மார்க்சியம் என்றால் என்ன? (கேள்வி – பதில் வடிவில்)பகுதி -2 தத்துவம் 2–அ.கா.ஈஸ்வரன்

 


லெனின்:- “தத்துவஞானப் பொருள்முதல்வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமூகம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துக்களில் குழப்பமும் தான்தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது.”

முந்தைய பகுதியின் தொடர்ச்சி......

19)இயக்கவியலுக்கும் இயக்கமறுப்பிலுக்கும் என்ன வேறுபாடு? இயற்கையிலோ, சமூகத்திலோ ஒரு மாற்றம் நிகழ்கிறது என்றால் அந்தக் காரியம் காரணத்தின் தொடர்ச்சியாகவே நடைபெறுகிறது. இந்தக் காரணக் காரிய இயக்கத்தை அறிவியல்படி விளக்குவது இயக்கவியல் விதியாகும். காரணக் காரியத்தை மறுப்பது இயக்கமறுப்பியல்.

20) இயக்கவியல் விதி எவை?

இயக்கவியலின் பொது விதிகள் மூன்றாகும்.

1. அளவுநிலை மாற்றங்கள் பண்புநிலை மாற்றங்களாகப் மாறுவது பற்றிய விதி.

(The Law of the Transformation of Quantitative into Qualitative Changes)

2. எதிர்நிலைகளின் ஒற்றுமையும் போராட்டமும் பற்றிய விதி.

(The Law of the Unity and Struggle of Opposites)

3. நிலைமறுப்பின் நிலைமறுப்பைப் பற்றிய விதி

(The Law of the Negation of the Negation)

22) இந்த மூன்றையும் அறிந்தால் இயக்கவியலை அறிந்து கொள்ளமுடியுமா?

எல்லா விஞ்ஞான விதிகளுக்கும் அதற்குரிய வகையினங்கள் (Categories) இருக்கின்றன. அந்த வகையினங்களினுடைய வகைப்பிரிவின் அடிப்படையில்தான் அந்த விஞ்ஞானங்களின் விதிகளைப் புரிந்து செயற்படுத்த முடியும்.

23) இயக்கவியலின் வகையினங்கள் எவை?

1. தனியானது, குறிப்பானது, சர்வப்பொதுவானது (Individual, particular, Universal)

2. காரணமும் விளைவும் (Cause and Effect)

3. அவசியமும் தற்செயலும் (Necessity and Chance)

4. உள்ளடக்கமும் வடிவமும் (Content and Form)

5. சாத்தியமும் எதார்த்தமும் (Possibility and Reality)

6. சாராம்சமும் புலப்பாடும் (Essence and Phenomenon)

24) இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?

இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றின் மாற்றத்தை காரணக் காரியத்துடன் அதாவது அதன் இயக்கப் போக்குடன் விளக்குவது இயக்கவியல். இன்றைய இருப்பிற்கான காரணத்தையும், நாளை ஏற்படப் போகும் மாற்றத்தையும், அதன் இயக்க விதியின் அடிப்படையில் கூறப்படுவதால் இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்றழைக்கப்படுகிறது. மார்க்சிய பொருள்முதல்வாத தத்துவம் தம்முள் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று இயற்கையின் இருப்பைப் பற்றிப் பேசுகிறது, இது இயக்கவியல் பொருள்முதல்வாதம். மற்றொன்று சமூக இருப்பு, வளர்ச்சி, மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறது. இது வரலாற்றியல் பொருள்முதல்வாதம்.

25) மார்க்சியப் பொருள்முதல்வாத்துடன் இணைந்த நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எவை?

நவீன பொருள்முதல்வாதமான மார்க்சியத் தத்துவம், பத்தொன்பதாம் நூற்றாண்டின் புதிய இயற்கை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொணடு தம்மை நிலைநிறுத்தியது. 1.ஆற்றலின் உருமாற்றம், 2.உயிரணு, 3.பரிணாமக் கொள்கை ஆகியவை, விஞ்ஞானத்தின் மூன்று புதிய கண்டுபிடிப்புகளாகும்.

26) இந்த மூன்று கண்டுபிடிப்புகளும் என்ன முடிவுகளைத் தருகின்றன?

பொருளும் அதன் இயக்கமும் நிரந்திரமானவை, தோற்றுவிக்கவும் அழிக்கவும் முடியாதவை என்பதைஆற்றலின் உருமாற்றம்பற்றிக் கோட்பாடு அறிவித்தது. தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான ஒற்றுமை கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து உயிரிகளும் ஒரேவித உயிரணுக் கட்ட்டமைப்பைப் பெற்றுள்ளதை உயிரணு பற்றிய கோட்பாடு கண்டறிந்தது. எளிய உயிரினத்திலிருந்து சிக்கலான உயிரினங்களாக வளர்ச்சியடைந்து இருக்கின்றன. இன்றைய உயிரினங்கள் அனைத்தும் தொடக்கத்திலிருந்த ஒற்றை உயிரணுவைக் கொண்ட உயிரிகளிலிருந்து ஏற்பட்ட நீண்ட பரிணாமப் போக்கின் விளைவுகளாகும் என்பதைப் பரிணாமக் கோட்பாடு வெளிக்கொண்ர்ந்தது.

இந்த முப்பெரும் கண்டுபிடிப்புகளின் வழியாக, இயற்கை முழுவதின் இடைத் தொடர்பை எவ்வித அயலான கலப்பின்றி, உள்ளதை உள்ளவாறு நவீன பொருள்முதல்வாதம் அறிந்து கொண்டது. கருத்துமுதல்வாதத்தால் இதுவரை முன்வைக்கப்பட்ட மேலுலகத்தின் அப்பாற்பட்ட தொடர்பு தேவையற்றது என விஞ்ஞான வழியில் மறுக்கப்பட்டது.

27) இயக்கவியல் பொருள்முதல்வாதம் எவற்றை எல்லாம் விளக்குகிறது?

குறிப்பாகப் பருப்பொருள், அதன் இயக்கம், விசும்பும் காலமும், உணர்வுநிலை என்பது பற்றிப் பேசுகிறது.

28) பருப்பொருள் என்றால் என்ன?

பொருள்முதல்வாத கண்ணோட்டம், பருப்பொருளை (Matter) அடிப்படையாகக் கொண்டு ஆராய்கிறது. பருப்பொருள் என்பது மனிதனது உணர்வுநிலையைச் சாராது, அதாவது அதனைப் பற்றி மனிதன் சிந்திக்கின்றானா? சிந்திக்கவில்லையா? என்பதைச் சாராது, புறநிலையில் இருக்கிறது. பருப்பொருள் எத்தகைய தனித்தன்மையைப் பெற்றிருந்தாலும் ஒரு பொது அம்சத்தைக் கொண்டுள்ளது. அது நமது உணர்வுநிலையைச் சாராமல், புறநிலையில் இருக்கிறது.29) பருப்பொருளும் இயக்கமும் என்றால் என்ன?

உலகில் காணப்படும் அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. முற்றிலும் இயக்கமோ, மாற்றமோ இல்லாத பொருள் என்று சொல்வதற்கு இவ்வுலகில் எதுவும் இல்லை. பருப்பொருளின் இருப்பு என்பது இயக்கத்தில் தான் நிலவுகிறது. இயக்கம் இன்றிப் பருப்பொருள் இல்லை. அதே போன்று பருப்பொருள் இன்றி இயக்கமும் இல்லை. இயக்கத்திலுள்ள பருப்பொருள் என்பது விசும்பிலும் காலத்திலும் தவிர்த்து வேறு நிலையில் செயற்படுவதில்லை.

30) விசும்பும் காலமும் (Space and Time) என்றால் என்ன?

பருப்பொருளின் இயக்கம் என்பது விசும்பிலும் காலத்திலும் நடைபெறுகிறது. விசும்பு என்பது பருப்பொருளின் இருத்தலையும், மற்ற பொருளுடன் கொண்டுள்ள உறவிலும் வெளிப்படுகிறது. காலம் என்பது பருப்பொருள் இருத்தலின் கால அளவிலும், அடுத்தடுத்து தொடர்கின்ற நிகழ்வின் கால வரிசையிலும் காணப்படுகிறது. பொதுவாகப் பருப்பொருள் நீளம், அகலம், உயரம் கொண்டதாக இருக்கிறது. அந்தப் பரிமாணம் எடுத்துக் கொள்ளும் இடத்தின் அடிப்படையில்தான் அப்பருப்பொருள் விசும்பில் இடம் பெறுகிறது. ஆகப் பருப்பொருள் இடத்தைத் தவிர வேறு வகையில் தம் இருப்பை நிலைநிறுத்துவதில்லை. பருப்பொருள் அண்மையிலோ சேய்மையிலோ, இடதோ வலதோ, மேலோ கீழோ, காணப்படுகிற மற்ற பொருட்களுடன் விசும்பில் இருக்கிறது. அதாவது பருப்பொருளின் தொடர்பு என்பது விசும்பில் தான் நிகழ்கிறது. கண்ணில் படும் பருப்பொருளுக்குத் தான் நீளம் அகலம் உண்டு அதனால் தான் பொதுவாகப் பருப்பொருளுக்கு என்று கூறப்பட்டது. கண்ணில் படாத ஆனால் அதனைக் கருவிகள் மூலமோ மற்றவற்றின் உதவியோடு அறிந்திடும் பருப்பொருட்கள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.ஒரு பொருளுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே உள்ள உறவுகள், அப்பொருட்களைச் சுற்றிலும் நடைபெறும் உறவுகளோடு விசும்பின் உறவுகளாகின்றன. இந்த உறவுகள் எல்லையற்றது. இதன்படி எல்லைக்குட்பட்ட வடிவமாக இருந்துகொண்டே எல்லையற்ற நிலைக்கு விரிந்து சென்று வரம்பற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. இது காலத்துக்கும் பொருந்துகின்றது. குறிப்பிட்ட பொருளின் நிலைப்பாட்டின் தொடக்கமும் இறுதியும் இருக்கிறது. ஆனால் இதன் தொடக்கத்துக்கு முன்பே எண்ணிலடங்கா தொடர்ச்சிகள் இருந்து மறைந்துள்ளன. அதேபோல் குறிப்பிட்ட பொருளின் முடிவுக்குப் பின்பும் தொடர்கிறது. ஆக இந்தத் தொடர் நிகழ்வுக்குத் தொடக்கமும் இறுதியும் இல்லை. விசும்புமும் காலமும் என்றென்றும் வரம்பின்றி நிலைத்திருக்கிறது.

31) உணர்வுநிலை (Consciousness) பற்றிக் கூறுங்கள்?

உணர்வுநிலையைக் கொண்டே மனிதன் தமது செயல்களை அமைத்துக் கொள்கிறான். அதனால் தான் தத்துவ விவாதங்களில் உணர்வுநிலை முதன்மை இடம் பெறுகிறது.

32) உணர்வுநிலையைக் கருத்துமுதல்வாதமும் பொருள்முதல்வாதமும் எவ்வாறு பார்க்கிறது?

கருத்துமுதல்வாதம் உணர்வுநிலை எவ்வாறு தோன்றியது என்பதை ஆராயாமல் மனிதனது மூளையின் செயற்பாடாக மட்டுமே பார்க்கிறது. பொருளாயத உலகோடு ஏற்படுகிற பரஸ்பர வினையினால் உண்டான மூளையின் பிரதிபலிப்பாகப் பொருள்முதல்வாதம் பார்க்கிறது. மனிதன் தன்னைச் சுற்றி நடைபெறுவதைப் பார்த்திடும் போது ஏற்படுகிற விழிப்புநிலையில் இருந்து உணர்வுநிலை தோன்றுகிறது. அதாவது தனது வாழ்நிலையில் இருந்து தமக்கான உணர்வுநிலையைப் பெறுகிறான். புறநிலை உலகின் அகநிலைப் பிரதிபலிப்பே உணர்வுநிலை என்கிறது பொருள்முதல்வாதம்.

தொடரும்.................

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்