்ச்சியடையாத அறை கூவல்கள் முழக்கங்கள் வைத்தல் .

3).இந்தியாவின் சமச்சீரற்ற வளர்ச்சி பார்க்காதிருத்தல் நகர்புறங்களில் கொரில்லா போராட்டங்களை தொடுத்தல் .

4). அழித்து ஒழிப்பும் ஒரு போராட்ட வடிவம் என்பதற்கு மாறாக அதனை மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக கருதுதல் வெகுஜன போராட்டங்களையும் வெகுஜன அமைப்புகளின் புறக்கணித்தல்.

5). தள பிரதேசங்களை உருவாக்கிய பின்னே ஐக்கிய முன்னணி என்ற கருத்து.

6). அமைப்பு வழியில் அராஜகம்.

இந்த அறிக்கைதான் செழுமைப்படுத்தபட்டு பின் மக்கள் யுத்தப் பிரிவின் 10 ஆண்டுகால அனுபவம் தொகுப்பாக உருப்பெற்றது.

நாம் சீனாவின் அனுபவத்தை கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை ஏனெனில் அங்கு ஆயுதப்போராட்டம் துவக்கத்திலிருந்து போராட்டமாக விளங்கியதேயொழிய அது மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக இருக்கவில்லை. இங்கு நாம் ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதிக் கொண்டு இவை மட்டுமின்றி மக்கள் படை சிறு குழுவிலிருந்து வளர்கிறது என்பதை காண மறுத்து; மக்கள் படையையும் கொரிலா குழுவையும் ஒன்றாக கருதி மக்கள் யுத்தத்தையும் கொரிலா போராட்டத்தையும் ஒன்றாக கருதி செயல்பட்டோம். கட்சியும் படையும் ஒன்றுதான் என்று கருதப்பட்டது ஒரு கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதனுடைய தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களாக கருதப்பட்டனர். உட்கட்சி முரண்பாடுகள் பகையாக கையாளப்பட்டன .(சீன க.க.யுத்த வரலாறு ஹோகான்சி) உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லை.

எந்த ஒரு பொருளிலும் இரு எதிர்மறைகளுக் கிடையான முரண்பாடு நிலவும். முரண்பாடு இல்லாத பொருள் ஏதும் இல்லை கட்சிக்குள்ளும் இரு பாதைகள் கருத்துகள் சித்தாந்தம் இடையே முரண்பாடு நிலவுகிறது குறிப்பிட்டமுரண்பாட்டின் போராட்டத்திலும் அது தீர்வு காணப்படும் விதத்திலும் தான் கட்சியின் வாழ்வும் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட முரண்பாடு முடிவு பெற்றதும் வேறொரு முரண்பாடு எழுகிறது எனவே முரண்பாடும் அவற்றுக்கிடையே ஒற்றுமையும் போராட்டமும்

எப்போதும் நிலவும் இது இல்லாவிட்டால் கட்சியின் வாழ்வும் முடிவுக்கு வந்துவிடும். இதன் பொருள் நாமே செயற்கையாக முரண்பாட்டை ஏற்படுத்த வேண்டும் என்பதல்ல.

அவ்வாறு ஏற்படுத்தவும் இயலாது. முரண்பாடு இயல்பாகவே கரு அளவிலோ முதிர்ச்சி பெற்ற தெரிந்தோ தெரியாமலோ நிலவும் என்பதையும் அது நமது விருப்பத்திற்கு அப்பாற்பட்ட பொருள் நிலைமைகளில் பிரதிபலிப்பு என்பதையும் உணர்ந்து இருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.எல்லா முரண்பாடுகளும் ஒரே தன்மை உடையது அல்ல. பகைமையான முரண்பாடு மற்றும் பகைமையற்ற முரண்பாடு என இரு வகைகள் உள்ளன. பகை முரண்பாடாக இருந்தும் கூட சரியாக கையாண்டால் பகைமை அற்றதாக மாறும். பகைமை அற்ற முரண்பாட்டை தவறாகக் கையாண்டால் பகைமையானதாகும். எனவே ஒரு குறிப்பிட்ட முரண்பாட்டை எவ்விதம் கையாளுவது என்ற பிரச்சினை எழுகிறது. இது ஒவ்வொரு முரண்பாடும் எதனால் எவ்விதம் வருகிறது என்ற ஆய்வில் இருந்து தொடங்குகிறது.

கட்சியின் உள் முரண்பாடுகள் அன்னிய வர்க்க சிந்தனையின் விளைவாக தோன்று கின்றன. செயல்திறன் அல்லது வழியை கிரகித்துக் கொள்ளுவதிலிருந்தும் தோன்று கின்றன. தனிமனித பண்புகளும் இவற்றில் பங்காற்றுகின்றன, இருப்பினும் தனி மனித பண்புகள் எனப்படுபவை அரசியல் வழிக்கு உட்பட்டவையே ஏனெனில் ஒரு சரியான அல்லது தவறான வழி தனித்திறன் அல்லது கிரகிப்பை வளர்க்கவோ முடக்கவோ செய்கிறது. கட்சியின் உள் நடக்கும் அரசியல் போராட்டம் கூட பாட்டாளி வர்க்க முன்னோடிகள் தரப்பில் உள்ள அழுக்கையும் களைகிறது. கட்சிக்குள் சரியான வழியை கொண்டிருப்பவர் தரப்பிலும் தவறான பண்புகள் நிலவக் கூடும் ஆனாலும் சரியான வழியில் ஊன்றி நிற்க்கும் பொழுது அவற்றைக் களைவதற் கான அடிப்படை பலமாக இருக்கிறது. தவறான வழியை கொண்டிருப்பவர்களிடம் நிலவுகின்ற தவறான பண்புகள் அவ்வழி முறியடிக்கப்பட்டால் ஒழிய அகலாது . எனவே எப்படிப் பார்த்தாலும் உட்கட்சிப் போராட்டம் தனிமனித பண்புகளில் இருந்து தொடங்கக்கூடாது அரசியல் நிலையில் இருந்து தான் தொடங்க வேண்டும் .தனி மனித பண்புகள் அரசியல் நிலைக்கு உட்படுத்தி பார்க்க வேண்டும் .

விமர்சிக்கும் முறையானது விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய நோயாளியை கொல்வதாக இருக்கக்கூடாது. விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைந்தெறிய போராட வேண்டும் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தவறு செய்யும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவி செய்வதே முதன்மையானது பெரும் தவறு இழைத்து பின்னும் வழிகாட்டலை ஏற்க மறுத்து திருத்திக் கொள்ளாதவர் விஷயத்திலே அம்பலப்படுத்தும் விதத்தில் போராட்டத்தை கைகொள்ள வேண்டும். இத்தகைய பொறுமை இன்றி எடுத்து எடுப்பில் ஒருவரை "சந்தர்ப்பவாதி, திருத்தல்வாதி, எதிர் புரட்சியாளர்" என்று முத்திரை குத்திவிடும் போராட்ட வகையானது குறுங்குழுவாத விளைவே ஆகும்.

உண்மையில் விமர்சனம் என்பது ஒரு குறிப்பிட்ட தவறு ஏன் நிகழ்ந்தது அதற்கான தத்துவார்த்த வேர் என்ன அதைக் களைவதற்கான சிந்தனா செயல்முறை என்ன என்பதை உள்ளடக்கி ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். சுயவிமர்சனம் இதேபோல் தவறுகளை ஏற்றுக் கொள்வதும் அதற்கான வேர்களை கிள்ளி எறிந்து தன்னை மாற்றிக் கொள்வதற்காக இருத்தல் வேண்டும். இவ்வாறு விமர்சனம் சுயவிமர்சனம் பலப்படுத்துவதோடு இரண்டுக்கு மிடையே உள்ள பரஸ்பர உறவில் வைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு விமர்சனம் சுய விமர்சனத்தை கையாளப்படுவதுடன் இரண்டுக்குமிடையே உள்ள உறவில் வைத்து பார்க்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு விமர்சனத்திலும் ஒரு சுயவிமர்சனம் அடங்கியுள்ளது. ஒவ்வொரு சுய விமர்சனத்திலும் ஒரு விமர்சனம் அடங்கியுள்ளது ஒன்று மற்றொன்றாக மாறுகிறது. பிறரைத் திருத்தும் போதே நம்மையும் திருத்திக்கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட தவறை எதிர்த்துப் போரிடும் போது அத் தவறு வருங்காலத்தில் நிகழாமல் அல்லது பாதிக்காமல் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு நாம் எவ்வாறு நமது வேலை முறையை மாற்றிக் கொள்வது என்பது சேர்ந்து உணரப்பட வேண்டும். 

விவாதம் தொடரும் வரும் இதழ்களில் தோழர்களே....

ஆதரம் தோழர்களுடனான நேர்காணல் மற்றும் 88 சிறப்பு கூட்ட அறிக்கையின் அடிப்படையில் தேதிகளை சரிபார்க்க பயன்படுத்தியுள்ளேன்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்