மதம் குறித்து மார்க்சியம் ஒரு அறிமுகம்-பிரேமசந்திரன்

 


முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக ........ அத்தகைய போராட்டங்களை ஜாரின எதேச்சாதிகார போலிசை கொண்டு ஒடுக்கி சைபீரியாவிற்கு 1000கணக்கில் நாடுகடத்தினாலும் உழைக்கும் மக்கள் மத்தியில் அரசை எதிர்த்த போராட்டங்களை திசைதிருப்பவும் இனரீதியான மதரீதியான மோதலை ஏற்படுத்துவதற்கான திட்டத்தையம் ஜார் அரசாங்கம் உருவாக்கி செயல்படுத்தி வந்தது. ஜார் ரஷ்யாவில் கத்தோலிக்க மதம் பெரும்பான்மை மதமாக அரசுமதமாக இருந்தது. ரஷ்யாவில் இருந்த யூதர்கள் அந்நியர்கள் எனவும் யூதமதம் அந்நிய மதம் எனவும் யூத கலாச்சாரம் அந்நிய கலாச்சாரம் எனவும் ரஷ்ய மண்ணுக்குரியது அல்ல எனவும் யூதர்களை வெறுத்தொதுக்க கூடிய வகையில் பெரும்பாலான ரஷ்யமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மிக அடிக்கடி ஜாரின் கருப்பு நூற்றுவர் என்ற பாசிசப்படையானது அவர்களை அடிக்கடி படுகொலை(POGRAM) புரிந்தது. சிறுபான்மை மனநிலையில் யூதர்களும் தங்களை தற்காத்துக் கொள்ள புந்த் என்ற தனிஅமைப்பை கட்டினர். தங்களது மதக்கலாச்சாரத்தை ஒழுகி அமைப்பாகவே இருந்தனர். ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரை உழைக்கும் மக்கள் மத்தியில் (விவசாயிகள் தொழிலாளர்கள்) மதரீதியான இயல்பான கலாச்சார வேறுபாடுகளை நேர் எதிரானவைகளாக சித்தரித்து இரண்டு மதத்தைச் சேர்ந்த மக்கள் மத்தியில் தொடர் மோதலை ஏற்படுத்தியது. உழைக்கும் மக்கள் மார்க்ஸிய புரிதலையும் மார்க்ஸ் எங்கெல்சின் பொது வழிகாட்டுதலையும் குறிப்பாக செயல்படுத்தினார்.

மதத்தைபற்றியலெனினிய வழிகாட்டுதல்களானது:

பிரான்சு முதலாளித்துவ புரட்சிக்குப் பிறகு குறிப்பாக ஏகாதிபத்தியத்தினதும் பாட்டாளிவர்க்கப் பரட்சியின் சகாப்தத்தில் அரசியல் சுதந்திரத்திற்காக அதாவது ஜனநாயகபுரட்சிக்கு தலைமைதாங்கும் பாத்திரத்தை முதலாளித்துவ வர்க்கம் கைவிட்டு விட்டது. ஆதலால் ஜனநாயகப் பரட்சிக்கு தலைமைதாங்கும் பணியானது பாட்டாளி வர்க்கமே என்றார் லெனின் (.இது ரஷ்யாவிலும் சீனத்திலும் நிரூபிக்கப்பட்டது.)

எனவே அரசைப் பொறுத்தமட்டில் மதம் என்பது தனிநபரின் சொந்த விவகாரமாக பிரகடனம் செய்யப்படவேண்டும். மதநிறுவனங்கள் அனைத்தும் அரசாங்க நிறுவனத்துடன் எந்த சம்பந்தமும் கொண்டிருக்க கூடாது. ஆதிக்கம் செலுத்தும் எந்த மதமோ மதஸ்தாபனமோ இருக்கக் கூடாது.

அனைத்து மதங்களும் சட்டத்தின் முன் சம அந்தஸ்துடன் இருக்க வேண்டும். காரணம் மதத்தில் முற்போக்கு மதம் பிற்போக்குமதம்என்றெல்லாம் கிடையாது. அது போல சகிப்புத்தன்மை கொண்ட மதம் சகிப்புத்தன்மை இல்லாத மதம் என்பதும் கிடையாது. கூடவே வெறித்தனம் கொண்ட மதம் வெறித்தனம் இல்லாத மதம் மூடநம்பிக்கை கொண்டமதம் மூடநம்பிக்கை இல்லாத மதம் , முற்போக்க கலாச்சாரத்தை கொண்ட மதம் பிற்போக்கு கலாச்சாரத்தை கொண்ட மதம் என்பதெல்லாம் கிடையாது. அனைத்து மதங்களும் சமாதானத்தை விரும்பக் கூடியது என்பதெல்லாம் மதத்தின் வரலாறைப் பற்றிய புரிதலின்மையிலிருந்து அதாவது வரலாற்றில் மதங்களுக்கு இடையில் நடந்த மோதல்கள், மதப்படுகொலைகள் ஒரு மதத்தின் உட்பிரிவுகள் மத்தியில் நடந்த மோதல்கள் படுகொலைகள் இவற்றின் வரலாற்றைப் பற்றிய புரிதலின்மையிலிருந்து வரக்கூடியது. ஆதலால்தான் அனைத்து மதங்களும் பிற்போக்குதான் என்றாலும் மக்கள் மத்தியில் உள்ள அறியாமையையும் மதங்கள் மத்தியில் இயல்பாக உள்ள வேறுபாடுகளையும்பயன்படுத்தி மதவெறியர்கள் மதவெறியை ,மதமோதல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையிலலேயே சட்டத்தின் முன் அனைத்து மதங்களும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப் படவேண்டும் என்கிறோம்.

பல்வேறுமதங்களைச் சேர்ந்த புரோகிதர்களுக்கு சம்பளங்களை அம்மதங்களைச் சேர்ந்தோர் தரக்கூடும். எந்த ஒரு மதத்ததை ஆதரிப்பதற்காகவும் அரசாங்கம் தனது பணத்தை பயன்படுத்தக் கூடாது. மதஊழியர்களுக்கு பூசாரிகளுக்கு அரசாங்கம் ஊதியம் அல்லது உதவி வழங்கக் கூடாது.

மதநிறுவனங்களோ மதப் பள்ளிகளோ அரசை சாராமல் சுதந்திரமாக இயங்க வேண்டும்.

ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தை தழுவவும் எந்த ஒருமதத்தை பரப்புவதற்கும் மதத்தை மாற்றிக் கொள்வதற்கு கூட ஒவ்வொரு வருக்கும் முழுச்சுதந்திரம் இருக்கவேண்டும். எந்தமதத்ததை சேராதவராக இருக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அதாவது நாத்திகராக இருக்கவும் ஒருவருக்கு உரிமை உண்டு. ஒருவருடைய மதம் என்ன என்று கூட எவரிடமும் கேட்பதற்கு எந்த அதிகாரிக்கும் உரிமை இருக்க கூடாது. மதம் தனிமனிதனுடைய மனசாட்சியை பொறுத்த விசயம் இதில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது.

மேற்கூறிய நடவடிக்கைகள் எவ்வித தயக்கங்களுமின்றி எவ்வித சூழ்ச்சிகளுக்கும் இரையாகாமல் நிறைவேற்றப் படாவிட்டால் மதம் சம்பந்தமாக போலிசார் புரியும் அவமானகரமான கொடுமைகளிலிருந்தோ ஏதேனும் ஒரு மதத்திற்கு போலிசார் வழங்கும் அதே போன்ற அவமானகரமான உதவி பிச்சைகளிலிருந்தோ மக்கள் விடுபட முடியாது.

அதே சமயத்தில் சோசலிஸ்ட் பாட்டாளிவர்க்கத்தின் கட்சியை பொறுத்தவரையில் மதம் ஒரு தனிப்பட்ட விவகாரம் அல்ல. நமது கட்சி தொழிலாளி வரக்கத்தின் விடுதலைக்காக உள்ள , வர்க்க உணர்வு பெற்ற முன்னணியில் நிற்கும் போராட்ட வீரர்களை கொண்ட ஒரு கூட்டமைப்பாகும் இத்தகைய ஒரு ஸ்தாபனம் மதநம்பிக்கையின் வடிவில் வரக்க போதாக் குறைவு மடமை, அறிவுத்தெளிவின்மை கண்மூடித்தனமான வெறி ஆகியவற்றின்பால் பாராமுகமாக அலட்சியமாக இருக்க முடியாது. நமது கோரிக்கை திருச்சபைகளை அரசாங்கத்தின் தொடர்பிலிருந்துமுழுமையாக வேறுபடுத்திவிட வேண்டும் என்பதாகும். அப்போதுதான் பத்திரிக்கை பிரச்சாரத்தின் மூலமாகவும் வாய்வழிபிரச்சாரத்தின் மூலமாகவும் சுத்தமான ஆயுதங்களைகட் கொண்டே சித்தாந்த ஆயுதங்களின் மூலம் மட்டுமே மதமாயைகளை எதிர்த்து நின்று சமாளிக்க முடியும்.

நாம் நமது சித்தாந்த கட்மைப்பான ரசிய சமூக ஜனநாயக கட்சியை நிறுவியுள்ளோம். தொழிலாளர்களை ஏமாற்றுகிற மதமோசடியை எதிர்த்தும் அத்தகைய ஒரு சித்தாந்தப் போராட்டத்தை நடத்துவதற்காகவே அக்கட்சியை அமைத்துள்ளோம். மற்றும் நமக் கு சித்தாந்தப் போராட்டம் என்பது தனிப்பட்ட விவகாரம் அல்ல. அது கட்சி முழுமைக்குமான பாட்டாளி வர்க்கம் முழுமைக்கமான விவகாரமாகும் கட்சியை பொறுத்தவரை மதம் தனிப்பட்ட விவகாரம் இல்லை என்றாலும் கட்சியின் திட்டத்தில் நாம் நாத்திகர்கள் என்று அறிவிக்க கூடாது. காரணம் நமது கட்சியின் வேலைதிட்டமானது முற்றிலும் விஞ்ஞான வகைப்பட்ட முறையிலும் பொருள்முதல்வாத கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வகுக்கப் படுகிறது. ஆகையால் நாம் அந்த திட்டத்திற்கு விளக்கம் தரும்போது மதத்தினால் ஏற்படும் அறியாமை மற்றும் மூடநம்பிக்கைகளின்மெய்யான வரலாறு மற்றும் அதன் பொருளாதார வேர்கள் பபற்றிய விளக்கம் இன்றியமையாதபடி அடங்கியிருக்கிறது. எனவே வேலைதிட்டத்தைப் பற்றிய பிரச்சாரம் ஒரு பொருள்முதல்வாதப் பிரச்சாரமாகவும் வேலைதிட்டத்தை செயல்படுத்துவது இயக்கவியல் கண்ணோட்டத்தின்படி செயல்படுத்துவதாகவும் அமைகிறது. இதனால் பாட்டாளி வர்க்கக்கட்சி நாத்திக பிரச்சாரம் செய்வது அவசியமற்றது எனக் கொள்ளக் கூடாது. நாத்திக பிரச்சாரம் செய்வது இன்றியமையாதது ஆகும். எனினும் முதலாளித்துவவாதிகள் நாத்திகத்தை பற்றியும் மதத்தை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யும் முறையிலிருந்தும் மாறுபட்டிருக்கிறது. அவர்கள் செய்வது போல் மதம் பற்றிய பிரச்சினையை ஒரு சூக்குமமான கருத்துமுதல்வாத முறையில் வர்க்கப்போராட்டத்துடன் தொடர்பில்லாத ஒரு “அறிவுத்துறை ” பிரச்சினையாகவும் முன்வைப்பது ஒரு தவறான பாதையாகும் என மார்க்சியம் கருதுகிறது. மேலும் உழைக்கும் மக்களை ஒடுக்கப் படுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வெறும் பிரச்சாரமுறைகளை கொண்டே மதமூடநம்பிக்கைகளை அகற்றிவிட முடியாது.

மக்களிடம் மதநம்பிக்கைகள் நிலவுவது சமுதாயத்திலுள்ள அரசியல், பொருளாதார ஒடுக்கமுறைகளின் ஒரு விளைவும் பிரதிபலிப்பும் ஆகும். முதலாளித்துவ நிலபிரபுத்துவ வர்க்கங்களின் பிற்போக்கு சக்திகளை எதிர்த்து உழைக்கும் மக்கள் தாமே போராடுவதன் மூலம் அவர்கள் அறிவொளி பெறாதவரை எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும் அவர்கள் அறிவொளி பெறச் செய்யமுடியாது. எனவே விண்ணுலகம் குறித்த உழைக்கும் மக்களிடையேிலான கருத்து ஒற்றமையை காட்டிலும் மண்ணுலகில் ஒரு சொர்க்கத்தை படைக்கும் பொருட்டு நடைபெறும் போராட்டத்தில் ஒற்றுமை ஓங்குவது பாட்டாளிவர்க்க இயக்கத்திற்கு முக்கியமானதாகும் வர்க்கங்களும் , சுரண்டல், மற்றும் ஒடுக்கமுறைகள் நிலவும் சமுதாயம் இருக்கும் வரையில் மதநம்பிக்கைகளுக்கான வேர்கள் முற்றாக அகற்றப்படாது. ஆகையால்தான் தமது தப்பெண்ணங்களை இன்னமும் முற்றாக விட்டொழிக்காமல் வைத்திருக்கும் மக்களை பாட்டாளி வர்க்க கட்சி முன்வைக்கும் வர்க்க்ப் போராட்டங்களுக்குத் அதாவது அவர்களது மெய்யான எதிரிகளை எதிர்த்து திரட்டுவதற்கும் அதன் மூலம் அவர்கள் அறிவொளி பெற்று மதமூடநம்பிக்கைகளை விட்டொழிக்க செய்யும் பொருட்டும் கட்சியின் திட்டமானது நாம் நம்மை நாத்திகர்கள் என அறிவிக்க கூடாது என மார்க்ஸியம் கூறுகிறது. பாட்டாளி வர்க்க புரட்சி இயக்கம் நாத்திகப் பிரச்சாரம் செய்வதை அதன் அடிப்படையான பணிக்கு அதாவது சுரண்டல் காரர்களை எதிர்து சுரண்டப்படும் மக்கள் நடத்தும் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு உடபடுத்தியே செய்ய வேண்டும். இதற்கு மாறாக ஒரு பிரச்சினை இங்கு எழுப்பப்படலாம்.

சித்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்துவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கான எதிரியை (மதத்தை) எதிர்த்த ஒரு போராட்டமாகும் இப்போராட்டத்தை எவ்வாறு வரக்கப் போராட்டத்திற்கு உட்படுத்த முடியும்.? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப் படும் ஒரு போராட்டத்திற்கு உட்படுத்த முடியம் என்று கேட்கக் கூடும்.

இவ்வாறு கேட்பது மார்க்ஸிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதல் இன்மையினாலேயே ஆகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யம் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும் .அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல. நாத்திகப் பிரச்சாரத்திற்கும் –அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கு இடையில் உள்ள மதநம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத் திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்கமுடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவதை இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறா நிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடிய, ஒப்புநோக்கு ரீதியிலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை)அழிக்கமுடியாத முற்றான ஒரு எல்லைக் கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவதாகும்.இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்து இருக்கும் ஒன்றை பலவந்தமாக பிரிப்பதாகும். உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.

உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல் பொருளாதார ஒடுக்கமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும் , ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தைநடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக ஒரு பகுதியினர் முற்போக்கான ( சோசலிச) கருத்துக்களை கொண்டிருப்பவர்களாகவும் மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும் பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக் கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையே இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளை பயன்படுத்திக் கொண்டு அவர்களை பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவைசெய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக் கொள்வோம் .

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கம் இடையில் அரசியல் பொருளாதார கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கி விட்டது. அப்போது மார்க்ஸியவாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றிபெறச் செய்வதை எல்லாவற்றுக்கும் மேலான ஒரு கடமையாக கருதி இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கை கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாக பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாக போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டு போராடுவதற்காக பாடுபடுவதும் ஒரு மார்க்ஸியவாதியின் கடமையாகும்.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது மதத்தில் நம்பிக்கை வைத்திருக்கும்உழைக்கும் மக்கள் மதவாதிகள் விரிக்கும் மாயவலைக்குள் சிக்கிக் கொள்வதற்குத்தான் பயன்படும். ஆகையால் இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில், இத்தகைய ஒரு சூழலில் நாத்திகப் பிரச்சாரம் செய்வது அவசியமற்றதும், தீங்கானதும் ஆகும். இவ்வாறு சொல்வது பின்தங்கிய உழைக்கும் மக்கள் நம்மை விட்டுத் தூரமாகச் சென்று விடுவார்களோ என்ற ஒரு பழமைவாதச் சிந்தனையினாலோ அல்லது இதைப் போன்ற வேறு பிற்போக்கு எண்ணத்தினாலோ அல்ல. அதற்கு மாறாக மெய்யான ஒரு வர்க்கப் போராட்டத்தின் முன்னேற்றத்தைக் கருதியே இவ்வாறு சொல்கிறோம்.

இத்தகைய ஒரு தருணத்தில் ஒரு வறட்டுத்தனமான நாத்திகப் பிரச்சாரம் சாதிப்பதைவிட இந்தப் போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றிபெறச் செய்வதுதான் சுரண்டுவதையும், அடிமைப்படுத்துவதையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தில் வாழும் மதநம்பிக்கை கொண்டுள்ள உழைக்கும் மக்களை நூறு மடங்கு அதிகமாக சோசலிஸ்டுகளாகவும், நாத்திகவாதிகளாகவும் மாறச்செய்யும். இதனால்தான் நாத்திகப் பிரச்சாரத்தை உழைக்கும் மக்களின் அடிப்படையான பணிக்கு – அவர்களின் வர்க்கப் போராட்டம் வெற்றிபெறச் செய்யும் நோக்கத்தி்ற்கு உட்படுத்த வேண்டும் என்று கூறுகிறோம்.

இறுதியாக ,வர்க்கச்சுரண்டலை மூடிமறைக்கவும் அரசு மேற்கொள்ளும் உழைக்கும் வர்க்கத்தின் மீதான ஒடுக்குமுறையை நியாயப் படுத்தி புனிதப்படுத்துவதுமே மதத்தின் வேலையாகும். அதாவது மனிதன் அனுபவிக்கும் அத்தனை இழிவுகளையும் பாவம் புண்ணியம் என்ற நியாயப் படுத்தி பாதுகாப்பதே மதத்தின் பணியாக உள்ளது. மக்களுக்கு துன்பங்களும் துயரங்களும் மற்றும் கொடுமைகளும் இருந்தால்தான் அதை சொல்லி மதங்களும் மதவாதிகளும் உயிர்வாழ முடியும். மதங்களையும் மதவாதிகளையும் ஒழிக்க விரும்பினால் மக்களுக்கு உணவு, உடை மற்றம் இருப்பிடம் மற்றும் அனைத்து ஆளுமைகளும் போன்ற அத்தியாவசியமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அவைகளை உத்திரவாதப் படுத்துவதற்கான தனிவுடமையில்லாத சுரண்டல் இல்லாத ஒரு சுரண்டலற்ற ஒரு சோசலிச சமுதாயத்தை நிறுவுவதும் அதாவது உழைக்கும் வர்க்கத்தின் கைக்கு அரசியல் அதிகாரம் வருவதும் முன்நிபந்தனையாகும். அவ்வாறு நிறுவுவதன் மூலமாகத்தான் மக்கள் இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தை முழுமையாக அடையமுடியும். அதன் மூலமாக மட்டுமே தங்களையும் தாங்கள் வாழும் சமுதாயத்தையும் விஞ்ஞான பூர்வமாக புரிந்து கொள்ளமுடியும். அதன் மூலமாகத்தான் தங்கள் வாழ்விற்கு மற்றும் தேவைக்கு (குறிப்பாக பொருளாதார பிரச்சினைக்கு) கடவுளும் மதமும் தேவையில்லை என்ற கருத்திற்கு வருவார்கள் . கடவுள் என்கிற கருத்து அவரகளது தலையிலிருந்து நிரந்தரமாக வெளியேறும். மக்கள் தாங்கள் கட்டிய கோவில்களையும் அவர்கள் செதுக்கிவைத்த கடவுளர்களையும் மனிதகுல வரலாற்றின் குறிப்பிட்ட வளர்ச்சி கட்டங்களை படிப்பிக்கும் கற்கோடாரி, மற்றும் வெங்கலக் கோடாரியைப் போல் வரலாற்றச் சின்னங்களாக மட்டுமே காண்பார்கள் என்பதில் ஐயமில்லை.

மதத்தால் எந்த சுரண்டல் சமுதாயத்தையும் நீடித்து தக்கவைத்துக் கொள்ள முடியாது .

மதத்தால் எந்த சுரண்டல் சமுதாயத்தையும் நீடித்து தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பதைப் பற்றி எங்கெல்ஸ் கூறுகையில்,“மரபு பெரிய தடைசக்தி., வரலாற்றின் சடத்துவ சக்தியாகும் என்றாலும் இது சுயச்செயல் திறனின்றி எதிர்ப்பு மட்டுமே காட்டக் கூடியது. நிச்சயமாய் தகர்க்கப்படவே போகிறது. ஆகவே முதலாளித்து சமுதாயத்திற் கு மதம் நீடித்து நிலைத்து நிற்கும் காப்பு அரணாகிவிட முடியாது. நமது சட்டத்துறை, தத்துவ, மதத்துறைகருத்துக்கள் எல்லாம் அந்தந்த சமுதாயத்தில் நிலவும் பொருளாதார உறவுகளின் அதிகமாகவோ குறைவாகவோ தொலைதூரக் கிளை விளைவுகளே என்றால் , இந்த உறவுகள் அடியோடு மாறுவதால் உண்டாகும் பலாபலன்களை இக்கருத்துக்கள் , இறுதியாக பார்க்குமிடத்து , எதிர்த்து நிற்கமுடியப் போவதில்லை. ஆகவே இயல் கடந்த தெய்வவீக வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒழிய , ஆடிக்கொண்டிருக்கிற (நெருக்கடியில் சிக்கித்தவிக்கிற) ஒரு சமுதாயத்தை மதச்சித்தாந்தங்கள் எவையும் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்திவிட முடியாதென்பதை நாம் ஒத்துக் கொண்டே ஆகவேண்டும். (எங்கெல்ஸ் ,கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும்,)

தொடரும்.............

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்