அரசு நிறுவனங்களில் முதன்மையான நிறுவனம் ஆயுதம் தாங்கிய தனி வகையான படையே தற்போது உலகம் முழுவதிலும் போலீஸ் மற்றும் இராணுவ நிறுவனங்கள் ஆயுதம் தாங்கிய நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். இந்த நிறுவனங்களுக்குத்தான் ஆயுதம் தாங்கும் உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. நாடுகளிலுள்ள பிற மக்களுக்கு ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை சட்டப்படி கிடையாது. விதிவிலக்காக சில வசதி படைத்த செல்வந்தர்களுக்கு காவல்துறை அனுமதியுடன் ஆயுதம் வைத்துக் கொள்வதற்கு உரிமை உண்டு. அதாவது அந்த செல்வந்தர்களை யாராவது தாக்கினால் அந்த தாக்குதலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ளலாம் என்று காவல்துறை அனுமதி அளிக்கிறது. அதே வேளையில் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் அவர்களை பாதுகாத்துக்கொள்ள, அவர்கள் ஆயுதம் வைத்துக்கொள்ள அரசு அனுமதிப்பதில்லை.
ஒரு காலத்தில், அதாவது மனிதர்கள் வர்க்கங்களாக பிளவுபடாத காலத்தில், மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்த காலத்தில், மனிதர்களின் வாழ்க்கைக்காக வேட்டையாடுவதை தொழிலாகக் கொண்டிருந்த காலத்தில், மனிதர்கள் கூட்டாக சென்று வேட்டையாடினார்கள். வேட்டையாடி கொண்டுவந்த மிருகங்களை கூட்டாக பகிர்ந்து உண்டனர். அவர்கள் வேட்டையாடுவதற்கு வில்லும், அம்பும் கண்டுபிடித்து பயன்படுத்தினார்கள். காடுகளில் கிடைக்கும் கிழங்கு வகைகளையும் பழங்களையும் சேகரித்து அதனை உணவாக பயன்படுத்தினார்கள். இவ்வாறு பழங்குடி மக்களாலால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் அவர்களின் உற்பத்திக் கருவிகளாகவும் பிற மனித கூட்டங்களோடு போர்புரிவதற்கான படைக்கல ஆயுதங்களாகவும், பயன்பட்டன. அந்த கூட்டத்தில் மனிதர்களுக்கு இடையே உடமை உள்ளவன், உடமை அற்றவன் என்ற வேறுபாடுகள் இல்லை. அது சாராம்சத்தில் ஆதிகால பொதுவுடமை சமூகமாகவே இருந்தது. அந்த சமூகத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் பொதுவான சொத்துக்களாக இருந்தது. அதாவது அனைத்து மக்களுக்கும் ஆயுதம் ஏந்தும் உரிமை இருந்தது.
வேட்டையாடி வாழ்ந்த மக்கள் பிற்காலத்தில் ஆடு, மாடு, கோழி போன்றவைகளை வீட்டு விலங்குகளாக வளர்ப்பதற்கு கற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஆண்கள் காட்டிற்கு சென்று வேட்டையாடி வருவதும், பெண்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழிகளை வளர்ப்பதும் செய்து வந்தனர். அதன் பின்பு பின்தங்கிய உழவுக் கருவிகளைக் கொண்டு விவசாயம் செய்வதற்கு கற்றுக்கொண்டனர். அப்போதுதான் மனிதர்கள் அலைந்து திரிவதை கைவிட்டுவிட்டு ஆற்றுப்படுகை ஓரம் நிரந்தரமாக குடியிருந்து வாழக் கற்றுக்கொண்டனர். அதே வேளையில் உழு கருவிகளில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வேளாண்மையின் மூலம் மனிதர்களின் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்தனர். அந்த உபரி உற்பத்தியை சில மனிதர்கள் கைப்பற்றிக் கொண்டு தனிவுடமையாக சொந்தமாக்கிக் கொண்டனர். அப்போதுதான் மனித குலத்தில் பொதுவுடமை தகர்ந்து தனிவுடமை உருவானது.
இத்தகைய தனிவுடமை உருவாவதற்கு முன்பு ஒரு கூட்டம் பிற கூட்டத்தைச் சேர்ந்தவர்களால் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளை களவாடிச் செல்வதற்காக கூட்டங்களுக்கு இடையே போர் நடந்தது. ஆனால் தனிவுடமை உருவான பின்பு ஆடு, மாடுகள் மட்டுமல்லாமல் நிலங்கள்தான் முதன்மையான தனிவுடமை சொத்தாக மாறிவிட்டதால், இந்த நிலங்களை அபகரிக்க போர்கள் நடத்தப்பட்டது. நிலங்கள் ஒன்றிணைக்கப்பட்டதால் விரிவான நிலப் பிரதேசங்கள் உருவானது. ஆகவே குறுகிய கூட்டங்களாக வாழ்ந்த மனிதர்கள் விரிவான நிலப் பகுதிகளில் ஒரு பிரதேசமாக வாழும் நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக கூட்டங்கள் தகர்ந்து போயிற்று. இவ்வாறு பிரதேசங்களில் வாழ்ந்த மனிதர்களிடையே உருவான வர்க்க வேறுபாடுகள் காரணமாக உடமை வர்க்கங்களுக்கும் உடமையற்ற வர்க்கங்களுக்கும்இடையிலான போர்களை தவிர்ப்பதற்காக உடமையற்ற வர்க்கங்களிடமிருந்து ஆயுதங்களை பறித்துவிட்டு, உடமை வர்க்கங்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் அமைந்த தனிவகைப்பட்ட படைப்பிரிவினருக்கு மட்டுமே ஆயுதம் ஏந்தும் உரிமை வழங்கப்பட்டு உடமையற்ற வர்க்கங்களை அடக்குவதற்கான அரசு உருவாகிற்று. இந்த அரசின் முதன்மையான நிறுவனம் இந்த தனிவகைப்பட்ட ஆயுதம் தாங்கிய படையே ஆகும். இந்த ஆயுதம் தாங்கிய தனிவகைப்பட்ட ஆயுதப் படையின் மூலமாகவே உடமை வர்க்கங்கள் உடமையற்ற வர்க்கங்களை காலம்காலமாக சுரண்டிக்கொண்டும் ஒடுக்கிக்கொண்டும் இருக்கின்றன.
சமுதாயத்தின் புராதனக் குடி, அல்லது குல வழியிலான ஒழுங்கமைப்பு என்பது புராதனக் கம்யூன் அமைப்பாகும். இதுதான் வரலாற்றில் முதலாவது சமூக-பொருளாதார அமைப்பாகும். குலக்கம்யூனானது பொருளாதார சமூக பிணைப்புகளால் இணைக்கப்பட்ட இரத்த உறவினர்களதுகூட்டமைப்பாகும். இந்த சமூகத்தின் ஒழுங்கமைப்பானது இரத்த உறவுகளைக் கொண்ட ஒழுங்கமைப்பாகும். இந்த சமூகத்தில் இரத்த உறவே ஆதிக்கத்தில் இருந்தது.
புராதன கம்யூன் அமைப்பில் உற்பத்தி உறவுகள், உற்பத்திச் சாதனங்களின் சமூக உடமையும் எல்லாப் பொருள்களின் சரிசமத்துவ வினியோகத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது.இதற்கு காரணம் அக்காலத்திய உற்பத்தி சக்திகளின் தாழ்ந்த வளர்ச்சி நிலையே ஆகும்.
உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்தபோது இரத்த உறவு சமூகம் சிதைந்து வர்க்க சமூகம் உருவாகிறது. இந்த வர்க்க சமூகத்திற்கு அதற்கு முன்பு இருந்த குல அமைப்பு முறையிலிருந்த சமூக ஒழுங்கமைப்பு பொருந்தாததாகிவிடுகிறது. இந்த வர்க்க சமூகத்திற்கு பொருத்தமான சமூக ஒழுங்கமைப்பு உருவாகிறது.
வர்க்க சமூகத்தில் அரசு தோன்றுகிறது. இந்த அரசானது முன்பு இருந்த புராதன மக்களின்(குலங்கள்அல்லது கணங்களின்) ஒழுங்கமைப்புக்கு மாறாக மக்களை பிரதேச ரீதியாகப் பிரிக்கிறது என்றார்.
எங்கெல்ஸ். இத்தகைய பிரதேசரீதியான பிரிவினை என்பது இயல்பானதுஎன்று தற்போதைய சூழலில் நமக்குத் தோன்றலாம். ஆனால் தலைமுறை தலைமுறையாக இருந்துவந்த குலங்களின் வழிப்பட்ட ஒழுங்கமைப்பை தகர்ப்பதற்கு நீண்டகால போராட்டங்கள்மனிதகுல வரலாற்றில் நடந்துள்ளது. (பிரதேசத்திற்கு உதாரணம் சேரன், சோழன், பாண்டியமன்னர்களின் ஆட்சியில் கீழிருந்த பிரதேசங்கள்) குல சமுதாயத்தில் மக்கள் அனைவரும் தங்களை ஆயுதம் ஏந்தியரவர்களாக ஒழுங்கமைத்துவாழ்ந்து வந்தனர். ஆனால் வர்க்க சமூகம் உருவானதும், மக்களின் ஆயுதம் ஏந்தும்ஒழுங்கமைப்புக்கு முடிவு கட்டது. பழைய ஒழுங்கமைப்புக்கு மாறாக பொது அதிகாரம் நிறுவப்பட்டது. சமூகம் வர்க்கங்களாக பிளவு பட்டவுடன், இந்த வர்க்க சமூகத்தை பாதுகாக்க தானாகஇயங்கும் மக்களின் ஆயுதம் ஏந்திய ஒழுங்கமைப்பு தடையாக மாறிவிட்டது. ஆகவே இந்த பழைய ஒழுங்கமைப்பை ஒழித்துவிட்டு புதிய ஒழுங்கமைப்பான ஆயுதம் ஏந்திய தனிவகைப்பட்டபடையைக் கொண்ட பொது அதிகாரம் உருவாகிற்று. இந்த பொது அதிகாரம் ஒவ்வொருஅரசிலும் இருந்துவருகிறது. இது ஆயுதம் ஏந்திய படைகளை மட்டுமின்றி புராதன (குல)சமூதாயம் அறிந்திராத பொருளாதாய துணைச் சாதனங்களையும் சிறைக்கூடங்களையும் எல்லாவகையான பலாத்கார ஏற்பாடுகளையும் கொண்டதாகும்.
அரசு எனப்படும் சக்தி சமுதாயத்திலிருந்து உதித்தெழுந்தது,அதாவது சமுதாயத்திலுள்ள மக்கள்பிரிவினரில் சிலர்தான் அரசு உறுப்பினர்களாக ஆகிறார்கள். ஆனால் அது சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை இருத்திக் கொள்கிறது மேலும் தன்னை மேலும் மேலும் அயலானாக்கிக்கொள்கிறது என்ற கருத்தை எங்கெல்ஸ் முன்வைத்தார். சமுகத்திலுள்ள உழைக்கும் மக்களில் ஒரு பிரிவினர் அரசு உறுப்பினர்களாக மாறி அந்த உழைக்கும் மக்களைவிட தன்னை உயர்ந்தவர்களாக கருதிக்கொண்டு உழைக்கும் மக்களிடமிருந்து பிரிந்து, அயலானாகப் போவதை நாம் காணலாம். இந்த அரசு என்ற சக்தி எவற்றால் ஆனது? சிறைக்கூடங்களையும்,இன்ன பிறவற்றையும், தமது ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஆயுதமேந்திய ஆட்க்களைக் கொண்டதனிவகைப் படைகளால் ஆனது என்று எங்கெல்ஸ் விளக்கினார்.
அரசு என்பது ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகள் என்று கம்யூனிஸ்டுகள்கருதுவதில் நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அரசு ஒவ்வொன்றுக்கும் உரியதான இந்தப் பொதுஅதிகாரம் இதற்கு முன்பு இருந்த ஆயுதம் தாங்கிய மக்களுக்கு, அவர்களது தானே இயங்கும் ஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கு நேரடியாக ஒத்ததாயில்லை.
தற்போது ஆதிக்கம் புரியும் அற்பவாத கண்ணோட்டத்தின்படி,(சந்தர்ப்பவாதிகளின் கண்ணோட்டத்தின்படி) சிறிதும் கவனிக்க வேண்டிய தேவையில்லை என்றும், பழக்கப்பட்டுசாதாரணமாகிவிட்டது என்று கருதப்படும் ஒன்றை, அதாவது அரசு பற்றிய கருத்தை வேர்விட்டு ஆழப்பதிந்ததோடு, இறுகிக் கெட்டி பிடித்தவை என்று சொல்லத்தக்க தப்பெண்ணங்களால்,புனிதமானது என்று உயர்த்தி வைக்கடும் இதனை அதாவது அரசை, மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்களைப் போலவே எங்கெல்சும் வர்க்க உணர்வு படைத்த தொழிலாளர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். அதாவது அரசு என்பது, நிரந்தர இராணுவமும், போலிசும் தான்,இதுதான் அரசு அதிகாரத்தின் பிரதானமான கருவிகளாகும். இவ்வாறின்றி வேறு எப்படி இருக்கமுடியும். என்று எங்கல்ஸ் சொன்னார். அதுதான் உண்மை என்பதை நாம் நடைமுறை வாழ்வில்காணுகிறோம் அல்லவா?
ஆதி காலத்திலிருந்ததானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு என்றால் என்னவென்பது பலருக்கும் தெரியாது மேலும் அதனை புரிந்துகொள்ளவும் முடியாது.
ஏனென்றால் அது ஏடறிந்த வரலாற்றுக் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மக்கள் கையாண்டஒழுங்கமைப்பாகும்.அந்த நிலை மாறி சமுதாயத்துக்கு மேலானதாய் நின்று மேலும் மேலும் அதற்குத் தம்மை அயலானாக்கிக் கொள்ளும் ஆயுதமேந்திய ஆட்க்களைக் கொண்ட தனிவகைப் படைகள் (போலீசும், இராணுவமும்) அவசியமாகியது ஏனென்று கம்யூனிஸ்டுகள் கேட்டால், அற்பவாதிகளும், சந்தர்ப்பவாதிகளும் மேலும் மேலும் சிக்கலாகிவரும் சமுதாய வாழ்வையும், பணிப் பிரிவிணையையும் பிறவற்றையும் காரணமாக நமக்கு காட்டுகிறார்கள். இந்த கருத்துவிஞ்ஞானப் பூர்வமானது போன்று தோன்றினாலும், பகையான வர்க்கங்களாக சமூகம் பிளவுபட்டு விட்டதையும், அதன் காரணமாகவே அரசு என்ற பலாத்கார நிறுவனம் உருவாகியது என்ற உண்மையை மூடி மறைத்து சாதாரண மணிதனை தூக்கத்தில் ஆழ்த்துவதற்கு இந்ததவறான கருத்து பயன் படுத்தப்படுகிறது.
சமுதாயம் பகை வர்க்கங்களாக பிளவுபடாமல் இருந்திருந்தாலும், உயர் தொழில் நுட்பவளர்ச்சியின் காரணமாக தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு அதாவது தடிகள் ஏந்திய குரங்கு மந்தை அல்லது புராதன மனிதர்கள் அல்லது குலங்களாய் இணைந்த மனிதர்களின் புராதன ஒழுங்கமைப்பிலிருந்து மாறுபட்டிருக்கும் அல்லது வளர்ந்திருக்கும் என்று கருதுவது சரியானது போல் தோன்றினாலும். வளர்ச்சியடைந்த நிலையிலும் அதன் தன்மைதானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பாகவே நீடித்திருக்கும். இதற்கு மாறாக ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகையானபடைகளாகமாறியிருக்காது. பகையான வர்க்க சமூகமாக மக்கள் சமூகம் மாறிய பொழுதுதான் தானாகவே இயங்கும் மக்களது ஆயுதமேந்திய ஒழுங்கமைப்பு வரலாற்றில் முடிவிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அரசு என்ற ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகையான படைகள் உருவாகியது.
நாகரியச் சமுதாயம் பகை வர்க்கங்களாய், அதுவும் இணக்கம் காண முடியாத பகைவர்க்கங்களாய் பிளவுண்டதால்தான், அரசு தோன்றியது. அதுவரை அரசு என்பது இருந்ததே இல்லை. இத்தகைய வர்க்க சமூகத்தில், இவ்வர்க்கங்கள் தானாகவே இயங்கும் ஆயுதபாணிகளாய் இருந்தால், இந்த வர்க்கங்களுக்கு இடையே வர்க்கப் பகைமையின் காரணமாக ஆயுதமேந்திய போராட்டங்கள் மூண்டிருக்கும்.
ஆகவே இவ்வகையான ஆயுதமேந்திய போராட்டங்களை தவிர்ப்பதற்காகவே அரசு உதித்தெழுந்தது. தனிவகை சக்தி, ஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகள் அமைக்கப்பட்டன. ஆகவேதான் மனித சமூகம் சந்தித்த ஒவ்வொரு புரட்சியிலும் இந்த அரசு இயந்திரத்தை அழிப்பதன் மூலம்,புரட்சிகள் நடத்தப்பட்ட வரலாற்றிலிருந்து, வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க்கம் (உடமை வர்க்கம்) தனக்குச் சேவை செய்யக்கூடியஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளை மீட்டமைக்க எப்படியெல்லாம் முயல்கிறது என்பதையும், ஒடுக்கப்பட்ட (உடமையற்ற) வர்க்கம் ஒடுக்குவோருக்குப் பதிலாக ஒடுக்கப்பட்டோருக்கு அதாவது உடமையற்ற உழைக்கும் வர்க்கங்களுக்குச் சேவை புரியக்கூடியஇப்படிப்பட்ட ஒரு புதிய ஒழுங்கமைப்பை தோற்றுவித்துக்கொள்ள எப்படி முயன்றது என்பதையும் வர்க்கப் போராட்ட வரலாறு நமக்குத் தெளிவாய் காட்டுகிறது.
மாபெரும் புரட்சி ஒவ்வொன்றும் நடைமுறையில், திட்டவட்டமாகவும், இன்னும் முக்கியமாகவெகுஜன செயல் அளவிலும் நம்முன் எழுப்பும் அதே பிரச்சனையை, அதாவது ஆயுத மேந்திய ஆட்களைக் கொண்ட தனிவகைப் படைகளுக்கும்தானாகவே இயங்கும் மக்களதுஆயுதமேந்திய ஒழுங்கமைப்புக்கும் இடையிலான உறவு பற்றிய பிரச்சனையை மேற்கூறியமேற்கோள்களில் எங்கெல்ஸ் தத்துவார்த்த வழியில் எழுப்புகிறார். ஐரோப்பிய, ரஷ்யப்புரட்சிகளின் அனுபவம் இந்தப் பிரச்சனைக்கு எப்படி திட்டவட்டமான முறையில் பதிலளித்ததுஎன்பதை நாம் பார்க்க வேண்டும்.
சில சமயங்களில் - உதாரணமாய் வட அமெரிக்காவின் சில பகுதிகளில் - இந்தப் பொது அதிகாரம் பலவீனமாக இருப்பதை எங்கெல்ஸ் சுட்டிக் காட்டினார். (முதலாளித்துவ சமுதாயத்தில் அரியவிதிவிலக்காக இருந்த ஒன்றான, வட அமெரிக்காவில் ஏகாதிபத்திய காலக்கட்டத்துக்கு முன்புகட்டற்ற குடியேற்றக் குடியினர்பெருவாரியாய் இருந்த சில பகுதிகளை எங்கெல்ஸ் இங்கு சுட்டிக்காட்டுகிறார்).
ஆனால் பொதுவாய் கூறுமிடத்து இந்த பொது அதிகாரம் வளர்ந்து வலிமையுறும் என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டது போலவே வட அமெரிக்காவில் அரசும் தனிவகைப் படையும்வளர்ந்து வலிமைப்பட்டு அமெரிக்க அரசு ஏகாதிபத்திய அரசாக வளர்ந்ததுவிட்டதை நாம்அறிவோம்.அரசினுள் எந்தளவுக்கு வர்க்கப் பகைமைகள் மேலும் மேலும் கடுமையாகின்றனவோ, (அதாவதுசுரண்டும் வர்க்கங்களின் ஆட்சி அதிகாரத்தின் மூலம் உழைக்கும் மக்கள் மிகவும் கொடூரமாக சுரண்டப்படுவதனால், பாதிக்கப்பட்ட உழைக்கும் வர்க்கங்கள் இந்தச் சுரண்டல்களை எதிர்த்துப்போராட்டங்களை நடத்தும் போது இந்த வர்க்கங்களுக்கு இடையிலான பகைமைகள்கடுமையாகின்றன.) அக்கம் பக்கத்து அரசுகள் பெரிதாகி அவற்றின் மக்கள் தொகை பெருகுகின்றனவோ, அதே அளவுக்கு பொது அதிகாரம் வளர்ந்து வலிமையுறுகிறது.
ஐரோப்பாவின் வரலாற்றை கவனித்தால் இது தெளிவாகிவிடும். இங்கு பொது அதிகாரம் சமுதாயம் அனைத்தையும், ஏன் அரசையும்கூட விழுங்கிவிடும் என்ற அச்சத்தை தரக்கூடிய அளவுக்கு வர்க்கப் போராட்டமும், நாடு பிடிக்கும் போட்டா போட்டியும் அதனை தீவிரமாக வளரச் செய்திருக்கின்றன என்ற எங்கெல்சின் கூற்றுப்படி ஐரோப்பாவில் ஏகாதிபத்தியங்கள் உருவான வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.
ஏகாதிபத்தியத்துக்கான மாற்றம் - டிரஸ்டுகளின் முழு ஆதிக்கத்துக்கும் பெரிய வங்கிகளின் சர்வ வல்லமைக்கும் மிகப் பெரிய அளவிலான காலனியாதிக்க கொள்ளைக்கும் இன்ன பிறவற்றுக்குமான மாற்றம் - அப்பொழுதுதான் பிரான்சில் ஆரம்பித்துக் கொண்டிருந்தது; வட அமெரிக்காவிலும், ஜெர்மனியிலும் இந்த மாற்றம் இன்னும்கூட பலவீனமாகவே இருந்தது.
எனினும் இதற்குப் பிற்பட்ட நாடு பிடிக்கும் போட்டா போட்டி பிரமாண்ட அளவுக்கு மும்முரமாகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டின் தொடக்கத்துக்குள் நாடு பிடிக்கும் போட்டியாளர்களுக்கு இடையே அதாவது கொள்ளைக்கார பேரரசுகளுக்கு இடையே உலகம் பூராவுமே பங்கிடப்பட்டுவிட்டதால் இந்தப் போட்டா போட்டி மேலும் கடுமையாகிவிட்டது. இதற்குப் பின்பு இராணுவ, கடற்படைப் போர்க் கருவிகள் நம்பமுடியாதபடி வளர்ந்துவிட்டன; பிரிட்டன் அல்லது ஜெர்மனி ஏகாதிபத்தியவாதிகள் உலகெங்கும் தங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக, பின்தங்கிய நாடுகளை கொள்ளையடிப் பதற்காக, பாகப் பிரிவினை செய்து கொள்வதற்காக 1914-1917ஆம் ஆண்டுகளில் இவர்கள் நடத்திய கொள்ளைக்கார யுத்தத்தைத் தொடர்ந்து சமுதாயத்தின் எல்லாசக்திகளையும் நாசகார அரசுஅதிகாரம் கபளீகரம் செய்வது படுபயங்கரமான அளவுக்கு வளர்ந்துவிட்டது. நாடு பிடிக்கும் போட்டாபோட்டி வல்லரசுகளுடைய அயல் நாட்டுக் கொள்கையின் மிகமுக்கியதனி இயல்புகளில் ஒன்றாகுமென்று 1891 லேயே எங்கெல்ஸ் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால்1914-1917ஆம் ஆண்டுகளில் இந்தப் போட்டாப் போட்டி பன்மடங்கு கடுமையாகி ஏகாதிபத்தியஉலக யுத்தத்தை மூண்டெழச் செய்தபோது சமூக தேசியவெறிக் கயவர்கள் தமது சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் கொள்ளைக்கார நலன்களின் பாதுகாப்பை தாயகப் பாதுகாப்பு குடியரசின், புரட்சியின் பாதுகாப்பு என்று பொய் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள்.இவ்வாறு நாடு பிடிப்பதற்காக ஏகாதிபத்தியவாதிகளால் 1914 ஆம் ஆண்டிலிருந்து துவக்கிவைக்கப்பட்ட போர்களை இன்றளவும் அவர்கள் நிறுத்தவில்லை. சமீபத்தில் ஆப்க்கான், மற்றும் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நேட்டோ அமைப்பை சேர்ந்த ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்ட போர்கள், மற்றும் உக்ரேன் மீது ரஷ்ய ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்படும் போர்களும் ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளைக்காவே நடத்தப்படுவதை நாம் பார்க்கலாம். இந்தப் போர்களினால் உலகத்தில் உள்ள எந்த நாட்டு மக்களுக்கும் கடுகளவும் பயனில்லை. மாறாக உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் ஏதோ ஒருவகையில் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றர்.
ஆகவே சமூகமானது வர்க்கங்களாக பிளவுபட்டதிலிருந்து உருவான அரசு, ஆயுதமேந்தியஆட்களைக் கொண்ட தனி வகைப்படையானது பிரமாண்டமாக வளர்க்கப்பட்டு நாடுகளை பிடிப்பதற்காக, பங்குபோடுவதற்காகயுத்தங்களை நடத்துவதன் மூலம் உலக மக்களுக்கு பேரழிவையும், படுகொலைகளையுமே வழங்கிவருகின்றனர். ஆகவே யுத்தமில்லாத சமாதானமான உலகை படைக்க வேண்டுமானால் இந்த மக்கள் விரோத கொள்ளைக்கார அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஆயுதமேந்திய ஆட்களைக்கொண்ட தனிவகைப்பட்ட படைகளுக்கு முடிவுகட்ட வேண்டும். அதற்கு உழைக்கும் மக்களின் நலன் காக்கும் அரசை உழைக்கும் மக்கள் போராடி உருவாக்க வேண்டும். அந்த அரசிலும் ஆயுதமேந்திய படை இருக்கும். அந்த படையானது தற்போதுள்ள படையைப் போல் அல்லாமல் இதற்கு முந்திய காலத்தில் இருந்ததானாகவே இயங்கும் மக்களது ஆயுத மேந்திய ஒழுங்கமைப்பாகவே இருக்கும். அதாவது உழைக்கும் மக்களையும் அதன் அரசையும் பாதுகாப்பதற்கான மக்கள் படையாகவே இருக்கும். சமூகமானது உழைக்கும் மக்களின் நலன்காக்கும் சோசலிச அரசால் ஆளப்படும் சமூகமாக மாறிவிட்டால். அந்த சமூகத்தில் இருப்பவர்களுக்கு பிறரை சுரண்டி வாழும் தேவை இருக்காது. ஆகவே பிற நாடுகளின் மீது போர் தொடுத்து பிற நாடுகளை அடிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அதனால் உலகில் எங்கும் போர்கள் நடக்காது. மக்கள் அழிவுகளை சந்திக்க வேண்டும் என்ற நிலை ஏற்படாது.
போர்களற்ற சமாதானம் நிறைந்த சமத்துவ வாழ்வு உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும்கிடைக்கும். இத்தகைய சமூகத்தை படைப்பதற்காகப் பாடுபடுபவரே கம்யூனிஸ்டுகள் ஆவார்கள்.
இதற்கு மாறாக உடமை வர்க்க அரசை பாதுகாத்துக்கொண்டே, அரசின் தனிவகைப்பட்டஆயுதமேந்திய ஆட்களைக் கொண்ட படையின் கொடுமைகளை ஏற்றுக்கொண்டே சில்லரை சலுகைகளுக்காகப் பாடுபடுபவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்டுகள் ஆக மாட்டார்கள்.
தேன்மொழி