இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம் 6.யோகம் (முதல் பகுதி) –அ.கா.ஈஸ்வரன்

 

இந்திய தத்துவத்தில் ஐந்து தரிசனங்கள் என்று கூறப்படுபவைகளில் யோகம் இரண்டாவதாக வைத்து எண்ணப்படுகிறது. பதஞ்சலி எழுதிய “யோக சூத்திரம்” என்ற நூலின் அடிப்படையில் யோக தத்துவம் விளக்கப்படுகிறது. யோக சூத்திரம் வெளிவருவதற்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே யோகம் நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது.

சிந்துவெளி நாகரீகத்தில் யோகம் கடைபிடிக்கப்பட்டதற்கு சான்றாக பல முத்திரைகள் அங்கே கிடைத்துள்ளன. உடலை பேணுவதில் அக்கறை உள்ள தாந்தரீகத்திலும் யோகம் காணப்படுகிறது.

யோகத்திற்கு தொடக்க காலப் பொருள் “மனதை ஒருமுகப்படுத்தல்” ஆகும்.

மேலும் மனதின் சஞ்சலத்தை நீக்குவதற்கும், ஒன்றுபட்ட சிந்தனையை உருவாக்குவதற்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் யோகம் முதலில் கடைபிடிக்கப்பட்டது. “மனம் வசப்பட்டால் வாழ்க்கை வசப்படும்” என்கிற அடிப்படையே யோகத்தின் நோக்கமாக இருந்தது. பிற்காலத்தில் தோன்றிய பெரும்பாலான மதங்கள் யோகத்தை தன்னுள் நுழைத்துக் கொண்டன.

வைதீகத்துக்குள் வரும் போது யோகத்தின் பொருள், உடலைப் பேணுதல் என்பதை கடந்து பிரம்மத்தோடு ஒன்றுதல் என்று விளக்கப்படுகிறது. ஆனால் யோக சூத்திரத்தில் “பிரிதல்” என்றே யோகத்துக்கு பொருள் கொள்ளப்படுகிறது. பிரகிருதியின் தொடர்பில் இருந்து புருடனாகிய ஆத்மா பிரிவதையே முக்தி என்கிறது. பிரகிருதியின் தொடர்பு என்றால் உலகத் தொடர்பு, உலகியலில் இருந்து அத்மா பிரிந்து தனது தன்மையானதில் ஒடுங்குவதையே இது குறிப்பிடுகிறது. அவ்வாறு ஒடுங்குவதே கைவல்யம், அதாவது பிறப்பற்ற நிலையான முக்தி.

டி.எம்.பி.மகாதேவன்:-

“சிறப்பான பழங்காலத்தில் யோகப் பயிற்சி சாங்கியத்தோடு தொடர்புள்ள ஒன்றென எண்ணப்பெற்றாலும், மனத்தைக் கட்டுப்படுத்தும் மதிநுட்பம் எல்லாத் தத்துவ முறைகளுக்கும் உரிய ஒரு பொதுச்செல்வமாகக் கருதப்பட்டது. இணைப்பு என்ற பொருளுடைய யோகம் என்ற பதம் 'யுஜ்' என்னும் சொல்லிலிருந்து எடுக்கப்பட்டது; ஆங்கிலச் சொல்லான 'யோக்' (Yoke) என்னும் சொல்லின் பொருளுடையது. 'முடிவான உள்பொருளோடு ஒன்றாக இணைவதற்கு வழி' என்று பல தத்துவக் கருத்துக் கோட்பாட்டுக் கிளைகளில் அதற்குப் பொருள் கூறப்படுகிறது. சாங்கிய யோக தத்துவ முறைமையில் மட்டும் ஏனோ 'வியோகம்' அல்லது 'பிரிதல்' என்று பொருள் கூறப்படுகிறது. அதாவது புருஷன் பிரகிருதியினின்று பிரிதல் என்பதாகும்.”

(இந்து சமயத் தத்துவம்- பக்- 178-179)

யோக சூத்திரம், பிரகிருதியில் இருந்து புருஷன் பிரிதலையே யோகம் என்றும் அதுவே முக்திக்கான வழி என்றும் கூறுகிறது.

வெறும் முக்தியை மட்டும் பேசும் யோகத்தை எப்படி தத்துவம் என்று கூறிட முடியும்?

யோகத்தை தத்துவப்படுத்துவதற்கு சாங்கியத்தை சார்ந்திருக்க வேண்டி வருகிறது. அவ்வாறு சார்ந்திருக்கும் போது படைப்புக்கு ஈஸ்வரனை யோக சூத்திரம் சேர்த்துக் கொள்கிறது.

படைப்புக்கு வைதீக சாங்கியம் 25 தத்துவங்களை பேசுகிறது என்று சாங்கியத்தில் பார்த்தோம். அதனை அப்படியே எடுத்துக் கொண்ட யோக சூத்திரம் கூடுதலாக, படைப்புக்கு துணை காரணமாக ஈஸ்வரன் என்ற ஒன்றை புதியதாக சேர்த்துக் கொள்கிறது. ஈஸ்வரனை சேர்த்துக் கொண்டதால் தத்துவங்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்தது. கலப்புற்ற சாங்கியமான வைதீக சாங்கியம் யோகத்தில் ஈஸ்வர சாங்கியமாக முழுமை பெறுகிறது.

யோக சூத்திரம் என்ற நூலை எழுதியவர் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பதஞ்சலி ஆவார். யோகத் தத்துவத்துக்கு இந்த நூலே ஆதாரமாக கூறப்படுகிறது.

யோக சூத்திரம் என்ற நூல் நான்கு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. முதல் அத்தியாயமான சமாதி பாதம் என்பதில் 51 சூத்திரங்களும், இரண்டாம் அத்தியாயாயமான சாதானை பாதம் என்பதில் 55 சூத்திரங்களும், மூன்றாவது அத்தியாயாயமான விபூதி பாதம் என்பதில் 56 சூத்திரங்களும், நான்காவது அத்தியாயமான கைவல்ய பாதம் என்பதில் 33 சூத்திரங்களும் காணப்படுகிறது. மொத்தம் 195 சூத்திரங்கள் அதில் உள்ளது.

டி.எம்.பி.மகாதேவன் எழுதிய இந்து சமயத் தத்துவம் என்ற நூலில் யோக சூத்திரத்தின் பொருளை யோகமுறை என்று சுருக்கமாகவும் சாரமாகவும் கூறியுள்ளார். இதனைப் படித்துவிட்டு, விளக்கத்திற்கு செல்வது எளிதாக இருக்கும்.

“யோக முறைமைக்குத் தனிப்பட்ட அடிப்படைத் தத்துவம் இல்லை. இது சாங்கியத்தின் தத்துவத்தையே ஏற்றுக்கொள்கிறது. இத்தத்துவ முறைமை மனிதனுடைய இலட்சியத்தை அடைவதற்குரிய ஒரு முறையை வகுத்துக்கொடுக்கிறது. புருஷனைப் பிரகிருதியின் பிடியினின்று நீக்கித் தனிப்படுத்துவதே இம்முறையாகும். இத்தனிப்படுத்தலை மனத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலமே செய்ய இயலும், புருஷனுடைய பிரதிபலிப்பை மனத்தில் காணலாம், புருஷன் தனது மனத்தில் உண்டாகும் பிரதிபலிப்போடு தன்னை ஒன்றாக்கிக் கொள்வதே, அவன் படும் அல்லல்கள் அனைத்துக்கும் காரணம். மனத்தினைச் சலனமற்றதாகவும் வெறுமையானதாகவும் செய்ய இயலுமானால், மனத்தில் எந்தவிதப் பிரதிபலிப்பும் இல்லாதபடி செய்யக்கூடுமானால், புருஷன் தன் இயல்பான தன்மை உணர்ந்து பிரகிருதியின் கண்ணிகளிலிருந்து தப்பிவிடுவான். இதைச் சாத்தியமாக்கும் முறையே யோகம் எனப்படும்.”

(இந்து சமயத் தத்துவம்-பக்-173)

இந்த மேற்கோள் என்ன சொல்கிறது என்றால், மனிதன் இந்த உலகப் பொருளோடு உறவாடுவதினால் மனம் சஞ்சலம் அடைகிறது. அதாவது உலகப் பொருளோடு மனிதன் இயங்கும் போது நிம்மதி இழந்த நிலையினால் மனதில் கலக்கம் ஏற்படுகிறது. இந்த கலக்கத்தில் இருந்து விடுபட வேண்டுமானால், மனதில் கலக்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு வழி என்னவென்றால். நித்தியமான ஆத்மாவை விடுத்து, அநித்தியமான இந்த உலகின் மீது மனம் செல்வதை தடுக்க வேண்டும். தடுப்பதற்கு யோகம் செய்ய வேண்டும். யோகத்தின் மூலம் மனமானது உலகப் பொருட்களில் இருந்து விலகி, சலனமற்று வெறுமையாக மாறும். அந்த வெறுமையே ஆத்மாவை (புருடனை) பிரகிருதியின் பிடியில் இருந்து, அதாவது உலகத் தொடர்பில் இருந்து நீங்க செய்யும், இந்த நீக்கத்தின் மூலம் ஆத்மா தன் உண்மை நிலையை அறிந்து அதிலேயே கலந்து போகும்.

முதல் அத்தியாயம் சமாதி பாதம்.

இதன் இரண்டாம் சூத்திரம், மனம் விரிந்து செல்வதை கட்டுப்படுத்துவதே யோகம் என்று கூறுகிறது. (யோகச் சித்த விருத்தி நிரோத:)

மனதில் சிந்தனைகளின் சலசலப்பு ஏற்படாமல் அமைதியாக்க வேண்டும். அந்த நிலையில் ஆழ்மனதை முழுமையாக அறிப்படும். இந்த அறிதல் மூலம் பிரகிருதியில் இருந்து புருடன் என்கிற ஆத்மா வேறுபட்டது என்கிற ஞானம் பெறப்படுகிறது. ஆத்மா தன்னிலையில் ஒடுங்குகிறது. இதுவே யோக சூத்திரத்தின் சுருக்கம்.

ஆனால், மூல சாங்கியம் வளமைக் கோட்பாட்டின் அடிப்படையில் உலகில் சிறப்பாக வாழ்வது பற்றி பேசுகிறது. இந்த சாங்கியயோகம் வாழ்வில் காணப்படும் இன்ப-துன்பங்களில் இருந்து முற்றிலும் விடுபட்டு ஆத்ம ஒன்றிப்பு பற்றி பேசுகிறது.

உறங்கி விழித்தால் உடல் புத்துணர்ச்சி பெறுகிறது, புத்துணர்ச்சியினால் இந்த உலகில் சிறப்பாக செயல்பட முடிகிறது. மனதுக்கும் ஓய்வு தேவைப்படுகிறது, அதனால் தான் தியானம் அதாவது யோகம் செய்யப்படுகிறது. தியானத்தினால் கிடைத்த ஓய்வானது, புத்துணர்ச்சியுடன் உலகில் செயல்பட மனதுக்கு உதவுகிறது. இதுதான் யோகத்தின் அடிப்படை.

ஆனால் ஆத்ம போதத்துடன் இணைக்கப்பட்ட யோக சூத்திரம் வாழ்வை விடுத்து முக்தியை போதிக்கிறது.

சிந்திக்கும் மனமே சித்தம். சித்தத்தை செயல்படுத்தாமல் அடக்குவது பற்றி இரண்டாம் சூத்திரம் பேசியது. அடக்குவதன் மூலம் எதை அடைய வேண்டும் என்பதை மூன்றாம் சூத்திரம் கூறுகிறது.

“அப்போது காண்பவன் தனது சொந்த நிலையில் இருக்கிறான்” (1-3).

மனதை உலகில் காணப்படும் வெளிப்பொருட்களின் மீது கவனம் செலுத்தாமல், அகத்தின் உள்ளே பயணிப்பதின் மூலம் ஆத்மா, தனது சொந்த ஆத்ம நிலையினை அறிகிறது.

இயல் உலக வெளிப்பொருட்களை பற்றி சிந்திப்பது தவறான அறிவு. ஏன் என்றால் இந்த உலகப் பொருட்கள் நிலையாக இல்லாது மாறிக் கொண்டிருக்கிறது, மாறுகின்ற அனைத்தும் நிலைத்த பொருள் அல்ல, நித்தியமானது அல்ல. ஆத்ம அறிவே சரியானது. ஆத்மா-பரமாத்மா மாறுபாடு அற்றது மாறுபடாத பொருளே சிறந்தது. அதனை அறிவதே சரியான அறிவு என்று யோக சூத்திரம் கூறுகிறது.

“தவறான அறிவு என்பது பொய்யறிவு, அது உண்மை இயல்பில் நிலைபெறாதது.” (1-8)

இந்த உலகின் மீதான அறிவு தவறானது, மாயையில் அகப்பட்டது. இந்த உலக மாயையில் இருந்து விடுபட்டு, ஆத்ம தேடலில் செல்கிற அறிவே சரியானது. அந்த ஆத்மாவே நிலையானது, இறுதியானது, உண்மையானது என்கிறது யோக சூத்திரம்.

இந்த ஆத்ம நிலையை அடைவதற்கு உலகத்தின் மீதான பற்று விடுபட வேண்டும் என்று பற்றின்மையை போதிக்கிறது. பற்றின்மை ஏற்படுவதற்கு பயிற்சி அவசியமாகிறது. உலகில் காணப்படும் பொருட்களின் மீதான ஆசையை விட்டுவிடுவதே பற்றின்மை.

15ஆம் சூத்திரத்தை விவேகானந்தர் விவரிக்கிறார், “பார்த்த அல்லது கேட்ட விஷங்களின் மீதுள்ள ஆசையை விட்டவர்களிடம் எந்த மனநிலை வந்து சேர்கிறதோ, எந்த மனநிலையில் பொருட்களின் மீதுள்ள ஆசையை எல்லாம் அவர்கள் அடக்க முடியுமோ அதுவே பற்றின்மை.” (ஞான தீபம்-2) யோகம் செய்பவரின் வெற்றியானது, செய்கின்ற முறைக்கு ஏற்ப மெதுவாகவோ, நடுத்தரமாகவோ, விரைவாகவோ கிட்டும். இந்த முறைகளை கையாள முடியவில்லை என்றால் “தெய்வத்திடம் பக்தி கொள்வதால்”(1-23) முடியும்.

சாங்கியத்தி அடிப்படைகளை தத்துவமாக ஏற்ற யோகம் மூல சாங்கியத்தில் இல்லாத தெய்வத்தை தத்துவத்துக்குள் நுழைக்கிறது.

கி.லஷ்மணன்:-

“யோக மதத்தினர் கொள்கைப்படி பிரகிருதி உலகைச் சிருட்டிப்பதற்கு இறைவனும் ஒரு காரணமாவான். இறைவன் படைப்பவனல்லன். படைப்புக்குத் துணைபுரிவது மட்டுமே அவன் செயல். கடவுளை ஒப்புக்கொள்ளாத சாங்கியத்திலே பக்திக்கு இடமில்லை….”

(இந்திய தத்துவஞானம்-பக்-227)

தெய்வத்தின் சொல்வடிவமாக “ஓம்” என்று குறிப்பிட்டு, ஓம் என்ற சொல்லை மீண்டும் மீண்டும் உச்சரிப்பதும், அதன் பொருளை சிந்திப்பதுமே வழி என்கிறது (1:27-28) யோக சூத்திரம்.

“ஓம்” என்ற சொல்லை ஏன் திரும்பத்திரும்ப சொல்ல வேண்டும்? உலகியல் சிந்தனைகளின் பதிவுகள், மனதில் படிந்திருக்கும், இந்தப் பதிவுகளே சமஸ்காரம் என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது. இந்தப் பதிவுகள் எழாமல் மறைந்து போக வேண்டுமானால், தெய்வத்தை முன்வைத்து ஓம் என்ற சொல்லை தொடர்ந்து தியானிக்க வேண்டும். உலகப் பதிவுகள் அதாவது உலக அனுபவங்கள் தவறானதாகவும் தீயவையாகவும் பார்க்கிறது யோக சூத்திரம்.

தீயவையான உலகப் பொருட்களோடு தொடர்பை ஏற்படுத்தும் ஆசைகளை மனதில் இருந்து முழுமையாக நீக்கிவிட்டு, ஆதியான ஆத்மாவோடு அதாவது பரமாத்மாவோடு ஒன்றுபட வேண்டும் இதுவே சமாதி. ஆதியோடு சமமாக ஒன்றுபடுதலே சமாதி. அதாவது முக்தி.

வெளிப்புற பொருட்களில் இருந்து விடுபட்டு, ஆத்ம சிந்தனையில் ஒன்றி போவதே தியானமாகும். விருத்திகள் தேய்ந்து நாசம் அடையும் போது சுத்த ஸ்படிக மணி எப்படி அருகிலுள்ள பொருளின் நிறத்தை ஏற்கிறதோ, அதேபோல புத்தி தான் கிரகிக்கும் பொருளாகவே மாறிவிடுகிறது. அதாவது குணங்கள் அற்ற நிலையில், தியானிக்கப்படும் பொருள் மட்டுமே மீதம் இருக்கும். அப்போது கேள்விகள் எழாத சமாதி நிலை ஏற்படுகிறது. (1:41-42)

இந்த சமாதி நிலையில் நல்வினை தீவினை என்கிற பதிவுகள் (சமஸ்காரங்கள்) முற்றும் அழிந்து, சிந்தனை அற்று, விதைகள் அற்று காணப்படுகிறது. விதைகள் அற்று போனதால் முளைப்பதற்கு ஏதும் இல்லாது பிறவி தொடர் முடிவுக்கு வருகிறது. இத்துடன் சமாதி பாதம் என்கிற முதல் அத்தியாயம் நிறைவடிடைகிறது. முதல் அத்தியாயத்தில் தியான யோகத்தால் கிட்டும் பலனாக சமாதி கூறப்பட்டுள்ளது.

தொடரும்...

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்